அதிகாலை 2 மணி. அடர்த்தியான இருள். ‘இயந்திரப் படகு’ என அழைக்கப்படும் படகில் ராமநாதபுரக் கரையில் நாங்கள் ஏறியிருந்தோம்.

’இயந்திரப் படகு’ என்கிற அந்த விஷயம் அடிப்படையில் கைவிடப்பட்ட, ஓர் ஆதிகால படகுக்கு லேலண்ட் பேருந்தின் எஞ்சினை (அதுவும் 1964ம் ஆண்டிலேயே செயலிழந்து, பிறகு இந்தப் படகுக்காக பழுது பார்த்து பொருத்தப்பட்டு, இப்பயணத்தை நான் மேற்கொண்ட 1993ம் ஆண்டிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது) பொருத்தி இயக்கப்படுவதாகும். உள்ளூரிலுள்ள மீனவர்கள் போலல்ல நாங்கள். எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. அதிகபட்சமாக வங்காள வளைகுடா கடலின் ஏதோவொருப் பகுதியில் இருப்பதாகதான் என்னால் சொல்ல முடியும்.

கடலுக்கு நாங்கள் வந்து 16 மணி நேரங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் ஐந்து பேர் கொண்ட குழுவின் முகங்களில் புன்னகை மறையவேயில்லை. அவர்களின் பெயர்கள் யாவும் ‘ஃபெர்னாண்டோ’ என்ற பெயரைக் கொண்டிருந்தது. இங்கிருக்கும் மீனவர் மத்தியில் இயல்பாக வழங்கப்படும் பெயர் அது.

இயந்திரப் படகில் விளக்கு இல்லை. ஃபெர்னாண்டோக்களில் ஒருவர் பிடித்திருக்கும் தீப்பந்தம் மட்டும்தான் வெளிச்சம். எனக்கு ஒரு கவலை இருந்தது. இந்த இருட்டுக்குள் எப்படி நான் புகைப்படங்கள் எடுப்பது?

அந்தப் பிரச்சினையை மீன்கள் தீர்த்து வைத்தன.

அவை வலைக்குள்ளிருந்து ஒளிர்ந்தபடி மேலே வந்தன (எதனால் ஒளிர்ந்தன எனத் தெரியவில்லை). படகுக்குள் அவை இருந்த பகுதிக்கு வெளிச்சம் பாய்ச்சின. அந்த வெளிச்சத்தை பிரதிபலித்ததில் விரும்பிய வேலை நடந்தது. சில புகைப்படங்களை நான் ‘ஃப்ளாஷ்’ (எனக்கு பிடிக்காத உபகரணம்) இல்லாமலே கூட எடுக்க முடிந்தது.

ஒரு மணி நேரம் கழித்து, இதுவரை நான் உண்ணாத அளவுக்கான புது மீன் எனக்கு வழங்கப்பட்டது. ஒரு பெரிய தகரம் கவிழ்க்கப்பட்டு, அடிப்பகுதி துளையிடப்பட்டு மீன் சமைக்கப்பட்டது. அந்த தகரத்துக்கு அடியில் எப்படியோ அவர்கள் தீ மூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் நாங்கள் கடலில் இருந்தோம். ராமநாதபுரக் கரையிலிருந்து 1993ம் ஆண்டில் மூன்று முறை கடலுக்கு சென்றிருக்கிறேன். எல்லா நேரங்களிலும் மீனவர்கள் சந்தோஷத்துடனும் சிறந்த திறனுடனும் மிகவும் அடிப்படையான உபகரணத்துடன் கடுமையான சூழல்களில் பணிபுரிந்தனர்.

Out on a two-night trip with fishermen off the coast of Ramnad district in Tamil Nadu, who toil, as they put it, 'to make someone else a millionaire'
PHOTO • P. Sainath

இருமுறை நாங்கள் கடலோரக் காவல் படையால் சோதிக்கப்பட்டோம். இது நடந்தது விடுதலைப்புலிகளின் காலத்தில். இலங்கை சில கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. நம்பத்தகுந்த பத்திரிகையாளர்தான் நான் என ராமநாதபுர ஆட்சியர் கொடுத்த கடிதத்தை கடலோர காவல் படையினர் வெறுப்புடன் சரிபார்த்து ஏற்றுக் கொண்டனர்.

இந்தக் கரையில் இருக்கும் மீனவர்களில் பெரும்பாலானோர் கடனில் இருக்கிறார்கள். மிகக் குறைந்த ஊதியத்துக்கு பணிபுரிகிறார்கள். அவர்களின் ஊதியம் மீன்களும் பணமும் சேர்ந்ததாகக் கொடுக்கப்படும். நான் சந்தித்த அந்த மீனவர்களில் அதிகபட்சம் படித்தவராக இருந்தவரே 6ம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். அவர்கள் பயணிக்கும் பெருமளவுக்கான அபாயச் சூழலை கருத்தில் கொண்டால், அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைவுதான். உதாரணமாக அவர்கள் பிடிக்கும் இறாளுக்கு ஜப்பான் நாட்டில் பெரிய விலை கிடைக்கும். இத்தகைய படகில் செல்லும் மீனவர்களுக்கும் இயந்திரமற்ற, நாட்டுப் படகுகளில் செல்லும் மீனவர்களுக்கும் இடையே பெரிய வர்க்க வேற்றுமைகள் இருப்பதில்லை.

இரு தரப்புமே வறுமையில் இருப்போர்தான். சிலர் மட்டும் சொந்த படகுகளை கொண்டிருப்பார்கள். எவரிடமும் இயந்திரப் படகு நிச்சயமாகக் கிடையாது. அதிகாலையில் மீண்டும் ஒருமுறை மீன் பிடித்துவிட்டு நாங்கள் நிலத்துக்கு திரும்பினோம். பெர்னாண்டோக்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் இருப்புக்கு பின்னிருக்கும் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்த என் முகம்தான் அவர்களின் புன்னகைக்கு காரணம்.

அவர்களில் ஒருவர் சொன்னார்: ”அது மிகவும் சுலபம். வேறொருவரை கோடீஸ்வரராக்க நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.”


இக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் The Hindu BusinessLine- ல் ஜனவரி 19, 1996 அன்று பிரசுரமானது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan