ஜீன் 22ம் தேதி வேலைக்காக வீட்டிலிருந்து கிளம்பியபோது வழக்கம்போல், திலிப் வாக் தனது மனைவி மங்கள் மற்றும் மகள் ரோஷினி ஆகிய இருவருக்கும் வழக்கம் போல கையசைத்து விடைபெற்றுச் சென்றார். அடுத்த முறை அவர் அவர்களை பார்த்த போது வெள்ளை உரை சுற்றப்பட்ட உடல்களாக பார்த்தார், இரண்டு நாட்கள் கழித்து உள்ளூர் மருத்துவமனையில்.

அன்று மாலை நான் வீடு திரும்பியபோது அவர்கள் வீட்டில் இல்லை என்று திலிப் கூறினார். மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள காட்வியாச்சிமேலி ஆதிவாசிகள் குடியிருப்பில் உள்ள, தனது குடிசையில் மெல்லிய விளக்கின் ஒளியில் அமர்ந்துகொண்டு அவர் நம்மிடம் பேசினார்.

அவர்கள் தொலைந்துவிட்டதாக நினைத்து, 30 வயது மங்கள் மறறும் 3 வயது ரோஷினியையும் அந்த கிராமம் முழுக்க தேடினார். அவரின் மூத்த மகள் நந்தினியிடம் அவர்களைப்பற்றி விசாரித்துள்ளார். ஆனால், நந்தினிக்கு அதுகுறித்து தெரியவில்லை என்று 35 வயதான திலீப் கூறினார். அன்று இரவும் அவர்கள் வீடு திரும்பாததால், எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த நாள் காலை முதல், அவரது குடியிருப்பு பகுதிகளை தாண்டியும், திலிப் அவர்களை தேடத்துவங்கினார். அருகில் உள்ள சில குடியிருப்புகளில் தேடினார். மதியவேளையில், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மங்களின் அத்தையை சந்தித்து, அவருக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன் என்று, காலி பாத்திரங்கள் அடுக்கிவைத்திருக்கும் மண் சுவருக்கு அருகில், அமர்ந்திருந்த திலீப் நம்மிடம் கூறினார். ஆனால் அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தாக கூறினார்.

கட்கரி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த திலீப் அன்றிரவு வீடு திரும்பினார். ஆனால், மங்களும், ரோஷினியும் அன்றும் வீடு வந்து சேரவில்லை. நந்தினி மட்டுமே இருந்தார். ஜீன் 24ம் தேதி காலை, புது நம்பிக்கையுடன் மீண்டும் தேடத்துவங்கினார். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து ஏதாவது தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அன்று மதியம் கிடைத்த தகவல் அவர் எதிர்பார்த்தது கிடையாது.

காட்வியாச்சிமேலியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ஜவ்ஹர் தாலுகாவைச் சேர்ந்த டெஹாரே கிராம காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணும், சிறிய குழந்தை ஒன்றும் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களின் போட்டோக்களும் வாட்சப்பில் பரப்பப்பட்டது. தங்கள் கிராமத்திற்கு வெளியே உள்ள பகுதியில் வசிக்கும், திலிப் என்ற சிறுவன் தனது போனில் அந்த படங்களை வைத்திருந்தான். அந்தப்படங்களை அவன் என்னிடம் காண்பித்தபோது, அது எனது மனைவியும், மகளும்தான் என்று தான் அவனிடம் கூறியதை திலீப் நினைவு கூர்ந்தார்.

Nandini (left), Dilip Wagh's elder daughter, keeps crying looking at the photos of her deceased mother Mangal, and sister Roshni
PHOTO • Parth M.N.
Nandini (left), Dilip Wagh's elder daughter, keeps crying looking at the photos of her deceased mother Mangal, and sister Roshni
PHOTO • Parth M.N.

(இடது) நந்தினி. திலீப் வாகின் மூத்த மகள். அவரின் தாய் மங்கள் மற்றும் சகோதரி ரோஷினி ஆகியோரின் புகைப்படங்களை பார்த்து அழுது கொண்டிருக்கிறார்

அவரது புடவையை பயன்படுத்தி, மங்கள், முதலில் ரோஷினியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் தானும் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உள்ளூர்வாசிகள் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து திலீப் அவர்களின் உடலை பெற்றுள்ளார்.

அந்த வீட்டைத்தாங்கும் மர உத்திரத்தில், மங்கள் மற்றும் ரோஷினி ஆகிய இருவரின் போட்டோக்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வீடே துக்கத்தில் மூழ்கியிருக்கிறது. பருவமழைக்காலம் என்பதால், வழக்கமாக அது கொண்டுவரும் மண் வாசமும் அங்கு நிறைந்திருந்தது. இடைவிடாத மழையால் வீட்டிற்குள்ளும் சில மழைத்துளிகள் விழுந்தன. குடிசையின் மற்ற பகுதிகள் காய்ந்த வைக்கோலால் மூடப்பட்டிருந்தன.

எங்களுக்கு சொந்த நிலம் கிடையாது, தினக்கூலி மட்டும் தான் எங்களின் வருமானம், ஊடரங்கால் அதுவும் இல்லாமல் போய்விட்டது என்று திலீப் கூறுகிறார். எங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைத்தன. ஆனால், பணம் சுத்தமாக இல்லை, கடந்த 15 நாட்களாக நெல் வயல்களில் அவ்வப்போது மட்டுமே வேலைகள் கிடைத்து வந்தன. ஆனால், அதில் கிடைத்த வருமானம் போதியதாக இல்லை. மங்கள் எங்களின் நிலை குறித்து மிகுந்த கவலையுற்றிருந்ததார்.

மஹாராஷ்டிராவில் உள்ள ஏழை பழங்குடியின குழுக்களில், கட்கரி பழங்குடியினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். மாநிலத்தில் உள்ள 47 பழங்குடியினக்குழுக்களில், கட்கரி உள்ளிட்ட 3 குழுவினர் மட்டுமே குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுவினர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே கட்கரிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் பழங்குடியினர் குற்றவியல் சட்டம் 1871 ன் கீழ் கொண்டு வரப்பட்டார்கள். அது அவர்கள் மற்றும் 200 பழங்குடியின குழுவினரை பிறப்பிலேயே குற்றவாளிகள் அதாவது குற்றப்பரம்பரையினர் என்று அறிவித்த சட்டம். அச்சட்டம் அவர்கள் இடம்பெயர்வதை தடுக்கிறது, அவர்களுக்கு வேலை கிடைக்கப்பெறாமல் செய்கிறது. முடிவில்லாத துன்புறுத்தல் மற்றும் அவர்களை ஒதுக்கி வைக்கவும் வழிவகுக்கிறது. சுதந்திரத்திற்கு பின்னர் குற்றப்பரம்பரைச்சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர் 1952ல் அவர்களை சீர் மரபினர் என்று  குறிப்பிடுகிறது. இதனால், மற்றவர்களுடன், கட்கரிகளுக்கும் குற்றமற்றவர் என்று சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகிறார்கள், ஆனால் அவப்பெயர் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

முக்கியமாக, வனவாசிகளான கட்கரிகளுக்கு சொந்த நிலம் கிடையாது. அவர்கள் கூலித்தொழில் செய்தே பிழைத்து வருகின்றனர். காட்வியாச்சிமேலியிலும் அதே கதைதான் நடந்துள்ளது. திலீபின் அண்டை வீட்டுக்காரர் தீபக் போயர், இங்குள்ள அனைவரும் நிச்சயமற்ற நிலையிலே வாழ்ந்து வருவதாக கூறினார். பருவமழை முடிந்தவுடன், இங்குள்ள அனைத்து வீடுகளும் மூடப்படும். அவர்களுக்கு வேறு வழியில்லை, வேலை தேடி அவர்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டும். பருவமழை காலங்களில், மற்றவர்களின் நிலங்களில் சிறியளவு வாய்ப்புகளே கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

The lane to Dilip's house (left) in Kadvyachimali hamlet (right), with houses whose residents migrate for work every year
PHOTO • Parth M.N.
The lane to Dilip's house (left) in Kadvyachimali hamlet (right), with houses whose residents migrate for work every year
PHOTO • Parth M.N.

(இடது) காட்வியாச்சிமேலியில் திலீப்பின் வீட்டிற்கு செல்லும் சந்து. (வலது) அவரது வீடு. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பணி நிமித்தம் இடம்பெயர்வார்கள்

தீபக்கும், அருகில் உள்ள ஜவ்ஹர் நகருக்கு இடம்பெயர்ந்தவர். அங்கு அவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்நகரம், இந்த கிராம மக்கள், வேலைக்கு செல்வதற்கு சிறந்ததாக உள்ளது. பெரும்பாலானோர், இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று அங்குள்ள செங்கற் சூளையில் வேலை அல்லது கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார். அது அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமே உதவும். வேலை செய்யும் நாள் அவர்கள் குடும்பத்தினர் பசியின்றி வாழ வழிவகுக்கிறது. நிறைய பேர் ஒரே வேலைக்கு வருவதால், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேலையின் அளவும் குறையும். எனவே முதலாளிகள் சொல்வதை கேட்க வேண்டும். மேலும் அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும. இல்லாவிட்டால், நீங்கள் வேலையை இழக்க நேரிடும்.

தற்போது ஊரடங்கால், அனைவரும் வீட்டில் உள்ளனர். எல்லோரும் அதே நிலையில் இருப்பதாக தீபக் கூறுகிறார். மங்கள் தற்கொலை செய்துகொண்டார், ஆனால், மொத்த கிராமத்தின் நிலையும் அதுதான் என்று அவர் மேலும் கூறுகிறார். நிலையான வேலையின்மையால், அனைவரும் மனஅழுத்தம் மற்றும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம். எப்போதும் இங்கு வறுமை நிலைதான். இந்தாண்டு ஊரடங்கு அதை மேலும் மோசமாக்கிவிட்டது என்று தீபக் கூறுகிறார்.

வறுமையும், எதிர்காலத்தின் நிலையற்ற தன்மையுமே, மங்களை இந்த முடிவை நோக்கி தள்ளியிருக்கிறது என்று திலீப் கூறுகிறார். தங்கள் இரண்டு வயிறுகளுக்கு உணவு மிச்சம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார். நந்தினி அவர்கள் இருவரின் புகைப்படத்தை பார்த்து அழுதுகொண்டே இருக்கிறாள்.

முன்னாள் எம்எல்ஏ மற்றும் மாநிலத்தில் பழங்குடியினர் திட்டங்களை ஆய்வு செய்ய அரசு அமைத்த குழுவின் தலைவர் விவேக் பண்டிட், முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் அறிவுறுத்தலின் பேரில் அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இது வறுமை மற்றும் மனஅழுத்தத்தால் செய்துகொள்ளப்பட்ட தற்கொலை அல்ல என்பதை நிரூபிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று அவர் கூறுகிறார்.

“அரசு இதை கடுமையாக எடுத்துக்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்று நான் மார்ச் மாதத்திலே எச்சரித்தேன். மங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டவர். ‘”

மழை துளிகள் மின்னும் பசுமை சூழ்ந்துள்ள காட்வியாச்சிமேலி குடியிருப்பில் உள்ள 70 வீடுகளில் யாருக்கும் சொந்த நிலம் கிடையாது.

Dilip and his family used to work at a brick kiln in Bhiwandi for six months every year; now, only his daughter Nandini remains
PHOTO • Parth M.N.
Dilip and his family used to work at a brick kiln in Bhiwandi for six months every year; now, only his daughter Nandini remains
PHOTO • Parth M.N.

ஆண்டுதோறும் பிவண்டியில் திலீப்பும், அவரது குடும்பத்தினரும் செங்கல் சூளையில் ஆறு மாதம் பணி செய்வார்கள். தற்போது அவர் மகள் நந்தினி மட்டும்தான் இருக்கிறார்

திலீப் வாக், ஆண்டுதோறும் தனது குடியிருப்பில் இருந்து100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிவண்டிக்கு தனது குடும்பத்தினருடன் நவம்பர் மாதம், தீபாவளிக்கு பின்னர் இடம்பெயர்ந்து செல்வார். அங்குள்ள செங்கல் சூளையில் 6 மாதங்கள் பணி செய்வார். அங்கிருந்த திரும்பியவுடன், ஜவ்ஹர் நகர் அல்லது சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நிலங்களில் ஏதேனும் வேலை செய்வோம் என்று திலீப் கூறுகிறார்.

“மார்ச் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அறிவித்தபோது, திலிப், மங்கள் மற்றும் அவர்களின் இரு மகள்களும் செங்கல் சூளையில்தான் இருந்துள்ளனர். அங்கு வேலை உடனடியாக நிறுத்தப்பட்டு, நாங்கள் ஒரு மாதம் வரை அங்கேயே தங்கினோம்” என்று அவர் கூறினார்.” நாங்கள் மே மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டிற்கு வந்தோம். நாங்கள் பல மணி நேரங்கள் நடந்தே வந்தோம். வழியில் டெம்போ கிடைத்தவுடன் அதற்கு 2 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வீடு வந்து சேர்ந்தோம்” என்று மேலும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கை அறிவித்தது. ஆனால், அது திலீப் மற்றும் மங்கள் போன்ற எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. அவர்கள் வறுமையில் வாடும் விளிம்பு நிலை மனிதர்கள்.

தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் இந்த கடினமான காலங்களில் பணியாளர்களை கைவிட்டுவிட்டனர். திலிப் மற்றும் மங்கள், செங்கல் சூளையில் ஆறு மாதங்களாக செய்த கடுமையான வேலைகளுக்கான முழு தொகையையும் பெறவில்லை.

பணிக்காலம் துவங்கியபோது, முன் பணம் ரூ.7 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, சூளை முதலாளி, அவர்களுக்கு ரூ.18 ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். அது கூலியில் கழித்துக்கொள்ளப்படும். ஆனால், ரூ.6 ஆயிரத்தை அவரே வைத்துக்கொண்டார். எஞ்சிய ரூ.12 ஆயிரத்தை மட்டுமே நாங்கள் ஊரடங்கு காலத்திற்கு பயன்படுத்தினோம் என்று திலீப் கூறுகிறார். மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்த்திக்கொள்ளப்பட்ட பின்னர் சிறிய வேலைகள் மட்டுமே கிடைத்தது. அதுவே எனது மனைவியை துன்புறுத்தியுள்ளது.

அவர்கள் இறந்து சில நாட்கள் கழித்து, சூளை முதலாளி திலீப்பிடம் எஞ்சிய ரூ.6 ஆயிரத்தை கொடுத்துவிடுவதாக தெரிவித்துள்ளார். அதை அவர் முன்னதாக அனுப்பியிருந்தால், எனது மனைவி மற்றும் மகளின் இறுதிச்சடங்கிற்கு பயன்படுத்தியிருப்பேன். கடன் வாங்கி அவர்களுக்கு நல்ல முறையில் இறுதி மரியாதை செலுத்திவிட்டேன் என்று திலீப் கூறினார்.

தமிழில்: பிரியதர்சினி R.

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.