“இந்த இரவு விரைவில் முடிந்துவிட வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். இப்போது இந்த கிராமத்தில் வேலை செய்யும் அனைவரின் வேண்டுதலும் அதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் பாம்புகள் இங்குமங்கும் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்“ என்று காவாலா ஸ்ரீதேவி கூறுகிறார். அவரும், அவரது குடும்பத்தினரும், 2016ம் ஆண்டு மே மாதம் முதல் அவரது கிராமத்தில் மின்சார இணைப்புகளை அரசு துண்டித்தது முதல், கடும் இருட்டில் இரவுகளை அச்சத்துடனே கழித்து வருகிறார்கள்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தின் போலாவரம் மண்டலத்தில் உள்ள பிடிபக்கா கிராமத்தில் தங்கியுள்ள பத்தே பத்து குடும்பங்களுள் ஸ்ரீதேவியின் குடும்பமும் ஒன்று. இப்பகுதி கோதாவரி ஆற்றுக்கு அருகில் உள்ளது. அரசு பாசன வசதி திட்டங்களுக்காக இப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தியபோது, 2016ம் ஆண்டு ஜீன் மாதம் இங்கிருந்து 429 குடும்பங்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். ஜலயாக்னம் எனப்படும் ஒரு மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப்பணிகள் நடைபெறுகிறது. இந்த பெரிய திட்டம் 2004ம் ஆண்டு துவங்கி 2018ம் ஆண்டு முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. எனினும் 60 சதவீத பணிகள் மட்டும்தான் இப்போது முடிக்கப்பட்டுள்ளது.

“மின்சார இணைப்புகளை துண்டித்த ஒரு மாதத்திற்கு பின்னர் அவர்கள் குடிநீர் இணைப்புகளையும் துண்டித்தனர்“ என்று ஸ்ரீதேவி கூறுகிறார். அவர் இப்போது போலாவரம் நகரிலிருந்து ஒரு கேன் தண்ணீரை ரூ.20க்கு வாங்குகிறார். இந்நகர் அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆட்டோவில் தனது கணவர் சூர்யச்சந்திரத்துடன் நகருக்கு சென்று வாங்கி வருகிறார்.

சில காலம் அந்த தம்பதியினர், தங்களின் 3 குழந்தைகளுடன் (மேலே உள்ள அட்டை படத்தை பார்க்கவும்), கோபாலபுரம் மண்டலத்தில் உள்ள ஹீக்கூம்பேட்டையில் உள்ள மறுகுடியமர்வு காலனியில் சென்று தங்கியிருந்தனர். ஆனால் ஒரு மாதத்திற்கு பின்னர் பிடிபக்கா திரும்பி வந்துவிட்டனர். “நாங்கள் அரசு அதிகாரிகளை நம்பினோம். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை“ என்று ஸ்ரீதேவி கண்ணீருடன் கூறுகிறார்.

Houses demolished in Pydipaka in May – June 2016
PHOTO • Rahul Maganti

பிடிபக்காவில் வசித்த குடும்பங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, 2016ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாத மறுகுடியமர்வுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் திரும்ப முடியாத நிலை உள்ளது

அங்கிருந்த அனைத்து குடும்பத்தினரும் 4 காலனிகளுக்கு மாற்றப்பட்டனர். போலாவரம் மற்றும் ஹீக்கும்பேட்டையில் தலா ஒன்றும், ஜங்கரெட்டிகுடெம் மண்டலத்தில் இரண்டும் உள்ளது. இவை பிடிபக்காவிலிருந்து 10 முதல் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அவர்களுக்கு அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அவர்களுக்கு பிடிபக்காவில் உள்ள இடத்தின் அதே அளவு நிலம் வழங்கப்படும் என சொல்லப்பட்டது. சொந்தமாக நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என்றும் ஒரு மாடி வீடு, ரூ.6.8 லட்சம் பணம் மற்றும் மரங்கள், கால்நடைகள், கட்டிடங்கள் ஆகியவை வைத்திருந்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்த அளவீடுகள் அனைத்தும், நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013ன் அடிப்படையில் செய்யப்பட்டது. ஆனால் அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் இரண்டு ஆண்டுகள் கழித்தும் நிறைவேற்றவில்லை என்று கிராம மக்கள் கூறுகிறார்கள் . (இதுகுறித்த மேலதிக விவரங்கள் அடுத்தக் கட்டுரையில் இடம்பெறும்).

ஸ்ரீதேவி மற்றும் சூரியசந்திரம் ஆகிய இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சொந்த நிலம் இல்லை. பிடிபக்காவில் வேளாண் கூலித்தொழிலாளர்களாக உள்ளார்கள். நாளொன்றுக்கு அவர்கள் ரூ.100 முதல் ரூ.300 வரை ஈட்டுவார்கள். “எனக்கு இப்போது வேலை இல்லை. எனது கணவர் போலாவரத்தில் ஆட்டோ ஓட்டி ரூ.300 சம்பாதிக்கிறார். அதன் மூலம் நாங்கள் எங்கள் குடும்ப செலவுகளை கவனித்துக் கொள்கிறோம்“ என்று ஸ்ரீதேவி கூறுகிறார். அவர் தனியார் கடன் கொடுப்பவர்களிடம் ரூ.1 லட்சம் கடனை 36 சதவீத வட்டிக்கு பெற்று ஆட்டோவை வாங்கினார்.

ஒரு மதியவேளையில் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அவர்களின் மூன்று குழந்தைகளான ஸ்மைலி (6), பிரசாந்த் (8), பாரத் (10) ஆகிய மூவரும் போலாவரம் திட்டம் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்ற புரிதலின்றி அவர்கள் வளர்க்கும் ஸ்னூப்பி என்ற  நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்“ என்று பாரத் கூறுகிறார். “அவர்கள் அனைவரும் புதிய காலனிக்கு சென்றுவிட்டார்கள்.“ அவரும், அவரது சகோதர சகோதரிகளும் மட்டுமே அந்த கிராமத்தில் எஞ்சியுள்ள குழந்தைகள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி செல்வதையும் நிறுத்திவிட்டனர். திட்ட அதிகாரிகள் பள்ளியையும் இடித்து விட்டனர். போலாவரம் நகரில் உள்ள பள்ளிக்கு அவர்களை அனுப்புவதற்கு, அவர்களின் பெற்றோரால் இயலவில்லை.

கிராமத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன, அதனால், மறுகுடியமர்வு செய்யப்பட்ட காலனியில் போதிய வசதிகள் இல்லாதபோதும், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருவதும் கடினமாகிவிட்டது. அதிர்ஷ்டவசமாக ஸ்ரீதேவியின் வீடு மட்டும், நீண்ட தொலைவில் கிராமம் முடியும் இடத்தில் உள்ள பட்டியலின குடியிருப்பு பகுதியில் இருந்ததால் இடிப்பதில் இருந்து தப்பிவிட்டது.

Prashanth, Smiley and Bharath (Left to Right) in front of their house along with their pet, Snoopy
PHOTO • Rahul Maganti
The demolished school in Pydipaka
PHOTO • Rahul Maganti

பிரசாந்த், ஸ்மைலி மற்றும் பாரத் ஆகியோர் அவர்களின் நாய் ஸ்னூப்பியுடன். 2016ம் ஆண்டு திட்ட அதிகாரிகள் பள்ளிக் கட்டிடத்தை இடித்தது முதல் அவர்கள் பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டனர் (வலது)

திட்டம் நிறைவேற்றப்படும் இடத்திற்கு அருகில் உள்ள 7 கிராமங்களில் பிடிபக்காவும் ஒன்று. இங்கு 5,500 பேர் வசிக்கிறார்கள். 2016ம் ஆண்டு இங்கிருந்துதான் இப்பகுதியில் வசித்தவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். திட்ட அதிகாரிகளுக்கு இந்த இடம் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படுகிறது. போலாவரம் மண்டலத்தில் வடமேற்கு கோதாவரி ஆற்றங்கரையில் நீரோட்டத்திற்கு எதிர்புறத்தில் உள்ள இன்னும் 22 கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள 15 ஆயிரம் பேரும் இறுதியில் இடம்பெயர்வார்கள். அவர்களின் வீடுகளும் மூழ்கிவிடும்.

போலாவரம் திட்டம், அலுவல் ரீதியாக இந்திரா சாகர் பல்நோக்கு திட்டம் என்று அறியப்படுகிறது. இதன் மூலம் 3 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். 960 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் மற்றும் 540 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கையில் இந்த தகவல்கள் உள்ளன. இவை, மாநில அரசின் 2005ம் ஆண்டு மே மாத உத்தரவு எண் 93லிருந்தும், 2005ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சரின் அறிக்கையில் இருந்தும் மாறுபடுகிறது.

போலாவரம் திட்டம் முழுமையாக நிறைவுபெறும்போது, ஆந்திரப்பிரதேசம் முழுவதும், 9 மண்டலங்களில் குறைந்தபட்சம் 462 கிராமங்கள் அகற்றப்படும். இந்த கிராமங்கள் அனைத்தும் கோயா அல்லது கொண்டாரெட்டி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கிராமங்கள். அரசியலமைப்பின் 5வது அட்டவணையின் கீழ் வருபவர்கள். அப்பிரிவு பழங்குடியினர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சிறப்பு உரிமை வழங்குவதுடன் அவர்களின் நிலம், வனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்கவும் உறுதி செய்கிறது.

ஒன்றரை லட்சம் ஆதிவாசிகள் மற்றும் 50 ஆயிரம் தலித்கள் உட்பட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி மற்றும் 1 லட்சத்து 21ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஐந்து ஏக்கர் வனமல்லாத நிலங்களில் இருந்து வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இத்தகவல்கள் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து என்னால் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆவணங்களின் அடிப்படையில் கூறுப்பட்டுள்ளது. மற்றொரு 75 ஆயிரம் ஏக்கர் நிலம், வாய்க்கால்கள்,  பகிர்மான கால்வாய்கள், நகர்ப்புறங்கள் மற்றும் பசுமை வளாகம் ஆகியவை அமைப்பதற்காக பெறப்பட்டது.

A view of River Godavari from the verandah of Sridevi’s house
PHOTO • Rahul Maganti
Houses demolished in Pydipaka in May – June 2016
PHOTO • Rahul Maganti

பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள காவாலா ஸ்ரீதேவியின் வீட்டிற்கு எதிரே கோதாவரி நதி பாய்கிறது. அவர்களின் வீடு படிபக்காவில் உள்ள மற்ற வீடுகள் இடிக்கப்பட்டபோது தப்பிவிட்டது (வலது)

சட்டப்படி அரசு தருவதாக ஒப்புக்கொண்ட அனைத்து சலுகைகளையும் தராவிட்டால், ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் உள்பட 10 குடும்பத்தினர் பிடிபக்காவிலிருந்து நகர மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அந்த சட்டத்தில் பட்டியலினத்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினால், அவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற சிறப்பு ஏற்பாட்டின் கீழ் தங்களுக்கு நிலமும் கிடைக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி கோருகிறார்.

சில குடும்பத்தினர் மட்டுமே இங்கு தங்கி தொடர்ந்து போராடினாலும், இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற மற்றவர்களும் கடுமையாக போராடினார்கள். மாநிலத்தில் வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்தனர். மின்நிறுத்தம், குடிநீர் நிறுத்தம் ஆகியவற்றை செய்ததுடன், 2016ம் ஆண்டு பருவமழைக்காலங்களில் பிடிபக்கா சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சேற்றையும், மண்ணையும் நிரப்பினர். இதனால், சாலையில் அவர்கள் கிராமத்தை அடைய முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். “நாங்கள் முழங்காலளவு சேற்றிலும், சகதியிலும் கிராமத்திற்கு சென்று வரவேண்டும்“ என்று ஸ்ரீதேவி கூறுகிறார்.

பொட்டா திரிமூர்துலு (42), பிடிபக்காவில் தங்கி போராடும் மற்றொரு கிராமவாசி, அவர் கடும் துன்புறுத்தல்களை சந்தித்ததாக கூறுகிறார். 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, திட்ட அதிகாரிகள் அழைத்து வந்த குண்டர்கள் அவரது இரண்டரை ஏக்கர் வாழைத்தோட்டத்தில் கல், சேறு மற்றும் மண்ணை நிரப்பினார்கள். “வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராகியிருந்தன. நான் மண்டல வருவாய் அதிகாரிகளிடம் ஒரு மாதம் காத்திருக்கக் கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அவர்களின் இந்த செயலால் நான் 4 லட்ச ரூபாய் அறுவடையை இழந்தேன். கிராமத்தில் அன்று மட்டும் 75 ஏக்கர் பயிரை அவர்கள் அழித்தார்கள்“ என்று திரிமூர்துலு  கூறுகிறார். அப்போது முதல் அவர் விவசாய கூலித்தொழிலாளியாக தெல்லாவரம் குடியிருப்பில் நாளொன்றுக்கு ரூ.250 ஈட்டுகிறார். அப்பகுதி இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திட்டம் முழுதாக செயல்படுத்தப்படும்போது, மக்கள் வெளியேற்றப்படும் 22 கிராமங்களில் தெல்லாவரமும் ஒன்று.

திரிமூர்துலுவின் மனைவி பொட்டா பானு (39), வீட்டில் உள்ள 10 எருமை மாடுகள், 20 ஆடுகள், 40 செம்மறியாடுகள் மற்றும் 100 கோழிகளை பராமரித்து வருகிறார். அவர்கள் தோட்டத்தில் போடப்பட்ட கற்களில் சிக்கி சில விலங்குகள் இறந்தே விட்டன. அதற்கும் அந்த குடும்பத்தினருக்கு எவ்வித இழப்பீடும் கிடைக்கவில்லை. கிராமத்தில் யாரும் இல்லாததால், அவற்றை பராமரிக்க ஆளின்றி மற்ற விலங்குகளையும் அவர்கள் விற்றுவிட்டார்கள். “நாங்கள் வீட்டு வேலைகள் மற்றும் கால்நடை பண்ணையை பராமரிக்க 10 பேரை வேலைக்கு அமர்த்தியிருப்போம். ஆனால், நாங்களே இப்போது எங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கு வேறு ஒருவர் வயலில் வேலை செய்து பிழைக்க வேண்டியுள்ளது“ என்று பானு கூறுகிறார்.

Botta Trimurthulu showing the dump in his fields
PHOTO • Rahul Maganti
Botta Bhanu (right) and her daughter Sowjanya, who dropped out of Intermediate in 2016 when all the chaos was happening, in front of their house in Pydipaka
PHOTO • Rahul Maganti

பொட்டா திரிமூர்துலு  தனது வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய சிறுகற்குவியலை நம்மிடம் காட்டுகிறார். வலது : அவரது மனைவி பொட்டா பானு, வீட்டில் தனது மகள் சவுஜன்னியாவுடன் உள்ளார். அவரும் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார்

அந்த கடினமான நாட்களில் 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜீலை வரை அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம் குறித்து பானு விவரிக்கிறார். “தினமும் 40 முதல் 50 போலீஸ்காரர்கள் வருவார்கள். எங்களை அச்சுறுத்தி, எங்கள் கை மற்றும் கால்களை கட்டி போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்செல்வார்கள். பெரும்பாலான குடும்பத்தினர் வெளியேற விரும்பவில்லை. ஆனால், அவர்களால் போலீசார் கொடுத்த அழுத்தத்தை நீண்டகாலம் தாங்க முடியவில்லை“ என்று பானு கூறுகிறார்.

இதுகுறித்து, போலாவரம் காவல் ஆய்வாளர் பாலாராஜூவிடம் கேட்டபோது, “நீங்கள் கூறுவது முற்றிலும் தவறானது. நாங்கள் கிராம மக்களுக்கு போக்குவரத்து உதவிகளை செய்தோம்“ என்று என்னிடம் கூறுகிறார்.

மண்டல வருவாய்துறை அலுவலர் முக்கந்தியும் அவர்கள் கூறும் அனைத்தையும் திட்டவட்டமாக மறுக்கிறார். “மக்களை இடம்பெயர வைப்பதற்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை“ என்று அவர் கூறுகிறார். “உண்மையில் மக்கள் மகிழ்ச்சியாகவே இடம்பெயர்ந்தனர். அந்த காலனிகளில் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள மாடி வீடுகள் மற்றும் நிவாரண தொகையும் அவர்களுக்கு பிடித்திருந்தது.“ திரிமூர்துலுவின் வயல் சிதைக்கப்பட்டது குறித்து, “அதுபோன்ற ஒரு சம்பவம் எப்போதும் நடக்கவில்லை. இவை அடிப்படை ஆதாரமற்ற தகவல்“ என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையில் பிடிபக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் சட்டப்படி வழங்கப்படவேண்டிய நிவாரணங்களை அரசு முழுமையாக வழங்கவேண்டும் என்று கோரி வருகிறார்கள். “அவர்கள் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் அது உதவாது. நாங்கள் இருளிலே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தோம். எனவே அது எங்களுக்கு பழகிவிட்டது. நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு, எங்களுக்கு சட்டபடி கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்காமல் நகர மாட்டோம்“ என்று திருமூர்த்துலு கூறுகிறார். “நாங்கள் இங்கே இறப்போம், எங்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்காமல் நாங்கள் இங்கிருந்து ஒரு அடி கூட நகரமாட்டோம்“ என்று ஸ்ரீதேவியும் உறுதியாக கூறுகிறார்.

பிடிபக்காவிலிருந்து 174 கிலோ மீட்டர் தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில், ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, போலாவரம் திட்டம் குறித்து வீட்டில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு திங்களன்றும் ஆய்வு செய்கிறார். சட்டத்திற்கு புறம்பான கட்டுமானங்கள் இடிக்கப்படுவது குறித்து கூட உள்ளூர் மீடியாக்களில் பரவலாக செய்தியாக்கப்படுகிறது. கோதாவரியின் கரைகளில் உள்ள ஸ்ரீதேவியின் முறையான வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து எவ்வித தகவல்களும் வெளிவருவதில்லை.

தமிழில்: பிரியதர்சினி. R.

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.