முதலில் அவரது தந்தை. பிறகு அவரது தாய். கோவிட்-10 இரண்டாவது அலையின் போது 2021 மே மாதம் பெற்றோருக்கு அடுத்தடுத்து காய்ச்சல் வந்ததால் புருஷோத்தம் மிசால் பதற்றமடைந்தார். “கிராமத்தில் பலருக்கும் ஏற்கனவே தொற்று இருந்தது,” என்கிறார் புருஷோத்தமின் மனைவி விஜய்மாலா. “அந்த சமயம் நாங்கள் அச்சத்தில் இருந்தோம்.”

மகாராஷ்டிராவில் உள்ள தங்களது பீட் மாவட்ட பொது மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதாக வந்த செய்திகளை புருஷோத்தம் ஏற்கனவே படித்தவிட்டார்.“தனியார் மருத்துவமனையில் பெற்றோரை சேர்த்தால் செலவு அதிகமாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்,” என்கிறார் விஜய்மாலா. “ஒருவர் [வெறும்] ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தால்கூட கட்டணம் லட்சங்களில் வரும். [ரூபாயில்].” அது புருஷோத்தம் ஓராண்டில் ஈட்டும் வருவாயைவிட அதிகமாகும்.

வறுமையிலும் அக்குடும்பம் கடன் ஏதுமின்றி சமாளித்து வந்தது. பார்லி தாலுக்காவில் உள்ள ஹிவாரா கோவர்தன் எனும் அவரது கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிர்சலாவில் தேநீர் கடை நடத்தி வரும் 40 வயது புருஷோத்தமுக்கு மருத்துவச் செலவுக்காக கடன் வாங்குவது மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. 2020 மார்ச் மாதம் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு கடை பெரும்பாலும் மூடியே கிடந்தது.

தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்ட அன்றைய இரவு புருஷோத்தம் படுக்கையில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தார். காலை நான்கு மணியளவில் அவரது மனைவியிடம் சொன்னார்: “கோவிட் வந்திருந்தால் என்ன செய்வது?” என தங்கள் வீட்டின் தகர கூரையை விரித்து பார்த்தபடி விழித்திருந்ததாக நினைவு கூர்கிறார் 37 வயது விஜய்மாலா. கவலைப்படாதீர்கள் என்று அவரது மனைவி ஆறுதல் கூறியுள்ளார், “கவலைப்படாதே, நீ உறங்கச் செல் என்று அவர் என்னிடம் சொன்னார்.”

Left: A photo of the band in which Purushottam Misal (seen extreme left) played the trumpet. Right: Baburao Misal with his musical instruments at home
PHOTO • Parth M.N.
Left: A photo of the band in which Purushottam Misal (seen extreme left) played the trumpet. Right: Baburao Misal with his musical instruments at home
PHOTO • Parth M.N.

இடது: புருஷோத்தம் மிசல் (இடது ஓரத்தில் இருப்பவர்) குழுவில் டிரம்பட் வாசிக்கும் புகைப்படம். வலது: வீட்டில் இசை கருவிகளுடன் உள்ள பாபுராவ் மிசல்

புருஷோத்தம் பிறகு வீட்டிலிருந்து தனது தேநீர் கடையை நோக்கி நடந்தார். அருகில் உள்ள காலி ஷெட்டின் கூரையில் கயிறு கொண்டு தூக்கில் தொங்கி தனது உயிரை விட்டார்.

மகாராஷ்டிராவின் பின்தங்கிய பட்டியலினத்தில் மடாங் சமூகத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்திற்கு சொந்தமாக விளைநிலம் கிடையாது. தேநீர், பிஸ்கட்டுகள் விற்பதுதான் புருஷோத்தமின் முதன்மை வருவாய் ஆதாரம். அவர் திருமணங்களில் பெரும்பாலும் இடம்பெறும் தனது கிராம வாத்தியக் குழுவில் வேலை செய்தார். ஏழு பேர் கொண்ட குடும்பத்தினர் அவரையே சார்ந்திருந்தனர். “தேநீர் கடை மூலம் அவர் மாதம் ரூ.5000-8000 வரை சம்பாதித்து வந்தார்,” என்கிறார் விஜய்மாலா. வாத்தியக் குழுவிலிருந்து கிடைக்கும் வருவாயைச் சேர்த்தால் ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரும்.

“என் மகன் ஒரு சிறந்த இசைக் கலைஞன்,” என்கிறார் சோகம் நிரம்பிய குரலில் அவரது தாயான 70 வயது கங்குபாய். புருஷோத்தம் டிரம்பட் வாசித்தாலும், அவ்வப்போது கீ போர்ட், டிரம்ஸ் இசைத்து வந்தார். “அவனுக்கு நான் ஷெனாய் சொல்லித் தந்தேன்,” என்கிறார் கிராமத்தில் 25-30 பேருக்கு இசைக் கருவிகளை வாசிக்க சொல்லித் தரும் அவரது 72 வயது தந்தை பாபுராவ். அவரது கிராமத்தில் பாபுராவை உஸ்தாத் (மேஸ்ட்ரோ) என்கின்றனர்.

கோவிட் காரணமாக இசை குழுவிற்கு வேலையின்றி போனது. விஜய்மாலா சொல்கிறார்: “மக்கள் வைரஸ் குறித்து அஞ்சுகின்றனர், அவர்களிடம் ஒரு கோப்பை தேநீர் வாங்கவோ, திருமணங்களில் இசை குழுவை வைக்கவோ அவர்களிடம் பணமில்லை.”

Left: Gangubai Misal says her son, Purushottam, was a good musician. Right: Vijaymala Misal remembers her husband getting into a panic when his parents fell ill
PHOTO • Parth M.N.
Left: Gangubai Misal says her son, Purushottam, was a good musician. Right: Vijaymala Misal remembers her husband getting into a panic when his parents fell ill
PHOTO • Parth M.N.

இடது: புருஷோத்தம் ஒரு சிறந்த இசைக் கலைஞர் என்கிறார் கங்குபாய் மிசல். வலது: பெற்றோர் உடல்நலம் குன்றியதும் கணவர் பதற்றமடைந்ததை விஜய்மாலா மிசல் நினைவுகூர்கிறார்

அமெரிக்காவைச் சேர்ந்த ப்யூ ஆராய்ச்சி மைய அறிக்கை சொல்கிறது: “கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு இந்திய ஏழைகளின் (ஒரு நாளுக்கு $2 அல்லது அதற்கும் குறைவாக வருவாய் உள்ளவர்கள்) எண்ணிக்கை 7.5 கோடி என அதிகரிக்க கூடும் என கணக்கிட்டுள்ளது.” 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் நடுத்தர வர்கத்தினரின் எண்ணிக்கை 3.2 கோடியாக சுருங்கியுள்ளது, உலகளவில் வறுமையின் அளவை 60 சதவீதம் அதிகரித்துள்ளது என குறிப்பிடுகிறது மார்ச் 2021 அறிக்கை.

விவசாயிகள் அதிகம் வசிக்கும் மாவட்டமான பீடில், மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தொடர் வறட்சி காரணமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள விவசாயிகள் கடன், கவலையில் போராடி வருகின்றனர். கிராமப்புற பொருளாதாரத்தில் பிழைக்க போராடி வரும் குடும்பங்களுக்கு கோவிட்-19 சுமையை இன்னும் கூட்டியுள்ளது.

புருஷோத்தம் வாழ்வாதாரத்திற்கு நேரடியாக விவசாயத்தைச் சாராவிட்டாலும், அவரது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இதன் தாக்கம் விவசாய சமுதாயத்தின் சுற்றுவட்டாரத்தில் உணரப்பட்டது. செருப்பு தைப்போர், ஆசாரிகள், முடி திருத்துநர்கள், குயவர்கள், தேநீர் வியாபாரிகள் மற்றும் பலரையும் பாதித்துள்ளது. பலரும் தங்களின் வாழ்வாதாரம் குறித்த அச்சத்தில் தற்போது உள்ளனர்.

பீட் தாலுக்கா காம்கேடா கிராமத்தில் உள்ள தனது கடையில், அமைதியான வாரநாளில், கோவிடிற்கு முந்தைய காலத்திற்கு திரும்பச் செல்வது குறித்து சிந்திக்கிறார் 55 வயது லட்சுமி வாக்மாரி. “எங்கள் நிலைமை இவ்வளவு மோசமாகும் என நினைக்கவில்லை,” என்கிறார் அவர் வெறுப்புடன்.

Lakshmi and Nivrutti Waghmare make a variety of ropes, which they sell at their shop in Beed's Kamkheda village. They are waiting for the village bazaars to reopen
PHOTO • Parth M.N.
Lakshmi and Nivrutti Waghmare make a variety of ropes, which they sell at their shop in Beed's Kamkheda village. They are waiting for the village bazaars to reopen
PHOTO • Parth M.N.

பீடின் காம்கேடா கிராமத்தில் லட்சுமியும், நிவ்ருத்தி வாக்மாரியும் கயிறுகளை விற்கின்றனர். கிராம கடைத்தெருக்கள் மீண்டும் திறப்பதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்

லட்சுமியும், அவரது 55 வயது கணவர் நிர்ருட்டி வாக்மாரியும் பல வகை கயிறுகளை திரிக்கின்றனர். நவ் பவுத்தா (நியோ புத்தர், முன்னாள் தலித்) தம்பதிக்கு சொந்தமாக நிலம் கிடையாது, அவர்களின் பரம்பரை தொழிலான கைவினையை மட்டுமே நம்பி வாழுகின்றனர். பெருந்தொற்று வரும் வரை, கிராம  வாரச் சந்தைகளில் கயிறுகளை விற்று வந்தனர்.

“சந்தையில் நீங்கள் எல்லோரையும் பார்க்கலாம். அது ஒரே பரபரப்பாக இருக்கும்,” என்கிறார் நிவ்ருட்டி. “கால்நடைகள், காய்கறிகள், மண்பாண்டங்கள் போன்றவை விற்கப்படும். நாங்கள் கயிறு விற்போம். கால்நடைகளை வாங்கிய பிறகு அவற்றைக் கட்டுவதற்கு விவசாயிகள் பொதுவாக கயிறு வாங்குவார்கள்.”

நாவல் கரோனா வைரஸ் தாக்கும் வரை, சரக்குகளை எளிதில் வியாபாரம் செய்யும் இடமாகவும், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் சந்தைகள் இருந்தன. “வாரத்திற்கு நான்கு சந்தைகளில் நாங்கள் பங்கேற்போம், ரூ.20,000 வரை கயிறு விற்போம்,” என்கிறார் லட்சுமி. “எங்களுக்கு ரூ.4000 [வாரத்திற்கு சராசரியாக] லாபம் கிடைக்கும். கோவிட் வந்த பிறகு வாரத்திற்கு ரூ.400 மதிப்பிலான கயிறுகளைத்தான் விற்கிறோம். எனவே லாபத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.” கயிறுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தி வந்த டெம்போவை இந்தாண்டு ஏப்ரல் மாதம் ரூ.50,000க்கு லட்சுமியும், நிவ்ருட்டியும் விற்றுவிட்டனர். “எங்களால் இனிமேல் அதைப் பராமரிக்க முடியாது,” என்கிறார் லட்சுமி.

கயிறு திரிப்பது என்பது கடினமானது, திறன் தேவைப்படுவது. கோவிட்டிற்கு முந்தைய காலத்தில் லட்சுமியும், நிவ்ருட்டியும் வேலைக்கு ஆள் வைத்திருந்தனர். இப்போது அவர்களின் மகன் கட்டுமான பணியிடங்களில் வேலை செய்து மாதம் ரூ.3,500 சம்பாதிக்கிறார். “எனவே நாங்கள் பிழைக்கிறோம்,” என்கிறார் லட்சுமி. “வீட்டில் நாங்கள் வைத்துள்ள கயிறுகள் நிறம் தேய்ந்து பழமையடைந்து வருகின்றன.”

Left: Lakshmi outside her house in Kamkheda. Right: Their unsold stock of ropes is deteriorating and almost going to waste
PHOTO • Parth M.N.
Left: Lakshmi outside her house in Kamkheda. Right: Their unsold stock of ropes is deteriorating and almost going to waste
PHOTO • Parth M.N.

இடது: காம்கேடாவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே லட்சுமி. வலது: அவர்களின் விற்காத கயிறுகள் தேக்கமடைந்து கிட்டதட்ட வீணாகும் நிலையில் உள்ளன

காம்கேடாவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதல்சிங்கி கிராமத்தைச் சேர்ந்த காந்தாபாய் பூதாத்மால் சந்தை நாட்களை நினைத்துப் பார்க்கிறார். அவர் செய்யும் துடைப்பங்களை எங்கு விற்பது என்று தெரியவில்லை.“நான் சந்தைக்கு துடைப்பங்களை கொண்டு சென்று விற்பேன். கிராமம் விட்டு கிராமம்கூட செல்வேன்,” என்கிறார் அவர். “சந்தைகள் திறக்கப்படவில்லை, ஊரடங்கினால் காவல்துறையினர் எங்களை பயணிக்க அனுமதிப்பதில்லை. கிராமத்திற்கு வந்து வாங்குபவர்களிடம் மட்டுமே துடைப்பத்தை விற்க முடிகிறது. அதிலிருந்து எவ்வளவு பணம் கிடைத்துவிடும்?”

பெருந்தொற்றுக்கு முன்பு, காந்தாபாய் வாரம் 100 துடைப்பங்களை விற்று ரூ.40-50 வரை ஈட்டினார். “இப்போது அவ்வப்போது வரும் வியாபாரிகள் ஒரு துடைப்பம் 20 முதல் 30 ரூபாய்க்கு வாங்கிச் செல்கின்றனர்,” என்கிறார் அவர். “வழக்கமாக விற்பதில் பாதியளவு கூட இப்போது விற்பதில்லை. இதுவே ஒவ்வொரு வீட்டின் நிலைமையும் - இங்கு [கிராமத்தில்] 30-40 பேர் துடைப்பங்கள் செய்கின்றனர்.”

60 வயதாகும் காந்தாபாய்க்கு வயோதிகத்தால் கண்பார்வை மங்கி வந்தாலும், வருமானத்திற்காக துடைப்பங்களைச் செய்து வருகிறார். “இப்போது உங்களைக் கூட என்னால் நன்றாக பார்க்க முடியவில்லை,” என்று என்னிடம் கூறியபடி அவர் பழக்கத்தின் அடிப்படையில் துடைப்பங்களை கட்டுகிறார். “என் இரு மகன்கள் வேலைக்குச் செல்லவில்லை. என் கணவர் சில ஆடுகளை மேய்க்கிறார். எங்களது வாழ்வாதாரம் என்பது துடைப்பங்களையேச் சார்ந்துள்ளது.”

கண் பார்வையில் குறைபாடு உள்ளபோது எப்படி துடைப்பம் செய்கிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டபோது, அவர் சொல்கிறார், “இதை நான் வாழ்க்கை முழுவதும் செய்கிறேன். என் கண்பார்வை முற்றிலுமாக போனாலும் இதை செய்வேன்.”

Kantabai Bhutadmal (in pink saree) binds brooms despite her weak eyesight. Her family depends on the income she earns from selling them
PHOTO • Parth M.N.

காந்தாபாய் பூதாத்மால் (இளஞ்சிவப்பு புடவையில் உள்ளவர்) மோசமான கண் பார்வையிலும் துடைப்பங்களைக் கட்டுகிறார். அவர் செய்யும் விற்பனையை தான் அவரது குடும்பம் சார்ந்துள்ளது

துடைப்பங்களை விற்பதற்கு, மூடப்பட்ட சந்தைகள் மீண்டும் திறப்பதற்காக காந்தாபாய் காத்திருக்கிறார். புருஷோத்தமின் தற்கொலைக்குப் பிறகு தேநீர் கடையை நடத்தி வரும் பாபுராவிற்கு சந்தைகள் உதவும். “சந்தையிலிருந்து மக்கள் பொருட்களை வாங்கி திரும்பும்போது ஒரு கோப்பை தேநீருக்கு நிற்பார்கள், ” என்கிறார் அவர். “இப்போது என் குடும்பத்தை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். இதுவே என் பொறுப்பு.”

புருஷோத்தம், விஜய்மாலாவின் பதின்பருவ பிள்ளைகளான பிரியங்கா, விநாயக், வைஷ்ணவியை நினைத்து பாபுராவ் கவலை கொண்டுள்ளார். “எங்களால் எப்படி இரண்டு வேளை உணவு அளிக்க முடியும்?” என அவர் கேட்கிறார். “அவர்களால் எப்படி மேற்கொண்டு படிக்க முடியும்? அவன் ஏன் [புருஷோத்தம்] இப்படி பதற்றமடைந்தான்?”

புருஷோத்தம் இறந்த ஒரு வாரத்திற்குள் பாபுராவும், கங்குபாயும் காய்ச்சல் குறைந்து நலமடைந்துவிட்டனர். அவர்களின் மகன் அஞ்சியது போல அவர்கள் மருத்துவமனைக்குகூட செல்லவில்லை. பாதுகாப்பிற்காக கோவிட்-19 பரிசோதனை செய்தபோது பாபுராவ், கங்குபாய்க்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

சுதந்திர ஊடகவியலாளருக்கான புலிட்சர் மையத்தின் உதவித்தொகை  இக்கட்டுரையின் செய்தியாளரக்கு அளிக்கப்படுகிறது.

தமிழில்: சவிதா

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha