கன்னடம் பேசும், தெலுங்கில் படிக்கும் நாகண்ணா என்னும் நாகிரெட்டி, தமிழ்நாட்டில் வசிப்பவர். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் காலையில் ஓரு நாள் அவரைச் சந்திக்க சில கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. `பக்கத்துலதான்`, எனச் சொன்ன அவர் வீடு, நீர்நிறைந்த ஒரு ஏரியை அடுத்து ஒரு புளியமரம், அதையடுத்து யூகலிப்டஸ் மரக் காடு, ஒரு மாந்தோப்பு என அனைத்தையும் தாண்டி, ஒரு காவல் நாய், கத்திக் கொண்டிருக்கும் அதன் குட்டிகள், ஒரு மாட்டுத்தொழுவம் என்னும் சூழலில் மிக அருகில் இருந்தது.

இந்திய உழவர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தாண்டி, ராகி உற்பத்தியாளர் நாகண்ணாவுக்கு ஒரு கூடுதல் பிரச்சினை உண்டு. அந்தப் பிரச்சினையின் தீவிரத்தால், அவர் விளைவிக்கும் பயிரையே மாற்ற வேண்டி வந்தது. மொட்ட வால், மக்கனா மற்றும் கிரி என்னும் வலிமையான, பயங்கரமான உருவம் கொண்ட மூவர்தான் அவர் பிரச்சினைகளின் மூல காரணம்.

உழவர்கள் இந்த மூவர் தரும் பிரச்சினைகளை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. 4000-5000 கிலோ எடையுள்ள இவர்களை எப்படி லேசாக எடுத்துக் கொள்ள முடியும்.. உழவர்களின் பயிர்களைச் சூறையாடித் தின்ன வரும் இவர்கள் காட்டு யானைகள்.

நாம், தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறோம். நாகிரெட்டியின் ஊரான வத்ரா பாளையம் குக்கிராமம், தேன்கனிக்கோட்டை தாலூகாவில் உள்ளது. அவரது கிராமத்திலிருந்து வனப்பகுதி வெகு தூரமில்லை. துரதிருஷ்ட வசமாக யானைகளிடமிருந்தும் அதிக தூரமில்லை. நாம் அவர் வீட்டின் வராண்டாவில் அமர்ந்திருக்கிறோம். நாகண்ணா என கிராமத்து மக்களால் அழைக்கப்படும் 86 வயது நாகிரெட்டி, சத்து மிகுந்த உணவுதானியமான ராகிப் பயிரை உற்பத்தி செய்பவர். வேளாண்மையில் நிகழ்ந்த ஒவ்வொரு மாற்றத்தையும் – நல்ல, மோசமான, பல நேரங்களில் கொடுமையானவற்றையும் கண்டு, கடந்து வந்த சாட்சி இவர்.

`நான் இளவயசா இருக்கறப்ப, வருஷத்துல சில நாள், ராகிப் பயிர் வாசத்துக்கு ஆனை வரும்`

`இப்போ?`

`இப்போ பயிரு, பழங்களத் தின்னு பழகிடுச்சு.. அடிக்கடி வருது`.

இதன் காரணங்கள் இரண்டு என விளக்குகிறார் நாகண்ணா. `1990க்கப்பறம் காட்டுல யானை அதிகமாயிருச்சு.. காடு சுருங்கிப் போயிருச்சு.. அங்க தீனி கெடைக்கறதும் குறஞ்சு போயிருச்சு.. அதனால இங்கே வந்துருது.. நீங்க ஒரு ஓட்டலுக்குப் போயி, அங்க சாப்பாடு நல்லா இருந்தா, ஒங்க நண்பர்களுக்குச் சொல்லி, அவங்களும் போற மாதிரி, முதல்ல வந்த யானைகள் அவங்க நண்பர்களுக்குச் சொல்லிடுச்சுங்க`, எனப் பெருமூச்சுடன் சிரிக்கிறார். இந்த ஒப்பீடு அவருக்கு வேடிக்கையாகவும், எனக்கு ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

PHOTO • M. Palani Kumar
PHOTO • Aparna Karthikeyan

இடது: நாகிரெட்டியின் தோட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் ராகிப்பயிர். வலது: யானைகளை விரட்ட வனத்துறையினர் கொடுத்திருக்கும் எல்.ஈ.டி டார்ச் லைட்டின் சக்தியை ஆனந்தராமு நமக்குக் காட்டுகிறார். அருகில் நாகிரெட்டி

எப்படி இந்த யானைகளை விரட்டுகிறார்கள்?

`பெரிசா கூச்சல் போடுவோம்.. ரொம்ப பவரான பாட்டரி லைட்ட அடிப்போம்`, னு சொல்லி, அவரிடம் இருக்கும் LED டார்ச் லைட்டைக் காண்பிக்கிறார். அவர் மகன் ஆனந்தா என்னும் ஆனந்தராமு, வனத்துறை கொடுத்திருக்கும் அந்த டார்ச் லைட்டை அடித்துக் காண்பிக்கிறார். அதிலிருந்து, கண்ணைக் கூச வைக்கும், நீண்ட தூரம் செல்லும் அடர்த்தியான ஒளிக்கற்றை வருகிறது. `ஆனால், ரெண்டு ஆனைதான் இதப் பாத்துட்டுத் திரும்பிப் போகும்`, என்கிறார் நாகண்ணா.

`மொட்ட வால் ஆனை கண்ண மறைச்சிக்க திரும்பி நின்னுகிட்டு, பயிர சாப்பிடும்`, னு சொல்லும் ஆனந்தா வராண்டாவின் ஒரு மூலை வரை நடந்து சென்று, மொட்ட வால் செய்வது போல செய்து காட்டுகிறார். `மொட்ட வால் முழுசா சாப்பிடாம போகவே போகாது.. நீ என்ன வேணா பண்ணு.. டார்ச் லைட் அடி.. நான் என் வயிறு நெறய சாப்பிடாம போக மாட்டேன்`.

மொட்ட வாலின் வயிறு ரொம்பப் பெரிசு. வயலில் இருக்கற எதையும் விட்டு வைக்காது. அதுக்கு ராகியும், பலாப்பழமும் ரொம்பப் புடிக்கும். பலாப்பழம் உயரமான கிளையில் இருந்தா, தன் முன்னங்கால மரத்தின் மீது வச்சி, தும்பிக்கையை நீட்டிப் பறிச்சுரும். அதுக்கும் எட்டாத உயரத்தில் இருந்தால், கிளைய ஒடச்சிரும். மொட்ட வால் பத்தடி உயரம் இருக்கும்.. முன்னங்காலை உயர்த்தி, தும்பிக்கையை நீட்டினா, இன்னும் ஒரு 6-8 அடி வரைக்கும் போக முடியும்`, என்கிறார் ஆனந்தா

`ஆனா, மொட்ட வால் மனுஷங்கள ஒன்னும் செய்யாது. அது சோளம், மாம்பழம்னு ஒன்னுவிடாம தின்னுட்டு, வயல மிதிச்சு நாசம் பண்ணிட்டுப் போயிரும். யானை வச்ச மிச்சத்த, காட்டுப் பன்னியும், குரங்கும் தின்னுரும். நாம எந்நேரமும் கவனமா இருக்கனும்.. இல்லனா வூட்டுல இருக்கற பாலு, தயிரு கூட மிஞ்சாது`.

`இது பத்தாதுன்னு, காட்டு நாய்க கோழியப் புடிச்சிட்டுப் போயிரும்.. போன வாரந்தான், சிறுத்தை இறங்கி வந்து, காவல் நாயை புடிச்சித் தின்னுடிச்சு.`, எனச் சிறுத்தை வந்து போன வழியைக் காண்பிக்கிறார். எனக்கு உடல் நடுங்கியது. காலைக் குளிரோடு, வனத்தின் எல்லையில், உயிர் நிச்சயமில்லாத சூழலில் வாழ வேண்டிய சூழல் பற்றிய பயமும் சேர்ந்து என்னை உலுக்கி விட்டது.

`எப்படி சமாளிக்கறீங்க?`,  னு கேட்டேன்.

`ஒரு அரை ஏக்கர்ல, வீட்டுக்கு வேணும்கற ராகிய மட்டும் பயிர் பண்ணிக்கிறோம்`, என்கிறார் ஆனந்தா.  `80 கிலோ மூட்டை ரூபாய் 2200க்கு தான் வெல போகுது.. அதுல எங்களுக்கு லாபம் கெடைக்காது.. அதில்லாம, காலம் தவறிப் போய் பெய்யற மழ வேற பயிர நாசம் பண்ணிருது. அதத் தாண்டி மிஞ்சறத  யானை சாப்பிட்டிருது.. அதனால, நாங்க யூகலிப்டஸ் மரத்த நட்டுட்டோம்.. மத்தவுங்க நெலத்துல ரோசப்பூ போட்டுட்டாங்க..

யானைகள் ரோசாப்பூவை கண்டு கொள்வதில்லை. இன்னும் அதைத் தின்று பழகவில்லை போல.

PHOTO • M. Palani Kumar

ஆனந்தராமு யானை வரும் பாதையைக் காட்டுகிறார். பயிர்களையும், பழங்களையும் தின்பதற்காக அவை அடிக்கடி வருகின்றன

*****

ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற,
‘தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்.
..

வரகு விளையும் காட்டில் கிளியை விரட்டச் சென்றிருந்தேன். அங்கு ஒரு மரத்தில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த போது அவன் அங்கு வந்தான். "ஐயா, கொஞ்சம் என்னைத் தள்ளி விடுங்கள்" என்றேன். அவனும் "சரி பெண்ணே" என்று சொல்லி ஊஞ்சலைத் தள்ளி விட்டான்.

வேண்டுமென்றே பிடித்திருந்த ஊஞ்சல் கயிற்றைக் கை நழுவி விட்டுவிட்டு அவன் மார்பில் விழுந்தேன். அதை உண்மையென நம்பி அவன் சட்டென என்னை ஏந்திக் கொண்டான். நான் மயக்கம் வந்தவள் போல் நடித்தபடி அவன் மேல் கிடந்தேன். (கலித்தொகை-37, கபிலர்)

மேற்சொன்ன வரிகள், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கபிலர் எழுதிய கலித்தொகைப் பாடலாகும். சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் OldTamilPoetry.com என்னும் இணைய தளத்தை நடத்தி வரும் செந்தில்நாதன், சங்க காலப்பாடல்களில், சிறு தானியங்கள் பற்றிக் குறிப்புகள் வருவது மிக சகஜம் என்கிறார்.

`சங்க காலக் காதல் கவிதைகளின் பின்ணணியில் தானிய வயல்கள் உள்ளன. இவற்றில் 125 முறை சிறு தானியங்கள் குறிப்பிடப்படுகின்றன. இது நெல்லை விட அதிகம். எனவே, சங்க காலத்தில் (கி.மு 200 முதல் கி.பி 200 வரை), நெல்லை விட, இதர தானியங்கள் மக்களுக்கு முக்கிய உணவாக இருந்தன எனச் சொல்லலாம். அதிலும் திணையும், வரகுமே (ராகி உள்பட) மிக அதிகம் பாடப்பட்டுள்ளன`, என்கிறார் செந்தில் மேலும்.

ராகி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில் தோன்றிய பயிர் என, உணவு வரலாற்றாசிரியர் கே.டி.அச்சையா தனது இந்திய உணவு: ஒரு வரலாற்றுத் துணை என்னும் நூலில் விவரிக்கிறார். ராகி தென்னிந்தியாவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கக் கூடும்.  துங்கபத்திரா நதியின் ஹல்லூர் என்னுமிடத்திலும் (கி.மு.1800), தமிழகத்தில் பையம்பள்ளி (கி.மு.1390) என்னுமிடத்திலும் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த இடம் நாகண்ணாவின் வீட்டில் இருந்தது 200 கிலோ மீட்டரில் உள்ளது.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் வருடம் 2.745 லட்சம் டன் உற்பத்தி செய்து, இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இரண்டாமிடம் . நாகிரெட்டி வசிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் 42% ராகியை உற்பத்தி செய்கிறது

ராகிப் பயிர், மற்ற பயறுவகைகளுடன் ஊடுபயிராக விளைவிக்க ஏற்றது.  குறைந்த நீராதாரம், குறைவான உரம், வளம் குறைந்த நிலம் போன்ற சூழல்களையும் தாக்குப் பிடித்து வளரக்கூடிய பயிர் என்பன ராகியின் தனித்துவ அம்சங்கள் என ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (Food and Agricultural Oraganisation (FAO) கூறுகிறது.

PHOTO • Aparna Karthikeyan
PHOTO • Aparna Karthikeyan

இடது: ராகிக் கதிரும், தானியமும். தமிழ்நாட்டில் 42% ராகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது

இவ்வளவி சிறப்புகள் இருந்தாலும், ராகி உற்பத்தி குறைந்து கொண்டு வருகிறது. மக்களிடையே அதன் பயனும், செல்வாக்கும் குறைந்துள்ளன.  பசுமைப் புரட்சியின் விளைவாக நெல் மற்றும் கோதுமையின் உற்பத்தி அதிகரித்து, அவை, பொதுநல விநியோகத்திட்டம் மூலமாக விநியோகிக்கப்பட்டதன் காரணமாக, ராகி போன்ற உணவு தானியங்களின் பயன்பாடு மக்களிடையே மிகவும் குறைந்து விட்டது.

ராகி உற்பத்தி முதல் பருவத்தில் (ஆடிப்பட்டம்) கடந்த சில ஆண்டுகளாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு 20 லட்சம் டன் உற்பத்தியாகியிருந்த ராகிப்பயிர், 2022 ஆம் ஆண்டில் 15.2 லட்சம் டன்னாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

`ராகிப்பயிர் மேம்பட்ட ஊட்டச் சத்துக் கொண்டது. பருவநிலை மாறுதல்களை எதிர்கொண்டு வளரக்கூடியது. ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் ராகியின் பயன்பாடு 47% வரை குறைந்துள்ளது . மற்ற சிறுதானியங்களின் பயன்பாடு 83% குறைந்துள்ளது`, என, சிறு தானிய உற்பத்தி மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள `தான்  ஃபவுண்டேஷன்`, என்னும் தன்னார்வல நிறுவனம் தெரிவிக்கிறது

இந்தியாவின் மிகப் பெரும் ராகி உற்பத்தியாளாராகிய கர்நாடகாவில் சராசரி மாதாந்திர ராகி நுகர்வு ஊரகக் குடும்பங்களில் 2004-5 ஆம் ஆண்டு 1.8 கிலோவில் இருந்தது. அது 2011-12 ஆம் ஆண்டில், 1.2 கிலோவாகக் குறைந்து விட்டது.

ராகி உற்பத்தி இன்னும் உயிர்ப்போடு இருப்பதன் காரணம், சில மாநிலங்களில், சில இனத்தவர்கள் இதைத் தொடர்ந்து உண்பதால் மட்டுமே எனச் சொல்லலாம்.

*****

அதிகம் ராகி விளைவித்தால், உழவர்கள் அதிக கால்நடைகளை வைத்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு வாராவாரம் வருமானம் கிடைக்கும். ஆனால், ராகி உற்பத்தி குறைந்து போனதால், கால்நடைகளுக்குத் தீவனம் கிடைப்பது குறைந்து போய், உழவர்கள் கால்நடைகளை விற்கும்படியாகி விட்டது
கோபகுமார் மேனன், எழுத்தாளர், உழவர்

PHOTO • Aparna Karthikeyan
PHOTO • Aparna Karthikeyan

இடது: கொல்லப்பள்ளி கிராமத்தில், தனது தோட்டத்தில், ராகிப் பயிருடன் கோபக்குமார் மேனன். வலது: மழையினால் பாதிக்கப்பட்ட ராகிக் கதிர்

நாகண்ணாவைச் சந்திப்பதற்கு முதல்நாள், நான் எங்கள் உள்ளூர்ப் புரவலரான கோபகுமார் மேனன் வீட்டில் தங்கினோம். அன்று இரவு, எங்களுக்கு ஒரு பரபரப்பான யானைக் கதை சொன்னார். அவர் வீடு கொல்லப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ளது. டிசம்பர் மாத முதல்வார இரவில் அவர் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தோம். பயமுறுத்தும் வசீகரத்தோடு, இரவு எங்களைச் சூழ்ந்திருந்தது. இருளும், குளிரும் சூழ்ந்த இனிமையான பொழுது. இரவில் விழித்திருக்கும் உயிர்கள் விழித்திருந்தன. பல்வேறு குரல்களில் அவை பாட்டிசைத்தன.  நிம்மதியாக உணர்ந்த மனம் அதே சமயத்தில் பல திசையில் பயணிக்கவும் செய்தது.

`மொட்டை வால் இங்க நின்னுட்டு இருந்தான்`, என்றார் கோபகுமார், கொஞ்ச தூரத்தில் இருந்த மாமரத்தைக் காட்டி. `மொட்டை வாலுக்கு மாம்பழம் தேவைப்பட்டது. ஆனால், பழங்கள் எட்ட முடியாத தூரத்தில் இருந்தன. அதனால், மரத்தை உடைத்து விட்டான்`, என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்.. பார்க்கும் இடமெல்லாம் யானை இருப்பது போல இருந்தது.

`பயப்பட வேண்டாம். அவன் இங்கிருந்தால், உங்களுக்குத் தெரியும்`, என எனக்கு ஆசுவாசம் தந்தார்.

அடுத்த ஒரு மணிநேரம், கோபகுமார் எனக்குப் பல கதைகளைச் சொன்னார்.  அவர் மனித இயல்புப் பொருளாதாரத்தில் நிபுணர். எழுத்தாளர் மற்றும் நிறுவன ஆலோசகர். 15 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்யும் நோக்கத்தோடு, இந்தக் கொல்லப்பள்ளி கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார். அதன்பின் தான் விவசாயம் அத்தனை எளிமையான வேலையில்லை என்பது அவருக்குத் தெரிய வந்தது. தன் நிலத்தில் எலுமிச்சையும், கொள்ளும் பயிர் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார். `நிலத்தை மட்டுமே நம்பியிருக்கும் மக்களின் வாழ்க்கை மிகக் கடினமாக இருக்கிறது. தவறான வேளாண் கொள்கைகள், காலநிலை மாற்றம், குறைவான அரசு கொள்முதல் விலை, வனவிலங்குகளின் தாக்குதல் இவையனைத்தும் சேர்ந்து, ராகிச் சாகுபடியை அழித்து விட்டது`, என்கிறார் கோபா.

`மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, பின்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட வேளாண் சட்டங்கள் ஏன் செல்லுபடியாகாது என்பதற்கு ராகிப் பயிரே உதாரணம்`, என்கிறார் கோபா. `அந்தச் சட்டங்கள், உழவர்கள் தங்கள் உற்பத்தியை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்கின்றன. இது உண்மையெனில், இங்கு இன்னும் அதிக நிலங்களில் ராகி உற்பத்தியாகிருக்க வேண்டும். ஆனால், ராகி இங்கிருந்து கிலோ 33.77 ருபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் அண்டை மாநிலத்துக்குக் கடத்திச் செல்லப்படுகிறது. (தமிழகத்தில் ராகி விலை மிகக் குறைவு)

இங்கே ராகிக்குச் சரியான ஆதரவு விலை கிடைப்பதில்லை. எனவேதான், சிலர், ராகியைத் தமிழ்நாடு தாண்டி, கர்நாடகாவுக்குக் கடத்திச் செல்கின்றனர் என்கிறார் கோபா

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

கொல்லப்பள்ளி கிராமத்தில், சிவ குமாரனின் தோட்டத்தில் ராகி அறுவடை செய்யும் வேலையாட்கள்

`இப்போது தமிழ்நாட்டில் 80 கிலோ மூட்டைக்கு, தரமான ராகிக்கு ரூபாய் 2200 மும், கொஞ்சம் தரம் குறைந்த ராகிக்கு ரூபாய் 2000 மும் கிடைக்கின்றது`, என்கிறார் ஆனந்தா. அதாவது கிலோ ராகிக்கு ரூபாய் 25 முதல் 27 வரை கிடைக்கிறது.

இந்த விலை கமிஷன் ஏஜெண்ட், உழவர்கள் வீட்டிலிருந்து வாங்கிச் செல்கையில் கொடுப்பது. இதில் கமிஷன் ஏஜெண்டுக்கு மூட்டைக்கு ரூபாய் 200 லாபம் கிடைக்கலாம் என அனுமானிக்கிறார் ஆனந்தா. உழவர்களே நேரில் சென்று மண்டியில் விற்றால், 80 கிலோ மூட்டை நல்ல தரமான ராகிக்கு, ரூபாய் 2350 வரை கிடைக்கலாம். ஆனால், அதில் உழவருக்குப் பெரும் நன்மை கிடையாது என நினைக்கிறார் ஆனந்தா. `ஏத்துக் கூலி, டெம்போ வாடகை, மண்டி கமிஷன் எல்லாமே நாமதான் குடுக்கணும்`.

கர்நாடகாவில், ராகிக்கு நல்ல ஆதரவு விலை இருந்தாலும், அரசுக் கொள்முதலில் ஏற்படும் தாமதங்களினால். பல விவசாயிகள், ஆதரவு விலையை விட 35% வரை குறைந்த விலையில் விற்க நேரிடுகிறது.

`எல்லா இடங்களிலும், நல்ல ஆதரவு விலை என்னும் கொள்கை அமுல் படுத்த வேண்டும். கிலோவுக்கு 35 ரூபாய் கிடைத்தால், உழவர்கள் ராகி பயிரிடுவார்கள். இல்லையெனில், இங்கே நடப்பது போல கொய் மலர்கள் (cut flowers), தக்காளி, ஃப்ரெஞ்ச் பீன்ஸ் என மற்ற பயிர்களுக்குத் தாவி விடுவார்கள்`, என்கிறார் கோபகுமார்.

கோபகுமாரின் அண்டை விவசாயியான சீனப்பா நடுத்தர வயதினர். தக்காளி விளைவிக்க வேண்டும் என நினைப்பவர்.  `அது லாட்டரி மாதிரி.. ஒரு விவசாயி தக்காளில ஏக்கருக்கு மூணு லட்சம் சம்பாதிச்சா, எல்லாருமே அதையே செய்வாங்க. அதுல உற்பத்திச் செலவு அதிகம். விலையும் மேலே கீழே போகும். கிலோ 1 ரூபாய்ல இருந்து, 120 ரூபாய் வரைக்கும் போகும்`, என்கிறார் சீனப்பா.

ராகிக்கு நல்ல விலை கிடைச்சா, தக்காளிய விட்டுட்டு, ராகியை உற்பத்தி செய்வார் சீனப்பா. `ராகி விளைஞ்சா, வீட்டுல மாடு வளக்கலாம். அதுல வாரா வாரம் வருமானம் கிடைக்கும். அது இல்லாததனால, விவசாயிகள் மாடுகளையெல்லாம் வித்துட்டாங்க`, என்கிறார் அவர்.

PHOTO • M. Palani Kumar
PHOTO • Aparna Karthikeyan

இடது: அறுவடை செய்யப்பட்டு, கத்தையாகக் கட்டப்பட்டுள்ள ராகிப்பயிர். ராகி தானியத்தை இரண்டாண்டுகள் வரை சேமித்து வைக்க முடியும். வலது: ராகித் தாள் போர் போடப்பட்டு, மாட்டுத்தீவனமாக உபயோகிக்கப்படுகிறது

இங்கிருக்கற அத்தனை பேருக்கும் ராகிதான் உணவு என்கிறார் கோபகுமார். `பணம் தேவைப்பட்டாதான் விவசாயிகள் ராகிய விப்பாங்க.. இல்லன்னா, ரெண்டு வருஷம் வரைக்கும் அத வெச்சி, தேவைப்படறப்ப, தேவைப்படும் அளவுக்கு அரைச்சு மாவாக்கி களி செய்து சாப்பிட முடியும். மத்த பயிருங்கள அப்படி சேமிச்சு வைக்க முடியாது. அந்தப் பயிர்கள்ல, விளைஞ்ச அன்னிக்கு நல்ல விலை கிடைச்சா, லாட்டரி கிடைச்ச மாதிரி. இல்லன்னா நஷ்டம்தான்`, என்கிறார் அவர்.

இந்தப் பகுதிகளில் விவசாயிகளுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவை மிகச் சிக்கலானவையும் கூட.  `இங்கே விளையும் கொய் மலர்கள், பெரும்பாலும் சென்னைக்குப் போகின்றன. விவசாயியின் வீட்டுக்கே வந்து பணம் கொடுத்து மலர்களைக் கொள்முதல் செய்து கொண்டு போகிறார்கள். ஆனால், முக்கியமான பயிரான ராகிக்கு அப்படியான வசதிகள் இல்லை. உள்ளூர் ரகம், உயர் விளைச்சல் ரகம், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் ரகம் என எதுவா இருந்தாலும் ஒரே விலைதான்`, என்கிறார் கோபகுமார்.

`பெரும் விவசாயிகள், தங்கள் நிலத்தைச் சுற்று மின்வேலி அமைத்துக் கொள்கிறார்கள். அதனால், யானைகள், மின்வேலி போட முடியாத ஏழை விவசாயிகளின் நிலத்தை நோக்கிச் செல்கின்றன. இந்த ஏழைவிவசாயிகள் தான் ராகிப் பயிர் செய்பவர்கள். தங்கள் பயிரை நாசம் செய்யும் யானைகளை, விவசாயிகள் பொறுத்துக் கொள்கிறார்கள். அவை தின்பதை விட, அழிப்பது 10 மடங்கு என்பதுதான் சோகம். நான் மொட்டை வால் யானையை 25 அடி தூரத்தில் பார்த்திருக்கிறேன்`, என்கிறார் கோபகுமார். மீண்டும் மொட்டை வால் கதையில் வந்து சேர்ந்து கொள்கிறது.

`இங்கிருக்கற மனுஷங்க மாதிரி, மொட்டை வாலும் தமிழ்நாட்டுக்காரர். ஆனா கர்நாடகாவுக்கு விருந்தாளியாப் போய்வருவார். மக்கனா அவருக்கு எடுபிடி.  மின்சார வேலியத் தாண்டறது எப்படின்னு மக்கனாவுக்கு சொல்லிக் கொடுத்ததே இந்த மொட்டை வால்தான்`, என்கிறார் கோபகுமார்.

மொட்டை வால் நாங்கள் அமர்ந்திருக்கும் மாடிக்கு அருகில் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது போல ஒரு உணர்வு. `நா வேணா ஓசூருக்குப் போய், கார்லயே படுத்துத் தூங்கிட்டுக் காலைல வர்றேனே`, என்றேன் பதட்டமான சிரிப்புடன். கோபாவுக்கு அது வியப்பாக இருந்தது.

`மொட்டை வால் பெரிய யானை.. ரொம்பப் பெரிசு. ஆனால், நல்லவன்`, என்கிறார் கோபா.  மொட்ட வாலையோ வேறு யானைகளையோ எதிர்கொள்ளக்கூடாது என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன். ஆனால், கடவுள் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார்.

*****

உள்ளூர் ராகி ரகத்தில விளைச்சல் குறைவு. ஆனா, சுவையும் சத்தும் அதிகம்..
நாகிரெட்டி, ராகி உற்பத்தியாளர், கிருஷ்ணகிரி மாவட்டம்

PHOTO • M. Palani Kumar

இடது புரத்திலிருந்து:  நாகண்ணா, அவர் மருமகள் ப்ரபா மற்றும் அவர் மகன் ஆனந்தா. `எனக்குத் தெரிந்து 5 நாட்டு ரகங்கள் ராகியில் இருந்தன`, என்கிறார் நாகண்ணா

நாகண்ணா உயரமான மனிதர் – 5 அடி 10 அங்குல உயரம். ஒல்லியான உடல். அவருடைய இளம் வயதில் இருந்த உள்ளூர் ராகி ரகங்கள் அவரது மார்பளவு உயரம் வளரக் கூடியவை. நாகண்ணா பெரும்பாலும் வேஷ்டியும், பனியனும் அணிந்திருப்பார். தோளைச் சுற்றித் துண்டு உண்டு.  விசேஷங்களுக்குச் செல்கையில் சுத்தமாக சலவை செய்யப்பட்ட வெள்ளைச் சட்டை அணிந்து செல்வார்.

`ராகியில 5 ரகங்கள் இருந்துச்சு`, திண்ணையில் அமர்ந்து கொண்டு, முற்றத்தையும் ஊரையும் பார்த்தவாறே பேசுகிறார் நாகண்ணா.. `ஒரிஜினல் நாட்டு ராகி ரகத்துல 4 அல்லது 5 விரல் இருக்கும். மகசூல் கம்மிதான்.. ஆனா சத்து ஜாஸ்தி`, என்கிறார் மீண்டும்.

ஹைப்ரிட் ரகங்கள் 1980 க்குப்பறம்தான் வந்துச்சு என நினைவுகூர்கிறார் நாகண்ணா.. எம்.ஆர், ஹெச்.ஆர் னு பேர்கள். அதுல அதிக விரல்கள்.  நாட்டு ரகங்கள்ல மகசூல் 5 மூட்டை (80 கிலோ)தான் கெடக்கும்

.ஆனா, ஹைப்ரிட்ல 18 மூட்டை வரைக்கும் மகசூல் அதிகமாச்சு. ஆனா, அதனால விவசாயிக்கு ஒரு பலனும் இல்லை.. ஏனெனில், உற்பத்திக்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை.

12 வயதில் விவசாயம் செய்யத் தொடங்கிய நாகண்ணா, கடந்த 74 வருடங்களில் பல பயிர்களை உற்பத்தி செய்திருக்கிறார்.  `எங்களுக்கு எதெல்லாம் தேவைப்பட்டதோ, அதையெல்லாம் உற்பத்தி செஞ்சிருக்கோம். கரும்புப் பயிர் வச்சு வெல்லம் காச்சியிருக்கோம். எள்ளு உற்பத்தி பண்ணி மரச்செக்குல எண்ணெய் ஆட்டியிருக்கோம். நெல்லு, கொள்ளு, ராகி, மிளகாய், வெங்காயம், பூண்டு எல்லாமே பயிர் செஞ்சிருக்கோம்`, என்கிறார் அவர்.

அவர் கற்றுக் கொண்டதெல்லாம் நிலத்தில் இருந்துதான். பள்ளிக்கூடம் தொலைவில் இருந்ததால், முறையாகக் கல்வி பயில முடியவில்லை. குடும்பத்தில் ஆடு, மாடு, கோழியெல்லாம் அவர்தான் பார்த்துக் கொண்டார். எப்போதும் வேலை இருந்து கொண்டிருந்த பிசியான வாழ்க்கை அவருடையது. வீட்டில் இருந்த எல்லோருக்கும் வேலை இருந்தது.

நாகண்ணாவின் கூட்டுக் குடும்பம் மிகப் பெரியது. மொத்தம் 45 பேர் என்கிறார். அவரது பாட்டனார் கட்டிய பெரும் வீட்டில் அனைவரும் வாழ்ந்தனர். அந்த வீடு, இப்போது நாகண்ணா வாழும் வீட்டிற்கு எதிரில் உள்ளது. 100 வருடம் பழமையான அந்த வீட்டில், ஒரு மாட்டுக் கொட்டாய், பழைய மாட்டு வண்டி, வராந்தாவில் ராகி கொட்டி வைக்க ஒரு குதிர் எல்லாம் இருக்கிறது.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: நாகண்ணாவின் முன்னோர் வீட்டின் மாட்டுக் கொட்டகை. வலது: நாகண்ணாவின் முன்னோர் வீட்டின் வெராண்டா மற்றும் தானியக் குதிர்.

நாகண்ணாவுக்கு 15 வயதாகும் போது, கூட்டுக் குடும்பத்தில் பாகம் பிரிக்கப்பட்டது. நாகண்ணாவுக்கு நிலத்தில் ஒரு பகுதியும், மாட்டுக் கொட்டாயும் அவர் பங்காகக் கிடைத்தது. மாட்டுக்கொட்டாயைச் சுத்தம் செய்து வீடு கட்டிக் கொள்ள வேண்டியது அவர் வேலை. `அப்போ சிமிண்ட் மூட்டை 8 ரூபாய்.. அது பெரும்பணம். ஒரு மேஸ்திரியைக் கூப்பிட்டு ஒப்பந்தம் போட்டோம்.. ஆயிரம் ரூபாய்க்கு`, என்கிறார் நாகண்ணா

வீடு கட்ட பல வருஷம் ஆனது.. சுவர் வைக்க செங்கல் வாங்க ஒரு ஆடும், நூறு அச்சு வெல்லமும் விக்க வேண்டி வந்தது. வீடு கட்டும் கட்டுமானப் பொருட்களெல்லாம் மாட்டு வண்டியில் வந்தன. அப்போது பெரும் பணக் கஷ்டம். ராகி படி 8 அணாவுக்குத்தான் வித்தது(60 படி = 100 கிலோ)

ஒரு வழியாக வீட்டைக் கட்டி, 1970 ஆம் ஆண்டு, தன் திருமணத்துக்குச் சில வருடங்கள் முன்பாக, இந்த வீட்டுக்குக் குடி வந்தார். அதன் பின்னர், எந்த நவீன மாற்றமும் அவர் செய்ய வில்லை.. `ஏதோ அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்னு செஞ்சிருக்கோம்`, என்கிறார். அவர் பேரன், தன்னிடம் இருந்த கூர்மையான ஒரு கருவியை உபயோகித்து, விளக்குப் பிறைக்கு மேலே, `தினேஷ் த டான்`, அப்படீன்னு எழுதியிருந்தார். 13 வயதான தினேஷ், பார்க்க டான் போல இல்லாமல், நல்ல பையனாகத் தெரிந்தார். காலையில் பார்த்தவுடன், `ஹலோ`, எனச் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடிவிட்டார்.

தினேஷ் த டானின் அம்மா ப்ரபா எங்களுக்கு டீ தயாரித்துக் கொடுத்தார். நாகண்ணா எங்களுக்காகக் கொஞ்சம் கொள்ளு எடுத்து வருமாறு ப்ரபாவிடம் சொன்னார். டின் டப்பாவில் இருந்த கொள்ளுப்பயிரை எடுத்து வந்தார். அதைக் குலுக்குகையில் இசை போல ஒரு ஓசை எழுந்தது. `அப்படியே சாப்பிடலாம்.பரவாயில்ல`, எனச் சொல்லிக் கொடுத்தார் நாகண்ணா.. மென்று சாப்பிடச் சுவையாக இருந்தது. `வறுத்து உப்புப் போட்டுச் சாப்டா இன்னும் சுவையா இருக்கும்`, என்றார் நாகண்ணா. அதில் சந்தேகமேயில்லை. பின்னர், கொள்ளுப் பயிர்க் கொழம்பு செய்வது எப்படி எனச் சொல்லிக் கொடுத்தார்.

விவசாயத்துல என்னெல்லாம் மாறியிருக்குன்னு நாகண்ணாவைக் கேட்டேன். `எல்லாமே`, என நேரடியாகவும், சுருக்கமாகவும் பதில் சொன்னார் நாகண்ணா.. `சில மாற்றங்கள் நல்லது.. ஆனா மக்கள்..`, என நிறுத்தும் நாகண்ணா, தலையை ஆட்டி, `வேல செய்யறதுக்குத் தயாரா இல்ல`, என்கிறார். 86 வயதில், நாகண்ணா தினமும் தன் வயலுக்குச் செல்கிறார். தன்னையும், விவசாயத்தையும் பாதிக்கும் விஷயங்களை மிக எளிதாகப் புரிந்து கொள்கிறார். `நெலம் இருந்தாலும், வேல செய்ய ஆளில்ல.. இதுதான் பிரச்சினை`, எனச் சுட்டிக் காட்டுகிறார்.

PHOTO • M. Palani Kumar

தன் வீட்டின் வெராண்டாவில் அமர்ந்து கொண்டு, தன் இளவயதுக் கதைகளைச் சொல்கிறார் நாகண்ணா

‘ராகி அறுவடை செய்ய மெஷின் வந்துருக்குன்னு சொல்றாங்க.. ஆனா அதுக்கு கதிர்ல முத்தின கதிர், பால் பிடித்த கதிர்னு வித்தியாசம் தெரியாது.. ஒன்னா பறிச்சு போட்டுரும். அதை அப்படியே மூட்டையா பிடிச்சா, அதுல பூஞ்சை புடிச்சி பாழாப்போயிரும். கையால செய்யற அறுவடை கஷ்டமானது. ஆனா, ராகி நீண்ட நாள் கெடாம இருக்கும்`, என்கிறார் ஆனந்தா.

இன்னொரு உழவரான சிவ குமரனின் ராகி வயலில் 15 பெண்கள் அறுவடையில் ஈடுபட்டிருக்கிறார்கள். `சூப்பர் ட்ரை இண்டர் நேஷனல், என்னும் பெயர் அச்சிடப்பட்ட டீ ஷர்ட் அணிந்து கொண்டு, கையிடுக்கில் கருக்கரிவாளை இடுக்கிக் கொண்டு, மிகவும் ஆர்வத்தோடு ராகியைப் பேசுகிறார் சிவா.

கொல்லப்பள்ளி கிராமத்தின் எல்லையில் இருக்கும் அவர் வயலில், கடந்த சில வாரங்களாக மழையும், காற்றும் அடித்துள்ளன. 25 வயதான சிவா, மழையினால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சொல்லத் தொடங்குகிறார். காற்றும் மழையும் அடித்ததில், பயிர்கள் பல்வேறு திசைகளில் சாய்ந்து விட்டன. பெண் தொழிலாளர்கள், பொறுமையாக அமர்ந்தவாறு, பயிர்களை அறுத்துக் கட்டுகிறார்கள். மழையினால் சாய்ந்த பயிரினால், மகசூல் குறைவாகவும், அறுக்க அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் சூழல் மாறிவிட்டது என வருத்தப்படுகிறார் சிவா. ஆனால், நிலத்துக்குச் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை குறையவில்லை.

`இந்த வயல் ரெண்டு ஏக்கருக்கும் கொஞ்சம் கம்மி. 7 மூட்டை ராகி குத்தகையா கொடுக்கனும்.. கொடுத்தது போக, எனக்கு 12-13 மூட்டை மிஞ்சும். ஆனா, இந்த 12-13 மூட்டைக்கு கர்நாடக விலை கிடைச்சாத்தான் லாபம். அதனால, கிலோவுக்கு ரூபாய் 35 தமிழ்நாட்டுல குடுக்கனும்னு எழுதுங்க`, என ஆணையிடுகிறார். நான் அதைக் குறித்துக் கொள்கிறேன்

மீண்டும் நாகண்ணாவின் வீடு. அங்கே உள்ள ஒரு பெரும் கல்லுருளையைக் காட்டுகிறார் நாகண்ணா. அறுவடை செய்யப்பட்ட ராகிக் கதிர்கள் சாணி மெழுகப்பட்ட தளத்தில் கிடத்தப்பட்டு, அதன் மீது மாடுகளால் இழுக்கப்படும் கல்லுருளைகள் செலுத்தப்படும், கதிரிலிருந்து ராகி தானியங்கள் பிரிக்கப்பட்டு, பின்னர் காற்றில் வீசிச் சுத்தம் செய்யப்படும். சுத்தம் செய்யப்பட்ட ராகி தானியம், சாக்குப் பைகளில் பிடிக்கப்பட்டு சேமிக்கப்படும். இப்போது சாக்குப் பைகள் இல்லை.. ப்ளாஸ்டிக் பைகள்தான்.

`சரி.. இப்ப உள்ள வாங்க.. சாப்பிடலாம்`, னு நாகண்ணா அழைத்தார்.. சமையலறையில் மேலும் கதைகள் கிடைக்கலாம் என்னும் ஆர்வத்தில், நான் ப்ரபாவின் பின்னே சென்றேன்..

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: குத்தகைக்கு எடுத்துப் பயிர் செய்த சிவ குமாரன் தோட்டத்தில், மழையால் சேதமடைந்த பயிர் அறுவடை செய்யப்படுகிறது. வலது: கொல்லப்பள்ளி கிராமத்தில், சிவகுமாரனின் தோட்டத்தில், வேலையாட்கள் ராகி அறுவடை செய்து, கத்தைகளாகக் கட்டுகிறார்கள்

*****

..புறவு கரு அன்ன புன்_புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு..

புறாவின் சிறு முட்டை போல் தோன்றும் புஞ்சை நில வரகு மணிகளைப் பால் ஊற்றி சமைத்து, அதைத் தேனோடு பிசைந்து கூடவே நெருப்பில் வாட்டிய இள முயல் இறைச்சியையும் என் உறவினர்களோடு சேர்ந்து உண்டு ..

புறநானூறு 34, ஆலத்தூர் கிழார்

கால்சியம், இரும்புச் சத்துகள் அதிகம் கொண்ட, கோதுமை போல க்ளுட்டன் இல்லாத, இரண்டாண்டுகள் வரை கெடாத உடல்நலனுக்குகந்த தானியம் ராகி. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதுபோன்ற தானியங்களும், இறைச்சியும், தேனும் கலந்த உணவுகளை நம் முன்னோர் உண்டு வந்திருக்கிறார்கள். இன்றும் ராகி சமைக்கப்பட்டு பெரியவர்களும், குழந்தைகளும் சாப்பிடும் சத்து மிகுந்த உணவாக இருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான ராகி உணவு வகைகள் உள்ளன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ராகி ஒவ்வொரு விதமாகச் சமைக்கப்பட்டு உண்ணப்படுகிறது. கிருஷ்ணகிரியில், ராகி மாவு சமைக்கப்பட்டு உருண்டையாக உண்ணப்படுகிறது. இது களி என அழைக்கப்படுகிறது.

ப்ரபாவின் சமையலறை மேடையில், ஸ்டீல் ஸ்டவ் உள்ளது. ஒரு அலுமினியப்பாத்திரத்தில், நீரை ஊற்றிக் கொதிக்க விடுகிறார். பின்னர் ஒரு கையில் மரக்கரண்டியை எடுத்துக் கொண்டு, இன்னொரு கையில் ஒரு கப்பில் ராகி மாவை எடுத்துக் கொள்கிறார்.

`தமிழ் பேசுவீங்களா?`, என்னும் கேள்விக்கு சிறு புன்னகையுடன்  தலையை அசைக்கிறார். ப்ரபா சல்வார் கமீஸ் உடையும், கொஞ்சம் நகைகளும் அணிந்திருக்கிறார். ப்ரபாவுக்குத் தமிழ் புரிகிறது. கன்னடம் கலந்த தமிழில் பதிலளிக்கிறார். `16 வருஷமா இந்த ராகிக்களிதான் கிண்டிகிட்டு இருக்கேன்`, என்கிறார். அவரது 15 ஆவது வயதிலிருந்து.

அடுப்பில் நீர் கொதிக்கத் தொடங்கியவுடன் அவரது சமையல் திறன் வெளிப்படுகிறது. கப்பில் இருக்கும் ராகி மாவைப் பாத்திரத்தில் கொட்டுகிறார். பாத்திரத்தை ஒரு இடுக்கியில் பிடித்துக் கொண்டு, மரக்கரண்டியால் கிண்டுகிறார். ராகி மாவு, மெல்ல ப்ரவுன் நிறப் பசையாக மாறுகிறது. ராகி கிண்டுதல் கடுமையான, திறன் தேவைப்படும் வேலை. சில நிமிடங்கள் வெந்த பின், ராகி களியை, மரக்கரண்டியின் உதவியால் பெரும் உருண்டையாக மாற்றுகிறார் ப்ரபா. பெண்கள் இதைச் சில ஆயிரம் ஆண்டுகளாகச் செய்துவருகிறார்கள் என்பதை யோசிக்க வியப்பாக இருக்கிறது.

`என்னோட சின்ன வயசில, இத மண்பானைல, விறகடுப்புல செய்வோம்`, என்கிறார் நாகண்ணா. அது இன்னும் ருசியாக இருக்கும் என்பது அவரது கருத்து. அந்த ருசி, நாட்டு ரகத்தினால் என்கிறார் அவர் மகன் ஆனந்தா. `வீட்டுக்குள்ளார வர்றப்பவே கமகமன்னு வாசனை வரும்`, என்கிறார். `இப்ப இருக்கற ஹைப்ரிட்ல, வாசனை அடுத்த ரூமுக்குக் கூட வராது`.

PHOTO • Aparna Karthikeyan
PHOTO • Aparna Karthikeyan
PHOTO • Aparna Karthikeyan

இடது: ராகி மாவைக் களியாகச் சமைக்கிறார் ப்ரபா. வலது:  சூடான களியை, கருங்கல் தளத்தில், களி உருண்டைகளாக தன் கைகளால் உருட்டி உருவாக்குகிறார் ப்ரபா

புகுந்த வீட்டினர் சூழ இருப்பதாலோ என்னவோ, ப்ரபா அதிகம் பேசவில்லை.  பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, சமையலறையின் மூலையில் இருக்கும் கருங்கல் பரப்பில், ராகி உருண்டையை ஒரு நீளமான ட்யூப் போலப் பரப்புகிறார். பின்னர், கையில் நீரைத் தொட்டுக் கொண்டு, சூடாக இருக்கும் அந்த நீள ராகி ட்யூப்பைச் சின்ன சின்னத் துண்டுகளாகப் பிய்த்து, கைகளால் கருங்கல் பரப்பில் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக மாற்றுகிறார்.

ராகிக் களி தயாரானதும், அனைவருக்கும் பரிமாறப்படுகிறது. என் தட்டில் இருக்கும் ராகி உருண்டையை (ராகி முத்தே என அழைக்கிறார்கள்) சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து, கொள்ளுச் சாற்றில் தோய்த்துச் சாப்பிடனும் என எனக்குச் செய்து காண்பிக்கிறார் நாகண்ணா. ப்ரபா வதக்கிய காய்கறிகளை ஒரு கப்பில் கொண்டு வருகிறார்.. அந்தச் சாப்பாடு பல மணிநேரம் எங்களை உண்ட மயக்கத்தில் வைத்திருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் பர்கூரில், லிங்காயத்து இனத்தைச் சேர்ந்தவர்கள், ராகியை ரொட்டியாகச் சுட்டு சாப்பிடுகிறார்கள். இன்னொரு பயணத்தில், பார்வதி சித்தைய்யா என்னும் உழவர், வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு அடுப்பில் எனக்காக, ராகி ரொட்டி சுட்டுத்தந்தார். தடிமனாகவும், ருசியாகவும் இருக்கும் இந்த ரொட்டி, மாடுகளை ஒட்டிக் கொண்டு காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்பவர்களுக்குப் பல நாட்கள் வைத்து சாப்பிட ஏதுவாக இருக்கும்.

சென்னை வாழ் உணவு வரலாற்றாய்வாளரும், ரசனையாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ராகேஷ் ரகுநாதன், தன் வீட்டில் பாரம்பரியமாகச்ச் செய்யப்பட்டுவரும் ஒரு ராகி உணவைச் சொல்கிறார் – அது ராகி வெல்ல அடை.  இது ராகி மாவு, வெல்லம், தேங்காய்ப்பாலுடன், கொஞ்சம் ஏலக்காயும், சுக்கு கலந்து செய்யப்படுவது. `கார்த்திகை தீபத்தன்னிக்கு, விரதம் முடிஞ்சு சாப்பிடறது இது. எங்கம்மாவுக்கு, அவங்க பாட்டி செய்யச் சொல்லிக் கொடுத்த பலகாரம்`  கொஞ்சம் நெய்யும் சேர்த்துச் செய்யப்படும் இந்த அடை, விரதம் முடிந்து சாப்பிட ஏற்ற சத்தான, போஷாக்கான பலகாரம்.

புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்கலம் கிராமத்தில் இருக்கும் யூ ட்யூபில் புகழ்பெற்ற வில்லேஜ் குக்கிங் சேனல் குழு சொல்லும் ஸ்பெஷம் அயிட்டம் – களியும், கருவாடும். பாரம்பரியமான உணவு வகைகளைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுத்து மக்கள் முன் வைப்பது இந்த யூ ட்யூப் சேனலின் தனித்துவம்.  `7-8 வயசு வரைக்கும் எங்கள் வீட்டில் ராகிக் களி இருந்துச்சு.. அதுக்கப்பறம் ராகி போயி, அரிசி வந்துருச்சு`, என்கிறார் வில்லேஜ் குக்கிங் சேனலைத் தொடங்கியவர்களில் ஒருவரான 33 வயது சுப்ரமணியன்.

ராகி மாவில் இருந்தது களி செய்து, பனையோலைக் கப்பில் வைத்து சாப்பிடுவதை, ஒவ்வொரு ஸ்டெப்பாக எடுத்து இவர்கள் வெளியிட்ட வீடியோவை 80 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இவர்களது யூ ட்யூப் சேனலுக்கு மொத்தம் 1.5 கோடி சந்தாதார்கள் உள்ளதால், இது வியப்பாக இல்லை.

PHOTO • Aparna Karthikeyan
PHOTO • Aparna Karthikeyan

இடது: ராகியின் உபயோகம் கடந்த 5 ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. வலது: ராகியை பயிரில் இருந்து பிரித்தெடுக்க மாடுகளால் இழுக்கப்படும் கல் உருளை

அந்த வீடியோவின் மிகவும் ருசிகரமான பகுதி, களி உருண்டை செய்தல். சுப்ரமணியத்தின் தாத்தா 75 வயதான பெரிய தம்பி, ராகியை அரைத்து, களியாக்கி, அத்துடன் ஒரு கைப்பிடி அரிசிச் சோற்றைச் சேர்த்து உருண்டையாகப் பிடித்து, அதை அரிசி நீராகாரத்தில் போடுவது வரை கவனமாக வழிநடத்துகிறார். அடுத்த நாள், இந்த ராகி உருண்டைகள், கவனமாக, தீயில் சுடப்பட்ட கருவாட்டுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. `இது தவிர, தினமும் சாப்பிடுகையில், சின்ன வெங்காயமும், மிளகாயும் சேத்துகிட்டாலே போதும்`, என்கிறார் சுப்ரமணியன்

நாட்டு அரிசி வகைகள் மற்றும் தானியங்களைப் பற்றிப் பேரார்வத்துடன் பேசுகிறார் சுப்ரமணியம். 2021 தமிழ்நாடு மாநிலத் தேர்தல் சமயத்தில், இவர்கள் சேனலைப் பற்றிக் கேள்விப்பட்ட ராகுல்காந்தி, இவர்களைச் சந்தித்து, இவர்கள் செய்த காளான் பிரியாணியைச் சாப்பிட்டு விட்டுப் போனார். கிட்டத்தட்ட மறைந்து போய்க் கொண்டிருக்கும் உணவு வகைகளை, உணவு தானியங்களை, இவர்கள் தங்கள் சேனலில் படம் பிடித்து மக்கள் முன்வைக்கிறார்கள்.

*****

பயிருக்கு பூச்சி மருந்தடிக்கற விவசாயிகள், சம்பாதிக்கற பணத்தையெல்லாம், ஆஸ்பத்திரிக்கே குடுத்துர்றாங்க`
ஆனந்தராமு, ராகி உற்பத்தியாளர், கிருஷ்ணகிரி.

நாகண்ணாவின் குக்கிராம விவசாய நிலங்களில் இருந்தது ராகி காணாமல் போனதன் காரணங்கள் மூன்று. லாபமின்மை, யானை மற்றும் காலநிலை மாற்றம். முதல் காரணம், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும். ஒரு ஏக்கர் ராகிப்பயிர் உற்பத்திச் செலவு 16-18000 வரை ஆகிறது. `மழை பேஞ்சா, யானை வந்தா, அந்த சமயத்துல உடனே கூலிஆட்கள் கிடைக்க மாட்டாங்க. அறுக்கற கூலி ஏக்கருக்கு 2000 அதிகமாயிரும்`, என விளக்குகிறார் ஆனந்த ராமு

தமிழ்நாட்டுல ராகி விலை மூட்டைக்கு 2200. அப்படீன்னா கிலோவுக்கு 27.50 ரூபாய் கிடைக்கும். ஹைப்ரிட் விதச்சா மகசூல் 15 மூட்டை வரும். நல்ல மகசூல்னா 18 மூட்டை வரை வரும். ஆனால், `ஹைப்ரிட்ல ஒரே பிரச்சினை, ராகித்தாளை மாடு சாப்பிடாது.. அதுங்களுக்கு நாட்டு ரகம்தான் புடிக்கும்`, என எச்சரிக்கிறார் ஆனந்தா

அது முக்கியமான எச்சரிக்கை.. ஏன்னா, ஒரு லோடு ராகித் தாள் ருபாய் 15000 க்கு விற்கிறது. ஒரு ஏக்கர்ல, 2 லோடு வரை கெடைக்கும். கால் நடைகளை வைத்திருக்கும் விவசாயிகள், ராகித்தாளை மாட்டுக்குத் தீனியாக உபயோகித்துக் கொள்வார்கள். ராகித்தாளை குவித்துப் போர் போட்டுக் கொண்டால், ஒரு வருடம்  வரை கெடாமல், கால் நடைகளுக்குத் தீனியாக  உபயோகித்துக் கொள்ள முடியும்.

`ராகியையுமே நாங்க விக்கறதில்ல.. அடுத்த வருஷம் நல்ல மகசூல் கெடக்கற வரைல வச்சிருப்போம். ஏன்னா, எங்களுக்கு மட்டுமில்ல, நாயி, கோழி எல்லாத்துக்கும் ராகிதான் சாப்பாடு`, என்கிறார் ஆனந்தா

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: ஆனந்த தன் ஆடுகளுடன். அவை ராகித் தாளை உண்கின்றன. வலது: சுத்தம் செய்யப்பட்டு ப்ளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு, நாகண்ணாவின் முன்னோர் வீட்டில் அடுக்கப்பட்டுள்ளன

ராகி இந்தப் பகுதிக்கும், மக்களுக்கும் மிக முக்கியமானது என்பதை அனந்தராமுவின் சொற்கள் உறுதி செய்கின்றன. ராகி பழமையானது என்பதால் அல்ல. மழையை மட்டுமே நம்பியிருக்கும் இப்பகுதியின் தட்ப வெப்ப நிலைக்கு மிகச் சரியான பயிர் ராகிதான். `ரெண்டு வாரம் வரை மழையில்லாம, தண்ணியில்லாம இருந்தாக் கூட ராகி சமாளிச்சுக்கும்`, என்கிறார் ஆனந்தா. வறட்சியை மிக எளிதாகத் தாங்கி நிற்கும் வலிமை ராகிக்கு உண்டு. `இதுல பூச்சி பொட்டு கிடையாது. தக்காளி, பீன்ஸ் மாதிரி இதுக்கு பூச்சி மருந்து அடிக்க வேண்டியதில்ல.. பூச்சி மருந்து அடிக்கற விவசாயிகள், பணத்தையெல்லாம் ஆஸ்பத்திரிக்கே குடுத்தர்றாங்க`, என்கிறார் ஆனந்தா.

தமிழ்நாடு அரசின் சமீபத்திய ஒரு முடிவு, ராகிப்பயிரின் நிலையைக் கொஞ்சம் மேம்படுத்துவதாகத் தோன்றுகிறது. சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில், பொது விநியோகத்தின் ஒரு பகுதியாக ராகி மாறும் இதர தானியங்களை விநியோகிக்க எடுத்துள்ள முடிவுதான் அது. தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முன்வைத்த 2022 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட், உணவு தானியங்களைப் பற்றி 33 இடங்களில் பேசுகிறது. அரிசி, நெல் தவிர்த்த இதர தானியங்களைப் பற்றி 16 முறை பேசுகிறது. ஊட்டச் சத்துக்கள் செறிந்த இந்த தானிய உபயோகத்தை அதிகரிக்கவும், பிரபலப்படுத்தவும் இரண்டு விசேஷ பிராந்தியங்கள் உருவாக்கப்பட உள்ளன. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், தானிய உணவு விழாக்களைக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய அரசின் முன்னெடுப்பில், 2023 ஆம் ஆண்டை, ஐக்கியநாடுகளின், உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (FAO), சிறுதானியங்களின் ஆண்டாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. இது, `ராகி`, போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த தானியங்களை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரக் கூடும்.

ஆனால், இந்த ஆண்டு நாகண்ணாவின் குடும்பத்துக்கு, ராகி ஒரு சவாலாகிவிட்டது.  ராகி பயிர் செய்திருந்த ½ ஏக்கரில், அவர்களுக்கு 3 மூட்டை ராகிதான் கிடைத்துள்ளது. மழையும், வனவிலங்குகளும் விளைவித்த சேதம் போக மிஞ்சியது இதுதான். `ராகி சீசனப்போ, ஒவ்வொரு நாளும் போய் மச்சுலதான் (மரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள பரண்) காவல் காக்க வேண்டியிருந்தது`, என்கிறார் அனந்தா.

ஆனந்தராமுவுக்கு மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. அவர்கள் யாருமே விவசாயம் செய்யவில்லை. அருகிலுள்ள தளி என்னும் சிற்றூருக்கு தினப்படி வேலைகளுக்குச் சென்று வருகிறார்கள். ஆனால், அனந்தா விவசாயம் செய்வதில் தீவிரமாக உள்ளார். `நான் எங்கே ஸ்கூலுக்குப் போனேன்.. ஸ்கூல் போற வழில இருக்கற மாமரத்துல ஏறி ஒக்காந்துட்டு, ஸ்கூல் விட்டு மத்த பசங்க திரும்பி வரும் போது வந்துருவேன். அதுதான் எனக்குப் புடிச்சுது`, என்கிறார் தன் வயிலில் விளைந்திருக்கும் கொள்ளுச் செடிகளை ஆராய்ந்தபடி.

PHOTO • M. Palani Kumar
PHOTO • Aparna Karthikeyan

இடது: ஆனந்த தன் வயலில் விளைந்துள்ள கொள்ளுப் பயிரைப் பரிசோதிக்கிறார். வலது:  யானைகள் வருவதைக் கண்காணிக்க, மரத்தில் கட்டப்பட்ட மச்சு வீடு

மழையினால், வயலில் ஏற்பட்ட சேதத்தைக் காட்டுகிறார். பெரும் சேதம். `என்னோட 86 வயசுல, இப்படி ஒரு மழைய நான் பாத்ததில்ல`, என்கிறார் நாகண்ணா வருத்தம் நிறைந்த குரலில். அவர் நம்பும் பஞ்சாங்கப் படி, இந்த விசாக வருடம் மழை …     ஒரு மாசம் ஃபுல்லா மழை.. மழை`, என்கிறார். இன்னிக்குத்தான் கொஞ்சம் வெயிலடிக்கிது`. செய்தித்தாள்கள் அவர் சொன்னதை உறுதி செய்கின்றன. 2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு 57% கூடுதல் மழையைப் பெற்றுள்ளது.

கோபகுமாரின் பண்ணைக்குத் திரும்பும் வழியில், மேலும் இரண்டு ராகி உழவர்களைச் சந்திக்கிறோம். தலையில் குல்லா, தோளில் துண்டு, குடையுடன் வந்து கொண்டிருந்தார்கள். சுத்தமான கன்னடத்தில், ராகி பயிர்செய்வது எப்படிக் குறைந்து விட்டது என்பதை விளக்கிச் சொல்கிறார்கள். கோபா எனக்கு அதை மொழிபெயர்த்துச் சொன்னார்.

74 வயதான ராம் ரெட்டி, `20 வருஷத்துக்கு முன்னாடி இருந்ததுக்கு இப்போ பாதிக்குப் பாதி நிலத்துலதான் ராகி பயிர் பண்றோம். ஒரு வீட்டுக்கு 2 ஏக்கர் அவ்ளதான்`, என்கிறார். மீதி நிலத்தில் தக்காளியும், பின்ஸும் பயிரிடப்படுகின்றன.  `ராகியும் ஹைபிரிட்தான்.. ஹைபிரிட்.. ஹைபிரிட்`, என அழுத்திச் சொல்கிறார் 63 வயதான கிருஷ்ண ரெட்டி.

`நாட்டு ராகிக்கு சக்தி ஜாஸ்தி`, என்னும் ராம் ரெட்டி, தனது புஜங்களை மடக்கிக் காட்டுகிறார். இளம் வயதில் நாட்டு ராகி சாப்பிட்டதே தனது ஆரோக்கியத்துக்குக் காரணம் என்பது அவரது நம்பிக்கை.

அவருக்கும், இந்த ஆண்டு மழை பெரும் துக்கத்தைக் கொடுத்து விட்டது. `கொடுமை`, என முனகுகிறார்.

மழையில் ஏற்பட்ட்ட நஷ்டத்துக்கு நஷ்ட ஈடு எதுவும் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லாதவராக இருக்கிறார். `லஞ்சம் கொடுக்காம நஷ்ட ஈடு கிடைக்காது. அதுக்கும் பட்டா நம்ம பேர்ல இருக்கணும்`, என்கிறார். பட்டா இல்லாமல், குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் நஷ்டத்துக்கு நஷ்ட ஈடு கிடைக்காது.

PHOTO • Aparna Karthikeyan
PHOTO • Aparna Karthikeyan

இடது: கொல்லப்பள்ளி ராகி உற்பத்தியாளர்கள் கிருஷ்ணா ரெட்டி, ராம் ரெட்டி (சிவப்புக் குல்லா). வலது: யானை சேதப்படுத்திய புகைப்படங்களுடன் ஆனந்தா

நஷ்ட ஈடு அவ்வளவு சுலபமல்ல என்கிறார் ஆனந்தா சோகமாக. அவரது தந்தையை, தந்தையின் சகோதரர் ஏமாற்றி விட்டார் என்கிறார். அதை ஒரு சிறு நாடகமாக நடத்திக் காண்பிக்கிறார்.  ஒரு திசையில் நான்கு அடி நடந்துவிட்டு, திரும்பி எதிர்த்திசையில் நான்கடி நடந்து விட்டு, இப்படி அளந்துதான் நிலத்தைப் பிரிச்சிக் குடுத்தாங்க. நாகண்ணா குடும்பத்தில் பெயரில் நான்கு ஏக்கர்தான் பத்திரப் படி நிலம் இருக்கிறது. ஆனால், அவர்கள் அதற்கும் அதிக நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.. ஆனால், அதற்கு சட்டப்படி உரிமை இல்லாததால், அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கோர முடியாது.

மீண்டும் ஆனந்தாவின் வீட்டு வெராண்டாவுக்கு வந்து அமர்கிறோம். எங்களுக்கு பல புகைப்படங்களையும், ஆவணங்களையும் காட்டுகிறார். யானை உருவாக்கிய சேதம், காட்டுப்பன்றி ஏற்படுத்திய சேதம், விழுந்த மரம், சிதைந்த பயிர் எனப் பல புகைப்படங்கள். ஒரு புகைப்படத்தில், உடைந்த பலா மரத்தின் முன்பு, நெடிய உருவமான நாகண்ணா சோகமாக நிற்கிறார்.

`எப்படி விவசாயத்தில் லாபம் சம்பாதிக்க முடியும்? ஒரு நல்ல வண்டி வாகனம் வாங்க முடியுமா? நல்ல துணிமணி? இதில் வருமானம் ரொம்ப குறைச்சல்.. நிலம் வச்சிருக்கற நான் சொல்றேன்`, என வாதிடுகிறார் நாகண்ணா. உள்ளெ சென்று முறையான ஆடைகள் அணிந்து வருகிறார். வெள்ளை வேட்டி. வெள்ளைச் சட்டை. தொப்பி, முகக்கவசம், கர்ச்சீஃப் என ஜம்மென்று தயாராகி வருகிறார். `கோயிலுக்குப் போலாம் வாங்க`, என எங்களை அழைக்கிறார். நாங்களும் மகிழ்ச்சியாக அவருடன் கிளம்புகிறோம்.  கோயில் திருவிழா, தேன்கனிக் கோட்டையில் நடக்கிறது. அவர் ஊரில் இருந்து அரைமணி நேரப் பயணம். தார் ரோடில்.

செல்ல வேண்டிய இடத்துக்கு மிகச் சரியாக வழி சொல்கிறார் நாகண்ணா.. போகும் வழியில், இந்தப் பகுதி எவ்வளவு மாறியிருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே வருகிறார்.  ரோசாப்பூ பயிர் செய்பவர்கள் பெருமளவில் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்கிறார். கிலோ 50 ரூபாய் முதல் 150 வரை விற்கிறது என்கிறார்.  ரோசாப்பூ பயிர் செய்யறதல என்ன நல்ல விஷயம்னா, அத யானை சாப்பிடறதில்ல என்பதுதான்.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது:  கோவில் திருவிழாவுக்காக தேன்கனிக்கோட்டை புறப்படும் நாகண்ணா. வலது: கோவில் திருவிழா ஊர்வலத்தை வழிநடத்தும் கோவில் யானை... இன்னொரு கோவிலில் இருந்தது வரவழைக்கப்பட்டது

கோயிலை நெருங்குகையில், சாலையில் மக்கள் நெரிசல் அதிகமாகிறது. பெரிய ஊர்வலம். அதன் முகப்பில் ஆச்சர்யமாக ஒரு யானை.  `நாம ஆனையப் பாப்போம்`, னு முன்பே நாகண்ணா சொல்லியிருந்தார். கோவில் ப்ரசாதாம் சாப்பிடலாம்னு சொல்லி, கோவில் சமையல் அறைக்கு அழைத்து சென்று, கிச்சிடியும், பஜ்ஜியும் வாங்கிக் கொடுத்தார். அற்புதமான ருசியுடன் இருந்தது. யானை அங்கே வந்து சேர்ந்தது. பழுத்த யானை என்றார் நாகண்ணா. காட்டில் இருந்து 30 நிமிட தூரத்தில், யானை இங்கே வணங்கப்படும் ஒன்று

ஆனந்தா தன் வெராண்டாவில் அமர்ந்து கொண்டு சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. `ஒன்னு ரெண்டு யானைகன்னா நாங்க சமாளிச்சிருவோம். இளம் வயது ஆண் யானைகள் வந்தாத்தான் பிரச்சினை.. வேலியை அசால்ட்டா தாண்டி உள்ளே வந்து நாசம் பண்ணிட்டுப் போயிரும்`.

ஆனந்தா அவற்றின் பசியையும் உணர்ந்து கொள்கிறார். `அரைக்கிலோ தானியத்துக்கு நாம அல்லாடறோம். பாவம் யானை என்ன பண்ணும்? அதுக்கு தினமும் 250 கிலோ வேணுமே?  ஒரு பலா மரத்தில வருஷம் 3000 கிடைக்கும். ஏதோ ஒரு வருஷம் யானை வந்து நாசம் பண்ணிட்டுப் போனா என்ன பண்றது? சாமி வந்துட்டுப் போச்சுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்`, எனச் சிரிக்கிறார். அந்தச் சிரிப்பில்தான் எத்தனை அர்த்தங்கள்?

ஆனாலும் ஆனந்தாவுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. `என்னிக்காவது ஒரு நாள் 30-40 மூட்டை ராகி மகசூல் எடுத்தறனும்.. செய்யனும் மேடம். நான் கட்டாயம் செய்வேன்`, என்கிறார்.

அதற்கு மொட்டை வால் கருணை புரிய வேண்டும்!

இந்த ஆய்வு, அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டு ஆய்வு நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.

அட்டைப் படம்: எம். பழனி குமார்

தமிழில் : பாலசுப்ரமணியம் முத்துசாமி

Aparna Karthikeyan

Aparna Karthikeyan is an independent journalist, author and Senior Fellow, PARI. Her non-fiction book 'Nine Rupees an Hour' documents the disappearing livelihoods of Tamil Nadu. She has written five books for children. Aparna lives in Chennai with her family and dogs.

Other stories by Aparna Karthikeyan
Photographs : M. Palani Kumar

M. Palani Kumar is Staff Photographer at People's Archive of Rural India. He is interested in documenting the lives of working-class women and marginalised people. Palani has received the Amplify grant in 2021, and Samyak Drishti and Photo South Asia Grant in 2020. He received the first Dayanita Singh-PARI Documentary Photography Award in 2022. Palani was also the cinematographer of ‘Kakoos' (Toilet), a Tamil-language documentary exposing the practice of manual scavenging in Tamil Nadu.

Other stories by M. Palani Kumar
Translator : Balasubramaniam Muthusamy

The son of a small farmer, Balasubramaniam Muthusamy studied agriculture and rural management at IRMA. He has over three decades of experience in food processing and FMCG businesses, and he was CEO and director of a consumer products organisation in Tanzania.

Other stories by Balasubramaniam Muthusamy