"என்னை வேலைக்கு அமர்த்த யாரும் தயாராக இல்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தேன் இருந்தும் அவர்கள் யாரும் நான் வீட்டுக்குள் நுழைவதை விரும்பவில்லை", என்று 68 வயதாகும் மகாராஷ்டிராவின் லத்தூர் நகரில் வீட்டு வேலை செய்துவரும் ஜெஹதாபி சையீத் கூறுகிறார். "நான் இந்த துணி முகக் கவசத்தை ஒருபோதும் கழட்டவில்லை மேலும் சமூக இடைவெளி என அனைத்து கட்டுப்பாட்டு விதிகளையும் முறையாக பின்பற்றி வருகிறேன்", என்று கூறினார்.

ஏப்ரல் 2020 கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஜெஹதாபி பணிபுரிந்து வந்த ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் அவரை வேலையிலிருந்து நிறுத்திவிட்டது. "எனக்கு ஒரே ஒரு வேலை தான் இருந்தது மேலும் அவர்களும் எனக்கு அதிக பணி சுமையை தந்தனர்", என்று கூறினார்.

ஜெஹதாபி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார் - பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது வீடு துடைப்பது போன்ற பணி செய்து வந்தார் கடந்த வருடம் அவை அனைத்தும் அவருக்கு கதவை அடைத்துவிட்டது. மார்ச் 2020 இல் தில்லியில் உள்ள தப்லிகி ஜமாத் மதச் சபை கோவிட் ஹாட்ஸ்பாட்டாக மாறிய காரணத்தால் தனது முதலாளிகள் தயங்குகின்றனர் என்று அவர் நம்பினார். "முஸ்லிம்களிடம் இருந்து விலகியிருங்கள் என்ற கிசுகிசு தீயைப் போல பரவியது", என்று அவர் நினைவு கூறுகிறார். "ஜமாத்தின் காரணமாக நான் வேலைகளை இழந்தேன் என்று எனது மருமகன் கூறினார். ஆனால் நான் எவ்வாறு அதனுடன் தொடர்பில் இருக்கிறேன்?", என்று கேட்டார்.

மாதத்திற்கு 5 ஆயிரம் சம்பாதித்து வந்தது போக இப்போது ஜெஹதாபியின் சம்பளம் ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. "என்னை வெளியேறச் சொன்ன குடும்பங்கள் என்னை ஒருபோதும் அழைக்க மாட்டார்களா?" என்று அவர் கேட்கிறார். "நான் அவர்களுக்காக பல வருடங்களாக உழைத்து வருகிறேன், திடீரென்று அவர்கள் என்னை அனுப்பிவிட்டு வேறு ஒரு பெண்ணை பணியில் அமர்த்திக் கொண்டனர்", என்று கூறுகிறார்.

கடந்த ஒரு வருடத்தில் அவரது நிலை மாறவே இல்லை. "அது மேலும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது", என்று கூறுகிறார் ஜெஹதாபி. 2021 மார்ச்சில் அவர் மூன்று வீடுகளில் பணிபுரிந்து மாதமொன்றுக்கு 3000 ரூபாய் சம்பாதித்து வந்தார். ஆனால் ஏப்ரல் மாதத்தில் கோவிட்-19ன் இரண்டாவது அலை பரவத் துவங்கிய போது அவரை இரண்டு முதலாளிகள் வேலையிலிருந்து நிறுத்திவிட்டனர். "நான் ஒரு சேரியில் வசிப்பதால் நாங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று அவர்கள் கூறினர்", என்றார்.

எனவே இப்போது தனது ஒரே முதலாளியிடம் இருந்து அவர் மாதம் ஒன்றுக்கு 700 ரூபாய் தான் சம்பாதித்து வருகிறார்.

Jehedabi Sayed has been a domestic worker for over 30 years
PHOTO • Ira Deulgaonkar

ஜெஹதாபி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார்.

லத்தூரின் வித்தல் நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் விதவையான ஜெஹதாபி கடந்த ஆண்டிலிருந்து நிலையான வருமானமின்றி போராடி வருகிறார். அவரது கணவர் பெயரில் இருக்கும் அவரது வீடு ஒரு அறை மற்றும் சமையலறை கொண்டதாக இருக்கிறது. மின்சார வசதியோ கழிப்பிட வசதியோ இல்லை. அவரது கணவர் சையீத் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நோயால் இறந்தார். "எனக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள். அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்கள் இறந்து விட்டனர். இளையவன் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறான். கடந்த 2012 ஆம் ஆண்டு அவனுக்கு திருமணம் முடித்து மும்பைக்கு சென்ற பிறகு நான் அவனை சந்திக்கவே இல்லை". அவரது மகள் சுல்தானா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வித்தல் நகருக்கு அருகில் வசித்து வருகிறார்.

"நாங்கள் எங்கு வசிக்கிறோம், எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் எல்லாமே ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. நாங்கள் எப்படி சம்பாதிப்பது, என்ன சாப்பிடுவது?இந்த நோய் மிகவும் பாரபட்சமானது", என்கிறார் ஜெஹதாபி.

ஜெஹதாபி போன்ற தனியாக வசிக்கும் மூத்த பெண்களுக்கு அது கடினமாக இருக்கிறது மற்றும் கௌசியா இனாம்தார் போன்ற விதவைப் பெண்களுக்கு அது மேலும் கடினமாக இருக்கிறது, அவரைச் சார்ந்து தான் அவரது 6-13 வயதுள்ள ஐந்து குழந்தைகளும் இருக்கின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஒஸ்மானாபாத் மாவட்டத்தின் சிவாரி கிராமத்தில் விவசாயக்கூலியாக பணிபுரிந்து வரும் 30 வயதாகும் கௌசியாவுக்கு கோவிட் 19இன் இரண்டாவது அலை காரணமாக போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வேலை கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 2020க்கு முன்பு, விவசாயக்கூலியாக பணியாற்றி நாளொன்றுக்கு 150 ரூபாய் சம்பாதித்து வந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் ஒஸ்மானாபாதின் துள்ஜாபூர் தாலுகாவிலுள்ள சிவாரி மற்றும் உமர்காவைச் சேர்ந்த பண்ணை முதலாளிகள் இவரை வாரத்திற்கு ஒருமுறைதான் வேலைக்கு அழைத்தனர். "இந்த நோய் (கோவிட் 19) எங்களை பல நாள் பட்டினி போட்டது. நான் எனது குழந்தைகளைக் குறித்து கவலையுற்றேன். ஒரு வாரத்திற்கு 150 ரூபாயை வைத்து எப்படி சமாளிப்பது?" என்று கேட்கிறார். உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் தந்த உணவுப் பொருட்கள் அந்த நாட்களில் அவருக்கு உதவியது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்ட பின்னரும் கௌசியாவால் வாரத்திற்கு சுமார் 200 ரூபாய் தான் சம்பாதிக்க முடிந்தது. இக்கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு வேலைகள் கனிசமாக கிடைக்கிறது என்று அவர் கூறுகிறார். எனது குடும்பத்தைச் சேர்ந்த பிற பெண்களுக்கும் வேலை கிடைப்பது சிரமமாகத் தான் இருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு ஜூன் ஜூலை மாதங்களில் எனது அம்மா இருக்கும் இடத்தில் சில பெண்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு வேலை கிடைத்தது. அதே அளவு முயற்சி செய்யும் எங்களுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை?", கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்காக ஒரு தையல் மெஷினை வாடகைக்கு எடுத்து சட்டையும் சேலைத் தலைப்பினையும் தைத்து வருகிறார் கௌசியா.

கௌசியாவிற்கு 16 வயதாக இருந்தபோது திருமணம் நடந்தது. அவரது கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நோயால் இறந்து விட்டார். அவரது மாமனார் மாமியார் இவரது கணவரின் மரணத்திற்கு இவரையே குற்றம்சாட்டினர் மேலும் குழந்தைகளுடன் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். கௌசியாவுக்கும் அவரது குழந்தைகளுக்கும் சிவாரியில் உள்ள அவரது கணவரின் சொத்தில் உரிமை தரப்படவில்லை. அவர் சிவாரியில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிற்கு அவரது குழந்கைகளை அழைத்துச் சென்றார். அங்கு வசிக்கும் அவரது சகோதரரால் மேலும் ஆறு நபர்களுக்கு ஆகும் செலவினை சமாளிக்க முடியவில்லை. அதனால் அவர் தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி கிராமத்தின் வெளியே உள்ள அவரது பெற்றோருக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் தற்காலிக கட்டமைப்பினை ஏற்படுத்தி வசித்து வருகிறார்.

"இங்கே மிகக் குறைவான வீடுகளே உள்ளன", என்று கூறுகிறார் கௌசியா. "இரவு நேரத்தில் எனது வீட்டிற்கு அடுத்து உள்ள பாரில் இருந்து குடிகாரர்கள் என்னை தொந்தரவு செய்திருக்கின்றனர். அவர்கள் எனது வீட்டிற்குள் நுழைந்து என்னை உடல் ரீதியாக துன்புறுத்தி இருக்கின்றனர். முதல் சில மாதங்களுக்கு அது மிகவும் கொடுமையாக இருந்தது ஆனால் எனக்கு வேறு வழியில்லை". அவருக்கு உதவ கிராமத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் முன்வந்த பின்னரே இந்த துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது.

Gausiya Inamdar and her children in Chivari. She works as a farm labourer and stitches saree blouses
PHOTO • Javed Sheikh

சிவாரியில் கௌசியா இமாம்தார் மற்றும் அவரது குழந்தைகள். விவசாயக்கூலியாக பணியாற்றி வரும் இவர் சேலைக்கான சட்டைகளையும் தைத்து வருகிறார்.

கௌசியாவிற்கு வாழ்வாதாரத்தை தேடுவதே இன்னமும் கடினமாகத்தான் இருக்கிறது. போதுமான அளவு தையல் வேலையும் கிடைப்பதில்லை -  இரண்டு வாரத்திற்கு ஒரு வாடிக்கையாளரே வருகின்றனர். கோவிடின் காரணமாக பெண்கள் யாரும் தைப்பதற்கு வருவதில்லை. இது மேலும் கடினமாக இருக்கிறது", என்று கூறினார். கொரோனா மற்றும் வேலையின்மை குறித்த இந்த பயத்தில் நாம் என்றென்றும் சிக்கிக்கொள்ள போகிறோமா?", என்று அவர் கேட்கிறார்.

ஏப்ரல் 2020இல் அசூபி லடாஃபின் மாமனார் மாமியார் அவரது நான்கு குழந்தைகளுடன் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். அவரது கணவர் இமாம் லடாஃப் இறந்த ஒரு நாள் கழித்து இது நடந்தது. "நாங்கள் உமர்காவில் இமாமின் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரரின் குடும்பத்துடன் ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தோம்", என்று அவர் கூறுகிறார்.

தினசரி கூலியான இமாம் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது குடிப்பழக்கம் காரணமாக அவரது சிறுநீரகங்கள் சேதம் அடைந்திருந்தன. எனவே கடந்த வருடம் பிப்ரவரி மாதம், 38 வயதாகும் அசூபி அவரை உமர்கா நகரில் விட்டுவிட்டு தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேலை தேடி புனேவிற்குச் சென்றார்.

அவர் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை தேடி மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்தார். ஆனால் கோவிட்-19 ஊரடங்கு துவங்கிய பின், 10- 14 வயதுள்ள தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த மாநகரை விட்டு வெளியேறி அவரது பெற்றோர் வசிக்கும் துள்ஜாபூர் வட்டத்திலுள்ள நல்துர்க் கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தார். அங்கு ஏதாவது வேலை கிடைக்கும் என்று அவர் நம்பினார். "நாங்கள் கடந்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி புனேவில் இருந்து நடக்க ஆரம்பித்தோம், கிட்டத்தட்ட 12 நாட்கள் நடந்து நல்துர்கை அடைந்தோம்", என்று கூறுகிறார் அசூபி. 300 கிலோ மீட்டர் தொலைவு. "வழியில் ஒரு வேளை சாப்பாடு கூட நாங்கள் ஒழுங்காக சாப்பிடவில்லை", என்று கூறினார்.

ஆனால் அவர்கள் நல்துர்கை அடைந்தபோது இமாமின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தனர். எனவே அசூபியும் அவரது குழந்தைகளும் நல்துர்கிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உமர்காவிற்கு நடக்கத் துவங்கினர். "நாங்கள் அங்கு சென்றடைந்த அன்று மாலை இமாம் இறந்தார்", என்று அவர் கூறுகிறார்.

ஏப்ரல் 12 அன்று இமாமின் பெற்றோரும் சகோதரரும் சுற்றத்தாரின் துணையோடு அசூபியையும் அவரது குழந்தைகளையும் வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். புனேவிலிருந்து இவர்கள் வந்திருப்பதால் அவர்களது உடல் நலத்திற்கு ஆபத்து என்று அவரது மாமனார் மாமியார் கூறினர். "நாங்கள் அன்று இரவு உள்ளூரில் உள்ள தர்காவில் தஞ்சம் புகுந்தோம், பின்னர் மீண்டும் நல்துர்கைகே திரும்பிவிட்டோம்", என்று கூறினார்.

அசூபியையும் அவரது குழந்தைகளையும் கவனிக்கும் நிலையில் அவரது பெற்றோர் இல்லை. "நானும் அவளது அப்பாவும் தினக்கூலிகள். எங்களுக்கு வேலை கிடைப்பதே கடினமாக இருக்கிறது. நாங்கள் சம்பாதிக்கும் பணம் எங்கள் இருவருக்குமே போதவில்லை. நாங்கள் உதவ முடியாத நிலையில் இருக்கிறோம்", என்று அசூபியின் தாயான நஸ்புனாபி தவலாசாப் கூறினார்.

Azubi Ladaph with two of her four children, in front of their rented room in Umarga
PHOTO • Narayan Goswami

அசூபி லடாஃப் தனது நான்கு குழந்தைகளில் இருவருடன், உமர்காவில் உள்ள வாடகை அறைக்கு முன்னால் நிற்கிறார்.

"எங்களது 5 பேரின் சுமையை எனது பெற்றோரின் மீது சுமத்தி தொந்தரவு செய்ய விரும்பவில்லை", என்று கூறினார் அசூபி. எனவே நவம்பரில் அவர் மீண்டும் உமர்கா நகரத்திற்கு திரும்பிச் சென்றார். "மாதம் ஒன்றுக்கு 700 ரூபாய் வாடகைக்கு ஒரு அறையில் நான் தங்கி இருக்கிறேன். நான் பாத்திரம் கழுவி, துணி துவைத்து மாதமொன்றுக்கு 3,000 ரூபாய் சம்பாதித்து வருகிறேன்", என்று கூறினார்.

அவரது மாமனார் மாமியார் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பிறகு உள்ளூர் செய்தித்தாள்கள் அசூபியின் கதையை பிரசுரித்தனர். "நான் பேசக் கூடிய நிலையில் இல்லை. அது எவ்வளவு வலி நிறைந்தது என்று என்னால் கூற முடியவில்லை", என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் என்னை நல்துர்கில் இருக்கும் எனது அம்மாவின் இடத்தில் வந்து சந்தித்தனர் மேலும் அவர்கள் பண உதவி அளிப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இன்று வரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை", என்று கூறினார்.

அசூபியிடமோ, கௌசியாவிடமோ அல்லது ஜெஹதாபியிடமோ ரேசன் அட்டை இல்லை. மத்திய அரசின் ஜன்தான் திட்டத்தின் கீழ் அவர்களிடம் வங்கிக் கணக்கும் இல்லை. ஜன்தான் வங்கி கணக்கு இருந்திருந்தால் ஊரடங்கு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் (2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை) மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் அவர்கள் பெற்றிருப்பர். "என்னால் வங்கிக்குச் சென்று அங்கு அதிக நேரம் செலவிட முடியாது", அங்கும் தனக்கு உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்று ஜெஹதாபி கூறுகிறார். அவரது வீட்டிலிருந்து வங்கி 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கௌசியா மகாராஷ்டிரா அரசாங்கத்தின் சஞ்சய்காந்தி நிராதார ஓய்வூதியத் திட்டத்திற்கு தகுதியுடையவர் இத்திட்டத்தின் மூலம் விதவைப் பெண்கள், தனித்து வசிக்கும் பெண்கள் மற்றும் அனாதைகள் நிதியுதவி பெற்று வருகின்றனர். இதன் மூலம் ஓய்வூதியமாக மாதத்திற்கு 900 ரூபாய் கிடைக்கும், ஆனால் அது வரும்போது மட்டுமே கிடைக்கும் - 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை அவர் அதை பெறவில்லை. "ஊரடங்கு காலத்தில் அது என் சுமையை குறைத்திருக்கும்", என்று அவர் கூறுகிறார். பின்னர் அது எப்போதாவது அவருக்கு வழங்கப்பட்டது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பின்னர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டது.

சமூக விலக்கு மற்றும் நிதியுதவி இல்லாதது ஜெஹதாபி மற்றும் பிற தனித்து வாழும் பெண்களுக்கு உயிர் வாழ்வதை அது சவாலாக ஆக்குகிறது. "அவர்களுக்கு நிலமும் இல்லை, வீடு இல்லை அவர்களால் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்வது கூட செலவுச் சுமையை மேலும் அதிகரிக்கிறது. அவர்களிடம் சேமிப்பு இல்லை. ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட வேலையின்மை இத்தகைய குடும்பங்களை பசியில் ஆழ்த்தியது", என்று ஒஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள அந்தூரைச் சேர்ந்த HALO மருத்துவ அறக்கட்டளையின் தலைவரான டாக்டர் சசிகாந்த் அன்காரி கூறினார். இந்த அமைப்பு கிராமப்புற சுகாதார சேவையை வலுப்படுத்த செயல்பட்டு வருகிறது மற்றும் மராத்வாடாவிலுள்ள தனித்து வசிக்கும் பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வருகிறது.

கோவிட்-19 இன் புதிய அலை இப்பெண்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. "எனக்கு திருமணம் ஆனதிலிருந்து பணம் சம்பாதிப்பதும், குழந்தைகளுக்கு உணவளிப்பதும் போராட்டமாக தான் இருந்து வருகிறது. ஆனால் இந்தப் பெருந்தொற்று காலம் தான் எனது வாழ்வின் மிகவும் மோசமான காலகட்டம்", என்று ஜெஹதாபி கூறுகிறார். ஊரடங்கு இதனை மேலும் மோசமாகிறது என்று கூறுகிறார் கௌசியா. "இந்த நோயினால் அல்ல, ஆனால் ஊரடங்கு காலத்தில் எங்களது அன்றாட போராட்டமே எங்களை கொன்றுவிடும்", என்று கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Ira Deulgaonkar

Ira Deulgaonkar is a 2020 PARI intern. She is a Bachelor of Economics student at Symbiosis School of Economics, Pune.

Other stories by Ira Deulgaonkar
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose