"மாலையில், எல்லா விலங்குகளும் இங்கே ஓய்வெடுக்க வருகின்றன. இது ஒரு பர்கத் [ஆல] மரம்.”

சுரேஷ் துர்வே, தான் வேலை செய்யும் போஸ்டர் அளவிலான பேப்பரில், நேர்த்தியான வண்ணக் கோடுகளைப் போட்டபடி நம்மோடு பேசுகிறார். "இது ஒரு பீப்பல் மரம். இதில் நிறைய பறவைகள் வந்து அமரும்," என்று அவர் பாரியிடம் கூறுக்கொண்டே, இளைப்பாற வசதி தரும் மரத்திற்கு இன்னும் அதிக கிளைகளை வரைகிறார்.

49 வயதான இந்த கோண்ட் கலைஞர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது வீட்டில் தரையில் அமர்ந்துள்ளார். மேல் தளத்தில் உள்ள அறையின் கதவு மற்றும் ஜன்னல்களில் இருந்து ஒரு மரத்தைக் கடந்து வீட்டினுள் ஒளி விழுகிறது. அவருக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய ஜாடி பச்சை பெயிண்ட்டில் பிரஷ்ஷை முக்கியபடி அவர் பேசுகிறார். "முன்பு நாங்கள் மூங்கில் குச்சிகள் [பிரஷ்கள்] மற்றும் கிலேரி கே பால் [அணிலின் முடி] போன்றவற்றைப் பிரஷ்களாக பயன்படுத்தினோம். அவை [அணில் முடி] இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வகையில் நல்லது தான். எனவே, இப்போது பிளாஸ்டிக் பிரஷ்களைப் பயன்படுத்துகிறோம்,” என்கிறார்.

சுரேஷ் கூறுகையில், தனது ஓவியங்கள் அனைத்தும் கதைகள் சொல்லும் என்கிறார். “நான் ஓவியம் வரையும்போது அதன் கரு என்ன என்பதை சிந்திப்பதில் நிறைய நேரம் செலவிடுவேன். உதாரணமாக, தீபாவளிப் பண்டிகை வரப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது எனது ஓவியத்தில் பசுக்கள், விளக்குகள் போன்ற பண்டிகை சார்ந்த அனைத்து விஷயங்களையும் நான் யோசிக்க வேண்டும். வாழும் உயிரினங்கள், காடு, வானம், புராணக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், விவசாயம் மற்றும் சமூக ஈடுபாடுகளை கோண்ட் கலைஞர்கள் தங்கள் வேலைப்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும்.

போபாலுக்கு வந்த ஜங்கர் சிங் ஷியாம்தான் முதலில் துணியில் வரையத் தொடங்கி பிறகு கேன்வாஸ் மற்றும் காகிதத்தில் வரையத் தொடங்கினார். உயிரினங்கள், காடு, வானம், புராணக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை கோண்ட் கலைஞர்கள் தங்கள் வேலைப்பாடுகளில் பிரதிபலிக்கிறார்கள்

காணொளி: கோண்ட் கலை: நிலத்தின் கதை

சுரேஷ் பிறந்த படன்கர் மால் கிராமம், போபாலில் உள்ள அனைத்து கோண்ட் கலைஞர்களுக்கும் பூர்விகம் ஆகும். நர்மதா ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இப்பகுதி அமர்கண்டக்-அச்சனக்மர் புலிகள் காப்பகத்தின் காடுகளால் சூழப்பட்டுள்ளது. காப்பகத்தில் காணப்படும் அனைத்து வன விலங்குகள், மரங்கள், பூக்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் ஆகிய அனைத்தையும் கோண்ட் ஓவியங்களில் காணலாம்.

செமல் [பட்டு பருத்தி] மரத்தின் பச்சை இலைகள், கருப்பு கற்கள், மலர்கள், செம்மண் என காடுகளில் கிடைத்த பொருட்களிலிருந்து நாங்கள் பெயிண்டுகளைத் தயாரித்தோம். நாங்கள் அதை கோந்துடன் [பிசின்] கலப்போம்,” என்று அவர் நினைவுகூருகிறார். “இப்போது நாங்கள் அக்ரிலிக் பயன்படுத்துகிறோம். இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தினால், எங்கள் வேலைப்பாடுகள் அதிக விலைக்கு போகும் என்கின்றனர். ஆனால் வண்ணங்களுக்கு எங்கே போவது?" காடுகள் குறைந்து வருவதாக அவர் கூறிப்பிடுகிறார்.

திருவிழாக்கள் மற்றும் திருமண சுபதினங்களின்போது, கிராமத்தில் உள்ள பழங்குடியினரின் வீட்டு சுவர்களில் கோண்ட் ஓவியங்கள் வரையப்பட்டது. 1970-களில் மாநிலத் தலைநகரான போபாலுக்கு வந்த, புகழ்பெற்ற கோண்ட் கலைஞரான ஜங்கர் சிங் ஷியாம், முதலில் துணியில் வரையத் தொடங்கினார். பின்னரே கேன்வாஸ் மற்றும் காகிதத்தில் வரையத் தொடங்கினார். காகிதத்திலும் கேன்வாஸிலும் இக்கலையின் புதிய வடிவத்தை உருவாக்கிய பெருமை அவரையே சேரும். மறைந்த கலைஞரான அவரின் பங்களிப்பிற்காக 1986 ஆம் ஆண்டு, மாநிலத்தின் உயரிய குடிமகன் விருதான, ஷிக்கர் சம்மான் விருது வழங்கப்பட்டது.

ஆனால் ஏப்ரல் 2023-ல், கோண்ட் ஓவியத்துக்கு இறுதியாக புவிசார் குறியீடு ( ஜிஐ ) கிடைத்தபோது, ஜங்கரின் சமூகம் புறக்கணிக்கப்பட்டு, போபால் யுவபர்யவரன் ஷிக்ஷன் ஏவம் சமாஜிக் சன்ஸ்தான் மற்றும் திண்டோரி மாவட்டத்தில் உள்ள தேஜஸ்வானி மெகல்சுதா மகாசங் கோரக்பூர் சமிதி ஆகியவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது, போபால் கலைஞர்கள் மற்றும் ஜங்கர் சிங்கின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினரை வருத்தமடைய செய்துள்ளது. மறைந்த ஜங்கரின் மகன் மயங்க் குமார் ஷியாம் கூறும்போது, “புவிசார் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் ஜாங்கர் சிங்கின் பெயர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் இல்லாமல் கோண்ட் கலையே இல்லை,” என்கிறார்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: ஏப்ரல் 2023-ல் வழங்கப்பட்ட, கோண்ட் ஓவியத்துக்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழ். வலது: போபால் கலைஞர்கள் நன்குஷியா ஷியாம், சுரேஷ் துர்வே, சுபாஷ் வயம், சுக்நந்தி வியாம், ஹீராமன் ஊர்வேடி, மயங்க் ஷியாம் ஆகியோர் தாங்கள் விடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர்

அங்கீகாரம் பெற உதவிய  திண்டோரி மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “அங்கீகாரக் குறியீடு அனைத்து கோண்ட் கலைஞர்களுக்கும் பொருந்தும். வசிக்கும் இடத்தின் அடிப்படையில் நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. போபாலைச் சேர்ந்த கலைஞர்களும் தங்கள் கலையை 'கோண்ட்' என்று அழைக்கலாம், ஏனெனில் அவர்கள் அனைவரும் இங்கிருந்தே வந்தவர்கள். அக்கலையைச் சார்ந்தவர்கள் தான்,” என்றார்.

ஜனவரி 2024-ல், ஜங்கரைப் பின்பற்றும் போபால் குழுவான, ஜங்கர் சம்வர்தன் சமிதி, சென்னையில் உள்ள புவிசார் அங்கீகாரத்துக்கான அலுவலகத்தில் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவது குறித்து பரிசீலிக்கக் கோரி, ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். ஆனால் இந்தக் கட்டுரை வெளியிடப்படும் வரை, அதில் மாற்றம் ஏதும் நிகழவில்லை.

*****

பதன்கரில் வளர்ந்த குடும்பத்தின் இளைய மற்றும் ஒரே மகனான சுரேஷ், பன்முகத் திறமை கொண்ட கைவினைஞரான தனது தந்தையிடம் பயிற்சி பெற்றுள்ளார். “அவரால் தாக்கூர் தேவ் சிலைகளை உருவாக்க முடியும். கதவுகளில் நடனமாடும் உருவங்களைப் பொறித்து அவரால் அலங்கரிக்க முடியும். அவருக்கு யார் கற்பித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கட்டுமான வேலை முதல் தச்சு வேலை வரை, அவரால் முடியாததென்று எதுவுமே இல்லை."

சிறு குழந்தையாக, அவருடன் சுற்றிவரும்போது, அவரைப் பார்த்து வேலையை கற்றுக் கொண்டார். “மிட்டி கா காம் ஹோதா தா [நாங்கள் திருவிழாக்களுக்கு களிமண்ணில் சிலை செய்வோம்]. எங்கள் கிராம மக்களுக்காக என் தந்தை மர வேலைகளை செய்தார். ஆனால் அது அவருக்கு ஒரு ஷௌக் [பொழுதுபோக்கு] மட்டுமே என்பதால் அவர் அதிலிருந்து பணம் சம்பாதிக்கவில்லை. வேலைக்காக கொஞ்சம் உணவு கிடைக்கும். தானியம் தான் கூலி. அதாவது சுமார் அரை அல்லது ஒரு பசேரி [ஐந்து கிலோ] கோதுமை அல்லது அரிசி கிடைக்கும்,” என்று அவர் நினைவுகூருகிறார்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

சுரேஷ் (இடது) பிறந்த படன்கர் மால் கிராமம், போபாலில் உள்ள அனைத்து கோண்ட் கலைஞர்களுக்கும் பூர்விகம் ஆகும். நர்மதா ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இப்பகுதி அமர்கண்டக்-அச்சனக்மர் புலிகள் காப்பகத்தின் காடுகளால் சூழப்பட்டுள்ளது. காப்பகத்தில் காணப்படும் அனைத்து வன விலங்குகள், மரங்கள், பூக்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் ஆகிய அனைத்தையும் கோண்ட் ஓவியங்களில் காணலாம் (வலது)

மானாவாரி நிலத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே இவரின் குடும்பம் கொண்டிருந்தது. அதில் அவர்கள் நெல், கோதுமை மற்றும் சன்னாவை பயிரிடுவர். இளையவரான சுரேஷ் மற்றவர்களின் வயல்களிலும் பணிபுரிவார்: "ஒருவரின் வயலில் அல்லது நிலத்தில் வேலை செய்தால், ஒரு நாளைக்கு இரண்டரை ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனால் அந்த வேலையும் தினசரி கிடைத்ததில்லை."

1986-ம் ஆண்டில், அச்சிறுவன் 10 வயதில்  தன் குடும்பத்தை இழந்தான். "நான் முற்றிலும் தனியாக இருந்தேன்," என்று அவர் நினைவுகூருகிறார். அவரது மூத்த சகோதரிகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், அவர் தன்னைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. “ஒரு நாள் கிராமத்தில் சுவர்களில் என் ஓவியங்களைப் பார்த்த ஜாங்கரின் அம்மா, என்னை போபாலுக்கு அழைத்துச் செல்ல நினைத்தார். ‘அவனால் ஏதாவது கற்றுக்கொள்ள முடியும்’” என்றார். அவர்கள் கிழக்கு மத்தியப் பிரதேசத்திலிருந்து தலைநகருக்கு 600 கிலோமீட்டர்கள் பயணம் செய்தனர்.

அப்போது ஜங்கர் சிங், போபாலில் உள்ள பாரத் பவனில் பணியாற்றி வந்தார். “ஜங்கர் ஜி அவர்களை  நான் ‘அண்ணா’ என்று தான் அழைப்பேன். அவர் தான் என் குரு. என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார். சுவர்களில் மட்டுமே வரைந்திருந்ததால், கேன்வாஸில் அதற்கு முன்பு வரைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் அவரது வேலை " கிஸ் கிஸ் கே [தொடர்ந்து தேய்த்தல்] கற்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி சரியான நிறத்தைப் பெறுவதாகும்.”

”அது நாற்பது வருடங்களுக்கு முந்தைய கதை.” இப்போது, சுரேஷ் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கையெழுத்திடுகிறார். அதற்கு 'சீதி பீடி' என பெயரிட்டுள்ளார். "என் எல்லா வேலைப்பாடுகளிலும் நீங்கள் இதைக் காணலாம்," என்று அவர் கூறுகிறார். "சரி வாருங்கள், இந்த ஓவியத்தில் உள்ள கதையைக் கூறுகிறேன்..."

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Editor : Vishaka George

Vishaka George is Senior Editor at PARI. She reports on livelihoods and environmental issues. Vishaka heads PARI's Social Media functions and works in the Education team to take PARI's stories into the classroom and get students to document issues around them.

Other stories by Vishaka George
Video Editor : Sinchita Maji

Sinchita Maji is a Senior Video Editor at the People’s Archive of Rural India, and a freelance photographer and documentary filmmaker.

Other stories by Sinchita Maji
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam