லட்சக்கணக்கான பேருக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டித்து தீவிரமான சுகாதார கேடுக்குள்ளாகும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள். காவல்துறை மற்றும் துணை ராணுவம் ஆகியவற்றின் தடுப்புகள் போராட்டப்பகுதியை முற்றிலுமாக துண்டித்து துப்புரவு வசதிகள் இல்லாத ஆபத்தான சூழலுக்குள் விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். போராடும் விவசாயிகளை ஊடகவியலாளர்கள் சந்திக்க முடியாமல் ஆக்கியிருக்கிறார்கள். கூடவே இருந்த 200 விவசாயிகளை உடல்நலக்குறைவால் சாகக் கொடுத்த கூட்டத்தை இரண்டு மாதங்களாக தண்டித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் வேறெங்கு இவை நடந்திருந்தாலும் காட்டுமிராண்டித்தனமாகவும் மனித உரிமைகள் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்பட்டிருக்கும்.

ஆனால் நம் அரசும் ஆளும்வர்க்கமும் அதை விட முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தன. உதாரணமாக, பூமியிலேயே அற்புதமான நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முடிவெடுத்திருக்கும் சர்வதேச தீவிரவாதிகளான ரைஹானா மற்றும் க்ரெட்டா துன்பர்க் போன்றாரின் கூட்டுச்சதியை அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு புனைகதையாக இருந்திருந்தால் நகைச்சுவையாக இருந்திருக்கும். யதார்த்தத்தில் நடப்பதால் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.

இவை எல்லாம் அதிர்ச்சியாக இருந்தாலும் ஆச்சரியமாக இருக்க முடியாது. ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற கோஷத்தில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும். அதிகபட்ச வன்முறையும் கோரமான நிர்வாகமும்தான் உண்மையாக இருக்கிறது. வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில் பிற நேரங்களில் உயர எழும் குரல்கள் கவனமாக இவ்விஷயத்தில் அமைதி காப்பதுதான். சில குரல்கள் இத்தகைய சட்டங்களை ஆதரிக்கவும் கொண்டாடவும் மட்டும் வருகின்றன. இத்தகைய தினசரி ஜனநாயக தாக்குதலை அவர்களும் ஏற்பதில்லை என நீங்கள் நினைப்பீர்கள்.

மத்திய அமைச்சரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் நடந்து கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தை தீர்த்து வைக்க தடையாக இருப்பது எது என்பதை தெளிவாக தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.

PHOTO • Q. Naqvi
PHOTO • Labani Jangi

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எந்தவித கலந்தாலோசனையும் விவசாயிகளுடன் நடக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் இச்சட்டங்கள் அவசரச்சட்டங்களாக வந்த நாள் தொட்டு விவசாயிகள் அரசுடன் பேச முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்சட்டங்களை குறித்து மாநிலங்களுடனும் பேசப்படவில்லை. சட்டப்படி வேளாண்மை என்பது மாநிலப்பட்டியலில் இருந்தபோதும் பொருட்படுத்தப்படவில்லை. எதிர்கட்சிகளுடனும் பேசப்படவில்லை. பாராளுமன்றத்துக்குள்ளும் பேசப்படவில்லை.

பாஜக தலைவர்களுக்கும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்பது தெரியும். ஏனெனில் அவர்களே ஆலோசிக்கப்படவில்லை. இதிலும் ஆலோசிக்கப்படவில்லை. வேறு எந்த முக்கிய பிரச்சினைகளின்போதும் கூட ஆலோசிக்கப்படவில்லை. தலைவர் ஆணையிட்டதும் கடலை கூட பாயை சுருட்டி வைக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் வேலை.

அரசவை உறுப்பினர்களை விட அலைகளே சிறப்பாக செயல்படுவதாக நினைத்திருக்கக் கூடும். உத்தரப்பிரதேசத்தில் பெரும் போராட்டங்கள் நடக்கின்றன. மேற்கு உத்தரப்பிரதேச விவசாயத் தலைவர் ராகேஷ் திகைத் முன்பிருந்ததை விட இப்போது கம்பீரமான தலைவராக இருக்கிறார். அரசே அவரை அழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி 25ம் தேதி மகாராஷ்டிரா பெரிய விவசாயப் போராட்டத்தை கண்டது. குறிப்பிடத்தகுந்த போராட்டங்கள் ராஜஸ்தானிலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பிற இடங்களிலும் நடந்தன. கர்நாடகாவில் ட்ராக்டர் பேரணி பெங்களூரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஹரியானாவில் முதல்வர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவுவதால் மாநில அரசு இயங்க தடுமாறிக் கொண்டிருக்கிறது.

பஞ்சாபில் கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலுமிருந்து போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கின்றனர். பிப்ரவரி 14ம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் பெறுவதே பாஜகவுக்கு கஷ்டமாக இருந்தது. அவர்களிடமிருந்து பழைய வேட்பாளர்கள் கட்சி சின்னத்தை பயன்படுத்த பயப்படுகிறார்கள். இவற்றுக்கிடையில் மாநிலத்தில் ஒரு மொத்த தலைமுறையும் அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் பல பாதிப்புகளை அடையும் நிலையில் இருக்கிறது.

PHOTO • Shraddha Agarwal ,  Sanket Jain ,  Almaas Masood

எதிர்தரப்புகளாக இருந்த விவசாயிகள் மற்றும் தரகர்களை எதிர்பாராமல் ஒன்றிணைத்திருப்பது இந்த அரசின் ஆச்சரியத்தக்க சாதனை. அதை தாண்டி சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், ஜாட்கள், ஜாட் அல்லாதவர்கள் என அனைவரையும் கூட ஒருங்கிணைத்திருக்கிறது. அற்புதம்.

தற்போது அமைதியாக இருக்கும் குரல்கள் கடந்த இரண்டு மாதங்களாக ‘பஞ்சாப் மற்றும் ஹரியானா சார்ந்த பிரச்சினை மட்டும்தான்’ என பேசிக் கொண்டிருந்தன. வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என்றன.

வேடிக்கைதான். உச்சநீதிமன்றத்தால் அமர்த்தப்படாத குழுவின்படி பஞ்சாபும் ஹரியானாவும் இந்திய ஒன்றியத்தில்தான் இருக்கிறது. அங்கு நடக்கும் விஷயங்களும் நமக்கான விஷயங்கள்தான் என நீங்கள் எண்ணக் கூடும்.

முன்பு பேசிக் கொண்டிருந்த அந்த குரல்கள், சீர்திருத்தத்தை எதிர்க்கும் “பணக்கார விவசாயிகள்” மட்டுமே போராடுவதாக சொல்லிக் கொண்டிருந்தன.

சுவாரஸ்யமாய் இருக்கிறது. சமீபத்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி பஞ்சாபில் இருக்கும் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமான ரூ.18,059. ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்போரின் எண்ணிக்கை சராசரியாக 5.24. ஒருவருக்கான மாத வருமானம் ரூ.3450 ஆகிறது. அமைப்பு சார்ந்த துறையில் வழங்கப்படும் கடைமட்ட ஊழியரின் ஊதியத்தையும் விடக் குறைவு.

எவ்வளவு செல்வம்!  பாதி விஷயம் நமக்கு சொல்லப்படவில்லை. ஹரியானாவை பொறுத்தவரை (ஒவ்வொரு குடும்பமும் கொண்டிருக்கும் சராசரி உறுப்பினர் எண்ணிக்கை 5.9) சராசரி மாத வருமானம் ரூ.14,434. ஒருவருக்கு ரூ.2450 என ஆகிறது. இந்த குறைவான தொகை கூட இந்திய விவசாயிகளை காட்டிலும் இவர்களை முன்னணியில் வைக்கிறதாம். உதாரணமாக குஜராத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.7926. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை சராசரியாக 5.2. ஒருவருக்கு ரூ.1524.

PHOTO • Kanika Gupta ,  Shraddha Agarwal ,  Anustup Roy

மொத்த நாட்டிலுமே ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.6,426 (ஒரு நபருக்கு ரூ.1300). சராசரி மாத வருமானங்கள் எல்லாமுமே எல்லா வழிகளில் இருந்தும் கிடைக்கும் வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது. விளைச்சலிலிருந்து மட்டுமில்லாமல் கால்நடைகள், விவசாயமற்ற வணிகம் மற்றும் ஊதியங்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 70ம் சுற்றறிக்கையான ‘இந்திய விவசாயக் குடும்பங்களின் சூழலை பற்றிய முக்கியமான சுட்டிக்காட்டல்கள்’ 2013-படி இவைதாம் இந்திய விவசாயிகளின் நிலையாக இருக்கிறது. இந்த விவசாயிகளின் வருமானத்தைதான் 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதாக அரசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது அடுத்த 12 மாதங்களில். ரைஹான்னாக்கள் மற்றும் துன்பெர்குகள் போன்றோரின் தொந்தரவுக்குரிய தலையீட்டால் அதை செய்வது அரசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஓ, அந்த தில்லி எல்லைகளில் 2 டிகிரிக்கும் குறைவான தட்பவெப்பத்தில் உலோக ட்ராலிகளில் தூங்கி, 5-6 டிகிரி தட்பவெப்பத்தில் திறந்தவெளியில் குளித்தும் போராடிக் கொண்டிருக்கும் அந்த பணக்கார விவசாயிகள் இந்திய பணக்கார வர்க்கத்தை பற்றிய என் பார்வையை மேம்படுத்திவிட்டது. நாம் நினைத்ததை விட கடினமான வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் நியமித்த கமிட்டியாலும் விவசாயிகளுடன் பேச முடியவில்லை போலும். அதன் நான்கு உறுப்பினர்களில் ஒருவர் முதல் சந்திப்புக்கு முன்னமே விலகிவிட்டார். உண்மையாக போராடிக் கொண்டிருப்பவர்களிடம் பேசுவது மட்டும் நடக்கவேயில்லை.

மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டிக்கான இரண்டு மாத கெடு முடிகிறது. அவர்கள் பேசாதோரின் பெயர்களை கொண்ட நீண்ட பட்டியலையும் அவர்களிடம் பேச விரும்பாதோரின் பெயர்கள் கொண்ட மிக நீண்ட பட்டியலையும் அவர்கள் அப்போது கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசியிருக்கவே கூடாத ஆட்களின் பெயர்களை கொண்ட சிறு பட்டியலையும் கொண்டிருக்கலாம்.

போராடும் விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்தும் ஒவ்வொரு முயற்சியும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே செய்கிறது. விவசாயிகளை பற்றிய ஒவ்வொரு அவதூறும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்படுகின்றன. களமோ தலைகீழாக இருக்கிறது. கொடூரமான விஷயம் என்னவெனில் இது இந்த அரசின் தீவிர முயற்சிகளை தடுக்காது என்பதுதான். அவர்களின் முயற்சிகள் இன்னும் எதேச்சதிகாரம் கொண்டதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் மாறும்.

PHOTO • Satyraj Singh
PHOTO • Anustup Roy

கார்ப்பரெட் மீடியாவிலும் பாஜகவிலேயே இருக்கும் பலருக்கும் இப்பிரச்சினையில் வெல்லவே முடியாத தடையாக இருப்பது தனிப்பட்ட தன்னகங்காரம்தான் என்பது தெரியும். கொள்கையோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளோ கூட காக்கப்பட வேண்டியதில்லை. சட்டத்தின் புனிதத்தன்மையும் அல்ல (அரசே பல திருத்தங்களை கொண்டு வர முடியுமென காட்டியிருக்கிறது). அதாவது அரசன் எப்போதும் தவறு செய்ய மாட்டான் என்கிற நிலை. தவறை ஒப்புக்கொள்வதே அதிலிருந்து பின்வாங்குவதோ யோசிக்கவே முடியாத விஷயம். எனவே இந்த நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் அந்நியப்படுத்தப்பட்டாலும் நாட்டின் தலைவர் தவறாக முடியாது. பின்வாங்க முடியாது. பெரிய நாளிதழ்களில் எந்தவொரு தலையங்கமும் இவற்றை பற்றி சிறு முணுமுணுப்பு கூட வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அவற்றுக்கு இதுவே உண்மை என்பது தெரியும்.

இந்த பிரச்சினைக்குள் தன்னகங்காரம் எத்தனை முக்கியமானது? ஒரு இசைக்கலைஞரால் போடப்பட ஒரு ட்வீட்டுக்கு எத்தனை எதிர்வினைகள் என பாருங்கள். “இதை பற்றி நாம் ஏன் பேச முடியவில்லை?” என ஒரு ட்வீட். அதை சுற்றி எழுப்பப்பட்ட விவாதங்கள் யாவும் ‘ஆகா-ரைஹானாவைவிட - மோடிக்கு - ட்விட்டர்- ஆதரவாளர்கள் -அதிகம்’  என தரம்தாழ்ந்தபோதே நாம் தோற்றுவிட்டோம். வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தேசியப் பற்று கொண்ட ஒரு பிரபலங்களின் கூட்டத்தை வைத்துக் கொண்டு செய்த போதே நாம் தோற்றோம்.

முதல் ட்வீட் ஒரு கேள்வியை மட்டும்தான் வைத்தது. எந்தவித சார்புநிலையையும் கூட எடுக்கவில்லை. சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநரும் தொடர்புத்துறை இயக்குநரும் வெளிப்படையாக வேளாண் சட்டங்களை கொண்டாடியது போன்ற நிலைப்பாடு கூட (சிகரெட் பிடிப்பதை தடுக்கவென சிகரெட் பாக்கெட்டுகளில் ஒட்டப்பட்ட படம் போல ஒப்புக்கான சில எச்சரிக்கைகள் மட்டும் இருந்தது) எடுக்கப்படவில்லை.

இல்லை. ஒரு இசைக்கலைஞரும் 18 வயது மட்டுமே ஆன காலநிலை செயற்பாட்டாளருமே இங்கு ஆபத்தானவர்கள். தில்லி காவலர்கள் தன் கடமையை செய்திருப்பது திருப்தியை அளிக்கிறது. ஒருவேளை சர்வதேச சதிக்கதைகளையும் தாண்டி வேற்று கிரக பரிமாணம் ஒன்றை இப்பிரச்சினையில் அவர்கள் கண்டுபிடித்தால் நான் அவர்களை கிண்டல் செய்ய மாட்டேன். ஏனெனில் எனக்கு பிடித்த மேற்கோள் ஒன்று இருக்கிறது:  “வேற்றுகிரக ஜீவராசிகள் இருக்கிறார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரம் அவர்கள் நம்மை தனியாக விட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதுதான்.”

இந்த கட்டுரை முதலில் The Wire-ல் பிரசுரிக்கப்பட்டது.

முகப்பு படம்: லபானி ஜங்கி, மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள சிறு டவுனை சேர்ந்தவர். வங்காள தொழிலாளர்களின் புலம்பெயர்தல் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்து வருகிறார். சுயாதீன ஓவியர். பயணத்தில் நாட்டம் கொண்டவர்.

தமிழில்: ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan