“இங்கே ஹல்பி, கோண்டி மொழிகளில் இதனை கோதோண்டி என்கிறோம். குதிரையேற்றம் என்பது இதன் பொருள். இந்த குச்சியை கால்களுக்கடியில் வைத்துக் கொண்டு நடந்தால், ஓடினால் குதிரை போன்ற உணர்வை நீங்கள் உணரலாம்,” என்கிறார் கிபாய்பலேங்கா (கணக்கெடுப்பில் கிவாய்பலிகா என பட்டியலிடப்பட்டுள்ளது) கிராமவாசியும், இளம் ஆசிரியருமான கவுதம் சேதியா.
சத்திஸ்கரின் பஸ்தார் பிராந்தியம் கண்டோகான் மாவட்டம், கண்டோகான் வட்டாரத்தில் ஜக்தாஹின்பாரா எனும் கிராமத்தில் பதின்பருவத்தை எட்டாத சிறுவர்கள் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் இங்கு சிறுமிகள் இவ்விளையாட்டை விளையாடுவதை காண முடிவதில்லை. ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் விசேஷ நாட்களில் கொக்கலியாட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் விநாயகர் சதுர்த்திக்கு பிறகும் இந்த விளையாட்டு நயகானி (அல்லது சத்திஸ்கரின் பிற பகுதிகளில் நவகானி) வரை தொடர்கிறது.