ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மல்யுத்த வீரர் ரவி தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்று அரங்கில் நிற்பதை கண்டு ருஷிகேஷ் கக்டே உணர்ச்சி வசப்பட்டார். இதுபோன்று அவர் அண்மையில் இவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கவில்லை.

கோவிட்-19 பெருந்தொற்று 2020 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 18 மாதங்களாக மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மல்யுத்த வீரரான 20 வயது ருஷிகேஷ் விரக்தியில் உள்ளார். எதிர்காலத்தில் இச்சூழல் மாறுவதாக தெரிவதில்லை. “இது மிகவும் மனஅழுத்தம் தருகிறது,”  என்கிறார் அவர். “என்னுடைய நேரம் கரைவதாக உணர்கிறேன்.”

விரக்தி கலந்த புன்னகையுடன் பிரச்னைகளை அவர் பேசத் தொடங்குகிறார்: “மல்யுத்த போட்டி பயிற்சியுடன் சமூக இடைவெளியையும் எப்படி கடைபிடிப்பது?”

உஸ்மானாபாத்தின் புறநகரில் ஹட்லாய் குஸ்தி சங்குல் எனும் மல்யுத்த அகாடமியில் ருஷிகேஷ் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள நண்பர்களுடன் சேர்ந்து டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை உன்னிப்பாக கவனித்தார். ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் போட்டிகள் நிறைவுற்றபோது இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றிருந்தது - அவற்றில் இரண்டு மல்யுத்தத்தில் வென்றவை.

ஆண்கள் 57 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் தாஹியாவின் வெள்ளிப் பதக்கமும், 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் புனியாவின் வெண்கல பதக்கமும் மல்யுத்த குடும்பங்களைச் சேர்ந்த ருஷிகேஷ் போன்ற வீரர்களுக்கு ஊக்கமளித்துள்ளது. டோக்கியோ போட்டியில் வென்ற பிறகு பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவில் பேசிய ஹரியானாவின் நாஹ்ரி கிராமத்தின் விவசாயி மகனான 23 வயது தாஹியா, தனது வெற்றிக்காக குடும்பத்தினர் நிறைய தியாகம் செய்தனர் என்றார். ஆனால் இதுவரை மூன்று ஒலிம்பியன்களை கொடுத்துள்ள அக்கிராமம் இப்போதும் அடிப்படை வசதிகளின்றியே இருக்கிறது. “இக்கிராமத்திற்கு எல்லாமே தேவை... நல்ல பள்ளி, அத்துடன் விளையாட்டு வசதிகளும்,” என்கிறார் அவர்.

Left: Rushikesh Ghadge moved from Latur to Osmanabad to train in wrestling. Right: Practice session in the wrestling pit at Hatlai Kusti Sankul in Osmanabad
PHOTO • Parth M.N.
Left: Rushikesh Ghadge moved from Latur to Osmanabad to train in wrestling. Right: Practice session in the wrestling pit at Hatlai Kusti Sankul in Osmanabad
PHOTO • Parth M.N.

இடது: மல்யுத்தத்தில் பயிற்சி பெறுவதற்காக லத்தூரிலிருந்து உஸ்மானாபாத் வந்தள்ள ருஷிகேஷ் காக்டி.  வலது: உஸ்மானாபாதின் ஹட்லாய் குஸ்தி சங்குல் மல்யுத்த தொட்டியில் நடைபெறும் பயிற்சி

தாஹியா சொல்வது பற்றி ருஷிகேஷூம் அறிந்துள்ளார். மூன்றாண்டுகளுக்கு முன்பு, லத்தூரின் தாகா கிராமத்திலிருந்து மல்யுத்த கனவை தேடி வந்துள்ளார். “வீட்டில் ஒரு வசதியும் கிடையாது,” என்பதால் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஸ்மானாபாத்திற்கு வந்துள்ளார். “உஸ்மானாபாத்தில் நல்ல பயிற்சியாளர்கள் உள்ளனர் என்பதால் [வெற்றிகரமான  மல்யுத்த வீரர் ஆவதற்கு] எனக்கு நல்ல வாய்ப்பு.”

கோலி சமூகத்தைச் சேர்ந்த ருஷிகேஷிற்கு இந்த முடிவு அவ்வளவு எளிதானது கிடையாது. அவரது தந்தைக்கு வேலையில்லை, தாய் பூ தையல் செய்து மாதம் ரூ.7000-8000 வரை சம்பாதித்து குடும்பத்தை நடத்துகிறார். “நல்வாய்ப்பாக மல்யுத்த அகாடமியில் இலவசமாக தங்க வைக்கும் ஒரு பயிற்சியாளரை நான் கண்டுவிட்டேன், ” என்கிறார் அவர். “எனவே எனது அடிப்படை தேவைக்கு [ரூ. 2,000-3,000] மட்டும் அம்மா பணம் அனுப்புவார். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.”

உஸ்மானாபாத்திற்கு வந்த பிறகு ருஷிகேஷ் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் சத்தியத்தை வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார் அவரது பயிற்சியாளரான ஹட்லாய் குஸ்தி சங்குல் நடத்தி வரும் 28 வயது கிரண் ஜவால்கி. “மாவட்ட அளவிலான போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டார். தேசிய அளவு தான் அவரது நிலை,” என்கிறார் அவர்.  “இப்போட்டிகளில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், விளையாட்டு இடஒதுக்கீட்டில் அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.”

ஆனால் இந்த பெருந்தொற்று வாழ்க்கையை நிர்கதி ஆக்கிவிட்டது. ருஷிகேஷின் தாய் வேலையிழந்துவிட்டார். மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதால் கிடைக்கும் பணமும் நின்றுபோனது. “பெருந்தொற்று காலத்தில் பல மல்யுத்த வீரர்களும் வெளியேறி கூலி வேலை செய்கின்றனர்,” என்கிறார் ஜவால்கி. “அவர்களால் ஒருபோதும் [பயிற்சியை] தொடர முடியாது.”

Many students of the wrestling academy have stopped training because they cannot afford the expensive diet anymore
PHOTO • Parth M.N.

விலை அதிகமான உணவுமுறையை கடைபிடிக்க முடியாமல் பல மாணவர்களும் மல்யுத்த அகாடமி பயிற்சியிலிருந்து விலகிவிட்டனர்

ஆரோக்கியமான உணவுமுறையை மேற்கொள்வது என்பது மல்யுத்த வீரருக்கு முக்கியமானது, விலை அதிகமானதும் கூட. “சராசரியாக ஒரு மல்யுத்த வீரர் மாதம் நான்கு கிலோ பாதாம் உண்கிறார்,” என்கிறார் ஜவால்கி. “அதோடு தினமும் 1.5 லிட்டர் பால், எட்டு முட்டைகளும் அவருக்கு தேவை. உணவுமுறைக்கே மாதம் ரூ.5000 செலவாகிவிடும். இந்த உணவுமுறைக்கு செலவு செய்ய முடியாத காரணத்தினால் தான் பல மாணவர்கள் மல்யுத்தத்தை கைவிட்டுள்ளனர்.” 80 மாணவர்கள் இருந்த அவரது அகாடமியில் தற்போது 20 பேர் மட்டுமே வருகின்றனர்.

நம்பிக்கை இழக்காத மாணவர்களில் ஒருவர் ருஷிகேஷ்.

இதைத் தொடர்வதற்காக அவர் மல்யுத்த அகாடமி அருகே உள்ள ஏரியில் மீன்பிடித்து அருகில் உள்ள உணவகங்களில் விற்று வருகிறார். “பகுதி நேரமாக உஸ்மானாபாத்தில் உள்ள ஆடை ஆலையில் வேலை செய்கிறேன். எல்லா வேலைகளையும் செய்து மாதம் ரூ.10,000 சம்பாதிக்கிறேன்,” என்கிறார் அவர். அதில் ரூ.5000  வைத்துக் கொண்டு மிச்ச பணத்தை வீட்டிற்கு அனுப்புகிறார். உஸ்மானாபாத்தின் மக்கானி கிராமத்தில் உள்ள பாரத் வித்யாலாயாவில் ருஷிகேஷ் பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவர். அவருக்கு சொந்தமாக ஸ்மார்ட் போன் இல்லாததால் நண்பர்களிடம் வாங்கி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்.

மகனின் போராட்டங்கள் குறித்து ருஷிகேஷின் தாய்க்கு தெரியாது. “போட்டிகள் எதுவும் நடைபெறுவதில்லை என்பதால் எனது எதிர்காலம் குறித்து அம்மா எப்போதும் கவலை கொள்கிறார். அவருக்கு பாரத்தை கூட்ட விரும்பவில்லை,” என்கிறார் ருஷிகேஷ்.  “என் கனவுகளை நனவாக்க எதையும் செய்யத் தயார். நான் அன்றாடம் பயிற்சி செய்கிறேன், பெருந்தொற்று முடியும் வரையிலும் விட மாட்டேன்.”

Tournaments used to be a good source of income for aspiring wrestlers says Kiran Jawalge (left), who coaches the Hatlai Kusti Sankul students
PHOTO • Parth M.N.
Tournaments used to be a good source of income for aspiring wrestlers says Kiran Jawalge (left), who coaches the Hatlai Kusti Sankul students
PHOTO • Parth M.N.

போட்டிகள் தான் இளம் மல்யுத்த வீரர்களுக்கு சிறந்த வருவாய் ஆதாரம் என்கிறார் கிரண் ஜவால்கி (இடது), அவர் ஹட்லாய் குஸ்தி சங்குல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்

மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பாலான மல்யுத்த வீரர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகளாகவே உள்ளனர். ருஷிகேஷின் கனவை அவர்கள் பிரதிபலிக்கின்றனர். மாநிலத்தில் பிரபலமாக உள்ள இந்த விளையாட்டைக் காண ஆயிரக்கணக்கில் சில சமயம் லட்சங்களில் கூட மக்கள் திரள்கின்றனர்.

ஆண்டுதோறும நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் பல்வேறு வயது பிரிவினருக்கு பாரம்பரியமான கூடங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. “இந்த ஆறு மாதங்களில் நீங்கள் சிறப்பாக விளையாடிவிட்டால் ஆறு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை பெறலாம்,” என்கிறார் ஜவால்கி.  “இது அவர்களின் விலை உயர்ந்த உணவுமுறைக்கு உதவுகிறது.” கோவிட்-19 தொடங்கியதிலிருந்து மல்யுத்த போட்டிகளில் கிடைக்கும் வருவாய் ஆதாரம் நின்றுவிட்டது. “கிரிக்கெட், அவ்வப்போது ஹாக்கி போட்டிகள் மீது மட்டுமே நாம் கவனம் செலுத்துவதே பிரச்னைக்கு காரணம். மல்யுத்தம், கொக்கோ போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை முற்றிலுமாக நிராகரிக்கின்றனர்,” என்கிறார் பயிற்சியாளர்.

தேசிய கொக்கோ அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு 29 வயது சரிகா கலே உஸ்மானாபாத் நகரிலிருந்து முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணித்து சமூக கூடங்களில் தங்கி மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்பார். “பயணிக்கும்போது நாமே உணவும் எடுத்துச் செல்ல வேண்டும். முன்பதிவுச் சீட்டு இல்லாததால் சில சமயம் நாங்கள் கழிப்பறை அருகே கூட அமர்ந்து சென்றிருக்கிறோம்,” என்கிறார் அவர்.

மகாராஷ்டிராவில் தோன்றிய கொக்கோ விளையாட்டு  இந்திய விளையாட்டுகளில் புகழ்பெற்றது. அசாமின் கௌஹாட்டியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கொக்கோ அணிக்கு சரிகா தலைமை தாங்கினார். 2018ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இருநாட்டு போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான இந்திய அணிக்கு விளையாடினார். 2020 ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு அவருக்கு பெருமைமிக்க அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்தது. “கடந்த பத்தாண்டுகளில் பல பெண்கள் கொக்கோவை விளையாட தொடங்கிவிட்டனர்,” என்கிறார் சரிகா.

Left: Sarika Kale is a former national kho-kho captain and an Arjuna awardee. Right: A taluka sports officer now, Sarika trains and mentors kho-kho players
PHOTO • Parth M.N.
Left: Sarika Kale is a former national kho-kho captain and an Arjuna awardee. Right: A taluka sports officer now, Sarika trains and mentors kho-kho players
PHOTO • Parth M.N.

இடது: சரிகா கலே தேசிய கொக்கோ அணியின் முன்னாள் தலைவர், அர்ஜூனா விருது பெற்றவர். வலது: இப்போது தாலுக்கா விளையாட்டு அலுவலராக கொக்கோ வீரர்களுக்கு பயிற்சி அளித்து சரிகா வழிகாட்டி வருகிறார்

உஸ்மானாபாத்தின் துலஜாபூர் தாலுக்காவில் உள்ள தாலுக்கா விளையாட்டு அலுவலராக சரிகா இப்போது பணியாற்றி இளம் வீரர்களுக்கு வழிகாட்டி, பயிற்சி அளித்து வருகிறார். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு வீரர்கள் பயிற்சிக்கு வருவது குறைவதை அவர் கவனித்து வருகிறார். “பெரும்பாலான பெண்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்,” என்கிறார் அவர். “கிராமப்புற சிறுமிகள் விளையாடுவதற்கு ஊக்குவிக்கப்படுவதில்லை. விளையாட்டுகளில் இருந்து தங்களின் பிள்ளைகளை விலக்குவதற்கு இப்பெருந்தொற்று பெற்றோருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.”

பெருந்தொற்று காலத்தில் பயிற்சியை தவற விடுவது இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு பேரிழப்பை ஏற்படுத்தும், என்கிறார் சரிகா. “2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஐந்து மாதங்களுக்கு பயிற்சி முற்றிலுமாக நின்றுவிட்டது,” என்கிறார் அவர்.  “சில வீரர்கள் திரும்பும்போது அவர்களின் உடல்திடம் சரிந்திருப்பதை காண முடிந்தது. நாங்கள் முதலில் இருந்து பயிற்சியை தொடங்கிய போது இரண்டாவது அலை வந்தது. எங்களால் மீண்டும் சில மாதங்களுக்கு பயிற்சி செய்ய முடியவில்லை. நாங்கள் மீண்டும் ஜூலையில் [2021] பயிற்சியை தொடங்கினோம். பயிற்சி வகுப்புகளுக்கு அவ்வப்போது வரும் மாணவர்கள் ஜொலிப்பதில்லை.”

போதிய பயிற்சி இல்லாததால் பல்வேறு வயது பிரிவினருக்கான போட்டிகளில் விளையாடும் வீரர்கள் இழப்பைச் சந்திக்கின்றனர். “14 வயதிற்குட்பட்ட பிரிவு வீரர் 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிக்கு பயிற்சியின்றி செல்கிறார்,” என்கிறார் சரிகா. “ஒப்பற்ற ஆண்டுகளை அவர்கள் இழக்கின்றனர். கொக்கோ வீரர்கள் 21 முதல் 25 வரையிலான வயதுகளில் சாதனைகள் படைக்கின்றனர். வயது பிரிவிற்கு ஏற்ப சாதனைகளை பொறுத்து அவர்கள் உயர் நிலைக்கு [தேசிய]  தேர்வு செய்யப்படுகின்றனர்.”

பெருந்தொற்றினால் நிச்சயமற்ற எதிர்காலம் உருவாகி மகாராஷ்டிராவின் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நிழலாடச் செய்கிறது.

Promotion of kho-kho in Osmanabad district has brought more players to the sport, but Covid-19 is affecting the progress of recent years
PHOTO • Parth M.N.

உஸ்மானாபாத் மாவட்டத்தில் கொக்கோ விளையாட்டை பிரபலப்படுத்தி பல வீரர்கள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் கோவிட்-19 அவர்களின் அண்மை கால வளர்ச்சியை பாதிக்கிறது

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சரிகா கொக்கோ விளையாடத் தொடங்கியபோது பெற்றோர் அனுமதி அளிக்காததால் மறைக்க வேண்டி இருந்தது. “இந்த குறைந்த அளவு ஆதரவோ, கிராமப்புறங்களில் சிறந்த வசதியோ கிடையாது,” என்கிறார் அவர்.  “குடும்பங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தையே விரும்புகின்றன - என் தந்தையும் அதைத் தான் விரும்பினார். நான் வளரும்போது என் குடும்பத்தில் போதிய உணவு இருக்காது.” அவரது தந்தை விவசாய தொழிலாளராகவும், தாய் வீடுகளில் வேலை செய்பவராகவும் இருந்தனர்.

விளையாட்டை துறையாக தேர்வு செய்வது பெண்களுக்கு கடினமானது, என்கிறார் சரிகா. “பிள்ளைகளை பார்த்துக் கொண்டு சமையலறையில் முடங்குவதே பெண்கள் குறித்த மனநிலையாக உள்ளது. அரைகால் சட்டை அணிந்து விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பதை குடும்பங்களால் ஏற்க முடிவதில்லை.” பள்ளியில் முதன்முறையாக இப்போட்டியை கண்ட 10 வயது சரிகாவை கொக்கோ விளையாட்டிலிருந்து யாராலும் தடுக்க முடியவில்லை. “அதைக் கண்டு ஈர்க்கப்பட்டதை என்னால் மறக்க முடியவில்லை,” என்கிறார் அவர். “எனக்கு ஆதரவளிக்கும் நல்ல பயிற்சியாளரைக் கண்டேன்.”

அவரது பயிற்சியாளரான சந்திரஜித் ஜாதவ் இந்திய கொக்கோ கூட்டமைப்பின் கூடுதல் செயலாளராக உள்ளார். உஸ்மானாபாத்தைச் சேர்ந்த அவர் இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதோடு கொக்கோ மையமாக மாற்றியுள்ளார். உஸ்மானாபாத் நகரில் இரண்டு பயிற்சி மையங்கள் உள்ளன. இப்போட்டியை மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகள் பிரபலப்படுத்தி வருகின்றன. ஜாதவ் பேசுகையில்: “கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு வயது பிரிவுகளில் உஸ்மானாபாத்திலிருந்து 10 வீரர்கள் தேசிய அளவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வென்றுள்ளனர். நான்கு பெண்கள் மாநில அரசின் ஷிவ் சத்திரபதி விருதையும், நான் விளையாட்டு பயிற்சியாளருக்கான விருதையும் வென்றிருக்கிறோம். எங்களிடம் அர்ஜூனா விருது பெற்றவரும் இருக்கிறார்.”

இப்போது மக்களிடம் (கிரிக்கெட் அல்லது ஹாக்கியை தாண்டி) பிற விளையாட்டுகள் குறித்த குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை சரிகா உணர்ந்துள்ளார். “சிலர் தான் இதை கால விரையம் என நினைக்கின்றனர்,” என்கிறார் அவர்.

Left: Ravi Wasave (in grey t-shirt) from Nandurbar wants to excel in kho-kho. Right: More girls have started playing the sport in the last decade
PHOTO • Parth M.N.
Left: Ravi Wasave (in grey t-shirt) from Nandurbar wants to excel in kho-kho. Right: More girls have started playing the sport in the last decade
PHOTO • Parth M.N.

இடது: நர்துர்பாரைச் சேர்ந்த ரவி வசவி (சாம்பல் நிற சட்டையில்) கொக்கோவில் ஜொலிக்க விரும்புகிறார். வலது: கடந்த பத்தாண்டுகளில் பல பெண்கள் இவ்விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர்

மகாராஷ்டிராவின் பழங்குடியின் மாவட்டமான நந்துர்பாரிலிருந்து 600 கிலோமீட்டர் பயணித்து 19 இளைஞர்கள் கொக்கோ பயிற்சிக்காக உஸ்மானாபாத் வந்துள்ளதே இந்த வளர்ச்சிக்கான சான்று. அவர்களில் ஒருவர் பில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் 15 வயது ரவி வசவி. “வீட்டுச் சூழல் விளையாட்டிற்கு ஏற்றதாக இல்லை,” என்கிறார் அவர். “உஸ்மானாபாத் பல கொக்கோ சாம்பியன்களை உருவாக்கியுள்ளது. நானும் அவர்களில் ஒருவராக விரும்புகிறேன்.”

பெருந்தொற்று வராவிட்டால் 2020ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் ரவி விளையாடி இருப்பார் என்பதில் சரிகாவிற்கு சந்தேகமில்லை. “என்னை நிரூபிக்க போதிய நேரம் கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். “என் பெற்றோரின் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் தரிசாக உள்ளது. அவர்கள் தினக்கூலிகளாக வேலை செய்து வாழ்வாதாரத்தை ஈட்டுகின்றனர். என் கனவை பின்தொடர்வதற்காக அவர்கள் பெரிய ஆபத்துகளையும் ஏற்கின்றனர்.”

எனக்கு சிறந்தவற்றை தரவே பெற்றோர் விரும்புகின்றனர் என உஸ்மானாபாத் டயட் கல்லூரி கிளப்பில் பயிற்சி பெற்று வரும் ரவி சொல்கிறார்.“போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழலில் அவர்களை விட்டு தூர இருப்பது தேவையற்றது என அவர்கள் நினைக்கின்றனர்,” என்கிறார் அவர். “சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுமாறு என் பயிற்சியாளர்கள் அவர்களிடம் உறுதி அளித்துள்ளனர். போட்டிகள் விரைவாக தொடங்காவிட்டால் அவர்கள் மிகுந்த கவலை கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும். கொக்கோ போட்டிகளில் சிறந்து விளங்கி எம்பிஎஸ்சி [மாநில சிவில் சேவை] தேர்வுகளை எழுதி விளையாட்டு இடஒதுக்கீட்டில் பணி பெற நான் விரும்புகிறேன்.”

கிராமப்புற இளம் கொக்கோ வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் சரிகாவின் பாதையை பின்பற்றவே ரவி விரும்புகிறார். தன்னால் ஒரு தலைமுறையே கொக்கோ விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டுள்ளதை நன்கு அறிந்துள்ள சரிகா, பெருந்தொற்று விளையாட்டை பாதிக்கும் என அஞ்சுகிறார். “பெருந்தொற்று முடியும் வரை காத்திருக்க பெரும்பாலான பிள்ளைகளால் முடிவதில்லை,” என்கிறார் அவர். “எனவே வசதியற்ற திறமைமிக்க பிள்ளைகள் விளையாட்டில் தொடர்வதற்காக பொருளாதார ரீதியாக நான் ஆதரவளித்து வருகிறேன்.”

சுதந்திர ஊடகவியலாளருக்கான புலிட்சர் மையத்தின் உதவித்தொகை  இக்கட்டுரையின் செய்தியாளருக்கு அளிக்கப்படுகிறது.

தமிழில்: சவிதா

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha