நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பை அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்னர், தெலங்கானா மாநிலத்தின் சித்திபெட் மாவட்டம் தர்மரம் கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான வர்தா பாலையா தனது ஒரு ஏக்கர் நிலத்தை விற்பதாக இருந்தார். அந்த இடம் சித்திபேட்டை மற்றும் ராமயம் பேட்டை நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.

அவரது சோளப்பயிர் அக்டோபர் மாதத்தில், பருவமல்லாத காலத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. கடன் கொடுப்பவர்களிடமிருந்தும் ஆந்திரா வங்கியிலிருந்தும் பெற்ற 8 முதல் 10 லட்ச ரூபாய் கடனுக்கான வட்டி உயர்ந்துவருகிறது. அவரால் பணமின்றி கடன்காரர்களை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே அவரது லாபகரமான 4 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்து, வசதியுள்ளவர்களை தேடிக்கொண்டிருந்தார்.

“நிலத்தை வாங்குவதற்கு யாராவது முன்வரவேண்டும்“ என்று அவர் தனது மூத்த மகள் சரீஷாவிடம் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதற்கு முன்னர் கூறினார்.

2012ம் ஆண்டில், பாலையா தனது மகள் சரீஷாவின் திருமணத்திற்கு வாங்கிய ரூ.4 லட்சம் ரூபாய் கடனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கினார். 3 போர்வெல்கள் செயலிழந்த நிலையில் 4வது போர்வெல் அமைப்பதற்காக பெற்ற ரூ.2 லட்சம் கடனுடன் அத்தொகை கூடி சுமை அதிகமானது. இவையெல்லாம் அவரது கடன் பெருகுவதற்கு காரணங்கள்.

சில மாதங்களுக்கு முன்னர், பாலையாவின் இளைய மகள் 17 வயதான அகிலா பனிரெண்டாம் வகுப்பிற்கு தேர்ச்சியடைந்தார். அவரது சகோதரிக்கு அந்த வயதில் திருமணமாகிவிட்டது. பாலையா, அகிலாவின் திருமணம் குறித்து அச்சப்பட்டார். அவருக்கு கடனையும் திரும்ப செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

PHOTO • Rahul M.

பாலையாவின் இளைய மகள் அகிலா மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரும் உணவை உண்ணாமல், உயிர் பிழைத்தவர்கள்

பாலய்யா விற்பதற்காக முடிவு செய்திருந்த, நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள நிலம் அவருக்கு நிச்சயம் ரூ.15 லட்சத்தைப்பெற்றுத் தரும் என்று தர்மரம் கிராமத்தில் உள்ள மக்கள் கூறுகின்றனர். அது அவரின் பல பிரச்னைகளை தீர்க்கும். சோளப்பயிர் சரியாக வளராததால், கடன்காரர்கள் அவரை வட்டிக்காக துரத்தி வருகிறார்கள்.

ஆனால், பாலய்யாவின் திட்டங்கள் அனைத்தும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை அரசு பணமதிப்பிழப்பு செய்ததும் தலைகீழாக மாறிவிட்டது. அவரது நிலத்தை வாங்க முன்வந்தவர்கள் பின்வாங்கினர். “முதலில் எனது தந்தை மகிழ்ச்சியாக இருந்தார். பின்னர் இந்த பணமதிப்பிழப்பால், அவருக்கு யாரும் பணம் தரமாட்டார்கள் என உணர்ந்தார். பின்னர் அவர் துயரத்திலாழ்ந்தார்,“ என்று அகிலா நினைவு கூறுகிறார்.

ஆனாலும், பாலய்யா தனது முயற்சியைக் கைவிடவில்லை. நிலத்தை வாங்குபவர்களை தேடிக்கொண்டிருந்தார். ஆனால், பலருக்கு அவர்களின் சேமிப்பு அனைத்தும் ஓரிரவில் பயனற்றதாகிவிட்டது என்ற கவலை. இங்கு பலரிடம், பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளும் இல்லை.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர், நவம்பர் 16ம் தேதி, சில காலத்துக்கு நிலத்தை யாராலும் வாங்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார். தனது வயலுக்கு சென்று, சோயா பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து இட்டார். அவரது சோளப்பயிர்கள் சரியாக முளைக்காததை அடுத்து அவர் சோயா பயிரிட்டிருந்தார். மாலையில் வயலில் மெய்சம்மா தேவிக்கு கோழியை பலியிட்டு வணங்கி, அதை இரவு உணவிற்கு உண்ண எடுத்துவந்தார்.

பாலய்யாவின் வீட்டில் விழாக்காலங்களில் மட்டுமே கோழி சமைப்பார்கள் அல்லது சிரீஷாவும் அவரது கணவரும் வீட்டிற்கு வரும்போது செய்வார்கள். அசைவ உணவை எப்போதும் பாலய்யாவே சமைப்பார். கடந்த புதன்கிழமையன்று அவரது கடைசி உணவும் திருவிழாவிற்கு செய்வதுபோல் இருக்க வேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை. அது அந்த வாரத்தையே மறக்கச்செய்யும் இரவு உணவாக இருந்தது. அது அவரது உன்னதமான சொத்தை, மோசமான கனவாக்கியது. பாலய்யா, கோழிக்கறி உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தார்.  குடும்பத்தில் யாருக்கும் இது தெரியாது. “இவ்வளவு பெரிய பிரச்னைகளில் குடும்பத்தை விட்டுச்செல்வதற்கு அவர் விரும்பவில்லை. அதனால், அனைவரையும் அழைத்துச்செல்ல முடிவெடுத்துவிட்டார்“ என பாலய்யாவின் உறவினர் கூறுகிறார்.

இரவு உணவின்போது பாலய்யா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் 19 வயது மகன், கோழி உணவில் வித்தியாசமான மணம் வீசுவது குறித்து கேட்டதற்கு, “நான் காலை முதல் வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக்கொண்டிருந்தேன். அதனால், இந்த மணம் வீசுகிறது,” என்று பதிலளித்ததை தவிர வேறு ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை என்று அகிலா நினைவு கூறுகிறார். அவர்கள் சேர்ந்து அமர்ந்து அருந்திய இறுதி இரவு உணவை அவர் நினைத்துப் பார்க்கிறார்.

6 பேர் கொண்ட அவரது குடும்பத்தில், பாலய்யா, அவரது மனைவி பாலலட்சுமி, பி.டெக் படிக்கும் அவர்களின் மகன் 19 வயதான பிரசாந்த், பாலய்யாவின் 70 வயது தந்தை காலய்யா ஆகிய நால்வரும் கோழி உணவை உண்டனர். அகிலாவும், அவரது பாட்டியும் அசைவ உணவை உண்ணமாட்டார்கள். பாலய்யா மற்றும் காலய்யாவின் உயிரைப் பறித்துச்சென்ற அந்த இரவு உணவை சாப்பிடாமல் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள்.

PHOTO • Rahul M.

தனது மகன் பாலய்யாவையும், கணவர் காலய்யாவையும் இழந்த அந்த தாய். உடன் அண்டைவீட்டார்

“இரவு உணவை உண்ட பின்னர், தாத்தா மயங்கி கீழே விழுந்துவிட்டார். அவரது வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தது“ என்று அகிலா நினைவு கூறுகிறார். “நாங்கள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு விட்டதென்று நினைத்து, அவரது கை மற்றும் கால்களை நன்றாக தேய்த்துவிட்டோம்“. சில நிமிடங்களில் காலய்யா இறந்துவிட்டார்.

பாலய்யாவும் வாந்தியெடுக்கத் துவங்கி, மயங்கி விழுந்துவிட்டார். சந்தேகமும் அச்சமுமடைந்த அகிலாவும், பிரசாந்தும் அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்து வந்தனர். கோழிக்கறியில் பூச்சி மருந்து கலந்திருப்பதை உணரத்துவங்கியவுடன், அவர்கள் பாலய்யா, பாலலட்சுமி மற்றும் பிரசாந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்சை ஏற்பாடு செய்தனர். அகிலா, தனது பாட்டியுடனே வீட்டிலிருந்து தனது தாத்தாவின் இறுதிச் சடங்கிற்கு தேவையானவற்றை செய்துகொண்டிருந்தார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலய்யா இறந்துவிட்டார். அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் சித்திப்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அது அவர்கள் கிராமத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சிரீஷாவும், அவரது கணவர் ரமேசும் மருத்துவமனையில் தாயையும், மகனையும் கவனித்துக்கொண்டு, கட்டணத்தையும் செலுத்திக்கொண்டிருந்தனர். “பிரசாந்த் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆரோக்கிய ஸ்ரீ என்ற சுகாதார திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது தாய்க்கு, கிராமத்தில் உள்ளவர்கள் எங்களுக்கு கொடுத்த கடன் மற்றும் எங்களின் சேமிப்பில் இருந்து செலவு செய்துகொண்டிருந்தோம்“ என்று ரமேஷ் கூறுகிறார். அவர் மருத்துவமனைக் கட்டணம் தொடர்பான அனைத்து ரசீதுகளையும் கவனமுடன் சேர்த்து வைத்துக்கொண்டார். ஏனெனில் மாநில அரசு பாலய்யா இறந்த பின்னர் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்திருந்தது.

இங்கு வீட்டில், அகிலா அவரது தாத்தா மற்றும் அப்பாவின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை, அருகில் உள்ளவர்களிடம் இருந்து பெற்ற பணம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கிய ரூ.15 ஆயிரத்தில் இருந்து செய்துகொண்டிருந்தார்.

அவர் திடமாக இருக்கிறார். ஆனால், அவரது எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. “நான் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு கணக்கு மிகவும் பிடிக்கும். நான் EMACET (மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான தகுதிதேர்வு) தேர்வு எழுது விரும்புகிறேன்“ என்று அவர் கூறுகிறார். “ஆனால், இப்போது எனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை…“

தமிழில்: பிரியதர்சினி. R.

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.