பெல்தாங்கா டவுனிலிருந்து கொல்கொத்தாவுக்கு செல்லும் ஹசார்துவாரி விரைவு ரயில் சற்று நேரத்துக்கு முன் தான் ப்ளாஸ்ஸியை கடந்தது. ஏக்தாரா இசைக்கருவியின் இசை ரயில்பெட்டியை நிறைத்தது. பெரிய கூடை முழுக்க இருந்த மரப்பொருட்களை சஞ்சய் பிஸ்வாஸ் கொண்டிருந்தார். மேஜை விளக்கு, கார், பேருந்து, ஒற்றை நரம்பிலான ஏக்தாரா இசைக்கருவி அதில் இருந்தன.

பொம்மைகள், சாவிச் சங்கிலிகள், குடைகள், சுழல் விளக்குகள் போன்ற சீனப் பொருட்களையும் பிற விற்பனையாளர்கள் விற்ற கைக்குட்டைகள், நாட்காட்டிகள், அவித்த முட்டைகள், தேநீர், நிலக்கடலை, சமோசாக்கள், குடிநீர் குப்பிகள் போன்றவற்றையும் விஞ்சியிருந்தது மரத்தாலான கைவினைப் பொருட்கள். விற்பனையாளர் ஒவ்வொருவருக்குமென பிரத்யேக ரயில் பெட்டியும் வழியும் இருந்தன.

நல்ல விலை கிடைக்க பயணிகள் கடும் பேரம் பேசினர். முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தாங்காவிலிருந்து ரானகாட் வரை, இரண்டு மணி நேரங்கள் நீடிக்கும் 100 கிலோமீட்டர் ரயில் பயணத்தில் வணிகர்கள் நல்ல வியாபாரம் செய்துவிடுகின்றனர். பெரும்பாலான வணிகர்கள் ரானகாட்டிலும் சிலர் கிருஷ்ணாநகரிலும் இறங்குகின்றனர். அங்கிருந்து அவரவர் ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் ஏறிக் கொள்கின்றனர்.

யாரோ ஒருவர் ஏக்தாரா கருவியின் விலையை சஞ்சய்யிடம் கேட்கிறார். 300 ரூபாய் என்கிறார் அவர். விலை கேட்டவர் தயக்கம் கொள்கிறார். “இது மலிவான பொம்மை அல்ல, பெரும் கவனத்துடன் நான் இவற்றை உருவாக்குகிறேன்,” என்கிறார் சஞ்சய். “மூலப்பொருட்கள் உயர்தரம் கொண்டவை. இந்த கருவியின் அடிபாகத்தில் இருப்பது சுத்தமான தோல்.” விலை கேட்ட பயணி வாதிடுகிறார்: “உள்ளூர் கண்காட்சிகளில் இவற்றை மலிவான விலைக்கு நாங்கள் வாங்குவோம்.” பதிலுக்கு சஞ்சய், “கண்காட்சிகளில் நீங்கள் வாங்கும் மலிவான கருவிகள் இவை அல்ல. நான் மக்களை ஏமாற்றும் வேலையிலும் இல்லை,” என்கிறார்.

அவர் இன்னும் கொஞ்சம் நகர்ந்து சென்று தன்னுடைய படைப்புகளை காட்டுகிறார். சிறிய பொருட்கள் சிலவை விற்கின்றன. “உங்கள் கைகளாலேயே பரிசோதித்து பாருங்கள். என் கலையை பரிசோதிப்பதற்கு நீங்கள் பணம் தர வேண்டாம்.” சற்று நேரம் கழித்து ஓர் உற்சாகமான தம்பதியர் பேரம் பேசாமல் ஏக்தாரா கருவியை வாங்கிக் கொள்கின்றனர். சஞ்சய்யின் முகம் பிரகாசமடைந்தது. “இதை செய்ய நிறைய வேலை தேவைப்பட்டது. இதன் இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள்.”

Man selling goods in the train
PHOTO • Smita Khator
Man selling goods in the train
PHOTO • Smita Khator

’கண்காட்சிகளில் நீங்கள் வாங்கும் மலிவான கருவிகள் இவை அல்ல. நான் மக்களை ஏமாற்றும் வேலையிலும் இல்லை’

இதைச் செய்ய எங்கே கற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டேன். “நானே சொந்தமாக கற்றுக் கொண்டேன். எட்டாம் வகுப்பு தேர்வுகளை தவறவிட்ட பிறகு எனக்கு படிப்பு முடிந்துவிட்டது,” என்கிறார் 47 வயது சஞ்சய். “கால் நூற்றாண்டுக்கு ஆர்மோனியங்களை நான் பழுது பார்த்திருக்கிறேன். பிறகு அந்த வேலை எனக்கு அலுத்து போய்விட்டது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த வேலைக்கு அடிமையாகிவிட்டேன். எப்போதேனும் ஆர்மோனியங்களை எவரேனும் கொண்டு வந்தால், நான் உதவுவேன். ஆனால் இப்போது இதுதான் எனக்கு தொழில். இதை செய்வதற்கான கருவிகளை கூட என் கைகளாலேயே நான் உருவாக்குகிறேன். என் வீட்டுக்கு வந்தால் நான் செய்த கைவினைப் பொருட்களை கண்டு நீங்கள் வியந்து போவீர்கள்,” என்கிறார் அவர் கலைப் பெருமிதத்தோடு.

சஞ்சய்யின் வழக்கமான ரயில்வழிப் பாதை ப்ளாஸ்ஸிக்கும் கிருஷ்ணா நகருக்கும் இடையிலானது. “வாரத்துக்கு மூன்று நாட்கள் பொருட்கள் விற்கச் செல்வேன். மிச்ச நாட்களில் பொருட்களை உருவாக்கும் வேலை செய்வேன். மிகவும் நுணுக்கமாக செய்ய வேண்டும். சாதாரணமாக செய்து விட முடியாது. இந்த மரப் பேருந்தை உருவாக்க நிறைய நேரமானது. உங்களின் கைகளாலேயே பரிசோதித்து பாருங்கள்,” என அந்த மரப் பேருந்தை என் கையில் கொடுத்தார்.

எவ்வளவு வருமானம் ஈட்டுகிறீர்கள்? “இன்று 800 ரூபாய்க்கான பொருட்களை விற்க முடிந்தது. லாபவிகிதம் மிகவும் குறைவு. மூலப்பொருட்களின் விலை மிகவும் அதிகம். தரமற்ற மரக்கட்டையை நான் பயன்படுத்துவதில்லை. இதை செய்ய பர்மா தேக்கோ, பிற தேக்கு மரக் கட்டைகளோ தேவைப்படும். மர வியாபாரிகளிடமிருந்து அவற்றை நான் வாங்குகிறேன். நல்ல தரமான சாயத்தையும் ஸ்பிரிட்டையும் பர்ராபஜார் அல்லது கொல்கத்தாவிலிருக்கும் சைனா பஜாரில் இருந்து வாங்குகிறேன். ஏமாற்றவோ போலியாக செய்யவோ நான் கற்றுக் கொள்ளவில்லை… கிட்டத்தட்ட எல்லா நேரமும் நான் வேலை பார்க்கிறேன். வீட்டுக்கு வந்தால் இரவுபகலாக நான் வேலை பார்ப்பதை நீங்கள் பார்க்க முடியும். கட்டையை மெருகேற்ற எந்த இயந்திரத்தையும் நான் பயன்படுத்துவதில்லை. கைகளையே பயன்படுத்துகிறேன். அதுவே இத்தகைய மெருகுக்கு காரணம்.”

சஞ்சய், அவர் உருவாக்கிய பொருட்களை 40 ரூபாயிலிருந்து (லிங்கம்) 500 ரூபாய் (சிறிய பேருந்து) வரை விற்கிறார். “இத்தகைய பேருந்து உங்களின் மால்களில் எவ்வளவுக்கு விற்பார்கள் என சொல்லுங்கள்?” எனக் கேட்கிறார். பல பயணிகள் இந்த உழைப்பை பொருட்படுத்துவதில்லை. மிகக் கடுமையாக பேரம் பேசுகின்றனர். எப்படியோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்றேனும் ஒரு நாள், என் படைப்பை அவர்கள் பாராட்டுவார்கள்."

கிருஷ்ணா நகரில் ரயில் நின்றதும், கூடையுடன் இறங்க சஞ்சய் தயாராகிறார். இங்கிருந்து அவர் நடியா மாவட்டத்தின் பத்குல்லா டவுனில் இருக்கும் கோஸ்பராவுக்கு செல்வார். ஆர்மோனியங்களை பழுது பார்ப்பவராகவும் இத்தகைய அழகான ஏக்தாரா கருவியை செய்பவராகவும் அவர் இருந்ததால், பாட்டு பாடுவாரா எனக் கேட்டேன். அவர் புன்னகைத்துவிட்டு, “சில நேரங்களில் நாட்டுப்புற பாடல்கள் பாடுவேன்,” என்றார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading tamil news channel as a journalist.

Smita Khator

Smita Khator, originally from Murshidabad district of West Bengal, is now based in Kolkata, and is PARI’s translations editor as well as a Bengali translator.

Other stories by Smita Khator