இப்பகுதியின் பிற இடங்களில் 47 டிகிரி வெயில் கொளுத்தினாலும் இங்கு குளுமையாக இருக்கிறது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில்தான் மைனஸ் 13 டிகிரி கொண்ட இடம் இருந்தது. இந்த ”இந்தியாவின் முதல் பனி குவிமாடம்” வெயில் கொளுத்தும் விதர்பாவில் இருக்கிறது. சறுக்கி விளையாடும் களத்தின் ஐஸ் உறுதியாக இருப்பதற்கு மின்சார செலவு மட்டும் நாளொன்றுக்கு 4,000 ரூபாய் ஆகிறது.

நாக்பூர் (கிராமப்புற) மாவட்டத்தின் பஜார்காவோன் கிராமப் பஞ்சாயத்திலுள்ள ஃபன் & ஃபுட் வில்லேஜ் வாட்டர் & அம்யூஸ்மெண்ட் பார்க்குக்கு வரவேற்கிறோம். பெரும் வளாகத்தின் அலுவலகத்துக்கு வருபவர்களை மகாத்மா காந்தியின் படம் வரவேற்கிறது. தினமும் நடக்கும் ‘டிஸ்கோ’ நடனம், ஐஸ் ஸ்கேட்டிங், ஐஸ் சறுக்காட்டம், மதுபானங்கள் கொண்ட விடுதி யாவும் உண்டென உத்தரவாதம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா, 18 விதமான நீர் சறுக்கு விளையாட்டுகளை கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான விழா தொடங்கி, அலுவல் கூட்டங்கள் வரை நிகழ்வுகள் நடத்துவதற்கான சேவைகளும் வழங்கப்படுகின்றன.

பஜார்காவோன் கிராமம் (3,000 மக்கள்தொகை) பெரும் நீர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. “நீரெடுக்க அன்றாடம் பல முறை நடக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பெண்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் நீரெடுக்க நடக்கின்றனர்,” என்கிறார் ஊர்த்  தலைவர் யமுனாபாய் உய்க்கி. இந்த மொத்த கிராமத்துக்கும் ஒரே ஒரு அரசதிகாரிதான் இருக்கிறார். சில நேரங்களில் நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் நீரெடுக்கிறோம். இன்னும் சில நேரங்களில் பத்து நாட்களுக்கு ஒருமுறை கூட எடுக்கிறோம்.”

பஞ்சம் தாக்கிய பகுதியென 2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இடத்தில் பஜார்காவோன் இருக்கிறது. அதற்கு முன்பு அப்படியொரு நிலை அப்பகுதிக்கு நெர்ந்ததில்லை. மேலும் அந்த கிராமத்தில் மே மாதம் வரை ஆறு மணி நேரத்துக்கு அதிமான மின் துண்டிப்பும் தினமும் இருந்தது. அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இது பாதித்தது. ஆரோக்கியம் மோசமானது. பெரும் பாதிப்பை எதிர்கொண்ட குழந்தைகள் தேர்வுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. 47 டிகிரி வரை தொட்ட கோடை வெயில் நிலவரத்தை இன்னும் மோசமாக்கியது.

கிராம வாழ்க்கையில் இருக்கும் கொடுமையான இந்த விதிகள், ஃபன் & ஃபுட் வில்லேஜுக்குக் கிடையாது. தனியாருக்கு சொந்தமான இந்த பாலைவனச் சோலையில் பஜார்காவோன் கனவிலும் காண முடியாதளவுக்கு நீர் இருக்கிறது. ஒரு கணம் கூட மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை. “மின்சாரக் கட்டணத்துக்கென மாதந்தோறும் சராசரியாக 4 லட்ச ரூபாய் கட்டுகிறோம்,” என்கிறார் பூங்காவின் பொது மேலாளர் ஜஸ்ஜீத் சிங்.

The snowdome at the Fun & Food Village Water & Amusement Park in Bazargaon in Nagpur (Rural) district
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

இடது: நாக்பூர் (கிராமப்புற) மாவட்டத்தின் பஜார்காவோனிலுள்ள ஃபன் & ஃபுட் வில்லேஜ் வாட்டர் & அம்யூஸ்மெண்ட் பார்க்கின் பனி குவிமாடம் வலது: பனி குவிமாடத்துக்குள்ளே

பூங்காவின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் மட்டும், யமுனாபாய் ஊர்ப் பஞ்சாயத்தின் ஆண்டு வருமானத்துக்கு நிகராக இருக்கிறது. முரண்நகையாக, பூங்காவினால் கிராமத்தின் மின்சார நெருக்கடி ஓரளவுக்கு சரியானது. இரண்டுமே ஒரே மின் துணை நிலையத்தைதான் பயன்படுத்துகின்றன. பூங்காவுக்கான வருகை மே மாதத்தில் உச்சம் அடையும். எனவே அப்போதிலிருந்து ஓரளவுக்கு நிலவரம் மேம்பட்டிருக்கிறது. வருடந்தோறும் பூங்காவின் பங்காக 50,000 ரூபாய் ஊர் பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கிறது. ஒருநாளில் பூங்காவுக்கு வருகை தரும் 700 வாடிக்கையாளர்களுக்கான ஃபன் & ஃபுட் வில்லேஜ் நுழைவுக் கட்டணத்தில் பாதி. பூங்காவின் 110 ஊழியர்களில் டஜனுக்கும் குறைவானவர்கள்தான் உள்ளூர் பஜார்காவோனை சேர்ந்தவர்கள்.

நீர் தட்டுப்பாடு நிலவும் விதர்பாவில் இத்தகைய நீர் பூங்கா மற்றும் விளையாட்டு மையங்கள் அதிகரித்து வருகிறது. ஷெகாவோனின் புல்தானாவில் ஒரு மத அறக்கட்டளை “மீடியேஷன் செண்டர் அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் பார்க்” என்கிற பெரிய மையத்தை நடத்துகிறது. 30 ஏக்கர் பரப்பளவிலான ‘செயற்கை ஏரி’யை இம்மையத்தில் கொண்டிருப்பதற்கான முயற்சி இந்த கோடை காலத்தில் வடிந்து போனது. சொல்ல முடியாத அளவுக்கான நீர் அம்முயற்சியில் வீணானது. இங்கு நுழைவுச் சீட்டுகள் ”நன்கொடை” என குறிப்பிடப்படுகிறது. யவாத்மாலில் ஒரு தனியார் நிறுவனம் ஓர் ஏரியை சுற்றுலா மையமாக நடத்தி வருகிறது. அமராவதியில் இது போன்ற இரண்டு இடங்கள் (இப்போது காய்ந்து விட்டது) இருக்கின்றன. நாக்பூரிலும் அதைச் சுற்றியும் இன்னும் பல இருக்கின்றன.

இவையாவும், 15 நாட்களுக்கு ஒருமுறை நீரெடுக்கும் நிலையிலுள்ள கிராமங்கள் இருக்கும் பகுதியில் நேர்கின்றன. மகாராஷ்டிராவின் விவசாய நெருக்கடியால் அதிகமானோர் இறந்துபோனதும் இப்பகுதியில்தான். “குடிநீருக்கோ நீர்ப்பாசனத்துக்கோ என ஒரு திட்டம் கூட பல பத்தாண்டுகளில் விதர்பாவில் நிறைவேற்றப்படவே இல்லை,” என்கிறார் நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளரான ஜெய்தீப் ஹர்திகர். இப்பகுதி செய்திகளை பல ஆண்டுகளாக சேகரித்து வருபவர் அவர்.

A religious trust runs a large Meditation Centre and Entertainment Park in Shegaon, Buldhana.  It tried to maintain a 30-acre artificial lake within its grounds. The water body soon ran dry but not before untold amounts of water were wasted on it
PHOTO • P. Sainath
A religious trust runs a large Meditation Centre and Entertainment Park in Shegaon, Buldhana.  It tried to maintain a 30-acre artificial lake within its grounds. The water body soon ran dry but not before untold amounts of water were wasted on it
PHOTO • P. Sainath

ஒரு மத அறக்கட்டளை ஷெகாவோனில் புல்தானாவில் ஒரு பெரிய தியான மையம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவை நடத்துகிறது. அம்மையத்துக்குள் 30 ஏக்கர் பரப்பளவில் ஒரு செயற்கை ஏரிக்கான முயற்சி எடுக்கப்பட்டது. நீர் நிலை வேகமாக காய்ந்து போனது. ஆனால் சொல்ல முடியாதளவுக்கான நீர் அதனால் வீணானது

ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ், நீரை பாதுகாப்பதாக ஜஸ்ஜீத் சிங் சொல்கிறார். “நாங்கள் நவீன சுத்திகரிப்பு ஆலைகள் பயன்படுத்தி அதே நீரை மீண்டும் பயன்படுத்துகிறோம்.” ஆனால் இந்த வெப்பத்தில் ஆவியாகுதல் வேகமாக நடக்கும். மேலும் நீர், விளையாட்டுகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. எல்லா பூங்காக்களும் பெருமளவுக்கான நீரை தோட்டங்கள், துப்புரவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பயன்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்துகின்றன.

”பெருமளவுக்கான நீரும் பணமும் வீணடிக்கப்படுகிறது,’ என்கிறார் புல்தானாவின் விநாயக் கெயிக்வாட். விவசாயியான அவர் மாவட்டத்தின் ஊர்சபை தலைவராகவும் இருக்கிறார். இத்தகைய வழிமுறைகளில் பொதுச் சொத்துகள் தனியார் லாபத்தை ஊக்குவிக்க பயன்படுத்துவது கெயிக்வாடுக்கு கோபத்தை கொடுக்கிறது. “அதற்கு பதிலாக அவர்கள் மக்களின் அடிப்படை நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.”

பஜார்காவோனின் ஊர்த்தலைவர் யமுனாபாய் உய்க்கிக்கும் திருப்தி இல்லை. ஃபன் & ஃபுட் வில்லேஜும் அவருக்கு சரிபடவில்லை. அதிகமாக எடுத்து குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கும் பிற தொழில்களும் அவருக்கு சரிபடவில்லை. “இவை எல்லாவற்றாலும் எங்களுக்கு என்ன பயன்?” அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். முறையான ஒரு நீர் திட்டத்தை அரசாங்கத்திடமிருந்து கிராமத்துக்கு பெற, பஞ்சாயத்து 10 சதவிகித செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4.5 லட்சம் ரூபாய். “45,000 ரூபாய் எங்களிடம் எப்படி இருக்கும்? எங்களின் நிலை என்ன?” எனவே திட்டம் எளிதாக ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் திட்டம் செயல்படுத்தப்படலாம். ஆனால் எதிர்காலத்தில் அதிக செலவு நேரும். அதிக ஏழைகளும் நிலமற்ற மக்களும் இருக்கும் ஊரின் கட்டுப்பாடு அத்திட்டத்தில் குறைந்து கொண்டே வரும்.

பூங்காவின் அலுவலகத்தை விட்டு கிளம்புகையில், காந்தியின் புகைப்படம் இன்னும் புன்னகைத்துக் கொண்டுதான் இருந்தது. ‘பனிக் குவிமாடத்’தின் வாகன நிறுத்தத்தை நோக்கி அவர் புன்னகைத்துக் கொண்டிருந்தார். “பிறரும் வாழ்வதற்காக நாம் எளிமையாக வாழ்வோம்” என சொன்னவருக்கு நேர்ந்த துயரம் அது.

இக்கட்டுரை முதன்முதலில் ஜூன் 22, 2005 அன்று தி இந்து நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. பி.சாய்நாத் அந்த நாளிதழின் கிராமப்புற செய்தி ஆசிரியராக அப்போது இருந்தார்

தமிழில்: ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan