சிவாஜி தோமருக்கு 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவரது நிலம் முழுவதும் உழவு செய்து பருத்தி, சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகியவை பயிரிடுவதற்கு தயாராக வைத்துள்ளார். அதன் வழியாக நாம் நடந்து வரும்போது, அதில் சிறு பகுதியில், சப்பிப்போன எலுமிச்சை போன்ற பழங்கள் கீழே சிதறிக்கிடந்தன. “இவை சாத்துக்குடி பழங்கள்“ என்று ஒரு பழத்தை எடுத்த சிவாஜி கூறுகிறார். “இதற்கு நாளொன்றுக்கு, ஒரு மரத்திற்கு 60 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். “சாத்துக்குடி மரங்கள் மொத்தமும் காய்ந்துவிட்டன“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

தோமருக்கு 2 ஏக்கர் நிலத்தில் 400 சாத்துகுடி மரங்கள் இருந்தன. அதற்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்து, பனிக்காலத்தில் போதிய நீர் கிடைத்தால், கோடை காலத்தில், நாளொன்றுக்கு 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மற்ற பழங்களுக்கு குறைவான தண்ணீரே தேவைப்படும். எடுத்துக்காட்டாக, கோடை காலத்தில், மாதுளை ஒரு மரத்திற்கு, நாளொன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே போதுமானது.

மராத்வாதாவில் உள்ள ஔரங்காபாதின் புறநகர் பகுதியில் உள்ள அவர்களின் கராஜ்கயான் கிராமத்தில் 2002ம் ஆண்டு தோமரின் தந்தை இந்த மரங்களை நட்டு வளர்த்தார். அந்த கிராமத்தில் 1,300 பேர் வசிக்கிறார்கள். சிவாஜிக்கு அப்போது 20 வயதுதான் ஆனது. “அப்போது தண்ணீர் பிரச்னை இல்லை“ என்பதை அவர் நினைவு கூறுகிறார். ஒப்பீட்டளவில் மழையும் நம்பகரமான அளவு இருந்தது. அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான கிணற்றிலும் போதியளவு தண்ணீர் இருந்தது. “அப்போது சாத்துக்குடி பயிரிடுவது லாபகரமானதாகவும், புத்திசாலித்தனமான தேர்வாகவும் இருந்தது.“

ஔரங்காபாத் முதல் ஜால்னா வரை செல்லும் நெடுஞ்சாலையில், 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒவ்வொரு கிராமத்திலும் சாத்துக்குடி பழத்தோட்டம் நிறைந்திருக்கும். அவையனைத்து 2000ம் ஆண்டின் துவக்கத்தில்  நடப்பட்டவையாகும். அனைத்து பழத்தோட்டங்களின் சொந்தக்காரர்களும் தற்போது அல்லல்படுகிறார்கள்.

இந்தப்பழத்தை பயிரிடுவது அவ்வளவு எளிதல்ல. சாத்துக்குடி பழங்கள் காய்க்க துவங்குவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் முன்பிருந்தே, அவற்றை பராமரிக்கத் துவங்க வேண்டும். அதன் பின்னர், ஆண்டுக்கு இருமுறை, 25 முதல் 30 ஆண்டுகளுக்கு மகசூல் நிச்சயம். ஆனால், சிவாஜியின் பழத்தோட்டம் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு மட்டுமே கனி கொடுத்தது.

வீடியோவை பாருங்கள்: கராஜ் கயானின் சிவாஜி தோமர் பழம் கொடுக்காத சாத்துக்குடி பயிர் குறித்து பேசுகிறார்

2012ம் ஆண்டு முதல் மராத்வாதாவில் 4  ஆண்டுகள் தொடர்ச்சியாக வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. “அறுவடையை விடுங்கள், தண்ணீர் பற்றாக்குறையால் செடி, கொடிகளே அரிதாகத்தான் உயிர் வாழ்ந்தது“ என்று சிவாஜி கூறுகிறார். ஒப்பீட்டளவில் 2016ம் ஆண்டு பெய்த நல்ல மழையும் உதவவில்லை. இந்தப் பகுதிகளில் மழைப்பொழிவு அவ்வளவு நன்றாக இல்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஒரு நல்ல ஆண்டில் 15 முதல் 20 டன்கள் வரை சாத்துக்குடி பழங்கள் கிடைக்கும் என்று சிவாஜி கூறுகிறார். “சராசரியாக ஒரு டன்னுக்கு ரூ.30 ஆயிரம் கிடைக்குமெனில்,(விற்பனை விலை) எனக்கு இந்தப்பருவத்தில் ரூ.3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை இழப்பு“ என்று, காய்ந்த சாத்துக்குடியின் மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு அவர் கூறுகிறார். “அது நான் பழத்தோட்டத்திற்கு ஓராண்டு முழுவதும் செலவிடும் ரூ.1 லட்சத்தை உள்ளடக்கியது கிடையாது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்தப் பழத்திற்கு பேரழிவுதான் ஏற்பட்டுள்ளது“ என்று சிவாஜி மேலும் கூறுகிறார்.

நீண்ட காலமாகவே அவர்களின் துயரங்கள் நீடித்து வருவது, சிவாஜியின் மனைவி ஜோதியை அடுத்தவர்களின் வயிலில் வேலை செய்யும் வேளாண் கூலித்தொழிலாளியாக மாற்றியது. “நான் ரூ.150க்கு தினக்கூலியாக வேலை செய்கிறேன்“ என்று அவர் கூறுகிறார். “அது எங்கள் குடும்ப வருமானத்தில் சேர்கிறது. எங்களுக்கு எப்போது கூடுதல் பணம் தேவைப்படும் என்று தெரியாது. எங்களின் சகோதரரின் 7 வயது மகள் ஔரங்கபாத் மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஒரு கட்டியை நீக்க ஒரு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே ரூ. 15 ஆயிரம் செலவு செய்துவிட்டோம்“ என்று அவர் மேலும் கூறினார்.

18 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் சிவாஜி வசிக்கிறார். விவசாயத்தின் மூலம் மட்டுமே அவருக்கு கிடைக்கும் வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது. அவர்கள் குடும்பத்தினர் அந்த கிராமத்தில் மின் சாதன பொருட்கள் விற்கும் கடையை நடத்துகிறார்கள். சிவாஜி, பேங்க் ஆப் மஹாராஷ்ட்ரா வங்கி, கர்மாத் கிளையில் வியாபார பிரதிநிதியாக பணிபுரிகிறார். அதன் மூலம் அவருக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. “எங்களுக்கு ரூ.8 லட்சம் வங்கிக்கடன் உள்ளது. நாங்கள் சாத்துக்குடிக்கு மாற்றுப்பயிர் குறித்து யோசிக்க வேண்டும்“ என்று அவர் கூறுகிறார்.

எனவே சிவாஜி பழத்தோட்டத்தை அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் தந்தை நட்டுவைத்த மரங்கள் தற்போது வெட்டப்படும். அந்த வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. “எங்கள் 400 மரங்களில் 50 மரங்கள் இந்த பருவத்தில் நீக்கப்பட்டன (2017ம் ஆண்டு கோடை காலத்தில்)“ என்று அவர் கூறுகிறார். “நான் ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து, படிப்படியாக அனைத்தையும் வெட்டிவிடுவேன். பொருளாதார ரீதியாகவும் பலனளிக்காத, தண்ணீரும் அதிகம் தேவைப்படும் பயிரை மேலும் நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

PHOTO • Parth M.N.

மரங்களில் காய்ந்து தொங்கும் சாத்துக்குடி பழங்கள். ஓளரங்காபாத், ஜால்னா மற்றும் நந்தேட் மாவட்டங்களே அதிகளவில் சாத்துக்குடி பழங்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு வழங்குகின்றன

அதிகளவு வெப்பமும் சாத்துக்குடிக்கு தீங்கிழைக்கக்கூடியது. மராத்வாதாவில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாதத்தில் வீசிய வெப்ப காற்றில், தொடர்ந்து 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்து வந்ததால், பழங்கள் காய்ந்துவிட்டன. “அதனால், நன்றாக காய்க்கும் முன்னரே பழங்கள் உதிர்ந்துவிட்டன. அதிப்படியான வெப்பம் திசுக்களை வலுவிழக்கச்செய்கின்றன“ என்று சிவாஜி கூறுகிறார்.

மராத்வாதாவின் ஓளரங்காபாத், ஜால்னா மற்றும் நந்தேட் ஆகியவை அதிகளவில் சாத்துக்குடி விளையும் மாவட்டங்களாகும். நாடு முழுவதிலும் சாத்துகுடி வழங்குவதில், அவர்கள்தான் முதன்மையானவர்கள். ஆனால், தற்போது மராத்வாதாவில் சாத்துகுடி பழங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பல விவசாயிகள் மாதுளை போன்ற மற்ற பழங்கள் விளைவிக்க முற்படுகின்றனர். அதற்கு குறைவான அளவு தண்ணீரே போதுமானது என்பதால், மற்றும் சிலர் பாரம்பரிய காரீப் பருவ பயிர்களான துவரம் பருப்பு மற்றும் பருத்தி பயிரிடுகின்றனர்.

மராத்வாதா முழுவதிலும் உள்ள ஒன்றரை லட்சம் ஏக்கர் சாத்துக்குடி தோட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, 2013ல் மட்டும் 30 சதவீத தோட்டங்கள் அழிக்கப்பட்டது. கழிவுநீரை வைத்தே பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிரை காத்து வருவதாக கூறப்படுகிறது. தண்ணீர் டேங்கர்களுக்கும் விவசாயிகள் செலவிடுகிறார்கள்.

வீடியோவைப் பாருங்கள்: காதே ஜல்கான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பவுஷஹேப் பாரே பழத்தோட்டங்களை பராமரிப்பரிப்பதில் தனக்கு ஏற்பட்ட போராட்டங்கள் குறித்து பேசுகிறார்

ஏப்ரல் 2017ல், காரஜ்கானிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதே ஜல்கான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, பவுஷஹேப் பாரே (34), தனது சாத்துக்குடி பழத்தோட்டத்தை கோடை காலங்களில் காய்ந்துவிடாமல் காப்பதற்காக, தண்ணீருக்கு ரூ,50 ஆயிரம் செலவு செய்கிறார். தனது இரண்டரை ஏக்கர் பழத்தோட்டம், தொடர்ந்து உள்ள பருத்தி மற்றும் சோள வயல்களின் வழியாக நடந்து செல்லும்போது,“பழங்கள் காய்ந்துவிடும். எப்படியாவது மரங்களை காக்க வேண்டும். ஏற்கனவே 20 மரங்கள் பட்டுப்போய்விட்டது“ என்று அவர் கூறுகிறார்.

பாரேவும் 2000மாவது ஆண்டு முதல் தோட்டம் வைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகள் கொடுமையானவை என்று அவர் கூறுகிறார். “எனக்கு ரூ.4 லட்சம் கடன் உள்ளது“ என்று அவர் கூறுகிறார். “எனது மகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டபோது, சூழ்நிலை மிக மோசமானது. நான் இப்போது பண்ணை குட்டை அமைத்துள்ளேன். அது உதவும் என்று நம்புகிறேன்“ என அவர் மேலும் கூறினார்.

PHOTO • Parth M.N.

பவுஷஹேப் பாரே. மரத்தில் உள்ள சாத்துக்குடி பவுஷஹேப் பாரே: “திருமணத்திற்கு பணம் தேவைபட்டபோது சூழ்நிலை மிகவும் மோசமானது“

மாநில அரசு, மஹாராஷ்ட்ரா முழுவதிலும் உள்ள விவசாயிகள், பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு மானியம் வழங்குகிறது. தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிரான சாத்துக்குடி, இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகளை வற்புறுத்துகிறது. எனினும், 2016-17ம் ஆண்டுகளில், மாவட்ட நிர்வாகம் 39,600 பண்ணைக் குட்டைகளை அமைக்க முடிவெடுத்திருந்த நிலையில், மராத்வாதாவின் 8 மாவட்டங்களில், 13,613 பண்ணை குட்டைகள் மட்டுமே அமைக்கப்பட்டடுள்ளதாக பிரிவு ஆணையர் அலுவலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த 13,613 விவசாயிகளில் 4,429 இதுவரை அவர்களின் மானியத்தை பெறவில்லை.

எனினும், பாரேவின் பண்ணைக் குட்டை மிகவும் கஷ்டப்பட்டு அமைக்கப்பட்டது. அதற்கு அவர் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்துள்ளார். ஒரு நல்ல பருவ மழை அதை நிரப்பும், அதன் மூலம் சாத்துக்குடி பழத்தோட்டங்களை பராமரிப்பது எளிதாகும் என அவர் நம்புகிறார். “இந்த பரிசோதனை தோற்றால், பழத்தோட்டம் 2018ம் ஆண்டு இருக்காது“ என்று அவர் கூறுகிறார்.

படங்கள்: ஸ்ரீரங் ஸ்வார்கே

தமிழில்: பிரியதர்சினி. R.

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.