நினைவில் மட்டுமே இருக்கும் தூரத்து வானத்தின் திசையை நோக்கி கைகளை விரிக்கிறார் சுரேந்திர நாத் அவஸ்தி. “இது எல்லாமும், அது எல்லாமும் கூட,” என்கிறார் அவர் ஒரு பெரும் அளவை புன்னகையுடன் விவரித்துக் காட்டியபடி.

“நாங்கள் அவளை நேசித்தோம். அவள் இருந்ததால்தான் எங்களின் கிணறுகளில் இனிமையான நீர் வெறும் 10 அடியில் கிடைத்தது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் வீடு வரை ஓடி வருவாள். ஒவ்வொரு மூன்றாம் வருடமும் அவள் சிறு விலங்குகளை பலி எடுப்பாள். எனினும் ஒருமுறை என் 16 வயது உறவினரை கொண்டு சென்றுவிட்டாள். கோபத்துடன் அவள் இருக்கும் திசை நோக்கி பல நாட்களுக்கு கத்தியிருக்கிறேன்.” என்கிறார் அவர். “ஆனால் இப்போது அவள் எங்கள் மீது பல காலமாக கோபத்தில் இருக்கிறாள். அநேகமாக பாலம் காரணமாக இருக்கலாம்,” என அவரின் குரல் தோய்கிறது.

67 மீட்டர் நீள பாலத்தில் அவஸ்தி நிற்கிறார். சாய் என்கிற ஆற்றுக்கான அடையாளம் சொற்பமாக இருக்கிறது. அதுதான் அவர் குறிக்கும் ‘அவள்’. பாலத்துக்குக் கீழே விவசாய நிலம் இருக்கிறது. புதிதாக வெட்டப்பட்ட கோதுமை ஆற்றங்கரையில் கிடக்கிறது. தைல மரங்களின் பக்கவாட்டில் நீர் சுழித்து ஓடுகிறது.

அவஸ்தியின் நண்பரும் உதவியாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான ஜக்தீஷ் பிரசாத் தியாகி, சாய் “ஒரு அழகான ஆறு” என நினைவுகூருகிறார்.

ஆழமான நீர்ப்பகுதியில் இருக்கும் சுழலில் இருந்து பெரிய மீன்கள் எழுந்து ஏறி இறங்கும் அற்புதக் காட்சியை விவரிக்கிறார் அவர். ரோகு, விலாங்கு, கோளம் போன்ற மீன்கள் இன்னும் அவரது நினைவில் இருக்கின்றன. “நீர் காயத் தொடங்கியதும் மீன்கள் காணாமல் போய்விடும்,” என்கிறார் அவர்.

இன்னும் பல விருப்பத்துக்குரிய நினைவுகள் இருக்கின்றன. 2007-12 வரை ஊர்த்தலைவராக இருந்த 74 வயது மல்தி அவஸ்தி, சாய் ஏறி 100 மீட்டர் கடந்து அவரது வீட்டு முற்றம் வரை வந்த நிகழ்வை நினைவுகூருகிறார். அந்த பரந்த முற்றத்தில், ஆற்றுக்கு விளைச்சலை இழந்த குடும்பங்களுக்கு வருடந்தோறும் கிராமவாசிகள் தானியக்குவியல் வழங்கும் விழா கொண்டாடுவார்கள்.

“அந்த குழு உணர்வு இப்போது இல்லை. தானியங்களின் ருசியும் இப்போது இல்லை. கிணறுகளில் நீரும் காணாமல் போய்விட்டது. எங்களை போலவே கால்நடைகளும் பெரும் பாதிப்பில் இருக்கின்றன. வாழ்க்கையில் ருசி இல்லாமல் போய்விட்டது,” என்கிறார் அவர்.

Left: Surendra Nath Awasthi standing on the bridge with the Sai river running below.
PHOTO • Pawan Kumar
Right: Jagdish Prasad Tyagi in his home in Azad Nagar
PHOTO • Pawan Kumar

இடது: சாய் ஆற்றுக்கு மேலுள்ள பாலத்தின்மீது சுரேந்திர நாத் அவஸ்தி நிற்கிறார். வலது: ஆசாத் நகரிலுள்ள ஜக்தீஷ் பிரசாத் தியாகி

Left: Jagdish Prasad Tyagi and Surendra Nath Awasthi (in a blue shirt) reminiscing about the struggle for a bridge over the Sai river .
PHOTO • Pawan Kumar
Right: Malti Awasthi recalls how the Sai rode right up to the courtyard of her home, some 100 metres from the riverbed
PHOTO • Rana Tiwari

சாய் ஆற்றுப்பாலத்துக்காக  நடத்தியப் போராட்டங்களை ஜக்தீஷ் பிரசாத் தியாகியும் (இடது) சுரேந்திர நாத் அவஸ்தியும் நினைவுகூருகின்றனர். வலது: மல்தி அவஸ்தி தன் வீட்டு முற்றம் வரை சாய் ஆறு வந்த நிகழ்வை நினைவுகூருகிறார்

சாய், கோம்தி ஆற்றின் கிளை ஆறாகும். இந்தியப் புராணங்களில் அதற்கு முக்கியமான இடமுள்ளது. கோஸ்வாமி துள்சிதாஸால் எழுதப்பட்ட ராமச்சரித்திரமனாஸில் (கடவுள் ராமின் செயல் நதி என அர்த்தம் பெறும் 16ம் நூற்றாண்டு புராணம்) ஆதி கங்காவென இந்த ஆறு குறிப்பிடப்படுகிறது. கங்கைக்கும் முன் இந்த ஆறு தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்ட பிகானி ஒன்றியத்திலுள்ள பிஜ்கவான் கிராமத்து குளத்திலிருந்து ஆறு தோன்றுகிறது. முதல் 10 கிலோமீட்டரில் ஜபார் (குளம்) என அழைக்கப்பட்டு, அதற்கு பிறகுதான் பிரபலமான இப்பெயரை ஆறு பெறுகிறது. கிட்டத்தட்ட 600 கிமீ பயணித்து லக்நவுக்கும்  உன்னாவுக்கும் இடையில் எல்லையாக மாறுகிறது. மாநிலத்தின் தலைநகரான லக்நவ் ஹர்தோய்க்கு 110 கிலோமீட்டர் வடக்கே உள்ளது. உன்னாவ் மாவட்டம் 122 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

உருவாகும் இடத்திலிருந்து கோம்தியுடன் (கங்கையின் கிளை ஆறு) ஜான்பூர் மாவட்ட ரஜேப்பூர் கிராமத்தில் சங்கமிப்பது வரை, சாய் கிட்டத்தட்ட 750 கிமீ நீளம் கொள்கிறது. வளைந்து நெளிந்து செல்வதால் அந்த நீளம் சாத்தியப்படுகிறது.

126 கிலோமீட்டர் நீளமும் 75 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஹர்தோய் மாவட்டம் வடிவமற்ற நாற்கர கோணம் போன்ற தோற்றத்தைக் கொண்டது. 41 லட்சம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயக் கூலி வேலை பார்க்கின்றனர். சிலர் விவசாயிகளாகவும் சிலர் குடிசைத் தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

1904-ல் பிரசுரிக்கப்பட்ட Hardoi A Gazetteer , Being Volume XlI Of The District Gazetteers Of The United Provinces Of Agra And Oudh - ன்படி சாய் பள்ளத்தாக்கு ”மாவட்டத்தின் மத்தியப் பகுதி முழுக்க” விரவி இருந்திருக்கிறது.

மேலும் அந்த அரசிதழ், “ஹர்தோயில் விவசாயம் செய்யப்படும் நிலம் வளமாக இருந்தாலும்… ஆழமற்ற தாழ்வு மண்டலங்களால் ஆங்காங்க தூண்டாகி, வறண்ட நிலம் இடையில் நீண்டு… புதர்க்காடுகள் திட்டு திட்டாக…. சாய் பள்ளத்தாக்கில் இடம்பெற்றிருக்கிறது,” என்கிறது.

78 வயதாகும் அவஸ்தி ஒரு மருத்துவர்(அனெஸ்தடிஸ்ட்). மதோகஞ்ச் ஒன்றியத்தின் குர்சத் புசுர்க் கிராமத்திலுள்ள குக்கிராமமான பராலியில் பிறந்தவர். பாலத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் குக்கிராமம் இருக்கிறது. அதன் மேல்தான் அவர் தற்போது நின்று கொண்டிக்கிறார்.

Left: The great length of the Sai river is caused by its meandering nature.
PHOTO • Pawan Kumar
Right: Surendra Nath Awasthi standing on the bridge with the Sai river running below. The bridge is located between the villages of Parauli and Band
PHOTO • Pawan Kumar

இடது: சாய் ஆற்றின் நீளம் அதன் வளைந்து நெளிந்து ஓடும் தன்மையால் ஏற்பட்டது. வலது: சாய் ஆற்றுக்கு மேலுள்ள பாலத்தில் சுரேந்திர நாத் அவஸ்தி நிற்கிறார். பராலி மற்றும் பாண்ட் கிராமங்களுக்கு இடையே பாலம் இடம்பெற்றிருக்கிறது

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு, குர்சாத் புசுர்கில் 1,919 பேர் வசிப்பதாக பதிவு செய்திருக்கிறது. பராலியில் 130 பேர் இருக்கின்றனர். பிரதானமாக பிராமணர்களும் கொஞ்சம் சமர்களும் (பட்டியல் சாதி) விஸ்வகர்மாக்களும் (பிற்படுத்தப்பட்ட சாதி) இருக்கின்றனர்.

அவஸ்தி நிற்கும் பாலம் பராலி மற்றும் பாண்ட் ஆகிய கிராமங்களுக்கு இடையே இருக்கிறது. பாண்ட், கச்சானா ஒன்றியத்தில் இருக்கிறது. கச்சானா ஒரு முக்கியமான சந்தைப் பகுதியாக இருந்து வருகிறது.விவசாயிகள் தங்களின் விளைச்சலை விற்கவும் உரங்கள் வாங்கவும் அங்குதான் செல்வர். பாலம் இல்லையென்றால் குர்சாத் புசுர்கிலிருந்து கச்சானாவுக்கு 25 கிலோமீட்டர் ஆகும். பாலம் வந்ததில் அந்த தூரம் 13 ஆக குறைந்திருக்கிறது.

குர்சாத் மற்றும் கச்சானா (தற்போது பாலமாவ் சந்திப்பு என அழைக்கப்படுகிறது) ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு ரயில் பாலம் இருக்கிறது. அதை மக்களும் பயன்படுத்துகிறார்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் வணிகத்துக்கான ஒட்டகங்கள், மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்த அந்தப் பாலத்தில் பயணித்ததாக நினைவுகூருகின்றனர். ஆனால் 1960ம் ஆண்டில் வழக்கத்திலிருக்காத தீவிர மழைக்காலம் பாலத்தை உடைத்துப் போட்டது. இரு இடங்களுக்கு இடையில் இருந்த ஒரே வேகமான வழி  (10 கிமீ) இல்லாமல் போனது.

மதோகஞ்ச் ஒன்றியத்தின் சர்தார்  நகர் கிராமத்தின் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்த தியாகிக்கு புதிய பாலம் பற்றிய யோசனை தோன்றியது. தற்போது ஆசாத் நகர் என அழைக்கப்படும் இடத்தில் அவர் வாழ்ந்தார். பராலியில் இருந்து கிட்டத்தட்ட மூன்றரை கிலோமீட்டர் தொலைவு.

1945ம் ஆண்டு பிறந்த அந்த முன்னாள் ஆசிரியரின் இணைப் பெயரல்ல தியாகி. சிங்தான் இணைப்பெயர். நல்விஷயங்களுக்கு எந்தளவுக்கும் செல்லத் துணியும் அவரின் தன்மைக்காக தியாகம் என்கிற வார்த்தையை குறிக்கும் தியாகி என்ற பெயரும் அவரது பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. 2008ம் ஆண்டில் ஓய்வுபெற்றபோது, அவர் பணி தொடங்கிய ஜூனியர் ஹைஸ்கூலின் தலைமை ஆசிரியராக இருந்தார்.

”ஏழ்மையான குடும்பத்தில் நான் பிறந்தேன். ஆனால் அது நான் நன்மை செய்வதை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை,” என்கிறார் தியாகி. வயதாகி பலவீனமாக தற்போது இருப்பதால், நடப்பதற்கு அவருக்கு கடினமாக இருக்கிறது. ஒருமுறை அவரது குடும்பத்தின் இரண்டு எருமை மாடுகளும் ஆசாத் நகரின் பிரதான சாலையில் இருந்த ஆழமான குழியில் விழுந்து விட்டன. கடுமையாக தள்ளியும் இழுத்தும் அவற்றை அவர் வெளியே கொண்டு வந்தார். அச்சமயத்தில் அவரது தந்தை வெளிப்படுத்திய முனகல் தியாகியின் மனதில் தங்கி விட்டது. “இந்த சந்துகளில் பாதுகாப்பாக நடக்கும் காலம் ஒன்று என்றேனும் வாய்க்குமா?”

“அது எனக்கு ஏதோவொன்றை தூண்டி விட்டது. குழியை நான் நிரப்பத் தொடங்கினேன். அது ஆறடி குழி. இரண்டு மடங்கு நீளம். ஒவ்வொரு காலையும் பள்ளிக்கு செல்வதற்கு முன்னும் திரும்பி வரும்போதும், அருகே இருந்த சகதி குளக்கரை மண்ணை எடுத்து வந்து குழியை நிரப்புவேன். பிறகு ஒரு குழியிலிருந்து அடுத்த குழிக்கு நகர்ந்தேன். பிறரும் இணைந்தனர்,” என்கிறார் தியாகி.

Left: Jagdish Prasad Tyagi retired as the headmaster of the junior high school where he began his career in 2008.
PHOTO • Rana Tiwari
Right: Surendra Nath Awasthi and Jagdish Prasad Tyagi talking at Tyagi's house in Azad Nagar, Hardoi
PHOTO • Rana Tiwari

இடது: ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய ஜுனியர் ஹைஸ்கூலில் தலைமை ஆசிரியரும் ஆகி பின் 2008ம் ஆண்டில் ஓய்வு பெற்றார் ஜக்தீஷ் பிரசாத் தியாகி. வலது: சுரேந்திர நாத் அவஸ்தி மற்றும் ஜக்தீஷ் பிரசாத் தியாகி, ஹர்தோயின் ஆசாத் நகரிலுள்ள தியாகி வீட்டில்

சக கிராமவாசிகளுக்காக இன்னும் பல விஷயங்களை செய்ததுண்டு. அவர் ஆசிரியர் என்ற மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்ததால் அவற்றை செய்வது சுலபமாக இருந்தது. அருகாமை ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர்கள் அழைத்து வந்து மருத்துவ சோதனைகள் நடத்துவார். சுகாதாரத்துக்காக ப்ளீச்சிங் பவுடர் போட வைப்பார். கிராமத்துத்து குழந்தைகள் தடுப்பூசி போட வரவழைப்பார். கிராமத்தை டவுன் பகுதியாக மாற்றவும் உதவியிருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் பொதுப்பணித்துறை பணிகள் சரியாக நடந்தனவா என்பதை அவ்வப்போது பரிசோதிக்கும் வேலைகளை அவரே செய்யத் தொடங்கினார்.

1994ம் ஆண்டு வரை அவஸ்திக்கும் தியாகிக்கும் ஒருவரையொருவர் தெரியாது. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பற்றி கேள்விப்பட்டிருந்தனர். கிராமத்தின் முதல் மருத்துவரான அவஸ்தி, அதுவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் (நைஜீரியா, இங்கிலாந்து, மலேசியா) பணிபுரிந்திருந்தார். உயர் பள்ளிக்கல்வியை, குறிப்பாக கிராமத்து பள்ளி மாணவிகளுக்கு அசாத்தியமாக்கிய ஆற்றின் வலியை அவர் சுமந்திருந்தார். எனவே அவர் எலெக்ட்ரிகல் இஞ்சினியரான சகோதரர் நரேந்திராவிடம், மழைக்காலங்களில் ஆற்றின் மறுகரைக்கு இலவசமாக மாணவர்களை கொண்டு செல்லும் படகோட்டியை கண்டுபிடிக்க சொன்னார். மரப்படகுக்கு அவஸ்தி 4000 ரூபாய் கொடுத்தார்.

பள்ளிப் பணிகளுக்கு பிறகு சோட்டாய் என்கிற படகோட்டி நாளின் பிற நேரங்களில் அதிகக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் பள்ளி நாள் ஒன்றைக் கூட அவர் தவறவிட்டுவிடக் கூடாது என்பதுதான் நிபந்தனை. இத்தனை வருடங்களில் படகு பழுதாகி விட்டது. ஆனால் 1980-ல் 8ம் வகுப்பு வரையிலான ஒரு பள்ளிக்கூடத்தை சொந்த ஊரில் அவஸ்தி கட்டி தன் தாத்தா பாட்டி பெயர்களை கங்கா சுக்ராஹி ஸ்மிதி ஷிக்‌ஷா கேந்திரா என சூட்டி தொடங்கினார். 1987ம் ஆண்டில் அப்பள்ளியை உத்தரப்பிரதேச மாநில உயர் பள்ளிக்கல்வி இயக்ககம் அங்கீகரித்தது. எனினும் பிற மாணவர்கள் பராலிக்கு கல்வி பயில எப்படி வருவார்கள் என்கிற சவால் தொடர்ந்தது.

அவஸ்தியும் தியாகியும் இறுதியில் சந்தித்தபோது புதிய பாலத்தை கட்டுவது மட்டுமே பிரச்சினையை தீர்க்குமென்ற முடிவுக்கு வந்தனர். ஆண்களாக அவர்களிடமும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. ஆற்றில் தள்ளிவிடப்பட்டுதான் அவஸ்தி நீச்சல் கற்றுக் கொண்டார். தியாகியோ விரலை கூட ஆற்றில் நனைத்ததில்லை. அரசு வேலையில் இருந்ததால் போராட்டத்தின் முன்னணியில் அவஸ்தி இருக்க முடியவில்லை. தியாகிக்கு போராட்டத்தை முன்னெடுக்க தெரியும். உறுதியுடன் செயல்படும் இரு மனிதர்கள் சந்தித்தனர். ‘ஷேத்திரிய விகாஸ் ஜன் அந்தோலன் (KVJA - வட்டார வளர்ச்சிக்கான மக்களின் போராட்டம்) உருவானது.

