"சுந்தர்பானில் ஒவ்வொரு நாளும் எங்கள் பிழைப்புக்காக நாங்கள் போராடுகிறோம். கொரோனா வைரஸ் ஒரு தற்காலிகமான  முட்டுக்கட்டையை  எங்களுக்கு உருவாக்கியிருந்தாலும், நாங்கள் பிழைத்துக்கொள்வோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் வயல்களில் உருளைக்கிழங்கும், வெங்காயமும் விளைகிறது. சுரைக்காயும், புடலங்காயும் முருங்கைக்காயும் இருக்கிறது.  விளைந்த நெல்லுக்கும் எங்களிடம் பஞ்சமில்லை. எங்களது பகுதியில் உள்ள குளங்களில் மீன்கள்  நிறைய இருக்கின்றன.   அதனால், நாங்கள் பட்டினியால் செத்துப்போக மாட்டோம். அதற்கான காரணம் எதுவும் இங்கு இல்லை ”என்கிறார் மவுசானி எனும் பகுதியைச் சேர்ந்த  சரல் தாஸ் .

நாடு தழுவிய பொது அடைப்பு நடைமுறையில் இருப்பதால், நாடு முழுவதும் உணவுப் பொருள்களின்  விநியோகத்தைச்  சீர்குலைத்திருக்கிறது. ஆனால், மவுசானியைப் பொறுத்தவரையில்  அந்தக் கவலை இங்கே தேவையில்லை.  இந்திய சுந்தர்பான் காடுகளின் மேற்குப் பகுதியில் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு இது. " பொது அடைப்பு காலமாக இது இருப்பதால், இங்கிருந்து ஒவ்வொரு நாளும் படகுகளில் நம்கானா அல்லது காக்ட்விப் பகுதிகளில்  உள்ள சந்தைகளுக்குக் காய்கறிகளும் மற்ற விளைபொருள்களும் போகும். தற்போது அவ்வாறு போக முடியாது" என்கிறார் தாஸ்.

மவுசானியிலிருந்து 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நம்கானா மற்றும் கக்ட்விப்பில் உள்ள மொத்த விற்பனைச் சந்தைகளுக்கான சில காய்கறிகளை எடுத்துக்கொண்டு ‘ அவசர காலத்திற்கான ‘சிறப்புப் படகுகள்’  செல்கின்றன. இந்தப் படகு பயணத்துக்கு  சுமார் 30 நிமிடங்கள் ஆகும். அங்கிருந்து கொல்கத்தாவுக்கு விளைபொருட்களைக் கொண்டு செல்லும் ரயில்களும்  லாரிகளும் இப்போது இயங்கவில்லை.

மவுசானியில் விளையும் பயிர்களில்  நெல்லும், பாகற்காயும் வெற்றிலையும் முக்கியமானவை.   கொல்கத்தாவின் சந்தைகளில் மவுசானியின் அரிசியும்  பாகற்காயும் வெற்றிலையும் எல்லோரும் கேட்டு வாங்கும் பொருள்கள்.  மவுசானி தீவில் உள்ள பாக்தாங்கா கூட்டுறவு பள்ளியில் எழுத்தராக பணிபுரியும் 51 வயதான தாஸ் கூறுகையில், “ மவுசானியின் சிறப்பான விளைபொருள்கள் வேறு எங்கிருந்து நமக்கு கிடைக்கும் என்பது நகரத்தின் பிரச்சனை”  என்கிறார் பாக்தங்கா கூட்டுறவு பள்ளியில் ஒரு ஊழியராக பணியாற்றுகிற தாஸ். அவர் அந்தக் கிராமத்தில்  ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். அதனை குத்தகை விவசாயிகளிடம் வாடகைக்கு விட்டிருக்கிறார்.
While the nationwide lockdown is disrupting food supplies across the country, the people living on Mousani island in the Sundarbans are not worried: 'The vegetables and produce that used to go from here to markets on boats every day cannot be sent that way now', says Saral Das (right) of Bagdanga village on the island (file photos)
PHOTO • Abhijit Chakraborty
While the nationwide lockdown is disrupting food supplies across the country, the people living on Mousani island in the Sundarbans are not worried: 'The vegetables and produce that used to go from here to markets on boats every day cannot be sent that way now', says Saral Das (right) of Bagdanga village on the island (file photos)
PHOTO • Abhijit Chakraborty

நாடு தழுவிய பொது அடைப்பு  என்பது நாடு முழுவதும் உணவு விநியோகத்தை சீர்குலைக்கிற  அதே வேளையில், சுந்தர்பானில் உள்ள மவுசானி தீவில் வசிக்கும் மக்கள் கவலைப்படவில்லை: 'ஒவ்வொரு நாளும் இங்கிருந்து படகுகளில் சந்தைகளுக்குச் செல்லும் காய்கறிகளையும்  விளைபொருள்களையும்  இப்போது அதே முறையில்  அனுப்ப முடியாது', என்கிறார்  பாக்தங்கா கிராமத்தைச் சேர்ந்த சரல் தாஸ் (வலது) கூறுகிறார் (கோப்பு புகைப்படங்கள்)

ஆறுகளாலும் கடலாலும் சூழப்பட்ட, 100க்கும் மேற்பட்ட ஒரு கொத்தாக  தீவுகள்  மேற்கு வங்காளத்தின் சுந்தர்பான் பகுதியில் உள்ளன. அவை  இந்திய நிலப்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுள்ளன. மவுசானியில்,ஓடுகிற  முரிகங்கா நதி (அதை பரதாலா என்றும் அழைக்கிறார்கள்) மேற்கு நோக்கி பாய்கிறது.  சினாய் நதி கிழக்கில் உள்ளது. மவுசானித் தீவில் பாக்தங்க, பலியாரா, குசும்தாலா மற்றும் மவுசானி எனும் கிராமங்கள் உள்ளன. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அவற்றில் சுமார் 22, ,000 மக்கள் இங்கே வசிக்கின்றனர். மேலே சொன்ன ஆறுகள்தான் இந்த  மக்களை  இணைக்கின்றன.  - இந்தியாவின் பிரதான நிலப்பகுதியோடு படகுப் போக்குவரத்தின் மூலம் இந்தப் பகுதி இணைந்துள்ளது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் நம்கானா  வட்டாரத்தில் அமைந்துள்ள இந்தத் தீவின் மக்கள், தற்போது ஏறக்குறைய வீட்டுக்குள்ளேயேதான்  தங்கியுள்ளனர் என்று தாஸ் கூறுகிறார். வாரத்தில் திங்கள்கிழமை  மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் செயல்படுகிற ஹாட் எனும் சந்தை பாக்தாங்காவுக்குப் பக்கத்தில் உள்ளது. அங்கே வழக்கமாக இந்த தீவின் மக்கள் போய் வருவார்கள். இந்த பொதுஅடைப்பு காலகட்டத்தில் அவர்கள் போக மாட்டார்கள். மிகவும் முக்கியமான பொருட்களை விற்பனை செய்யும்  கடைகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே  இயங்க வேண்டும் என்று  உள்ளூர் நிர்வாகம் அனுமதித்துள்ளது. மிகவும் முக்கியம் இல்லாத  பொருட்களை விற்கும் கடைகள் தீவு முழுவதும் மூடப்பட்டுள்ளன. பக்கத்து தீவான ஃப்ரேஸர்கஞ்ச்சில்  உள்ள  கடலோர காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களும் சில தன்னார்வலர்களும் பொது அடைப்பை நிறைவேற்றுவதற்காக நிர்வாகத்துக்கு உதவுகிறார்கள்.

மவுசானியின் வயல்களில் போதுமான பயிர்கள் வளர்ந்து வருகின்றன என்று, குசும்தாலா கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான ஜாய்தேப் மொண்டல், , எங்களிடம் தொலைபேசியில் பேசும் போது  ஒப்புக்கொண்டார். "நாங்கள் எங்கள் சந்தைகளில் புடலங்காயை ஒரு கிலோ  ரூபாய். 7 அல்லது 8க்கு ,விற்பனை செய்கிறோம். ஆனால்,  நீங்கள் அதனையே கொல்கத்தாவில் வாங்கினால் ஒரு கிலோ 50 ரூபாய் என்று விற்பார்கள், ”என்று அவர் கூறுகிறார். தீவில் இருக்கிற ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று மொண்டல் கூறுகிறார், எனவே, மக்கள் அவற்றை அரிதாகவே விலைக்கு வாங்குகிறார்கள், அப்படியே வாங்கினாலும் அவர்களுக்கு தேவையான சிலவற்றை மட்டுமே வாங்குகிறார்கள்.

“உதாரணமாக, என்னிடம் 20 கிலோ வெங்காயமும் நிறைய உருளைக்கிழங்குகளும்  உள்ளன. எங்கள் குளங்களில் போதுமான அளவுக்கு மீன்கள் உள்ளன. இங்கு மீன்களை வாங்குவதற்கு ஆட்கள் இருக்காது. அதனால்  சந்தைகளில் மீன் அழுகும். இன்னும் கொஞ்சம் நாட்களில், நாங்கள் சூரியகாந்திகளை வளர்க்க ஆரம்பிப்போம். நாங்கள் அந்த விதைகளை அரைத்து, எண்ணெயையும் பெறுவோம், ”என்கிறார் மொண்டால். அவர்  ஆசிரியராகவும் இருக்கிறார். விவசாயமும் பார்க்கிறார். மூன்று ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறார். அதில் அவர் உருளைக்கிழங்கு, வெங்காயம், வெற்றிலையை வளர்க்கிறார்.
PHOTO • Abhijit Chakraborty
PHOTO • Abhijit Chakraborty

தரையில் காய வைக்கப்பட்ட  மீன்களை சல்லடையால் சலித்து அவற்றின் மீதுள்ள மணலையும் அழுக்கையும் சுத்தம் செய்கின்றனர் பலியாரா கிராமத்தின் பெண்கள் .  இந்தத்  தீவுவாசிகளின் அன்றாட வாழ்க்கை என்பது  வயல்களில் விவசாயப் பணிகள் செய்வதிலும்  ஆறுகளிலும் நீரோடைகளிலும்  மீன் பிடித்தலிலும் கழிகிறது. எப்போதும் வெளியிலேயே பணி செய்கிற அவர்களை இந்த பொது அடைப்பு காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்குமாறு செய்வது சாத்தியம் இல்லை. (கோப்பு புகைப்படங்கள்)

ஐலா சூறாவளி, மே 2009 இல்  சுந்தர்பான் பகுதியைத் தாக்கியதிலிருந்து மவுசானியின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள குசும்தாலா , பலியாரா கிராமங்களில்  விவசாயமே கிட்டத்தட்ட அழிந்து விட்டது. அந்த சூறாவளி  தீவின் சுமார் 30-35 சதவீதம் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தியது.  மண்ணின் உப்புத்தன்மையை அதிகரித்தது. வயல்களில் இருந்து வரும் மகசூல் நின்றுபோனதால், பல ஆண்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வேலை தேட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

வேலை தேடி இடம் விட்டு இடம் மாறி போகிறவர்கள்  வழக்கமாக குஜராத் மற்றும் கேரளா மற்றும் நாட்டின் பிற இடங்களுக்குச் சென்று தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள், முக்கியமாக கட்டுமானப் பணிகள் நடக்கும்  இடங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு, மேற்கு ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்கள். இந்த பொது அடைப்பால்  அவர்களின் வருவாய் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் வேலைகளை  இழந்து விட்டால் நாளை  அவர்கள்  சாப்பிடுவதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? ” என்று ஆச்சரியப்படுகிறார் மொண்டால், 12 ஆம் வகுப்பு வரை படித்தவர் அவர். ஆனால் , அவரது கிராமத்தில் உயர்நிலைக் கல்வி மற்றும் மேனிலைக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு அவர் பயிற்றுவிப்பார்.

அகமதாபாத், சூரத், மும்பை, போர்ட் பிளேர் மற்றும் பிற இடங்களிலிருந்து கடந்த சில வாரங்களாக குடியேற்றவாசிகளில்  சிலர் திரும்பி வரத் தொடங்கியுள்ளதாக மொண்டல் கூறுகிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் கட்டுமானத் தளங்களில் பணிபுரிந்த பலியாராவைச் சேர்ந்த பல ஆண்களும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.பெங்களூரில் செவிலியர்களாகப் பயிற்சி பெற்ற இளம் பெண்களும் திரும்பி வந்துள்ளனர்.

சுந்தர்பானில்  கடல் மட்டம்  அதிகரித்து வருகிறது.  அதனால் நிலப்பகுதியில் கடல்நீர் புகுந்துள்ளது. விவசாய நிலங்களும் அதனால் கெட்டுப்போயிருக்கின்றன. தெற்குப் பகுதியில் உள்ள  கிராமங்களில் உள்ள வீடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழைகளின் வீடுகளில், 5 முதல் 10  குடும்ப உறுப்பினர்கள் வரை உள்ளனர்.  ஒரே அறையில் அவர்கள் வசிக்கின்றனர். அவர்களால் வீட்டுக்கு உள்ளேயே இருக்க முடியாது. அவர்களின் அன்றாட வாழ்க்கையே  வெளியில், தெருக்களில், வயல்களில் செய்கிற வேலைகளிலும்   ஆறுகளிலும் நீரோடைகளிலும் மீன் பிடிப்பதிலும்  கழிகிறது. அவர்களில் பலர் இரவில் வெளியில்தான்  படுத்துத் தூங்குகிறார்கள். இந்த பொது அடைப்பின் போது வீட்டுக்குள் தங்குவது என்பது இத்தகையோருக்கு கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாமல் போகிறது.
Left: In many houses on Mousani, 5-10 family members live in a single room. But the islanders are aware of the potential risk of the coronavirus, and a 'strict protocol is being followed'. Right: At a local dam site, labourers from Kusumtala village during a lunch break – over time, many have left, looking for work (file photos)
PHOTO • Abhijit Chakraborty
Left: In many houses on Mousani, 5-10 family members live in a single room. But the islanders are aware of the potential risk of the coronavirus, and a 'strict protocol is being followed'. Right: At a local dam site, labourers from Kusumtala village during a lunch break – over time, many have left, looking for work (file photos)
PHOTO • Abhijit Chakraborty

இடது: மவுசானியில் உள்ள பல வீடுகளில், 5 முதல் 10 வரையான குடும்ப உறுப்பினர்கள் ஒரே அறையில் வசிக்கின்றனர். ஆனாலும்,  கொரோனா வைரஸின் அபாயத்தை தீவுவாசிகள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால், அங்கு ஒரு 'கடுமையான நெறிமுறை பின்பற்றப்படுகிறது'. வலது: ஒரு உள்ளூர் அணை உள்ள தளத்தில், குசும்தாலா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். காலப்போக்கில், பலர் இந்த இடத்திலிருந்து  வேறு வேலை தேடி வெளியேறிவிட்டனர்.(கோப்பு புகைப்படங்கள்)

ஆனால்,  கொரோனா வைரஸின் அபாயத்தை தீவுவாசிகள் அறிந்திருக்கிறார்கள். இந்த பொது அடைப்பு காலகட்டத்தில் தீவில் கடுமையான நெறிமுறை பின்பற்றப்படுவதாக தாஸ் கூறுகிறார். வேலை தேடி ஊரை விட்டு போனவர்களில் திரும்பி வந்தோர்  குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  ஊரிலிருந்து திரும்பியோர் பற்றி அக்கம்பக்கத்தினர்   வீடு வீடாக  விசாரிக்கின்றனர். ஊர் திரும்பியவர்கள்  14 நாட்களுக்குக் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கவேண்டும் என்று  காக்ட்விப் துணைப் பிரதேச மருத்துவமனையின் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதை கறாராக பின்பற்ற வேண்டும் என்று கிராமவாசிகள் உறுதியுடன் உள்ளார்கள். மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்த்தவர்கள் கட்டாயம் சோதனைக்கு செல்ல வேண்டும் என்றும் தாஸ் கூறுகிறார்.

துபாயிலிருந்து திரும்பியபோதே காய்ச்சலுடன் வந்த ஒரு  இளைஞன் கொல்கத்தாவின் பெலியாகாட்டாவில் உள்ள ஐடி & பிஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். அவனது பரிசோதனை முடிவுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று வந்தபிறகுதான் அவனது கிராமம் நிம்மதியடைந்தது. ஆனாலும், மருத்துவர்கள்  அந்த இளைஞனை வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு  வலியுறுத்தினர்.  புதிதாக திருமணமான கணவனும் மனைவியும்  சில நாட்களுக்கு  முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பி வந்தனர். அவர்களும் வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையில் உள்ளனர். யாராவது இந்த நெறிமுறையை மீறினால், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரத் தலைமை மருத்துவ அலுவலரிடம் அவர்களைப் பற்றிய விவரங்கள்  உடனடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படுகின்றன.

பலியாரா கிராமத்திலும் குசும்தாலா கிராமத்திலும் ஆண்கள் சம்பாதிப்பதை  நிறுத்திவிட்டால், அவர்களது குடும்பங்களுக்கு விரைவில் உணவு இல்லாமல் போய்விடும். இந்த வீடுகள் இப்போது மாநில அரசு வழங்குகிற கிலோ 2 ரூபாய் அரிசியை நம்பியிருக்கின்றன. கோவிட் -19 வைரஸ் நெருக்கடியைக் கட்டுப்படுத்தும்வகையில், பொது விநியோக முறையில் மாதத்திற்கு ஐந்து கிலோ இலவச அரிசியை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

மவுசானி தீவில் வசிப்பவர்கள் நெருக்கடியைச் சமாளிப்பார்கள் என்று சரல் தாஸ் நம்புகிறார். " சுந்தர்பன் மக்களாகிய நாங்கள், எங்களின் நிலத்தின் தன்மையின் காரணமாக, இந்தியாவின்  நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் அனுபவித்த எண்ணற்ற பேரழிவுகளிலிருந்து நாங்கள் நிறைய  கற்றுக்கொண்டோம் - ஒரு நெருக்கடியின் போது நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் வழக்கமாக இந்திய நிலப்பரப்பின் உதவியைச் சார்ந்து இல்லை, ஆனாலும் அந்த உதவி சரியான நேரத்தில் எங்களுக்கு வரும். எனது வீட்டிலிருந்த இரண்டு கூடுதல் புடலங்காய்களை நான் எனது பக்கத்து வீட்டுக்காரருக்குத் அனுப்புவதைப் போலவே, என் பக்கத்து வீட்டுக்காரரும் இரண்டு கூடுதல் வெள்ளரிக்காய்கள் அவரிடம் இருந்தால், அவற்றை எனது வீட்டிற்கு அனுப்புவார் என்பதை நான் அறிவேன். நாம்  ஒன்றாக பிரச்சனைகளைச்  சமாளிப்போம், இந்த நேரத்திலும் அப்படியே  சமாளிப்போம், ” என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார்.

தமிழில்: த. நீதிராஜன்

Abhijit Chakraborty

Abhijit Chakraborty is a photojournalist based in Kolkata. He is associated with 'Sudhu Sundarban Charcha', a quarterly magazine in Bengali focused on the Sundarbans.

Other stories by Abhijit Chakraborty
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan