மார்ச் 25, 2020 அன்று அறிவிக்கப்பட்ட முதல் கோவிட் ஊரடங்கு கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியது.
“கையில் இருந்த கொஞ்சமும் காணாமல் போனது.” ஜம்முவின் கட்டுமானத் தொழிலாளர்களான மோகன் லால் மற்றும் அவரது மனைவி நர்மதபாய் ஆகியோரின் சேமிப்பு, ஊரடங்கின் தொடக்கத்தில் 2,000 ரூபாய்க்கு சரிந்தது . உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியங்களை வாங்க அவர்கள் ஒப்பந்ததாரரிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 23 சதவிகிதம் வரை 2020ம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயர்ந்தது. பிப்ரவரி 2020ம் ஆண்டில் இருந்த 7.3 சதவிகிதத்தைவிட அது மும்மடங்கு அதிகம் எனக் குறிப்பிடுகிறது கிராமப்புற மற்றும் விவசாய இந்தியாவின் நிலை குறித்த அறிக்கை 2020 . தொற்றுக்கு முன் (2018-19), அந்த விகிதம் 8.8 சதவிகிதத்தை ஒட்டி இருந்தது.
ஊரடங்கினால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலை இழந்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகினர்.
“ஊரடங்குக்கு ஒரு மாதம் கழித்து நாங்கள் வீட்டுக்கு வந்தோம்,” என நினைவுகூருகிறார் மகாராஷ்டிரா பீடின் அர்ச்சனா மந்த்வே. குறைந்து கொண்டிருந்த சேமிப்பு மற்றும் வருமானமின்மை யால், ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு கிராமம் திரும்புவதை தவிர்த்து வேறு வழியிருக்கவில்லை. பயணிக்க தடை இருந்ததால், அவர்கள் இரவில் மட்டும்தான் செல்ல முடியும். ஒரு மோட்டார் சைக்கிளில் அவுரங்காபாதிலிருந்து 200 கிலோமீட்டர் பயணித்தனர்.
இந்தியத் தொழிலாளர்கள் மீதான கோவிட் தாக்கத்தை பற்றி 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை பாரி வெளியிட்டிருக்கிறது. பாரி நூலகத்தின் கோவிட் 19 மற்றும் உழைப்பு ஆகிய பகுதிகளில், இந்திய தொழிலாளர் நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவற்றை ஆராயும் இக்கட்டுரைகளுக்கு ஆதாரமான ஆய்வுகளும் அறிக்கைகளும் கிடைக்கின்றன. அரசாங்கம், சுயாதீன நிறுவனங்கள் மற்றும் ஐநா அமைப்புகள் வெளியிட்டவை அறிக்கைகளும் அவற்றில் அடக்கம்
சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் (ILO) சர்வதேச ஊதிய அறிக்கை 2020-21 -ன்படி, பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை உலகளவில் நிலவுகிறது. கோவிட் தொற்றின் தாக்கத்தில் 345 மில்லியன் முழு நேர வேலைகள் பறிபோயிருக்கின்றன. விளைவாக உலகளாவிய வகையில் தொழிலாளர் வருமானம் 10.7 சதவிகிதம் சரிந்திருக்கிறது.
இவற்றுக்கிடையில் ஆக்ஸ்ஃபோமின் 2021ம் ஆண்டு அறிக்கையான சமத்துவமின்மை வைரஸ் என்கிற அறிக்கையின்படி, சர்வதேச கோடீஸ்வரர்களின் செல்வம், மார்ச் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் 3.9 ட்ரில்லியன் டாலர்களுக்கு உயர்ந்திருக்கிறது. மறுபக்கத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் வருமானம் 2020-ல் 22.6 சதவிகிதத்துக்கு சரிந்திருப்பதாக சர்வதேச தொழிலாளர் நிறுவன அறிக்கை குறிப்பிடுகிறது.
தில்லியின் குயவரான ஷீலா தேவியின் 10,000 ரூபாயிலிருந்து 20,000 (விழாக்காலத்தில்) ரூபாய் வரையிலான குடும்ப வருமானம், தொற்று தொடங்கிய மாதங்களில் வெறும் 3,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை சுருங்கியது. குஜராத்தின் கச்ச் பகுதியை சேர்ந்த குயவரான கும்பார் ஹுசேனோ ஏப்ரல் - ஜூன் 2020-ல் எந்த விற்பனையையும் பார்க்கவில்லை.
”இப்போதைக்கு என் இரு குழந்தைகளும் நானும் பருப்பு மற்றும் ரேஷன் அரிசி ஆகியவற்றில்தான் வாழ்கிறோம். எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்க முடியுமென தெரியவில்லை,” என்கிறார் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த கரகாட்டக்காரரான எம்.நல்லுத்தாயி. அவரின் வருமானமும் வேலையும் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தில்லியின் பெண் வீட்டு ஊழியர்கள் மீதான கோவிட் தேசிய ஊரடங்கின் பாதிப்பு அறிக்கை க்காக மே 2020-ல் கணக்கெடுக்கப்பட்ட வீட்டு ஊழியர்களில் 83 சதவிகிதம் பேர் ஊரடங்கு காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் சந்தித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 14 சதவிகிதம் பேர், குடும்ப செலவுகளை கூட எதிர்கொள்ள முடியாமல், உறவினர்களிடமும் பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
புனேவின் வீட்டுப் பணியாளர்களுக்கும் இதே நிலைதான். “வீட்டு வேலை பார்த்து வரும் பணம், வயிறு நிரப்பவே போதுமானதாக இருக்கிறது. இப்போது வேலையும் இல்லை. பணத்துக்கு நாங்கள் எங்கே போவது?” எனக் கேட்கிறார் அபோலி காம்ப்ளே.
இந்தியாவின் தொழிலாளர்களில் கோவிட் தொற்றுக்கு முன் 20 சதவிகிதம் பெண்கள் இருந்தனர். தொற்றினால் நேர்ந்த வேலையிழப்பில் 23 சதவிகிதம் பெண்கள் வேலைகள் இழந்ததாக ஆக்ஸ்ஃபோமின் அதிகாரம், லாபங்கள் மற்றும் தொற்று என்கிற அறிக்கை தெரிவிக்கிறது. தொற்றுக்காலத்திலும் அவர்கள் ‘அத்தியாவசிய’ தொழிலாளர்களின் ஒரு பகுதியாக இருந்தனர்.
மகாராஷ்டிராவின் சுகாதார செயற்பாட்டாளரான ஷாபாய் காரத், கோவிட் நோயாளிகளை அடையாளம் காணும் வேலையுடன் வீடு வீடாக சென்று அவரின் வழக்கமான வேலைகளையும் செய்தார். அவரின் குடும்ப உறுப்பினர்களை தொற்று பாதித்தபோது, விவசாய நிலத்தையும் நகைகளையும் அவர் விற்க வேண்டி வந்தது. அவரது கடினமான பணிக்கு அவருக்கு (மார்ச் 2020லிருந்து ஆகஸ்ட் 2021 வரை) கிடைத்த ஒரே உதவி, 22 சாதாரண முகக்கவசங்களும் ஐந்து N95 முகக்கவசங்களும் தான். “இப்பணியிலிருக்கும் ஆபத்துக்கு ஏற்றார்போல் எங்களின் வருமானம் இருக்குமென நினைக்கிறீர்களா?”
தொழிலாளர்களின் நிலை, தொற்று தொடங்கிய ஒரு வருடம் வரை சிக்கலில்தான் இருந்தது. Voices of the Invisible Citizens II: One year of Covid-19 அறிக்கையின்படி தொற்றுக்காலத்துக்குப் பிறகு 73 சதவிகித தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. 36 சதவிகிதம் பேரின் ஊதியம் குறைக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய Code on Social Security, 2020 “எல்லா தரப்பு தொழிலாளர்களுக்கும் பயன்படும் வகையில் சமூக பாதுகாப்பை விரிவாக்க, சமூக பாதுகாப்பு சட்டங்களை தொகுத்து திருத்துவதை” நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இன்னும் அடிப்படை பலன்களை கூட பெற முடியாமல் இருக்கின்றனர்.
அரசு திட்டங்களை செயல்படுத்துவதிலுள்ள இடைவெளிகளை ஆராயவும் களநிலவரத்தை புரிந்து கொள்ளவும் பாரி நூலகம் சிறந்த இடமாகும்.
முகப்பு படம்: ஸ்வதேஷ் ஷர்மா
தமிழில் : ராஜசங்கீதன்