குஜராத்தின் கேதா மாவட்டத்திலுள்ள தந்தால் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் பாய் மனுபாய் படேல் தன் பூர்விக வீட்டுக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். வீடு இடியும் நிலையில் இருந்தது. சுவர் பூச்சு உதிர்ந்திருந்தது. நிறம் மங்கிய செங்கற்கள் வெளியில் தெரிந்தன.

முதிய விவசாயி நடுங்கிய விரலால் ஓர் அறையை சுட்டிக் காட்டுகிறார். அந்த அறை அவருக்கு முக்கியமான அறை. அங்குதான் அவர் 82 வருடங்களுக்கு முன் பிறந்தார். ரமேஷ்பாய் அந்த வீட்டுடன் உணர்வால் ஒன்றிப் போயிருந்தார். குறிப்பாக அந்த அறையோடு.

அந்த அறையும் வீடும் சுற்றியுள்ள விவசாய நிலமும் புல்லட் ரயில் திட்டத்துக்காக பறிக்கப்படும் சூழல் இருந்தது. அந்த நிலத்தில்தான் குடும்பத்துக்கு தேவையான நெல்லையும் காய்கறிகளையும் அவர்கள் விளைவிக்கிறார்கள்.

அதிவிரைவு ரயில் 3 மணி நேரத்தில் 508 கிலோமீட்டர்கள் பயணிக்கவல்லது. குஜராத்துக்குள் மட்டும் 350 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும். 2 கிலோமிட்டர்கள் தாத்ரா நாகர் ஹவேலியிலும் 155 கிலோமிட்டர்கள் மகாராஷ்ட்ராவிலும் பயணிக்கும் ரயில். மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் அகமதாபாத்தின் சபர்மதி ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே ரயில் ஓடுமென தேசிய அதிவிரைவு ரயில் இணையதளம் தெரிவிக்கிறது.

Hiteshkumar Patel (far left) of Davda village with other villagers
PHOTO • Ratna
Rameshbhai to loose his land for bullet train
PHOTO • Ratna

இடது: தாவ்தா கிராமத்தின் ஹிதேஷ்குமார் படேல் (இடது கடைசியில்), ‘என் உணவை அவர்கள் பறிக்கிறார்கள். புல்லட் ரயிலால் எங்களுக்கு என்ன லாபம்?’ என கேட்கிறார். வலது: ரமேஷ்பாய் அவருடைய நிலத்தை ஏற்கனவே மூன்று முறை இழந்துவிட்டார்

1.10 லட்சம் கோடி ரூபாய் செலவிலான அதிவிரைவு ரயில் திட்டத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களின் அரசுகள் பங்கு வகிக்கின்றன. திட்டச் செலவில் 81 சதவிகிதத்தை ஜப்பான் நாட்டு அரசு கொடுக்கிறது. 2017ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 14ம் தேதி திட்டத்துக்கான அடிக்கல் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் அகமதாபாத்தில் நாட்டப்பட்டது. 2022ம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்திலிருந்து அதிவிரைவு ரயில் இயங்கத் தொடங்குமென இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.

திட்டத்தால் பாதிக்கப்படவிருக்கும் குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய இடங்களின் 296 கிராமங்களில் இருக்கும் 14884 குடும்பங்களில் ஒன்று ரமேஷ்பாயின் குடும்பம். வீட்டை இழப்பது மட்டுமின்றி, அக்குடும்பங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட 1432.28 ஹெக்டேர்கள் நிலம் திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும். 37,394 மரங்கள் பாதிக்கப்படும்.

கிராமப்புறத்தில் இருக்கும்  நிலங்களை கையகப்படுத்த சந்தை விலையிலிருந்து நான்கு மடங்கு விலையும் நகர்ப்புற வளர்ச்சி ஆணைய கட்டுப்பாட்டுக்கு கீழ் வரும் விவசாய நிலங்களுக்கு இரு மடங்கு விலையும் மத்திய அரசின் நிவாரணமாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கும் நான்கு மடங்கு விலை நிவாரணமாக வழங்கப்படும் என 2018ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் குஜராத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கவுஷிக் படேல் சொல்லியிருக்கிறார்.

