உத்தரகாண்டின் சம்பாவாட் மாவட்டம் கடியுரா கிராமக் குன்றுகளில் சுட்டெரிக்கும் வெயிலில் கண்களையும் நெற்றியையும் சுருக்கியபடி கைத்தடி உதவியில் தள்ளாடி தள்ளாடி நடக்கிறார் தாரி ராம். குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரிடம், 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டானக்பூர் அரசு மருத்துவமனை அல்லது மேலும் தொலைவில் உள்ள ஹல்துவானிக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்வதற்கு பணமில்லை.

“என்னால் மாதத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது,” என்கிறார் அவர். 67 வயதாகும் தாரி ராம் கல் உடைக்கும் வேலை பார்த்த்தவர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசிடம் பெறத் தொடங்கிய ரூ.1000 முதியோர் உதவித்தொகையைத் தான் முழுமையாக நம்பியுள்ளார். அதுவும் சரியாக அக்டோபர் 2016 அக்டோபர் முதல் வங்கிக் கணக்கிற்கு வருவது நின்றுப் போனது. முதியோர் உதவித்தொகை திட்டத்தில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட சமூக நலத்துறையிடம் தங்களின் ஆதார் தகவல்களை செலுத்தத் தவறியதால் மாநில அரசு அதை நிறுத்திவிட்டது.

2017 ஏப்ரல் மாதம் தனது கிராமத்திலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் பயணம் செய்து சம்பாவாட் நகரில் உள்ள அத்துறையில் தனது தகவல்களை தாரி ராம் பதிவு செய்துள்ளார். அருகில் உள்ள 10 கிராமங்களின் மையப்பகுதியாக உள்ள பிங்கிராராவில் தொடங்கப்பட்ட தனியார் மையத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் ஆதார் அட்டைப் பெற்றார். அவர் மிகவும் பாதுகாப்புடன் பிளாஸ்டிக் பைக்குள் வைத்திருக்கும் அட்டையில் ‘தானி ராம்’ என்று பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பெயர் சமூக நலத்துறையிடம் உள்ள அவருடைய பதிவுகளுடன் பொருந்திப் போகவில்லை. இதனால் அவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

An old man with a stick standing on a mountain path
PHOTO • Arpita Chakrabarty
Close up of a man's hands holding his Aadhaar card
PHOTO • Arpita Chakrabarty

தாரி ராமின் (பாதுகாப்பாக சுற்றி வைத்துள்ள) ஆதார் அட்டையில் ' தானி’ ராம் என்று பெயர் இடம்பெற்றுள்ளதால் 15 மாதங்களாக அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை

தாரி ராம் தனியாக வசிக்கிறார். அவரது மனைவி 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர்களது ஒரே மகன் தொழிலாளியாக டெல்லியில் தனது மனைவியுடன் வசிக்கிறார். தாரி ராமிற்கு சொந்தமாக நிலம் கிடையாது. “இக்குன்றில் வசிக்கும் மக்களின் கருணையால்தான் நான் இப்போது வரை உயிர் பிழைத்து வருகிறேன்,” என்று மெல்லிய குரலில் சொல்கிறார் அவர். “நான் கடைகளுக்குச் செல்லும் போது அவர்கள் இரக்கப்பட்டு அரை கிலோ அரிசி மற்றும் தானியங்களை இலவசமாகத் தருகின்றனர். எனது அக்கம்பக்கத்தினர் உணவும் தருகின்றனர்.” ஆனால் உயிர் வாழ்வதற்கு எவ்வளவு காலம் இப்படி அவர்களை சார்ந்திருப்பது என அவர் வருந்துகிறார். “அவர்களும் ஏழைகள்தான். என்னைப் போன்ற சூழலில்தான் அவர்களில் பலரும் உள்ளனர்.”

விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் என மாநிலத்தில் குறைந்தது 50,000 பேர் 2016 அக்டோபர் முதல் உதவித்தொகை பெறாமல் உள்ளனர் என்று பிராந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தங்களின் ஆதார் விவரங்களை ‘பதிவு’ செய்யாததே இதற்குக் காரணம். 2017 டிசம்பர் மாதம் இச்செய்தி வெளிவந்த பிறகு 2018 ஜனவரி தொடக்கத்திலிருந்து மார்ச் 31ஆம் தேதி வரை உதவித்தொகை கொடுக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அத்தேதிக்கு பிறகு, சமூக நலத்துறையில் தங்களைப் பற்றிய விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே அரசு உதவித்தொகை அளிக்கும்.

The villagers submitted an application to the District Magistrate of Champawat on Dec 23rd for opening an Aadhaar camp near their village
PHOTO • Arpita Chakrabarty
Gadiura village in Uttarakhand
PHOTO • Arpita Chakrabarty

அருகில் உள்ள பிங்ராராவில் ஆதார் மையம் கோரி விண்ணப்பித்துள்ள கடியுரா (இடது) மற்றும் பிற கிராமவாசிகள்

அரசின் அறிவிப்பிற்குப் பிறகு, பிங்ராராவில் உள்ள நைனிடால் வங்கியில் தாரி ராமின் வங்கிக் கணக்கில் பணம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவரால் சென்று சரிபார்க்க முடியவில்லை. அதுவும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு நின்றுவிடும். எனவே ஆதார் அட்டையில் தனது பெயரை திருத்தம் செய்வதைத் தவிர தாரி ராமிற்கு வேறு வாய்ப்பில்லை.

முறைகேடு புகார்களைத் தொடர்ந்து உத்தரகாண்டின் பிங்ராரா உள்ளிட்ட 500 ஆதார் மையங்கள் மூடப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. பணிச்சுமை மற்றும் தாமதத்தால் ஏற்பட்ட மோதல்களால் அருகில் உள்ள சம்பாவாட் அரசு ஆதார் மையமும் 2017 டிசம்பர் மாதம் மூடப்பட்டுவிட்டது. இப்போது கடியுரா கிராமத்திலிருந்து மிக அருகாமையிலுள்ள ஆதார் மையமே 146 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பன்பாசா நகரில்தான் இருக்கிறது.

“எனது ஆதாரின் விவரங்களை திருத்தம் செய்வதற்கு என்னால் சம்பாவாட் போக முடியாது. ஷேர் டாக்சிகளில் 500 ரூபாய்க்கு மேல் செலவிட்டு ஒருநாள் முழுக்க பயணித்து திரும்ப வேண்டும். என்னால் எப்படி செலவு செய்ய முடியும்?” என கேட்கிறார் தாரி ராம். “பன்பாசாவிற்கு பயணிப்பதும் என்னால் முடியாதது. அதற்கு 2000 ரூபாய் ஆகும். ஆதார் அட்டை இல்லாமல் இங்கேயே நான் செத்துப் போவதே மேலானது.”

அரசின் அடிப்படை சேவைகளை பெறுவதற்கு ஆதாருடன் அச்சேவைகளை இணைக்க வேண்டும் என்ற உத்தரவு சுமார் 550 பேர் வசிக்கும் கடியுராவில் (கணக்கெடுப்பில் கடுரா என உச்சரிக்கப்பட்டுள்ளது) கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளது. செழுமையான நிலம் இப்போது வறண்டு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ஆதார் விதிகள் இக்கிராமத்தினரின் அன்றாட வாழ்வையே பாதித்துள்ளன.

அவர்களில் ஒருவர்தான் 43 வயது ஆஷா தேவி. இவர் 2016 அக்டோபர் வரை தனது விதவை உதவித்தொகையை பெற்று வந்தார். அரசின் நீர்வளத்துறையில் ஒப்பந்தப் பணியாளராக இருந்து வந்த அவரது கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார். ரூ.1000 மாத உதவித்தொகையை கொண்டு அவர் 14, 12, 7 வயதுகளில் உள்ள தனது மூன்று மகன்களை கிராமப் பள்ளிக்கு அனுப்பி வந்தார். பணம் வருவது நின்றவுடன் அவரது மூத்த மகன்கள் இருவர் பள்ளி படிப்பிலிருந்து இடைநின்றுவிட்டனர். “அரசுப் பள்ளிகளில்கூட பயிற்சி புத்தகங்களை வாங்க வேண்டும். நான் பணத்திற்கு எங்கே செல்வது? நானும் எனது மகன்களும் தொழிலாளர்களாக வேலை செய்கிறோம். வேலையும் இல்லை, தினக்கூலிக்கு எங்கு செல்வது?” என்று அவர் கேட்கிறார்.

'என்னிடம் பணமில்லை என்பது தெரிந்தவுடன் கடையில் பொருட்கள் தருவதை நிறுத்திவிட்டனர். பிறகு நான் வேறு கடைகளில் பொருட்களை வாங்கினேன். அவர்களும் கொஞ்ச நாளில் தருவதை நிறுத்திவிட்டனர்... இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம்...'

காணொளி: தங்களின் ஆதார் அட்டைகளில் இடம்பெற்றுள்ள தவறான விவரங்களால் சம்பாவாட் மாவட்டத்தில் பல பெண்களுக்கு விதவை உதவித்தொகை கிடைக்கவில்லை

ஆஷா தேவிக்கு உதவித்தொகை ஏன் நிறுத்தப்பட்டது? அவரது கணக்கில் (சமூக நலத்துறையின் பதிவேட்டில்) கணவரின் பெயர் கோவிந்த் பல்லாப் என்றும் ஆதார் அட்டையில் தந்தையின் பெயர் பால் கிருஷ்ணா என்றும் இடம் பெற்றுள்ளது.  அதிகாரப்பூர்வ படிவங்கள் மற்றும் விண்ணப்பங்களில் பெண்கள் தங்கள் கணவர் அல்லது தந்தையின் பெயரைக் கொடுக்க வேண்டும் என ஒரு விஷயம் இருப்பதையும் மறந்துவிட முடியாது.

“உதவித்தொகையைக் கொண்டு என் பிள்ளைகளை நான் பள்ளிக்கு அனுப்பினேன். எங்களிடம் சிறிது நிலம் [வெறும் 200 சதுர அடி] உள்ளது, ஆனால் அங்கு மழையில்லை, போதிய தண்ணீர் இல்லாததால் விளைச்சல் இல்லை,” என்கிறார் ஆஷா தேவி. “நான் கடைகளில் மளிகைப் பொருட்களை [பிங்ரராவில் அரிசி, எண்ணெய், பருப்பு, பிற பொருட்கள்] கடனில் வாங்கினேன். என்னிடம் பணமில்லை என்பதை அறிந்தவுடன் அவர்கள் மளிகைப் பொருட்கள் தருவதை நிறுத்திவிட்டனர். பிறகு நான் வேறு கடைகளில் பலசரக்குகளை வாங்கினேன். இப்படித்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். வேலையும் கிடையாது, பணமும் கிடையாது. அனைத்திற்கும் மேல், அரசிடம் கிடைத்து வந்த பணத்தையும் ஆதார் எடுத்துச் சென்றுவிட்டது.”

காணொளி: ‘... எங்களுக்கு ஏன் தேவை ஆதார்?’ என்று கேட்கிறார் நித்யானந்த் பட்

கணவர் அல்லது தந்தையின் பெயரில் வேறுபாடு உள்ளதால் விதவை பெண்கள் பலருக்கும் உதவித்தொகை கிடைக்கவில்லை. ஆதார் அட்டையில் துணைப் பெயர் இடம்பெறாததால் அல்லது இந்தி மாத்ராவில் (எழுத்தில்) பல மாதங்களாக அவர்களுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணத்தால் லீலாதர் ஷர்மாவின் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது. “எனது ஆதாரில் [அட்டை] எனது துணைப்பெயர் விடுபட்டது யாருடைய தவறு?” என கேட்கிறார் 72 வயதாகும் ஓய்வுபெற்ற முன்னாள் விவசாயி. “இது கண்டிப்பாக என்னுடையதல்ல. ஆனால் நானே பாதிக்கப்படுகிறேன்.”

தொலைவில் உள்ள மையங்களுக்கு அதிக செலவு செய்து, நேரம் செலவிட்டு பயணம் செய்து ஆதார் விவரங்களை திருத்துவது எனும் மலையை கவிழ்க்கும் வேலைக்குப் பதிலாக ஷர்மா மற்றும் பிறர் வேறு ஒரு தீர்வுடன் வந்துள்ளனர்: “எங்களில் சிலர் புதிய வங்கிக் கணக்கை தொடங்குகின்றனர் [ஆதார் அட்டையில் இருக்கும் பெயருடன்]. காரணம் ஆதார் கட்டாயமாக்கப்பட்டவுடன் முந்தைய வங்கிக் கணக்குகளுடன் இந்த விவரங்கள் பொருந்தவில்லை என்பதுதான்.”

சதிஷ் பட்டின் குடும்பத்தில் 2016 அக்டோபர் முதல் தாயார் துர்காதேவிக்கும், மனநலம் குன்றிய சகோதரர் ராஜூவிற்கும் உதவித்தொகை கிடைப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. துர்கா தேவியின் ஆதார் அட்டையில் தந்தையின் பெயர் ஜோகா தத் என்றும், விதவை உதவித்தொகை கணக்கில் அவரது கணவரின் பெயரான நாராயண் தத் பட் என்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அரசின் அண்மை அறிவிப்பிற்குப் பிறகு 15 மாதங்கள் நிலுவையில் இருந்த உதவித்தொகை ரூ.9000 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது. விவரங்கள் திருத்தாவிட்டால் மார்ச் மாதத்திற்குப் பிறகு அது மீண்டும் நிறுத்தப்படும்.

A young man sitting on a chair outdoors
PHOTO • Arpita Chakrabarty
A woman sitting outside her home in a village in Uttarakhand
PHOTO • Arpita Chakrabarty

ராஜூ பட்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ( இடது) ஆதார் விவரங்களுக்காக நிறுத்தப்பட்டுவிட்டது. அவர் பதிவு செய்து ரசீது பெற்றும் அட்டை கிடைக்கவில்லை. அவரது தாய் துர்கா தேவியின் ( வலது) விதவை உதவித்தொகையும் ஆதார் விவர குளறுபடிகளால் நிறுத்தப்பட்டுவிட்டது

ராஜூவின் உதவித்தொகை இப்போதும் நிறுத்தப்பட்டுதான் உள்ளது. கிராமத்தைச் சுற்றியுள்ள கட்டுமானப் பணியிடங்களில் தொழிலாளியாக வேலைசெய்து மாதம் ரூ.6000 சம்பாதித்து தனது மனைவி, இரண்டு குழந்தைகள், தாய், மற்றும் சகோதரன் என ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு உணவளித்து வருகிறார் சதீஷ். 2017 அக்டோபர் மாதம் சம்பாவாடில் உள்ள ஆதார் மையத்திற்கு ராஜூவை அழைத்துச் செல்ல அவர் ரூ.2000 கொடுத்து வாடகைக்கு கார் எடுத்து இருந்தார். “கண் புரையை ஸ்கேன் செய்வதற்கு கண்களை திறக்குமாறு என் சகோதரனிடம் சொன்னபோது அவன் உடனடியாக இறுக்க மூடிக் கொண்டான். அவன் மனநலம் குன்றியவன். அவனுக்கு பல விஷயங்கள் புரியாது. அவனை நம்மால் கட்டாயப்படுத்த முடியாது. அவனது பதிவு குறித்து எங்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டது. பிறகு அவனது பதிவு ரத்து செய்யப்பட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவனை மீண்டும் பதிவு செய்ய வைக்க வேண்டும். எப்படி என்னால் இத்தனை ஆயிரம் இந்த ஒரு வேலைக்காக செலவு செய்ய முடியும்?” எனக் கேட்கிறார் சதீஷ்.

பாலாடாரி, கரோலி, சல்தியா, பிங்கராரா, பிர்குல், பினானா உள்ளிட்ட கிராமங்களைக் கொண்ட பிங்ராரா பகுதியில் எண்ணற்ற மக்களுக்கு இதேபோன்ற துயரக் கதைகள் நிறைய உள்ளன. 2017 டிசம்பர் 23ஆம் தேதி பிங்ராராவில் ஆதார் பதிவு மையம் அமைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த பதிலும் அவர்களுக்கு வரவில்லை.

உத்தரகாண்ட் சமூக நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் ரன்பீர் சிங், 2016 அக்டோபர் முதல் 50,000 பேரேனும் மாநிலத்தில் உதவித்தொகை பெற முடியாமல் இருக்கின்றனர் என்கிற தரவை மறுக்கவில்லை. “ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரங்கள் பற்றி எனக்குத் தெரியும்,” என்றார். “நாங்கள் இதுபற்றி விசாரித்து வருகிறோம். ஆதார் அட்டை இல்லாதவர்கள், ஆதாரில் தவறான விவரங்கள் இடம்பெற்றவர்களுக்காக இப்போது காலக்கெடு 2018, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போதும் பிரச்னை தொடர்ந்தால், காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி சிந்திக்கலாம். ஆனால் அவர்கள் இத்துறையில் தங்களின் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும். ஆதார் அட்டையில் ஒருவரது பெயர் தவறாக இடம்பெற்றிருந்தால், அதையே அவர்களின் இறுதிப் பெயராக கருதி எடுத்துக் கொள்வோம். இதனால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.”

தமிழில்: சவிதா

Arpita Chakrabarty

Arpita Chakrabarty is a Kumaon-based freelance journalist and a 2017 PARI fellow.

Other stories by Arpita Chakrabarty
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha