தினமும் மாலை 5 மணிக்கு வேலை முடிந்து திரும்பும்போது டாக்டர் ஷப்னம் யாஸ்மின் நேராக தனது வெளிர் பழுப்பு நிற வீட்டின் மொட்டை மாடிக்குச் செல்கிறார். அங்கு அவர் குளித்துவிட்டு பணியிடத்திற்கு எடுத்துச் சென்ற பேனாக்கள், டைரிக்கள் போன்றவற்றை சுத்திகரிப்பு செய்து, தனது துணிகளை துவைக்கிறார் (இதற்காகவே மொட்டை மாடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது). பிறகு படியிறங்கி குடும்பத்தினரிடம் அவர் வருகிறார். கடந்தாண்டு முதலே இதே முறையை அவர் கடைப்பிடித்து வருகிறார்.

“பெருந்தொற்று [ஊரடங்கு],  காலம் முழுவதும் நான் வேலை செய்தேன், எல்லாம் மூடி கிடந்தன. தனியார் மருத்துவமனைகள் கூட மூடி இருந்தன. எனக்கு பரிசோதனையில் பாசிட்டிவ் வரவில்லை, உடன் பணிபுரிவோர் சிலருக்கு வந்தது. உண்மையில் நாங்கள் கோவிட்-19 பாதிக்கப்பட்ட இரு கர்ப்பிணிகளை வெற்றிகரமாக கையாண்டோம்,” என்கிறார் வடகிழக்கு பீகாரின் கிஷன்கஞ்ச் நகரில் தனது வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தூரமுள்ள சர்தார் மருத்துவமனையில் மகளிரியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையாளராக பணியாற்றும் 45 வயது மருத்துவர் யாஸ்மின்.

ஷப்னத்திற்கான கடமைகள் அதிகம். கரோனா வைரஸ் தாக்கினால் ஆபத்து அதிகம். அவரது தாய், 18 மற்றும் 12 வயது மகன்கள், 53 வயது கணவர் இர்தசா ஹசன் ஆகியோர் வீட்டில் உள்ளனர். அவரது கணவர் சிறுநீரக சிக்கலில் இருந்து இப்போதுதான் குணமடைந்து வருகிறார். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். “என் தாய் அர்சா சுல்தானாவினால்தான் என்னால் [கடந்தாண்டு] வேலைசெய்ய முடிந்தது. அவர் பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறார். இல்லாவிடில் மருத்துவர், இல்லத்தரசி, ஆசிரியர், வழிகாட்டி என சுழன்று கொண்டே இருக்க வேண்டியிருக்கும்,” என்கிறார் யாஸ்மின்.

2007ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தது முதல் அவரது வாழ்க்கை இப்படித்தான் சுழல்கிறது. “எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும்போது நான் கருவுற்றிருந்தேன். திருமணமாகி ஆறு ஆண்டுகள் என் குடும்பத்துடன் இருந்தது கிடையாது. என் கணவர் பட்னாவில் வழக்கறிஞராக பணியாற்றினார். நான் பயிற்சிக்காக பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்,” என்கிறார் யாஸ்மின்.

சதார் மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு அவரது வீட்டிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாகூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். சில ஆண்டுகள் தனியார் மருத்துவராக பயிற்சி செய்த பிறகு அரசு மருத்துவர் வேலை கிடைத்தது. அவர் 2003ஆம் ஆண்டு ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். 2007ஆம் ஆண்டு பட்னா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டமும் பெற்றார். தாகூர்கஞ்ச் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளூர் பேருந்துகளில் சென்று வந்தார். அவரது இரண்டாவது குழந்தையை தாயிடம் விட்டு வந்தார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர் தாகூர்கஞ்சிற்கு தாய், குழந்தைகளுடன் மாற்றிக் கொண்டு சென்றது மிகவும் கடினமான காலகட்டம். அவரது கணவர் இர்தசா பட்னாவில் தங்கி கொண்டு மாதம் ஒருமுறை குடும்பத்தைப் பார்க்க வந்துள்ளார்.

Dr. Shabnam Yasmin and women waiting to see her at Sadar Hospital: 'I worked throughout the pandemic [lockdown], when everything was shut...'
PHOTO • Mobid Hussain
Dr. Shabnam Yasmin and women waiting to see her at Sadar Hospital: 'I worked throughout the pandemic [lockdown], when everything was shut...'
PHOTO • Mobid Hussain

சதார் மருத்துவமனையில் டாக்டர் ஷப்னம் யாஸ்மினும், அவரை பார்க்க காத்திருக்கும் பெண்களும்: 'பெருந்தொற்று காலம்[பொதுமுடக்கம்] முழுவதும் நான் வேலை செய்தேன், எல்லாம் அடைக்கப்பட்டு இருந்தது… '

“என் கணவர் ஆதரவளித்தார், ஆனால் ஒரே நாளில் இரண்டு முறை பயணம் என்பது கொடுமையானது. வாழ்க்கையே கடினமாக இருந்தது. நான் அறுவை சிகிச்சையாளராக இருந்தும் அறுவை சிகிச்சை எதுவும் செய்ய முடியாதது மோசமான விஷயம். அங்கு [ஆரம்ப சுகாதார நிலையத்தில்] கருவிகள், இரத்த வங்கி, மயக்க மருந்து என எதுவும் கிடையாது. பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைதான் செய்ய முடியும். அறுவை சிகிச்சைகூட என்னால் செய்ய முடியாது. தலையிட முடியாது. [அருகில் உள்ள மருத்துவமனைக்கு] பேருந்து பிடித்து செல்லுங்கள் என்றுதான் அவர்களிடம் சொல்ல முடியும்,” என அந்நாட்களை நினைவுகூர்கிறார் யாஸ்மின்.

கிஷன்கஞ்ச் மாவட்டம் சதார் மருத்துவமனையில் உள்ள அவரது ஆலோசனை அறைக்கு வெளியே சுமார் 30 பெண்கள் காத்திருக்கின்றனர். பெரும்பாலானோர் பெண் மருத்துவரிடம் பேசவும், பரிசோதிக்கப்படவும் விரும்புகின்றனர். மருத்துவமனைக்கு டாக்டர் ஷப்னம் யாஸ்மின், டாக்டர் பூனம் (முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) என இரு மருத்துவர்கள். இருவரும்   மகப்பேறியல் துறையைச் சேர்ந்தவர்கள். இரு மருத்துவர்களும் தினமும் தலா 40-45 நோயாளிகளை காண்கின்றனர். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருப்பதால் மருத்துவரைக் காண முடியாமல் சில பெண்கள் வீடு திரும்பவும் செய்கின்றனர்.

வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்பது எண்ணிக்கை மட்டுமே. “அறுவை சிகிச்சையாளர்கள் குறைவு என்பதால் சில நாட்களில் அறுவை சிகிச்சையை நாங்களே செய்யும்போது நேரம் பார்க்க முடியாது. பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்தால், நான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அங்கு கழிந்துவிடும். கோப்புகளில் உள்ள பழைய அறிக்கைகளின் அடிப்படையிலும் அறுவை சிகிச்சையாளர்களை எப்போதும் அழைப்பார்கள்,” என்கிறார் யாஸ்மின். கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு பரிந்துரை மையம், சதார் மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவர்களிடம் நான் பேசுகையில் 6-7 பெண் மருத்துவர்கள் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களில் பாதிப் பேர் (யாஸ்மின் இதில் இடம்பெற மாட்டார்) ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள்.

அவர்களின் நோயாளிகளில் பெரும்பாலானோர் கிஷன்கஞ்சிலிருந்தும், ஒரு சிலர் அண்டை மாவட்டமான அராரியாவிலிருந்தும் வருகின்றனர். சிலர் மேற்கு வங்கத்திலிருந்துகூட வருகின்றனர். பெரும்பாலும் கர்ப்ப கால பரிசோதனைகள், கருத்தடை, அடிவயிற்று வலி, இடுப்பு தொற்றுகள், மாதவிடாயின்போது வலி, மலட்டுத்தன்மை போன்ற பிரச்னைகளுக்கு வருகின்றனர். “நான் பார்த்தவரை இங்கு எந்த பிரச்னைக்கு வரும் பெண்களிடமும் பெரும்பாலும் இரத்த சோகை இருக்கிறது. இரும்புச்சத்து மாத்திரைகள் இலவசமாக [ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில்] அளிக்கப்படுகிறது, இருந்தும் எவ்வித விழிப்புணர்வும், தங்கள் உடல்நலன் குறித்த அக்கறையுமின்றி உள்ளனர்,” என்கிறார் யாஸ்மின்.

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு ( NFHS-4, 2015-16 ) அளிக்கும் தரவுகளும் டாக்டர் யாஸ்மினின் கருத்தை ஆதரிக்கிறது: கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 15-49 வயதிலான 67.6 சதவீத பெண்களுக்கு இரத்தசோகை உள்ளது. 15-49 வயதிலான கர்ப்பிணிகள் 62 சதவீதம். 15.4 சதவீத கர்ப்பிணி பெண்களே 100 நாட்கள் அல்லது அதற்கு மேல் இரும்புச் சத்து, ஃபாலிக் அமில மாத்திரைகளை உண்கின்றனர்.

Only 33.6 per cent of childbirths in Kishanganj district are institutional deliveries. A big reason for this, says Dr. Asiyaan Noori (left), posted at the Belwa PHC (right), is because most of the men live in the cities for work
PHOTO • Mobid Hussain
Only 33.6 per cent of childbirths in Kishanganj district are institutional deliveries. A big reason for this, says Dr. Asiyaan Noori (left), posted at the Belwa PHC (right), is because most of the men live in the cities for work
PHOTO • Mobid Hussain

கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 33.6 சதவீத பிரசவங்கள் மட்டுமே மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. இதற்கான முக்கிய காரணம் பெரும்பாலான ஆண்கள் வேலை நிமித்தமாக நகரங்களுக்குச் சென்றுவிடுவதுதான் என்கிறார் பெல்வா ஆரம்ப சுகாதார நிலையத்தில் (வலது) பணியாற்றும் டாக்டர் ஆசியான் நூரி (இடது)

“பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. சத்தாக உண்பதில்லை, இளம் வயது திருமணங்கள், முதல் குழந்தை ஒரு வயது வருவதற்குள் மீண்டும் கருவுறுதல். இரண்டாவது குழந்தை பிறக்கும்போது தாய் பலவீனமடைகிறார். அவரால் நடக்கக்கூட முடியாது. ஒவ்வொன்றாக தொடர்ந்து அனைத்தும் இரத்த சோகையில் முடியும்,” என்கிறார் சதார் மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்வா ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஆசியான் நூரி. சில சமயங்களில் இரண்டாவது பிரசவத்திற்கு தாயை கொண்டு வரும்போது, அவரை காப்பாற்ற முடியாமல்கூட போகும்.

“ஏற்கனவே பெண் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நோயாளிகளை நாங்கள் பார்க்காவிட்டால் அல்லது நோயாளி இறந்துவிட்டால் பெரிய பிரச்னையாகிவிடும்,” என்கிறார் யாஸ்மின். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, அப்பகுதி போலி மருத்துவர்களும் தங்களை அச்சுறுத்துவதாக அவர் கூறுகிறார். “நீ தொட்டவுடன்தான் நோயாளிக்கு இப்படி ஆகிவிட்டது,” என்று பிரசவத்தின் போது உயிரிழந்த ஒரு பெண்ணின் குடும்ப உறுப்பினர் யாஸ்மினிடம் கூறியுள்ளார்.

கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் பொது மருத்துவமனைகளில் 33.6 சதவீதம் பிரசவம் நடப்பதாக NFHS-4 குறிப்பிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என டாக்டர் நூரி சொல்வது, பெரும்பாலான ஆண்கள் வேலை நிமித்தமாக நகரங்களுக்கு சென்றுவிடுவதுதான்.“ பிரசவத்தின் போது வெளியே செல்வது சாத்தியமற்றது. எனவே குழந்தைகள் வீட்டிலேயே பிறக்கின்றன.” கிஷன்கஞ்ச் மாவட்டம் போத்தியா, திகல்பங்க், தெர்ஹாகச் ஆகிய மூன்று பகுதிகளில் (இவ்விடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன) பெரும்பாலும் வீட்டு பிரசவங்கள் நடப்பதாக அவரும், பிற மருத்துவர்களும் கூறுகின்றனர். சதார் மருத்துவமனை அல்லது தனியார் சிகிச்சை மையங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பல பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்தினரும் மருத்துவமனையை நாட முடிவதில்லை.

2020 பெருந்தொற்றின்போது ஊரடங்கு காலத்திலும், அதற்கு பிறகும் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் மருத்துவமனை பிரசவங்கள் இன்னும் குறைந்துவிட்டன. வாகன போக்குவரத்து இல்லாமை, மருத்துவமனைகளில் வைரஸ் தொற்று அச்சம் போன்ற காரணங்களால் பல பெண்கள் வீட்டிலேயே இருந்துவிடுகின்றனர்.

Dr. Mantasa at the Chattar Gachh referral centre in Kishanganj's Pothia block:. 'A big part of my day goes in talking to women about family planning...'
PHOTO • Mobid Hussain

கிஷன்கஞ்சின் போத்தியா பகுதியில் உள்ள சத்தார் கச் பரிந்துரை மையத்தைச் சேர்ந்த டாக்டர் மான்டசா: 'குடும்ப கட்டுப்பாடு குறித்து பேசினால் என் நாளின் பெரும்பகுதி கழிந்துவிடும்…'

'கருத்தடை குறித்து தாய், தந்தைகளிடம் பேசினால் [குடும்பத்தில் உள்ள] முதியவர்களுக்கு பிடிப்பதில்லை. இதுபற்றி நான் பேசினால் குடும்பத்தின் வயதான பெண்மணி அல்லது தம்பதி என்னை போகச் சொல்லி கத்துகின்றனர்'

“இப்போது நிலைமை மாறியுள்ளது,” என்கிறார் கிஷன்கஞ்ச் மாவட்டத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் பொத்தியா வட்டாரத்தில் உள்ள சத்தார் கச் பரிந்துரை மையம் / பிரசவம் மற்றும் குழந்தைகள் நல மையத்தில் பணியாற்றும் 36 வயது டாக்டர் மான்டசா. குடும்பத்தை பிரிந்திருப்பது, போக்குவரத்து அலைச்சல் என டாக்டர் யாஸ்மின் தனது பணியின் தொடக்க காலத்தில் சந்தித்த கஷ்டங்களை இவரும் சந்தித்து வருகிறார். இவரது கணவர் பகல்பூரில் தங்கி வேலை செய்கிறார். இவரது ஒரே மகன் கத்திஹார் மாவட்டத்தில் தாய்வழி பெற்றோர் வீட்டில் வசிக்கிறான்.

“குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை வகைகள், இடைவெளி, உணவுமுறை குறித்து பெண்களிடம் பேசத் தொடங்கினால் என் நாளின் பெரும் பகுதி கழிந்துவிடும்,” என்கிறார் டாக்டர் மான்டசா (குடும்பப் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்). கருத்தடை குறித்து உரையாடுவதே மலையை நகர்த்தும் செயல் என்று குறிப்பிடுகிறது NFHS-4. கிஷன்கஞ்சில் திருமணமான பெண்களில் 12.2 சதவீதம் பேர் மட்டுமே ஏதேனும் ஒரு வகை குடும்ப கட்டுப்பாட்டு முறையை பயன்படுத்துகின்றனர். சுகாதார பணியாளர்கள் குடும்ப கட்டுப்பாடு பற்றி அறியாத 8.6 சதவீத பெண்களிடம் மட்டுமே பேசியுள்ளனர்.

“கருத்தடை குறித்து தாய்மார்கள், தந்தைகளிடம் நாங்கள் விளக்கினால் வீட்டின் முதிய பெண்களுக்கு பிடிப்பதில்லை. என்னைப் பார்த்து கத்த ஆரம்பித்துவிடுவார்கள். தம்பதி அல்லது அவர்களின் தாய் என்னை நிறுத்தச் சொல்வார்கள். நான் கிராமத்தில் இருந்தால் என்னை போகச் சொல்வார்கள். அது கேட்பதற்கு நன்றாக இருக்காது. எனினும் இதுவே நம் வேலை,” என்கிறார் டாக்டர் யாஸ்மினைப் போன்று குடும்பத்தின் முதல் மருத்துவரான டாக்டர் மான்டசா.

“என் மறைந்த தந்தை சையத் குதுப்தீப் அஹ்மத் முசாஃபர்புரில் உள்ள அரசு மருத்துவமனையில் துணை மருத்துவப் பணியாளராக இருந்தார். பெண் மருத்துவர்கள் இருந்தால்தான் பெண்கள் வருவார்கள் என அவர் சொல்வார். நான் மருத்துவரானேன்,” “இங்கு இதுபோன்று பலரும் தேவைப்படுகின்றனர்.”

இந்தியாவின் கிராமப்புற பருவப் பெண்கள், இளம் பெண்கள் குறித்த செய்தி சேகரிக்கும் திட்டத்தை பாரி மற்றும் கவுன்டர் மீடியா டிரஸ்ட் தேசிய அளவில் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் அங்கமாக செய்து வருகிறது. பின்தங்கிய பிரிவினர், எளிய மக்களின் சூழல், வாழ்க்கை அனுபவத்தை அவர்களின் குரல் வழியாக வெளிக் கொணர்கிறது.

இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள். [email protected] என்ற முகவரிக்கும் அதன் நகலை அனுப்புங்கள்.

தமிழில்: சவிதா

Anubha Bhonsle is a 2015 PARI fellow, an independent journalist, an ICFJ Knight Fellow, and the author of 'Mother, Where’s My Country?', a book about the troubled history of Manipur and the impact of the Armed Forces Special Powers Act.

Other stories by Anubha Bhonsle
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

Other stories by Priyanka Borar
Editor and Series Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha