PHOTO • P. Sainath

கயிற்றில் நடப்பதை போன்ற வேலை. மிக ஆபத்தானது. சிக்கலானதும் கூட. எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அவர் இறங்கவிருந்த திறந்த கிணற்றில் சுற்றுச்சுவர் கிடையாது. எடை அதிகமான மரக்கட்டைகளாலும் 44 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும் மதிய வேளையின் சூடான காற்றில் வரும் குப்பைகளாலும் கிணறு மூடப்பட்டிருந்தது. நடுவே இருந்த சிறு திறப்பு கட்டைகளை வெவ்வேறு கோணங்களில் திருப்பி வைத்ததில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கட்டைகளின் விளிம்பில் நின்று கொண்டு அவர் நீர் இறைக்க வேண்டும். அதில் அவருக்கு இரண்டு வகை ஆபத்துகள் இருக்கின்றன. தடுமாறி விழலாம் அல்லது கட்டைகள் அவரது எடை தாளாமல் உடையலாம். எது நடந்தாலும் 20 அடி ஆழத்துக்குள் விழ வேண்டும். விழுந்தபின் மேலே இருக்கும் கட்டைகளில் சிலவை அவர் மீது விழலாம். பக்கவாட்டில் விழுந்தால் பாதம் நொறுங்கக் கூடும்.

ஆனால், அன்று அப்படி ஏதும் நடக்கவில்லை. ஒரு கிராமத்தின்  (ஒரு சமூகம் சார்ந்த) குக்கிராமத்தை சேர்ந்த பிலாலா பழங்குடி இன இளம்பெண் அவர். மரக்கட்டைகள் மீது லாவகமாக நடந்தார். பிறகு கயிறு கட்டிய ஒரு வாளியை கிணற்றுக்குள் நிதானமாக எறிந்து நீர் நிரப்பி மேலே இழுத்தார். அதிலிருந்து நீரை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றினார். மீண்டும் நீர் இறைத்தார். அவரோ மரக்கட்டைகளோ எள்ளளவும் ஆடவில்லை. பிறகு அவர் மத்தியபிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்திலுள்ள வக்னர் கிராமத்திலிருக்கும் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டு கலன்களில் நீரை தூக்கியிருந்த அவரின் வலது கை தலையில் இருந்த பாத்திரத்தையும் இடது கை  வாளியையும் பிடித்திருந்தது.

அவரின் குக்கிராமத்திலிருந்து கிணறு வரை அவருடன் நான் நடந்து சென்றேன். இந்த தூரத்தை இருமுறை (பல நேரங்களில் பல முறை) நடந்தால் இந்த வேலைக்கு மட்டும் ஆறு கிலோமீட்டர் அவர் நடக்கிறார் என்பதை கண்டுகொண்டேன். அவர் கிளம்பிய பிறகு சற்று நேரம் நான் காத்திருந்தேன். பிற இளம்பெண்களும் சில பெண்குழந்தைகளும் அவரைப் போலவே அதே வகை லாவகத்தை வெளிப்படுத்தி நீர் இறைத்தனர். அவர்களை காணும்போது அது மிகவும் எளிமையான செயல் போல தெரிந்தது. நானும் முயற்சித்துப் பார்க்க நினைத்தேன். ஒரு பெண் குழந்தையிடம் இருந்து கயிறு கட்டிய வாளியை கடன் வாங்கினேன். ஒவ்வொரு முறை கட்டைகள் மீது நான் கால் வைத்த போதும் அவை ஆடின. லேசாக உருளவும் செய்தன. மெல்ல கிணற்றின் வாயருகே நடந்ததும் நான் நின்றிருந்த கட்டைகள் நடுங்கத் தொடங்கின. அச்சம் தரும்படி அமிழ்ந்தன. ஒவ்வொரு தடவையும் நான் தரைக்கு பின்வாங்கினேன்.

இவற்றுக்கிடையில் துடிப்புமிகுந்த ஒரு பெரும் பார்வையாளர்கள் கூட்டம் சேர்ந்திருந்தது. நீர் இறைக்க வந்த பெண்களும் சிறு குழந்தைகளும் நான் கிணற்றுக்குள் விழப் போவதை பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். நான்தான் அவர்களுக்கு மதிய வேளை பொழுதுபோக்கு. பெண்களுக்கு ஆரம்பத்தில் நான் வேடிக்கையாக தெரிந்த போதும் வீடுகளுக்கு நீரெடுக்கும் அவர்களின் முக்கியமான வேலை தள்ளிப் போவதால் பதற்றம் கொள்ளத் தொடங்கினர். 1994க்கு பிறகு அதிகப்படியான முயற்சிகள் எடுத்தும் அரை வாளி நீர்தான் என்னால் எடுக்க முடிந்தது. எனினும் என்னுடைய பார்வையாளர்களின் பலத்த கைதட்டல் எனக்குக் கிடைத்தது.

இக்கட்டுரையின் சிறிய அளவு பதிப்பு ஜூலை 12, 1996-ன் தி இந்து பிஸினஸ் லைனில் பிரசுரிக்கப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan