களைப்புற்ற அவர்களது கண்கள்

எதனைப் பார்க்கும்?

சிதறிக் கிடக்கிற அழுக்கான ஒரு கனவு!

சிதறிக் கிடக்கிற சொர்க்கம் போன்ற ஒரு திட்டம்!

(ஸ்ரீரங்கம் சீனிவாசராவ் 1935இல் ‘பரஜிதுலு’ (தமிழில் நட்டம் என்று அர்த்தம்) என்ற தலைப்பில் எழுதிய தெலுங்கு கவிதை)

அதிகாலை ஐந்து மணிக்கு அவர்கள் இடிப்பதற்காக வந்தனர். “ வீட்ல இருந்த எங்களோட சாமான்கள  எடுத்துக்கக்கூட எங்களுக்கு அவங்க டைம் கொடுக்கல” என்கிறார் 40 வயதான டி. கங்குலம்மா. ஆந்திராவின் அனந்தபூர் நகரத்துக்கு வெளியே உள்ள விஜயநகர் காலனியில் வசிக்கிற தினக்கூலி தொழிலாளி. “அவர்கள் எங்களது வாழ்க்கையை ரோட்டுக்குக் கொண்டுவந்துட்டாங்க” என்கிறார்.

எட்டு புல்டோசர்களும் சுமார் 200 போலீஸ்காரர்களும் வந்திருப்பார்கள் என்கிறார்கள் பகுதி மக்கள். 300 வீடுகளைக் கொண்ட சுமார் 150 குடியிருப்புகளை ஒன்பது மணி அளவில் இடிக்கத் தொடங்கும்போது எட்டு பெண் போலீஸ்காரர்களும் வந்திருக்கின்றனர். பெரும்பாலான வீடுகள் கடந்த மூன்று நான்கு வருடங்களில் கட்டியவை. அந்தப் பகுதியில் வாழ்பவர்களிலேயே  மிகவும் ஏழைகளாக இருப்பவர்கள் வசிக்கிற வீடுகள் அவை.

பயத்திலும் அவசரத்திலும் மக்கள் விட்டு வந்த, உடைந்த பிளாஸ்டிக் பக்கெட்கள், கிழிந்த பள்ளிப் புத்தகங்கள்,, சேறு படிந்த உடைகள் உள்ளிட்ட பொருள்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே கிடக்கின்றன.

PHOTO • Rahul M.

தையற்வேலை செய்கிற முஹம்மது உசேன் இடிக்கப்பட்ட அவரது வீட்டின் முன்பாக தனது ஐந்து வயது மகளை வைத்துக்கொண்டு நிற்கிறார்

ஆகஸ்ட் மூன்றாம் தேதி தரைமட்டமாக ஆக்கப்பட்ட சுமார் ஆறு வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் இடிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகத்தான் இந்த இடத்துக்கு குடிவந்திருக்கின்றன. “நாங்கள் கடந்த வாரம்தான் இங்கே வந்தோம்” என்கிறார் பர்வீன் பானு. வீட்டிலிருந்தே தையற்வேலை செய்கிறார் அவர். அவரது கணவர் ஒரு தினக்கூலி தொழிலாளி. அவர்கள் அனந்தப்பூரின் பவானி காலனியிலிருந்து விஜயநகர் காலனிக்கு மாறியிருக்கிறார்கள். இங்கே வாடகை குறைவாக இருப்பதாலும் பல குடும்பங்கள் மற்ற பகுதிகளிலிருந்து இங்கே குடிவந்திருக்கின்றன. “அவர்கள் வந்தார்கள், எங்களது வீடுகளை இடித்துவிட்டு போய்விட்டார்கள்” என்கிறார் பர்வீன். “நாங்கள் இந்த வீட்டைக் கட்டுவதற்கு அடித்தளம் அமைக்கும்போதே அவர்கள் தெரிவித்திருக்கலாம்” என்கிறார் அவர்.

விஜயநகர் காலனியின் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் தலித்துகள், பழங்குடிகள், இஸ்லாமியர்கள்தான். அவர்களில் பெரும்பாலோர் வீடுகள் சுத்தம் செய்தல், பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்தல் உள்ளிட்ட சின்னச் சின்ன வியாபாரங்களை செய்கிறார்கள். அனந்தப்பூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பலர் முஹம்மது உசேன் போலவே இங்கே குடியேறி உள்ளனர். உசேன் ஒரு டெய்லர். 20 வருடங்களுக்கு முன்பாக, தர்மாபுரம் கிராமத்திலிருந்து இங்கே வந்திருக்கிறார். அவரது கிராமத்தில் விவசாயிகளும் நெசவாளர்களும்தான் அவரது வாடிக்கையாளர்கள். விவசாயமும் நெசவும் நலிவடைந்தபோது அவரது வேலையும் சிரமப்பட்டது. “எங்களோடு குடும்பத்தின் அன்றாடதேவைகளுக்காகத்தான் நாங்கள் இங்கே வந்தோம்’ என்கிறார் அவர். மூன்று வருடத்துக்கு முன்பாக கட்டிய வீட்டை அவர் இழந்திருக்கிறார்.

PHOTO • Rahul M.

அனந்தப்பூர் நகரத்துக்கு வெளியே இருக்கிற விஜயநகரம் காலனியை இடிப்பதற்கான பணியாளர்கள் கூட்டம் அதிகாலையிலேயே வந்தது அங்கு குடியிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

விஜயநகர் காலனியே முப்பது ஆண்டுகளாக இருக்கிறது. இடிக்கப்பட்ட வீடுகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் முன்பு புக்காராய சமுத்திரம், சிக்காவடியாலு செருவு எனும் இரண்டு ஏரிகள் இருந்துள்ளன. மழைபெய்வது குறைவாக போனதும் அவை வறண்டு போயிருக்கின்றன.

தெலுங்கு தேசம் கட்சியின் அரசாங்கம்2014இல்  அதிகாரத்துக்கு வந்தபோது, தெலுங்கு தேசம் கட்சியின் உள்ளூர் நகரமன்ற உறுப்பினர் ஆர். உமா மகேஸ்வர் அந்த இடத்தில் நீங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று உறுதியளித்தார் என்று தற்போது வீடுகளை இழந்து நிற்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால்தான் அவர்கள் வீடு கட்டியிருக்கின்றனர். மின்வாரியம் அவர்களுக்கு மின்சார மீட்டர்களை வழங்கியிருக்கிறது. அவர்கள் மின் கட்டணமும் கட்டிவந்திருக்கின்றனர்.

வருவாய்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள இடிப்பதற்கான அறிவிப்பில் 2017 ஜூன் 8ந்தேதி போடப்பட்ட ரிட் பெட்டிஷனும் உச்ச நீதிமன்றத்தில் 2001 ஜூலை 25 ஆம்தேதி போடப்பட்ட ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டு மெமொக்களும் கொடுத்ததாக அதில் உள்ளது. ஏரிகள் இருந்த இடத்தில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக அவற்றில் உள்ளன. “ இது ஏரி” என்கிறார் அனந்தப்பூரின் வருவாய் கோட்ட அதிகாரியான ஏ. மலோலா. அவர்தான் வீடுகள் இடிக்கப்பட்டதை மேற்பார்வை செய்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழிகாட்டுதல் வழங்கியிருக்கின்றன என்கிறார் அவர். அவரது மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்பவே  தான் செயல்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். “ ஒரு ஏரியை சிலர் ஆக்கிரமித்துக்கொண்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ” என்று கேட்கிறார் அவர். 10, 15 வீடுகளில் மட்டும்தான் குடும்பங்கள் வசித்தன. மற்றவை காலியாகத்தான் இருந்தன” என்கிறார் அவர்.

PHOTO • Rahul M.

(இடது) வீடுகளை இடிப்பது தொடங்கிய பின்பு அந்த வீடுகளின் மீது ஒட்டப்பட்டதாக புகார் சொல்லப்படுகிற அறிவிப்பு இதுதான். (வலது) இடிபாடுகளுக்கு இடையில் திறந்து கிடக்கிறது பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிற நோட்டுப்புத்தகம்

தங்களின்  வீடுகளையும் வாழ்க்கைகளையும் இடித்துப்போடுவதற்கு முன்பாக, அரசு அதிகாரிகள் எதுவும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். “ அவர்கள் காலை நேரத்தில் வீடுகளை இடிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவற்றின் மீது அறிவிப்பு அறிக்கைகளை ஒட்டிக்கொண்டிருந்தனர். அவற்றையும் இடித்துக்கொண்டிருந்தனர். போலீஸ்காரங்க மக்களை விரட்டிக்கொண்டேயிருந்தனர். நான் அங்கிருந்து ஓடிட்டேன்” என்கிறான் உள்ளூர் நகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிற சுமார் 12 வயதுள்ள  மாணவன் பி. அனில் குமார்.

மற்றவர்களும் இதுபோன்ற சம்பவங்களையே தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் அறிவிப்பு அறிக்கையில் ஜூலை 25 என்று பின்தேதியிட்டிருந்தது.  . ஆனால் , அவற்றை வீடுகள் இடிப்பதற்கு சற்று முன்பாகத்தான் கொண்டுவந்தார்கள் என்கிறார்கள் அவர்கள். “இந்த நோட்டீஸ்களை அவர்கள் எங்கள் கண் முன்பாகவே ஒட்டினார்கள். அதே நேரத்தில் வீடுகளை இடித்தார்கள். எங்களில் சிலர் மொபைல் போன்களில் பதிவு செய்ய முயன்றார்கள். அவர்களின் போன்களை பறித்து விட்டார்கள்” என்கிறார் பி. ஜெகதீஷ். அவர் விஜயநகர் காலனியில் பிறந்தவர். சில வருடங்களுக்கு முன்பாகத்தான் சொந்த வீடு கட்டிக்கொண்டு இங்கே வந்திருக்கிறார்.

மக்களை போலீஸ்காரர்கள் விரட்டிக்கொண்டே இருந்தார்கள். நான் அங்கிருந்து ஓடிவிட்டேன் என்கிறான் நகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் அனில்குமார்

“ஆரோக்கியத்துக்கு கேடு ஆக இருக்கின்றன என்று பன்றிகளை விரட்டும்போதுகூட கொஞ்சம் நேரத்தைக் கொடுப்பார்கள்” என்கிறார் 28 வயதான எஸ்.பிரவீன். அவர் அனந்தபூர் நகரத்தில் 160 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். ஒவ்வொன்றும் 20 கிலோ கொண்ட 150 சிமெண்ட் செங்கல்களை அவர் செய்தாக வேண்டும். பர்வீன் கணவர் ஒரு கொத்தனாராக வேலை செய்கிறார். அவர்களின் குடும்பம் ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் அந்த வீட்டைக் கட்டியிருக்கிறது. அவர்கள் தங்களின்  பணத்தைச் சேமித்து வைப்பதற்காகச் சேர்ந்திருக்கின்ற ஒரு சேமிப்புக் குழுவிடம் மூன்று லட்சம் ரூபாய்கள் வரை கடன்கள் வாங்கித்தான் அந்த வீட்டைக் கட்டியிருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குபவர்களிடமும் கடன்கள் வாங்கியிருக்கிறார்கள். நான்கு பேரைக் கொண்ட அந்த குடும்பத்தின் மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாய். அதில் கடன்களுக்காக மட்டுமே 7,000 ரூபாய் வரை போய்விடுகிறது. அதனால் ஏற்படுகிற கஷ்டத்தைச் சமாளிப்பதற்காக அவர்கள் மீண்டும் கடன் வாங்குகிறார்கள்.

PHOTO • Rahul M.

ஒரு வருடத்திற்கு முன்னால் தனது கணவருடன் சேர்ந்து கட்டிய வீட்டின் இடிபாடுகளுக்கிடையே பர்வீன் நிற்கிறார்

வீடு இடிக்கப்பட்டதால் மன வெறுப்படைந்த பர்வீன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார். தனது உடலின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு நெருப்பு வைத்துக் கொள்ள முயன்றார். ஆனால் காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். எங்கள் வீடுகளை இடித்து விட போகிறோம் என்று முன்னதாக அவர்கள் தெரிவித்திருந்தால், குறைந்தபட்சம் நாங்கள் கதவுகள், ஜன்னல்களையாவது யாருக்காவது விற்று இருப்போம் என்கிறார் அவர். கட்டிடங்கள் இடிபடுகிறபோது அந்த பரபரப்பில் சில துணிமணிகளையும் சில பாத்திரங்களையும்தான் அவர்களால் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், மின்விசிறிகள், மின் விளக்குகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் உடைந்து சேதம் ஆகிவிட்டன.

காணொளியை காண்க:வீடுகளை இடிக்க வந்த குழுவினர் நடந்துகொண்ட கொடூரமான தன்மைகளைப் பற்றி மற்ற குடியிருப்புவாசிகள் பேசுகையில்,  “நான் எனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்வதை பார்த்தாவது அவர்கள் தங்களின் நடவடிக்கைகளை நிறுத்துவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால்......” என்கிறார் கஙகுலம்மா

கங்குலம்மாவும் அவரது உடம்பில் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். “நான் இவ்வாறு உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொள்வது என்பது அவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் என நினைத்தேன். அவர்கள் எங்களுடைய வீடுகளை விட்டுவிட்டு போய் விடுவார்கள் என்று நான் நம்பினேன். ஆனால், போலீஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் எங்களுடைய வீடுகளைக் இடிக்கிற நடவடிக்கையை நிறுத்தவே இல்லையாதினார்கள் அதேநேரத்தில் அவர்களுடைய வீடுகளை இடிப்பதை நிறுத்தவே இல்லை.”

காவல்துறையினர் மற்றும்  அரசு அதிகாரிகள் தங்களை உடல்ரீதியாகவும் பலவந்தப் படுத்தினார்கள் என்றும் வார்த்தைகள் மூலமாகவும் துன்புறுத்தினார்கள் என்றும் பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.  ஆனால், அவருடைய துறையின் பணியாளர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்கிறார் வருவாய் கோட்ட அதிகாரி. “என்னை அவர்கள் தள்ளிவிட்டதால், நான் தண்ணீர் நிறைய இருந்த ஒரு குட்டைக்குள் விழுந்து விட்டேன்” என்கிறார் பி சோபா. குடும்பத் தலைவியான அவர் கணவர் உரம் சம்பந்தமான வியாபாரத்தைச் செய்கிறார். சோபா கர்ப்பிணியாக இருக்கிறார் அவர் கீழே விழும்போது அவருடைய மூன்று வயது மகள் கீர்த்திகாவை தோளில் சுமந்திருந்தார் என்கிறார்கள் அருகில் இருந்தவர்கள்.

PHOTO • Rahul M.

வீடுகள் இடிக்கப்பட்ட போது  தனது வீட்டையும் இழந்த ஒரு மூதாட்டி

வீடுகள் இடிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் பலர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர்களின் வீடுகளை புல்டோசர்கள் இடிக்கிற காட்சி இன்னமும் அவர்களின் மனதில் படங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன. “நான் இரண்டு தடவை மயக்கமடைந்து விட்டேன்.  எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. எங்களுக்குப் போதுமான தண்ணீரோ, சாப்பாடோ கூட கிடையாது” என்கிறார் பாரதி. “எனது குழந்தைகள் பள்ளிக்குப் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லாத போது நாங்கள் எப்படி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியும்” என்கிறார் அவர்.

இந்த காலனியின் மக்கள் உடைத்து நொறுக்கப்பட்ட அவர்களின்  வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையேயே சமைத்து அங்கேயே சாப்பிட்டு அங்கேயே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். வீடுகள் இடிக்கப்பட்ட அன்று உள்ளூர் ஆட்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு பந்தல் அமைத்தார்கள். இரவில் மழை பெய்ததால் நனையாமல் இருப்பதற்காக ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள், மூங்கில் கம்புகள் கொண்டு கூரையும் அமைத்தனர். எல்லோருக்கும்  சமைத்து, சாப்பாடு போடுவதற்காகத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கொஞ்சம் பணமும் அவர்கள் சேகரித்தனர்

PHOTO • Rahul M.

வீடுகள் இடிக்கப்பட்டதால் தற்காலிகமாக போடப்பட்ட கூரைகளின் கீழ் குழந்தைகள் தற்போது உறங்குகிறார்கள்

தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுத் தளமாக விஜயநகர் காலனி இருந்தது. ஆனால், தற்போது அந்த குடியிருப்பு வாசிகள் தங்களுடைய தலைவர்களே தங்களைக் கைவிட்டுவிட்டார்கள், தங்களுக்குத் துரோகம் செய்து விட்டார்கள் என்று நினைக்கிறார்கள். “கோழி தன் குஞ்சுகளை மிதித்து அழித்துவிட்டது போல நான் உணர்கிறேன்” என்கிறார் எம். ஜெயபுத்ரா.. தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் அவர். ஒரு கூலித் தொழிலாளியாகவும் இருக்கிறார். அவர் தற்காலிகக் கூரையை அமைப்பதற்கு அவர்தான் உதவியிருக்கிறார். விஜயநகர் காலனியின் பெரும்பாலான குடியிருப்புவாசிகள் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள்தான்.  அவர்கள் கட்சிக்குள் இருக்கின்ற உள்கட்சி கோஷ்டிப் பூசல்களும் இந்த இடிப்புக்குக் காரணம் என்கிறார்கள். நகரமன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரருக்கும் மற்றவர்களுக்கும் இருக்கின்ற கோஷ்டிப் பூசலில் மற்றவர்கள் தங்களின் மீது வீடு இடிப்புக் குழுவை ஏவி விட்டார்கள் என்று புகார் கூறுகிறார்கள் அவர்கள். “இந்த ஏரிப் பகுதியில் 18 காலனிகள் வரை இருக்கின்றன. ஆனால், எங்களுடையது மட்டும் இடிக்கப்பட்டது” என்கிறார் உமா மகேஸ்வரன்.

மனம் வெறுப்படைந்த மக்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையிலேயே தங்குவது என்றும் தங்களுடைய அன்றாட கஷ்டங்களை இங்கேயே சமாளிப்பது என்றும் முடிவெடுத்து விட்டார்கள். “நாங்கள் இங்கேயே தங்குவோம். எவ்வளவு காலம் ஆனாலும் போராடுவோம்” என்கிறார் பூ விற்கின்ற எஸ்.சிவம்மா

பார்க்க : வீழ்த்தப்பட்ட அனந்தப்பூரின் வீடுகளின் படங்கள் போட்டோ ஆல்பம்

தமிழாக்கம்: த.நீதிராஜன்

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan