கோதி குக்கிராமத்தில் முக்கிய குறுகலான பாதையில் கிட்டத்தட்ட அனைத்து வீட்டின் முன்புறமும் உடைக்கப்பட்ட கற்கள் குவிந்து கிடக்கிறது - பல மூட்டைகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றது. அனைத்து வயது பெண்களும்,  பள்ளி மாணவிகளும் கூட இந்த கற்களின் மேல் அமர்ந்து சுத்தியல் மற்றும் கவ்வியால் கற்களை உடைக்கின்றனர். மலைகள் மற்றும் ஆற்றுப்படுகையில் இருந்து கற்களை வெட்டி எடுத்து வந்த பின்னர் வீட்டிற்கு வெளியே தெருவில் அமர்ந்து ஆண்கள் கேரம் மற்றும் சீட்டு விளையாடுகின்றனர்.

கோதி, காளிகா பஞ்சாயத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம், உத்திரகாண்ட் மாநிலத்தின் கிழக்கு பித்தோரகர் மாவட்டத்திலுள்ள ஜௌல்ஜிபி சந்தைப் பகுதியில் இருந்து தார்சுலா நகரத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. இரண்டு ஆறுகள் - காளி மற்றும் கோரி -  ஜௌல்ஜிபியில் சந்திக்கின்றன, மேலும் நீரின் சலசலப்பு அங்கு ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நேபாளம் சில மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது, இரு நாடுகளையும் குறுகிய பாலம் ஒன்று இணைக்கிறது. பாலத்தின் இருபுறமும் இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் போலவே அந்தப் பாலமும் ஊசலாடுகிறது.

Woman on road outside house. Road lined with stacked stones
PHOTO • Arpita Chakrabarty

கோதி குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் வீடுகள் கட்ட மற்றும் சாலைகள் போட பயன்படுத்தப்படும் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றது

இக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சமையலறாகப் பணியாற்றும் 32 வயதாகும் புல்மதி ஹூனார், "இங்கு வேலை கிடைப்பது கடினம். கோடைகாலத்தில் நாங்கள் எங்களது மேல் இமயமலை வீடுகளுக்கு திரும்புவோம்", என்று கூறுகிறார். அவை இந்திய - சீன எல்லைக்கு அருகில் மேல் இமயமலையிலுள்ள தர்மா பள்ளத்தாக்கில் இருக்கும் கோ மற்றும் பான் கிராமங்களில் உள்ளன.

இங்கு 2500 மீட்டர் உயரத்தில் பல குடும்பங்கள் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து சுமார் 45 நாட்களுக்கு யர்சகும்பாவை  சேகரிக்கின்றன. யர்சகும்பா மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு அரிய வகை மற்றும் மதிப்புமிக்க பூஞ்சை, இந்தப் பகுதியில் இருந்து கிடைக்கும், இதில் ஒரு பகுதி மட்டுமே சட்டபூர்வமாக விற்கக் கூடியது அதற்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கும். குமாவுன் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சமையலுக்குத் தேவையான மூலிகைகளையும் விற்பனை செய்வதற்காக சேகரிக்கின்றனர். "அந்த மூலிகைகளை விற்பதன் மூலம் நாங்கள் சம்பாதிக்கிறோம்", என்று புல்மதி கூறுகிறார். "இருப்பினும் அது குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை அதனால் நாங்கள் கற்களை உடைத்து அவற்றை விற்பனை செய்கிறோம்", என்கிறார்.

உள்ளூர் இடைத்தரகர்கள் உடைக்கப்பட்ட கற்களை வாங்கி சாலைகள் அல்லது வீடுகள் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு விற்கின்றனர். 2013ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு இது ஏறக்குறைய ஆண்டு முழுவதும் நடைபெறும் செயல்பாடாகிவிட்டது. அந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரகாண்டில் பெரும்பாலான பகுதிகள் வரலாறு காணாத மழைப்பொழிவை பெற்றது. தார்சுலா வட்டத்திலுள்ள கோதி, நயாபஸ்தி, காளிகா, பல்வகோட் ஆகிய பகுதிகளில் காளி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள் மற்றும் சாலைகளை மீண்டும் கட்டுவதற்கு இக்கற்கள் பயன்படுத்தப்பட்டன - அத்துடன் புதிய வீடுகள் கட்டுவதற்கும் பயன்படுத்தினோம்.

உடைக்கப்பட்ட கற்கள் கொண்ட ஒரு மூட்டை 45 ரூபாய் என்று புல்மதி கூறுகிறார். நாளொன்றுக்கு தன்னால் இரண்டு மூட்டைகளை உடைக்க முடியும் என்று கூறுகிறார். "சில பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று மூட்டைகள் வரை விற்பனை செய்கின்றனர். இதற்கு நிறைய நேரம் எடுக்கும் ஏனென்றால் வீட்டு வேலைகளும் செய்ய வேண்டி இருக்கிறது", என்று கூறியபடியே , அவர் பள்ளியில் முட்டைகுழம்பு தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

Woman breaking stones
PHOTO • Arpita Chakrabarty
Woman breaking stones with hammer and clamp.
PHOTO • Arpita Chakrabarty

65 வயதாகும் பாதுலி தேவி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஒரு சுத்தியல் மற்றும் கவ்வியைக் கொண்டு கற்களை உடைக்கிறார், சில நேரங்களில் சிறிய கல் துண்டுகள் அவர்களது கண்ணில் விழுகின்றன அல்லது அவரது விரலை காயப்படுத்துகின்றன

கோதியில் ஒரு தெருவில் இரண்டு பெண்கள் பெரிய கல்லின் மீது கல் துண்டுகளை வைத்து கவ்வியால் கீழே பிடித்துக்கொண்டு சுத்தியலால் அடிக்கின்றனர். கல் உடைந்து நொறுங்குகிறது. அவர்களது கை கால் மற்றும் முகம் தூசியால் சாம்பல் நிறமாக இருக்கிறது. அவர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் சின்னஞ்சிறு கற்கள் எங்களது கண்களில் படும் நாங்கள் மருத்துவமனைக்கு (ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தார்சுலாவில் இருக்கிறது) செல்கிறோம். சில நேரங்களில் எங்களது விரல்கள் காயப்படும். ஆனால் அவ்வளவுதான் என்கிறார் 65 வயதாகும் பாதுலி தேவி. இப்போதும் மதியாமாகிறது மேலும் அவர் ஒரு சாக்கு நிறைய கற்களை சேகரித்திருக்கிறார். சூரியன் மறையும் வரை வேலை செய்வேன் என்று அவர் கூறுகிறார்.

கற்களுக்கான தேவை அதிகரித்திருப்பது மட்டுமின்றி கை நெசவு பொருட்களுக்கான தேவை குறைந்துவிட்டதால் கோதியில் உள்ள பெண்களுக்கு கல் உடைப்பது முழு நேரத் தொழிலாகிவிட்டது. இங்குள்ள பெரும்பாலான பெண்கள் போடியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சிறந்த நெசவுத் திறமைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் நெய்வார்கள், பாயிலிருந்து கம்பளம் வரை ஸ்வெட்டரிலிருந்து சாக்ஸ் வரை, இவை அனைத்தும் அப்பகுதியில் இருக்கக்கூடிய செம்மறி ஆடுகளிலிடமிருந்து பெறப்படும் ரோமத்திலிருந்து செய்யப்படுகிறது. போடியா பெண்கள் மிகவும் ரசிப்பது நெசவு செய்வதைத்தான். இப்படித்தான் அவர்கள் வருமானம் ஈட்டி வந்தனர். அவர்களது கைவினை அவர்களுக்கு மரியாதையை பெற்றுத்தந்தது. ஆனால் அது ஒரு காலம் என்று நினைவு கூர்கிறார் பாதுலி தேவி.

இப்போது மரத்தறிகள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது அல்லது சேதம் அடைந்திருக்கிறது அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கிறது, பல வீடுகளில் ஒரு மூலையில் தூசி படிந்து கிடக்கிறது. வெள்ளத்திலிருந்து தப்பிய சில தறிகள் நூறு ஆண்டுகள் பழமையானவை, தாய்மார்களால் அவர்களது மகள்கள் மற்றும் மருமகள்களுக்கு விலைமதிப்பற்ற அன்பளிப்பாக காலங்காலமாக கொடுக்கப்பட்டு வந்தது. நெசவுக் கலையும் பல தலைமுறைகளாக சொல்லித்தரப்பட்டது. "வேறு எதுவும் தெரியவில்லை என்றாலும், ஒரு போடியா பெண்ணுக்கு நெசவு செய்வது எப்படி என்றும் (கோதுமையில் இருந்து) மது தயாரிப்பது எப்படி என்றும் தெரிந்திருக்கும்", என்று 52 வயதாகும் கிஸ்மதி தேவி. கூறுகிறார்.

Woman weaving carpet outside her home.
PHOTO • Arpita Chakrabarty
Woman weaving a carpet inside her home.
PHOTO • Arpita Chakrabarty

செயற்கை விரிப்புகள் கையால் செய்யப்பட்ட விரிப்புகளுக்கு மாற்றாகிவிட்டது ஆனால் ஆர்த்தி போனா (இடது) மற்றும் குஷ்மா குட்டியால் (வலது) போன்ற நெசவாளர்கள் இப்போதும் அவற்றை எப்போதாவது உருவாக்குகின்றனர்

அவர்கள் சுட்காக்களை, தூய கம்பளியால் செய்யப்பட்ட தடிமனான போர்வைகளை தயாரித்து, நவம்பரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜௌல்ஜிபி மேளாவில் விற்றதாக புல்மதி கூறுகிறார். இது கனமான போர்வை குமாவுன் போன்ற குளிர் பிரதேசத்திற்கு ஏற்றது. எங்களது அப்பாக்களும் சகோதரர்களும் அல்மோரா மற்றும் பித்தோரகர் நகரங்களுக்குச் சென்று சுட்காக்களை விற்பனை செய்வர். "கம்பளியின் தூய்மையைப் பொருத்து ஒரு கம்பளம் 3,500 முதல் 6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். ஆனால் அதை உருவாக்குவதற்கு கடின உழைப்பும் அதிக நேரமும் தேவை", என்கிறார் புல்மதியின் தாய் சுப்பு தேவி. "நாள் முழுவதும் நெய்தால் ஒரு சுட்காவை உருவாக்க 15 முதல் 20 நாட்கள் ஆகும். சில நேரங்களில் ஒன்றை உருவாக்குவதற்கு மூன்று மாதங்கள் கூட ஆகும்".

Woman holding up weaving thread outside her home.
PHOTO • Arpita Chakrabarty

சுப்பு தேவி , சுட்கா, 100 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும் ஒரு தடிமனான போர்வை, அதை தயாரிக்க பயன்படுத்தும் நூலுடன்

ஆனால் இந்த கையால் நெய்யப்பட்ட போர்வை இப்போது அதிகமாக விற்பனையாவதில்லை. "யாரும் 2000 ரூபாய்க்கு மேல் கொடுக்க விரும்பவில்லை இப்போது போர்வைகள் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கின்றன", என்று எனது கேமராவிற்கு நூலை விரித்தபடி சுப்பு தேவி கூறுகிறார். ஒரு சுட்கா பல தலைமுறைகளுக்கு, குறைந்தது 100 வருடங்களாவது உழைக்கும் என்கிறார்.

இப்பெண்கள் பாரம்பரியமாக துல்மா (மற்றொரு வகையான போர்வை), பட்டு (ஒரு கரடுமுரடான கம்பளி விரிப்பு), பங்கி (ஒரு கம்பளிப் போர்வை) தாண் (கம்பளம்) மற்றும் ஆசன் (பிரார்த்தனை பாய்) ஆகியவற்றையும் செய்திருக்கின்றனர். பாய்கள் மற்றும் கம்பளங்கள் மீதிருக்கும் நேர்த்தியான அலங்காரங்கள் திபெத்திய வடிவங்களை - பிரகாசமான வடிவியல் வடிவங்கள், மங்களகரமான சின்னங்கள் மற்றும் மலர்களை, ஒத்திருக்கிறது.

ஆனால் இப்போது கம்பளங்கள் மற்றும் பாய்கள் தயாரிக்க மட்டுமே எப்போதாவது தறிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட குறுகிய மற்றும் நுணுக்கமான ஒரு ஜோடி ஆசனை இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கலாம்; பெரிய கம்பளங்கள் அதிகமான விலை ஆகும். ஆனால் வாங்குபவர்கள் குறைவு. இந்திய சீன எல்லை வர்த்தகம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சமவெளிகளிலிருந்து குறைந்த விலை செயற்கை போர்வைகள், விரிப்புகள் மற்றும் சால்வைகள் குமாவுனி வீடுகளிலிருந்த பாரம்பரியமான கம்பளிப் பொருட்களுக்கு மாற்றாக வந்துள்ளது. பெண்கள் இப்போது தங்களது குடும்பங்களுக்கு அல்லது போடியா சமூகத்தினருக்கான பூஜைகள் மற்றும் திருவிழாக்களுக்கு மட்டுமே சுட்காவை செய்கின்றனர்.

Carpet on floor
PHOTO • Arpita Chakrabarty
Woman showing a thick banket (chutka) inside her home.
PHOTO • Arpita Chakrabarty

இடது: போடியா பெண்களால் கையால் செய்யப்பட்ட விரிப்புகள் செய்ய ஆறு மாதங்கள் ஆகலாம் வலது: புல்மதி ஹூனார் அவர் நெய்த சுட்காவைக் காட்டுகிறார்

"எங்களுக்கு சாலையில் வந்து கற்களை உடைப்பது பிடிக்காது ஆனால் வேறு எப்படி பணம் சம்பாதிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை", என்று பாதுலி தேவி கவனாமாக சுத்தியல் மற்றும் கவ்வியுடன் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் இருக்கும் சாந்தி தேவி கூறுகிறார். இரண்டு சாக்கு மூட்டைகளை எதிராக நிற்க வைத்து இரண்டு ஆண்கள் அவற்றை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உடைக்கப்பட்ட கற்கள் பித்தோரகர் மாவட்டத்தின் தார்சுலா மற்றும் முன்சியரி வட்டத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் பெண்களும் சிறுமிகளும் இந்த பரந்த நிலப்பரப்பின் மத்தியில் வானைத் தொடும் மலைச் சிகரங்களுக்கு மத்தியில்

கற்களை உடைக்கின்றனர். பௌதீக இடம் மிகப் பெரியது தான் ஆனால் இங்கு வாழும் மக்களின் திறன்களும், வாழ்வாதாரங்களும் இப்போது கடுமையாக குறைந்துவிட்டது.

தமிழில்: சோனியா போஸ்

Arpita Chakrabarty

Arpita Chakrabarty is a Kumaon-based freelance journalist and a 2017 PARI fellow.

Other stories by Arpita Chakrabarty
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose