விதர்பாவில் பருத்தி அதிகம் விளையும் மாவட்டங்களில் குறிப்பாக யவத்மல்லில், கடந்த 2017 ஜூலை முதல் நவம்பர் வரை பதற்றம், தலைச்சுற்றல், பார்வை குறைபாடு மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. மருத்துவமனைகளுக்குச் சென்ற அனைவரும் பருத்தி விவசாயிகள் அல்லது தொழிலாளிகள். அவர்கள் விளைநிலத்தில் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும்போது விஷத்தன்மையால் பாதிக்கப்பட்டனர். இதனால் 50 பேர் வரை உயிரிழந்தனர். சிலர் மாதக்கணக்கில் நோய்வாய்ப்பட்டனர்.

3 பாகங்கள் அடங்கிய இந்தத் தொகுப்பின் இரண்டாவதான இக்கட்டுரையில், அந்தப் பகுதியில் நிகழ்ந்தது குறித்தும், மகாராஷ்டிர அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்தது குறித்தும் PARI ஆராய்கிறது.

இதன்பிறகு, விதர்பாவில் ஏன் நிறைய பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்கிற மிகப்பெரிய விஷயத்தை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம்.

*****

விஷத்தால் கண் பாதிப்பு ஏற்பட்ட அச்சம் மற்றும் அதிர்ச்சியிலிருந்து சஞ்சய் போர்கடே இன்னும் வெளிவரவில்லை. ”கிட்டத்தட்ட என் பார்வை பறிபோய்விட்டது,” என்கிறார் அவர். "கண்களில் இன்னும் உறுத்தல் இருக்கிறது. சோர்வாகவே உணர்கிறேன்.”

அந்த் சமூகத்தைச் சேர்ந்த 35 வயது ஆதிவாசியான சஞ்சய் போர்கடே 15 வருடங்களுக்கும் மேலாக வேளாண் தொழிலாளராக இருந்து வருகிறார். அவருக்கென்று சொந்தமாக நிலம் இல்லை. இத்தனை ஆண்டுகளில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதனால் இந்தளவு பாதிப்பை எதிர்கொண்டதே இல்லை என்கிறார் சஞ்சய் போர்கடே.

அவர் பாதிப்புக்குள்ளானபோது 5 முதல் 6 மணி நேரம் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்துள்ளார். அக்டோபர் 2017-இல் அவரது கிராமத்திலுள்ள 10 ஏக்கர் பருத்தி வேளாண் நிலத்தில் வருடாந்திர ஒப்பந்தத்தில் பணியாற்றி வந்த அவர் ஒரு வார காலத்திற்கு பூச்சிக்கொல்லி கலவையை தெளித்துள்ளார். நாட்டின் இந்தப் பகுதியில் இது சல்தாரி என அழைக்கப்படுகிறது. இதன்மூலம், சஞ்சய்க்கு ரூ. 70 ஆயிரம் ஆண்டு வருமானமாகக் கிடைத்துள்ளது. அவர் சிகாலி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அந்தக் கிராமத்தில் சுமார் 1,600 பேர் வசிப்பார்கள். அதில் 11 சதவிகிதத்தினர் அந்த் மற்றும் இதர பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

The inside of a hut with utensils and clothes
PHOTO • Jaideep Hardikar

சிகாலி கன்ஹோபா கிராமத்தின் விவசாயத் தொழிலாளியான சஞ்சய் போர்கடே தனது குடும்பத்தில் உள்ள 7 பேருடன் ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார்

சஞ்சய் மனைவி துல்சா கூறுகையில், "கிராமத்திலுள்ள பெண்கள் மூலம் பூச்சிக்கொல்லி நோய் மற்றும் உயிரிழப்புகள் குறித்து கேட்டிருக்கிறேன். சஞ்சய்யும் நோயால் பாதிக்கப்பட்டபோது, அவர் கண்களை இழந்துவிடுவார் என்று அஞ்சினேன். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலவிட்ட நேரம் கடினமானது. என் நல்லநேரம், அவர் பத்திரமாகத் திரும்பிவிட்டார். இல்லையெனில் எனது குழந்தைகளை நான் எப்படி வளர்த்திருப்பேன்?" என்றார்.

முதியவரான தாயார், துல்ஷா, அவர்களது மூன்று பெண்குழந்தைகள் மற்றும் மகன் ஆகியோர் கொண்ட குடும்பத்தில் சஞ்சய் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக உள்ளார். மண் சுவர்களால் எழுப்பப்பட்டு ஓலைக் கூரையால் வேயப்பட்ட குடிசைகளில் இவர்கள் வசிக்கின்றனர்.

50 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட பேரழிவு (படிக்க Lethal pests, deadly sprays ) குறித்து பேசும்போது சஞ்சய் மிகவும் பதற்றமடைந்தார். 2017 செப்டம்பர் மற்றும் நவம்பர் காலத்தில் தற்செயலாக விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியுடன் எதிர்பாராது ஏற்பட்ட தொடர்பால் அவர்கள் இறந்திருந்தனர். கிட்டத்தட்ட 1000 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சில மாதங்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். (இந்தத் தரவுகள் மாநில அரசால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெறப்பட்டவை.)

விவசாயத் தற்கொலைகளுக்கு பெயர்போன இந்தப் பகுதியில், பூச்சிக்கொல்லி விஷத்தால் பலியாகியிருப்பது விசித்திரமானது.

சஞ்சய் பணியாற்றிய வேளாண் நில உரிமையாளர் மற்றும் கிராமத் தலைவருமான உத்தவ்ராவ் பலேரோ கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் வேளாண் நிலத்தில் பூச்சிக்கொல்லி தெளித்ததைப்போலவே அப்போதும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து முடித்தோம்" என்றார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் கண்கள் வீங்கிய நிலையில் உத்தவ்ராவ் வீட்டுக்குச் திரும்பியுள்ளார் சஞ்சய். உத்தவ்ராவ் அவரை உடனடியாக இருசக்கர வாகனத்தில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள அர்னி டவுனுக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேற்கொண்டு 40 கி.மீ. தொலைவிலுள்ள யவத்மல் மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். "பூச்சிக்கொல்லி விஷப் பாதிப்பு குறித்து கேட்டிருக்கிறோம். ஆனால், அது எங்களைப் பாதிக்கும் என ஒரு போதும் நினைத்ததில்லை" என்கிறார் உத்தவ்ராவ். மருத்துவமனை முழுவதும் விஷத் தன்மையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் நிரம்பியிருந்ததை உத்தவ் நினைவுகூர்ந்தார்.

“இது அதிர்ச்சியளிக்கக்கூடிய மோசமான நிலை. நாங்கள் இத்தனை ஆண்டு காலம் பயன்படுத்திய இதே பூச்சிக் கொல்லிகளை அவர்களும் பயன்படுத்துகின்றனர்.” ஆனால் பருத்திகளில் இம்முறை ஒரே வித்தியாசமாக, அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் அதீத வளர்ச்சி இருந்ததாக பாலிரோ தெரிவிக்கிறார்.

நான் ஜனவரி மாதம் சிகாலி கன்ஹோபா சென்றிருந்தபோது, ஜூலை 2017 முதல் இளஞ்சிவப்பு காய்ப்புழு உட்பட பல பூச்சிகளின் கொடியத் தாக்குதலைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவசாயத் தொழிலாளர்கள் பூச்சிக்கொல்லி கலவையின் நச்சுப் புகையை சுவாசித்த  அதிர்ச்சியில் தத்தளித்து வருகின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக தடிமனாகவும், உயரமாகவும் வளர்ந்திருந்த பருத்தியின் மீது பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பின் இந்த கிராமத்திலிருந்த 5 தொழிலாளர்கள் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சஞ்சய் உள்பட 4 பேர் உயிர் பிழைத்திருக்கின்றனர். ஆனால் அந்த் சமூகத்தின் கடைநிலை விவசாயியான 45 வயது தியானேஸ்வர் தால், இரண்டு மாத மருத்துவமனை போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்திருக்கிறார். இவர்தான் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதன்முதலாக சார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அதற்கு அடுத்தநாளே யவத்மால் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒருமாத காலம் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

Two men walk around the village of Chikhli Kanhoba
PHOTO • Jaideep Hardikar
A man talking in the foreground with a man and woman sitting in the background in the village of Chikhli-Kanhoba
PHOTO • Jaideep Hardikar

இடது பக்கத்தில் தியானேஷ்வரின் புகைப்படத்துடன் தால் குடும்பம். வலது: தால் குடும்ப இல்லத்தில் கிராமத்தின் தலைவரும், நில உரிமையாளருமான உத்தவ்ராவ் பலேரோ

“ஆரம்பத்தில் உடல்நிலை தேறிவந்த அவர் பின்னர் தீவிரமான சிக்கலுக்குள்ளானார். அவர் உயிர் பிழைத்திருப்பார் என்ற எங்களது எண்ணம் நிறைவேறவில்லை" என மருத்துவமனையில் அவருடன் இருந்து பராமரித்த அவரது இளைய சகோதரரான கஜனன் தெரிவித்தார். தியானேஸ்வர் தாலின் மற்றொரு சகோதரரான பந்து, பார்வை குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். நச்சு வாயுவை சுவாசித்ததால் மூச்சுப் பிரச்னையுடன் அவர் போராடி வருகிறார்.

தியானேஸ்வர் தாலும், சஞ்சயும் தொடக்கத்தில் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாகவும், பின்னர் அதுவே நீடிக்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்தச் சிக்கல் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கச் செய்ததுடன் உடலின் முக்கிய உறுப்புகளை மோசமாக பாதித்துள்ளதாக மருத்துவமனைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவே செப்டிகேமியா என்றழைக்கப்படும் நோயாக மாறி அவரது உயிரைப் பறித்துள்ளது.

இப்போது அவரது மூன்று குழந்தைகளும் தந்தையை இழந்ததால் தங்களது படிப்பைத் தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். 12ஆம் வகுப்பு படிக்கும் 19 வயதான கோமல், 10ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதான கைலாஷ், 9ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதான ஷீதால் ஆகியோர் ஆர்னி நகரில் படித்து வருகின்றனர். தியானேஸ்வர் தால் தன்னுடைய குழந்தைகள் பள்ளிக்கு சென்று நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என விரும்பினார்.

தியானேஸ்வர் தாலின் மனைவி அனிதா விவசாயத் தொழிலாளி. அவரது வயதான தாய் சந்திரகலா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மற்றவரின் நிலத்தில் உழைத்தே செலவிட்டுள்ளார். ஒட்டுமொத்த கிராமமும் எங்களுக்கு உதவுவதற்காக நிதியை சேகரித்ததாகத் தெரிவிக்கும் அனிதா தியானேஸ்வர் தாலின் மருத்துவ செலவிற்காக தங்களிடமிருந்த சொற்ப தங்கத்தை விற்பனை செய்ததுடன் ரூ.60 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை கடனாகப் பெற்றதாகக் குறிப்பிட்டார்.

A young boy and two young girls, all sblings, stand in their house
PHOTO • Jaideep Hardikar

தியானேஷ்வர் தால் தனது குழந்தைகளான கைலாஷ், கோமல் மற்றும் ஷீதல் ஆகியோர் நல்ல கல்வி கற்கவும், வாழ்வில் முன்னேறவும் விரும்பினார்

செப்டம்பர்-நவம்பர் காலம் தங்களது வாழ்வில் மிகவும் கடினமான காலமாக இருந்ததாகவும் தியானேஸ்வரைத் தவிர மற்ற  நான்கு பேரை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்தது எனவும் அக்கிராமத்தின் மூத்தவரான பலிரோ தெரிவித்துள்ளார்.

இந்த சவாலான காலகட்டம் தரமான பருத்தி உற்பத்திக்கு உத்தரவாதமளித்திருந்தாலும் பூச்சிக் கொல்லிகளின் கடுமையான தாக்குதலுக்குள்ளான ஒன்றாக மாறியுள்ளது. பலிரோவின் பண்ணையில்  இளஞ்சிவப்பு காய்ப்புழுவாக பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளது. இந்தப் புழு கடைசியாக 1980களில் இருந்தது. 1990களில், செயற்கையான பைரித்ராய்டுகளின் பயன்பாடு மற்றும் 2001க்குப் பிறகு மரபணு மாற்றப் பருத்தியின் வருகை, இந்த பூச்சிகளுக்கு எதிர்கொல்லியாக இருந்தது.

பூச்சிக் கொல்லிகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளைத் தடுக்கும் வகையிலான பரிந்துரைகளை வழங்க 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநில அரசு அமைத்த  சிறப்புப் புலனாய்வுக் குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் அபாயகரமான பூச்சிக்கொல்லியாக வகைப்படுத்தப்படும் மோனோகுரோட்டோபாஸ் பயன்பாட்டைத் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது (பார்க்க எஸ்.ஐ.டி அறிக்கை: முன்னெப்போதும் இல்லாத பயிர்களின் மீதான பூச்சித் தாக்குதல் ).

இந்தப் பேரிடர் உள்ளூர் விவசாய வருமானத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தும் என பலிரோ தெரிவிக்கிறார். அவரது பருத்தி விளைச்சல் இந்த ஆண்டு 50 சதவிகிதம் சரிந்துள்ளது. ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்யப்பட்ட அவரது 8 ஏக்கர் பண்ணையில் ஒவ்வொரு ஏக்கரிலும் 12-15 குவிண்டால்களிலிருந்து,  2017-18 இல் 5-6 குவிண்டல்கள் வரை குறைந்துள்ளது. மேலும் பூச்சிகளின் தாக்குதலால் பருத்தியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த  விளைச்சலுடன், உள்ளூர் பொருளாதாரத்தில் குறைந்த அளவே பணப்புழக்கம் இருந்து வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பணப்புழக்கம் என்பது விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் அல்லது குறைவான வேலை என்று பொருள். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் அரசு வேலைகளை உருவாக்கவில்லை என்றால், இது விதை கொள்முதல், திருமணங்கள், உள்கட்டமைப்புக்கான செலவுகள் உள்ளிட்ட பிற செலவுகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ள கிராமப் பொருளாதாரத்தை மேலும் சுருக்குகிறது.

விவசாயத் தொழிலாளர்களின் இறப்பு மற்றும் சிகிச்சை, பண்ணை உரிமையாளர்களுக்கும் பண்ணை தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவை பாதிக்கும் என்று பலிரோ கூறுகிறார். பண்ணை நிலங்களில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது என்பது பருத்தி உற்பத்தியில் ஒரு முக்கியமான பணி. ஆனால் தற்போது அவற்றை செய்யத் தொழிலாளர்கள் பயப்படுகிறார்கள். யவத்மாலில் இத்தகைய நச்சுப் பேரழிவு நடந்து கொண்டிருந்தாலும், இந்த வேலையைச் செய்ய விவசாயிகள் தொழிலாளர்களை வற்புறுத்துவது கடினமாக மாறியுள்ளது. மருந்து தெளிப்பதை நிறுத்திவிட்டதால், பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து, அது விளைச்சலை மேலும் பாதிக்கும்

"நாங்கள் இப்போது எங்கள் பண்ணை உதவியாளர்களின் நம்பிக்கை மற்றும் உறுதியை திரும்பப் பெற வேண்டும்," என்று பலிரோ கூறுகிறார். "நாங்கள் நிதி இழப்பை எதிர்கொள்வோம், ஆனால் உயிர் இழப்பை எப்படி எதிர்கொள்வது?  நாங்கள் நல்வாய்ப்பாக நான்கு உயிர்களைக் காப்பாற்றினோம். ஆனால் தியானேஷ்வரைக் காப்பாற்ற முடியவில்லை."

தியானேஷ்வர் உயிர் பிழைக்கவில்லை என்று வருத்தப்பட்ட சஞ்சய் "ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நெருக்கடி ஒரு சமூகமாக எங்களை ஒன்றிணைத்தது. அந்த கடினமான நேரத்தில் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றனர். நில உரிமையாளர்களும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பணம் மற்றும் தார்மீக ஆதரவை வழங்கினர்," என்றார். சஞ்சய் இன்னும் வேலைக்குத் திரும்பவில்லை, பலிராவ்வும் அவரை வலியுறுத்தவில்லை. ஆனால் பலிரோவின் நம்பிக்கை கேள்விக்குள்ளானது. சஞ்சய் மீண்டும் தோட்டத்தில் வேலை செய்வாரா என்று உறுதியாக பலிரோவிற்கு  தெரியவில்லை. ஆனால் பூச்சிக்கொல்லிகளை மீண்டும் தெளிக்க வேண்டும் அல்லது அடுத்த ஆண்டு தெளிக்கும் முன் முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் உறுதியாகத் தெரிவிக்கிறார்.

தமிழில்: அன்பில் ராம்

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Translator : Anbil Ram

Anbil Ram is a journalist from Chennai. He works in a leading Tamil media’s digital division.

Other stories by Anbil Ram