“சப் மச் சேஸ் (எலலா மீனும் போச்சு)” என்று துண்டு துண்டாக வங்காள மொழியில் பேசுகிறார் முரளி. சிரித்துக்கொண்டுதான் பேசுகிறார். ஆனாலும் அந்தச் சிரிப்பில் வேதனை கலந்திருக்கிறது. “சோப் கிச்சு டிப்ரெண்ட் (எல்லாம் மாறிப்போச்சு)” என்றும் சொல்கிறார். ஜல்தா கிராமம் பக்கத்தில் இருக்கிற ராம்நகர் மீன் மார்க்கெட்டில்தான் நாங்கள் இரண்டு வருஷம் முன்னால் சந்தித்தோம். வங்காள விரிகுடா கடலில் உள்ள மீன்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பதை முரளி அறிந்திருக்கிறார்.

அவர் நடுக்கடலில் இருக்கிற ‘காலொ ஜோன்’ (காலனின் மண்டலம்) பற்றி பேசுகிறார். இந்தப் பெருங்கடலில் ஏறத்தாழ 60 ஆயிரம் சதுரகிலோமீட்டர்களுக்கு ஒரு ‘ மரண மண்டலம்’ பரவிக்கிடக்கிறது அது வளர்ந்தும் வருகிறது என்று 2017ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் அறிவித்தார்கள். அந்தப் பகுதியில் ரொம்பக் கொஞ்சமாகத்தான் ஆக்ஸிஜன் இருக்கிறது. நைட்ரஜன் குறைந்துவிட்டது. அதுமட்டும் அல்ல, கடல்சார் உயிரினங்களே ஏறத்தாழ இல்லை என்ற அளவுக்குப் போய்விட்டது. கடலில் இயல்பாக ஏற்படுகிற மாற்றங்கள், மனிதர்கள் கடலில் செய்கிற செயல்பாடுகள் ஆகியவற்றின் விளைவுதான் இத்தகைய நிலைமை என்கின்றன இதுபற்றிய ஆய்வறிக்கைகள்.

முரளியின் அப்பா பெயர் எனக்குத் தெரியவில்லை. அவர் பெஸ்தா மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தப் பாளையம் எனும் கிராமத்தில் வளர்ந்தவர். அக்டோபர் - மார்ச் மீன் பருவக் காலத்தில் வங்கக் கடலோரத்தில் உள்ள மாவட்டமான புர்பா மித்னாப்பூரின் ஜால்தா கிராமத்துக்கு அவர் கடந்த 20 வருடங்களாக வந்துபோகிறார். இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சம் வங்க மொழி கற்றுள்ளார். அதை இந்தியோடு கலந்து பேசுகிறார். அவரது பேச்சில் கொஞ்சம் ஆங்கிலமும் கலந்திருக்கிறது.

இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் கடலோரங்களில் உள்ள துறைமுகங்களில் நிறைய நண்பர்களையும் குடும்ப உறவினர்களையும் கொண்டிருப்பதில் முரளிக்கு பெருமிதம். “ யாழ்ப்பாணம் முதலாக ஜம்புத் தீவு வரை எல்லாருமே ஒரு குடும்பம்தான்” என்று கொண்டாட்டமாக ஜம்பம் அடிப்பார் அவர். ஜம்புத் தீவு என்பது வங்கக் கடலில் உள்ள ஒரு தீவு. எல்லா விவரங்களையும் அவர் எனக்குச் சொல்ல மாட்டார் ஆனால் அவரது நண்பர் ஸ்வபன் தாஸை எனக்கு அறிமுகப்படுத்தினார். “ ஐ அமார் பாய் (இவர் எனது சகோதரர்)” அவருக்கு 40 வயது இருக்கும்.
Murali
PHOTO • Neha Simlai
An owner-captain of a modified fishing boat, Sobahan Shordaar guides his boat FB Manikjaan through the waters of coastal Bangladesh
PHOTO • Neha Simlai

இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கம் முதலாகவே இந்தப் பகுதியில் மீன் பிடிப்பது என்பது சிரமமாக மாறிவந்திருக்கிறது . அவரும் மற்றவர்களும் மீன் பருவ காலங்களில் மீன் பிடி படகுகளில் வேலை தேடியிருக்கிறார்கள் . தற்போது அவர் இருப்பதும் சொபாகன் சோர்தார் என்பவருக்குச் சொந்தமான படகுதான் .

35 வயதான ஸ்வபானும் நன்றாக ஊர் சுற்றியிருக்கிறார். இடம் பெயர்ந்து வந்து இந்த மீன் மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கு மத்தியில் இவர்கள் இரண்டு பேரும் இருக்கிறார்கள். மீன் பிடி படகுகளில் தினக்கூலிகளாகவும் சாப்பாட்டுக்காகவும் அவர்கள் வேலை செய்கிறார்கள். அக்டோபர் மாதம் முதலாக மார்ச் வரையிலான மீன் பருவக்காலத்தில் அவர்கள் மாதம் மூவாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிப்பார்கள். அவர்களுக்குக் கிடைக்கிற மீனைப் பொறுத்தது அது.

நாங்கள் மூன்று பேரும் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் அப்சகாளி கிராமத்தை நோக்கி மெதுவாக போனோம். முதலில் ஒரு பஸ்சில். பிறகு ஒரு படகில். போகிற வழியில் ஜம்புத் தீவில் இறங்கினோம்.( இதை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜம்மு தீவு என்பார்கள்)  அப்சகாளி கிராமத்துக்குப் போய் புகழ்பெற்ற சிவப்பு நண்டுகளைப் பார்க்க நான் போனேன். அவற்றைப் பற்றி நான் ஆய்வு செய்துவருகிறேன். சாகர் தீவும், ப்ராசெர்குன்ஞ் தீவும், ஜம்புத் தீவும் வரிசையாக அடுத்தடுத்து உள்ளன. ஜம்புத் தீவு வருடத்தில் பாதிநாட்களில் ஒற்றை ஆள் கூட அங்கே நடமாடாத தீவு. அக்டோபர் முதல் மார்ச் வரை அது மீன் பிடிக்கிற முகாமாக மாறும். இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கிற மீன்பிடித் தொழிலாளர்களின் அங்கே தங்குவார்கள். ஸ்வாபான் எப்போது வீட்டுக்குப் போவீர்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “ இது என் வீடுதான்” என்று சொன்னார்.

மீன் பருவகாலத்தையும் மீன் பிடித் தொழிலாளர்களின் தற்காலிக வீடுகளையும் உள்ளூரில் சபர் என்கிறார்கள். வேறு வேறு இடங்களுக்கு மாறி மாறிப் போய் மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஜம்புத் தீவு போன்ற தீவுகளில் தற்காலிக கிராமங்களை உருவாக்கித் தங்குவது நீண்டகால வழக்கம்.   ஒவ்வொரு கிராமத்திலும் பல குந்திகள் எனப்படும் பகுதிகள் உண்டு. 10 படகுகள் வரை வைத்திருக்கும் உரிமையாளரும் அந்தப் பகுதிகளில் இருப்பார். எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஒருவரையொருவர் தெரிந்தவர்களாக இருப்பார்கள். பக்கத்தில் உள்ள ஏரியாவிலிருந்து ஒட்டுமொத்த குடும்பமே இடம் பெயர்ந்து வந்திருக்கும். மீன்பிடிக் கப்பல்களில் வேலைக்காரர்களாக இருப்பார்கள். அல்லது குளிர் காலத்தில் மீன்களைக் காயவைத்து கருவாடு தயாரிப்பார்கள்.

இரண்டாயிரம் வருடம் பிறந்தது முதலாகவே இந்த இடங்களில் சில மாதங்களுக்கு தங்குவது என்பது சிரமமானதாக மாறிவந்திருக்கிறது.  எல்லைப் பாதுகாப்பு இங்கே கறாராக கண்காணிக்கப்படுகிறது. படகுகளுக்கு வேலைகளுக்குப் போவது என்பதும் போக போக சிரமமாகிவிடும் என்கிறார்கள் முரளியும் ஸ்வாபனும். இனி மீனும்  கிடைக்காது. போலீஸ் போக்குவரத்தும் அதிகமாகிவிட்டது. அதனால் இனி வேலையும் அவ்வளவுதான் என்கிறார் முரளி.
Fishing boats engaged in sabar near Jambudwip
PHOTO • Neha Simlai
The Indian Sundarbans
PHOTO • Neha Simlai

இடது:மீன்காரர்கள் ஜம்புத் தீவு போன்றவற்றில் தற்காலிக கிராமங்களை உருவாக்குகிறார்கள். வலது:சுந்தர்பான்ஸ் பகுதியில் சாதாரணமாக காணப்பட்ட மீன்கள் காணாமல் போய்விட்டன.

மரண மண்டலம், மீன் வளம் குறைவது ஆகிய பிரச்சனைகள் போதாது என்று சீனா, சிங்கப்பூர் படகுகளின் வியாபாரப் போட்டி வேறு. ஆழ்கடலில் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கிற அவர்களோடு போட்டியிடுவது கடினமாக இருக்கிறது. 1990கள் முதலாக வணிக மயமாகிவரும் கடல்சார் மீன் தொழில் காரணமாக மீன்கள் கிடைப்பது என்பது தொடர்ந்து குறைந்துவந்திருக்கிறது. எரிபொருளின் விலைகளும் செங்குத்தாக உயர்ந்துள்ளன. சின்னப் படகுகளை வைத்திருப்பது கூட பெரிய செலவுகளை வைத்துவிடுகிறது. “ எல்லாம் மாறிவிட்டது. கடல், எங்களது வேலை, எல்லாம் மாறிவிட்டது” என்கிறார் முரளி.

வெளிநாட்டு படகுகள் கடலில் கிடைக்கிற அனைத்தையும் தங்களின் வலைகளில் அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்கிறார் ஸ்வாபன். அவர்கள் படகுகளில் அவர்களின் நாட்டினர் மட்டும்தான் இருக்கிறார்கள். சாபிளா, மோலா, கஜ்லி, படாசி உள்ளிட்ட பல மீன் இனங்கள் சுந்தர்பான் பகுதிகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடியவை. அவை கூட தற்போது கிடைப்பதில்லை என்கிறார் அவர்.

கங்கை - பிரம்மபுத்திரா டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகளில் மீன் வளர்ப்புக்கு சாதாரணமாக தேவைப்படும் வெப்பத்தை விட  0.5 முதல் 1.4 டிகிரி வரையான செல்சிஷியஸ்  அதிகமாக இருக்கிறது என்கிறது அகுவாடிக் எகோசிஸ்டம்  ஹெல்த் அன்ட் மேனேஜ்மெண்ட் ( Aquatic Ecosystem Health and Management ) எனும் பத்திரிகை. இது மீன்களை மட்டும் பாதிக்கவில்லை. மீனை நம்பியிருக்கிற தொழிலாளர்களையும் பாதித்திருக்கிறது. அவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது. அவர்கள் தற்போது வேறு தொழில்களும் இடங்களுக்கும் மாறிப்போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மீனவர்கள் அவர்களைச் சுற்றி நடப்பதை விளக்குவதற்கு காலநிலை மாற்றம் எனும் வார்த்தையைப் பயன்படுத்தி பேசாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதன் தாக்கத்தை உணர்கிறார்கள். அவர்கள் எங்கே வாழவேண்டும், எதை சாப்பிடவேண்டும், எப்படி அவர்கள் சம்பாதிக்கவேண்டும் என்பதை அது தீர்மானிக்கிறது. சபர் இந்த வருடம் வாய்ப்பில்லை என்பதை முரளி உணர்கிறார். வேறு எங்காவது போய்த்தான் மீன் பிடிக்கவேண்டும் என்று அவருக்குத் தெரிகிறது. ஸ்வாபனுக்கு பாரம்பரிய மீன்பிடித்தல் தான் தெரியும். அதை வைத்துக்கொண்டு இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் பிழைக்க முடியாது என்று அவர் உணர்கிறார், அடுத்த வருடம் அவர் திரும்பவும் கட்டாயம் இங்கே வருவார் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அடுத்த மீன் பருவக் காலம் எப்படியிருக்கும் என்றும் தெரியாது

தமிழில் : த. நீதிராஜன்

Neha Simlai

Neha Simlai is a consultant based in Delhi, who works on environmental sustainability and conservation across South Asia.

Other stories by Neha Simlai
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan