தனது பிரச்னைகளை அமைதியாக பட்டியலிடுகிறார் எஸ். முத்துலட்சுமி. கரகாட்டம் எனும் பாரம்பரிய கலை வடிவத்தை வாழ்வாதாரமாகக் கொள்வதற்கு திறமையும், இரவு முழுவதும் ஆடுவதற்கு உடலில் தெம்பும் வேண்டும் என்கிறார். இருப்பினும் இக்கலைஞர்கள் இழிவாக நடத்தப்படுவதாலும், களங்கப்படுத்தப்படுவதாலும் சமூகத்தில் பாதுகாப்பின்றி உணர்கின்றனர். இந்த 44 வயது கலைஞர் இதுபோன்ற அனைத்து சிக்கல்களையும் தாண்டி வந்தவர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் ஒற்றை பெண்மணியாக தனது வாழ்வாதாரத்தின் அனைத்து செலவுகளையும் சமாளித்து தனது வருமானத்தில் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இப்போது கோவிட்-19 அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் குறித்து பேசுகையில் அவரது குரலில் கோபமும், வலியும் வெளிப்படுகிறது. “பாழாப்போன கரோனா” என்று நோயை அவர் திட்டுகிறார். “பொது நிகழ்ச்சிகள் இல்லாததால் வருவாயின்றி இருக்கிறோம். எனது மகள்களிடம் பணம் பெறும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.”

“கடந்தாண்டு ரூ.2000 அளிப்பதாக அரசு உறுதி அளித்தது,” என்கிறார் முத்துபேச்சி. “ஆனால் கையில் ரூ.1000 தான் கிடைத்தது. இந்தாண்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.” 2020 ஏப்ரல்-மே மாதங்களில் மாநில நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு சிறப்பு தொகையாக ரூ.1000 இருமுறை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

பெருந்தொற்று தொடங்கியது முதல் மதுரை மாவட்டத்தில் மட்டுமே 1,200 கலைஞர்கள் வேலையிழந்து சிரமப்பட்டு வருகின்றனர் என்கிறார் நாட்டுப்புற கலைகளின் ஆசானும், புகழ்மிக்க கலைஞருமான மதுரை கோவிந்தராஜ். அவனியாபுரம் நகரின் அம்பேத்கர் நகர் பகுதியில் கிட்டதட்ட 120 கரகாட்ட கலைஞர்கள் வசிக்கும் இடத்தில் மே மாதம் முத்துபேச்சியையும், மற்றவர்களையும் நான் சந்தித்தேன்.

கிராமப்புற நடனக் கலையான கரகாட்டம் சமய பண்டிகைகள், கலாச்சார நிகழ்வுகள், திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது நிகழ்த்தப்படுகின்றன. ஆதி திராவிட வகுப்பின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இக்கலைஞர்கள். அவர்கள் வாழ்வாதாரத்திற்கு இக்கலையை சார்ந்துள்ளனர்.

கரகாட்டம் எனும் அலங்கரிக்கப்பட்ட குடத்தை தலையில் சமநிலைப்படுத்தியபடி ஆண்கள், பெண்கள் குழுவாக கரகம் ஆடுவார்கள். அவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும் இரவு முழுவதும் ஆடுவார்கள்.

PHOTO • M. Palani Kumar

அவனியாபுரம் வீட்டிற்கு வெளியே சமையல் செய்யும் கரகாட்ட கலைஞர் ஏ. முத்துலட்சுமி (இடது), அவரது வீட்டிற்குள் அடுப்பு வைக்க இடமில்லை

பிப்ரவரி முதல் செப்டபம்பர் மாதங்கள் வரை நடக்கும் பல்வேறு கோயில் திருவிழாக்கள் அவர்களின் அன்றாட வருமானத்திற்கு பெரும் பங்களிப்பு செய்கிறது. இக்கலைஞர்கள் ஆண்டு முழுவதும் தாக்குபிடிக்கும் வகையில் வருவாய் ஈட்ட தள்ளப்படுகின்றனர் அல்லது நிலைமையை சமாளிக்க கடன் வாங்குகின்றனர்.

பெருந்தொற்று அவர்களின் குறைந்த வருமானத்தையும் பாதித்துவிட்டது. நகைகளையும், தங்களின் வீடுகளில் உள்ள ஓரளவுக்கு மதிப்புள்ள பொருட்களையும் அடகு வைத்து வாழ்க்கை நடத்தும் இக்கலைஞர்கள் இப்போது கவலையிலும், பதற்றத்திலும் இருக்கின்றனர்.

“எனக்கு தெரிந்ததெல்லாம் கரகாட்டம்தான்,” என்கிறார் 30 வயதாகும் எம். நல்லுதாய். கணவரின்றி 15 ஆண்டுகளாக அவர் கரகாட்டம் ஆடி வருகிறார். “இப்போது ரேஷனில் கொடுக்கும் அரிசி, பருப்புகளைக் கொண்டு நானும் எனது இரு பிள்ளைகளும் வாழ்கிறோம். இது எவ்வளவு காலம் முடியும் என எனக்குத் தெரியவில்லை. மாதத்திற்கு 10 நாட்கள் வேலை தேவைப்படுகிறது. அப்போதுதான் என்னால் குடும்பத்தையும், பள்ளி கட்டணத்தையும் சமாளிக்க முடியும்.”

தனியார் பள்ளியில் படிக்கும் தனது பிள்ளைக்காக ஆண்டிற்கு ரூ.40,000 செலுத்துகிறார் நல்லுதாய். இத்தொழிலை விடுமாறு குழந்தைகள் சொல்வதாக அவர் தெரிவிக்கிறார். நன்றாக படித்தால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் நம்புகிறார். ஆனால் அவை யாவும் பெருந்தொற்று தாக்குவதற்கு முன்பிருந்த நிலை. “எங்களின் அன்றாட தேவைகளையே  எதிர்கொள்வது இப்போது கஷ்டமாக உள்ளது.”

திருவிழாவில் ஆடுவதன் மூலம் ரூ.1500-3000 (ஒருவருக்கு) வரை கரகாட்டகாரர்கள் வருமானம் ஈட்டுகின்றனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சி என்றால் ஒப்பாரி பாடுவதற்கு ரூ.500-800 வரை மட்டுமே கிடைக்கும்.

பெருந்தொற்று காலத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள்தான் முதன்மையான வருவாய் ஆதாரம் சொல்கிறார் 23 வயதாகும் ஏ. முத்துலட்சுமி. கட்டுமானத் தொழிலாளர்களான பெற்றோருடன் 8 x 8 அடி அறை கொண்ட அம்பேத்கர் நகர் வீட்டில் அவர் வசிக்கிறார். பெருந்தொற்று காலத்தில் யாருக்கும் போதிய வருமானமில்லை. ஊரடங்கு தளர்வுகளின் போது சிறிது நிவாரணம் கிடைத்தாலும், கரகாட்ட கலைஞர்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டு விட்டது. அவ்வப்போது நடைபெறும் கோயில் திருவிழாக்களில் கூட வழக்கமான தொகையில் கால் பங்கு அல்லது நான்கில் மூன்று பங்கு மட்டுமே கிடைக்கிறது.

மூத்த நாட்டியக்காரரான 57 வயது ஆர். ஞானம்மாள் தொடர் நிகழ்வுகளால் மனச்சோர்வு அடைந்துள்ளார். “எனக்கு மிகவும் வெறுப்பாக உள்ளது,” என்கிறார் அவர். “என் வாழ்க்கையை முடித்து கொள்ளக் கூட சில சமயம் நினைத்தது உண்டு…”

PHOTO • M. Palani Kumar

மூத்த கலைஞரும், ஐந்து வயது சிறுமியின் பாட்டியுமான ஆர். ஞானம்மாள் பல இளம் கரகாட்ட கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்

ஞானம்மாளின் இரு மகன்களும் இறந்துவிட்டனர். அவரும், அவரது இரு மருமகள்கள், ஐந்து வயது பேத்தி உட்பட அனைவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்துகின்றனர். இப்போதும் அவர் தனது இளைய மருமகளுடன் சேர்ந்து நடனமாடுகிறார். அவர்கள் இல்லாதபோது அவரது மூத்த மருமகள் தையல் தைத்து வீட்டை நிர்வகிக்கிறார்.

திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் அதிகமாக இருந்த காலத்தில், சாப்பிடக்கூட போதிய நேரம் இருக்காது, என்கிறார் 35 வயது எம். அழகுபாண்டி. “ஆண்டிற்கு 120 முதல் 150 நாட்கள் வரை வேலை இருந்தது.”

அழகுபாண்டி படிக்காத போதிலும் அவரது பிள்ளைகள் கல்வி பெற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாக அவர் சொல்கிறார். “என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். கணினி அறிவியலில் இளநிலை படிக்கிறாள்.” இணையதள வகுப்புகள் தான் பெரிய வடிகால் என்கிறார் அவர். “பணத்திற்கு நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது முழு கட்டணத்தையும் செலுத்த சொல்கிறார்கள்.”

33 வயதாகும் டி. நாகஜோதி புகழ்மிக்க கலைஞரான அவரது அத்தையிடம் இருந்து கரகாட்டத்தை கற்றவர். அவரை கவலைகள் அழுத்துகின்றன. அவரது கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தது முதல் சொந்த வருமானத்தில் சமாளித்து வருகிறார். “என் பிள்ளைகள் 9 மற்றும் 10ஆம் வகுப்புகள் படிக்கின்றனர். அவர்களுக்கு உணவளிப்பதே கஷ்டமாக உள்ளது,” என்கிறார் அவர்.

பண்டிகை காலத்தில் தொடர்ந்து 20 நாட்கள் நாகஜோதி ஆடியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டால் கூட மருந்துகளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆடி இருக்கிறார். “எது நடந்தாலும் நான் நடனத்தை நிறுத்தியதில்லை. நான் கரகாட்டத்தை நேசிக்கிறேன்,” என்கிறார் அவர்.

பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கை தலைகீழாக புரண்டுள்ளது. அவர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கும் இசைக்காகவும், மாறும் மேடைகளுக்காகவும், பணத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.

“நாங்கள் இந்த வேலையை விட்டுவிட வேண்டும் என பிள்ளைகள் விரும்புகின்றனர்,” என்கிறார் அழகுபாண்டி. “அவர்களுக்கு நல்ல கல்வி, வேலை கிடைத்தால் மட்டுமே எங்களால் அதை செய்ய முடியும்.”

PHOTO • M. Palani Kumar

எம். அழகுபாண்டி தனது கரகத்துடன். அலங்கரிக்கப்பட்ட பானையான கரகத்தை தலையில் சமநிலைப்படுத்தியபடி கலைஞர்கள் ஆடுவார்கள். தனது பாதையை பிள்ளைகள் பின்பற்றுவதை அவர் விரும்பவில்லை

PHOTO • M. Palani Kumar

கரகாட்ட நிகழ்ச்சிகளின் போது தவில் வாசிக்கும் 64 வயது இசை கலைஞர் என். ஜெயராமன்

PHOTO • M. Palani Kumar

ஏ. உமா மற்றும் அவரது கணவர் நல்லுராமன் இருவரும் கலைஞர்கள். உமா கரகாட்டம் ஆடுவார். அவரது கணவர் பறை இசைப்பார்.

PHOTO • M. Palani Kumar

கலைஞர்களின் வாத்திய கருவிகள் வீடுகளில் கிடத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி பெருந்தொற்றால் மாத கணக்கில் அவர்கள் வேலையிழந்துள்ளதைக் என்பதை காட்டுகிறது

PHOTO • M. Palani Kumar

வேலையிழப்பால் கடன் சுமையில் சிக்கியுள்ளார் எம். நல்லுதாய். இப்பெருந்தொற்று தொடர்ந்தால் தனது பிள்ளைகளின் கல்வி தடைப்பட்டு விடும் என்ற கவலையில் அவர் இருக்கிறார்

PHOTO • M. Palani Kumar

கரகாட்ட கலைஞர்களுக்கான மரியாதை மறைந்து போனதுடன் மோசமாக நடத்தப்படுவதாகவும் சொல்கிறார் எஸ். முத்துப்பேச்சி. சில சமயங்களில் உடை மாற்ற அவர்களுக்கு அறைகள்கூட தரப்படுவதில்லை

PHOTO • M. Palani Kumar

டி. நாகஜோதி 12 வயதிலிருந்து ஆடி வருகிறார். கரகாட்ட ஆடையில் முதன்மையானது அலங்கரிக்கப்பட்ட கரகம்தான்.

PHOTO • M. Palani Kumar

பெருந்தொற்றால் வாடகை கொடுக்க முடியாத கரகாட்ட கலைஞரான 29 வயது எம். சூரியதேவி பறை இசைக்கும் தனது கணவர் வி. மகாலிங்கத்துடன். குழந்தைகளை சில மாதங்களுக்கு தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார் சூர்யாதேவி. உள்ளூர் என்ஜிஓக்களின் உதவியோடு குடும்பம் தற்போது சமாளித்து வருகிறது.

PHOTO • M. Palani Kumar

தனது அலங்கார ஆடையில் நிற்கிறார் என். முத்துபாண்டி. கரகாட்டத்துடன் அவர் 50 வயதிலும் நாடகங்களில் கோமாளி வேடம் அணிகிறார். இப்பெருந்தொற்று நீடித்தால் தனது தொழில் முற்றிலும் பாழாகிவிடும் என அவர் அஞ்சுகிறார்.

PHOTO • M. Palani Kumar

அவனியாபுரத்தின் அருகமை பகுதியான அம்பேத்கர் நகரில் தனது வீட்டிற்கு வெளியே நிற்கும் 33 வயது எஸ். தேவி. அவர் குழந்தைப் பருவம் முதலே கரகாட்டம் ஆடி வருகிறார்

செய்தியாளருடன் இணைந்து இக்கட்டுரையை எழுதியவர் அபர்ணா கார்த்திகேயன்.

தமிழில்: சவிதா

M. Palani Kumar

M. Palani Kumar is Staff Photographer at People's Archive of Rural India. He is interested in documenting the lives of working-class women and marginalised people. Palani has received the Amplify grant in 2021, and Samyak Drishti and Photo South Asia Grant in 2020. He received the first Dayanita Singh-PARI Documentary Photography Award in 2022. Palani was also the cinematographer of ‘Kakoos' (Toilet), a Tamil-language documentary exposing the practice of manual scavenging in Tamil Nadu.

Other stories by M. Palani Kumar
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha