”ஒரு வருடத்தில் நாங்கள் பல விலங்குகளை சிறுத்தைகளுக்கு பறிகொடுக்கிறோம். இரவில் அவை வந்து தூக்கிச் சென்று விடுகின்றன,” என்கிறார் மேய்ப்பர் கவுர் சிங் தாகூர். பூட்டியா வகை நாட்டு நாயான ஷெரூ கூட அவற்றை விரட்ட முடிவதில்லை என்கிறார் அவர்.

இமயமலையின் கங்கோத்ரி தொடரின் ஒரு மலையின் உச்சியில் நின்று அவர் நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மேய்க்கும் மந்தைகள், உத்தர்காசி மாவட்டத்தின் சவுரா கிராமத்திலும் சுற்றியும் வசிக்கும் ஏழு குடும்பங்களுக்கு சொந்தமானவை. 2,000 மீட்டர்களுக்கு கீழே இருக்கும் அதே கிராமத்தில்தான் கவுர் சிங்கும் வசிக்கிறார். வருடத்தின் ஒன்பது மாதங்களுக்கு அந்த விலங்குகளை பார்த்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் அவர்  இருக்கிறார். மழையோ பனியோ அவர் வெளியே சென்று மேய்த்து விலங்குகளை எண்ணி சரி பார்த்து மீண்டும் கொண்டு வர வேண்டும்.

“சுமாராக ஒரு 400 செம்மறிகளும் 100 ஆடுகளும் இங்கு இருக்கின்றன,” என்கிறார் மற்றொரு மேய்ப்பரான ஹர்தேவ் சிங். 48 வயதான அவர் மலையில் சிதறி மேயும் மந்தையைப் பார்த்துக் கொள்கிறார். “அதிகமாகக் கூட இருக்கலாம்,” என எண்ணிக்கையில் நிச்சயமின்றி சொல்கிறார் அவர். கடந்த 15 வருடங்களாக ஹர்தேவ் இந்த வேலையைச் செய்து வருகிறார். “சில மேய்ப்பர்களும் உதவியாளர்களும் வந்து இரண்டு வாரங்கள் இருப்பார்கள். பிறகு சென்று விடுவார்கள். என்னைப் போன்றோர் தங்கி விடுவார்கள்,” என விளக்குகிறார்.

இது அக்டோபர் மாதம். கடுமையான குளிர்காற்று, உத்தரகாண்டின் கர்வால் இமயமலையின் கங்கோத்ரி தொடரில் இருக்கும் புல்வெளியான ‘சுளி டாப்’பில் புற்களை விளாசிக் கொண்டிருக்கிறது.  முட்டி மோதி மேய்ந்து கொண்டிருக்கும் விலங்குகளுக்கு மத்தியில் செல்லும் மேய்ப்பர்கள் தங்களைச் சுற்றி கம்பளி போர்த்தி இருக்கிறார்கள். இது நல்ல புல்வெளி என்கின்றனர் மேய்ப்பர்கள். மேலே இருக்கும் ஒரு பனிமேட்டிலிருந்து வரும் மெலிந்த ஓடை, விலங்குகளுக்கான உறுதியான நீராதாரமாக இருக்கிறது. பாறையின் பிளவுகளின் வழியாக நெளிந்து இறங்கி வரும் ஓடை, 2000 மீட்டருக்குக் கீழே வரைச் சென்று, பாகீரதி ஆற்றின் துணை நதியான பிலாங்கனா ஆற்றில் கலந்து முடிகிறது.

Guru Lal (left), Gaur Singh Thakur, and Vikas Dhondiyal (at the back) gathering the herd at sundown on the Gangotri range
PHOTO • Priti David

குரு லால் (இடது), கவுர் சிங் தாகூர் மற்றும் விகாஸ் தொண்டியால் (பின்னால் இருப்பவர்) ஆகியோர் கங்கோத்ரியில் சூரிய அஸ்தமனத்தில் மந்தைகளை ஒருங்கிணைக்கின்றனர்

Sheroo, the Bhutia guard dog, is a great help to the shepherds.
PHOTO • Priti David
The sheep and goats grazing on Chuli top, above Saura village in Uttarkashi district
PHOTO • Priti David

இடது: பூட்டியா வகை காவல் நாயான ஷெரூ, மேய்ப்பர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. வலது: செம்மறிகளும் ஆடுகளும் உத்தர்காசி மாவட்டத்தின் சவுரா கிராமத்துக்கு மேலே இருக்கும் சுளி டாப்பில் மேய்கின்றன

நூற்றுக்கணக்கான விலங்குகளை உயரமான மலைகளில் பார்த்துக் கொள்வதென்பது ஆபத்து நிறைந்த வேலை. மரங்களைத் தாண்டியிருக்கும் பெரிய பாறைகளும் அலையலையாய் இருக்கும் நிலப்பரப்பும் இரு கால்கள், நான்கு கால்கள் கொண்ட கொடிய விலங்குகளை சுலபமாக மறைக்க வல்லவை. மேலும் செம்மறிகளும் ஆடுகளும் குளிராலும் நோயாலும் சாகவும் கூடும். “நாங்கள் கூடாரத்துக்குள் இருப்போம். விலங்குகள் எங்களைச் சுற்றி மேயும். எங்களிடம் இரண்டு நாய்கள் உள்ளன. எனினும் ஆட்டுக்குட்டி மற்றும் செம்மறிக் குட்டிகளை சிறுத்தைகள் வேட்டையாடும்,” என்கிறார் மந்தையின் 50 செம்மறிகளை சொந்தமாக வைத்திருக்கும் ஹர்தேவ். கவுர் சிங்கிடம் 40 செம்மறிகள் இருக்கின்றன.

மேய்ப்பர்களும் இரு உதவியாளர்களும் அதிகாலை 5 மணியிலிருந்து விழித்திருக்கின்றனர். கத்தும் விலங்குகளை மலையில் மேல்நோக்கி மேய்த்து நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். செம்மறிகளின் குழுக்களைக் கலைத்து எல்லா செம்மறிகளுக்கும் உணவு கிடைக்க ஷெரூ உதவி செய்கிறது.

ஒருநாளில் 20 கிலோமீட்டரோ அல்லது அதற்கும் மேலோ மந்தை பசும்பரப்பைத் தேடிச் செல்லும். உயரமான இடங்களில் பனிப்பரப்புக்குக் கீழே புல் இருக்கும். ஆனால் ஓடைகளுடன் கூடிய அத்தகைய புல்வெளிகளை கண்டுபிடிப்பது சவாலான காரியம். புல்வெளி தேடி மேய்ப்பர்கள் வடக்குப் பக்கம் நூறு கிலோமீட்டருக்கும் அதிகமாக சென்று இந்தோ சீன எல்லையைக் கூட நெருங்கி விடுவதுண்டு.

Guru Lal, Gaur Singh Thakur, Vikas Dhondiyal and their grazing sheep on the mountain, with snowy Himalayan peaks in the far distance
PHOTO • Priti David

இமயமலையின் பனிமலைகள் தூரத்தில் இருக்கும் பின்னணியில் குரு லால், கவுர் சிங் தாகூர், விகாஸ் தொண்டியால் மற்றும் அவர்களின் செம்மறிகள்

மேய்ப்பவர்கள் சிறு கூடாரங்களில் தங்குவார்கள். சில நேரங்களில், கால்நடைகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டிருக்கும் ‘சன்னி’ என்கிற கல் குடிலில், கூரையாக பிளாஸ்டிக் பரப்பு போர்த்தியும் தங்குவதுண்டு. மேய்ச்சல் நிலங்களைத் தேடி அவர்கள் மேலே செல்லச் செல்ல, மரங்கள் குறையும். மேலும் கீழுமாக சென்று சமையலுக்கு விறகு சேகரிப்பதில் அவர்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழிக்கின்றனர்.

“வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் நாங்கள் வீட்டை விட்டு இருக்கிறோம். இங்கு வருவதற்கு முன் கங்கோத்ரியின் ஹர்சிலில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தோம். குளிர் அதிகமாகிக் கொண்டிருப்பதால் நாங்கள் இனி எங்கள் வீடுகளை நோக்கி இறங்கிச் செல்வோம்,” என்கிறார் உத்தர்காசி மாவட்டத்தின் பத்வாரி தாலுகாவிலிருக்கும் சவுராவுக்கு அருகே உள்ள ஜம்லோ குக்கிராமத்தில் வசிக்கும் ஹர்தேவ். சவுராவில் ஒரு பிகாவுக்கும் (ஒரு ஏக்கரின் ஐந்தில் ஒரு பங்கு) சற்று குறைவான நிலம் வைத்திருக்கிறார். அவரின் மனைவியும் குழந்தைகளும் நிலத்தைப் பார்த்துக் கொள்கின்றனர். அதில் அவர்கள் அரிசி மற்றும் ராஜ்மா ஆகியவற்றை சுய பயன்பாட்டுக்காக விளைவிக்கின்றனர்.

அசைய முடியாதளவுக்கு பனி இருக்கும் மூன்று குளிர்கால மாதங்களில் மந்தையும் மேய்ப்பர்களும் கிராமங்களில் தங்கியிருப்பார்கள். விலங்குகளை பரிசோதித்து எண்ணிக்கையை உரிமையாளர்கள் கணக்கெடுப்பார்கள். ஒரு விலங்கின் இழப்பு, விலங்குகளை பராமரிக்க மேய்ப்பர்கள் உரிமையாளர்களிடமிருந்து மாதந்தோறும் ஈட்டும் 8,000-10,000 ரூபாயில் கழிக்கப்படும். உதவியாளர்களுக்கு கருணையின் அடிப்படையில் சன்மானம் வழங்கப்படும். 5-10 ஆடுகளையோ செம்மறிகளையோ ஊதியமாக அவர்கள் பெறுவார்கள்.

Crude stone dwellings called channi, mostly used for cattle, are found across the region.
PHOTO • Priti David
The herders (from left): Hardev Singh Thakur, Guru Lal, Vikas Dhondiyal and Gaur Singh Thakur, with Sheroo, their guard dog
PHOTO • Priti David

இடது: விலங்குகள் தங்கவென அப்பகுதி முழுக்கக் காணப்படும் சன்னி எனப்படும் கல் குடில்கள். வலது: மேய்ப்பர்கள் (இடதிலிருந்து): ஹர்தேவ் சிங் தாகூர், குரு லால், விகாஸ் தொண்டியால் மற்றும் கவுர் சிங் தாகூர் ஆகியோர் அவர்களின் வேட்டை நாய் ஷெரூவுடன்

சிறு டவுன்களிலும் மாவட்டத் தலைநகரான உத்தர்காசி போன்ற இடங்களிலும் செம்மறியும் ஆடும் 10,000 ரூபாய் வரை விற்கப்படும். “எங்களுக்கு சர்க்கார் (அதிகாரிகள்) ஏதேனும் செய்யலாம். செம்மறியையும் ஆடுகளையும் விற்கவென நிரந்தரமான இடம் ஒன்றை அவர்கள் உருவாக்கலாம். அதனால் எங்களுக்கு நல்ல விலை கிடைக்கும்,” என்கிறார் சளியால் பாதிக்கப்பட்டிருக்கும் கவுர் சிங். அவரைப் போன்ற மேய்ப்பர்கள், மருத்துவ உதவி கிடைப்பதில் உள்ள சிரமத்தால், நோய்க்கான அறிகுறிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு வழிபோக்கர்களை சார்ந்திருக்கிறார்கள்.

“இந்த வேலைக் கிடைக்க இமாச்சலப் பிரதேசத்திலிருந்து 2000 கிலோமீட்டர் பயணித்து வந்தேன்,” என்கிறார் ஷிம்லா மாவட்டத்தின் தோத்ரா-க்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது உதவியாளர் குரு லால். “கிராமத்தில் வேலை ஏதுமில்லை,” என்னும் லால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒன்பது மாத வேலைக்காக 10 ஆடுகள் அவருக்குக் கிடைக்கும் என்கிறார். மனைவியும் 10 வயது மகனும் இருக்கும் வீட்டுக்கு திரும்புகையில் அவற்றை அவர் விற்கவோ வளர்க்கவோ செய்வார்.

ஹர்தேவ் சிங் மேய்ப்பரானதற்கு வேலைவாய்ப்பின்மையும் காரணம். “கிராமத்தில் இருக்கும் மக்கள் மும்பை ஹோட்டல்களில் வேலை பார்க்கச் செல்கிறார்கள். இங்கு மலையில் மழையாகவோ குளிராகவோ இருக்கும். யாரும் இந்த வேலையை விரும்புவதில்லை. தினக்கூலி வேலையை விட இந்த வேலை கடினமானது. ஆனால் தினக்கூலி வேலை எங்கே கிடைக்கிறது?” எனக் கேட்கிறார் அவர்.

The shepherds at work, minding their animals, as the sun rises on the Gangotri range in the background
PHOTO • Priti David

மேய்ப்பர்கள் விலங்குகளை பராமரித்துக் கொண்டிருக்க, பின்னணியில் இருக்கும் கங்கோத்ரி தொடரில் சூரியன் உதிக்கிறது

இக்கட்டுரையை எழுத உதவிய அஞ்சலி ப்ரவுன் மற்றும் சந்தியா ராமலிங்கம் ஆகியோருக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்

தமிழில்: ராஜசங்கீதன்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan