“என்ன ஓட்டு-கீட்டு! இருட்டுறதுக்கு முன்ன செய்றதுக்கு ஆயிரத்தோரு வேலை இருக்கு… இந்த நாத்தத்தை தாங்க முடிஞ்சா இங்க பக்கத்துல வந்து உட்காருங்க,” என்கிறார் மாலதி மால் அவருக்கருகே இருக்கும் இடத்தைக் காட்டி. வெயிலாலும் தூசாலும் பாதிக்கப்படாமல் மலையென குவிந்திருக்கும் வெங்காயங்களை சுற்றி அமர்ந்திருக்கும் பெண்களுடன் அமரத்தான் என்னை அவர் அழைக்கிறார். ஒரு வாரமாக இந்த ஊரில் இப்பெண்களுடன் இருந்துல், வரும் தேர்தல்கள் குறித்த அவர்களின் பார்வையைக் கேட்டு வருகிறேன்.

அது ஏப்ரல் மாதத் தொடக்கம். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்திலுள்ள இப்பகுதியில் வெயில் அன்றாடம் 41 டிகிரி செல்சியஸை தொடும். மாலை 5 மணிக்குக் கூட, இந்த மால் பஹாரியா குடிசைப் பகுதியில் வெயில் கொளுத்துகிறது. சுற்றியிருக்கும் மரங்களில் ஓர் இலை கூட அசையவில்லை. வெங்காயங்களின் அடர்த்தியான மணம் காற்றில் மிதக்கிறது.

வெங்காய குவியலை சுற்றி அரைவட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் வீடுகளிலிருந்து 50 மீட்டர் இடைவெளியில் இருக்கும் திறந்த வெளி அது. தண்டுகளிலிருந்து வெங்காயங்களை வெட்டி எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். பிற்பகலின் வெயிலில் கலந்திருக்கும் பச்சை வெங்காயங்களின் ஈரப்பதம், அவர்களின் முகங்களை கடும் உழைப்பின் ஒளியை ஊட்டுகிறது.

“இது எங்களின் சொந்த கிராமம் அல்ல. கடந்த ஏழு, எட்டு வருடங்களாக இங்கு நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் 60 வயதுகளில் இருக்கும் மாலதி. அவரும் குழுவிபிற பெண்களும், பட்டியல் பழங்குடி சமூகமான மால் பஹாரியா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி சமூகங்களில் அதுவும் ஒன்று.

“எங்கள் கிராமமான கோவாஸ் கலிகாபூரில், எங்களுக்கு வேலை இல்லை,” என்கிறார் அவர். முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ராணி நகர் ஒன்றாம் ஒன்றியத்தில் இருக்கும் கோவாஸை சேர்ந்த 30 குடும்பங்கள், பிஷுர்புகுர் கிராமத்தின் ஓரங்களில் குடிசைகள் போட்டு உள்ளூர் விவசாய நிலங்களில் வேலை பார்த்து வாழ்ந்து வருகின்றனர்.

மே 7ம் தேதி நடக்கவிருக்கும் வாக்கெடுப்புக்காக கிராமத்துக்கு செல்லவிருப்பதாக என்னிடம் கூறினார்கள். கோவாஸ் கலிகாபூர், பிஷுர்புகுர் குக்கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

மால் பஹாரியா மற்றும் சந்தால் சமூகங்களை சேர்ந்த பழங்குடி பெண்கள், பக்கத்து ஒன்றியங்களிலிருந்து பெல்தாங்கா ஒன்றாம் ஒன்றியத்தின் வயல்களில் வேலை பார்க்க வருகின்றனர். வலது: மலாதி மால் (வலது பக்கம் நிற்பவர்), அதிக நேரம் குத்த வைத்து உட்கார்ந்திருந்ததால், கால்களை நீட்டி வலி போக்குகிறார்

ராணி நகர் ஒன்றாம் ஒன்றியத்திலிருந்து அவர்கள் தற்போது இருக்கும் பெல்தாங்கா ஒன்றாம் ஒன்றியத்துக்கென தாலுகாக்களுக்குள்ளான மால் பஹாரியாக்களின் புலப்பெயர்வு, அவர்களில் நிலவரத்தை எடுத்துக் காட்டக் கூடியது.

மால் பஹாரியா பழங்குடிகள், மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் வசிக்கின்றனர். முர்ஷிதாபாத்தில் மட்டும் 14,064 பேர் இருக்கின்றனர். “எங்களின் சமூகத்தினர் பூர்விகமாக ராஜ்மகால் மலைகளை சுற்றியிருக்கும் பகுதிகளில் வாழ்ந்தனர். ஜார்கண்டில் பல்வேறு பகுதிகளுக்கும் (ராஜ்மகால் இருக்கும் பகுதிகள்) மேற்கு வங்கத்துக்கும் எங்களின் மக்கள் புலம்பெயர்ந்தார்கள்,” என்கிறார் ஜார்கண்டின் தும்காவை சேர்ந்த அறிஞரும் செயற்பாட்டாளருமான ராம்ஜீவன் அஹாரி.

ஜார்க்கண்டில், மேற்கு வங்கம் போலல்லாமல், மால் பஹாரியாக்கள் எளிதில் பாதிப்படையத்தக்க பழங்குடி குழு வாக (PVTG) பதிவு செய்யப்பட்டிருப்பதாக உறுதி செய்கிறார் ராம்ஜீவன். “வேறு மாநிலங்களில் மாற்றம் பெறும் சமூகத்தின் வகைப்பாடு, ஒவ்வொரு அரசாங்கம், அச்சமூகம் குறித்து கொண்டிருக்கும் வேறுபட்ட நிலைப்பாடுகளை காட்டுகிறது,” என்கிறார் அவர்.

“இங்குள்ளவர்கள் நாங்கள் வயல்களில் வேலை பார்க்க வேண்டுமென விரும்புகின்றனர்,” என்கிறார் மலாதி, வீட்டிலிருந்து தூரப் பகுதியில் ஏன் வேலை பார்க்கிறார்கள் என்பதற்கான காரணத்தை விளக்கி. “விதைத்து அறுவடை செய்யும் நேரத்தில், நாளொன்றுக்கு நாங்கள் ரூ.250 ஈட்டுவோம்.” தயாள குணம் கொண்ட விவசாயியாக இருந்தால் அறுவடையின் ஒரு பகுதி கூட கிடைக்கும் என்கிறார் அவர்.

பெரும் எண்ணிக்கையிலான கூலித் தொழிலாளர்கள் மாவட்டத்திலிருந்து வேலை தேடி வேறு இடங்களுக்கு புலம்பெயர்வதால், உள்ளூரில் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெல்தாங்கா ஒன்றாம் ஒன்றியத்தின் விவசாயத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 600 ரூபாய் கூலி கேட்கின்றனர். ஆனால் தாலுகாவுக்குள் புலம்பெயரும் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள், அதில் பாதியளவு கூலிக்கு வேலை பார்க்கத் தயாராக இருக்கின்றனர்.

“அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள் வயல்களிலிருந்து ஊருக்குக் கொண்டு வரப்பட்டதும், அடுத்த வேலையை நாங்கள் செய்வோம்,” என விளக்குகிறார் ஒல்லியாக இருக்கும் 19 வயது வெங்காயம் வெட்டுபவரான அஞ்சலி மால்

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: அஞ்சலி மால், குடிசைக்கு வெளியே. தான் செல்ல முடியாத பள்ளிக்கு மகள் சென்றுவிட வேண்டுமென அவர் விரும்புகிறார். வலது: ட்ரக்குகளில் வெங்காய மூட்டைகள் ஏற்றப்பட்டு மேற்கு வங்க சந்தைகளுக்கும் பிறவற்றுக்கும் அனுப்பப்படுகிறது

தரகர்களுக்கு விற்பதற்காகவும் தூரப்பகுதிகளுக்கு அனுப்புவதற்காகவும் அவர்கள் வெங்காயங்களை தயார் செய்கின்றனர். “வெங்காயங்களை தண்டுகளிலிருந்து வெட்டி, மேல் தோல்களையும் மண்ணையும், வேரையும் உதிர்த்து விடுவோம். பிறகு அவற்றை சாக்கு மூட்டைகளில் கட்டுவோம்.” 40 கிலோ சாக்கு மூட்டைக்கு, 20 ரூபாய் அவர்களுக்குக் கிடைக்கும். “அதிகம் வேலை பார்த்தால், அதிகம் சம்பாதிக்க முடியும். எனவே எல்லா நேரமும் நாங்கள் வேலை பார்த்துக் கொண்டே இருப்போம். வயல்களில் வேலை பார்ப்பது போலல்ல இது,” என்கிறார். வயல்களில் வேலை நேர வரையறை இருக்கும்.

40 வயதுகளில் இருக்கும் சதன் மொண்டல், சுரேஷ் மொண்டல், தோனு மொண்டல் மற்றும் ராக்கோஹொரி பிஸ்வாஸ் ஆகியோர் பிஷூர்புகுரில் பழங்குடியினரை பணிக்கமர்த்தும் சில விவசாயிகள் ஆவர். வருடம் முழுவதும் விவசாயத் தொழிலாளர்களின் தேவை இருப்பதாக அவர்கள் சொல்கின்றனர். இப்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு வேலை பார்க்க பெரும்பாலும் சந்தால் பழங்குடி மற்றும் மால் பஹாரியா பெண்கள் வருவதாக விவசாயிகள் நம்மிடம் சொல்கின்றனர். ஒருமித்த குரலில், “அவர்கள் இல்லாமல், விவசாயத்தை நாங்கள் தொடர முடியாது,” என்கிறார்கள்.

வேலை கடுமையானது. “மதிய உணவு சமைக்கக் கூட நேரம் கிடைக்காது…” என்கிறார் வெங்காய வேலை பார்த்தபடி மலாதி. “உண்ணுவதற்கு மிக தாமதமாகிறது. அவசரமாக கொஞ்சம் சாதம் சமைத்து விடுகிறோம். உணவுப் பொருட்கள் யாவும் விலை அதிகம்.” விவசாய வேலை செய்து முடித்ததும், பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டும். கூட்டுதல், கழுவுதல், சுத்தப்படுத்துதல் போன்றவற்றை செய்து பிறகு குளித்துவிட்டு, இரவுணவு சமைக்க வேண்டும்.

“எல்லா நேரங்களிலும் பலவீனமாக உணர்கிறோம்,” என்கிறார் அவர். சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார அறிக்கை அதற்கான காரணத்தை சொல்கிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த எல்லா பெண்கள் மற்றும் குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் இங்குள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவிகித குழந்தைகள் குறைவான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கான உணவு கிடைக்கவில்லையா?

“இல்லை, எங்கள் ஊர் குடும்ப அட்டைகள்தான் எங்களிடம் இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள் உணவுப் பொருட்களை பெறுவார்கள். வீடுகளுக்கு நாங்கள் செல்லும்போது, எங்களுடன் கொஞ்சம் உணவு தானியங்களை எடுத்து வருவோம்,” என விளக்குகிறார் மலாதி. பொது விநியோக திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களை குறித்துதான் அவர் சொல்கிறார். “இங்கு எதையும் வாங்காமல் இருக்க முயற்சிக்கிறோம். முடிந்தவரை சேமித்து, வீட்டுக்கு அனுப்பவே முயலுகிறோம்,” என்கிறார் அவர்.

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

பிஷுர்புகுரின் மால் பஹாரியா வசிப்பிடத்தில் 30 புலம்பெயர் குடும்பங்கள் வாழ்கின்றனர்

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை போன்ற உணவு பாதுகாப்பு திட்டங்கள் தேசிய அளவில் இருப்பதை தெரிந்து பெண்கள் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களை போன்ற புலம்பெயருபவர்களுக்கு உதவக் கூடிய திட்டம் இது. “யாரும் அதைப் பற்றி சொன்னதில்லை. நாங்கள் பள்ளி படிப்பு பெறவில்லை. எங்களுக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்கிறார் மலாதி.

“நான் பள்ளிக்கு சென்றதில்லை,” என்கிறார் அஞ்சலி. “என் தாய் எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே இறந்து விட்டார். தந்தை, மூன்று மகள்களையும் அநாதரவாக தவிக்க விட்டுச் சென்று விட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் எங்களை வளர்த்தார்கள்,” என்கிறார் அவர். மூன்று சகோதரிகளும் இள வயதிலிருந்தே விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்க்கத் தொடங்கினர். பதின்வயதில் மணம் முடித்து கொடுக்கப்பட்டனர். 19 வயதில் அஞ்சலி, 3 வயது அக்‌ஷிதாவுக்கு தாயாக இருக்கிறார். “நான் படிக்கவில்லை. கையெழுத்து போட மட்டும் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர். பெரும்பாலான பதின்வயது இளையோர் படிப்பை நிறுத்தியவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள். அவரின் தலைமுறை சார்ந்த பலருக்கு படிப்பறிவு இல்லை.

“என் மகளும் என்னை போலாகி விடக் கூடாது. அடுத்த வருடத்தில் அவளை பள்ளிக்கு சேர்க்க பார்க்கிறேன். இல்லையெனில் அவள் ஒன்றும் கற்றுக் கொள்ள மாட்டாள்.” அவரின் பதட்டம் அவரின் பேச்சில் வெளிப்பட்டது.

எந்தப் பள்ளி? பிஷுர்புகுர் ஆரம்பப் பள்ளி?

“இல்லை, எங்களின் குழந்தைகள் இங்குள்ள பள்ளிகளுக்கு செல்வதில்லை. சிறு குழந்தைகள் கூட அங்கன்வாடி பள்ளிகளுக்கு செல்வதில்லை,” என்கிறார் அவர். கல்வியுரிமை சட்டம் இருந்தும் பாரபட்சம் அச்சமூகத்தை ஒடுக்கியிருப்பதை அஞ்சலியின் வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. “இங்கு நீங்கள் பார்க்கும் குழந்தைகளில் பலர் பள்ளிக்கு செல்வதில்லை. கோவாஸ் கலிகாபூரில் இருக்கும் சிலர்  பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு எங்களுக்கு உதவ வருவதால், வகுப்புகளை தவற விடுகிறார்கள்.”

மால் பஹாரியாக்களில் இருக்கும் படிப்பறிவு விகிதத்தைப் பற்றிய 2022ம் ஆண்டு ஆய்வு ஒன்று, அது மொத்தத்தில் 49.10 சதவிகிதமாகவும் பெண்கள் மத்தியில் அது மிகவும் குறைவாக 36.50 சதவிகிதமாகவும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் மாநில அளவிலான படிப்பறிவு விகிதம் ஆண்களுக்கு 68.17 சதவிகிதமும் பெண்களுக்கு 47.71 சதவிகிதமாகவும் இருக்கிறது.

ஐந்து அல்லது ஆறு வயதில் இருக்கும் சிறுமிகள், தாய்களுக்கும் பாட்டிகளுக்கு வெங்காயம் எடுத்து கூடைகளில் போட உதவுவதை நான் பார்க்கிறேன். பதின்வயது சிறுவர்கள் இருவர், கூடைகளை பிளாஸ்டிக் சாக்குகளில் திணித்துக் கட்டுகின்றனர். வயது, பாலினம், உடல் வலு ஆகியவற்றுக்கு ஏற்ப வேலைப் பிரிவினை அங்கு இருந்தது. “அதிக கைகள், அதிக சாக்குகள், அதிக பணம்,” என அஞ்சலி எளிமையாக எனக்கு விளக்குகிறார்.

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

வசிப்பிடத்திலுள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. சொந்த ஊரில் சென்று கொண்டிருந்தவர்களும் இங்கு உதவ வரும்போது பள்ளியை தவற விட நேர்கிறது

அஞ்சலி முதன்முறையாக வாக்கு செலுத்தவிருக்கிறார். “பஞ்சாயத்து தேர்தலில் நான் வாக்களித்திருக்கிறேன். இந்த தேர்தலுக்கு இதுவே முதன்முறை!” என புன்னகைக்கிறார். “நான் போவேன். எங்கள் பகுதியில் இருக்கும் அனைவரும் வாக்களிக்க ஊருக்கு செல்வோம். இல்லையெனில் அவர்கள் எங்களை மறந்து விடுவார்கள்…”

உங்கள் குழந்தைகளுக்கு கல்வி வேண்டுமென கேட்பீர்களா?

“யாரிடம் கேட்பது?” ஒரு கணம் தாமதித்து அஞ்சலியே பதிலும் தருகிறார். “எங்களுக்கு இங்கு (பிஷுர்புகுரில்) வாக்குகள் கிடையாது. எனவே யாரும் எங்களை பொருட்படுத்துவதில்லை. அங்கு (கோவாசில்) நாங்கள் வருடம் முழுக்க இருப்பதும் இல்லை. எனவே நாங்கள் அங்கு பெரிதாக பேசவும் முடியாது. நாங்கள் இங்கும் இல்லை, அங்கும் இல்லாத நிலைதான்.”

தேர்தலின்போது வேட்பாளர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது என்பது தெரியாது என அவர் சொல்கிறார். “ஐந்து வயதானதும் அங்கிதா பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என்பது மட்டும்தான் என் விருப்பம். அவளுடன் நான் ஊரில் இருக்க விரும்புகிறேன். திரும்பி இங்கு நான் வர விரும்பவில்லை. ஆனால் யாருக்கு தெரியும்?” என பெருமூச்செறிகிறார்.

“வேலையில்லாமல் நாங்கள் பிழைக்க முடியாது,” என்கிறார் இன்னொரு இளம்தாயான 19 வயது மதுமிதா மால், அஞ்சலியின் சந்தேகங்களை பிரதிபலித்து. “பள்ளிக்கு செல்லவில்லை எனில் எங்களின் குழந்தைகளும் எங்களைப் போல் ஆகி விடும்,” என்கிறார் துயரம் தோய்ந்த குரலில் அவர். அந்த இளம்தாய்களுக்கு ஆசிரம விடுதி , சில்கஸ்ரீ போன்ற மாநிலத் திட்டங்களும் பழங்குடி குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் ஏகலைவ மாதிரி விடுதிப் பள்ளிகள் (EMDBS) போன்ற திட்டங்களும் தெரிந்திருக்கவில்லை.

பிஷுர்புகுர் கிராமம் வரும் பஹராம்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசம்தான் இருக்கிறது. அவர்களும் 1999ம் ஆண்டு தொட்டு, பழங்குடி குழந்தைகளின் கல்விக்கென ஏதும் செய்யவில்லை. 2024ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில்தான் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஏழைகளுக்கு, குறிப்பாக பட்டியல் சாதி மற்றும் பழங்குடி குழந்தைகளுக்கான விடுதிப் பள்ளிகளை உருவாக்கும் வாக்குறுதியை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு இதைப் பற்றி ஏதும் தெரியாது.

“யாரும் சொல்லவில்லை எனில், எங்களுக்கு எப்படி தெரியும்,” எனக் கேட்கிறார் மதுமிதா.

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: மதுமிதா மால் மகன் அவிஜித் மாலுடன் அவரது குடிசையில். வலது: மதுமிதா குடிசையில் வெங்காயங்கள்

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: சோனாமோனி மால் குழந்தையுடன் குடிசைக்கு வெளியே. வலது: சோனாமோனி மாலின் குழந்தைகள் குடிசைக்குள். மால் பஹாரியா மக்களின் குடிசைகளில் அதிகமாக இருக்கும் ஒரு விஷயம், வெங்காயங்கள்தான்

“அக்கா, எங்களிடம் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வேலை அட்டை, ஸ்வஸ்தியா சதி காப்பீடு அட்டை, குடும்ப அட்டை எனப் பல அட்டைகள் இருக்கின்றன,” என்கிறார் 19 வயது சோனாமோனி மால். இரு குழந்தைகளை பள்ளிக்கு சேர விரும்பும் இன்னொரு தாய் அவர். “நான் வாக்களிப்பேன். ஆனால் இம்முறை என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.”

“வாக்களித்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” பல காலமாக நான் வாக்களித்து வருகிறேன்,” என்கிறார் சபித்ரி மால் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). 70 வயதுகளில் இருக்கும் அவர் சொன்னதும் பெண்கள் சிரிக்கின்றனர்.

“எனக்கு கிடைப்பது முதியோர் பென்ஷன் 1,000 ரூபாய் மட்டும்தான். வேறேதும் இல்லை. எங்கள் ஊரில் எந்த வேலையும் கிடையாது. ஆனால் எங்களின் வாக்கு அங்குதான் இருக்கிறது,” என்கிறார் அவர். “மூன்று வருடங்களாக எங்களுக்கு அவர்கள் நூறு நாள் வேலையைத் தரவில்லை,” என புகார் செய்கிறார் சாபித்ரி. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.

“அரசாங்கம் என் குடும்பத்துக்கு ஒரு வீடு கொடுத்திருக்கிறது,” என்கிறார் அஞ்சலி பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை குறிப்பிட்டு. “ஆனால் வேலை இல்லாததால் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. நூறு நாள் வேலை இருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன்,” என்கிறார் அவர்.

மிகக் குறைவாக இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள், அவர்கள் தூரப் பகுதிகளுக்கு புலம்பெயர வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது. கோவால் கலிகாபூரை சேர்ந்த இளைஞர்கள், பெங்களூரு அல்லது கேரளா வரை வேலை தேடி செல்வதாக சாபித்ரி கூறுகிறார். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆண்கள், கிராமத்தருகே கிடைக்கும் வேலைகளை விரும்புகிறார்கள். ஆனால் விவசாய வேலைகள் அங்கு இருப்பதில்லை. பலரும் ராணி நகர் ஒன்றாம் ஒன்றியத்திலுள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வருமானம் ஈட்டுகிறார்கள்..

“செங்கல் சூளைகளில் வேலை பார்க்க விரும்பாத பெண்கள் பிற கிராமங்களுக்கு இளம் குழந்தைகளுடன் செல்கின்றனர்,” என்கிறார் சாபித்ரி. “இந்த வயதில் என்னால் சூளையில் வேலை பார்க்க முடியாது. வயிற்றுக்கு சாப்பாடு ஏதேனும் போட வேண்டுமென்பதால் இங்கு வரத் தொடங்கினேன். என்னைப் போன்ற முதியவர்களுக்கு சில ஆடுகளும் இருக்கிறது. அவற்றை மேய்க்க கொண்டு செல்வேன்,” என்கிறார் அவர். அவர்களின் குழுவிலிருந்து சாத்தியப்படுகையில் “கோவாஸுக்கு சென்று உணவு தானியங்களை பெற்று வருவார்கள். நாங்கள் ஏழைகள்; எங்களால் எதையும் வாங்க முடியாது.”

வெங்காய சீசன் முடிந்து விட்டால் என்ன நடக்கும்? அவர்கள் கோவாஸுக்கு திரும்புவார்களா?

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

வெங்காய அறுவடைக்கு பிறகு, விவசாயத் தொழிலாளர்கள் அவற்றை சுத்தப்படுத்தி, அடுக்கி, மூட்டை கட்டி விற்பனைக்கு தயார் செய்வார்கள்

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: பிற்பகலில், உணவுக்காக தொழிலாளர்கள் வயல்களுக்கருகே இடைவேளை எடுத்துக் கொள்கிறார்கள். வலது: மலாதி, தன் ஆடுடனும் வெங்காய மூட்டைகளுடனும்

“வெங்காயங்கள் வெட்டப்பட்டு, மூட்டைக் கட்டப்பட்ட பிறகு, எள், சணல் மற்றும் கொஞ்சம் நெல் (வெயில் காலத்தில்) விதைக்கப்படும்,” என்கிறார் அஞ்சலி. விவசாய வேலைக்கு ஆட்களின் தேவை அதிகரித்திருப்பதால் “அதிகதிகமாக பழங்குடி குழந்தைகள், உடனடி பணம் சம்பாதிக்க அவர்களுடன் சேர்ந்து கொண்டே இருக்கின்றனர்,” என்கிறார் அவர்.

பயிர் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் விவசாய வேலைவாய்ப்பு சரிந்து விடுமென விளக்குகிறார் இளம் விவசாயத் தொழிலாளர். தொடர்ந்து இடம்பெயருபவர்களை போலல்லாமல் அவர்கள் அங்கேயே தங்கி விடுகிறார்கள். சொந்த கிராமத்ஹ்டுக்கு திரும்புவதில்லை. “மேஸ்திரிகளுக்கு உதவியாளர்களாகவும் ஒப்பந்தப் பணியு செய்வோம். இந்த குடிசைகளை நாங்கள் கட்டி இங்கேயே வசிக்கிறோம். ஒவ்வொரு குடிசைக்கும் நாங்கள் 250 ரூபாய் மாதந்தோறும் உரிமையாளருக்கு கொடுக்கிறோம்,” என்கிறார் அஞ்சலி.

“எங்களை பார்க்கக் கூட எவரும் இங்கு வருவதில்லை. தலைவர் எவரும் கூட வருவதில்லை. நீங்கள்தான் சென்று பார்க்க வேண்டும்,” என்கிறார் சாபித்ரி.

குறுகிய பாதையில் குடிசைகள் இருக்குமிடம் நோக்கி நடந்தேன். 14 வயது சோனாலிதான் எனக்கு வழிகாட்டினார். 20 லிட்டர் பக்கெட்டில் நீர் சுமந்து குடிசைக்கு அவர் சென்று கொண்டிருக்கீறார். “குளத்தில் குளிக்க சென்று நீர் நிரப்பி வருகிறேன். குடிநீர் இணைப்பு எங்கள் பகுதியில் கிடையாது. குளம் அழுக்காக இருக்கும். ஆனால் என்ன செய்வது?” அவர் குறிப்பிடும் நீர்நிலை வசிப்பிடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கிறது. அங்குதான் அறுவடை செய்யப்பட்ட சணல் மழைக்காலத்தில் பாதுகாக்கப்பட்டு, தண்டிலிருந்து இழை பிரிக்கப்படும். நீரில் பாக்டீரியாவும் மனிதர்களுக்கு ஆபத்தை தரும் ரசாயனங்களும் கலந்திருக்கும்.

“இதுதான் எங்களின் வீடு. இங்கு மகனுடன் தங்கி இருக்கிறேன்,” என்கிறார் அவர் குடிசைக்குள் நுழைந்து காய்ந்த உடைகளுக்கு மாறியபடி. நான் வெளியே காத்திருந்தேன். அறை, மூங்கில் மற்றும் சணல் குச்சிகளால் கட்டப்பட்டு, மண்ணும் மாட்டுச்சாணமும் உள்ளே பூசப்பட்டிருக்கிறது. தனிமை இல்லாத சூழல். மூங்கில், வைக்கோல் மீது போர்த்தப்பட்ட தாய்ப்பாய் ஆகியவற்றை மூங்கில் கழிகள் தாங்கி நிற்கிறது.

“உள்ளே வருகிறீகளா?” எனக் கேட்கிறார் தலையை வாரியபடி சோனாலி. குச்சிகளுக்கு இடையில் புகுந்து மங்கலான வெளிச்சம் பரப்பும் பகல் நேரத்தில், அந்த 10 X 10 அடி குடிசையில் ஏதுமில்லாமல் இருக்கிறது. “அம்மா, கோவாஸில் சகோதரர்களுடனும் சகோதரிகளுடன் வாழ்கிறார்,” என்கிறார் அவர். ராணி நகர் ஒன்றாம் ஒன்றியத்திலுள்ள செங்கல் சூளைகளில் ஒன்றில் அவரது தாய் வேலை பார்க்கிறார்.

“வீடு நினைவாகவே இருக்கிறது. என்னுடைய உறவினரும் இங்கு தம் மகள்களுடன் வந்திருக்கிறார். இரவில் அவருடன்தான் உறங்குகிறேன்,” என்கிறார் வயல்களில் வேலை பார்க்க 8ம் வகுப்புடன் படிப்பை இடைநிறுத்திய சோனாலி.

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: சோனாலி மால் சந்தோஷமாக தன் குடிசைக்கு வெளியே நின்று போட்டாவுக்கு போஸ் கொடுக்கிறார். வலது: உள்ளே அவரது உடைமைகள். கடின உழைப்பு வெற்றிக்கான வழி அல்ல

குளத்தில் துவைத்த உடைகளை காய வைக்க சோனாலி போனபோது, குடிசையை சுற்றி நான் பார்த்தேன். ஒரு மூலையில் ஒரு பெஞ்சில் சில பாத்திரங்களும், இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் அரிசியும் பிற அத்தியாவசியப் பொருட்களும் எலிகளிலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அளவுகளிலான பிளாஸ்டிக் நீர் குடுவைகளும் மண் தரையில் இருந்த மண் அடுப்பும் சமைக்கும் பகுதிக்கு குறியீடாக இருந்தன.

சில உடைகள் அங்கும் இங்கும் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு கண்ணாடியும் அதன் மீது ஒரு சீப்பும் செருகப்பட்டு சுவரின் இன்னொரு மூலையில் இருந்தன. ஒரு சுருட்டப்பட்ட பாயும் கொசு வலையும் பழைய போர்வையும் ஒரு சுவரிலிருந்து அடுத்த சுவருக்கு குறுக்காக போடப்பட்டிருக்கும் மூங்கில் கழியில் கிடந்தன. நிச்சயமாக, கடின உழைப்பு அங்கு வெற்றியை அளித்திருக்கவில்லை. தந்தை மற்றும் பதின்வயது மகளின் கடும் உழைப்புக்கான சாட்சியங்களாக ஒரு விஷயம் மட்டும் அங்கு அதிகமாக இருந்தன. வெங்காயங்கள்!

“கழிவறையைக் காட்டுகிறேன்,” என சோனாலி உள்ளே நுழைந்தார். அவரை பின்தொடர்ந்தேன். சில குடிசைகளை தாண்டி, 32 அடி நீளமான ஒரு குறுகிய பாதையை ஒரு வசிப்பிடத்தருகே அடைந்தோம். தானியங்களை சேமிக்கும் தைக்கப்பட்ட தாள்கள், ஒரு 4 X 4 திறந்தவெளியின் சுவராக இருந்தது. அதுதான் கழிவறை. “இங்குதான் நாங்கள் இயற்கை உபாதைகளை கழிப்போம்,” என்கிறார் அவர். சற்று முன் நகர முயன்றதும், அவர் தடுத்து அதற்கு மேல் மலம் இருக்குமென்கிறார்.

இந்த வசிப்பிடத்தில் தென்படும் சுகாதார வசதியின்மை, மால் பஹாரியா வசிப்பிடத்துக்கு வரும்போது வண்ணமயமாக எழுதப்பட்டிருந்த மிஷன் நிர்மல் பங்க்ளா செய்திகளை எனக்கு நினைவூட்டியது. மாநில அரசின் சுகாதார வசதித் திட்டத்தை பற்றியும் திறந்த வெளி கழிப்பிடம் முற்றாக ஒழிக்கப்பட்டதாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

“மாதவிடாய் காலத்தில் மிகவும் கஷ்டம். தொற்று ஏற்படும். நீரின்றி எப்படி சமாளிக்க முடியும்? குள நீரிலும் சேறும் அழுக்கும் நிறைந்திருக்கிறது,” என்கிறார் சோனாலி வெட்கத்தையும் தயக்கத்தையும் விட்டு.

குடிநீருக்கு என்ன செய்வீர்கள்?

“தனியாரிடமிருந்து வாங்குவோம். 20 லிட்டர் குடுவையை நிரப்ப 10 ரூபாய் கேட்பார்கள். மாலை நேரத்தில் அவர்கள் வந்து பிரதான சாலையில் காத்திருப்பார்கள். அந்த பெரிய குடுவைகளை நாங்கள் குடிசைகளுக்கு தூக்கி வர வேண்டும்.”

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: வசிப்பிடத்தில் கழிவறையாக பயன்படுத்தப்படும் பகுதி. வலது: பிஷூர்புகுரில் திறந்தவெளி கழிவறைகளை ஒழித்து விட்டதாக பிரஸ்தாபிக்கும் மிஷன் நிர்மல் பங்க்ளா திட்ட சுவரொட்டிகள்

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: மால் பஹாரியா விவசாயத் தொழிலாளர்கள் குளிக்க, துவைக்க, பாத்திரம் கழுவ பயன்படுத்தும் அழுக்கடைந்த குளம். வலது: பணம் கொடுத்து தனியாரிடமிருந்து குடிநீர் வாங்கப்படுகிறது

“என் நண்பரை சந்திக்கிறீர்களா?” திடீர் உற்சாகத்துடன் அவர் கேட்கிறார். “இவர்தான் பாயெல். என்னை விட மூத்தவர். ஆனால் நாங்கள் நண்பர்கள்.” புதிதாக மணம் முடித்திருக்கும் 18 வயது நண்பரிடம் என்னை அறிமுகப்படுத்துகிறார் சோனாலி. அவர், குடிசையின் சமையற்பகுதியில் தரையில் அமர்ந்து இரவுணவை தயாரித்துக் கொண்டிருக்கிறார். பாயெல் மாலின் கணவர், பெங்களூரு கட்டுமான தளத்தில் புலம்பெயர் தொழிலாளராக பணிபுரிகிறார்.

“அடிக்கடி வந்து சென்று கொண்டிருக்கிறேன். என் மாமியார் அங்கு வாழ்கிறார்,” என்கிறார் பாயெல். “கோவாசில் தனியாக இருக்க வேண்டும். எனவே இங்கு வந்து இவளுடன் இருக்கிறேன். என் கணவர் சென்று பல நாட்களாகி விட்டது. எப்போது வருவாரென தெரியவில்லை. அநேகமாக தேர்தல்களின்போது வரலாம்,” என்கிறார் அவர். ஐந்து மாதம் கர்ப்பமாக பாயெல் இருப்பதாக சொல்கிறார் சோனாலி. பாயெல் வெட்கப்படுகிறார்.

மருந்துகளும் சத்துணவுகளும் இங்கு கிடைக்கிறதா?

“ஆம், இரும்புச் சத்து மாத்திரைகள் ஒரு சுகாதார செயற்பாட்டாளர் அக்காவிடமிருந்து பெறுகிறேன்,” என்கிறார் அவர். “என் மாமியார் என்னை மருத்துவ மையத்துக்கு அழைத்து சென்றார். அவர்கள் சில மருந்துகள் கொடுத்தனர். என் பாதங்கள் அவ்வப்போது உப்பி வலி கொடுக்கிறது. இங்கு எங்களை பரிசோதிக்க எவரும் இல்லை. வெங்காய வேலை முடிந்த பிறகு நான் கோவாசுக்கு சென்று விடுவேன்.”

மருத்துவ நெருக்கடி என்றால் பெண்கள், 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெல்தாங்கா டவுனுக்கு செல்வார்கள். மருந்துகள் மற்றும் முதலுதவி மருந்துகள் பெற அவர்கள், ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மக்ராம்பூர் சந்தைக்கு செல்ல வேண்டும். பாயெல் மற்றும் சோனாலியின் குடும்பங்கள் ஸ்வஸ்திய சதி அட்டைகள் வைத்திருக்கின்றன. ஆனாலும் அவசரகால மருத்துவம் பெற நெருக்கடியாக இருப்பதாக கூறுகின்றனர் குடும்பத்தினர்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். 3 வயதாகும் அங்கிதாவும் மிலோனும் 6 வயது தேப்ராஜும் அவர்களின் பொம்மைகளை எங்களுக்குக் காட்டுகிறார்கள். அவர்களே கற்பனையில் உருவாக்கிய ஜுகாத் பொம்மைகளை எங்களுக்கு காட்டினர். “தொலைக்காட்சி இங்கு கிடையாது. என் அப்பாவின் செல்பேசியில் சில நேரங்களில் விளையாடுவேன். கார்ட்டூன் பார்க்க முடிவதில்லை.” நீலம் மற்றும் வெள்ளை நிற அர்ஜெண்டினா கால்பந்து டிஷர்ட் அணிந்திருக்கும் தேப்ராஜ் புகாரை பதிவு செய்கிறார்.

அப்பகுதி வாழ் குழந்தைகள் அனைவரும் சத்துக்குறைபாட்டுடன்தான் இருக்கிறார்கள். “காய்ச்சல் அல்லது வயிற்று பிரச்சினைகள் அவர்களுக்கு அடிக்கடி வருகின்றன,” என்கிறார் பாயெல். “கொசுக்கள் இன்னொரு பிரச்சினை,” என்கிறார் சோனாலி. “கொசு வலைக்குள் நாங்கள் சென்று விட்டால், வானமே இடிந்து விழுந்தாலும் நாங்கள் வெளியே வர மாட்டோம்.” இரு நண்பர்களும் சிரிக்கிறார்கள். மதுமிதாவும் இணைந்து கொள்கிறார்.

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: பாயெலும் சோனாலி மாலும் (வலது) நாள் முழுக்க கடுமையாக உழைத்த பிறகு சிரித்து பேசிக் கொள்கிறார்கள். வலது: பாயெலுக்கு இப்போதுதான் 18 வயதாகிறது. இன்னும் வாக்காளராகக் கூட பதிவு செய்யவில்லை

PHOTO • Smita Khator
PHOTO • Smita Khator

இடது: வேலை தளத்தில் பானு மால். ‘கொஞ்சம் ஹரியாவும் (நொதிசோற்றில் தயாரிக்கப்படும் பாரம்பரிய மது வகை) வறுவல்களும் கொண்டு வா. நான் பஹாரியாவில் உனக்கொரு பாட்டு பாடுகிறேன்,’ என்கிறார் அவர். வலது: புலம்பெயர் மக்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும் குழந்தைகள் தாங்களாகவே பொம்மைகள் செய்து கொள்கின்றனர்

மீண்டும் ஒருமுறை அவர்களிடம் தேர்தல் குறித்து கேட்க முயன்றேன். “நாங்கள் செல்வோம், ஆனால், யாரும் எங்களை பார்க்க இங்கு யாரும் வரவில்லை. எங்களில் மூத்தவர்கள் வாக்களிப்பது முக்கியமென நினைப்பதால் நாங்கள் செல்கிறோம்.” மதுமிதா வெளிப்படையாக பேசுகிறார். இது அவரின் முதல் முறையும் கூட. பாயெலுக்கு இப்போதுதான் 18 வயதாகி இருப்பதால், இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை. “நான்கு வருடங்களுக்கு பிறகு, நானும் அவர்களை போல் ஆவேன்,” என்கிறார் சோனாலி. “நானும் வாக்களிப்பேன். ஆனால் அவர்களை போல் சீக்கிரம் மணம் முடித்துக் கொள்ள மாட்டேன்.” மீண்டும் சிரிப்பு கிளம்புகிறது.

அப்பகுதியிலிருந்து நான் கிளம்பியதும் இளம்பெண்களின் சிரிப்பும், குழந்தைகளின் சத்தமும் மங்கத் தொடங்கி, வெங்காயம் வெட்டும் பெண்களின் சத்தம் நிரம்புகிறது. அன்றையப் பொழுதின் வேலையை அவர்கள் முடித்து விட்டார்கள்.

“உங்கள் பகுதியில் வசிக்கும் யாராவது மால் பஹாரியா மொழி பேசுவார்களா?” என நான் கேட்டேன்.

“கொஞ்சம் ஹரியாவும் (நொதி அரிசியில் செய்யப்படும் பாரம்பரிய மதுவகை) வறுவல்களும் கொண்டு வா. நான் பஹாரியா மொழியில் உனக்கு பாடுகிறேன்,” என்கிறார் பானு மால் கிண்டலாக. 65 வயது விதவையான அந்த விவசாயத் தொழிலாளர், அவரின் மொழியில் சில வார்த்தைகளை சொல்லி விட்டு, அன்பாக, “எங்கள் மொழி கேட்க வேண்டுமெனில் கோவாசுக்கு வா!” என்றார்.

“நீங்களும் அம்மொழி பேசுவீர்களா?” இத்தகைய ஒரு கேள்வியை எதிர்க்கொண்டதும் சற்று குழப்பத்துடன் அஞ்சலி பார்த்தார். “எங்களின் மொழியா? இல்லை. கோவாசில் இருக்கும் முதியவர்கள் மட்டும்தான் எங்கள் மொழியை பேசுவார்கள். இங்கு பேசினால், எல்லாரும் எங்களை பார்த்து சிரித்து விடுவார்கள். நாங்கள் எங்கள் மொழியை மறந்துவிட்டோம். வங்க மொழிதான் பேசுகிறோம்.”

பிற பெண்களுடன் வசிப்பிடத்துக்கு செல்லும் பெண்களுடன் இணைந்த அஞ்சலி, “கோவாசில் எங்களுக்கு வீடும் எல்லாமும் இருக்கிறது. இங்கு வேலை மட்டும்தான் இருக்கிறது. சோறுதான் முக்கியம். ஓட்டு, மொழி மற்ற எல்லாமும் பிறகுதான்,” என்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Smita Khator

Smita Khator is the Chief Translations Editor, PARIBhasha, the Indian languages programme of People's Archive of Rural India, (PARI). Translation, language and archives have been her areas of work. She writes on women's issues and labour.

Other stories by Smita Khator
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan