“நாங்கள் 2018ம் ஆண்டு விவசாயிகளின் நீண்ட பேரணிக்கு தார்ப்பா வாசித்தோம். இன்றும் நாங்கள் தார்ப்பா வாசிக்கிறோம். எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் அதை வாசிப்போம்” என்று தனது கையில் உள்ள காற்று கருவியை சுட்டிக்காட்டி, ரூபேஷ் ரோஜ் கூறுகிறார். இந்த வாரம் மஹாராஷ்ட்ராவில் இருந்து டெல்லி நோக்கி, வேன், கார், டெம்போ மற்றும் ஜீப் ஆகியவற்றில், தில்லியின் எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து செல்லும் விவசாயிகள் குழுவில் உள்ள ஒருவர்தான் ரூபேஷ். இவர்கள் பெரும்பாலும் பஞ்சாப்-ஹரியானாவைச் சேர்ந்தவர்கள்.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்னர், இந்த சட்டங்களை நீக்கக்கோரி, நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிசம்பர் 21ம் தேதி, மஹாராஷ்ட்ராவின் 20க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் இருந்து குறிப்பாக நாசிக், நந்தேட் மற்றும் பால்கர் மாவட்டத்தில் இருந்து, டெல்லிக்கு வாகன பேரணி செல்ல 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய நாசிக்கில் உள்ள கோல்ப் மைதானத்தில் ஒன்றுகூடினர். அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மத்திய பிரதேச எல்லையையும் கடந்து, நாட்டின் தலைநகரத்தை நோக்கி செல்கின்றனர்.
நாசிக்கில் கூடியுள்ளவர்களில் 40 வயதான ரூபேசும் ஒருவர். இவர் பால்கரின் வடா நகரத்தில் வசிக்கும் வர்லி சமூகத்தைச் சேர்ந்தவர். எங்கள் தாப்பாவிற்கு நாங்கள் அதிக மரியாதை கொடுப்போம். நாங்கள் இப்போது இதை வாசித்துக்கொண்டு, ஆடிக்கொண்டே டெல்லி நோக்கி செல்வோம்“ என்று அவர் கூறுகிறார்.


“தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் பானை சுமந்தே சோர்ந்துவிட்டேன். எங்கள் குழந்தைகளுக்கும் எங்களுக்கும் தண்ணீர் வேண்டும்“ என்று கீதா கங்கோர்டே கூறுகிறார். மஹாராஷ்ட்ராவில் உள்ள துலே மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிவாசி கூலித்தொழிலாளி ஆவார். 60 வயதான மோகனாபாய் தேஷ்முக் மேலும் கூறுகையில், “நாங்கள் இங்கு இன்று தண்ணீருக்காக வந்திருக்கிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து, எங்கள் கிராமத்திற்கு ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம்“ என்றார்

அகமத் நகர் மாவட்டத்தில் சங்கம்னெர் தாலுகாவில் உள்ள ஷின்டோடி கிராமத்தில் ராது கெய்க்வாட்க்கு (இடது) 5 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. அதில் அவர்கள் சிறுதானியங்களும், சோயா பீன்ஸ்களும் பயிரிடுவார்கள். “எங்கள் அகமத் நகர் வறட்சி பாதித்த பகுதியாகும். எங்களிடம் நிறைய நிலம் உள்ளது. ஆனால் அதில் பயிர் செய்ய முடியாது. நாங்கள் எங்கள் விளைச்சலை விற்கக்கொண்டு செல்லும்போது, மண்டியில் எங்களுக்கு சரியான விலை கிடைக்காது. எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரிய தலைவர்கள் ஆதிவாசிகளான எங்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். அவர்களை போன்ற மற்றவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள்“ என்று அவர் கூறுகிறார்

கோலாப்பூர் மாவட்டம் ஷிரோல் தாலுகாவில் உள்ள ஜம்பாலி கிராமத்தைச் சேர்ந்த நாராயண் கெய்க்வாட் (72) கூறுகையில், “புரட்சிகள் செய்யாவிட்டால், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்காது“ என்கிறார். அவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கரும்பு பயிரிடுகிறார். “எங்கள் பஞ்சாப் விவசாயிகளுக்காக மட்டும் நாங்கள் டெல்லி செல்லவில்லை. புதிய சட்டங்களை எதிர்க்கவும்தான். எங்கள் கிராமத்தில் கரும்பு வயல்களுக்கு நிறைய தண்ணீர் வேண்டும். பனிக்காலங்களில் இரவு நேரங்களில் கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சுவது கடினமாக உள்ளது. எங்களால் பயிர் செய்ய முடியவில்லை “ என்று அவர் மேலும் கூறுகிறார்

“கிழக்கிந்திய கம்பெனி நம்மை அடிமையாக்கியதைபோல், மோடி அரசும் அதன் விவசாயிகளை அடிமையாக்குகிறது. அவர்கள் அதானியும், அம்பானியும் மட்டுமே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆதிவாசிகளான எங்களை எண்ணிப்பாருங்கள். நான் என் குழந்தைகளை இன்று அழைத்து வந்துள்ளேன். அப்போதுதான் இந்த நாடு விவசாயிகளை எவ்வாறு நடத்துகிறது என்பது அவர்களுக்கு தெரியும். இங்கு வருவது அவர்களுக்கு முக்கியமான பாடமாகும்“ என்று 60 வயதான ஷாம்சிங் பத்வி கூறுகிறார். அவர் பில் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரது மகன்கள் ஷங்கர்(16) மற்றும் பாகத் (11) ஆகியோரும், நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள தான்பூர் கிராமத்திலிருந்து செல்லும் வாகன பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 27 பேர் பங்கேற்றுள்ளனர்

நாசிக் மாவட்டம் சுர்கானா தாலுகாவைச் சேர்ந்த சன்ஸ்கார் பகாரியா தனது 10 வயதில் அவரது கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் முதன்முதலில் கலந்துகொண்டார். அப்போது முதல் மஹாராஷ்ட்ரா முழுவதும் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நாசிக்கில் இருந்து மும்பை வரை நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றுள்ளார். சன்ஸ்காரின் கூட்டுக்குடும்பத்திற்கு 13-14 ஏக்கர் வரை சொந்த நிலம் உள்ளது. அதை அவர்களின் பங்குதாரர்களுக்கு அவர்கள் கொடுத்துள்ளனர். “எங்கெல்லாம் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் நான் நிற்பேன். அதற்காக என்னை சிறையிலடைத்தாலும், நான் சிறை செல்வேன்“ என்று கூறுகிறார் 19தே வயதான சன்ஸ்கார். அவர் தனது 12ம் வகுப்பு நிறைவு செய்வதற்காக காத்திருக்கிறார். அவரின் தேர்வுகள் ஊரடங்கு மற்றும் தொற்று காரணமாக தள்ளிப்போடப்பட்டுள்ளது

டிசம்பர் 21ம் தேதி, 100க்கும் மேற்பட்ட நந்தேட் மாவட்ட விவசாயிகள், போராட்டக்காரர்களுடன், நாசிக்கில் இருந்து டெல்லி நோக்கிய பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். அதில் ஒருவர் நாம்டியோ ஷேட்மேக். மாவட்டத்தில் உள்ள பில்கான் கிராமத்தில் உள்ள கோண்ட் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 5 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. அதில் அவர் பருத்தியும், சோயா பீன்சும் பயிரிடுகிறார். 49 வயதான விவசாயி (நடுவில் நீல நிற சட்டை அணிந்திருப்பவர்) “எங்கள் விவசாயிகளுக்கு எதிரான அரசை எதிர்க்கும் போராட்டத்தில் வெல்வதற்காக நாங்கள் டெல்லிக்கு செல்கிறோம். எங்கள் கிராமம் மலையோர கிராமமாகும். எங்கள் வயல்களுக்கு தண்ணீர் இல்லை. நாங்கள் எங்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்துத்தருமாறு பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். தண்ணீர் இல்லாமல் எங்களால் பயிரிட முடியாது. ஆதிவாசிகளான நாங்கள் ஏற்கனவே கடனில் உள்ளோம்“ என்று கூறுகிறார்

“இங்கு மருத்துவமனை வசதிகள் அனைத்தும் மிக மோசமாக உள்ளது. சில நேரங்களில் பெண்கள் ஆட்டோவிலே பிரசவிக்க வேண்டியுள்ளது. அவசர சிகிச்சைக்கே 40-50 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய வேண்டும். ஏதேனும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நீங்கள் சென்றீர்கள் என்றால், அங்கு மருத்துவர்களே இருக்க மாட்டார்கள். அதனால்தான், நிறைய குழந்தைகள் தாயின் கருவறையிலேயே இறக்கின்றன“ என்று பால்கரின் தடேடா கிராமத்தைச் சேர்ந்த, 47 வயதான கிரண் கஹாலா கூறுகிறார். அவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவர் முக்கியமாக கோதுமை, கம்பு, நெல் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடுகிறார். பால்கர் மாவட்டத்தில் இருந்து 500 ஆதிவாசி விவசாயிகள் நாசிக்கிலிருந்து டெல்லி செல்லும் வாகன பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்

விஷ்ணு சவான் (63), பார்பானி மாவட்டத்தில் உள்ள காவ்நி பிம்ரி கிராமத்தில் அவருக்கு சொந்தமாக 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. அவர் இங்கு 65 வயதான காஷிநாத் சவுக்கானுடன் (வலது) வந்துள்ளார். “நாங்கள் 2018ம் ஆண்டு நடைபெற்ற நீண்ட பேரணியில் கலந்துகொண்டோம். இப்போது நாங்கள் இங்கு இந்த போராட்டத்திற்கு வந்துள்ளோம்“ என்று விஷ்ணு கூறுகிறார். அவர் பருத்தி மற்றும் சோயா பீன்சும் பயிரிடுகிறார். “எப்போது எங்கள் நலன் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்? எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் குடிநீருக்காக தினமும் 5 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எங்கள் வயல்களில் நாங்கள் என்ன பயிரிட்டாலும், வனவிலங்குகள் அவற்றை இரவு நேரங்களில் அழித்து விடுகின்றன. யாரும் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை. எங்கள் கோரிக்கைகளையும் கேட்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறினார்

“மூன்று சட்டங்களையும் அரசு திரும்பப்பெற வேண்டும். அதுவரை நாங்கள் அங்கேயே அமர்ந்திருப்போம். எங்கள் தாலுகாவில் ஏராளமான சிறு,குறு விவசாயிகள் உள்ளனர். அவர்கள் கரும்பு வயல்களில் வேலை செய்து கிடைக்கும் தினக்கூலி மூலம் குடும்பம் நடத்துகின்றனர். பெரும்பாலானோருக்கு 1-2 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. அதில் நிறைய பேர் கலந்துகொள்ள விரும்பினர். ஆனால், இது அறுவடை காலம் என்பதால், அங்கேயே இருந்துவிட்டனர்“ என்று சங்லி மாவட்டம் சிர்தோன் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான திகம்பர் காம்ளே (சிவப்பு சட்டை அணிந்தவர்) கூறுகிறார்

துக்காராம் ஷேட்சண்டி (70), அங்குள்ள வயதானவர்களில் இவரும் ஒரு விவசாயி, டெல்லி வாகன பேரணிக்கு தலைமை ஏற்றுள்ளார். சோலாப்பூர் கண்டால்கன் கிராமத்தில் உள்ள அவரது 4 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அவரது கடன் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. அவை கரும்பு விவசாயத்திற்காக பெரிய விவசாயிகளிடம் இருந்து வாங்கிய கடனாகும். “எனக்கு மிக மோசமான அறுவடையே கிடைத்தது, அதனால் கடனில் மாட்டிக்கொண்டேன். ஒரு கடனை அடைக்க வேறு கடன் வாங்கியே கடன் அதிகரித்துவிட்டது. நான் 24 சதவீத வட்டி விகிதத்தில் கடனை திருப்பி செலுத்தி வருகிறேன். இது நன்றாக உள்ளதா? என்னைப்போன்ற ஏழை விவசாயிகள் பணத்தை எங்கிருந்து கொண்டு வருவோம்? என்று அவர் கேட்கிறார்
தமிழில்: பிரியதர்சினி. R.