House to be acquire for Ahmedabad-Mumbai bullet train
PHOTO • Ratna
House to be acquire for Ahmedabad-Mumbai bullet train
PHOTO • Ratna

புல்லட் ரயில் திட்டம் குஜராத், மகாராஷ்ட்ரா, தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய இடங்களிலுள்ள 296 கிராமங்களை பாதிக்கும்

ஆனால் ரமேஷ்பாயும் மற்றவர்களும் நிலத்தை கொடுக்க மறுத்திருக்கிறார்கள். “எனக்கு நிவாரணம் தேவையில்லை. நிலம் எனக்கு விலைமதிப்பற்றது,” என்கிறார் அவர்.

ரமேஷ்பாயை பொறுத்தவரை ஏற்கனவே அவரை பாதித்த பல நஷ்டங்களின் வரிசையில் புல்லட் ரயில் உருவாக்கும் நஷ்டமும் வரவிருக்கிறது. 2015ம் ஆண்டில், குஜராத் அரசு அவரது 40 குந்தா நிலத்தை (1 ஏக்கர் என்பது 40 குந்தாக்கள். அவருக்கு சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது) சரக்குப் பாதை அமைக்க கையகப்படுத்தியது. ’அப்போது அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ஒரு குந்தாவுக்கு 3 லட்ச ரூபாயாக இருந்தது,” என்கிறார் அவர். “ஆனால் மாநில அரசு ஒரு குந்தாவுக்கு 12500 ரூபாய் மட்டும்தான் கொடுத்தது. சரியான நிவாரணத்துக்காக நான் முறையீடு செய்தேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

”எத்தனை முறைதான் என் சம்மதமின்றி என் நிலம் பறிக்கப்படும், சொல்லுங்கள்?,” என புலம்புகிறார். “அரசு மூன்று முறை என் நிலத்தை பறித்துவிட்டது. முதலில் ஒரு தண்டவாளம் போடவென பறித்தது. பிறகு ஒரு நெடுஞ்சாலைக்காக. மூன்றாவது முறை சரக்குப் பாதைக்காக. இப்போது புல்லட் ரயிலுக்காக மறுபடியும் என் நிலத்தை அவர்கள் பறிக்கவிருக்கிறார்கள்.”

நிலமிழக்கும் துயர் பாதித்ததில் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு மருத்துவரை சென்று பார்க்கிறார் ரமேஷ் பாய். “பெரும் பதற்றத்துக்குள்ளாகிறேன். என்ன செய்வது,” என அங்கலாய்க்கிறார். “என்னை தொந்தரவு செய்யும் விஷயம் என்னவென மருத்துவரிடம் சொன்னேன். என் நிலத்தை திரும்பத் திரும்ப நான் இழந்து கொண்டிருந்தால், எப்படி பயமோ பதட்டமோ இல்லாமல் நான் வாழ முடியும்? சொல்லப்போனால், புல்லட் ரயிலுக்காக தன் வீட்டை இழந்துவிட்டதாக அந்த மருத்துவர் கூறினார்."

Farmland to be acquire for Ahmedabad-Mumbai bullet train
PHOTO • Ratna
stone markings on my farmland for Ahmedabad-Mumbai bullet train
PHOTO • Ratna

2018ம் ஆண்டில், திட்டத்துக்கான சர்வேயர் சரோல், தாவ்தா மற்றும் குஜராத்தின் பிற கிராமங்களுக்கு சென்றார். ‘அவர்கள் விவசாய நிலத்தில் அளவைக் கல்லை நட்டு விட்டு சென்றுவிட்டார்கள்,’ என்கிறார் ஹிதேஷ் குமார்

புல்லட் ரயில் திட்டத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. மனுக்கள் கொடுக்கப்பட்டன. குஜராத் மாநிலத்தில் இருக்கும் குஜராத் கேதுத் சமாஜ் என்கிற விவசாய சங்கம், திட்டத்துக்கான அவசியமும் சாத்தியமும் என்னவென கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.

குஜராத்தின் கேதா மாவட்டத்திலுள்ள தாவ்தா கிராமத்தின் ஹிதேஷ் குமார் நர்சிபாய் என்பவரும் 10 பிகா நிலத்தை இழக்கவிருக்கிறார் (6.25 பிகா நிலம் ஒரு ஏக்கர். அவருக்கு சொந்தமாக 25 பிகா நிலம் இருக்கிறது). “அவர்கள் என் உணவை பறிக்கிறார்கள்,” என்கிறார் அவர். “புல்லட் ரயிலால் எங்களுக்கென்ன லாபம்? எங்களை போன்ற விவசாயிகளுக்கு அதனால் எந்த பயனும் இல்லை. தற்போது இருக்கும் ரயில்களே எங்களுக்கு வசதியாக இருக்கிறது. எங்களின் இலக்குகளை சரியான நேரத்தில் நாங்கள் அடைந்துவிடுகிறோம். இந்த புல்லட் ரயில் உண்மையில் தொழிலதிபர்களுக்கு மட்டும்தான். எங்களுக்கு கிடையாது.”

2018ம் ஆண்டின் மே மற்றும் ஜுன் மாதங்களில் நிலத்தை அளவிடுபவர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி தாவ்தாவுக்கு வந்தார்கள் என்கின்றனர் கிராமத்தில் இருப்பவர்கள். “அவர்கள் என் விவசாய நிலத்தில் அளவைக் கல்லை நட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்,” என்கிறார் 52 வயது ஹிதேஷ் குமார். “ஏன் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ரொம்ப தாமதமாகத்தான் ஒரு தண்டவாளம் என் விவசாய நிலத்தில் பதிக்கப்படவிருப்பதை நான் தெரிந்து கொண்டேன். என்னிடம் ஆலோசிக்கவேயில்லை. எனக்கு அவர்கள் எப்படி நிவாரணம் கொடுப்பார்கள் என்பது கூட எனக்கு தெரியாது.”

Govardhanbhai Jada loosing their land which is only source of income
PHOTO • Ratna
Jasodaben of Chaklasi loosing their land which is only source of income
PHOTO • Ratna

சக்லசி கிராமத்தின் கோவர்தன்பாயும் அவரின் தாய் யசோதா பென்னும், “அவர்கள் எங்களின் ஒரே வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கவிருக்கிறார்கள்,” என சொல்கிறார்கள்

நில அளவை செய்பவர்கள் வந்து சென்ற பிறகு சில கிராமவாசிகள் கூடினர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து திட்டத்துக்கான தங்களின் எதிர்ப்பை திட்டவட்டமாக தெரிவித்தனர். கேதா மாவட்டத்தின் சில விவசாயிகள் அளவை பணியை தடுக்கக் கூட முயன்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சக்லசி கிராமத்தில் வசிக்கும் கோவர்தன்பாய் ஜாதவ். அதிகாரிகள் வந்து நிலத்தை அளக்கத் தொடங்கியதும் அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என குடும்பத்திலிருந்த 30 பேருக்குமே தெரியவில்லை.

“பிற கிராமவாசிகளிடமிருந்துதான் புல்லட் ரயில் திட்டம் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டோம், அதிகாரிகளிடமிருந்து அல்ல,” என்கிறார் கோவர்தன்பாய் தெளிவாக. “எங்களிடம் எதையும் அரசு சொல்லவேயில்லை. அரசு எங்களின் இடத்தை எடுத்துக் கொள்ளப் போவதால் நாம் நிற்கும் நிலத்தில் இந்த வருடம் நாங்கள் விதைக்கக் கூட இல்லை… திட்டம் தொடங்கப்பட்டால் என்னுடைய எல்லா நிலமும் பறிபோய்விடும்.”

நிலம் அளக்க இரண்டாவது முறை வந்தபோது கிராமவாசிகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கின்றனர் அதிகாரிகள். “மீண்டும் அவர்கள் வந்தபோது, அதுவும் காவலர்களுடன் வந்தபோது, இங்கிருக்கும் எல்லா பெண்களும் சுத்தியல் மற்றும் கற்களை கொண்டு அவர்களை விரட்டி அடித்தோம்,” என்கிறார் கோவர்தன்பாயின் தாயான யசோதாபென். “அவர்கள் எங்களின் ஒரே வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கவிருக்கிறார்கள். நாங்கள் எங்கு செல்வது? எங்களுக்கு புல்லட் ரயில் தேவையில்லை. எங்களின் பிணங்களை தாண்டித்தான் எங்கள் நிலங்களை நீங்கள் எடுக்க முடியும்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Ratna

Ratna is a journalist, author, documentary filmmaker, amateur photographer and a traveller based in Delhi-NCR.

Other stories by Ratna
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan