“இது வெறும் மேளம் கிடையாது“ என்று, ஒரு மேளத்தைக்காட்டி சவிதா தாஸ் கூறுகிறார்.

அவர்களுக்கு எதிரே உள்ள குறைவான தெரிவுகளை மறுத்து, பிகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்கள் குழு, வழக்கத்திற்கு மாறான ஒரு வாழ்வாதாரத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். விளை நிலங்கள் குறைந்து வருவது, குறைவான கூலி வழங்கப்படும் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை குறைந்து வருவது போன்ற காரணங்களால் அவர்கள் குச்சிகளை கையில் எடுத்துவிட்டார்கள். இந்த பயணத்தை 16 பெண்கள் சேர்ந்து துவக்கினார்கள். குடும்பத்தினரின் அழுத்தம் மற்றும் விமர்சனங்கள் போன்ற காரணங்களால், 6 பெண்கள் இதை விட்டு விலகிவிட்டனர். தொடர்ந்து வரும் 10 பெண்களும், தாஸ் என்ற குடும்பப்பெயரை கொண்டவர்கள். இவர்கள் 2012ம் ஆண்டு மாநிலத்தின் முதல் மேள இசைக்குழுவை உருவாக்கினர். அதன் பெயர் சர்கம் மகிளா இசைக்குழு.

வீடியோவைப்பாருங்கள் : அனைத்து இந்திய சர்கம் மகிளா பெண்கள் இசைக்குழுவினர் ஆர்வத்துடன் பிகாரின் திப்ரா கிராமத்தில் மேளத்தை இசைக்கின்றனர்

“இந்தக்கைகளை பாருங்கள். இவை இனியும் வயல்களில் சென்று வேலை செய்து காயப்படத் தேவையில்லை. எங்களிடம் பணம் உள்ளது. எங்களுக்கென்று மரியாதை உள்ளது“ எங்களுக்கு வேறு என்ன வேண்டும்“ என்று டோமினி தாஸ் (35), கேட்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சவிதா மற்றும் டோமினியைப்போலவே சர்கம் பெண்கள் இசைக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் பஞ்சம், அனிதா, லல்தி, மல்தி, சோனா, பிஜாந்தி, சித்ரேக், சாதியா ஆகிய அனைவரும் மகாதலித் என்று வரையறுக்கப்படுபவர்கள். பிகாரில் அவர்கள் மிகவும் ஏழ்மையான மற்றும் பட்டியலின மக்களிலேயே மிகவும் பாரபட்சமாக நடத்தப்படக்கூடிய பிரிவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் உள்ள 16.5 மில்லியன் தலித் மக்களில் மூன்றாவது பெரும்பான்மையாக உள்ளனர். மகிளா குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், தங்களது முன்னோர்கள் மீது உயர் ஜாதியினர் கட்டவிழ்த்து விட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறை கதைகள் உள்ளன. ஆதிக்க ஜாதியினரின் நில உரிமையாளர்கள், வயல்களில் செய்யும் மீறல்கள் மற்றும் வீடுகளில் தங்கள் கணவர்கள் செய்யும் அத்துமீறல்கள் குறித்த தங்களின் கதைகளே உள்ளதாகக் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் தனாப்பூர் வட்டத்தில் உள்ள ஜாம்சவுத் ஊராட்சியைச் சேர்ந்த திப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

PHOTO • Puja Awasthi

‘ஒவ்வொரு முறை நான் இதை தட்டும்போதும் (மேளத்தை), என்னை பின்னோக்கி இழுத்த அத்தனை பிரச்னைகளையும் எதிர்த்து தட்டுவதைப்போல் உணருகிறேன் (இடது, முன்னால்) இசைக்குழுவின் தலைவி. வலது : சர்கம் மகிளா இசைக்குழுவின் வணிக அட்டை

சித்ரேகா (50), அவரது கணவர் சித்தாராம், சித்ரேகா வெளியே செல்ல விரும்புவதை ஒவ்வொரு முறையும் தடுப்பார். “வீட்டு வேலைகளை செய்“ என்று அவர் கூறுவார். சில நேரங்களில் எதையாவது செய்து கொடுக்கச்சொல்வார். ஆனால் தற்போதோ, நானே தாமதித்தாலும், என்னை விரைந்து அனுப்பிவைக்கிறார். எவ்வாறு அனைத்தும் மாறிவிட்டது“ என்று அவர் சிரிக்கிறார்.

மேள இசைக்குழுவை துவக்குவது என்பது அவர்களுக்கு சுதந்திரமாக தோன்றிய யோசனை கிடையாது. அவர்கள் ஒரு பெண்கள் சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள். “ஒன்றாக சேர்ந்து வேலை செய்பவர்கள்“ அவர்களே நமக்கு விளக்குகிறார்கள். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான தேடலில் அப்பளம் மற்றும் ஊறுகாய் செய்வதை தவிர்த்து வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையால் இணைந்தவர்கள். நரிகன்சன் என்ற பாட்னாவைச் சேர்ந்த நிறுவனம் அவர்களுக்கான இசைக்குழுவை பரிந்துரைத்ததுடன், அவர்களுக்கு பயிற்சி தர ஆசிரியரையும் நியமித்தது. அங்கிருந்து இந்தப்பெண்களுக்கு இந்த யோசனை கிடைத்தது. ஆதித்யா குமார் கன்சன், பாட்னாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து வந்து அவர்களுக்கு, ஒன்றரை வருடம் வாரத்தின் ஏழு நாட்களும் பயிற்சியளித்தார்.

PHOTO • Puja Awasthi

பஞ்சம் (இடது) மற்றும் சித்ரேக் (வலது) உள்ளிட்ட இசைக்குழுவில் உள்ள பெண்களின் வயது 30 முதல் 50 வரை உள்ளது

ஆரம்பித்த சில மாதங்களில், குழுவிற்கு கடினமாகத்தான் இருந்தது. குழு உறுப்பினர்களின் வயது 30 முதல் 50 வரை இருந்தது. கிராமத்தினரடமிருந்து தொடர்ந்து கிடைத்த வெறுப்புணர்வு, அதிலும், அவர்கள் ஆண்களைபோல் இருக்க முனைகிறார்கள் என்ற ஏளனப்பேச்சு மற்றும் மேளத்தை நாள் முழுவதும் சுமந்திருப்பதால் ஏற்படும் தோள்பட்டை வலி மற்றும் குச்சிகளை பிடித்து அழுத்தம் கொடுத்து அடிப்பதால் ஏற்படும் உள்ளங்கைகளின் வலி ஆகியவற்றையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த பெண்கள் இசைக்குழு என்ற புதிய முயற்சி குறித்த செய்திகள் அனைத்து இடங்களிலும் பரவத்தொடங்கியதும், உள்ளூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அழைப்புகள் வரிசையாக வரத்துவங்கின. அப்போது முதல் அவர்கள் நீண்ட தொலைவு பயணித்துள்ளார்கள். பாட்னா முழுவதும் மற்றும் அதனைச்சுற்றியுள்ள அருகமை மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள இந்தப்பெண்கள் இசைக்குழு அதைக்கடந்து ஒடிஷா மற்றும் டெல்லியிலும் நிகழ்ச்சிகளை செய்துள்ளார்கள். தலைநகரில் அவர்கள் பயணித்த மொட்ரோ ரயில் பயணத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களை அவர்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளார்கள்.

அவர்களின் பணம் பிரித்துக்கொள்வது மற்றும் நிகழ்ச்சிகளை கையாள்வதை சுதந்திரமாக பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தொகையை சமமாக பகிர்ந்து எடுத்துக்கொள்கிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதவர்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது. பயிற்சிகள் (பெரும்பாலும் வயல்வெளிகளில், கிராம மக்களை தொந்தரவு செய்யாமல் நடத்துகிறார்கள்) வேலையைப்பொருத்து வேறுபடுகின்றன. அவர்கள் வணிக அட்டைகள் (business/visiting cards) வைத்துள்ளார்கள். அவர்களுக்கென்று முறையான நடத்தை நெறிமுறைகள் வைத்துள்ளார்கள். அதில், அவர்கள் எப்போதும் நேர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும். குழுத்தலைவி, அதாவது சவிதா மட்டுமே நிகழ்ச்சிகள் குறித்த அனைத்து வகையான பேச்சுவார்தைகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்பதும் அடங்கும்.

PHOTO • Puja Awasthi

அனைத்து ஜாதி மக்களும் தற்போது, இவர்களின் திறமைக்காக பெண்களின் குழுவை நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். சில நேரங்களில், இவர்களின் இருப்பைப்பொறுத்து தங்கள் நிகழ்ச்சியின் தேதிகளை வைக்கிறார்கள்

அவர்களின் ஊதியத்தை அவர்களே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களிடம் பேசப்படாத ஒப்பந்தமாக உள்ளது. “எங்கள் கணவர்களிடம் நாங்கள் கொடுக்க மாட்டோம்“ என்பதை உறுதியாகக் கூறுகிறார்கள். அனிதா (32), “நான் பணத்தை என் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்தவும், புத்தகங்கள் வாங்கவும் பயன்படுத்துவேன். நாங்கள் நல்ல உணவுப்பொருட்களை சாப்பிட பயன்படுத்துவோம். சேமிப்பேன், சில நேரங்களில் எனக்காக செலவு செய்துகொள்வேன். இந்த சுதந்திரத்தை அடைந்தது எங்கள் வாழ்நாள் சாதனையாக உள்ளது. நான் அதை ஏன் கொடுக்க வேண்டும்?“ என்று அவர் கேட்கிறார்.

பழைய ஜாதிய படிநிலைகளில், உயர் ஜாதியினரின் திருமணம் மற்றும் விசேஷங்களில் அனிதா மற்றும் அவரது இசைக்குழுவினர் கலந்துகொள்வது என்பது கடினமானதாக இருந்திருக்கும். ஆனால், இன்றைய நவீன உலகத்தில், அவர்களை அவர்களுக்காக அவர்களே செதுக்கிக்கொண்டார்கள், அனைத்து ஜாதியினரும் அவர்களின் இசைக்கும் திறனிற்காக அவர்களை அழைக்கிறார்கள். சில நேரங்களில் பெண்கள் இசைக்குழுவினரின் இருப்பைப்பொருத்தும், அவர்கள் நிகழ்ச்சிகளின் தேதிகளை முடிவு செய்கிறார்கள். இப்பெண்கள், ஒரு காலத்தில் பார்ப்பதற்கு கூட அஞ்சிய உணவகங்களுக்கு இப்போது பெருமிதத்துடன் செல்கிறார்கள்.

PHOTO • Puja Awasthi

அவர்களின் குழு பிரபலமடைந்தவுடன், அனிதா (இடது), ச்சாதியா (வலது) மற்றும் மற்ற குழு உறுப்பினர்களும், பல்வேறு வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு, அதாவது அவர்கள் இதுவரை சென்றிராத இடங்களிலிருந்து கூட அழைத்திருக்கிறார்கள்

இசைக்குழுவின் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் மூதல் ரூ.15 ஆயிரம் வரை உள்ளது. அவர்களுக்கு திருமணம் அதிகம் நடைபெறும் மாதங்களில் 10 நிகழ்ச்சிகள் வரை கிடைக்கும். அந்த மாதங்களில் அவர்கள் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பெறுகிறார்கள். “கட்டணத்தில் நாங்கள் மிகவும் கண்டிப்பாக நடப்பதை விட பேச்சுவார்தை மூலம் முடிக்கிறோம்“ என்று சவிதா கூறுகிறார். ஆனால், எங்களை எங்கள் கிராமத்தில் இருந்து பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச்சென்றுவிட்டு, திரும்ப அழைத்து வந்துவிடவேண்டும் மற்றும் இரவில் தங்க வேண்டிய நிலை இருந்தால் சிறப்பான தங்கும் வசதிகள் செய்து தரவேண்டும் என்பதில் நாங்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வோம்.

முன்னர் இருந்த கூலியுடன் ஒப்பிடும்போது, அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது? இந்த மாநிலத்தில் ஊரக வேலை உறுதித்திட்டக்கூலி ரூ.168. எப்போதாவது கிடைக்கும் கூலி வேலைக்கு, திறனில்லாத தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி, அவர்கள் இசைக்குழுவை துவக்கியபோது, 200 ரூபாய்க்கும் குறைவு, இவர்கள் 2012ல் நாளொன்றுக்கு ரூ.100க்கும் அதிகமாக கூலி பெற்றதே இல்லை.

இந்த பொருளாதார சுதந்திரம், கிராமத்தில் இவர்களுக்கு நல்ல மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தது. (மற்ற பெரும்பாலான பெண்கள், தாங்களும் இசைக்குழுவில் கலந்துகொள்ளலாமா என்று கேட்குமளவிற்கு அவர்களுக்கான செல்வாக்கு அதிகரித்திருந்தது). ஆனால், அது அவர்களின் சமூக பொறுப்பை குலைக்கவில்லை. தவறான கணவர் முதல் வரதட்சனை கேட்பவர்கள் வரை, அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் திர்பா மற்றும் சுற்றியுள்ள கிராமங்ளுக்கு ஆலோசகர்கள் மற்றும் நடுவர்களாகவும் மாறியுள்ளார்கள். அவர்கள் தாங்கள் தலையிட்ட வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறியுள்ளனர். ஆனால் யாரின் பெயரையும் குறிப்பிட மாட்டார்கள்.

PHOTO • Puja Awasthi

இந்த பெண்கள் இசைக்குழுவில் உறுப்பினராக இருப்பதன் மூலம், லலிதா (வலது) மற்றும் மற்ற பெண்களுக்கு சுதந்திரமும், மரியாதையும் கிடைத்தது

இந்த பெண்கள் இசைக்குழுவினரின் உடனடியான திட்டமாக, ஏற்கனவே உள்ள 9 மேளங்கள் மற்றும் ஷேக்கர் எனப்படும் கிளுகிளுப்பை இசைக்கருவியுடன் கூடுதலாக பாஸ் மேளம் (drum), casio electronic keyboard என்ற கருவியையும் சேர்க்க உள்ளனர். இந்த பங்கரா இசை இவர்களின் விருப்பமான இசையாக இருந்தபோதும், தற்போது பல்வேறு இசைக்கருவிகளையும் அவர்கள் தாங்களாகவே வாசிக்க கற்றுக்கொண்டார்கள். சட்டை மற்றும் காலாடையுடன் கூடிய அவர்களுக்கென்று ஒரே சீருடை, தொப்பி மற்றும் தோளில் மாட்டிக்கொள்ளும் பையுடன், அவர்கள் ராணுவ இசைக்குழுவுடன் தங்களை ஒப்பிட்டு அதைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

மற்றவர்களைப்போல் சவிதாவும், அவர்களின் பயணித்து வந்த பாதையை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார். மேளம் அவருக்கு இசைக்கருவி என்பதைவிட மேலானது. “நான் ஒவ்வொரு முறை இதை அடிக்கும்போதும், வாழ்வில் என்னை பின்னோக்கி இழுத்த அத்தனை பிரச்னைகளுக்கு எதிராக அடிப்பதாகவே உணர்கிறேன்“ என்று அவர் கூறுகிறார்.

உலகில் சிறு மூலையில் இந்த இடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், சர்கம் மகிளா இசைக்குழுவை, அது செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் – ஒரே நேரத்தில் அனைவரும் சேர்ந்து இசைக்கின்றனர்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Puja Awasthi

Puja Awasthi is a freelance print and online journalist, and an aspiring photographer based in Lucknow. She loves yoga, travelling and all things handmade.

Other stories by Puja Awasthi
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.