ஹசன் அரா வளர்க்கும் மூன்று ஆடுகளும் முறையே  மூன்று குட்டிகள் ஈன்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அதில் ஆறு  குட்டிகள் இந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் 30 அன்றும், மீதமுள்ள மூன்று குட்டிகள் அதற்கு  முந்தைய நாளும் இப்புவிக்கு வந்துள்ளன. அந்த ஆட்டுக் குட்டிகள் அப்போது  மிகுந்த சிறியவையாகவும், தானே  பால் குடிக்கும்  வகையிலும்  உள்ளதால்,  அவைகளுக்கு போதிய பால் கிடைக்கும் வகையில் அவர் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறார். எனினும், ஆட்டுக் குட்டிகள் வளர்ந்து பெரியதானதும் அவை வருமானம் ஈட்டித் தரும் மூலதனங்கள் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கிறது.

பீகார் மாநிலம் சிதமர்ஹி மாவட்டம் பஜ்பட்டி பகுதியுள்ள பரி புல்வாரியா கிராமத்தில் ஹசன் அரா வசித்து வருகிறார். இந்த பஞ்சாயத்தில் உள்ள ஏறத்தாழ 5,700 பேரில் பலர் ஏழ்மையிலுள்ள, வாழ்வாரத்திற்காகப் போராடும் விவசாயிகள் அல்லது நிலமற்ற விவசாயக்கூலிகள். ஹசன் அரா அவர்களுள்  ஒருவர்.

அவர் அவரது மாமா முஹம்மது ஷபிரை மிகக்குறைந்த வயதிலேயே மணந்துள்ளார். அவர் ஐந்து ஆண்டுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தோல் பை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்காக சென்றுள்ளார். அதற்கு முன்பு வரை, அவரும் ஒரு விவசாயக்கூலியாகப் பணிபுரிந்துள்ளார். “அவர் மாதத்திற்கு 5,000 ரூபாய் சம்பாதிக்கிறார். சிலசமயம் அதில் 2,000 ரூபாயை வீட்டுக்கு அனுப்புவார். அப்போதிருந்து அவரால்  அவரது சொந்த தேவைகளை மட்டுமே பார்த்துக்கொள்ள மட்டுமே முடிகிறது. எனவே, அவரது தரப்பிலிருந்து  பணம் வருவது என்பது ஒழுங்கற்றதாகவே உள்ளது,” என்றார் ஹசன் அரா.

Husn Ara trying to feed her 2 day old kids
PHOTO • Qamar Siddique
Husn Ara with her grand children_R-L_Rahnuma Khatoo_Anwar Ali_Nabi Alam_Murtuza Ali
PHOTO • Qamar Siddique

பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டவதற்கான முயற்சியில் உள்ளார் மற்றும் (வலது)ஹசன் அரா அவரது பேரக்குழந்தைகளுடன்(இடப்புறமிருந்து வலப்புறமாக): ரஹ்னுமா கடூன்,அன்வர் அலி,நபி அலாம் மற்றும் மூர்டுசா அலி

பரி புல்வாரியா கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்கள்  அஹ்மதாபாத்,டெல்லி, ஜெய்பூர்,கொல்கத்தா போன்ற நகரங்களில் பணிபுரிகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஜவுளி நிருவனங்களிலும்,கைப்பை தயாரிக்கும் நிருவனங்களில் தையற் கலைஞராகவும்,தெருவோரக்கடைகளில் சமையற்கலைஞராகவும், உதவியாளராகவும் பணிபுரிகின்றனர். அவர்கள் அனுப்புகின்ற பணத்தினால் அந்த கிராமத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சில தசப்தங்கள் முன்பு வரை கையினால் அடிக்கக்கூடிய மூன்று அல்லது நான்கு பம்புகளே இருந்த நிலையில்,தற்போது பெரும்பான்மையான  வீடுகளில் கை பம்புகள் உள்ளன. மேலும்,  பெரும்பான்மையான பழைய மண் மற்றும் மூங்கிலால் கட்டப்பட்ட வீடுகள், தற்போது செங்கற்கள் மற்றும் சிமென்டிலான வீடாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், வரும்  2022 க்குள் ‘திறந்தவெளி மலம் கழித்தல்’ இல்லாத நாடாக மாற்ற பிரதமர் திட்டம் வகுத்துள்ள அதேவேளையில், ஹசன் அராவின் வீட்டை போன்று பகுதியுள்ள பரி புல்வாரியா கிராமத்தில் உள்ள  பல வீடுகளில் போதியக் கழிப்பறை வசதி இல்லை. மிகமுக்கியமாக, இந்தக் கிராமங்களில்  கடந்த 2008 ஆம் ஆண்டே மின்சார வசதியே செய்து தரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி,  2016 ஆம் ஆண்டில் தான் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புல்வாரியா கிராமத்தில் உள்ள பல இஸ்லாமியப் பெண்களைப் போன்று, 56 வயதான ஹசன் அராவும் அவரது குழந்தைப் பருவத்திலிருந்து விவசாயக் கூலியாகப் பணியாற்றி வருகிறார். இதே போன்று விவசாயக்கூலியாக இருந்து வந்த  அவரது தாய் சமேல் ஒன்பது வருடங்களுக்கு முன் இறந்துள்ளார். ஹசன் அராவின் குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக அவரோ அல்லது அவரது குழந்தைகளோ பள்ளிக்கோ மதரசாவுக்கோ செல்ல இயலவில்லை. பரி புல்வாரியா கிராமத்தின் கல்வி விகிதம் குறைவாக 38.81 விழுக்காடாக (மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ன் படி)உள்ளது.அதேவேளையில்  இந்தப் பகுதியில் பெண்கள் கல்வி அறிவு விகிதமானது வெறும் 35.09  விழுக்காடு மட்டுமே உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஹசன் அராவின் பெரியப்பாவான, முஹம்மது ஜாகூர், தற்போதும் தினசரி கூலி வேலைக்குச் செல்ல முயன்று வருகிறார். அவருக்கு வயது  நூறு ஆகும்.  அவரால் நாள் முழுதும் மண்ணை வெட்டவோ, ஏர்க்கலப்பைப் பிடிக்கவோ இயலவில்லை. எனவே, தளர்ந்து நடந்தபடி விவசாயநிலத்தில் விதைகளை  வீசியும், அறுவடைக் காலத்தில் பயிர்களை அறுவடை செய்தும்  வருகிறார்.  அவர் கூறுகையில்  ”நான் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன்” என்றார். மேற்கொண்டு தெரிவிக்கையில், விவசாயம் என்பது கணிக்கமுடியாததாக லாபமற்றதாக மாறியுள்ளது. நெல்லும் கோதுமையும் பயிர்செய்ய ஒழுங்கற்றவையாக உள்ளது என்ற அவர், “பாரம்பரிய விவசாய முறைகள் என்பது மறைந்துகொண்டே வருகிறது. விவசாயிகள் டிராக்ட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தினக்கூலிகலின் வேலை நாட்கள் குறைகிறது. எதாவது வேலை தேடி செய்பவர்கள் கூட நாளொன்றுக்கு  .ரூ 300, 350 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியாது.” என்று கூறினார்.

Husn Ara's father M. Zahoor
PHOTO • Qamar Siddique
Handpump outside Husn Ara's house
PHOTO • Qamar Siddique

ஹசன் அராவின் பெரியப்பாவான , முஹம்மது ஜாகூர்(இடது பக்கம் அமர்திருப்பவர்), தற்போதும் தினசரி கூலி வேலைக்குச் செல்ல முயன்று வருகிறார். வேலைக்காக இடம்பெயர்ந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனுப்பியப் பணத்தினால் கிராமத்தில்  கை பம்புகள்(வலது) மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், அந்தக் கிராமத்தின் நிலையானது வறுமையிலும்,விளிம்புநிலையிலுமே உள்ளது

பரிபுல்வாரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிலங்கள் வளமானவை எனினும், பாசனம் செய்யவதற்கான நீருக்கு  பற்றாக்குறை நிலவுகிறது. இந்தக் கிராமத்தின் மேற்கு திசையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அத்வரா ஆறு ஓடுகிறது. ஆனால், மழைக்காலத்தில் மட்டுமே அந்த ஆறு நிரம்புகிறது. வருடத்தின் மற்றக் காலங்களில் வறண்ட  நிலையிலுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இந்தப்பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் வறட்சி போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹசன் அராவிற்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அவரது மூத்தமகன் முஹம்மதுக்கு 32 வயதாகிறது. அவர் அவரது மனைவி ஷாஹிதா, இரண்டு பிள்ளைகளுடன் அவரது தாயின் வீட்டிலேயே தனி அறையில் வசித்து வருகிறார். அவர் குடும்பத்தின் செலவுகளுக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வதில்லை.   ஹசன் அராவின் இரண்டாவது மகன் ஒரு சோம்பேறி. அவரது மூத்த மகளுக்கு சில வருடங்களுக்கு முன்னரே திருமணம் நடந்துள்ளது. தற்போது அவரது மகள் பரி புல்வாரியா கிராமத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாலின் சம்சி கிராமத்தில் வசித்து வருகிறார். ஹசனின் மூன்றாவது மகன் மற்றும் 18 வயது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்களும் விதைத்தல், அறுவடைக் காலங்களில் மட்டுமே தினக்கூலியாகப் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், ஹசன் குடும்பத்தைக் காப்பாற்றவும் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் கிடைப்பதை  உறுதிப்படுத்தவும்  அவர் போராடி வருகிறார். அவரது குடும்ப ரேஷன் அட்டையின் வழியாக ஒவ்வொரு மாதமும்  ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் 14 கிலோவும், ஒரு கிலோ கோதுமை  3 ரூபாய் வீதம் 21 கிலோவும், இதரப்பொருட்களும் வாங்கிக் குடும்பத்திற்கு அளித்து வருகிறார். “தற்போதெல்லாம் போதிய விவசாய வேலைகள் கிடைப்பதில்லை” என்று கூறிய அவர், “எனது உடல்நிலை மோசமடைந்துள்ளது. எனது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் வருமானம் உயரவில்லை. நான் எனது பேரக்குழந்தைகளுக்கும் உணவளிக்க வேண்டும். ஆனால், எவ்வளவு நாட்கள் நான் இதை செய்வேன் என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

Husn Ara inside her house
PHOTO • Qamar Siddique

ஹசன் அரா அவரது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் அவரது ஐந்து பிள்ளைகள் மீது தான் வைத்திருந்தார்.  அவர்கள் பெரியவர்களாக வளரும் போது குடும்பத்தின் வருமானத்திற்கு பங்களிப்பு செய்து மகிழ்ச்சியையும் நல்ல பொருளாதார நிலையையும் கொண்டுவருவார்கள் என்று நம்பிக்கைக்  கொண்டிருந்தார்

ஹசன் அரா  அவரது குடும்ப வருவாயைக் கூட்ட, அவரது கிராமத்தில் உள்ளவர்களின் வருவாய்க்கு ஆதாரமாக உள்ள ஆடு மற்றும் கோழி வளர்ப்பில்  அவரும் ஈடுபட்டுள்ளார். கோழிகள் இடும் முட்டையின் வழியாக அவருக்கு சில நூறு ருபாய்க் கிடைத்துள்ளது அல்லது குடும்பத்தின் உணவில் கூடுதலாக முட்டை இடம்பெற்றுள்ளது. ஆடுகளும் ஒவ்வொன்றும்  மூன்று வருடங்களில் சில குட்டிகளை ஈன்றுள்ளன. அந்தக் குட்டிகளை வளர்த்து கால்நடை தரகரிடம் அவர் விற்று வருகிறார். ஆனாலும், மற்றவர்களின்  ஆடுகளின் விலையைவிட அவரது ஆடுகளைக் குறைந்த விலைக்கே தரகர்கள் வாங்கியுள்ளனர். இதுகுறித்து கூறிய அவர்,”யாரிடம் பணம் உள்ளதோ அவர்கள் தங்கள் ஆடுகளுக்கு நல்ல தீவனம் போட்டு வளர்க்கிறார்கள். ஆனால், நானோ ஏழை, எனது ஆடுகளுக்குப் புல்லை மட்டுமே கொடுத்து வளர்க்கிறேன். எனவே அவை வலுவிழந்ததாக உள்ளன” என்றார் அவர்.

ஆடுகளுக்கு சத்துமிகுந்த தீவனங்களைக் கொடுத்தால் நான்கு மாதங்களில் 8-10 கிலோ எடைக்கூடும். அதனை தலா 4,000 ரூபாய்க்கு வணிகர்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால்,ஹசன் அராவின் ஆடுகள் எப்போது ஐந்து கிலோவுக்கும் கூடுதலாக இருந்ததே இல்லை. இதன்காரணமாக அவரது ஆடுகள் நான்கு மாதங்கள் கழிந்தும் 2,000 ரூபாய்க்கு மேல் விலை போவதும் இல்லை. ஒருவேளை, அவரது ஆடுகளை விற்காமல் ஓர் ஆண்டு வளர்த்து, ஈத்-உல்-அதா அல்லது பக்ரீ ஈத் போன்ற பண்டிகைகளுக்கு ஒரு ஆட்டுக்கு 10,000 ருபாய் கொடையாக வழங்கக்கூடிய நிலையிலுள்ள அண்மைக் கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமியர்களிடமிருந்து பெறக்கூடும்.

ஹசன் அரா அவரது ஐந்து பிள்ளைகள் மீதே தனது முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார். அவர்கள் வளர்ந்து குடும்பத்தின் வருமானத்திற்கு பங்களித்து மகிழ்ச்சியையும் நல்ல செல்வவளத்தையும் கொண்டு வருவார்கள் என்று நினைத்திருந்தார். ஆனால், அவர்கள் வளர்ந்தது மட்டுமல்ல, அவர்களில் பெரும்பாலோருக்கு சொந்தக் குழந்தைகளும் உள்ளன. இன்னும் ஹசன் அராவிற்கு  மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நழுவிக்கொண்டே உள்ளது.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Qamar Siddique

Qamar Siddique is the Translations Editor, Urdu, at the People’s Archive of Rural India. He is a Delhi-based journalist.

Other stories by Qamar Siddique
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan