இரண்டு வயது சிறுவன் அலெல்,  இரண்டாம் ஜான் பால்  தெருவில் உள்ள வீட்டின் முன்பக்கத்தில்  நின்று கொண்டு அந்த வழியாக வருபவர்களை புன்னகையோடு மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்.  அடுத்து வருபவர் தனது அப்பா யேசுதாஸாக இருக்கலாம் என்று அவன் நம்புகிறான்.

அந்தத் தெருவில் சில வீடுகளில் பளபளக்கும் விளக்குகளோடு நட்சத்திரங்கள் அலங்காரமாக தொங்குகின்றன. ஆனால், அஜிகுட்டன் (அலெலுக்கு வீட்டில் அதுதான் செல்லப் பெயர்) இருளில் நிற்கிறான்.  33 வயதான அவனது அம்மா அஜிதா , பல நாட்களாக  படுக்கையில் அழுதுகொண்டிருக்கிறார். அஜிகுட்டன் அவ்வப்போது அம்மாவோடு இருப்பான். பின்னர் திரும்பவும் வீட்டின் முன்பக்கத்துக்கு திரும்புவான்.

2017ஆம் ஆண்டின்  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சற்று முன்னதாக அது நடந்தது. புது உடைகளையும் ஒரு கேக்கையும் வாங்கிக்கொண்டு,  கிறிஸ்மஸ் அன்று அப்பா வருவார் என்று அந்த சின்னப் பையனுக்கு அம்மா உறுதியளித்தார். ஆனால், அலெலின் அப்பா  இன்னமும் வீடு திரும்பவில்லை.

நவம்பர் 30 ம் தேதி சூறாவளி தாக்கியபோது, கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நயாட்டின்கரா தாலுகாவின் கரோட் கிராமத்திலிருந்து புறப்பட்ட மீனவர்களில், 38 வயதான யேசுதாஸ் ஷிமயோனும் ஒருவர். நவம்பர் 29 அன்று மாலையில்  அவர் கடலுக்குச் சென்றார். அவரோடு நான்கு பேர்களும் சென்றார்கள். அவர்களில் ஒருவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் அலெக்சாண்டர் பொதிதாம்பி (வயது 28).   மற்ற மூன்று பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அலெக்ஸாண்டருக்கும்  அவரது 21 வயதான மனைவி ஜாஸ்மின் ஜானுக்கும்  ஆஷ்மி அலெக்ஸ் என்ற பெயரில் 10 மாத பெண் குழந்தை உள்ளது.

A young boy sitting on a chair and holding a framed photograph of his family
PHOTO • Jisha Elizabeth
Woman sitting on sofa holding her sleeping child
PHOTO • Jisha Elizabeth

இரண்டு வயதான அஜிகுட்டன் (இடது) அப்பாவை இழந்துவிட்டான். ஜாஸ்மின் (வலது) கணவரை இழந்துவிட்டார். நவம்பர் 29 அன்று கடலுக்குள் போன அவர்கள் இருவரும் திரும்பவில்லை

வழக்கமாக 6 - 7 நாட்கள் மீன் பிடித்த பிறகு அவர்கள் கரைக்கு திரும்புவார்கள். பின்னர் அவர்கள் பிடித்த மீன்களை ஏலம் விட்டுவிட்டு மறுநாள் கடலுக்குச் செல்வார்கள். அது அவர்களின் வழக்கம். ஆனால், ‘ஸ்டார்’ எனும் பெயர் கொண்ட அவர்களது படகு பற்றி  இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. சுமார் 32,000 பேர் குடியிருக்கும் ஒரு பெரிய கிராமமான கரோட்டில் உள்ள போஜியூர் குக்கிராமத்திலிருந்து போன மீனவர்களில் குறைந்தபட்சமாக 13 பேரைக் காணவில்லை.

கேரளாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அன்று மாலை கடலுக்குச் சென்றிருந்தனர். வரவிருக்கும் சூறாவளி குறித்து எந்தவொரு அரசாங்க நிறுவனமும் முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்கின்றன காணாமல் போனவர்களின் குடும்பங்கள்.

மாபல் ஆடிமாவின் கணவர் 45 வயதான ஷிலுவும் அவர்களின் 18 வயதான மகன் மனோஜும்  காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர். அவர்களும் அந்த நாளில் புறப்பட்டவர்தான்.  இருவரும் எப்போதும் ஒன்றாக வல்லர்பதாதம்மா என்ற படகில் செல்வார்கள். அதில் ஒரு வயர்லெஸ் செட் இருந்தது. அந்தப் படகின் உரிமையாளர் கரோட் கிராமத்தின் பருத்தியூர் குக்கிராமத்தைச் சேர்ந்த கெஜின் போஸ்கோ என்பவர். கடல் மிகவும் மோசமான வானிலையில் இருப்பதாக  நவம்பர் 30 ஆம் தேதி அவருக்கு செய்திகள் வந்தன. அதன் பிறகு அந்த வயர்லெஸ் சிக்னல் கிடைக்கவில்லை.

காணாமல் போனவர்களைத் தேடிப்போன தேடல் குழுக்கள்,  ஷிலுவோடும் மனோஜுடனும் போன இரண்டுபேரின்  இறந்த உடல்களை படகில் கண்டன;  மற்ற உடல்கள் தண்ணீரில் மிதப்பதை அவர்கள் கண்டார்கள்.  ஆனால், கடினமான அலைகள் காரணமாக அவற்றை மீட்க முடியவில்லை. "நாங்கள் படகு, வலைகள் மற்றும் கடலில் இருந்த அனைத்து உபகரணங்களையும் இழந்தோம்" என்று போஸ்கோ கூறுகிறார். "மொத்த இழப்பு 25 லட்சம் ரூபாய். மீட்புக் குழுவால் படகை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. அதை விட பெரிய சோகம் நாங்கள் எங்கள் நண்பர்களை இழந்ததுதான். அவர்களின் குடும்பங்களின் இழப்பை கணக்கிட முடியாது” என்கிறார் அவர்.

Woman sitting on the floor holding a framed photograph of her husband and son
PHOTO • Jisha Elizabeth

மேபல் அதிமாவின் கணவர், மகன் இருவருமே மீனவர்கள். கடலுக்குச் சென்ற அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

மேபலுக்கு 10 ஆம் வகுப்பில் படிக்கிற 15 வயது மகள்  பிரின்சி இருக்கிறார்.. கணவனும் மகனும் காணாமல் போய்விட்ட கவலை ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது பிரின்சியின் கல்வியைப் பற்றியும் வீடு கட்டுவதற்காக வாங்கிய 4 லட்சம் கடனை எப்படி அடைப்பது என்பதைப் பற்றிய கவலை கூடுதலாகி இருக்கிறது.

அரபிக் கடலில் உருவான தீவிர வெப்பமண்டல சூறாவளியான ஒக்கி நவம்பர் 29 அன்று இலங்கையைத் தாக்கியது. நவம்பர் 30 ஆம் தேதி நண்பகலில் கேரளாவின் கரையோரங்களையும் தமிழ்நாட்டையும் தாக்கியது. குறிப்பாக, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அது கடுமையாக தாக்கியது. கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில்  கொல்லம், ஆலப்புழா மற்றும் மலப்புரம் மாவட்டங்களையும் அது பாதித்தது.

" அலையைப் பார்த்து  நான் இப்போது பயப்படுகிறேன். மீண்டும் கடலுக்குச் செல்ல என்னால் முடியாது ” என்கிறார் 65 வயதான கிளெமென்ட் பஞ்சிலாஸ்.  அவரது முகம் வெளுத்துப்போயிருக்கிறது. திருவனந்தபுரம் தாலுகாவிலுள்ள முத்ததாரா கிராமத்தைச் சேர்ந்த பூந்துரா குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கிளெமென்ட் என்ற இந்த மீனவர்.  12 வயதிலிருந்தே படகுகளில் கடலுக்குள் போய் வந்துள்ளார் அவர். நவம்பர் 29 அன்று மாலை 3 மணிக்கு மற்ற இருவருடன் கடலுக்குச் சென்றார் அவர். இரவு அமைதியாக இருந்த்து என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், மறுநாள் அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கரைக்குத் திரும்பும்போது, ​​வானிலை மோசமடைந்தது.  ஆவேசமான காற்று அடித்தது.  அவர்களின் படகைத் திருப்பி போட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் இது பற்றி கிளெமென்ட் விளக்கினார். அவர் படகில் இருந்த ஒரு கயிற்றையும் ஒரு ஜெர்ரி கேனையும்  எடுத்து, தனது உடம்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டார். கடலில் மூழ்கிவிடாமல் மிதக்க வேண்டும் என்பதற்காக அதைச் செய்துகொண்டார். பிரம்மாண்டமான அலைகள் அவரை அடித்து புரட்டினாலும், பலத்த மழை பெய்தாலும் அவற்றை மீறி அவர் கடலில் சுமார் ஆறு மணி நேரம் உயிர் தப்பினார். பின்னர் மற்றொரு படகு வந்து அவரைக் காப்பாற்றியது.

காணாமல் போனவர்களை கிறிஸ்துமஸுக்கு முன்பே கொண்டுவந்து சேர்த்துவிடுவோம் என்று சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு பிரதமரும் கேரளாவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜே. மெர்சிகுட்டி அம்மாவும் உறுதியளித்தனர். இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கைகளில்  800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 27 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்களில் 453 பேர் தமிழ்நாட்டினர். 362 பேர் கேரளத்தினர். 30 பேர் லட்சத்தீவு மற்றும் மினிகோய் தீவுகளைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை, அரசாங்கத்தின்  நிறுவனங்கள் கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்தி விட்டன. இதற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபிறகு, ​​டிசம்பர் 25 - க்குப் பிறகு மீண்டும் தேடல் தொடங்கப்பட்டது. அது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 143 பேர் காணவில்லை என்கிறது கேரள மாநில அரசு. 261 பேரை காணவில்லை என்கிறது மத்திய அரசு. திருவனந்தபுரத்தின் லத்தீன் பேராயர் 243 பேர்களின் விவரங்களை சேகரித்துள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 440 பேரை இன்னும் காணவில்லை.

People holding candles at Christmas
PHOTO • Jisha Elizabeth

காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட கேரளாவின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில் சோகம் தோய்ந்த ஒரு கிறிஸ்துமஸ் மாலை நேரத்தில் ஒன்றுகூடினர்

" ஒக்கிப் புயலுக்குப் பிறகு, தேசிய மீன் தொழிலாளர் மன்றம் மற்றும் கேரள சுதந்திர மீன் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவை மத்திய அரசு அமைத்த பேரிடர் மேலாண்மை குழுவுக்கு, கோரிக்கைப் பட்டியலை வழங்கியுள்ளன. துயரமடைந்த குடும்பங்களுக்கு நிதி உதவியும்  ஆதரவும் தரவேண்டும்;  உபகரணங்களை இழந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வேண்டும்; அனைத்து ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களுக்கும், உரிமம் பெற்ற செயற்கைக்கோள் வயர்லெஸ் செட்டுகளையும் செயற்கைக்கோள் ரேடியோக்களையும் விநியோகிக்க வேண்டும்; ஆழ்கடலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும் உயிர் காக்கும் பாதுகாப்பு கருவிகளையும் கடலுக்குள் செயல்படுவதற்கான கருவிகளையும் தரவேண்டும்; கேரளா மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் கடல் ஆம்புலன்ஸ்கள் தேவை;  பேரழிவில் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு தொடர்பான முடிவுகளில் மீன் தொழிலாளர்களின் பங்கேற்பு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இருந்தன.

டிசம்பர் 2004 சுனாமிக்குப் பிறகு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.  நிதிகள் திறமையற்ற முறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் பயன்படுத்தப்பட்டன. அதனால், ஒக்கிப் புயல் நிவாரண நிதியின் ஒரு பகுதியாக கேரளா, தமிழ்நாடு மாநிலங்களின் பாதிக்கப்பட்ட மீன்பிடி கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அதற்கு மட்டுமே  பயன்படுத்தப்பட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வந்து கரோடில் உள்ள யேசுதாஸின் குடும்பத்தினரையும் மற்ற குடும்பங்களையும் சந்தித்துள்ளனர். அவர்களுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர். அஜிக்குட்டனின் 12 வயதான சகோதரி அலியா,  சகோதரன் 9 வயதான ஆலன் ஆகியோரின் படிப்புக்கு உதவுவதாகவும் முன்வந்துள்ளனர்.

அவரும் மற்ற மீனவர்களும் பாதுகாப்பாக எங்காவது ஒரு கரையை அடைந்திருக்கலாம் என்று யேசுதாஸின் குடும்பத்தினர் இன்னும் நம்புகிறார்கள். மேலும் அவர் விரைவில் வீட்டிற்கு வருவார் அல்லது அவர்களுக்கு போன் செய்வார் என்றும் எதிர்பார்க்கின்றனர். "அவர் 15 வயதிலிருந்தே கடலுக்குச் சென்று வருகிறார்" என்று அவரது சகோதரி தாடியஸ் மேரி கூறுகிறார். “அவர் மிகவும் துடிப்பானவர். அவருக்கு பல மொழிகள் தெரியும். அவர் திரும்பி வருவார் " என்கிறார் அவர்.

ஆனால், தேடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக டிசம்பர் 23 அன்று அரசாங்கம் அறிவித்தபோது, ​​சமுதாயப் பெரியவர்கள் அஜிதாவுக்கு தனது கணவரின் கடைசிச் சடங்குகளை செய்ய அறிவுறுத்தினர். தயக்கத்துடன் அவர் ஒப்புக்கொண்டாள். அவரது சடங்குகள்  கிராமத்தில் காணாமல் போன மற்ற மீனவர்களுடன் சேர்ந்து, உள்ளூர் செயின்ட் மேரி மாக்டலீன் தேவாலயத்தில் நடந்தது.

ஆனாலும் அந்தக் குடும்பம் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளது. "நாங்கள் காத்திருக்கிறோம்," என்று ததீயஸ் மேரி கூறுகிறார். "நாங்கள் இன்னும் சில நாட்கள் அவருக்காக காத்திருப்போம்."

இந்த செய்திக் கட்டுரையின் இன்னொரு வடிவம் டிசம்பர் 24, 2017 அன்று மாத்யமம் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

தமிழில் த நீதிராஜன்

Jisha Elizabeth

Jisha Elizabeth is a Thiruvananthapuram-based sub-editor/correspondent at the Malayalam daily ‘Madhyamam’. She has received several awards, including the Kerala government’s Dr. Ambedkar Media Award in 2009, the Leela Menon Woman Journalist Award from the Ernakulam Press Club, and the National Foundation for India fellowship in 2012. Jisha is an elected executive member of the Kerala Union of Working Journalists.

Other stories by Jisha Elizabeth
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan