ஏப்ரல் 5ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அனந்தபூரும் தன்னை இணைத்துக் கொள்கிறது. ‘நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை’ அகற்ற, மெழுகுவர்த்திகள், விளக்குகள், மொபைல் டார்ச்களை இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு அனந்தபூர் எப்படி பதிலளிக்கும்? என் அருகிலுள்ள சங்கமேஷ் நகரில் கொஞ்சம் கற்பனை கலந்த கொண்டாட்டத்தோடு இருக்கிறார்கள். அங்கு எளிதில் எரியக்கூடிய மூங்கில் குவியல்கள் உள்ளன. அவற்றைப் பகிர்ந்துகொண்டு ஒரே நேரத்தில் ஒன்றாக ஐந்து, ஆறு குடும்பங்கள் பால்கனியில் ஒளியேற்ற உள்ளனர்.

மார்ச் 19 முதல் எனது குடும்பத்தினர் நமக்கு நாமே  விதித்துக்கொண்ட பொது அடைப்பை மேற்கொண்டனர். குறைந்த வருமானம் உள்ளவர்களான,  நகரத்தின் தொழிலாளி வர்க்கத்தினர் எவ்வாறு இந்தப் பொது அடைப்பை சமாளித்தனர்  என்பதைக் கவனித்துப் பார்ப்பதற்கு எனக்கு நிறைய நேரம் கிடைத்தது.

"கொரோனா வைரஸ் சித்தூருக்கு வந்துவிட்டது, ஆனால், அது அனந்தபூருக்கு வராது. இங்கு மிகவும் சூடாக இருக்கிறது. இந்தக் கடும் கோடை வெயிலில் வைரஸ் உயிர் வாழாது " என்று எனது பழைய பள்ளிக்கூடத்தில் பஸ் டிரைவராக இருந்தவர்  என்னிடம் மார்ச் 17 அன்று கூறினார். அவரிடம் உள்ள அந்த அப்பாவியான  கருத்துதான்  மக்களிடம் பரந்த அளவில் பரவியிருக்கிற மனப்போக்கின் பிரதிபலிப்பாக  இருந்தது. கொள்ளை நோய்  பற்றிய  அவசரம்  அனந்தபூரில் பலருக்கு அவ்வளவாக   உறைக்கவில்லை. குறைந்தபட்சம் அவர் என்னிடம் பேசிய அந்த நேரத்தில் மட்டுமாவது அதுதான் நிலைமை.

ஆந்திராவின் ராயலசீமா பிராந்தியத்தில் அனந்தபூர் மாவட்டம் இருக்கிறது.  அதன்  பெயரிலேயே  மாவட்டத் தலைநகரான அனந்தபூர் நகரம் இருக்கிறது. அதன்  சங்கமேஷ் நகரின் குறுகலான சந்துகளில்  குழந்தைகள் கூட்டம் கூட்டமாக போவதும்  வருவதுமாக உள்ளனர் . பள்ளிகள் மற்றும் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டதால், குழந்தைகளின் ஆட்டம் வழக்கத்தை விட அதிகமாகியிருக்கிறது. முன்பை விட அவர்கள் அதிகமாக ஆடுகிறார்கள். ஓடுகிறார்கள்.  ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் மக்கள் காய்கறிச் சந்தைகளில் கூட்டமாக இருந்தனர். கோழிகளின்  விலை அதிகரித்திருந்தது. இதுதான் மார்ச் 29 அன்றைய நிலைமை.

PHOTO • Rahul M.

எங்கள் வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்தால் அது சங்கமேஷ் நகர் மீது பறக்கிற ஒரு பறவைக்கு கிடைக்கும்  காட்சியைக் கொடுக்கிறது, இது குறைந்த வருமானம் உள்ள பகுதி, நகரத்தில் உள்ள தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் இங்கே வசிக்கிறார்கள். எங்களுக்கு பக்கத்தில் உள்ள குடும்பங்கள் நெரிசலான வீடுகளில் வாழ்கின்றன, அனந்தபூரில் அடிக்கிற வெயிலின் வெப்பத்தில் ஒரு மின்விசிறியின் கீழ்  மூச்சுத்திணறுகிற ஒரு   வீட்டுக்குள் இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல

“எனது மூத்த மகன் ஒரு ஆட்டோ  டிரைவர். அவனது மனைவி சில வீடுகளில் சமையல் வேலை செய்கிறார்.  காவல்துறையினர் ரோந்துப் பணியைத் தொடங்குவதற்கு முன்பே ,அதிகாலையில் இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். மகன் எனது மருமகளை தனது ஆட்டோவில் கொண்டு போய் இறக்கிவிடுகிறார்.  அவள் ஒரு குடும்பத்திற்காக சமைக்கிறாள், பின்னர் அவர்கள் மாலையில் திரும்பி வருகிறார்கள்” என்கிறார்  வயதான பெண் ஒருவர். பல தொழிலாளர்கள் இவ்வாறு ரகசியமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வசதி படைத்தவர்கள் இந்த கொள்ளை நோயை தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு  மிகவும் அவசியமாக தேவைப்படுகிற ஓய்வு காலமாக பார்க்கிறார்கள். "கொரோனா வைரஸ் விடுமுறைகள் கிடைத்துள்ளன," என்று  மார்ச் 19 அன்று ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே ஒரு நபர் சொல்வதைக் கேட்டேன்.

எங்கள் வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்தால் சங்கமேஷ் நகரின் பறவைக் காட்சியை நம்மால் பார்க்க முடியும். எங்களுக்குப் பக்கத்தில் வசிக்கிற குடும்பங்கள் ஒன்று அல்லது இரண்டு அறைகளுடன் உள்ள நெருக்கடியான வீடுகளில் வாழ்கின்றன. அவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே கணிசமான நேரத்தைச்  செலவிடுகிறார்கள். அவர்களில்  சிலருக்கு உடல் ரீதியாக  விலகியிருக்க வேண்டிய  தூரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் விளக்க முயற்சித்தோம். ஆனால், அனந்தபூரின்  கோடையில் கடுமையான வெயிலும் வெப்பமும் எப்போதும் இருக்கும்.ஒரு மின் விசிறியின் கீழ்  மூச்சுத் திணறுகிற வீட்டில் வாழ்வது எளிதானது அல்ல. எங்கள் பக்கத்து வீடுகளில் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி விற்பனையாளர்கள், பன்றி வளர்ப்பவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வீட்டுவேலை செய்வோர்  உள்ளனர். இன்னும் பலரும் கூடைகளை நெசவு செய்கிறார்கள் அல்லது கை விசிறிகளை உருவாக்குகிறார்கள். அத்தகையோர்களுக்கு , ‘வீட்டிலிருந்து  வேலை’  என்பது  போன்றது இது . அரசின் இந்த பொது அடைப்பு காலகட்டத்திலும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்கின்றனர்.

அனந்தபூர் மாவட்டத்தில் தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயம். அதிகாலையிலேயே எழுந்துதான்  தண்ணீர் பிடிக்கவேண்டும்,   பெரும்பாலான நாட்களில்,  இங்குள்ள குழந்தைகள் தங்களின் அம்மா அப்பாக்களுக்குத்  தண்ணீர் பிடிப்பதற்காக உதவுகிறார்கள்.  ஆட்டோ ரிக்சாக்களை தண்ணீர் டாங்குகளைக் கொண்டு வரும்வகையில் மாற்றியமைத்து, அவற்றின் மூலமாகத்தான்  ‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்’  எங்கள் பகுதியில் விற்கப்படுகிறது. 2014 ஆம் வருடத்தில் மக்கள் ஆசையோடு பார்த்து மகிழ்ந்த தெலுங்கு சினிமா பாட்டுகளோடு அந்த ஆட்டோ ரிக்சாக்கள்  வரும். மார்ச் 30 அன்றும்  அப்படியே ஒரு ஆட்டோ ரிக்சா வந்தது. அதனிடம் வந்து ஒரு சில பெண்கள் தங்கள் பிளாஸ்டிக் பானைகளில் தண்ணீரை  நிரப்பிக்கொண்டனர். அந்த ஆட்டோவின் ஒலிபெருக்கியில் பதிவுசெய்யப்பட்ட அறிவிப்பு  தொடர்ச்சியாக வெளியாகும். “மற்ற வகையாக வரும் தண்ணீரில்  ‘பாக்டீரியாக்கள் இருக்கும். வைரஸ்கள் இருக்கும்” என்று அந்த அறிவிப்பு சொல்லிக்கொண்டேயிருக்கும்.

பொது அடைப்பு என்பது  அந்தப் பகுதி மக்களின் அன்றாட  நடைமுறைகளை மெதுவாக மாற்றிவருகிறதுதான். ஆனாலும் பொது அடைப்புக்காக அரசாங்கம் அறிவித்திருக்கிற வழிமுறைகள் என்பவை, நகர்ப்புறங்களில் வசிக்கிற நடுத்தர வர்க்கத்தினருக்குப் பொருந்துவது போல இருக்கின்றன. அவற்றை சாமான்ய ஏழை மக்களால் பின்பற்றுவது என்பது அவர்களின் சக்திக்கு அப்பால் இருக்கிறது. சாமான்ய மக்களின் குழந்தைகள் தொடர்ந்து திருடன் -  போலீஸ், கண்ணா மூச்சி உள்ளிட்ட  விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இத்தகைய விளையாட்டுகளுக்கு எந்தவொரு சாதனமும் தேவையில்லை. வெறுமனே விளையாடலாம். இந்த பொது அடைப்பு என்பது குழந்தைகளைப் பொறுத்தவரையில் ஒரு நீட்டிக்கப்பட்ட விடுமுறை. தெருக்களில் சின்ன சின்ன சாமான்களை விற்பனை செய்வோர் சமீபத்தில் தான் வருவதை நிறுத்தினர். ‘வறுத்த  கடலை, வறுத்த கடலை’ என்று எங்கள் தெருவில் உரக்க சப்தம் போட்டு வியாபாரம் செய்பவர், மார்ச் 21 அன்றுதான் வருவதை நிறுத்தினார். மார்ச் 28 முதல், ஐஸ்கிரீம் விற்பனையாளர் தலை காட்டவில்லை. காய்கறிகளை  விற்பனை செய்பவர் மட்டும் தொடர்ந்து வருகிறார்.

எங்களுக்கு பக்கத்தில் மிகவும் நெரிசலான குடியிருப்பு பகுதி இருக்கிறது. அங்கே இருக்கிற  வீடுகள் மிகவும் குறுகலானவை. அதில் வசிப்பவர்கள் அனைவரும் ஒரு நாளில் முழுக்க முழுக்க வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. அத்தியாவசியமான தேவைகளை சேமித்து  வைப்பதற்கும் அவர்களுக்கு இடமில்லை. ‘நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இடையில் இருக்க வேண்டிய  இடைவெளியை பராமரிப்பதும் கிட்டத்தட்ட அவர்களுக்குத்  சாத்தியம் இல்லாதது. பெரியவர்கள் தங்களது பகடைகளுடன் தரையில் உட்கார்ந்துகொண்டு அவர்களுக்குப் பிடித்த ஆடு -  புலி விளையாட்டை  விளையாடுகிறார்கள்.

PHOTO • Rahul M.

மார்ச் 18-19 தேதிகளில் அனந்தபூரைச் சுற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள். கோவிட் -19 அனந்தபூரை  ஒன்றும் செய்யாது இங்குள்ள மக்கள் உறுதியாக நம்பினர், ஆனால், கொள்ளை நோய் அனந்தபூரை அசைத்துப் பார்க்கும் என்பதை  சீக்கிரமே   உணர முடிந்தது

இந்தக் கொள்ளை நோய் பற்றிய அபாயத்தை  உடனடியாக மக்களுக்குத் தெரிவிப்பதற்குத் தடையாக மாநிலத்தில் உள்ள அரசியல் குழப்பங்கள் இருந்தன. பொது அடைப்புக்கு முந்தைய வாரங்களில் பொதுமக்கள் ஓரளவு அலட்சியமாக இருந்ததற்கு அதுவே காரணம்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பாக,  தேர்தல் ஆணையத்திடம் மாநில அரசு போராட வேண்டியிருந்தது.  தேர்தல்கலை மார்ச் 21 அன்று நடத்தலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது..  ஆனால், கொரோனா வைரஸ் தொற்றைக்  காரணமாக வைத்தே பஞ்சாயத்து தேர்தல்கள்  தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்தல் பிரச்சனையை தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சிக்குமான  சண்டையாக தெலுங்கு செய்தி ஊடகங்கள் மாற்றின.  பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் வீடு வீடாகப் போய்  இந்த கொள்ளை நோய் பற்றிய விழிப்புணர்சை மக்களிடம் ஏற்படுத்துவதை தாமதமாகவே ஆரம்பித்தனர். அவை பலருக்கு  நம்பகமான தகவல்களாக இருந்தன. ஆனாலும் நிபுணர்களின் கருத்துக்கள் குறைவாகவே இருந்தன. ஆனாலும், ஊடகங்கள் இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான பிரச்சாரத்தை பெரிய அளவில்  முன்னிலைப்படுத்தவில்லை.

கோவிட் - 19  வைரஸ் அனந்தபூரை ஒன்றும் செய்யாது என்று இங்குள்ள மக்கள் உறுதியாக நம்பினர், ஆனால்,  தொற்றுநோயின் பாதிப்பு  இங்கே நடுக்கத்தை உணர்த்தியது.  மார்ச் 13 அன்று, என் வீட்டில் எனது டிஷ் ஆண்டெனாவில் சில சேனல்களை என்னால் பார்க்க முடியவில்லை, எங்கள் கேபிள் டிவியை சரி செய்து தரும் டெக்னீஷியன் பி. சுப்பையா  விவசாயமும் பார்ப்பார். அவரது பி. பப்புரு கிராமத்துக்குப் போய்விட்டார். அனந்தபூரின் நர்பலா மண்டலத்தில் அது இருக்கிறது. அங்கே அவர் வாழை மரங்கள் பயிரிட்டிருந்தார். பொதுவாக, அதனை விலைக்கு வாங்குபவர்கள் தாமதம் செய்துதான்  வாங்குவார்கள். குறைந்த விலைக்கு வாழைப் பழத் தார்களை வாங்குவதற்காக அவர்கள் செய்யும் தந்திரம் அது.  " வாழைப் பழத் தார்களை மொத்தமாக வாங்குபவர்கள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்து கொண்டு விலையைக் குறைக்க ஒவ்வொரு  முறையும் முயற்சிப்பார்கள். ஆனாலும், இந்த நோய்த் தொற்றின் பாதிப்பு காரணமாக, இப்போது அவற்றை வாங்குவதற்கு யாருமே வரவில்லை” என்றார் அவர்.  “நான் வாழைப்பழங்களை வெயிலில் தானாக நாசமாக போகும்படி கிராமத்திலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன், கொளுத்தும் வெயிலில் அவை காய்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு இதில் சுமார் 15 லட்சம் ரூபாய்வரை நட்டமாகிவிட்டது” என்றார்  அவர்.

ஏப்ரல் 1 ம் தேதி அன்று  ஆந்திராவில் ஒரே நாளில் 67 நோய் தொற்றுகள் காணப்பட்டன. அதனால் மக்களின் மனநிலை மாறுகிறது. கோவிட் 19 வைரஸ் பாதிப்புக்கு ஆளான மாநிலங்களின்   எண்ணிக்கையில் கீழ்மட்டத்தில் இருந்த இந்த மாநிலம் ஐந்தாவது இடத்திற்கு தற்போது முன்னேறியிருக்கிறது. மொத்த எண்ணிக்கை 132 ஆகியிருக்கிறது. அனந்தபூரில் இப்போது 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகிவிட்டது.  இந்த கொள்ளை நோய் பற்றிய புரிதலும் தேவையான அவசர நடவடிக்கைகள் பற்றிய புரிதலும் இன்னும் மாவட்ட அளவிலேயே போதுமான அளவுக்கு ஏற்படவில்லை. உணவு, அரிசி, காய்கறிகள், முகமூடிகளை பல்வேறு இடங்களில் அறக்கட்டளைகளை நடத்தும்  தொண்டு நிறுவனங்கள் இலவசமாக விநியோகிப்பதை உள்ளூர் தொலைக்காட்சி சேனலான அனந்தா   காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அத்தகையோர் கூட மிகவும் அத்தியாவசியமான முறையில் கடைபிடிக்க வேண்டிய  விதிகளை பின்பற்றுவதில்லை.   கையுறைகளை அணிவது, முகமூடிகளை அணிவது  போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.

தமிழில்: த. நீதிராஜன்

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan