2022ம் ஆண்டின் ஏப்ரல் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை எப்போதும் போல்தான் ரமாவுக்கு புலர்ந்தது. அதிகாலை 4.30 மணிக்கு தூக்கம் கலைந்தார். நீரிறைக்கவும் துணி துவைக்கவும் அருகே இருந்த கிராமத்துக் கிணறுக்குச் சென்றார். வீட்டைச் சுத்தப்படுத்தினார். தாயுடன் கஞ்சி குடித்தார். பிறகு வேலைக்காக அவரின் கிராமத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் தாலுகாவில் இருக்கும் நாச்சி அப்பாரல் ஆலைக்குக் கிளம்பினார். 27 வயது நிறைந்த அவரும் சக பெண் ஊழியர்களும் அன்றைய பிற்பகலில் வரலாறு படைத்தனர். ஜவுளி ஆலையில் நிலவிய பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு வருடகாலத்துக்கும் மேலாக அவர்கள் நடத்தியப் போராட்டம் வெற்றி அடைந்திருந்தது.

“உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சாத்தியமற்றதை செய்து விட்டதைப் போல் நாங்கள் உணர்ந்தோம்,” என திண்டுக்கல் ஒப்பந்தத்தைக் குறித்து சொல்கிறார் ரமா. ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் திண்டுக்கல்லில் நடத்தும் ஆலைகளில் பாலியல் ரீதியிலான வன்முறை மற்றும் அத்துமீறல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் திண்டுக்கல் ஒப்பந்தம் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் க்ளோத்திங்குக்கும் (திருப்பூரில் இருக்கும் நாச்சி அப்பாரலின் தாய் நிறுவனம்) தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கும் (TTCU) இடையே கையெழுத்தாகி இருந்தது.

வரலாற்றுச்சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பன்னாட்டு ஆடை நிறுவனம் ஹெச் அண்ட் எம் ’நடைமுறைப்படத்தப்படக் கூடிய பிராண்ட் ஒப்பந்தம்’ ஒன்றை, ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்க்கும் TTCU-க்கும் இடையிலான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த ஏதுவாக கையெழுத்திட்டிருக்கிறது. ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸின் நாச்சி அப்பாரல் ஆலை, ஸ்வீடன் நாட்டைத் தலைமையிடமாக கொண்ட ஆடை நிறுவனத்துக்கு ஆடைகள் தயாரிக்கிறது. ஹெச் அண்ட் எம் கையெழுத்திட்ட ஒப்பந்தம்  ஃபேஷன் நிறுவன உலகில் பாலின ரீதியிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் போடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தம் ஆகும்.

தலித் பெண்கள் தலைமை தாங்கும் TTCU-வில் உறுப்பினராக இருக்கும் ரமா நாச்சி அப்பாரலில் நான்கு வருடங்களாக பணிபுரிகிறார். “நிர்வாகமும் பிராண்டும் (ஹெச் அண்ட் எம்) தலித் பெண்களின் தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் போடுவார்கள் என நான் நினைத்துக் கூடப் பார்த்திருக்கவில்லை,” என்கிறார் அவர். “பல தவறான செயல்பாடுகள் செய்த பிறகு இப்போது அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.” சங்கத்துடனான ஹெச் அண்ட் எம்மின் ஒப்பந்தம்தான் இந்தியாவில் கையெழுத்தான முதல் ‘நடைமுறைப்படுத்தப்படக் கூடிய பிராண்ட் ஒப்பந்தம்’ (EBA) ஆகும். ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் சங்கத்துக்கு அளித்த உறுதிகளில் எதையேனும் மீறினால், அதற்கு விதிக்க சட்டப்பூர்வமாக ஹெச் அண்ட் எம் நிறுவனத்தை நிர்ப்பந்திக்கும் ஒப்பந்தம் அது.

நாச்சி அப்பாரலில் பணிபுரிந்த 20 வயது தலித்தான ஜெயஸ்ரீ கதிரவேல் வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்ட ஒரு வருடத்துக்கு பின்தான் ஈஸ்ட்மேன் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதித்தது. ஜனவரி 2021-ல் ஜெயஸ்ரீ கொல்லப்படுவதற்கு முன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த மேற்பார்வையாளரால் மாதக்கணக்கில் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். மேற்பார்வையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆலை நிறுவனம் மற்றும் ஹெச் அண்ட் எம், கேப், பிவிஹெச் போன்ற பன்னாட்டு ஆடை நிறுவனங்களுக்கு துணிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான தாய் நிறுவனம் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக பெருஞ்சீற்றத்தை ஜெயஸ்ரீயின் மரணம் உருவாக்கியது. ஜெயஸ்ரீக்கு நியாயம் கோரும் இயக்க த்தின் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் சங்கங்களும் தொழிலாளர் குழுக்களும் பெண்கள் அமைப்புகளும் ஒருங்கிணைந்து, கதரிவேல் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடுக்கி “ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் மீது நடவடிக்கை” எடுக்க ஃபேஷன் பிராண்டு நிறுவனங்களைக் கோரின.

A protest by workers of Natchi Apparel in Dindigul, demanding justice for Jeyasre Kathiravel (file photo). More than 200 workers struggled for over a year to get the management to address gender- and caste-based harassment at the factory
PHOTO • Asia Floor Wage Alliance

ஜெயஸ்ரீ கதிரவேலுக்கு நீதி கோரி திண்டுக்கல்லில் நாச்சி அப்பாரல் தொழிலாளர்களால் நடத்தப்பட்டப் போராட்டம் (கோப்புப் படம்). ஒரு வருடத்துக்கும் மேலாக 200கும் அதிகமான ஊழியர்கள் போராடி, ஆலையில் நிலவிய பாலினம் மற்றும் சாதிய அத்துமீறலை நிர்வாகம் முடிவுக்குக் கொண்டு வர வைத்தனர்

ஜெயஸ்ரீக்கு நேர்ந்தது ஒரு தனிச்சம்பவம் கிடையாது. அவரின் மரணத்துக்குப் பிறகு தாங்களும் பாலியல் அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவங்களை நாச்சி அப்பாரலில் பல பெண் ஊழியர்கள் முன் வந்து கூறினர். நேரடியாக சந்திக்கத் தயங்கிய அவர்களில் சிலர் PARI-யுடன் தொலைபேசியில் பேசினர்.

“(ஆண்) மேற்பார்வையாளர்கள் எங்களைத் திட்டுவது வழக்கம். எங்களைப் பார்த்து அவர்கள் கத்துவார்கள். தாமதமாக வந்தாலோ இலக்குகளை எட்ட முடியவில்லை என்றாலோ கெட்டவார்த்தையில் திட்டுவார்கள். அருவருப்பாக அவமதிப்பார்கள்,” என்கிறார் அங்கு பணிபுரியும் 31 வயது கோசலா. 12ம் வகுப்பில் தேர்ச்சியடைந்தபின், தலித் சமூகத்தைச் சேர்ந்த கோசலா, பத்து வருடங்களுக்கு முன் ஜவுளி ஆலையில் பணிபுரியத் தொடங்கினார். “மேற்பார்வையாளர்களால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தலித் பெண் ஊழியர்கள்தாம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை நாங்கள் செய்து முடிக்கவில்லை எனில் ‘எருமைகள்’, ‘நாய்கள்’, ‘குரங்குகள்’ என வாய்க்கு வந்தபடி எல்லாம் அழைப்பார்கள்,” என்கிறார் அவர். “எங்களை தொட முயலும் மேற்பார்வையாளர்களும் உண்டு. எங்களின் உடைகளை பற்றி ‘கமெண்ட்’ அடிப்பார்கள். பெண்களின் உடல்களைப் பற்றி அருவருப்பான நகைச்சுவைகளை சொல்வார்கள்.”

மேற்படிப்புக்காக பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையில் ஆலையில் சேர்ந்தவர் பட்டதாரி லதா. (அவரும் ஆலையின் பிற ஊழியர்களும் எட்டு மணி நேர வேலைக்கு 310 ரூபாய் கூலி பெறுகின்றனர்). ஆலையில் நிலவிய சூழல் அவரை கடும் பாதிப்புக்குள் ஆழ்த்தியிருக்கிறது. “ஆண் மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், மெக்கானிக்குகள் எங்களைத் தொட முயலுவார்கள். நாங்கள் புகாரளிக்கவும் யாரும் கிடையாது,” என்கிறார் அவர் குமுறி அழுதபடி.

“உங்கள் தையல் எந்திரத்தை ஒரு மெக்கானிக் சரி செய்ய வந்தால், அவர் உங்களை தொட முயலுவார். பாலியல் ரீதியாக இணங்கக் கேட்பார். நீங்கள் மறுத்தால், எந்திரத்தை சரியான நேரத்துக்கு பழுது பார்த்து முடிக்க மாட்டார். நீங்கள் உங்கள் இலக்கை எட்ட முடியாது. பிறகு உங்களின் மேற்பார்வையாளரோ மேலாளரோ உங்களைத் திட்டுவார். சில நேரங்களில் மேற்பார்வையாளர் பெண் ஊழியருக்கு அருகே நின்று கொண்டு உரசுவார்,” என்கிறார் லதா. அவர் வசிக்கும் கிராமத்திலிருந்து 30 கிலோமீட்டர் பயணித்து ஆலையில் பணிபுரிய வருகிறார்.

பெண்கள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு ஏதும் இல்லை என விளக்குகிறார் லதா. “யாரிடம் புகாரளிப்பது? ஆதிக்க சாதி ஆண் மேலாளருக்கு எதிராக குரல் கொடுக்கும் தலித் பெண்ணின் வார்த்தைகளை யார் நம்புவார்?”

“யாரிடம் புகாரளிக்க முடியும்?” 42 வயது திவ்யா ராகினியும் அதே கேள்வியைத்தான் எழுப்புகிறார். TTCU-வின் மாநிலத் தலைவரான அவர்தான், நாச்சி அப்பாரலில் இருந்த பாலின ரீதியான ஒடுக்குமுறையைக் களையும் நெடிய இயக்கத்தை முன்னின்று நடத்தியவர். 2013ம் ஆண்டில் சுயாதீனமாக தொடங்கப்பட்ட தலித் பெண்களின் தொழிற்சங்கமான TTCU, ஜெயஸ்ரீயின் மரணத்துக்கும் முன்பிருந்தே தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு முடிவுகட்டத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தது. தொழிற்சங்கத்தில் கோவை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் போன்ற ஜவுளிக் களங்களை உள்ளடக்கிய 12 மாவட்டங்களின் 11,000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 80 சதவிகிதம் பேர் பஞ்சாலை மற்றும் ஆடைத்துறையை சேர்ந்தவர்கள். ஜவுளி ஆலைகளின் ஊதியப் பறிப்பு மற்றும் சாதிய வன்முறை ஆகியவற்றை எதிர்த்தும் சங்கம் போராடி வருகிறது.

Thivya Rakini, state president of the Dalit women-led Tamil Nadu Textile and Common Labour Union.
PHOTO • Asia Floor Wage Alliance
Thivya signing the Dindigul Agreement with Eastman Exports Global Clothing on behalf of TTCU
PHOTO • Asia Floor Wage Alliance

இடது: தலித் பெண்கள் தலைமை தாங்கும் தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திவ்யா ராகினி. வலது: TTCU சார்பாக ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் க்ளோத்திங் நிறுவனத்துடனான திண்டுக்கல் ஒப்பந்தத்தில் திவ்யா கையெழுத்திடுகிறார்

“ஒப்பந்தத்துக்கு முன்பு முறையான புகார் கமிட்டி (ICC) ஆலையில் கிடையாது,” என்கிறார் திவ்யா. ஏற்கனவே இருக்கும் கமிட்டி பெண்ணின் நடத்தையில்தான் குறை கண்டுபிடிக்கும் என்கிறார் 28 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஆலையில் பணிபுரிய வரும் 26 வயது தலித் தொழிலாளரான மினி. “புகார்களை சரியாகக் கையாளுவதற்கு பதிலாக, நாங்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் , அமர வேண்டும் என வகுப்பு எடுப்பார்கள்,” என்கிறார் அவர். “கழிவறைக்கு செல்வதற்கான இடைவேளைகள் கூட கொடுக்க மாட்டார்கள். ஓவர்டைம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவார்கள். எங்களுக்கு இருக்கும் விடுமுறைகளை எடுக்கவும் தடை போடுவார்கள்.”

ஜெயஸ்ரீயின் மரணத்துக்கு பிறகான பிரசார இயக்கத்தில், பாலியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, இடைவேளைகள் கொடுக்கப்படாதது, கட்டாய ஓவர்டைம் போன்ற பிற பிரச்சினைகளையும் TTCU முன் வைத்துப் போராடியது.

“நிறுவனம், சங்கத்துக்கு எதிரானது என்பதால், பல ஊழியர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தார்கள்,” என்கிறார் திவ்யா. ஆனால் ஜெயஸ்ரீயின் மரணம் அதை உடைத்து விட்டது. ஆலையிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டபோதும் ரமா, லதா மற்றும் மினி போன்ற தொழிலாளர்கள் போராட்டத்துக்குச் சென்றனர். ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்த போராட்டப் பேரணிகளில் கிட்டத்தட்ட 200 பெண்கள் கலந்து கொண்டனர். ஜெயஸ்ரீக்கு நீதி இயக்கத்துக்குக் கவனத்தை ஈர்க்கும் வகையில் சர்வதேச அளவில் இயங்கிய பல அமைப்புகளில் பலரும் நடந்தவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாக, சர்வதேச ஃபேஷன் நிறுவனங்களுக்கான விநியோக நிறுவனங்களில் நேரும் பாலியல் வன்முறை மற்றும் அத்துமீறலுக்கு எதிரான இயக்கங்களை முன்னின்று நடத்திய  TTCU-வும் ஏசியன் ஃப்ளோர் வேஜ் அலயன்ஸ் (AFWA) மற்றும் க்லோபல் லேபர் ஜஸ்டிஸ் - இண்டர்நேஷனல் லேபர் ரைட்ஸ் ஃபோரம் (GLJ-ILRF) ஆகிய இரண்டு அமைப்புகளும் ஹெச் அண்ட் எம்முடன் நடைமுறைப்படுத்தப்படக் கூடிய பிராண்ட் ஒப்பந்தத்தில் இந்த வருட ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டன.

மூன்று அமைப்புகளும் வெளியிட்ட கூட்டு ஊடக அறிக்கை யின்படி, திண்டுக்கல் ஒப்பந்தம்தான் இந்தியாவின் முதல் நடைமுறைப்படுத்தப்படத்தக்க பிராண்ட் ஒப்பந்தம் ஆகும். அதுதான் “உலகிலேயே ஆடைத் தயாரிப்பு ஆலைகளையும் பஞ்சாலைகளையும் உள்ளடக்கிய முதல் EBA ஒப்பந்தமும் ஆகும்.”

கையெழுத்திட்ட எல்லாத் தரப்புகளும் “பாலினம், சாதி, இடப்பெயர்வு நிலை முதலியவற்றைச் சார்ந்த பாகுபாடுகள் எல்லாவற்றையும் ஒழிக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஜவுளி ஆலை அமைப்புக்குள் பரஸ்பர மதிப்புக் கலாசாரத்தை உருவாக்கவும்,” கூட்டாக உறுதியளித்திருக்கின்றன.

The Dindigul Agreement pledges to end gender-based violence and harassment at the factories operated by Eastman Exports in Dindigul. ‘It is a testimony to what organised Dalit women workers can achieve,’ Thivya Rakini says
PHOTO • Antara Raman
The Dindigul Agreement pledges to end gender-based violence and harassment at the factories operated by Eastman Exports in Dindigul. ‘It is a testimony to what organised Dalit women workers can achieve,’ Thivya Rakini says
PHOTO • Antara Raman

திண்டுக்கல்லில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் நடத்தும் எல்லா ஆலைகளிலும் பாலின ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை ஒழிக்க திண்டுக்கல் ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ‘தலித் பெண் தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான சாட்சி இது,’ என்கிறார் திவ்யா ராகினி

இந்த ஒப்பந்தம், சர்வதேச தொழிலாளர் தரங்களையும் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் வன்முறை மற்றும் அத்துமீறல் எதிர்ப்பு மாநாட்டு முடிவுகளையும் பின்பற்றியிருக்கிறது. தலித் பெண் தொழிலாளர் உரிமைகளையும் சங்கம் உருவாக்கும் சுதந்திரத்தையும் சங்கத்தில் சேருவதற்கான உரிமையையும் அது பாதுகாக்கிறது. புகார்களை பெற்று அவற்றை ஆராய்ந்து தீர்வு வழங்குமளவுக்கு புகார் கமிட்டியையும் அது வலுப்படுத்துகிறது. ஒப்பந்தத்துக்கு உடன்படுவதை மதிப்பிட, சுதந்திரமான மதிப்பீட்டாளர்கள் தேவை. உடன்பாடு ஏற்படவில்லை எனில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்ஸுக்கு ஹெச் அண்ட் எம் ஏற்படுத்தும் வணிக ரீதியான விளைவுகள் இருக்கும்.

திண்டுக்கல்லின் நாச்சி அப்பாரல் மற்றும் ஈஸ்ட்மேன் ஆலைகளில் இருக்கும் 5,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்களுக்கும் திண்டுக்கல் ஒப்பந்தம் பொருந்தும். கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் பெண்கள். பெரும்பான்மை தலித்துகள். “ஜவுளித்துறையில் பெண்கள் பணிபுரியும் சூழலை இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றும். தலித் பெண் தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் என்ன சாதிக்க முடியுமென்பதற்கு இது ஒரு சாட்சி,” என்கிறார் திவ்யா.

”எனக்கும்,  ஜெயஸ்ரீ போன்ற என் சகோதரிகளுக்கும் நேர்ந்தவற்றை நினைத்துத் துயருறப் போவதில்லை,” என்கிறார் 31 வயது மல்லி. “இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு எப்படி ஜெயஸ்ரீக்கும் பிறருக்கும் நேர்ந்த விஷயங்கள் மீண்டும் நேராமல் இருக்க வைக்க முடியுமென சிந்திக்க விரும்புகிறேன்.”

பலன்கள் தெரிகின்றன. “ஒப்பந்தத்துக்குப் பிறகு பணிச்சூழல் நிறைய மாறிவிட்டது. முறையான இடைவேளைகள் வழங்கப்படுகின்றன. விடுமுறைகள் - குறிப்பாக நோய்க்காலத்தில் - மறுக்கப்படுவதில்லை. கட்டாய ஓவர்டைம் இல்லை. மேற்பார்வையாளர்கள் பெண் தொழிலாளர்களைத் திட்டுவதில்லை. மகளிர் தினம் மற்றும் பொங்கலுக்கெல்லாம் அவர்கள் இனிப்புகள் வழங்குகின்றனர்,” என்கிறார் லதா.

ரமா சந்தோஷமாக இருக்கிறார். “சூழல் இப்போது மாறிவிட்டது. மேற்பார்வையாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகின்றனர்,” என்கிறார் அவர். தொழிலாளர் போராட்டம் நடந்த காலத்தில் அவர் முழு நேரமும் பணிபுரிந்தார். ஒரு மணி நேரத்தில் 90 உள்ளாடைத் துணிகளை தைத்தார். அதனால் ஏற்பட்ட முதுகுவலியை ஒன்றும் செய்ய வாய்ப்பில்லை என்கிறார் அவர். “இத்துறையில் வேலை பார்ப்பதால் ஏற்படும் ஒரு விளைவு இது.”

மாலையில் வீட்டுக்குச் செல்லப் பேருந்துக்குக் காத்திருக்கையில் ரமா, “நாம் இன்னும் அதிகம் தொழிலாளர்களுக்கு செய்ய முடியும்,” எனக் கூறுகிறார்.

இக்கட்டுரைக்காக பேட்டி எடுக்கப்பட்ட ஜவுளித் தொழிலாளர்களின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்புக் கருதி மாற்றப்பட்டிருக்கிறது

தமிழில் : ராஜசங்கீதன்

Gokul G.K.

Gokul G.K. is a freelance journalist based in Thiruvananthapuram, Kerala.

Other stories by Gokul G.K.
Illustrations : Antara Raman

Antara Raman is an illustrator and website designer with an interest in social processes and mythological imagery. A graduate of the Srishti Institute of Art, Design and Technology, Bengaluru, she believes that the world of storytelling and illustration are symbiotic.

Other stories by Antara Raman
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan