MNREGA இன் கீழ் பார்வதிக்கு கடைசியாக ஒரு வருடத்திற்கு முன்பு, மே 2023இல் வேலை கிடைத்தது. அதுவும் வெறும் ஐந்து நாட்களுக்கு மட்டும்.

பார்வதி (அவர் இந்த பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) கவுர் மதுகர் ஷாபூர் கிராமத்தில் ஒரு சாலையை சமன் செய்யும் வேலை செய்தார். MNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்) கீழ்,  அரசால் உறுதியளிக்கப்பட்ட ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை, ஜாதவ் (பட்டியலிடப்பட்ட சாதி) சமூகத்தைச் சேர்ந்த இந்த 45 வயது தினக்கூலித் தொழிலாளிக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. "பாதி வயிறை நிரப்பி தான் நாங்கள் பிழைக்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

அது மட்டுமல்லாமல், 2020ல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வாங்க இந்த தம்பதியர் சமர்பித்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், காத்திராமல்  பார்வதியும் அவரது கணவர் சோட்டே லாலும், இரண்டு அறைகள் கொண்ட ஒரு பக்கா வீடு கட்ட, உறவினர்களிடம் இருந்து ரூ.90,000 கடன் வாங்கியுள்ளனர்.

“யாராவது வாக்கு கேட்டு வந்தால், வீடு வழங்கும் பட்டியலில் இல்லாத பெயர், வாக்காளர் பட்டியலில் மட்டும் எப்படி உள்ளது என்பதை கேட்பேன்?” என்கிறார். MNREGAஇன் கீழ் பணிபுரிந்த பார்வதியின் கணவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் வந்ததால்,  அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. இன்று அவர் வாரணாசி நகரில் உள்ள ஒரு தொழிலாளர் மண்டிக்கு எப்போதாவது செல்கிறார், அங்கு அவருக்கு நாளொன்றுக்கு ரூ.400-500 ஊதியம் கிடைக்கும்.

MNREGA, கிராமப்புற பயிலாத தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. ஆனால் வாரணாசி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் முழுவதும் கூறும் பொதுவான புகார் என்னவென்றால், "கடைசி இரண்டு பிரதானிகளில்" அதாவது கடந்த இரண்டு சர்பஞ்ச் பதவிக் காலம் அல்லது தோராயமாக 10 ஆண்டு காலத்தில், ஆண்டுதோறும் 20-25 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது என்பதாகும்.

பார்வதி இப்போது தேவையில்லாத கடனில் சிக்கித் தவிக்கிறார். அரசின் எந்த உதவியும் இல்லாமல், தாகூர் சமூகத்தின் வயல்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். அவர்களும் அறுவடை மற்றும் விதைப்பு காலங்களில் சுமார் 15 நாட்கள் வேலைக்கு 10 கிலோ உணவு தானியங்களைக் கொடுக்கிறார்கள்.

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள கவுர் மதுகர் ஷாபூர் பகுதியில் வசிக்கும் பார்வதி (இடது). MNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்) கீழ் உறுதியளிக்கப்பட்ட 100 நாட்கள் வேலை தனக்கு வழங்கப்படவில்லை என்கிறார். அவர்களது வீட்டின் முன் நிற்கும் அவரது அருகில் கணவர் சோட்டி லால் (வலது)

ராஜா தலாப் தாலுகாவில் உள்ள கவுர் மதுகர் ஷாபூர் கிராமத்தில் உள்ள 1,200 குடும்பங்களில் பிரதானமாக பட்டியல் சாதி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதி சமூகங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். சுய நுகர்வுக்கான விவசாயம் சிறிய நிலங்களில் நடக்கிறது, ஆயினும் கூலி வேலை இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

வாரணாசி நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வாரணாசி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளது, அங்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மக்களவைக்கு போட்டியிடுகிறார். 2014 மற்றும் 2019ல் அவர் இங்கிருந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெறும் வாரணாசி, மிகவும் ஆர்வத்துடன் பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாகும். 'ஹர் தில் மீ மோடி (அனைவரின் இதயத்திலும் மோடி)' என்று குறிப்பிடும் குங்குமப்பூ நிற சுவரொட்டிகள் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அலங்கரிக்கின்றன, இ-ரிக்ஷாக்கள் மற்றும் தெரு விளக்குகளின் பின்புறத்தில் ஒட்டப்பட்டுள்ளன. புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலில் உயர்மட்ட வேட்பாளரின் பேச்சு மற்றும் அவரது பங்கை உரக்கச் சொல்லும் ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆட்டோக்கள், இப்போது அங்கு எல்லா இடங்களிலும் ஒரு பொதுவான காட்சி ஆகும்.

ஆனால் இங்கு கவுர் மதுகர் ஷாபூரில் பிரச்சார போஸ்டர்கள் ஏதும் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மோடியின் புகைப்படம் இந்த பஸ்தியில் (குடியிருப்பு) ஹனுமான் கோவிலுக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது.

ஆனால் பார்வதி, தனக்கும் தனது ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கும் உணவளிப்பது கடினமாக இருப்பதாகக் கூறுவதால், BSP (பகுஜன் சமாஜ் கட்சி) யின் நீலக் கொடியை பறக்கவிட விரும்புகிறார்."அரசாங்கம் ஆதார் அட்டைகளை வழங்குகிறது, அனைவரையும் பற்றிய தகவல்கள் வைத்திருக்கிறது, அவர்களால் ஏன் யார் ஏழை என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை?" என அரசு உதவி செய்ய முன்வராதது குறித்து அவர் ஆச்சரியப்படுகிறார்.

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

கௌர் கிராமத்தின் ஹரிஜன் குடியிருப்பில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டர் (இடது) ஒட்டப்பட்டுள்ளது. இங்கு சுமார் 1,200 குடும்பங்கள் வசிக்கின்றன, இவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் சாதி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதி சமூகங்களைச் சேர்ந்த மக்கள். பார்வதியின் வீட்டின் மேல் பகுஜன் சமாஜ் கட்சியின் (வலது) கொடி பறக்கிறது

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

இடது: ரேணு தேவி MNREGA மஸ்தூர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார், மேலும் MNREGA வேலை குறைந்து வருவதாக கூறுகிறார். பிரதமர் மூன்றாவது முறையாக போட்டியிடும் தொகுதியின் நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் மோடியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

கிராமப்புற உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலை குறைந்துள்ளது என்பதை MNREGA மஸ்தூர் யூனியனைச் சேர்ந்த ரேணு தேவி பாரியிடம் உறுதிப்படுத்துகிறார், "2019 முதல் MNREGAஇன் நிலை மோசமடைந்து வருகிறது. இதற்கு முன்பு நாங்கள் கிராம மக்கள் சார்பாக விண்ணப்பங்களை எழுதும் போது, ​​ஒரு வார காலமாவது வேலை கிடைக்கும். இப்போது வருடத்திற்கு ஏழு நாட்கள் வேலை கிடைப்பது கூட கடினம் ஆகிவிட்டது.

2021 ஆம் ஆண்டில் மட்டும், MNREGA மஸ்தூர் ஒன்றியத்தின் உள்ளூர் தன்னார்வலர்கள் வாரணாசியில் உள்ள தொகுதி அளவிலான அதிகாரிகளுக்கு 24 கடிதங்கள் எழுதி வெவ்வேறு கிராமங்களில் வேலை ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஜீரா தேவி கடைசியாக MNREGA மூலம் வேலை பெற்றது அதே ஆண்டு - ஜூன் 2021.

கவுர் மதுகர் ஷாபூர் கிராமத்தில் உள்ள அதே பஸ்தியை சேர்ந்தவர் ஜீரா. 45 வயதான கூலித் தொழிலாளியான இவர் பிரதமர் மோடியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவிலிருந்து பெற்ற ஜோலா (துணிப் பை) ஒன்றை வெளியே எடுத்து காட்டுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவருக்கு வழங்கப்படாத திட்டங்கள் தொடர்பான அவரது முக்கியமான ஆவணங்கள் அதில் தான் உள்ளன. "மோடியைப் பொறுத்த வரையில், முதலில் அவர் பயணிக்கும் ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று புன்னகையுடன் கூறுகிறார்.

உள்ளூர் பிரதான் (தலைவர்) தன்னிடம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் கீழ் ஒரு வீடு கிடைக்க, ரூ.10,000 லஞ்சம் கொடுக்கச் சொன்னதாக, ஜீரா கூறுகிறார். வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை. "என்னுடைய வீட்டின் சுவர்கள், பைகள் மற்றும் சுவரொட்டிகளால் ஆனது!" என்று அவர் தனது ஓலைக் கூரை வீட்டிற்குள் அமர்ந்து கூறுகிறார்.

தினசரி கூலிக்கான MNREGA வேலை இழப்பு இவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது; குடும்பத்திற்கு ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பங்கு நிலம் மட்டுமே உள்ளது. அவரது மகன் சிவம் மற்றும் அவரது கணவர் ராம் லால் ஆகியோர் அவரது ஊதியத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள், ஆனால் நாற்பது வயதாகும் இவருக்கு வேலை செய்வது சிரமமாக உள்ளது: “எனக்கு கடுமையான தலைவலி மற்றும் உடல்வலி ஏற்படுகிறது, அதனால் மண்ணை சுமந்து செல்ல முடிவதில்லை [சில நேரங்களில் MNREGA வேலையின் ஒரு பகுதி. ]."

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

MNREGA வேலை இல்லாமல், ஜீரா தேவி தனது குடும்பத்திற்கு உணவளிக்க போராடுகிறார். தன் வறுமை நிலை வெளிப்படையாக தெரிந்தாலும், அரசின் திட்டங்களின் கீழ் தனக்கு வீடு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். அவரிடம் இருக்கும் பை அதைத் தான் கூறுகிறது  (வலது)

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

ஜீரா தேவி தனது மகன் சிவம் (இடது) மற்றும் அவர்களது கட்ச்சா வீடு மற்றும் சமையலறையுடன் (வலது) கவுர் மதுகர் ஷாபூர் கிராமத்தில் உள்ள ஹரிஜன் குடியிருப்பில் வசிக்கிறார்

இவர்களின் குடும்பம், உத்தரபிரதேசத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிண்ட் / மல்லா சமூகத்தைச் சேர்ந்தது. அவரது கணவர் இப்போது வேலை செய்யவில்லை, பார்வையற்ற அவர்களின் மகன், ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைப் பெறுகிறார், ஆனால் அதுவும் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது, அதை அவர்களால் புதுப்பிக்க முடியவில்லை.

அன்றைய தினம், தான் வேலை செய்ததற்குக் விவசாயக் கூலியாகப் பெற்ற பூண்டுத் தண்டுகளைப் பிடித்துக்கொண்டு ஜீராதேவி இந்த நிருபருக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும், “இம்முறை நம்மைப் போன்றவர்களை ஆதரிக்கும் பெண்ணுக்கு வாக்களிப்பேன் – மாயாவதி வாக்களிப்பேன்!” என்று அறிவிக்கிறார்.

இந்த உயர்மட்ட தொகுதியின், கடினமான நிலைப்பாடு இது தான்.

ஆனால் இது ஜீரா மற்றும் பார்வதியின் நிலைப்பாடு மட்டும் இல்லை. "யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் மோடிஜியின் ஆட்சியில் எங்களுக்கு திருப்தி இல்லை,” என்கிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி அசோக்.

அவரது மனைவி சுனிதாவிற்கு, சமீபத்தில் MNREGAஇன் கீழ் மூன்று நாட்களும், கடந்த ஆண்டு (2023) ஐந்து நாட்களும் வேலை கிடைத்தது. 14 வயது சஞ்சனா, 12 வயது ரஞ்சனா மற்றும் 10 வயது ராஜன் ஆகிய மூன்று பிள்ளைகளுடன் கவுர் மதுகர் ஷாபூரில் இந்த தம்பதியர் வசித்து வருகின்றனர்.

அசோக் (அவர் இந்த பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) ஒரு காலத்தில் அதிக விலையுள்ள பனாரசி புடவைகளை நெசவு செய்பவராக இருந்தார், ஆனால் குடும்பம் பெருகியபோது,  அந்த வருமானம் போதுமானதாக இல்லை. அவர் நெசவுத் தொழிலை விட்டதிலிருந்து, வாரணாசி நகரத்தில் உள்ள கட்டுமானத் தளங்களிலும், தொழிலாளர் மண்டியிலும் வேலை செய்து வருகிறார். அவருக்கு ஒரு மாதத்தில் சுமார் 20-25 நாட்கள் வேலை கிடைக்கிறது, மேலும் தினசரி கூலியாக ரூ.500 வழங்கப்படுகிறது. "இப்படித்தான் நாங்கள் சமாளித்து வருகிறோம்" என்று கூறும் 45 வயதான அவர், ஹரிஜன் பஸ்தியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, மண் பானைகள் மற்றும் சிவப்புக் கொடிகளைக் கடந்து தொழிலாளர் மண்டிக்கு செல்லுகிறார்.

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

அசோக் சில ஆண்டுகளுக்கு முன்பு MGNREGAஇன் கீழ் வேலை செய்வதை நிறுத்திவிட்டார். பனாரசி புடவைகளை நெசவு செய்யும் தொழிலாளியாக இருந்த அவர், தற்போது கூலிவேலை செய்து வருகிறார். ரகுனா கிராமத்தில் மோடியின் சுவரொட்டிகள்

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

ரகாவுனா கிராமத்தைச் சேர்ந்த சந்தாரா தேவிக்கும் MNREGAகீழ் வேலை கிடைக்கவில்லை. அவர் இப்போது தன் வீட்டில் ருத்ராக்ஷ மாலைகளை கட்டி, சில மாதங்களுக்கு ஒருமுறை 2,000 - 5,000 வரை சம்பாதிக்கிறார்

வாரணாசி மாவட்டத்தில் உள்ள ரகாவுனா கிராமத்தில் உள்ள வீடுகளின் வெளிக்கதவுகளில் ‘மைன் ஹூன் மோடி கா பரிவார் [நாங்கள் மோடியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்]’ என்று குறிப்பிடும் நீல நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சந்தாரா தேவியின் வீட்டில், மோடி மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முகம் கொண்ட "டபுள் எஞ்சின் கி சர்க்கார்" என்று அறிவிக்கும் போஸ்டர், கட்டிலில் கிடக்கிறது.

ருத்ராட்ச மாலையை (நெக்லஸ்) நெய்வதில் மும்முரமாக இருக்கும் அவர், மண் தரையில் அமர்ந்துள்ளார்; திரளாக ஈக்கள் மொய்க்கின்றது, ஓலையால் வேயப்பட்ட கூரை மட்டுமே கடுமையான கோடை வெயிலில் இருந்து, இவரின் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை பாதுகாக்கிறது. நிருபரிடம் அவர் கூறுகையில், “எங்களிடம் விவசாய நிலமோ, பழத்தோட்டமோ இல்லை. எங்களுக்கு வேலையும் இல்லை என்றால், எவ்வாறு பிழைப்பு நடத்துவது?"

MNREGA தொழிலாளியாகப் பதிவுசெய்துள்ள அவருக்கு கடந்த ஆகஸ்ட் (2023), ஒரு போகரி (குளம்) தோண்ட, எட்டு நாட்கள் வேலை கிடைத்தது. MNREGAஇன் கீழ் வருமான இழப்பை ஈடுகட்ட, சாந்தாரா போன்ற பெண்கள் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளை செய்கின்றனர். ருத்ராட்ச மாலைகளை தயாரிப்பதன் மூலம் அவர்களுக்கு ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ரூ.2,000-5,000 கிடைக்கிறது. “எங்களுக்கு ஒரு டஜனுக்கு ரூ.25 வருமானம் கிடைக்கிறது. மொத்த விற்பனையாளர், எங்களுக்கு ஒரு நேரத்தில் 20-25 கிலோ ருத்ராட்ச மணிகளைத் தருகிறார்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சந்தாராவின் அண்டை வீட்டாரான 50 வயதான முன்கா தேவியும் கடந்த ஆண்டு MNREGA வேலை தொடர்பாக ரோஜ்கர் சஹாயக்கிடம் (பதிவுகளுக்கு உதவுபவர்) கேட்கக் காத்திருந்தார். முன்கா தனது கணவரின் பெயரில் 1.5 பிகாஸ் நிலத்தை வைத்துள்ளார், மேலும் அவர் விற்பனைக்காக காய்கறிகளை பயிரிடுகிறார், அதோடு மற்றவர்களின் வயல்களிலும் வேலை செய்கிறார்." இது எனது குடும்பத்திற்காக, குறைந்தபட்சம் நமக்-தேல் [உப்பு மற்றும் எண்ணெய்] பெற உதவுகிறது," என்று அவர் அடிப்படை உணவுப் பொருட்களைக் குறிப்பிடுகிறார்.

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

MNREGA வேலை அட்டை (இடது). சகுந்தலா தேவி, தனது பெயர் MNREGA பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டதைக் கண்டறிந்தார். அவர் இப்போது கல் சிலைகளை மெருகூட்டும் பணியில் உள்ளார், அவருடைய கைகள் எப்போதும் காயத்துடன் உள்ளது

PHOTO • Akanksha Kumar
PHOTO • Akanksha Kumar

புதிதாகக் கட்டப்பட்ட தனது வீட்டிற்கு வெளியே முன்கா தேவி (இடது) உள்ளார். ஷீலா (வலது) 'மோடி எங்கள் NREGA வேலையைப் பறித்துவிட்டார்' என்கிறார்

கேவாலி கிராமத்தில், சகுந்தலா இந்த முறை வாக்களிக்க போவதில்லை என முடிவு செய்துள்ளார். "அரசாங்கம் எனக்கு எந்த வேலையும் கொடுக்காததால், நான் யாருக்கும் வாக்களிக்க மாட்டேன்," என்று அவர் அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் உள்ள 12 பெண்களில் சகுந்தலாவும் அடங்குவார், அவர்களின் பெயர்கள், வேலை அட்டைகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன - போலியான MNREGA தொழிலாளர்களின் பெயர்களை அகற்றும் போது தவறுதலாக இவர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

“மோடி எங்கள் NREGA வேலையைப் பறித்துவிட்டார். எங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் தொடர்ந்து வேலை, மற்றும் தினசரி ஊதியமாக 800 ரூபாய் வேண்டும், ”என்கிறார் மற்றொரு கேவாலி வாசி ஷிலா. "இலவச ரேஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக கோதுமை மற்றும் அரிசிக்கு கூடுதலாக பருப்பு, உப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்பட வேண்டும்" என்று சகுந்தலா வலியுறுத்துகிறார்.

நந்தியின் (புனிதமான காளை) கற்சிலைகள், அவருடைய வீட்டை அலங்கரிக்கின்றன. "இவற்றை பாலிஷ் செய்வதால் என் கைகளில் காயம் ஏற்படுகிறது, ஆனால் நான் ஒரு சிலைக்கு 150-200 ரூபாய் சம்பாதிக்கிறேன்." இந்த வேலையால், அவரது விரல்கள் வீங்கிவிட்டன, ஆனால் MNREGA இன் கீழ் வேலை கிடைக்காத அவரைப் போன்ற பெண்களுக்கு வேறு வழி இல்லை.

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Akanksha Kumar

Akanksha Kumar is a Delhi-based multimedia journalist with interests in rural affairs, human rights, minority related issues, gender and impact of government schemes. She received the Human Rights and Religious Freedom Journalism Award in 2022.

Other stories by Akanksha Kumar
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam