முதல் பார்வையில் பெருவெம்பா தோல் பதனிடும் இடம்போல் தெரிகிறது. ஆடு, மாடு மற்றும் எருமை போன்ற மிருகங்களின் தோல்கள், அக்கிராமத்தில் உள்ள வீடுகளின் முற்றங்களில் காயவைக்கப்பட்டுள்ளது. அது தோல் விற்பனைக்காக பதனிடப்படுவதை அறிவுறுத்துகிறது. ஆனால், முற்றத்தை கடந்த வீடுகளில், கடாச்சி கொல்லன் சமூகத்தைச்சேர்ந்த கைவினை கலைஞர்களால் அந்த தோல் உயர்தர தாள கருவிகளாக மாற்றம்பெறுகிறது.

பெருவெம்பாவில் தயாரிக்கப்படும் தாள கருவிகளை வாங்குவதற்கு தென்னிந்தியாவின் தாள இசை கலைஞர்கள் விரும்புகின்றனர். கேரளாவின் பாலக்காடு நகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பெருவெம்பா உள்ளது. “நாங்கள் இசை கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கிடையாது. ஆனால், தரமான இசைக்கருவிகளை செய்வதற்கான ஸ்ருதிகள் குறித்து எங்களுக்கு தெரியும். எங்களுக்கு ஆர்டர் கிடைத்தவுடன்தான் நாங்கள் இசைக்கருவியை செய்வோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனித்தன்மையுடன்தான் நாங்கள் இசைக்கருவிகளை தயாரிப்போம். நாங்கள் கடைகளுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யமாட்டோம்“ என்று 44 வயதான கே.மணிகண்டன் கூறுகிறார். இவர் கடாச்சி கொல்லன் மிருதங்கம் தயாரிப்பவர் ஆவார்.

பெருவெம்பாவின் கடாச்சி கொல்லன்கள், மிருதங்கம், மத்தளம், செண்டை மேளம், தபேலா, தோல், கஞ்சிரா மற்றும் மற்ற மேள இசைக்கருவிகளை வடிவமைக்கிறார்கள். அது பெரும்பாலும் கோயில்களில் இசைப்பதற்கு மற்றும் கர்நாடக சங்கீத இசைக்கும் பயன்படுத்தப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு மேலாக இச்சமூகத்தினர் தாள இசைக்கருவிகளை வடிவமைத்து வருகிறார்கள். அதற்கு முன்னதாக இவர்கள் உலோகத்தலான கருவிகளை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேளாண் கருவிகளை செய்து வந்தார்கள் என்று மணிகண்டன் கூறுகிறார். கர்நாடக சங்கீதத்தின் மையமாக பாலக்காடு இருந்தது, பெரும்வெம்பாவின் கடாச்சி கொல்லன்களை ஊக்குவித்தது. அதுவே இவர்கள் இசைக்கருவிகள் தயாரிக்கும் பணிக்கு மாறவும், அதிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கவும் வழிவகுத்தது. இந்த கிராமம் பாலக்காடு மாவட்டத்தின் கீழ் வருகிறது. தற்போது பெருவெம்பா ஒரு கிராம பஞ்சாயத்து.

மிருதங்க வித்துவான் பால்காட் டி.எஸ்.மணி அய்யர் (1912-1981), இங்கு தயாரிக்கப்படும் இசைக்கருவிகளின் மூலம் சாதித்த பின்னர், பெருவெம்பாவின் புகழ், கேரளாவைக்கடந்தும், கர்நாடக சங்கீத வட்டாரத்தில் பரவியது. அவர் மெட்ராசில் (தற்போது சென்னை) இருந்து இசைக்கலைஞர்களை அந்த கிராமத்திற்கு அழைத்து வந்தார். அதில் பெரும்பாலானோர் கடாச்சி கொல்லன் கைவினைஞர்களின் நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள். ஐயரின் சொந்த மிருதங்கம், பெருவெம்பாவில் தயாரிக்கப்பட்டது. அதை தயாரித்தவர் கிருஷ்ணன் மருதாளபரம்பு, மணிகண்டனின் தந்தையாவார். அவருடன் ஐயர் நெருக்கிய நட்பில் இருந்தார்.

The Kadachi Kollan wash and dry the animal skins in their courtyards in Peruvemba village
PHOTO • P. V. Sujith

பெருவெம்பா கிராமத்தில், கடாச்சி கொல்லன் விலங்குகளின் தோலை, தங்கள் வீடுகளின் முற்றங்களில் அலசி காய வைத்துள்ளனர்

பெருவெம்பாவில் வசிக்கும் 320 குடும்பங்களில் 80 குடும்பங்கள் கடாச்சி கொல்லன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். (கிராம பஞ்சாயத்தின் தகவல்படி). 2007ல் இந்த கிராமத்தில் உள்ள கைவினை கலைஞர்கள் ஒன்று சேர்ந்து மாநில அளவில் தோல் இசைக்கருவிகள் தயாரிக்கும் கைவினைஞர்களை ஒன்று சேர்த்து கேரள மாநில துக்கல் வத்யோபகாரண நிர்மாண சங்கோம் என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினர். அப்போது முதல், இசைக்கருவிகளின் விலை, சேதமடைந்த கருவிகளை பழுதுபார்ப்பது மற்றும் மறு சீரமைப்பு ஆகியவற்றுக்கான விலையை கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள். உறுப்பினர்களிடையே வேலைப்பளுவை சமமாக பங்கிட்டுக்கொள்வதையும் உறுதி செய்வார்கள். மணிகண்டன் அந்த கூட்டமைப்பின் செயலாளர். கூட்டமையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 65 உறுப்பினர்களும், 114 பயிற்சியாளர்களும் உள்ளனர்.

கலைஞர்கள் மற்றும் மையங்களுக்கு பிரத்யேக கருவிகளை வடிவமைப்பது மற்றும் தயாரிப்பதன் மூலம் பெருவெம்பாவின் கைவினைஞர்களுக்கு பல ஆண்டுகளாக நிலையான ஒரு வருமானம் இருந்தது. ஆனால், கோவிட் – 19 அதை மாற்றிவிட்டது.

இந்தியாவின் முதல் 3 கொரோனா வைரஸ் பாதிப்புகளும் கேரளாவில் ஏற்பட்டதையடுத்து, 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரள அரசு கடுமையான ஊராடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது. பிப்ரவரிக்கு பின்னர் பெருவெம்பாவுக்கு ஒரு வாடிக்கையாளர் கூட வரவில்லை. விற்பனை உச்சகட்டத்தில் நடைபெறும் கோடை காலத்திற்கும் எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை.

“கேரளாவில் பிப்ரவரி முதல் ஜீனுக்கு இடைப்பட்ட காலங்களே பண்டிகைக்காலம். அந்த நேரத்தில் ஒரே ஒரு விற்பனை கூட நடைபெறவில்லை. பழுதுபார்க்கும் பணிக்கு கூட யாரும் வரவில்லை“ என்று மணிகண்டன் கூறுகிறார். கோடையில் நடைபெறும் ஆண்டு திருவிழாக்களில், கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் அதிகளவிலான தாள இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடுவார்கள். சிலநேரங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் கூட ஒன்று கூடுவார்கள். அவர்கள் பாரம்பரியமான இசைக்கருவிகளான பஞ்சாரி மேளம் மற்றும் பஞ்சவாத்தியம் போன்றவற்றை ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் கூட இசைப்பார்கள்.

இசைக்கருவிகளின் விற்பனை ஊரடங்கு காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. 2020ம் ஆண்டு வெறும் 23 இசைக்கருவிகள் மட்டுமே அதுவும் ஊரடங்குக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டது. “அவை மிருதங்கம் மற்றும் தபேலாவும் மட்டுமே ஆகும். அதில் செண்டை மேளம் இல்லை“ என்று மணிகண்டன் கூறுகிறார். 2019ம் ஆண்டு 380 இசைக்கருவிகள் விற்பனை செய்யப்பட்டன. அதில் 112 செண்டை மேளமாகும். இது பஞ்சேரி மேள இசைக்குழுவில் முக்கியமான இசைக்கருவியாகும்.

Left: K. Manikandan fastens the leather straps of a mridangam. Right: Ramesh and Rajeevan Lakshmanan finish a maddalam
PHOTO • P. V. Sujith
Left: K. Manikandan fastens the leather straps of a mridangam. Right: Ramesh and Rajeevan Lakshmanan finish a maddalam
PHOTO • P. V. Sujith

இடது: கே. மணிகண்டன், மிருதங்கத்தின் தோல் பட்டைகளை வேகமாக இணைக்கிறார். வலது: ரமேஷ் மற்றும் ராஜீவன் லட்சுமணன் மத்தளத்தை செய்து முடித்துவிட்டனர்

செண்டை மற்றும் சுத்தா மத்தளம் ஆகியவையே கதகளி எனும் ஆட்ட நடனத்திற்கான தாள வாத்தியங்களாகும். இவை பெருவெம்பாவின் மிக பிரசித்திபெற்ற இசைக்கருவிகளாகும். புதிய மத்தளம் வழக்கமாக ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனையாகும். செண்டை மேளம் ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கு விற்கப்படும் என்று 36 வயதான ராஜீவன் லட்சுமனன் கூறுகிறார். அவர் மத்தளம் தயாரிப்பதில் வல்லவர். மத்தளத்தில் தோல் மாற்றி கொடுப்பதற்கு கைவினைஞர்கள் ரூ.12 ஆயிரம் நிர்ணயிப்பார்கள். சரங்களை மாற்றுவது அல்லது இறுக்கமாக்குவதற்கு ரூ.800 கோரப்படும். ஒவ்வொரு கருவியை விற்கும்போதும் லாபத்தில் 8 சதவீதம் வழங்கப்படும்.

“ஊரடங்குக்கு முன்னர் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும், ரூ.17 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பாதித்து வந்தனர்“ என்று 64 வயதான மணி பெருவெம்பா கூறுகிறார்.

“பிரச்னைகள் தீவிரமாக இருந்தபோது, எங்களை காப்பாற்றிக்கொள்ளுமளவுக்கு வருமானம் கிடைக்கக்கூடிய வேறு எதுவும் எங்களுக்கு இல்லை“ என்று ராஜீவன் கூறுகிறார். ஊரடங்கு காலத்தில் விவசாயத்தொழில் பெருவெம்பாவின் கடாச்சி குடும்பங்களுக்கு உதவியாக இருந்தது. கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பத்தினருக்கு அரை முதல் ஒரு ஏக்கர் வரை சொந்த நிலம் உள்ளது. அதில் அவர்கள் தேங்காய் மற்றும் வாழை பயிரிடுகின்றனர். வாழைக்காய் கிலோ ரூ.14க்கும், தேங்காய் கிலோ ரூ.54க்கும் உள்ளூர் சந்தைகளில் விற்பனையானது. சிலர் நெல்லும் பயிரிட்டு, சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.

தொற்றுக்காலத்திற்கு முன்னரும், இசைக்கருவிகள் செய்பவர்களுக்கு  விலங்குகளின் தோல் கிடைப்பது சிரமமாக இருந்தது. மத்திய அரசின் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு விதிகள் 2017 (கால்நடை சந்தைகளின் ஒழுங்குமுறை), விலங்குகளின் தோல் குறைவதற்கு காரணமாக இருந்தது. சட்ட விதிகளால், மாநிலங்களுக்கு இடையே கால்நடைகள் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கசாப்பு கடைகளிலில் இருந்து விலங்குகளின் தோல் கொண்டுவரப்படுவதும் முற்றிலும் நிறுப்பட்டது.

பெருவெம்பாவில் உள்ள கைவினைஞர்கள் தற்போது, அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுநகரத்தில் உள்ள இறைச்சி சந்தையையே சார்ந்திருக்கிறார்கள். விலங்குகளின் தோல் விற்பவர்களும் சிக்கலில் உள்ளனர். “இதே நிலை தொடர்ந்தால், நாங்கள் இசைக்கருவிகள் தயாரிக்கும் தொழிலையே கைவிடும் நிலைக்கு வற்புறுத்தப்படுவோம்“ என்று ராஜீவனின் சகோதரர் ரமேஷ் லட்சுமணன் கூறுகிறார்.

Left: The men of a family work together at home. Right: Applying the black paste on a drumhead requires precision
PHOTO • P. V. Sujith
Left: The men of a family work together at home. Right: Applying the black paste on a drumhead requires precision
PHOTO • P. V. Sujith

இடது: குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களும் சேர்த்து வேலைசெய்வார்கள். வலது: மேளத்தின் தலைப்பகுதியில் நுட்பமாக கரும்பசையை பூசுகிறார்கள்

“பசுவின் தோல் இல்லாமல் பெருவெம்பாவில் இருந்து ஒரு கருவிகூட செய்யப்பட்டதில்லை“ என்று 38 வயதான கைவினைஞர் சுமோத் கண்ணன் கூறுகிறார். “ஒரு பசுவின் தோல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்படும். எல்லா விலங்குகளின் தோலைவிடவும், பசுந்தோல் ஒவ்வொரு இசைக்கருவிக்கும் தேவையானது. மிருதங்கத்திற்கு சிறிதளவும், மத்தளத்திற்கு அதிகமாகவும் தேவைப்படும். பசுந்தோல் எருமை மற்றும் ஆட்டுத்தோலுடன் சேர்த்து பயன்படுத்தப்படும். வெவ்வேறு வகையான கருவிகளுக்கு பயன்படுத்தப்படும் அளவு மட்டும் வேறுபடும்“ என்று அவர் மேலும் கூறுகிறார். செண்டை மேளம் மற்றும் மத்தளத்தில் பசுந்தோல் முக்கியமாகப்பயன்படுத்தப்படும், ஆட்டுத்தோல் மிருதங்கத்திற்கு பயன்படுத்தப்படும். பசுவின் குடல் எடக்கா செய்வதற்கு பயன்படுத்தப்படும்‘ என்று கே.வி.விஜயன் (47) கூறுகிறார்.

கடாச்சி கொல்லன் குடும்பத்தில் முழு குடும்பமும் கைவினைப்பொருள் தயாரிப்பில் ஈடுபடுகிறது. பெண்கள் விலங்குகளின் தோல்களை அலசி, தேய்த்து, அவை உலர்ந்தவுடன் அவற்றை மிருதுவாக்கிக்கொடுப்பார்கள். ஆண்கள் அந்த தோலை சரிசெய்து, மரத்தை சரியான அளவில் வெட்டி, இசைக்கருவியை தயாரிப்பார்கள். உளி, கத்தி, துளையிடும் கருவி, பற்றுக்கருவி போன்ற அனைத்து கருவிகளையும் தாங்களே செய்துகொள்வார்கள். குழந்தைகளுக்கும் சிறு வயது முதலே பயிற்சியளிக்கப்படும். பசையை மேளத்தின் தலைப்பகுதியில் உள்ள மஷியிதால் என்று அழைக்கப்படும் கரும்வளையத்தை ஒட்டுவதற்கு கூட கற்றுக்கொடுக்கப்படும். அந்த பசை, உள்ளூரில் கிடைக்கக்கூடிய புராணக்கல்லு என்று அழைக்கப்படும் கருப்பு கல்லை பொடி செய்து, வேகவைத்த அரிசியுடன் சேர்த்து பிசைந்து தயாரிக்கப்படுவதாகும். “இந்த வேலைகளை மிகத்துல்லியமாக செய்ய வேண்டும்“ என்று சுனோத் கிருஷ்ணன் கூறுகிறார்.

பெருவெம்பாவில் இசைக்கருவிகள் அனைத்தும் பாலக்காடு மாவட்டத்தில் மிகுதியாக விளைந்திருக்கும் பலா மரங்களிலிருந்து தயாரிப்படுகிறது. கைவினைஞர்கள் மரத்தை, உள்ளூர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து ஒரு மீட்டர் ரூ.2,700க்கு பெறுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை (அக்டோபர்-டிசம்பர்) தாமதமானால், பலா மரங்களின் தரம் பாதிக்கப்படும் என்று ராஜீவன் கூறுகிறார். “இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. பாரம்பரிய முறையில் தோல் காயவைக்கும் முறையும் ஆபத்தில் உள்ளது“ என்று அவர் மேலும் கூறுகிறார். “டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021ல் கேரளா நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகளவு மழையை பெற்றது“ என்று கோபகுமார் சோலாயில் கூறுகிறார். அவர் திரிச்சூரில் உள்ள கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் அலுவலராக உள்ளார்.

“நாங்கள் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து சிந்தித்து பார்க்கவில்லை. பலா மரம் மற்றும் விலங்குகளின் தோலும் எங்களுக்கு முக்கியம்“ என்று மணிகண்டன் கூறுகிறார். “அரசு பசுவதையை நாடு முழுவதும் தடை செய்தால், நாங்கள் மீண்டும் வேளாண் கருவிகள் தயாரிக்கும் தொழிலுக்கு தான் செல்ல வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார். கடாச்சி கொல்லன் சமுதாயத்தினர் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள லக்கிடி பேரூர், திரிச்சூர் மாவட்டத்தில் வெள்ளார்காடு மற்றும் வெள்ளப்பையா  பகுதிகளிலும் இன்றும் வேளாண் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறுகிறார்.

Kadachi Kollan craftsmen start learning the craft in their childhood
PHOTO • P. V. Sujith

கடாச்சி கொல்லன் கைவினைக்கலைஞர்கள் தங்களது குழந்தை பருவத்திலிருந்தே இசைக்கருவிகள் செய்வதற்கு பயிற்சி பெறுகிறார்கள்

2019ல், கேரளா அரசு கடாச்சி கொல்லன் சமூகத்தை, பழங்குடியினர் பிரிவிலிருந்து நீக்கி பிற்படுத்தபட்டோர் பிரிவில் சேர்த்தது. அதுமுதல் இச்சமூகத்திற்கு மாநிலத்தின் உதவிகள் மற்றும் மற்ற நன்மைகள் நிறுத்தப்பட்டது. “மாநில அரசு நடத்திய ஆய்வில் கடாச்சி கொல்லன் சமூகம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தது. யாராவது ஆவணங்களை மாற்றிக்கொடுத்ததன் மூலம் எங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது எங்களுக்கு அரசிடம் இருந்து பொருளாதார உதவிகள் கிடைப்பதில்லை“ என்று மணிகண்டன் கூறுகிறார்.

பாலக்காட்டில் உள்ள பிரபலமான கலாச்சார மையம் ஸ்வாரலயாவின் செயலாளர் டி.ஆர்.அஜயனைப்பொறுத்தவரை, கர்நாடக சங்கீதத்தின் மையமான பாலக்காட்டின் புகழுக்கு பெருவெம்பாவின் கைவினைஞர்களும், அவர்களின் பாரம்பரியமும் முக்கியமான ஒன்றாகும். “மாநிலம் மற்றும் வெளியூரில் கோயில்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இந்த கிராமத்தைச் சார்ந்தே உள்ளன. இவ்வளவு வகையான இசைக்கருவிகளை வேறு எங்கும் உருவாக்க மாட்டார்கள்“ என்று அவர் கூறுகிறார்.

ஆனால், பெருவெம்பாவின் இளைஞர்கள் மற்ற வேலைகளுக்கு செல்ல துவங்கிவிட்டார்கள். “ இந்த இசைக்கருவிகள் தயாரிக்கும் பணிக்கு அதிக பொறுமையும்,  முயற்சியும் தேவை. கடின உழைப்பு மட்டும்தான் முதன்மையான முதலீடு. எனவே புதிய தலைமுறையினர் மற்ற வேலைக்கு செல்ல பார்க்கிறார்கள்“ என்று 29 வயதான எம்.ரவிச்சந்திரன் கூறுகிறார். அவரின் 21 வயது சகோதரர் பாலக்காட்டில் உள்ள கல்லூரயில் வரலாறு முதுநிலை மாணவர். “வழக்கம்போல் நாங்கள் 12ம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, முழுநேரமாக இந்த வேலைககு வந்துவிடுகிறோம். இளைந்தலைமுறையினர் வித்யாசமாக உள்ளனர். இந்த கிராமும் அதன் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்வதற்கு போராடுகிறது“

பெருவெம்பாவில் உள்ள கடாச்சி கொல்லன் குடும்பத்தினர், ஊரடங்கு காலத்தில் சந்தித்த சிக்கல்களின் அளவு எதிர்பார்த்திராத ஒன்று என்று மணிகண்டன் கூறுகிறார். ஆனால் அவர் சிறந்த நாட்கள் எதிர்வருவதாக நம்புகிறார். டிசம்பர் மாதத்தில் கூட்டமைப்பிற்கு 12 இசைக்கருவிகள் பழுதுநீக்குவதற்காக வந்தது. ஜனவரியில் புதிய இசைக்கருவிகளுக்கான விசாரணைகளும் வரத்துவங்கிவிட்டன. “நாங்கள் பிப்ரவரி இறுதியில் எங்கள் வழக்கமான பணிகள் துவங்கிவிடும்போல் தெரிகிறது. சிறியளவு பணிகளாவது துவங்கப்படும் என்று எதிர்பார்கிறோம்“ என் அவர் மேலும் கூறுகிறார். “2021, 2020ம் ஆண்டை மீண்டும் பார்ப்பதுபோல் இருக்காது என்று நம்புகிறேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

K.A. Shaji

K.A. Shaji is a journalist based in Kerala. He writes on human rights, environment, caste, marginalised communities and livelihoods.

Other stories by K.A. Shaji
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.