மே 5ம் தேதி காலை கோவிட் நோய்க்கான முதல் தடுப்பூசி போட கிளம்பினார் மகேந்திர ஃபுடானே. 12 நாட்களுக்கு பிறகு அவர் திரும்பினார். “உற்சாகமான நாளாக இருந்திருக்க வேண்டும்,” என்கிறார் அவர். “ஆனால் ஒரு கொடும் கனவாக அது மாறிவிட்டது.”

தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக காவல்துறை அவரை சிறையில் அடைத்துவிட்டது.

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் இருக்கும் நெக்னூர் கிராமத்தை சேர்ந்த 43 வயது மகேந்திரா தொடர் முயற்சிகளால் ஒருவழியாக தடுப்பூசிக்கான நேரத்தை பதிவு செய்துவிட்டார். “மே 5ம் தேதி காலை 9லிருந்து 11 மணி வரையிலான தடுப்பூசிக்கான என் நேரத்தை உறுதிபடுத்தி குறுந்தகவலும் வந்தது,” என்கிறார் அவர். அவருக்கும் 45 வயதுக்கும் குறைந்த குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் பதிவு செய்திருந்தார். “முதல் தடுப்பூசி பெற நாங்கள் விரும்பினோம். கோவிட்டின் இரண்டாம் அலை கொடூரமாக இருந்தது,” என்கிறார் மகேந்திரா.

நெக்னூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீட் நகரத்தை குடும்பம் அடைந்ததும் அவர்களின் நம்பிக்கை நொறுக்கப்பட்டது. 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடுதல் தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்தது. “காவலர்கள் இருந்தனர்,” என்கிறார் மகேந்திரா. “எங்களுக்கு வந்த குறுந்தகவலை அவர்களிடம் காட்டினோம். ஆனால் அவர்கள் கடுமையாக எதிர்கொண்டனர்.”

வரிசையில் காத்திருந்தவர்களுக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது லத்தி அடியில் முடிந்து, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மகேந்திரா, அவரது மகன் பார்த், சகோதரர் நிதின் மற்றும் உறவினர் விவேக் ஆகியோர் அந்த ஆறு பேரில் அடக்கம்.

மையத்தில் இருந்த கான்ஸ்டபிள் அனுராதா கவ்ஹானேவால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அந்த ஆறு பேரும் வரிசையை இடையூறு செய்ததாகவும் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் கொச்சையாக கான்ஸ்டபிள்களை பேசி அடித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டத்துக்கு விரோதமாக கூடுதல், கலவரம் செய்தல், அரசு ஊழியருக்கு துன்பம் கொடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

Mahendra Phutane was given an appointment for getting vaccinated, but he couldn't get the first dose because of a shortage of vaccines
PHOTO • Parth M.N.

தடுப்பூசி போடுவதற்கான நேரம் மகேந்திரா ஃபுடானேவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடால் அவர் போட முடியவில்லை

மகேந்திரா குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார். “வாக்குவாதம் நடந்தது. ஆனால் காவலர்கள்தான் முதலில் தாக்க ஆரம்பித்தனர். காவல் நிலையத்திலும் அவர்கள் எங்களை அடித்தார்கள்,” என்கிறார் அவர். மனச்சிதைவு நோய் கொண்டு 39 வயது நிதினை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்கிறார். “அவர்கள் அவரையும் அடித்தனர். அந்த சம்பவம் நடந்ததிலிருந்து அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார். அவரை நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிறையில் இருக்கும்போதே தன் மணிக்கட்டை அறுத்துக் கொள்ள அவர் முயன்றார்.”

பிணையில் வெளியே வந்த பிறகு மே 17ம் தேதி காயங்களின் புகைப்படங்களை காட்டினார் மகேந்திரா. கறுப்பு மற்றும் நீல நிற கோடுகள் மே 5ம் தேதி நடந்த தடியடியில் நேர்ந்தை என்கிறார். “தேவையே இல்லாத பிரச்சினை இவை,” என்கிறார் அவர். “தடுப்பூசி இல்லையென்றால் அவர்கள் ஏன் எங்களுக்காக திறந்து வைக்க வேண்டும்?”

பல கட்டங்களாக நடத்துவதென ஜனவரி 16, 2021 அன்று தொடங்கப்பட்ட கோவிட் தடுப்பூசி போடும் பணி தடுப்பூசி தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்களும் முன்களப் பணியாளர்களும்தான் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மார்ச் 1ம் தேதியிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடலாம் என்ற நிலை வந்தது. ஆனால் பிரச்சினை, 45-59 வயதில் இருந்தோருக்கும் தடுப்பூசி போடும் அனுமதி கிடைத்த ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கியது. தடுப்பூசி எண்ணிக்கையில் போதாமை ஏற்பட்டது.

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு ஒன்றிய அரசின் சமமற்ற விநியோகமே காரணமென குற்றம் சாட்டிய மகாராஷ்டிராவின் சுகாதார அமைச்சர், ராஜேஷ் டோபே, இந்திய பத்திரிகை அறக்கட்டளையிடம் பேசுகையில், “மகாராஷ்டிராவுக்கு வியாழக்கிழமை வரை (ஏப்ரல் 8) 7.5 லட்சம் தடுப்பூசிகள்தான் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு 48 லட்சமும் மத்தியப் பிரதேசத்துக்கு 40 லட்சமும் குஜராத்துக்கு 30 லட்சமும் ஹரியானாவுக்கு 24 லட்சமும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.” மகாராஷ்டிராவில்தான் அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் இருந்தன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் போட்ட மாநிலமும் அதுதான்.

ஏப்ரல், மே வரை தடுப்பூசி தட்டுப்பாடு மாநிலத்தில் நிலவியது. 18-44 வயதினர் தடுப்பூசி போடுவதற்கான அனுமதி கொடுக்கப்பட்ட சில தினங்களில் (மே 1லிருந்து) நிறுத்தப்பட்டது. இருக்கும் தடுப்பூசிகளை வயதானவர்களுக்கு தொடர்ந்து போடுவதென மாநில அரசு முடிவெடுத்தது.

மாநிலத்தின் உட்பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசி போடும் பணி மந்தமாக இருந்தது.

மே 31ம் தேதி வரை, பீட் மாவட்டத்தின் 2.94 லட்சம் மக்களில் வெறும் 14.4 சதவிகித மக்கள் மட்டுமே முதல் தடுப்பூசி போட்டிருந்தனர். 4.5 சதவிகித பேர் மட்டுமே இரு தடுப்பூசிகளும் போட்டிருந்தனர்

எல்லா வயதினரையும் சேர்த்து 20.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்திருப்பதாக மாவட்ட தடுப்பு மருந்து அலுவலரான சஞ்சய் கடாம் சொல்கிறார். மே 31ம் தேதி வரை, பீட் மாவட்டத்தின் 2.94 லட்சம் மக்களில் வெறும் 14.4 சதவிகித மக்கள் மட்டுமே முதல் தடுப்பூசி போட்டிருந்தனர். 4.5 சதவிகித பேர் மட்டுமே இரு தடுப்பூசிகளும் போட்டிருந்தனர்.

45 வயதுக்கு மேலுள்ளோரின் எண்ணிக்கையான 91 லட்சத்தில் 25.7 சதவிகிதம் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. வெறும் 7 சதவிகிதம் பேருக்குதான் இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கிறது. 18-44 வயதினரின் எண்ணிக்கையான 11 லட்சம் பேரில் வெறும் 11,700 பேருக்குதான் - ஒரு சதவிகித அளவு - மே 31 வரையான காலத்தில் முதல் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் என இரண்டு தடுப்பூசிகளும் மகாராஷ்டிராவில் போடப்பட்டாலும், அதிகமாக கோவிஷீல்ட் தடுப்பூசிகள்தான் போடப்படுகின்றன. பீட மாவட்டத்தின் அரசு தடுப்பூசி மையங்களுக்கு மாநில ஒதுக்கீடிலிருந்து தடுப்பூசிகள் வருகின்றன. பயனாளர்களுக்கு அவை இலவசமாக போடப்படுகின்றன.

ஆனால் 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மும்பையின் தனியார் மருத்துவமனைகள், 800லிருந்து 1500 ரூபாய் வரை ஒரு தடுப்பூசிக்கு கட்டணம் விதிக்கின்றன.  பணக்காரர்களும் மத்திய தர வர்க்கத்தினரும் அக்கட்டணத்தை செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். கோவிஷீல்ட் தடுப்பூசி கொள்முதல் விலையைக் காட்டிலும் 16-66 சதவிகிதம் அதிகமாகவும் கோவேக்சின் தடுப்பூசிக்கு 4 சதவிகிதம் அதிகமாகவும் அவர்கள் கட்டணம் செலுத்துகின்றனர் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிழதின் செய்தி .

நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவனைகள் வாங்க அனுமதிப்பது ஒன்றிய அரசின் புதிய தேசிய தடுப்புமருந்து உத்தி யின் ஒரு பகுதி. தனியாரால் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகள் பிரதானமாக 18-44 வயதினருக்கு பயன்படுத்தப்படுகிறது.

At first, Prasad Sarvadnya was hesitant to get vaccinated. He changed his mind when cases of Covid-19 started increasing in Beed
PHOTO • Parth M.N.

முதலில் பிரசாத் சர்வாத்ன்யாவுக்கு தடுப்பூசி போடுவதில் தயக்கம் இருந்தது. கோவிட் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை பீடில் அதிகரித்ததும் அவர் மனதை மாற்றிக் கொண்டார்

ஒன்றிய அரசின் தடுப்பு மருந்து உத்தியை கடுமையாக விமர்சித்தது உச்சநீதிமன்றம். மாநிலங்களுக்கும் தனியாரை போலவே 25 சதவிகித மருந்துகளை மட்டும் ஒதுக்கீடு செய்வது ஏற்றத்தாழ்வான விநியோகத்துக்கு வழிவகுக்கும் என்றும் சமூக யதாரத்தங்களுக்கு ஏற்ப அது இல்லை என்றும் ஜூன் 2ம் தேதி உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது . அதிக மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளிடமே இருக்கும் நிலையில், தனியாருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு குறைக்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியது.

நகர்ப்புறத்துக்கும் கிராமப்புறக்கும் இடையே இருக்கும் இணைய பயன்பாட்டு வேறுபாட்டினால் 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணியில் சமமற்ற தன்மை நிலவுகிறது. தடுப்பூசி போடுவதற்கான நேரத்தை அவர்கள் இணையதளம் வழியாகவே பதிவு செய்ய முடியும். “நாட்டின் கணிசமான மக்கள்தொகையை கொண்டிருக்கும் 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி இணையதளத்தை சார்ந்து மட்டுமே இயங்க வகை செய்யும் ஒரு தடுப்பூசி கொள்கை அனைவருக்கும் தடுப்பூசி என்கிற இலக்கை அடைய முடியாது,” என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 2017-18ம் ஆண்டு தரவு ப்படி, மகாராஷ்டிராவின் கிராமப்புற வீடுகளில் வெறும் 18.5 சதவிகிதத்தில் மட்டுமே இணைய வசதி இருக்கிறது. கிராமப்புற மகாராஷ்டிராவில் வசிப்பவர்களில் 6 பேரில் ஒருவருக்குதான் இணையத்தை பயன்படுத்தும் திறன் இருக்கிறது. பெண்களில் அது 11 பேரில் ஒருவர் என்பதாக இருக்கிறது.

இந்த போக்கில் சென்றால், தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் பணக்காரர்களும் நகர்ப்புற உயர் மத்தியதர வர்க்கத்தினரும் மட்டும்தான் மூன்றாம் அலையில் பாதுகாப்பாக இருக்க முடியும். “பீட் போன்ற இடங்களில் இருக்கும் மக்கள் தொற்றுநோய் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் கொண்டிருப்பார்கள்,” என்கிறார் ஒஸ்மனாபாத் மாவட்ட மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கும் டாக்டர் ராஜ்குமார் கலாண்டே.

தடுப்பூசி போடும் பணி வேகம் பெறவில்லையெனில் பலருக்கு ஆபத்து நேரும் என நம்புகிறார் கலாண்டே. “கிராமப்புறங்களில் இன்னும் அதிக பாதிப்பு ஏற்படலாம். ஏனெனில் நகர்ப்புறத்தில் இருக்கும் அளவுக்கான சுகாதார கட்டமைப்பு அங்கு இருப்பதில்லை,” என்கிறார் அவர். “கோவிட் 19 தொற்று பரவாமல் இருக்க வேண்டுமானால், கிராமங்கள் முழுவதிலும் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும்.”

Sangeeta Kale, a 55-year-old farmer in Neknoor village, hasn't taken the vaccine because she's afraid of falling ill afterwards
PHOTO • Parth M.N.

55 வயது விவசாயியான சங்கீதா கலே, தடுப்பூசி போட்டபிறகு ஏற்படக் கூடிய பாதிப்புக்கு அஞ்சி தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை

அரச மட்டத்தில் அவசர நிலை தென்படவில்லை என்றாலும் பீட் மாவட்ட மக்களின் மத்தியில் தென்படுகிறது. “மக்களுக்கு முதலில் தயக்கௌம் அவநம்பிக்கையும் இருந்தது. நானும் அப்படிதான் இருந்தேன்,” என்கிறார் 48 வயது பிரசாத் சர்வாத்ன்யா. நெக்னூரில் 18 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி. “கோவிட் தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சலும் உடல்வலியும் இருக்குமென நீங்கள் கேள்விப்படும்போது தடுப்பூசி போட்டபிறகும் காய்ச்சல் வரும் என்பதை புரிந்துகொள்வீர்கள். அதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்,” என்கிறார் அவர்.

ஆனால் மார்ச் மாத இறுதியில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் மக்களுக்கு பயம் வந்துவிட்டது என்கிறார் பிரசாத். “இப்போது எல்லோரும் தடுப்பூசி போட விரும்புகிறார்கள்.”

மார்ச் மாத பிற்பகுதியில், ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த தடுப்பூசி மையத்துக்கு சென்றபோது, தடுப்பூசி போட ஆர்வத்துடன் காத்திருந்த கூட்டத்தை கண்டார் பிரசாத். தனி நபர் இடைவெளி எங்கும் இல்லை. “இணைய பதிவுமுறையை யாரும் இங்கு பயன்படுத்துவதில்லை. ஸ்மார்ட்ஃபோன்கள் வைத்திருப்போருக்கு கூட பதிவு செய்வது கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் அவர். “ஆதார் அட்டைகளுடன் நாங்கள் மையத்துக்கு சென்று நேரத்தை பதிவு செய்து கொள்கிறோம்.”

சில மணி நேரங்கள் காத்திருந்து முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரசாத். மையத்தில் அவருடன் இருந்த சிலருக்கு கோவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்ட தகவல் அவருக்கு தெரிய வந்தது. “அத்தகவல் எனக்கு கவலை அளித்தது,” என்கிறார் அவர். “எனக்கு காய்ச்சல் இருந்தது. ஆனால் தடுப்பூசியும் அதற்கு காரணமாக இருக்கலாம். மூன்று நாட்களாகியும் சரியாகாததால், நான் பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று உறுதியானது. நல்லவேளையாக எந்த பிரச்சினையுமின்றி குணமானேன்.” மே 2ம் வாரத்தில் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக் கொண்டார்.

பீட்டின் தடுப்பூசி மையங்கள் தற்போது டோக்கன்கள் கொடுக்கின்றன. ஒரு நாளுக்கு 100 டோக்கன்கள். கூட்டத்தை தவிர்ப்பதற்கான வழி. ஆனாலும் அது பயன்படவில்லை என்கிறார் 55 வயது சங்கீதா கலே. நெக்னூரின் ஐந்து ஏக்கர் நிலத்தில் சோயாபீன்ஸ் விளைவிக்கும் விவசாயி அவர். “ஆரம்பத்தில், தடுப்பூசிக்காக கூட்டம் சேர்ந்தது. தற்போது டோக்கன்களுக்காக சேர்கிறது,” என்கிறார் அவர். “டோக்கன்கள் கொடுக்கப்பட்ட பிறகு மக்கள் கலைந்துவிடுவார்கள். அவ்வளவுதான். மொத்த நாளும் கூட்டம் இருப்பதற்கு பதிலாக காலையில் சில மணி நேரங்களுக்கு மட்டும் இருக்கும்.”

சங்கீதா இன்னும் முதல் தடுப்பூசி போடவில்லை. காரணம், பயம். அதிகாலை 6 மணிக்கே டோக்கன் வாங்க அவர் மையத்துக்கு செல்ல வேண்டும். “நிறைய பேர் காலையில் வரிசையில் நிற்பார்கள். பயமாக இருக்கிறது. நான் இன்னும் தடுப்பூசி போடவில்லை. ஏனெனில் போட்டபிறகு காய்ச்சல் வருமென பயமாக இருக்கிறது.”

PHOTO • Parth M.N.

இரண்டாம் தடுப்பூசிக்கு காத்திருக்கும் ருக்மிணி ஷிண்டே கோவிட் 19 தடுப்பூசிகளின் மேல் அண்டை வீட்டார் கொண்டிருக்கும் அச்சத்தை போக்குகிறார்

”ஒன்றும் நடக்காது,” என சங்கீதாவிடம் சொல்கிறார் அவரின் அண்டை வீட்டுக்காரரான ருக்மிணி ஷிண்டே. “கொஞ்சம் உடல் வலிக்கலாம். அவ்வளவுதான். எனக்கு அது கூட வரவில்லை.”

ருக்மிணிக்கு வயது 94. “100 போட இன்னும் ஆறு வருடங்கள்தான்” என்றார் அவரின் வயதென்ன என நான் கேட்டதற்கு பதிலாக. ஏப்ரல் மாதத்துக்கு நடுவே அவரின் முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். “இரண்டாம் ஊசிக்காக காத்திருக்கிறேன். இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்து விட்டார்கள்,” என்கிறார் அவர்.

கோவிஷீல்ட்டின் இரண்டாம் தடுப்பூசிக்கான காலம் மே மாத இரண்டாம் வாரத்தில் நீட்டிக்கப்பட்டது. 6-8 வாரங்களிலிருந்த இடைவெளி 12-16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. இடைவெளி அதிகரிக்கப்படுகையில் தடுப்பூசியின் வீரியம் நன்றாக இருப்பதாக வந்த ஆய்வுகளை அடுத்து ஒன்றிய அரசு அத்தகைய முடிவை எடுத்தது. தடுப்பூசி உற்பத்தி செய்யவும் அரசுகள் கொள்முதல் செய்யவும் ஆகும் நேரமும் இதனால் அதிகமாகி இருக்கிறது.

தடுப்பூசி போடும் பணி இன்னும் வேகமாக நடத்தப்பட வேண்டும்.

பீட் மாவட்டத்தில் 350 தடுப்பூசி மையங்கள் இருக்கின்றன. ஒருநாளில் தடுப்பூசி மையத்தில் இருக்கும் செவிலியர் 300 பேருக்கு தடுப்பூசி போட முடியும் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட அலுவலர் ஒருவர். “ஒரு துணை செவிலியரை ஒவ்வொரு மையத்திலும் நியமித்தால், 1.05 லட்சம் பேருக்கு ஒரு நாளில் தடுப்பூசி போட முடியும்,” என்கிறார் அவர். “ஆனால் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் இல்லாததால், ஒரு நாளுக்கு 10000 என்கிற அளவில் தடுப்பூசிகள் போடுகிறோம்.”

“இந்த வேகத்தில் போனால், மாவட்ட மக்கள்தொகைக்கு தடுப்பூசி போடவே ஒரு வருடம் ஆகிவிடும்,” என்கிறார் அலுவர். “மூன்றாம் அலை இன்னும் சில மாதங்களில் வந்துவிடும்.”

பின்குறிப்பு: ஜூன் 7ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் தேசிய தடுப்பூசி கொள்கையில் மாற்றங்களை அறிவித்தார். ஒன்றிய அரசு மாநில தடுப்பூசி ஒதுக்கீடையும் எடுத்துக் கொண்டு, நாட்டில் தயாரிக்கப்படும் 75 சதவிகித தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளும். தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவிகித தடுப்பூசிகள் தொடர்ந்து வழங்கப்படும். மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசிடமிருந்துதான் தடுப்பூசிகள் வழங்கப்படும். எனினும் தற்போதைய விநியோக முறை நீடிக்குமா என்பதை பற்றி பிரதமர் தெளிவுபடுத்தவில்லை. 18 வயதுக்கு மேலானவர்கள் அனைவருக்கும் அரசு மையங்களில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியின் விலையை காட்டிலும் 150 ரூபாய் வரை அதிகம் வைத்து விலை வசூலித்துக் கொள்ளலாம். புதிய தடுப்பூசி திட்டம் ஜூன் 21ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருமென குறிப்பிட்டார் பிரதமர். “கோவின் இணையதளம் பாராட்டப்படுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan