நவம்பர் 15, 2023 அன்று என். சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102; அவருக்கு சந்திரசேகர், நரசிம்மன் என்ற இரு மகன்களும் சித்ரா என்ற மகளும் இருக்கிறார்கள்.

டிசம்பர் 2019ல் பி. சாய்நாத்துக்கும் பாரிக்கும் அவர் அளித்த பேட்டியில் பெரும்பாலும் போராட்டத்தில் கழிந்த அவரது வாழ்வைப் பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டார். வாசிக்க: சங்கரய்யா: தொண்ணூறு ஆண்டுகால புரட்சியாளர்

அந்த பேட்டி எடுக்கப்பட்ட போது அவருக்கு 99 வயது. காலமும் வயதும் அவரை இன்னமும் சுருங்கச் செய்யவில்லை. அவரது குரல் கம்பீரமாகவே இருந்தது, நினைவு துல்லியமாக. அவரிடத்தில் பெரும் நம்பிக்கையும் பற்றும் இருந்தது.

சுதந்திரப் போராட்டத்தின் போது சங்கரய்யா எட்டு வருடங்கள் சிறையில் கழித்தார். 1941ல் அமெரிக்கன் கல்லூரியின் மாணவராக மதுரையிலும் பின்னர் 1946ல் மதுரை சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராகவும் அவர் சிறையில் இருந்தார். இந்திய அரசு பின்னர் மதுரை சதி வழக்கை சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது.

நல்ல மாணவராக இருந்த போதிலும் சங்கரய்யாவால் தனது இளங்கலை படிப்பை முடிக்க இயலவில்லை. காரணம் 1941ல் அவரது இளங்கலை இறுதித் தேர்வுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 14, 1947 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு ஒரு நாளைக்கு முன்பு மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவர் விடுதலை செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி 1948ல் தடை செய்யப்பட்ட போது மூன்று வருடங்கள் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தார். சங்கரய்யாவின் தாய்வழி தாத்தா பெரியாரிய கருத்தியலை ஏற்றுக் கொண்டவர் என்பதால் சிறு வயதிலேயே அரசியல் சூழலில்தான் சங்கரய்யா வளர்ந்தார். கல்லூரிக் காலத்தில் அவருக்கு இடதுசாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பணியாற்றினார்.  விவசாயிகளுக்கான இயக்கத்தை கட்டமைப்பதில் தொடங்கி பல போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார்.

சுதந்திரத்துக்காக போராடிய போதும், நிறைய இடதுசாரி தலைவர்களைப் போல, சங்கரய்யாவும் பிற பிரச்னைகளுக்காகவும் போராடினார். “சமமான கூலி, தீண்டாமை, கோயில் நுழைவு இயக்கங்கள் போன்றவற்றில் நாங்கள் போராடினோம்” என்று அவர் தனது பேட்டியில் சொன்னார். “ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது ஒரு முக்கியமான நகர்வு. இடதுசாரிகள் அதற்காக போராடினார்கள்.”

பி.சாய்நாத்துக்கு அவர் அளித்த பேட்டியை வாசிக்கவும், வீடியோவைப் பார்க்கவும்: சங்கரய்யா: தொண்ணூறு ஆண்டுகால புரட்சியாளர்

தமிழில்: கவிதா முரளிதரன்

Translator : Kavitha Muralidharan

Kavitha Muralidharan is a Chennai-based independent journalist and translator. She was earlier the editor of 'India Today' (Tamil) and prior to that headed the reporting section of 'The Hindu' (Tamil). She is a PARI volunteer.

Other stories by Kavitha Muralidharan