கடந்த சில ஆண்டுகளாகவே தங்கள் பகுதியைச் சேர்ந்த சக விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இருந்த ஆல மரங்களை (Ficus benghalensis) விற்பதை பதைபதைப்புடன் கவனித்துவந்தார் தற்போது 60 வயது ஆகும் சுப்பையா. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக சுப்பையாவும் தமது இரண்டு ஏக்கர் நிலத்தில் ஓர் ஆலமரம் நட்டு வளர்த்துவந்தார். அவர் நட்ட செடி, பெரிய மரமாக வளர்ந்து சடைத்துக் கிளை பரப்பி நின்று, வெயில் காலங்களில் நிழலும் அடைக்கலமும் தந்து வந்தது.

இப்போது சுப்பையாவும் தமது ஆலமரத்தை வெறும் 8,000 ரூபாய்க்கு விற்கும் நிலை வந்துவிட்டது. தமது மனைவியின் மருத்துவச் செலவை சமாளிக்கவே மரத்தை விற்கும் கட்டாயத்துக்கு ஆளானார் சுப்பையா. இரண்டாண்டுகளுக்கு முன்பு, கர்நாடகத்தில் நடக்கும் கௌரி கணேச ஹப்பா என்ற பண்டிகைக்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில், சுப்பையாவின் 56 வயது மனைவி மகாதேவம்மா, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு கல் தடுக்கி விழுந்தார். அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.

“மந்தையில் இருந்து பிரிந்து சென்ற ஓர் ஆட்டுக்குட்டியை நான் துரத்திச் சென்றேன். கீழே கல் இருந்ததைப் பார்க்கவில்லை. கீழே விழுந்த பிறகு என்னால் எழ முடியவில்லை. கடும் வலி. நல்ல வேளையாக அந்த வழியாகச் சென்ற ஒருவர் என்னைத் தூக்கிவிட்டு வீட்டுக்கு சென்று சேர உதவினார்,” என்று சம்பவத்தை நினைவுகூர்கிறார் மகாதேவம்மா.

ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருந்த அந்த இணையரின் வாழ்க்கையை இந்த சம்பவம் அடியோடு புரட்டிப் போட்டது.

Left: Mahadevamma uses a walker to stroll in the front yard of her house.
PHOTO • Rangaswamy
Right: Subbaiah had to sell the beloved banyan tree he planted and nurtured on his field to raise funds for Mahadevamma’s medical treatment
PHOTO • Rangaswamy

இடது: தமது வீட்டின் முற்றத்தில் வாக்கர் உதவியுடன் நடக்கும் மகாதேவம்மா. வலது: மகாதேவம்மாவின் மருத்துவச் செலவுக்காக தன் விளைநிலத்தில் ஆசையாக நட்டு வளர்த்த ஆலமரத்தை விற்கும் நிலை ஏற்பட்டது சுப்பையாவுக்கு

சுப்பையாவும், மகாதேவம்மாவும், மைசூரு – ஊட்டி நெடுஞ்சாலை அருகில் இருக்கும் நஞ்சன்கூடு நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஹுனசனலு கிராமத்தில் வசிக்கின்றனர். கர்நாடகத்தில் பட்டியல் சாதியாக உள்ள ஆதி கர்நாடகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இந்த இணையருக்கு  20 வயதில் பவித்ரா என்ற மகளும், 18 வயதில் அபிஷேக்  என்ற மகனும் உள்ளனர்.

பவித்ரா 8-ம் வகுப்பு வரை படித்தார். கேட்கும் திறன் குறைபாட்டுடன் பிறந்த அபிஷேக்கின் இரண்டு காதுகளிலும் மிதத் தீவிர நிலை கேட்கும் திறன் குறைபாடு இருக்கிறது. சுற்றி இருப்பவர்கள் பேசும்போது அவருக்கு கிட்டத்தட்ட எதுவுமே கேட்காது. இதனால், அவர் பேசக் கற்றுக்கொள்ள முடியவில்லை. பாவனைகள் மூலமாகவே அவர் உரையாடுகிறார் என்பதால் தனியாகச் செல்லும்போது அவர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. காரணம், வண்டிகள் செல்லும் சத்தமோ அவை எழுப்பும் ஹாரன் ஓசையோ அவருக்குக் கேட்காது.

மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டம், சின்ன குரளி கிராமத்தில் உள்ள பேச்சு மற்றும் செவித்திறனுக்கான விசாகா சிறப்பு உறைவிடப்பள்ளியில் தமது மகனைச் சேர்த்தார் சுப்பையா. இப்போது அபிஷேக் 12ம் வகுப்பு தேறியுள்ளார். தற்போது, குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக,  அருகில் உள்ள நகரங்கள், மாநகரங்களில் வேலை தேடிக்கொண்டே,  தங்கள் வீட்டுப் பசுமாட்டைப் பராமரித்து வருகிறார் அபிஷேக்.

காலப்போக்கில், மகாதேவம்மாவின் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் அவர்களின் சொற்ப சேமிப்பைக் கரைத்தன. ஆலமரத்தை விற்ற பிறகு, தமது இரண்டு ஏக்கர் வானம் பார்த்த பூமியை அதே ஊரைச் சேர்ந்த சுவாமி என்ற விவசாயி வசம் மூன்றாண்டு ஒத்திக்கு விட்டு 70 ஆயிரம் ரூபாய் திரட்டினார் சுப்பையா.

Mahadevamma (left) in happier times pounding turmeric tubers to bits. She used to earn Rs. 200 a day working on neigbouring farms before her fracture and subsequent injuries left her crippled.
PHOTO • Ramya Coushik
Right: (From left to right) Pavithra, Subbaiah, Mahadevamma and Abhishek in front of their home
PHOTO • Rangaswamy

மகிழ்ச்சியாக இருந்த காலத்தில் மஞ்சள் இடிக்கும் மகாதேவம்மா (இடது). இடுப்பு ஒடிந்து, காயம்பட்டு முடங்குவதற்கு முன்பாக பக்கத்து நிலங்களில் வேலைக்குப் போய் நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பாதித்தவர் இவர்.  வலது: தங்கள் வீட்டுக்கு முன்பு (இடமிருந்து வலமாக) பவித்ரா, சுப்பையா, மகாதேவம்மா, அபிஷேக்

வரிசையாக பல மருத்துவப் பரிசோதனைகள் செய்த பிறகு, மைசூரு கே.ஆர். மருத்துவமனை மருத்துவர்கள் மகாதேவம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஆனால், அவருக்கு ஏற்கெனவே ரத்த சோகையும், தைராய்டு சிக்கலும் இருந்த காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வது எளிதாக இல்லை. 15 நாள் மருத்துவமனையில் வைத்திருந்த பிறகு, மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்து 6 வாரத்துக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்குத் தயாராக வரும்படி கூறி அனுப்பிவைத்தார்கள் மருத்துவர்கள். அது வரையிலுமே பயணம், உணவு, எக்ஸ் ரே, ரத்தப் பரிசோதனை, மருந்து மாத்திரை ஆகியவற்றுக்கு அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகிவிட்டது.

மகாதேவம்மாவுக்கு வலியும் அசௌகரியமும் தாங்கமுடியாததாக இருந்தது. எனவே அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையம் என்ற ஊரில்  வழங்கப்பட்ட பாரம்பரிய சிகிச்சையை நாடுவது என்று முடிவு செய்ததார்கள். அவர்கள் ஊரில் இருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிங்கிரிபாளையம் பாரம்பரிய எலும்பு சிகிச்சை மையங்களுக்குப் பெயர்போனது. அறுவை சிகிச்சை இல்லாத இந்த சிகிச்சை முறையில், மகாதேவம்மாவின் இடுப்பிலிருந்து கணுக்கால் வரை அசைய முடியாதபடி கட்டு போடப்பட்டு, முறிந்த இடுப்பு எலும்பு மீது மூலிகை எண்ணெய் விடப்பட்டது. இந்த சிகிச்சை மலிவும் அல்ல. சுப்பையாவும் மகாதேவம்மாவும் சிங்கிரிபாளையத்துக்கு வாடகை கார் எடுத்துக்கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை என நான்கு முறை சென்றுவந்தார்கள். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு தலா ரூ.6 ஆயிரம் செலுத்தினார்கள். தவிர, ஒவ்வொரு முறையும் தலா 4,500 ரூபாய் கார் வாடகை தந்தார்கள்.

இந்த சிகிச்சையால் வேறு சிக்கல்கள் தோன்றின. கட்டு, மகாதேவம்மாவின் பாதத்தை துளைத்துக்கொண்டு உள்ளே சென்றது. உரசும்போது அது மகாதேவம்மாவின் தோலைக் கிழித்தது. அது எலும்பு தெரியும் அளவுக்கு கிழித்துக்கொண்டே இருந்ததால் புண் சீழ் பிடித்தது. இதையடுத்து நஞ்சன்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மகாதேவம்மாவை அழைத்துச் சென்றார் சுப்பையா. அங்கே சிகிச்சைக்கு மேலும் 30 ஆயிரம் ரூபாய் செலவானது. ஆனால், பாதம் குணமாகவில்லை.

காயமடைந்த பாதத்தோடு வீட்டில் நகர முயன்றபோது மேலும் இரண்டு முறை கீழே விழுந்தார் மகாதேவம்மா. ஒவ்வொரு முறையும் அவரது முட்டியில் கடும் காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் இதற்கு 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகும் அவரால் முட்டியை முழுதாக மடக்க முடியவில்லை.

Left: Mahadevamma's x-ray showing her fracture.
PHOTO • Rangaswamy
Right: Her wounded foot where the splint pressed down.  Mahadevamma can no longer use this foot while walking
PHOTO • Rangaswamy

இடது: எலும்பு முறிவைக் காட்டும் மகாதேவம்மாவின் எக்ஸ்ரே படம்.  வலது: பாரம்பரிய சிகிச்சையில் கட்டிய கட்டு குத்தியதால் காயமடைந்த பாதம். மகாதேவம்மா நடக்கும்போது இந்தக் காலைப் பயன்படுத்த முடியவில்லை

தன் இரண்டு ஏக்கர் நிலத்தை சுப்பையா ஒத்திக்கு விட்டுவிட்டதால், அதில் மானாவாரிப் பயிர்களான பருத்தி, சோளம், கொள்ளு, பச்சைப் பயறு, துவரை, தட்டைப்பயறு போன்றவற்றை சாகுபடி செய்து அவர் ஈட்டிவந்த வருமானம் இல்லாமல்போனது. உள்ளூர் சுய உதவிக் குழுவில் இருந்து நான்கு சதவீத வட்டிக்கு 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அப்போதிருந்து கடனுக்கு மாதம் ரூ.3,000 தவணை கட்டி வருகிறார். இன்னும் 14 மாதம் அவர் தவணை செலுத்தவேண்டியிருக்கிறது. இன்னும் ஓராண்டு காலத்தில் ஒத்திக்கு விட்ட நிலத்தை மீட்க அவர் 70 ஆயிரம் ரூபாய் தயார் செய்தாக வேண்டும்.

வேலை கிடைத்தால் தினம் 500 ரூபாய் சம்பாதித்துவிடுகிறார் சுப்பையா. தோராயமாக மாதம் 20 நாள் அவருக்கு வேலை கிடைக்கும். அந்த வட்டாரத்தில் வயல் வேலைகளுக்குச் செல்லும் சுப்பையா, கிராமத்தில் வீடு கட்டும் இடங்களுக்கும் வேலைக்கு செல்கிறார். கரும்பு வெட்டும் பருவத்தில், சர்க்கரை ஆலைகளில் கரும்பு நறுக்கும் வேலைக்குச் செல்கிறார் அவர். ஒரு காலத்தில் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அக்கம்பக்கத்து விளைநிலங்களில் புல் வெட்டியும், களைபறித்தும் தினம் 200 ரூபாய் சம்பாதித்து குடும்பத்துக்கு உதவி செய்துவந்த மகாதேவம்மாவுக்கு தற்போது பிடிமானம் இல்லாமல் நடக்கவே முடியாது. அவர் எங்கே வேலை செய்வது?

மாதம் 200 லிட்டர் பால் கறந்து மாதம் ரூ.6,000 ஈட்டித் தந்த வீட்டுப் பசு கடந்த இரண்டாண்டுகளாக கன்றுபோடவே இல்லை. இதனால், அந்த வருவாயும் நின்றுபோனது.

ஹுனசனலு கிராமத்தின் ஓரத்தில் குறுகலான ஒரு சந்தில் உள்ள, சுண்ணாம்பு அடித்த, ஓர் அறை மட்டுமே கொண்ட வீடு மட்டும்தான் அந்தக் குடும்பத்திடம் இருக்கிறது இப்போது.

இந்த துன்பமெல்லாம் வந்து சேர்வதற்கு முன்பு, தனது மகனை செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான சிறப்புக் கல்வி நிலையத்தில் படிக்க வைக்கவேண்டும் என்று  நினைத்த சுப்பையா தனது மகனின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைத்திருக்கிறார். “அவன் புத்திசாலி. அவனுக்கு பேச மட்டும்தான் வராது,” என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார் அவர். அவனுக்கு மேலும் ஆதரவு தர முடியாத நிலையை எண்ணி அவர் வருந்தினார்.

Left: Subbaiah at work. He earns Rs. 500 for a day of work that starts at 9 a.m. and stretches till 5 a.m.
PHOTO • Rangaswamy
Right: Mahadevamma stands with the support of a walker along with Subbaiah in front of the single-room house they share with their two children
PHOTO • Rangaswamy

இடது: வேலை செய்யும் சுப்பையா. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  வேலை செய்தால் அவருக்கு ரூ.500 கிடைக்கும். வலது: இரண்டு பிள்ளைகளோடு தாங்கள் வசிக்கும் ஓர் அறை கொண்ட வீட்டின் முன்பாக வாக்கர் உதவியுடன் சுப்பையாவுடன் நிற்கும் மகாதேவம்மா

இவர்களது மகள் பவித்ரா சமைப்பது, சுத்தம் செய்வது, வீட்டைப் பார்த்துக் கொள்வது என்று இயங்குகிறார். இவரது திருமணத்துக்கு செலவு செய்ய முடியாத நிலையில் குடும்பம் இருப்பதால், பவித்ராவுக்கு மணம் முடிக்கும் வாய்ப்பு சிக்கலில் இருப்பதாக கூறுகிறார் அவரது தந்தை.

“மருத்துவமனைக்குப் போக 500, வர 500 ரூபாய் செலவாகிறது. அது தவிர, மருந்து, எக்ஸ்ரே என்று செலவுகள் உள்ளன. ஏற்கெனவே சிகிச்சைக்காக, வாழ்நாள் முழுவதும் சேமித்த பணம் முழுவதும் செலவாகி, அதற்கு மேலும் செலவாகிவிட்டது. இன்னும் பணத்துக்கு நான் எங்கே செல்வது?” என்று கையறு நிலையில் கேட்கிறார் சுப்பையா.

இன்னும் அந்த மரத்தை விற்றது குறித்து வேதனைப் படுகிறார் அவர். “நானே நட்டு வளர்த்த மரம் அது. அதை நான் விற்றிருக்கக் கூடாது. ஆனால் எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது?”

மகாதேவம்மாவுக்குத் தேவைப்படும் நீண்ட கால மருத்துவத்துக்கு செலவு செய்யும் நிலையில் குடும்பம் இல்லை. தரமான சிகிச்சை செய்து நலம் பெற அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. தங்கள் நிலத்தை மீட்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், மீண்டெழவும் அவர்களுக்கு மேலும் அதிகப் பணம் தேவைப்படுகிறது.

“பிடிமானம் இல்லாமல் முற்றத்துக்குக்கூட என்னால் நடந்து செல்ல முடியவில்லை,” என்று கூறுகிறார் மனம் தளர்ந்த மகாதேவம்மா.

“வளர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற நான் ஒருவன் மட்டுமே உழைக்கிறேன். இது எப்போதும் போதுமானதாக இல்லை. என்னுடைய மோசமான எதிரிக்கும்கூட இந்த நிலை வரக்கூடாது. எங்கள் துன்பங்கள் எங்கே முடிவுக்கு வரும் என்பதே தெரியவில்லை,” என்கிறார் துயரத்தில் துவண்டுபோன சுப்பையா.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Ramya Coushik

Ramya Coushik is a communications consultant based in Bangalore. She writes on nature and natural farming.

Other stories by Ramya Coushik
Editor : Vishaka George

Vishaka George is Senior Editor at PARI. She reports on livelihoods and environmental issues. Vishaka heads PARI's Social Media functions and works in the Education team to take PARI's stories into the classroom and get students to document issues around them.

Other stories by Vishaka George
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan