தரையிலிருந்து 25 அடி உயரத்தில் இருக்கும் சாரத்தின் மீது அமர்ந்திருக்கும் சங்கீதா குமாரி சாகுவின் வலதுகை மெதுவாகவும் சீராகவும் நகர்கிறது, பல ஆண்டுகளாய் புறக்கணிக்கப்பட்ட மற்றும் தவறான மறுசீரமைப்பு பணிகளால் பொழிவிழந்ததை  சீரமைக்கிறார். "நான் சாதாரண தொழிலாளி அல்ல, நான் ஒரு கலைஞன்", என்று அவர் அறிவிக்கிறார், இந்த எழுத்தாளர் அவரை தூசியில் இருந்து பாதுகாக்க தனது துப்பட்டாவினால் முகக்கவசம் அணிந்திருந்ததை கழட்டச் சொல்லிய கட்டாய இடைவேளையின் போது அவர் அவ்வாறு கூறினார்.

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்திலுள்ள பேமேதரா வட்டத்திலுள்ள பஹீரா என்ற அவரது கிராமத்தில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில், 19 வயதாகும் சங்கீதா மற்றும் 45 வயதாகும் அவரது தாய் நீரா ஆகியோர் இந்த சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிமெண்ட் மற்றும் பெயிண்ட் அடுக்குகளில் செயற்கை முடியினாலான ஆறு அங்குல தூரிகையினை வைத்து அவர்கள் மென்மையாகத் துடைக்கின்றனர். வேலை எவ்வளவு நுட்பமானது என்பதைப் பொறுத்து, வெவ்வேறு அளவுள்ள தூரிகைகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர், அது 0.7 அங்குலம் முதல் 4 அங்குலம் வரைக்கும் வேறுபடுகிறது. லக்னோவில் மிகப் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான கான்ஸ்டன்டியாவின் அசல் கட்டிடக்கலை விபரங்களை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ராணுவத்தின் மேஜர் ஜெனரல் கிளாட் மார்ட்டின் என்பவரால் கட்டப்பட்ட அரண்மனை இது, தற்போது ஆண்களுக்கான லா மாட்டீனியர் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

சங்கீதாவின் உயர்ந்த திறமைகள் உடல் அசௌகரியத்தால் வேலையினை  சிறிதும் குறைக்காது. 'பெரும்பாலான நாட்களில் நான் ஒரு பேய் போல இருக்கிறேன்' என்று அவர் தனது ஆடைகளில் படியும் தூசியை குறிப்பிட்டுக் கூறுகிறார்

காணொளியில் காண்க: லக்னோவின் புகழ்பெற்ற சுவர்களை தூசிதட்டியபடியே சங்கீதா சத்தீஸ்கரின் பிலாஸ்பூரி மொழியில் பாடுகிறார்

மறுசீரமைப்பின் முதல் மற்றும் இன்றியமையாத படி தூசி தட்டுவதாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை வழிநடத்தி வரும் 50 வயதாகும் அசாருதீன் அமான் இதை ஒரு 'நுட்பமான வேலை' என்று விவரிக்கிறார். "கவனமாக தூசியை தட்டாமல் மறுசீரமைப்பு சாத்தியமில்லை", என்று பலகை ஓவியராக தனது பணியை தொடங்கியவரும் தனது குறிப்பிடத்தக்க பாணிக்காக 2016 ஆம் ஆண்டு பிரஞ்சு அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டவருமான இவர் கூறுகிறார்.

கான்ஸ்டன்டியா என்பது பிரெஞ்சு பரோக் பாணியில் கட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும், அதன் சுவர்கள் மற்றும் கூரைகள் முழுவதும் உருவங்கள் மற்றும் ஓவியங்கள் மயமாக காட்சியளிக்கிறது. இருப்பினும், தாய்-மகள் குழுவிற்கு அவர்களின் வேலையின் முடிவு, "பூக்கள், இலைகள் மற்றும் முகங்களை" அதிகமாக வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் வெளிக்கொணரும் அசல் அவர்களை மூச்சுத்திணற செய்கிறது. "புதியதாகப் பிறந்த குழந்தையின் முதல் முறையாக பார்ப்பது போல அது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது", என்று சங்கீதா புன்னகைக்கிறார். மேலும் சில நேரங்களில் ஏமாற்றமும் ஏற்படும். "முகம் இல்லாத ஒரு உருவம் இருப்பது போல, அது எப்படி இருந்திருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன்", என்று அவருக்கு இழப்பு ஏற்பட்டது போன்ற மெதுவான குரலில் கூறுகிறார்.

PHOTO • Puja Awasthi
PHOTO • Puja Awasthi

சங்கீதாவை பொருத்தவரை கான்ஸ்டன்டியாவை தூசி தட்டுவது 'பூக்கள், இலைகள் மற்றும் முகங்களை' வெளிப்படுத்துகிறது, நிஜ வாழ்க்கையில் அவர் சந்திக்கும் எந்த அமைப்பையும் போலல்லாமல் அது இருக்கிறது

கான்ஸ்டன்டியா என்பது நிஜ வாழ்க்கையில் அவர்கள் இருவரும் வசிக்கும் அல்லது சென்றிருக்கும் எந்த ஒரு இடத்திலும் இல்லாத ஒரு அமைப்பாகும். சங்கீதா தனது பெற்றோர், மூத்த சகோதரர் ஷ்யாமு மற்றும் தங்கை ஆர்த்தி ஆகியோருடன் வசித்து வருகிறார். உயர்தர லக்னோ சுற்றுப்புறத்தில் அது அமைந்திருந்தாலும், இக்குடும்பத்தினர் வசிக்கும் ஒற்றை அறை ஒரு சால் போன்ற அமைப்பில் உள்ளது மற்றும் அது வெறும் 6 க்கு 8 அடி அளவில் தான் இருக்கிறது. அறையின் சுவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன மற்றும் இரண்டு பக்கங்களில் இந்து கடவுளின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. பிரகாசமான கடவுள் படங்களுக்கு கீழே விதவிதமான ஆடைகள் தொங்கவிடப்பட்டிருக்கிறது. சுவரின் மூலையில் ஒரு பலகையில் தகர பெட்டிகள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீட்டு சாமானங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழே ஒரு தொலைக்காட்சி பெட்டி உள்ளது, அதில் சங்கீதா "குடும்ப நாடகங்கள் மற்றும் காதல் கதைகள்" என்று விவரிப்பவற்றை பார்க்கிறார். மரச்சாமான் என்று இருப்பது ஒரே ஒரு கட்டில் மட்டுமே மற்றொன்று நைலானால் செய்யப்பட்ட மடக்கக்கூடிய கட்டில் அது சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அறையின் அளவிற்கு வெளியில் திறந்தவெளி இடமிருக்கிறது, அது சமையல் மற்றும் தூங்குவதற்கான கூடுதல் இடமாக செயல்படுகிறது.

கிட்டத்தட்ட 20,000 சதுர அடி பரப்பளவில் உள்ள மைதானத்தில் அந்த அறை (இதேபோல அறைகள் மாதம் ஒன்றுக்கு 600 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது) என்றாலும் வீட்டு உரிமையாளர் (ஒரு ஆசிரியர்) தனது இடத்தில் சுற்றி திரிந்த குத்தகைதாரர்களைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.

மேலும் சங்கீதாவிற்கு 8:15 மணிக்கு தனது பணியிடத்திற்கு செல்வதற்கு 15 நிமிடங்கள் சைக்கிளில் (அவரது அம்மாவை பின்னாளில் அமர்த்திக்கொண்டு) சென்று மாலை 5:30 மணிக்கு அங்கிருந்து வீட்டிற்கு செல்வதை தவிர வேறு எங்கும் இறங்கும் தைரியம் இல்லை. "லக்னோ பாதுகாப்பான இடம் இல்லை, என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது பெண்களுக்கு நல்லதல்ல", என்று அவர் கூறுகிறார். பஹேராவில் தனது தோழிகளுடன் வயல்வெளிகளிலும், கிராமம் முழுவதும் ரகசியங்களையும் புன்னநகைகளையும் பகிர்ந்து கொண்டு நடந்து செல்வார் அவர்.

PHOTO • Puja Awasthi
PHOTO • Puja Awasthi

இடது : சங்கீதா அவரது தாய் நீரா மற்றும் அவரது இளைய சகோதரி ஆர்த்தி. வலது: சங்கீதா வேலைக்குச் செல்லும்போது மட்டும் தன் சைக்கிளை பயன்படுத்துகிறார்

பஹேராவில் புலம்பெயர்வு அதிகமாக உள்ளது மேலும் பலர் கட்டுமான தளங்களில் வேலைக்குச் செல்கின்றனர். இக்குடும்பத்திற்கு அங்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான - ஒரு சிறிய விவசாய நிலம் உள்ளது. "நாங்கள் மற்றவர்களின் நிலத்தில் வேலை செய்யும் போது நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் தான் கிடைக்கும்", என்கிறார் நீரா. நிலம் குத்தகைக்கு விடப்படும், குத்தகைதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 - 20 சாக்கு நெல் அல்லது கோதுமையை உரிமையாளர்களுக்கு வழங்குகின்றனர் அது எவ்வளவு நன்றாக விளைந்திருக்கிறது என்பதைப் பொருத்தது. லக்னோவில் கிட்டத்தட்ட 4 வருட உழைப்பு அவர்களின் கிராமத்தில் மூன்று கான்கிரீட் அறைகளை கட்டுவதற்கான பணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. அடுத்து ஒரு கழிப்பறையை கட்டி, அனைத்து சுவர்களையும் பூச வேண்டியிருக்கிறது.

தினமும் ஏழரை மணி நேரம் அவர்கள் செய்யும் முக்கியமான வேலைக்காக சங்கீதா மற்றும் நீராவுக்கு தலா 350 ரூபாய் - கூலித் தொழிலாளர்களுக்கு சமமான சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை நாட்கள் கிடையாது, அவர்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டால் அதற்கு ஊதியம் கிடைக்காது. சங்கீதாவின் தந்தை சாலிகிராம் அதே இடத்தில் கொத்தனாராக பணிபுரிந்து 550 ரூபாய் சம்பாதிக்கிறார். ஷ்யாமு தொழிலாளிக்கும் கொத்தனாருக்கும் இடையில் ஏதோ ஒரு வேலை செய்து 400 ரூபாய் சம்பாதிக்கிறார். இளைய சகோதரி ஆர்த்தி அவர்களது வீட்டு உரிமையாளரிடம் சமையல் வேலை செய்து மாதம் 600 ரூபாய் சம்பாதித்து வருகிறார். இக்குடும்பத்தின் ஐந்து பேரின் சம்பளத்தையும் வைத்து மாதமொன்றுக்கு சுமார் 10,000 ரூபாய் சேமிப்பதாக் கூறுகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான கட்டுமான தளங்களில் பெண்கள் 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கலவையை முதுகு மற்றும் தலையில் சுமந்து கொண்டு கூலி வேலை செய்து வருகின்றனர். சங்கீதாவின் மூத்த சகோதரி சந்தோஷி விதிவிலக்காக இருந்தார். அவரது பொறுமையும், கூர்மையான கண்களும் அன்சாருதீனை அவரை ஒரு மறுசீரமைப்பவராக பயிற்றுவிக்கத் தூண்டியது. "அவர் கிட்டத்தட்ட 70% கொத்தனார், ஆனால் பிறகு அவர் திருமணமாகி சென்றுவிட்டார்", என்று அவர் கூறுகிறார். சந்தோஷி இப்போது புனேவில் தனது கணவருடன் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார், அவர் ஒரு கொத்தனாராக மாறவில்லை.

அன்சாருதீன், சந்தோஷின் இழப்பை சமாளிக்க சாலிகிராமமை மறுசீரமைப்பவராக பயிற்சி பெறச் செய்தார். "அதன் மூலம் அவர் மறுசீரமைப்பு தளங்களில் வேலை தேடும்போது, சங்கீதாவின் திறமைகள் சிறப்பாக பயன்படுத்தப்படும்". தனது 20 வருட வேலையில் இவரைப்போன்ற இயற்கையாகவே திறமைவாய்ந்த எவரையும் அவர் சந்திக்கவில்லை என்றும் அவர் நம்புகிறார். ஆனால் சாலிகிராம் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை, அதனால் சங்கீதாவின் எதிர்காலம்,

சங்கீதாவின் உயர்ந்த திறமைகள் உடல் அசௌகரியத்தால்  வேலையினை சிறிதும் குறைக்காது. "என் கண்களும், தோள்களும் வலிக்கின்றன. பெரும்பாலான நாட்களில் நான் ஒரு பேய் போல் காட்சி அளிக்கிறேன்", என்று அவர் தனது ஆடையில் படிந்திருக்கும் பெயிண்ட் மற்றும் சிமெண்ட் தூசியை குறிப்பிட்டுக் கூறுகிறார். அவருடைய நாள் காலை 6 மணிக்கு துவங்குகிறது அவருடைய முதல் பணி அவரது வீட்டிற்கு 20 அடி தொலைவிலிருக்கும் அடி பம்பிலிருந்து 15 - 20 வாளிகள் தண்ணீரை எடுத்து வருவதாகும். பிறகு அவர் துணி துவைத்து விட்டு குளிக்கிறார், ஆர்த்தி காலை மற்றும் மதிய உணவை சமைக்கிறார். வேலைக்கு பிறகு மீண்டும் அவர் 4 - 5 வாளி தண்ணீர் எடுத்து இரவு உணவு சமைக்க பயன்படுத்துகிறார் - நூடுல்ஸ், கோழி மற்றும் மீன் ஆகியவை அவருக்கு பிடித்தமான உணவு வகைகள். குடும்பத்தில் உள்ள ஆண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே செல்கின்றனர் அல்லது ஓய்வெடுக்கின்றனர். ஷ்யாமு ஒரு முறை உணவு தயாரிப்பவரிடம் வேலை பார்த்திருக்கிறார், மேலும் சில நேரங்களில் அவர் ஏதாவது ஒரு உணவை சமைக்கிறார். ஆனால் அது பெரும்பாலும் "அவருக்கு மட்டுமாகத்தான் இருக்கும்", என்று சங்கீதா கூறுகிறார். இச்சகோதரிகள் அதை கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.

PHOTO • Puja Awasthi
PHOTO • Puja Awasthi

அவர்கள் செய்யும் முக்கியமான வேலைக்காக சங்கீதா மற்றும் அவரது தாய் நீராவுக்கு தலா 350 ரூபாய் நாளொன்றுக்கு கிடைக்கிறது

அவரது வேலையின் தன்மை அவரது சில மனத் தடைகளை உடைத்திருந்தாலும், மனதளவில் சங்கீதாவின் முன்னுரிமை திருமணமாகவே இருக்கிறது. "இந்த அலுப்பான வேலையை என்னால் கை விட முடிந்தால், நான் பயணம் செய்து எனக்கு பிடித்த உணவை சாப்பிடுவேன்", என்று அவர் கூறுகிறார். நீரா மறுப்புடன் அவரை பார்க்கிறார். "அவளுக்கு பெரிய ஆசைகள் இருக்கிறது. அவள் யதார்த்தத்துடன் அதிகம் இணைந்திருக்க வேண்டும்", என்று அவர் கூறுகிறார்.

கலங்காமல், சங்கீதா தனது திருமண ஆடைக்கு தேவையானவற்றை மனதளவில் குறித்து வைத்துக் கொள்கிறார். ("ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், வரதட்சணை கட்டாயம்", என்று அவர் கிசுகிசுத்தார்). மேலும் ஒரு தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, ஒரு இரும்பு பீரோ மற்றும் ஒரு சலவை இயந்திரம் ஆகியவை அவரது பட்டியலில் இருக்கிறது. "ஓ, ஆமாம், பிரகாசமான அழகான வண்ணங்களில் ஆடைகள் மற்றும் வெள்ளி கொலுசுகள் ஆகியவையும்", என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.

தமிழில்: சோனியா போஸ்

Puja Awasthi

Puja Awasthi is a freelance print and online journalist, and an aspiring photographer based in Lucknow. She loves yoga, travelling and all things handmade.

Other stories by Puja Awasthi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose