என்னுடைய The Last Heroes புத்தகத்தில் இடம்பெற்ற  சுதந்திரப் போராட்ட வீரர்களிலேயே அநேகமாக வயது அதிகமானவரான தெலு மஹதோ, மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்ட பிர்ரா கிராமத்திலுள்ள அவரது வீட்டில் கடந்த வியாழக்கிழமை மாலை மறைந்தார். இப்புத்தகம் பதிப்பிக்கப்பட்டபோது உயிருடன் இருந்து, பிறகு இறந்து போயிருக்கும் முதல் நபரும் இவர்தான். புருலியாவின் 12 காவல்நிலையங்களை நோக்கி 1942ம் ஆண்டில் நடந்த எதிர்ப்பு அணிவகுப்பில் பங்குபெற்றவர்களில் கடைசியாக உயிரோடு இருந்தவர் அவர்தான். தெலுவின் வயது 103லிருந்து 105க்குள் இருக்கலாம்.

அவரின் மறைவால், இந்திய சுதந்திரத்துக்கு போராடி, இந்தியாவை சுதந்திர தேசமாக ஆக்கிய பொற்காலத் தலைமுறையை இழக்கும் காலத்தை இன்னும் அதிகமாக நெருங்கியிருக்கிறோம். அடுத்த ஐந்தாறு வருடங்களில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர் எவரும் உயிரோடு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டு விடும். புதிய தலைமுறைகளை சார்ந்த இந்தியர்கள், சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டோரை சந்திக்கவோ அவர்கள் பேசுவதை கேட்கவோ அவர்களுடன் பேசவோ அதற்கு மேல் முடியாது. யார் அவர்கள், எதற்காகப் போராடினார்கள், எதன் பொருட்டு போராடினார்கள் போன்றவற்றை நேரடியாக அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள முடியாது.

ஆனால் தெலு மஹாதோவும் அவரின் வாழ்நாள் தோழரான லோக்கி மஹாதொவும் தம் கதைகளை சொல்ல ஆர்வத்துடன் இருந்தனர். நாட்டுக்காக தாங்கள் போராடியது பற்றியும் அதில் கொண்டிருக்கும் பெருமை குறித்தும் இளம் புதிய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் கொண்டிருந்தனர். தெலு, இனி அவரது சொந்தக் கதையை சொல்ல முடியாது. அந்தத் தலைமுறையில் பிறந்து மிச்சமிருக்கும் பிறரும் அடுத்த 5-6 வருடங்களுக்கு பிறகு, தங்கள் கதைகளை சொல்ல இருக்க மாட்டார்கள்.

எதிர்காலத்தில் இளம் இந்தியர்களுக்கு அது எத்தனை பெரிய இழப்பு? மிகவும் குறைவாக மட்டும் தெரிந்தும் நம் காலத்தின் தெலுக்களை பற்றியும் அவர்தம் தியாகங்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கைகளை தெரிந்து கொள்வது நம் வாழ்க்கையை வடிவமைக்க உதவும் எனக் கற்றுக் கொள்ளவும் முடியாத தற்கால தலைமுறைகளுக்கு ஏற்கனவே எத்தனை பெரிய இழப்பு விளைந்திருக்கிறது?

குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு பெரியளவில் ஊதிப்பெருக்கப்படாமலும் புதிதாக உருவாக்கப்படாமலும் திணிக்கப்படாமலும் எழுதப்படும் தற்காலத்தில். பொதுச்சிந்தனையிலும் ஊடகத்தின் கணிசமான உள்ளடக்கங்களிலும் அச்சமூட்டும் வகையில் நம் பள்ளி புத்தகங்களிலும் கூட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கொலையை சுற்றியுள்ள முக்கியமான உண்மைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில்.

Thelu Mahato's home in Pirra village of Puruliya district, West Bengal where he passed away on April 6, 2023. Thelu never called himself a Gandhian but lived like one for over a century, in simplicity, even austerity.
PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

மேற்கு வங்க புருலியா மாவட்டத்திலுள்ள பிர்ரா கிராமத்தில் ஏப்ரல் 6, 2023 அன்று தெலு மஹாதோ மறைந்த அவரது வீடு. தன்னை காந்தியவாதி என எப்போதும் தெலு சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அவர் கடுமையான எளிமையுடன் காந்தியவாதியாகவே வாழ்ந்தார். வலது: தெலு மஹாதோவும் அவரது வாழ்நாள் நண்பரான லோக்கி மஹாதோவும் தங்களின் கதைகளை சொல்ல ஆர்வத்துடன் இருந்தனர்

தெலு மஹாதோ தன்னை காந்தியவாதி என சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் காந்தியவாதியாக ஒரு நூற்றாண்டுக்கும் மேல் வாழ்ந்திருக்கிறார். எளிமையாக, மிகத் தீவிர எளிமையாக. சுதந்திரப் போராட்டத்தின்போது 1942ம் ஆண்டில் செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளில் புருலியாவின் 12 காவல்நிலையங்களை நோக்கி நடந்த ஊர்வலத்தில் பங்குபெற்றவர் அவர். தன்னை இடதுசாரிய புரட்சியாளராக முன் நிறுத்தியவர். அப்பாவி மக்களை காக்க, தற்காப்புக்காக தேவை ஏற்பட்டாலொழிய அஹிம்சையையே தன் வழியாக கடைபிடித்தவர்.

ஆனால் வன்முறை நேர்ந்த காவல்நிலைய தாக்குதலில் நீங்கள் பங்குபெற்றீர்களே? 2022ம் ஆண்டில் பிர்ரா கிராமத்திலிருந்து அவரது வீட்டில் நான் கேட்டேன். வன்முறை பிரிட்டிஷாரிடமிருந்துதான் வந்தது என பதிலுற்றார். “காவலர்கள் கூட்டத்தை நோக்கி கன்னா பின்னாவென சுட்டனர்…”. அந்தக் கூட்டம் காவல் நிலையங்களில் இந்தியக் கொடியை ஏற்ற சென்றிருந்தது. “காவலர்களால் நண்பர்களும் குடும்பத்தினரும் தோழர்களும் சுட்டுத் தள்ளப்படுவதை பார்க்கும்போது நிச்சயமாக மக்கள்  எதிர்வினை ஆற்றுவார்கள்.”

தெலு மஹாதோ மற்றும் அவரது வாழ்நாள் தோழரான லோக்கி மஹாதோ ஆகியோருடனான எங்களின் உரையாடல்களில், அந்த தலைமுறை புதிய கருத்துகளுக்கும் தாக்கங்களுக்கும் எந்தளவுக்கு ஏற்பு வழங்கியது என தெரிந்து கொண்டோம். போலவே பலவகையான அந்த தாக்கங்கள் எந்தளவுக்கு நுட்பமானவர்களாக அவர்களை ஆக்கியிருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. உணர்வாலும் அரசியலாலும் அசைத்திட முடியாத இடதுசாரியாக இருந்தவர் தெலு. லோக்கி இன்னும் இடதுசாரியாக நீடிக்கிறார். தார்மிக நெறியாலும் வாழ்க்கைமுறையாலும் தெலு காந்தியவாதியாக இருக்கிறார். உறுதிப்பாட்டிலும் கோட்பாட்டிலும் இடதுசாரி, தனிமனித அளவில் காந்தியவாதி. இருவரும் பல்லாண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்.

அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வந்தவர் என்கிற முறையில் அவர்களுக்கு நாயகனாக இருந்தது நிச்சயமாக சுபாஷ் சந்திர போஸ்தான். தெலுவுக்கும் லோக்கிக்கும் அவர்தான் உலகம். அவர்களால் பார்க்க முடியாத காந்தி சற்று தூரத்திலிருந்து பிரபலமான, ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஆளுமை. உள்ளூர் நாயகர்களாக அவர்களுக்கு ராபின்ஹுட் ரக கொள்ளைக்காரர்கள் பிபின், திகம்பர் மற்றும் பிதாம்பர் சர்தார் ஆகியோர் இருந்தனர். கடும் வன்முறை நிகழ்த்துபவர்களாக அந்த கொள்ளைக்காரர்கள் இருந்தாலும், ஒடுக்கும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக மக்கள் நியாயம் கேட்கும் இடமாக அவர்களே இருந்தனர். அவர்களை போன்றோரின் தன்மையை வரலாற்றாய்வாளர் எரிக் ஹாப்ஸ்பாம் வன்முறையாக தெரிந்தாலும், “பொருளாதார சமூக அரசியல் ஒழுங்கை கேள்வி கேட்கவும் அது செய்கிறது,” என்கிறார்.

PHOTO • P. Sainath
PHOTO • P. Sainath

தெலு மற்றும் லோக்கி ஆகியோர் எப்படி அவர்களின் தலைமுறை எல்லாவித கருத்துகளுக்கும் தாக்கங்களுக்கும் ஏற்புநிலை கொண்டிருந்தது என்பதை எங்களுக்கு வெளிப்படுத்தினர். தெலு,  அஹிம்சை கடைபிடிக்கும் இடதுசாரியாகவும் புரட்சியாளராகவும் இயங்கினார்

இந்த நிலைகளில் தெலு மற்றும் லோக்கியும் எந்த முரண்பாடையும் பார்க்கவில்லை. கொள்ளையர்களிடம் அவர்கள் வெறுப்பும் மதிப்பும் கலந்த அணுகுமுறை கொண்டிருந்தனர். அவர்களை அவர்கள் மதித்தனர், ஆனால் பின்பற்றவில்லை. சுதந்திரம் கிடைத்த பிறகு பல ஆண்டுகளாக அவர்கள் அரசியலில் இயங்கினர். நிலம் மற்றும் பிற உரிமை சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர், காந்திய வாழ்க்கை வாழும் சுதந்திர இடதுசாரிகளாக.

போராட்டங்கள் நிறைந்த ஜங்கல்மஹால் பகுதியின் பல போராட்டங்களில் பங்கெடுத்த குர்மி சமூகத்தை சேர்ந்தவர் தெலு மஹாதோ. அவர்களின் பழங்குடி அடையாளம் பிரிட்டிஷாரால் 1931ம் ஆண்டு பறிக்கப்பட்டது. குர்மிகளை பிரிட்டிஷார் தண்டித்தனர். பழங்குடி அங்கீகார மீட்பு பெரும் லட்சியமாக இருந்து வருகிறது. அந்த கோரிக்கைக்காக ஜங்கல்மஹாலில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் தெலு மறைந்த நாள் ஒரு புதுப் போக்கை தொடங்கியிருக்கிறது.

விடுதலை போராட்ட வீரருக்கான ஓய்வூதியத்தை தெலு பெற்றதில்லை. அதற்கான அங்கீகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டதில்லை. நாங்கள் கடைசியாக அவரை சந்தித்தபோது, முதியோர் ஓய்வூதியமான ஆயிரம் ரூபாயில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். தகர கூரை போட்ட பாழடைந்த ஓரறை வீட்டில் வசித்தார். சற்று தூரத்தில் சொந்த கைகளால் அவர் உருவாக்கிய கிணறு ஒன்று இருக்கிறது. அதை உருவாக்கியதில் அவருக்கு பெருமை. அதனருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.

தெலு தோண்டிய கிணறு இன்னும் இருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நினைவுகள்தான் குறைந்து கொண்டே வருகிறது.

தெலு, லோக்கி மற்றும் 14 விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய முழு வாழ்க்கைகளை பி.சாய்நாத்தின் The Last Heroes: Foot Soldiers of Indian Freedom புத்தகத்தில் படிக்கலாம்.

அவர்களிடம் புகைப்படத் தொகுப்புகளையும் காணொளிகளையும் பாரியின் Freedom Fighters Gallery பகுதியில் காணவும்.

இக்கட்டுரை முதலில் The Wire -ல் பதிப்பிக்கப்பட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan