மகள் இறந்த ஐந்து வருடங்களில் கண்டா பிஸேவின் கோபம் அவரை திடமாக பேச வைத்திருக்கிறது. “என் குழந்தை வறுமையால் இறந்தாள்,” என்கிறார் கண்டா. அவரின் மகள் மோகினி பிஸே 2016ம் ஆண்டின் ஜனவரி 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இறந்தபோது மோகினிக்கு 18 வயது. 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். “12ம் வகுப்புக்கு மேல் அவளை படிக்க வைக்க வசதி இல்லை. எனவே திருமணம் செய்து கொடுக்க வரன் தேட ஆரம்பித்தோம்,” என்கிறார் 42 வயது கண்டா. மகாராஷ்டிராவின் லதூர் மாவட்டத்திலுள்ள வகோலி கிராமத்தை சேர்ந்தவர்.

திருமணம் என்றால் செலவு. கண்டாவும் அவரது கணவரான 45 வயது பாண்டுரங்கும் கவலைப்பட்டனர். “என்னுடைய கணவரும் நானும் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்க்கிறோம். மோகினியின் திருமணத்துக்கு தேவையான பணத்தை சேர்க்க முடியாது என நினைத்தோம். அச்சமயத்தில் வரதட்சணை 1 லட்சம் ரூபாயாக இருந்தது.”

ஏற்கனவே 5 சதவிகித வட்டிக்கு ஒரு வட்டிக்கடையில் வாங்கிய 2.5 லட்சம் கடனுக்கு மாதந்தோறும் இருவரும் பணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். 2013ம் ஆண்டு மூத்த மகள் அஸ்வினிக்கு நடந்த திருமணத்துக்காக வாங்கப்பட்ட கடன் அது. மோகினியின் திருமணத்துக்கு நிலத்தை விற்பதை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை. நிலம் 2 லட்ச ரூபாய் மதிப்பு கொண்டது.

பிஸே வகோலியில் இருக்கும் அவர்களது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யவில்லை. “நீராதாரம் கிடையாது. எங்கள் பகுதியில் எப்போதும் பஞ்சம்தான்,” என்கிறார் கண்டா. 2016ம் ஆண்டில் பிறரின் நிலங்களில் வேலை பார்த்து கண்டா 150 ரூபாயும் பாண்டுரங்க் 300 ரூபாயும் நாட்கூலியாக சம்பாதித்தனர். இருவரும் மாதத்துக்கு 2000 முதல் 2400 ரூபாய் வரை சம்பாதித்தனர்.

காணொளி: ‘என் குழந்தை வறுமையால் இறந்தது’

ஓரிரவில், நிலம் விற்பதை பற்றி கண்டாவும் பாண்டுரங்கும் பேசிக் கொண்டிருந்தது மோகினிக்கு கேட்டது. சில நாட்களில் அவர் தற்கொலை செய்து கொண்டார். “நிலத்தில் நாங்கள் வேலை பார்க்கச் சென்ற சமயத்தில் மோகினி தூக்கிட்டு இறந்து போனாள்,” என்கிறார் கண்டா.

தற்கொலை கடிதத்தில், ஏற்கனவே கடனில் இருக்கும் தந்தையை திருமணச் செலவு என்னும் சுமையிலிருந்து காப்பாற்ற விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். வரதட்சணைக்கு எதிராகவும் எழுதி, அம்முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டிருந்தார். மேலும் தன் இறுதிச்சடங்குக்கென எந்த செலவும் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டிருந்த மோகினி, அப்பணத்தை கொண்டு 7 மற்றும் 9ம் வகுப்புகள் படிக்கும் சகோதரிகளான நிகிதா மற்றும் அனிகெட் ஆகியோரின் கல்விக்கு செலவு செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் மரணத்துக்கு பிறகு பல அரசியல் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் பிரபலங்களும் காண வந்ததாக சொல்கிறார் கண்டா. “அவர்கள் அனைவரும் எங்களின் குழந்தைகளின் கல்வியை பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தனர். விரைவிலேயே எங்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் (பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா) வீடு கிடைக்கும் என அரசு அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.”  பாண்டுரங் சொல்கையில், “வீடு மட்டுமின்றி மின்சார இணைப்பும் எரிவாயு இணைப்பும் கூட அரசு திட்டங்களின் கீழ் கிடைக்கும் என்றார்கள். இப்போது வரை எதுவும் கிடைக்கவில்லை,” என்கிறார்.

பிஸே வகோலியில் இருக்கும் அவர்களின் மண் வீடு, இடைவெளிகளுடன் செங்கற்களை வைத்து கட்டப்பட்டிருந்தது. “சரியான தரை கிடையாது. பாம்புகளும் பச்சோந்திகளும் அடிக்கடி வீட்டுக்குள் நுழைந்துவிடும். எங்கள் குழந்தைகள் தூங்குவதற்காக நாங்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருப்போம்,” என்கிறார் கண்டா. “எங்களை பார்க்க வந்த அனைவரையும் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது எவரும் பேசக் கூட இல்லை.”

Mohini Bhise was only 18 when she died by suicide
PHOTO • Ira Deulgaonkar

மோகினி பிஸே தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு 18 வயதுதான்

தற்கொலை கடிதத்தில், ஏற்கனவே கடனில் இருக்கும் தந்தையை திருமணச் செலவு என்னும் சுமையிலிருந்து காப்பாற்ற விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். வரதட்சணைக்கு எதிராகவும் எழுதி, அம்முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டிருந்தார்

அவர்களின் அன்றாட வாழ்க்கை இன்னும் போராட்டமாகதான் இருக்கிறது. “எங்களின் தினசரி துன்பங்களை விளக்கிட முடியாது. எல்லா பக்கங்களிலிருந்தும் நாங்கள் முற்றுகையிடப்பட்டிருக்கிறோம்,” என்கிறார் கண்டா. பஞ்சத்தினால் 2016ம் ஆண்டிலிருந்து கிராமத்திலும் அவர்களுக்கு பெரிய அளவில் வேலைகள் கிடைப்பதில்லை. “அன்றாடக் கூலியின் அளவு, 2014ம் ஆண்டிலிருந்து அப்படியேதான் இருக்கிறது. ஆனால் விலைவாசி அப்படியே இருக்கிறதா?”

குறைவான வருமானத்திலிருந்து 600 ரூபாயை தனக்கு இருக்கும் சர்க்கரை நோய் மருந்துகளுக்கென மாதந்தோறும் கண்டா ஒதுக்க வேண்டும். 2017ம் ஆண்டிலிருந்து கண்டாவும் பாண்டுரங்கும் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். “ஏன் அரசாங்கம் எங்களின் ஆரோக்கியத்தை பற்றி பொருட்படுத்துவதில்லை?” என கோபத்துடன் கேட்கிறார் கண்டா. “சாதாரண காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு கூட 90 ரூபாய் ஆகி விடுகிறது. எங்களை போன்ற மக்களுக்கு சலுகை அளிக்கக்கூடாதா?”

நியாயவிலைக்கடைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களின் தரமும் குறைவாக இருப்பதாக அவர் சொல்கிறார். “எங்களுக்கு (குடும்ப அட்டைதாரர்கள்) கொடுக்கப்படும் கோதுமையும் அரிசியும் தரம் குறைந்தவையாக இருக்கின்றன. பலர் அவற்றை சந்தையில்தான் வாங்குகிறார்கள். வசதியில்லாத எங்களை போன்ற மக்கள் என்ன செய்வார்கள்?” மக்கள் நலத் திட்டங்கள் மக்களுக்கு எட்டும் தூரத்தில் இல்லை அல்லது எட்டும் தூரத்தில் இருக்கும்போது அவர்கள் மக்களுக்கு உதவுவதில்லை என சொல்லி முடிக்கிறார்.

பஞ்சம் பீடித்துள்ள மராத்வடாவில் இருக்கும் லதூர் பகுதி மக்களுக்கு எல்லா உதவிகளும் தேவைப்படுகிறது. பல வருட விவசாய நெருக்கடி அம்மக்களை கடனுக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளியிருக்கிறது. நிவாரணங்கள் அவர்களின் சிரமங்களை போக்கவில்லை. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மோகினி தற்கொலை செய்வதற்கு முன் 2015ம் ஆண்டில் 1133 விவசாயிகள் மராத்வடாவில் தற்கொலை செய்திருந்தனர். 2020ம் ஆண்டில் 693 தற்கொலைகள் பதிவாகி இருக்கின்றன.

எதிர்காலத்தை பற்றி பெரிய நம்பிக்கை கண்டாவுக்கு இல்லை. “எங்களின் வாழ்க்கைகள் நல்லபடியாக மாறும் என்கிற நம்பிக்கையில் எங்களின் மகள் உயிர் துறந்தாள். ஆனால் மராத்வடா விவசாயிகளான எங்களுக்கு எப்போதுமே விடிவுகாலம் இல்லை என்பதை அவளிடம் எப்படி சொல்வது?”

தமிழில் : ராஜசங்கீதன்

Ira Deulgaonkar

Ira Deulgaonkar is a 2020 PARI intern. She is a Bachelor of Economics student at Symbiosis School of Economics, Pune.

Other stories by Ira Deulgaonkar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan