புயல்கள், மீன்வரத்து குறைவு, விற்பனை சரிவு போன்ற காரணங்களால் திலிப் கோலி சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2020 தொடங்கிய ஊரடங்கு நிலைமையை இன்னும் கடினமாக்கிவிட்டது.
“கடந்தாண்டு சந்தித்த பிரச்னை என்பது கடந்த காலங்களை ஒப்பிடும்போது குறைவில்லை,” என்கிறார் தெற்கு மும்பையின் கொலாபா பகுதி கோலிவாடாவிலிருந்து வந்துள்ள 50 வயது மீனவரான திலீப் குமார். “மீன் பிடிப்பதற்கும, மீனை உண்பதற்கும் மக்கள் தயாராக இருந்தனர், ஆனால் [2020 செப்டம்பர் வரை நீடித்த ஊரடங்கு காரணமாக] அவற்றை விற்கமுடியவில்லை. சந்தைகள் மூடப்பட்டதால் பிடித்த மீன்களை கடலில் கொட்டும் நிலை ஏற்பட்டது.”
மும்பையின் சாசூன் துறைமுகத்தில் திலீப் சுமார் 35 ஆண்டுகளாக வேலை செய்கிறார். அவருக்குச் சொந்தமாக மூன்று படகுகள் உள்ளன. 8-10 மீனவர்களை அவர் வேலைக்கு வைத்துள்ளார். “ஊரடங்கின்போது ரேஷன் பொருட்களை வைத்து சமாளித்துக் கொண்டோம். ஆனால் பல ஏழை கோலி மீனவர்களுக்கு உணவோ, பணமோ கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.
மழைக் காலங்களில் மீனவர்கள் அதிகாலை 4 மணிக்கே வேலையை தொடங்கிவிடுவர். 40 நிமிடங்கள் என கடலை பலமுறை சுற்றி வருவர். அலையில் மாற்றம் ஏற்படும்போது சில மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் கடலுக்குத் திரும்புவர். “நாங்கள் அதிகாலை தொடங்கி மதியம் 2 அல்லது 3 மணிக்கு வேலையை முடிப்போம். நிலவின் மூலம் அலைகளை பற்றி நாங்கள் அறிகிறோம். அலையின் வேகம் குறைவாகவோ, உயரமாகவோ இருக்கும் போது நாங்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை,” என்கிறார் திலீப்.
ராய்காட் மாவட்டம் தாலா தாலுக்காவில் 1040 மக்கள் தொகை கொண்ட (கணக்கெடுப்பு 2011) வஷி ஹவேலி கிராமத்திலிருந்து ரயில் அல்லது வாடகை வாகனங்களில் கிட்டதட்ட 150 கிலோமீட்டர் பயணம் செய்து அவரது படகில் மீன்பிடிக்க தெற்கு மும்பையின் சாசூன் துறைமுகத்திற்கு வருகின்றனர். அனைவரும் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அவர்கள் வேலை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடங்குவதற்கு முன்பு வரை இருக்கின்றனர். ஆண்டின் பிற மாதங்களில் மகாராஷ்டிராவின் ரத்னகிரி, ராய்காட் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளுக்குப் பயணிக்கின்றனர். பிறருடைய படகுகளிலும் வேலை செய்து மாதம் ரூ.10,000 - 12,000 வரை அவர்கள் வருவாய் ஈட்டுகின்றனர்.

ராய்காட் மாவட்டம் வஷி ஹவேலி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கோலி மீனவர்கள் மழைக்காலங்களில் சாசூன் துறைமுகத்தில் வேலை செய்கின்றனர். போம்பில் மீனிற்காகவே (வங்கவராசி) பலரும் அங்கு வருகின்றனர். அதிகாலை சுமார் 4 மணிக்கு பணியைத் தொடங்கும் அவர்கள் மதியம் 2 அல்லது 3 மணியளவில் வேலையை முடிக்கின்றனர்
மே இறுதியிலிருந்து ஆகஸ்ட் தொடக்கம் வரை ஆழ்கடல் மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி திலீப் பேசுகையில், “இங்கு கடற்கழிகளில் [நைலான் வலைகளில்] மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. நாங்கள் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறோம். நம் கொலோபா கடற்கழி போம்பில் [வங்கவராசி] மீனுக்கு பெயர்பெற்றது. ஜூன், ஜூலை மாதங்களில் தான் அந்த மீன் இங்கு வரும். எங்கள் வங்கவராசி மீனுக்காக மகாராஷ்டிராவின் சிறு கிராமங்களில் இருந்தும் மீனவர்கள் இங்கு வருகின்றனர். 2-3 மாதங்கள் கொலாபாவில் அவர்கள் தங்குகின்றனர். இது ஒரு நல்ல தொழில்.”
சாசூன் துறைமுகத்தில் அம்மாதங்களின்போது, அவரும் பிற மீனவர்களும் சதவீத அடிப்படையில் வேலை செய்வதாக சொல்கிறார் வஷி ஹவேலி கிராமத்தைச் சேர்ந்த பிரியல் துரி. “பகலில் கிடைக்கும் லாபத்தில் பாதி படகு உரிமையாளருக்கு போய்விடும். மிச்சத்தை நாங்கள் பங்குபோட்டுக் கொள்வோம்,” என்கிறார் அவர். கடந்தாண்டு மூன்று மாதங்களுக்குள் கோவிட்டிற்கு தந்தையும், இரத்த புற்றுநோய்க்கு தாயையும் இழந்தவர் பிரியல். “அம்மாவின் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது,” என்பதால் அவர் 12ஆம் வகுப்பைக் கூட முடிக்கவில்லை, 27 வயதாகும் அவர் சுமார் 10 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
“மழைக் காலங்களில் தினமும் 700 ரூபாய் வரை நாங்கள் சம்பாதிப்போம், ஆனால் கடந்தாண்டு தினமும் 50 ரூபாய் கிடைப்பதே கடினமானது. கோவிட் காரணமாக ஒரு ஆண்டு முழுவதும் நாங்கள் வீட்டில் அமர்ந்திருந்தோம்,” என்கிறார் அவர். வேலை இல்லாததால், வஷி ஹவேலியிலில் மீனவ குடும்பங்களுக்கு 2020 மே மாதம் ரேஷன் பொருட்கள் தீரத் தொடங்கின. “அருகில் உள்ள கடற்கழியில் கிடைக்கும் எவ்வகை மீனையும் நாங்கள் உண்டு வந்தோம். [நிசர்கா] புயலுக்குப் பிறகு எங்களுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதே அரிதாகிவிட்டது. எங்கள் வாழ்வில் அது [2020] மிகவும் மோசமான ஆண்டு,” என்கிறார் பிரியல்.
2020 ஜூன் 3அம் தேதி மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டங்களை நிசர்கா புயல் தாக்கியது. “ஒரு மாதத்திற்கு மின்சாரமின்றி, தொலைப்பேசி இணைப்பின்றி இருந்தோம். எங்கள் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. அரசிடமிருந்து எங்களுக்கு எவ்வித இழப்பீடும் கிடைக்கவில்லை,” என்கிறார் பிரியல். அவரும், அவரது சகோதரர் சந்திரகாந்த் (அவரும் மீனவர்தான்) வசிக்கும் வீட்டை மறுசீரமைக்க நண்பர்களிடம் இருந்து ரூ.40,000 கடன் வாங்கியுள்ளார்.


நண்டை பிடித்தபடி திலீப் கோலி: 'நெருக்கடி காலத்தில் விவசாயிகளுக்கு அரசிடமிருந்து கொஞ்சம் இழப்பீடு கிடைக்கும். விவசாயிகளும், மீனவர்களும் சகோதர்களைப் போன்று இருந்தாலும், மீனவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை'
2021 மே 14ஆம் தேதி டவ் தே புயல் தாக்கியது. “எங்கள் படகுகள் பேரலையில் சிக்கி நாசமாகின. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அரசு எங்களுக்கு சில ஆயிரம் கொடுத்துவிட்டு மற்றவர்களின் கண்களுக்கு நல்லவர்களாக தெரிய முடியாது. மீனவர்கள் இப்போதும் [இது குறித்து] கோபத்தில் உள்ளனர்,” என்கிறார் திலீப். அவரது மூன்று மகன்களும் மீனவர்கள். அவரது 49 வயது மனைவி பார்தி சாசூன் துறைமுகத்தில் மொத்த வியாபாரிகளிடம் மீன் விற்கிறார் (பார்க்க: கோலி பெண்களின் மீன்கள், நட்பு மற்றும் போராட்ட குணம் . ) “கோலி மீனவர்களுக்கு என்று அவர்கள் எதுவும் செய்வதில்லை,” எனும் அவர், “புயல்களின் போது எங்களுக்கு முழு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்,” என்றார்.
மீன்வரத்து குறைந்துள்ளதும் இவர்களின் பின்னடைவை இன்னும் அதிகமாக்கி வருகிறது. “என் சிறு வயதில் மீன் விலை குறைவாக இருக்கும், டீசல் விலையும் [படகிற்கு] லிட்டருக்கு 20 ரூபாய் தான். இப்போது டீசல் விலை 100 ரூபாய்க்கு வந்துவிட்டது, மீன்வரத்தும் குறைந்துவிட்டது,” என்கிறார் திலீப்.
மீனவர்களின் வலைகளில் வஞ்சரம், வௌவால், மத்தி போன்ற சில புகழ்பெற்ற மீன்கள் அரிதாகவே கிடைக்கின்றன என்கிறார் அவர். 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா கடலோரங்களில் அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் மீன் வரத்து 32 சதவீதமாக குறைந்துவிட்டது என்கிறது மத்திய கடல்வாழ் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனம். அந்த ஆண்டில் இந்தியா முழுவதும் ஏற்பட்ட புயல்காற்றுகளே இதுபோன்ற வீழ்ச்சிக்கு காரணம் என்கிறது அறிக்கை. அவற்றில் ஆறு புயல்கள் மிக தீவிர புயல்களாகும்.
“நம் வாழ்வாதாரம் முற்றிலும் இயற்கையைச் சார்ந்துள்ளது,” என்கிறார் திலிப். “இயற்கை நமக்கு நன்மை செய்யாவிட்டால் நம் வேலையும், வாழ்வும் பறிபோகும்.”
பின்னர், கோவிட் -19 தொற்றுநோயால், சசூன் கப்பல்துறையில் உள்ள மீனவர்கள் அந்த புயலையும் எதிர்கொள்ள முயல்கின்றனர்.

மழைக் காலங்களில் 40 நிமிடம் நீடிக்கும் ஒரு சுற்றில் சுமார் 400-500 கிலோ வரை மீன்கள் கிடைக்கும். இதுபோன்று 10-12 மணி நேரங்களில் பல சுற்றுகள் செல்வார்கள்

ஜெல்லி மீனில் துர்நாற்றம் வீசுவதாலும், இந்தியாவில் யாரும் உண்பதில்லை என்பதாலும் கடலில் மீண்டும் வீசிவிடுவதாக மீனவர்கள் சொல்கின்றனர்

10 ஆண்டுகளாக மீன்பிடித்து வரும் 34 வயது ராம்நாத் கோலி வலையில் சிக்கிய பாம்பைக் கையில் பிடித்துள்ளார். “நாங்கள் இரவுப்பகலாக உழைக்கிறோம். குறிப்பிட்ட நேரம் நிலையான வருவாய் என்று எதுவும் கிடையாது,” என்கிறார் அவர்

49 வயதாகும் நாராயண் பாடிலின் மூன்று மகள்கள், ஒரு மகன் வஷி ஹவேலி கிராம உள்ளூர் ஜில்லா பரிஷத் பள்ளியில் படிக்கின்றனர். அவரது மனைவி ஒரு இல்லத்தரசி. சுமார் 20 ஆண்டுகளாக மீன்பிடிக்கும அவர் சொல்கிறார், “இத்தொழிலில் என் பிள்ளைகளை ஈடுபடுத்த ஒருபோதும் நான் நினைத்ததில்லை”

பெரியளவில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் அடுத்த பயணத்தை தொடங்கும் மீனவர்கள்

கடலுக்குள் மூழ்கும் ராம்நாத் கோலி வலைகளை பாதியாக பிரித்து மீன்களின் எடையை சமமாக பிரிக்கிறார். இதனால் படகிலிருந்தபடி வலையை எளிதாக திருப்பி இழுக்கலாம்

நீரிலிருந்து படகிற்கு மீன்களுடன் வலைகளை இழுப்பதற்கு அனைவரது பலமும் தேவைப்படுகிறது

வலைகளில் சிக்கும் மீன்களை படகின் ஒரு மூலையில் கொட்டுகின்றனர்

மீனவர்களைப் பார்த்து கை அசைத்தபடி மற்றொரு படகில் கடந்து செல்லும் சிறுவர்கள்

கடலோரத்திலிருந்து கடலை ஒரு சுற்று வருவதற்கு 40 நிமிடங்கள் ஆகிறது. படகு ஒருமுறை கரைக்கு திரும்பியதும் சில மீனவர்கள் மட்டும் நிலத்தில் குதித்து அங்கு மீன்களை வாங்குவதற்கு காத்திருப்பவர்களிடம் பிளாஸ்டிக் வாளிகளில் படகிலிருந்து மீன்களைக் கொண்டு வருகின்றனர்

26 வயதாகும் கவுரவ் கோலி மீனவராகவே எப்போதும் விரும்பியதாகச் சொல்கிறார். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தனது தந்தை திலிப் கோலியுடன் சேர்ந்து மீன்பிடித்து வருகிறார்

19 வயதாகும் ஹர்ஷத் கோலி (மஞ்சள் நிற சட்டையில் முன் நிற்பவர்), மூன்றாண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு மீன்பிடித்து வருகிறார். வஷி ஹவேலி கிராமத்தில் அவரது குடும்பத்திற்கு சொந்தமாக படகு உள்ளது. அவர் பேசுகையில், “அங்கு வாடிக்கையாளர்களே இல்லை என்பதால் இங்கு [மும்பைக்கு] வேலைக்கு வந்தேன்” என்கிறார்

மீன்களுடன் கரைக்கு வரும் படகுகளுக்காக வாங்குபவர்களும், ஏலதாரர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்

மீன் விற்பனையாளர்களால் ஐஸ் பெட்டிக்குள் பாதுகாக்கப்படும் பல வகை மீன்கள்

மொத்த வியாபாரிகளுக்காக பல்கார் மாவட்டத்திலிருந்து பயணப்படும் சில மீன் விற்பனையாளர்கள்

சசூன் துறைமுகத்தின் திறந்தவெளியில் சூரிய வெளிச்சத்தில் இறால்களை உலர்த்தும் மீனவப் பெண்கள்

மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்திலிருந்து மும்பையின் சசூன் துறைமுகத்திற்கு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் சென்று மீன் வலைகளை சரிசெய்து தினமும் ரூ.500-600 வரை சம்பாதிக்கும் திறன்மிக்க தொழிலாளர்கள்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய காலங்களில் அதிகாலை 4 மணிக்கே சசூன் துறைமுகம் மீனவர்கள், விற்பனையாளர்கள், படகுகள், பிற தொழிலாளர்கள் என நெருக்கடியாக காணப்படும். 2020 மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதலே இதுபோன்ற கூட்டத்தைக் காண்பது அரிதாகிவிட்டது
தமிழில்: சவிதா