KVJA-வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை எண்ண முடியாதளவுக்கு வளர்ந்தது. தியாகியால் தேர்தலில் நிற்க முடியாதென்பதால் தாய், பகவதி தேவியை நகராட்சி தேர்தலில் நிற்க பேசினார். நல்ல தரமான மேம்பாட்டு பணியை அதன் வழியாக நடத்த முடியுமென நினைத்தார். பகவதி தேவி ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் உதவி மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில் தேர்தல் முடிவு மாறி அவர் வெற்றி பெற்றார். 1997-2007 வரை, டவுன் வட்டார சேர்மனாக அவர் பொறுப்பில் இருந்தார்.

KVJA முதலில் பதிவு செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் லக்நவில் செல்வாக்குடன் அவஸ்தி இருந்தும் அது நடக்க முடியவில்லை. எனவே போராட்டம் முழக்கங்களை  முன் வைத்தது. ‘வளர்ச்சி இல்லையெனில் வாக்கு இல்லை’ மற்றும் ‘வளர்ச்சிப் பணிகளை செய்யுங்கள் அல்லது நாற்காலிகளை விட்டு இறங்குங்கள்’ போன்ற முழக்கங்களுடன் அரசியல்வாதிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நோக்கி போராட்டம் திரும்பியது.

’அவளை (சாய் ஆற்றை) நாங்கள் நேசித்தோம். அவளால்தான் எங்களின் கிணறுகளில் இனிமையான நீர் 10 அடியிலேயே கிடைக்கிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் அவள் எங்கள் வீடுகள் வரை ஓடி வருவாள்'

காணொளி: தொலைந்த சாய்

பதிவு செய்யப்பட்டிருக்காத நிறுவனம் கூட்டிய முதல் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட 17 கிராமங்களிலிருந்து கிட்டத்தட்ட 3,000 பேர் பகவதி தேவியின் பேச்சை கேட்க பராலிக்கு வந்தனர்.துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. “எங்களின் உடலாலும் மனதாலும் இந்த இயக்கத்துக்கு நாங்கள் எங்களை அர்ப்பணிக்கிறோம். நாங்கள் பின்வாங்க மாட்டோம். இந்த உறுதிமொழி கடிதங்களில் எங்களின் ரத்தம் கொண்டு ஒப்பமிடுவோம். பாண்டுக்கும் பராலிக்கும் இடையில் பாலம் வராமல் இது ஓயாது’ என்ற வாசகங்களை அந்த துண்டறிக்கைகள் கொண்டிருந்தன. ‘எங்களின் கொடிகள் சிகப்பாக இருக்கும், எதிர்ப்பே எங்களின் இலக்காக இருக்கும்’ என அவை கையெழுத்திடப்பட்டன.

1,000-க்கும் மேற்பட்ட துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் மக்கள் ரத்தத்தால் கையெழுத்தோ கைரேகையோ இட்டிருந்தனர்.

பிறகு பாலத்தால் பாதிக்கப்படக் கூடிய 17 கிராமங்களுக்கு சென்றனர். “மக்கள் அவர்களின் சைக்கிள்களையும் படுக்கைகளையும் எடுத்துக் கொண்டு நகரத் தொடங்கினர். விரிவான தயாரிப்புகள் தேவைப்படவில்லை,” என நினைவுகூருகிறார் தியாகி. செல்லவிருக்கும் கிராமத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுவிடும். பறையடித்து அங்கு வசிப்பவர்களுக்கு செய்தி சொல்லப்பட்டது.

அடுத்த நடவடிக்கை ஆற்றங்கரையில் அமர்வது. ஊரில் மதிப்புவாய்ந்த ஆளுமையான தியாகியின் தாயின் தலைமையில் அது நடந்தது. ஆற்றங்கரையில் இருந்த தன் நிலத்தை போராட்டத்துக்காக வழங்கினார் தியாகி. போராட்டப் பகுதியை சுற்றி மூங்கில்களால் அடையாளம் வைக்கப்பட்டன. ஏழு பேர் குழுக்கள் 24 மணி நேரமும் இருந்தன. எதிர்ப்புப் பாடல்கள் பாடப்பட்டன. பெண்கள் போராட்டத்தில் அமரும்போது, பஜனை பாடல்கள் பாடினர். எந்த அசம்பாவிதமும் அவர்களுக்கு நேர்ந்து விடக் கூடாதென அவர்களை சுற்றி ஆண்கள் வட்டமாக அமர்ந்து கொண்டனர். நீர்த் தேவைக்காக ஓர் அடிகுழாயை அவஸ்தி நிறுவியிருந்தார். நீர் பாம்புகள் கடிக்குமென்கிற அச்சம் இருந்தாலும் அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை. மாவட்டப் போலீஸின் உள்ளூர் உளவு இலாகா அவ்வப்போது போராட்டத்தை கவனித்துக் கொண்டனர். ஆனால் எந்த அதிகாரியும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும் போராடுபவர்களை சந்திக்க வரவில்லை.

போராட்டத்துக்கு நடுவே, 1996ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் வந்தது. கிராமவாசிகள் புறக்கணித்தனர். வாக்களிக்க வேண்டாமென மக்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டது மட்டுமின்றி, வாக்களிக்க செல்வது போல் சென்று வாக்குப் பெட்டிகளில் நீரை ஊற்றினர். பள்ளிக் குழந்தைகள் 11,000 கடிதங்கள் எழுதி, சாக்குகளில் நிரப்பி, மாநில ஆளுநர் மோதிலால் வோராவுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.

அவஸ்தியும் தியாகியும் சண்டையை லக்நவுக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். அதற்கு முன் தியாகி, புறக்கணிப்பு தொடர்ந்தால் மக்கள் தங்களின் வலிமையை காட்டவும் தயங்க மாட்டார்களென எச்சரித்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கும் துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கும் கடிதங்கள் அனுப்பினார். லக்நவுக்கு செல்லும் முன் இறுதி முயற்சியாக எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மதோகஞ்ச் டவுனுக்கு சைக்கிள் ஊர்வலம் சென்றனர். 4,000 சைக்கிள்கள் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றுடன் தோன்றியதும் ஊடகம் நிமிர்ந்து உட்கார்ந்து குறித்துக் கொண்டது. பல உள்ளூர் செய்திகள் பிரச்சினையை முன் வைத்தன. பாலத்துக்கான கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், அதற்கு பொறுப்பானவரின் ஜீப்பை ஆற்றுக்குள் தள்ளிவிடுவோம் என சொன்ன சில போராட்டக்காரர்களின் கூற்றும் செய்தியாக்கப்பட்டது.

சில வாரங்கள் கழித்து, 51 ட்ராக்டர்கள் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டன. ஆனால் அந்த அதிகாரி வெளியே வந்து போராட்டக்காரர்களை சந்திக்க மறுத்தார்.

Left: Jagdish Tyagi (white kurta) sitting next to Surendra Awasthi (in glasses) in an old photo dated April 1996. These are scans obtained through Awasthi.
PHOTO • Courtesy: Surendra Nath Awasthi
Right: Villagers standing on top of a makeshift bamboo bridge
PHOTO • Courtesy: Surendra Nath Awasthi

இடது: ஜக்தீஷ் தியாகி (வெள்ளை குர்தா) சுரேந்திர அவஸ்திக்கு அருகே (கண்ணாடியுடன்) ஏப்ரல் 1996-ல் எடுத்த ஃபோட்டோவில். இவை அவஸ்தி மூலம் பெறப்பட்டவை. வலது: கிராமவாசிகள் தற்காலிக மூங்கில் பாலத்துக்கு மேல் நிற்கின்றனர்

Surendra Nath Awasthi standing with villagers next to the Sai river
PHOTO • Rana Tiwari

சுரேந்திர நாத் அவஸ்தி  கிராமவாசிகளுடன் சாய் ஆறுக்கருகே நிற்கிறார்

எனவே அடுத்ததாக லக்நவிலிருக்கும் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். கோரிக்கை கடிதங்கள் அச்சிடப்பட்டு, ரத்தத்தில் கையெழுத்திடப்பட்டன. மக்களை பயணத்துக்கு தயார்படுத்தவென ஒவ்வொரு கிராமத்துக்குமென ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். பெண்கள் உள்ளடக்கப்படவில்லை. ஆனால் தியாகியின் தாய்க்கு அந்த வாய்ப்பும் இல்லை. மகன் செல்லும் இடத்துக்கெல்லாம் செல்வேனென கூறுகிறார் அவர்.

ஏப்ரல் 1995-ல் 14 பேருந்துகள், பராலியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சண்டிலாவில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை, மாநிலப் போக்குவரத்து கழகத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத ஓர் அதிகாரி அளித்திருந்தார். அதிகாலை 5 மணிக்கு, அவர்கள் லக்நவ்வை அடைந்தனர். போராட்டக்காரர்கள் எவருக்கும் நகரத்தில் வழி தெரியாதென்பதால், ஒரு கண்காட்சியில் சற்று நேரம் சுற்றி விட்டு, காலை 11 மணி அளவில் மகாத்மா காந்தி மார்கில் இருக்கும் ஆளுநர்  மாளிகையை அடைந்தனர்.

“சூழல் பதற்றம் கொண்டது. 15 காவல்துறை ஜீப்புகள் எங்களை சுற்றி வளைத்தது. சில காவலர்கள் குதிரைகளில் வந்தனர். நீர் டாங்கிகள் வந்தன. ஒரு காவலர் என்னை இழுத்துச் செல்ல முயன்றபோது என் தாய் என் மீது விழுந்து, மகனுக்கு முன்னால் தான்  சிறைக்கு போகப் போவதாக கூச்சலிட்டார்,” என்கிறார் தியாகி. சில போராட்டக்காரர்கள் ஓடி விட்டனர். பிறரை அங்கு வந்தடைந்த ஹர்தோயின் அரசியல் பிரதிநிதிகள் காப்பாற்றினர். உடல்ரீதியாக சோர்விருந்தாலும் உளப்பூர்வமாக வெற்றிக் களிப்புடன், குழு நள்ளிரவு 12 மணிக்கு ஹர்தோயை சென்றடைந்தது. மாலைகள் அணிவிக்கப்பட்டு அவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அச்சமயத்திலெல்லாம் பாலத்துக்கான சண்டை தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. லக்நவ்வின் முற்றுகை ஒரு பெரும் அதிர்வை உருவாக்கியிருந்தது.

போராட்டத்துக்கு பிறகு போராட்டக்காரர்களை முதல் ஆளாக கூட்டுறவு அமைச்சர் ராம் பிரகாஷ் திரிபாதி தொடர்பு கொண்டார். அவர்கள் சொன்னதை கேட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவிடம் சென்று கோரிக்கையை சொன்னார். அதை மட்டுமின்றி, போராட்டம் தொடர்ந்தால் பாரதிய ஜனதா கட்சிக்கான அப்பகுதியின் ஆதரவு பறிபோகும் என்றும் கூறினார்.

மிஷ்ரா தலையிடுவதற்கு முன், போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக ஊடகங்களில் அறிவித்தனர். காவலர்கள் குவிக்கப்பட்டு, தியாகியின் சகோதரர் ஹ்ருதய் நாத் உள்ளிட்ட பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 13, 1997-ல் ஹர்தோய் பொறுப்பாளர் தலைமையிலான குழு போராட்டக்காரர்களை சந்திப்பதென முடிவுக்கு வந்தது. தியாகி நாயகனாக கொண்டாடப்பட்டார். லக்நவ்விலிருந்து போராட்டத்துக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்த அவஸ்தி ஆசுவாசமானார். சில மாதங்கள் கழித்து, பாலத்துக்கான அனுமதி கிடைத்தது. ஆனாலும் பாலத்தை கட்டுவதற்காக இரு தவணைகளில் வர வேண்டிய நிதி, இன்னொரு வருட போராட்டங்களுக்கு பிறகுதான் கிடைத்தது.

Left: Venkatesh Dutta sitting in front of his computer in his laboratory.
PHOTO • Rana Tiwari
Right: A graph showing the average annual rainfall in Hardoi from years 1901-2021

இடது: வெங்கடேஷ் தத்தா பரிசோதனைக் கூடத்திலுள்ள தன் கணிணி முன் அமர்ந்திருக்கிறார். வலது: 1901-2021 வரையிலான சராசரி வருடாந்திர மழைப்பொழிவை காட்டும் புள்ளிவிவரம்

ஜுலை 14, 1998-ல் பாலம் தயாராகிவிட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் பாலத்தை திறக்கவிருந்தார். நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது எடைக்கு எடையாக நாணயங்கள் கொடுக்கப்படும் எனவும் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அது நடக்காமல் போனதும், அவர்களை நோக்கி காட்டம் காட்டாமல் தன் உரையை அவரால் வழங்க முடியவில்லை.

பாலத்துக்காக போராட 17 கிராமங்கள் ஒன்றிணைந்திருந்த நிலையில், அன்று அது கொண்டாட்டத்துக்கான நாள். “தீபாவளியை விட வெளிச்சமானது, ஹோலியை விட வண்ணமயமாக இருந்தது,” என அவஸ்தி நினைவுகூருகிறார்.

அதற்குப் பிறகு, சாய் ஆறு சுருங்கத் தொடங்கியது. மழைப்பொழிவால் கம்பீரமாக வருடம் முழுக்க ஓடிக் கொண்டும் மழைக்காலத்தில் அச்சத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்த ஆறு, சுருங்கி, கடந்த வருடங்களில் பலவீனமாக மாறிவிட்டது.

சாய் ஆற்றுக்கு மட்டுமான நிலையல்ல இது - லக்நவ்வில் இருக்கும் பாபாசாகெப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சூழலியல் அறிவியல்களுக்கான பேராசிரியரான வெங்கடேஷ் தத்தா சொல்கையில்: “விட்டு விட்டு நிகழும் தன்மை உலகளாவியதாக இருக்கிறது. நன்றாக ஓடிக் கொண்டிருந்த (சாய் போன்ற) ஆறுகள் மழையை சார்ந்ததாக மாறி மந்தமாகின்றன. 1984 தொடங்கி 2016 வரையிலான தரவுகள் நிலத்தடி நீரும் ஆற்றோட்டமும் குறைந்து வருவதை உறுதிபடுத்துகிறது,” என்கிறார்.

நிலத்திலிருந்து ஒரு நீர்நிலைக்கு கடைசி மழை ஓய்ந்து பல காலத்துக்கு பிறகும் நீரோடுவதுதான் ஆற்றோட்டம். நிலத்தடி நீர் என்பது நிலத்துக்கு அடியில் இருக்கும் நீர். ஆறு காயும்போது உறைகொள்ளும் இடம் அது. ஆற்றோட்டம் என்பது இன்று நாம் பார்க்கும் ஆறு, நிலத்தடி நீர் என்பது எதிர்காலத்தில் தோன்றக் கூடிய ஆறு. 1996ம் ஆண்டு தொடங்கி, 20 வருட காலத்தில் உத்தரப்பிரதேசத்தின் மழைப்பொழிவு 5 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

நீர் உதவி அமைப்பு ஜுலை 2021-ல் வெளியிட்ட உத்தரப்பிரதேசத்தில் நிலத்தடி நீரின் நிலை அறிக்கை, “... நீர் மட்டங்களின் வேகமான சரிவு, மாநிலத்தில் நிலத்தடி நீரின் உதவியில் ஓடும் ஆறுகளை தீவிரமாக பாதித்திருக்கிறது. ஏனெனில் இயல்பாக நீர் வெளியேறும் முறை, நிலத்தடி நீரமைப்பிலிருந்து ஆறுகள், சதுப்புநிலங்கள் வரை கணிசமாக குறைந்திருக்கிறது. அல்லது மறைந்துவிட்டது. நீர்நிலை மற்றும் நீர் தேக்குமிடங்களின் பெருமளவிலான ஆக்கிரமிப்பும் துயரங்களை கூட்டியிருக்கிறது.. ஆற்றோட்டத்தின் சரிவு, நிலத்தடி நீர் சார்ந்த ஆறுகளில் பாதிப்பை உருவாக்கும். அவற்றின் சூழலியலிலும் நில சேமிப்பிலும் பாதிப்பு உருவாக்கும். கோம்தி ஆறும் அதன் கிளை ஆறுகளும் மாநிலத்தில் பிற ஆறுகளும் நிலத்தடி நீரால் உருவாகுபவை. ஆனால் அதிகமாக உறியப்படுவதும் அதன் விளைவான நிலத்தடி நீர் சரிவும் ஆறுகளில் நீரோட்டங்களை கடுமையாக பாதித்திருக்கிறது,” எனக் குறிப்பிடுகிறது.

இந்தப் பேரிடர்களையும் தாண்டி, அம்மாவட்டம் மூன்றாவது பிரச்சினையை சந்தித்தது. 1997 முதல் 2003ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 85 சதவிகித சதுப்பு நிலங்களை ஹர்தோய் இழந்துவிட்டதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

Left: Shivram Saxena standing knee-deep in the Sai river.
PHOTO • Rana Tiwari
Right: Boring for farm irrigation right on the banks of the river
PHOTO • Pawan Kumar

இடது: ஷிவ்ராம் சக்சேனா முழங்கால் அளவு சாய் ஆற்றில் நிற்கிறார். வலது: ஆற்றின் கரைகளில் விவசாயப் பாசனத்துக்காக ஆழ்துளைக் கிணறு போடப்படுகிறது

பராலியில், அறிவியல் பரிச்சயப்படாதவர்களுக்குக் கூட மாற்றங்கள் தெளிவாக புலப்படுகிறது. உதாரணமாக 20 வருடங்களில், கிராமத்தின் ஆறு கிணறுகளும் காய்ந்துவிட்டன. எல்லா சடங்குகளும் (மணப்பெண்ணால் பிரார்த்தனை செய்வது உட்பட) முயன்று பார்த்து கைவிடப்பட்டன. கோடை மாதங்களில் ஆறு பலவீனமாக குறைந்துவிட்டது.

விவசாயியான 47 வயது ஷிவ்ராம் சக்சேனா போன்றவர்களின் பெரும் கோடைகால ஆனந்தம் ஆற்றில் நீந்துவதுதான். ஆனால் தற்போது அவர், புகைப்படத்துக்காக கூட ஆற்றில் இறங்க தயங்குகிறார். “நான் வளரும்போது இருந்த சுத்தமான அழகான ஆறு இதுவல்ல,” என்கிறார் அவர் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு. அச்சமயத்தில் அவருக்கு பின் ஓர் இறந்த விலங்கு மிதந்து வருகிறது.

அவஸ்தியின் தந்தை தேவி சரண் ஒரு நில அளவையாளர். நீர்ப்பாசனத்துறைக்காக நிலத்தை அளக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர். சாய் ஆற்றுநீரை பராலிக்கு நீர்ப்பாசனத்துக்காக திருப்பிவிட ஒரு சிறு கால்வாயை கட்டியிருக்கிறார். இப்போது அந்த கால்வாய் காய்ந்து போயிருக்கிறது.

அதற்கு பதிலாக வயலுக்கு நீர் பாய்ச்சவென ஆற்றங்கரையில், டீசலில் இயங்கும் நீர் பம்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன.

சாய் ஆறுக்கென சில வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் 74 வயது விந்தியாவசானி குமார். முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரான (1996-2002) அவர், ஆற்றோர 725 கிலோமீட்டர் தூரத்துக்கும் பயணித்திருக்கிறார். அவர் நடத்திய 82 பொதுக்கூட்டங்களையும் அவர் நட்ட ஆயிரக்கணக்கான மரங்களும், கங்கையின் கிளை நதிகளை பாதுகாக்காமல் கங்கையை பாதுகாக்க முடியாதென்கிற கருத்தை பறைசாற்றுவதாக இருந்தது.

பிரதாப்கர் மாவட்டத்தில் பிறந்த குமார் சொல்கையில், “என்னுடைய சொந்த வாழ்க்கையில், ஆறுகளின் மரணத்தை நான் பார்த்திருக்கிறேன். அவை சுருங்கி, நீர் காய்ந்து, தொழிற்சாலை கழிவுகளும் அழுக்கும் வேறுபாடின்றி கொட்டப்பட்டிருக்கின்றன. ஆற்றுபடுகைகள் விவசாயத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக சுரண்டப்படுகிறது. கொள்கை வகுப்பவர்கள் இவற்றை கவனிக்காதது நமக்கு நேர்ந்த துயரமாகும்." சாய் ஆறு பிரதாப்கர் மாவட்டத்திலும் ஓடுகிறது.

கொள்கை வகுப்பவர்கள், மறைந்து கொண்டிருக்கும் ஆறுகளின் துயரங்களை பொருட்படுத்தவில்லை எனினும், சாதனைகளை பறைசாற்றிக் கொள்கின்றனர்.

Old photos of the protest march obtained via Vindhyavasani Kumar. Kumar undertook a journey of 725 kms on the banks of the river in 2013
PHOTO • Courtesy: Vindhyavasani Kumar
Old photos of the protest march obtained via Vindhyavasani Kumar. Kumar undertook a journey of 725 kms on the banks of the river in 2013
PHOTO • Courtesy: Vindhyavasani Kumar

விந்தியாவாசனி குமாரின் வழியாக கிடைக்கப் பெற்ற போராட்ட ஊர்வலத்தின் பழைய புகைப்படங்கள். 2013ம் ஆண்டில் ஆற்றங்கரையில் 725 கிலோமீட்டர்கள் பயணத்தை குமார் மேற்கொண்டார்

'Till children do not study the trees, land and rivers around them, how will they grow up to care for them when adults?' says Vindhyavasani Kumar (right)
PHOTO • Courtesy: Vindhyavasani Kumar
'Till children do not study the trees, land and rivers around them, how will they grow up to care for them when adults?' says Vindhyavasani Kumar (right)
PHOTO • Rana Tiwari

'குழந்தைகள் மரம், நிலம் மற்றும் ஆறுகள் போன்றவற்றை பற்றி படிக்காத வரை, அவற்றை பாதுகாக்க வேண்டுமென அவர்கள் வளர்ந்த பிறகு எப்படி நினைப்பார்கள்?' என்கிறார் விந்தியாவாசனி குமார் (வலது)

நவம்பர் 1, 2022 அன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்தியா நீர் வாரத்தையொட்டி பேசுகையில் கடந்த சில வருடங்களில் 60 ஆறுகளுக்கும் மேல் மாநிலத்தில் மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் .

பேராசிரியர் வெங்கடேஷ் தத்தா சொல்கையில், சில மாதங்களில் நடத்த முடிகிற மாயாஜாலம் அல்ல, ஆறுகளை மீட்பது என்பது என்கிறார். “நதிகள், குளங்கள், ஓடைகள் போன்ற பெரு நீர்நிலைகளிலிருந்து இயற்கையாக வெளியேறும் நீரின் மூலம்தான் ஆறுகளுக்கு நீர் கிடைக்க முடியும். பயிர் தேர்வு மாற வேண்டும். நுண் பாசனத்தின் மூலமாக நீர் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்பட வேண்டும். அப்போதும் கூட, 15-20 வருடங்களேனும் ஆற்றை மீட்க ஆகும்.” ஆறுகள் பற்றி தேசிய அளவில் கொள்கை இல்லாததையும் அவர் விமர்சிக்கிறார்.

பள்ளி மட்டத்திலேயே உள்ளூர் பூகோளவியலை கற்கும் முறை கட்டாயமாக்கப்படுவதுதான் நீண்ட காலத் தீர்வாக முடியும் என்கிறார் விந்தியாவாசனி குமார். “மரம், நிலம், அவற்றை சுற்றியிருக்கும் ஆறுகள் போன்றவற்றை பற்றி படிக்காமல், வளர்ந்த பின் அவர்கள் எப்படி அவற்றை பாதுகாக்க வேண்டுமென நினைப்பார்கள்?” எனக் கேட்கிறார் அவர்.

அரசின் நிலத்தடி நீர்த்துறையில் மூத்த நீரியலாளராக இருந்தவரும் நிலத்தடி நீர் செயல்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ரவிந்திரா ஸ்வரூப் சின்ஹா, ஆறுகளை மீட்டெடுக்க முழுமை கொண்ட அணுகுமுறை வேண்டுமென்கிறார்.

"கங்கை போன்ற பெரிய ஆறுகளை, அவற்றுக்கு நீரளிக்கும் சிறிய ஓடைகளை மீட்காமல் மீட்க முடியாது. விரிவான அணுகுமுறையில் தரவுகள் சேகரிப்பு, ஆய்வு, மேலாண்மை போன்றவை இருக்க வேண்டும். நிலைத்து நீடிக்கும் தன்மைக்கேற்ற நீரெடுக்கும் அளவுகள், தேவையை குறைப்பதற்கான நடவடிக்கைகள், குறைவாக நீரெடுத்தல் மற்றும் நிலத்தடி நீரை மீட்டல், நிலத்தடி மற்றும் நிலத்தின் மேல் இருக்கும் நீரை பயன்படுத்துவதில் சமநிலை போன்றவையும் இருத்தல் வேண்டும்.

“ஆற்றின் சேற்றையும் நீர்த்தாவரங்களையும் அகற்றுவது, நீரோட்டத்தை கொஞ்ச காலத்துக்கு மேம்படுத்துவதற்கான தற்காலிக நடவடிக்கைகள்தாம்,” என்கிறார் சின்ஹா.

”நிலத்தடி நீர், மழை மற்றும் ஆறுகள் ஆகியவற்றுக்கு இடையே இருக்கக் கூடிய தொடர் உறவு முறிக்கப்பட்டுவிடது,” என்கிறார் அவர்.

Left: There is algae, water hyacinth and waste on the river.
PHOTO • Pawan Kumar
Right: Shivram Saxena touching the water hyacinth in the Sai
PHOTO • Pawan Kumar

இடது: பாசி, நீர்த்தாவரம் மற்றும் கழிவு ஆகியவை ஆற்றில் இருக்கின்றன. வலது: சாய் ஆற்றின் நீர்த்தாவரத்தை தொட்டபடி ஷிவ்ராம் சக்சேனா

இம்முறிவு, மனித நடவடிக்கைகள் மற்றும் மனிதக் கட்டுப்பாடு இல்லாத நடவடிக்கைகள் ஆகிய இரண்டாலும் நேர்ந்திருக்கிறது. “நிலத்தடி நீருடனான நம் சார்பை பசுமை புரட்சி அதிகப்படுத்தியது. மரங்கள் குறைந்தன. மழைப்பொழிவு தன்மை மாறியது. அதிக மழை பரவலாக பல நாட்களுக்கு பெய்யாமல், சில நாட்களில் அடித்து பெய்யும் தன்மை தொடங்கியது. விளைவாக மழைநீர் நிலத்துக்குள் தங்காமல் வேகமாக ஓடி விடும். நிலத்தடி நீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. நம் ஆறுகளுக்கும் நீர் கிடைக்க முடியாமல் போனது,” என்கிறார் சின்ஹா.

எனினும் வளர்ச்சி கொள்கைகள் நிலத்தடி நீரை ஒரு காரணியாக பொருட்படுத்துவதில்லை. இரண்டு உதாரணங்கள் சொல்கிறார் சின்ஹா. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில், மாநிலத்தின் ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை 10,000-த்திலிருந்து 30,000 ஆக அதிகரித்திருப்பது, ஒன்று. இன்னொன்று, வீடு தோறும் நீர் கொண்டு செல்ல அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஹர் கர் ஜல் யோஜனா திட்டம்.

ஆறுகளை கண்டறிதல், நிலத்தடி நீர் சூழல், உருவவியல் மற்றும் அதன் வளைபோக்கு (சேட்டிலைட் வரைபடம் மூலம்) போன்றவை, முக்கியமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளாக சின்ஹா பட்டியலிடுகிறார்.

முழுமை கொண்ட அணுகுமுறையை நோக்கி நகர்வதற்கு பதிலாக அரசாங்கம் புள்ளிவிவரங்களின் தெளிவின்மையாக இப்பிரச்சினையை மாற்றிவிட்டது. உதாரணமாக நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை கண்காணிக்கும் முறையை 2015ம் ஆண்டிலிருந்து அரசாங்கம் கைவிட்டுவிட்டது. அப்போதிலிருந்து நிலம் நீரை உறிஞ்சும் கணக்கெடுப்புகளை மட்டுமே அது சார்ந்திருக்கிறது.

ஆசாத் நகரில், ஆரோக்கியம் குன்றியிருக்கும் தியாகி, சாய் ஆற்றுக்கு இனி நடந்து செல்ல முடியாதென சந்தோஷப்படுகிறார். “அதன் நிலையை கேட்டதிலிருந்து, அதை பார்ப்பது பெரும் வலியைத் தரும் என தெரிகிறது,” என்கிறார் அவர்.

ஆற்றை சுற்றி செல்லும் (பாலம் மற்றும் கால்வாய்) போன்ற மனித முயற்சிகளும் கூட இடையூறாக இருக்கலாம் என்கிறார் அவஸ்தி. “எங்களிடம் பாலம் இருக்கிறது, ஆனால் அதன் கீழே ஆறு இல்லை. இதை விட பெருந்துயரம் என்ன இருக்க முடியும்,” என அவர் கேட்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Rana Tiwari

Rana Tiwari is a freelance journalist based in Lucknow.

Other stories by Rana Tiwari
Photographs : Rana Tiwari

Rana Tiwari is a freelance journalist based in Lucknow.

Other stories by Rana Tiwari
Photographs : Pawan Kumar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan