தேவ் போரே 30 ஆண்டுகளாக கயிறுகளை தயாரித்து வருகிறார். பலவீனமான பருத்தி இழைகளை, அதிக இழுவிசைத்திறன் கொண்ட நூல்களிலிருந்து பிரிப்பார். அவற்றை வீட்டின் தரையில் போட்டு இழுப்பார். அவற்றை அவரது வீட்டின் தரையிலிருந்து ஒன்பது அடி உயரமுள்ள கூரையில் ஒரு கொக்கியில் மாட்டி,  தலா 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள நூல்பண்டல்களாக மாற்றுவார். இத்தகைய 10 பண்டல்களை ஏழு மணி நேரத்தில் தயாரிக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இவற்றை தயாரிக்க வேண்டும்.

அவர்களின் குடும்ப வியாபாரத்தில் பருத்தி என்பது தாமதமாக நுழைந்ததுதான். பல தலைமுறைகளாக, அவரது குடும்பம் கத்தாழை செடியிலிருந்து கயிறுகளை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து செய்ய முடியாதபோது, ​​அவர்கள் பருத்திக்கு மாறினர். இப்போது அதுவும் நலிந்த தொழிலாக மாறுகிறது. எங்கும் நைலான் கயிறுகள் பெருகிவிட்டன.

தேவு ஒரு சிறுவனாக இருந்தபோது, ​​அவரது தந்தை மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை கிராமங்களுக்கு அருகிலுள்ள காடுகளுக்கு 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மராத்தியில் கய்பத் என்றும், உள்நாட்டில் ஃபட் என்றும் அழைக்கப்படும் நீலக்கத்தாழை செடியைச் சேகரிப்பார். அவர் சுமார் 15 கிலோவைக் கொண்டு வருவார். இலைகளின் முள் விளிம்புகளை அகற்றிய பிறகு, அவற்றை ஒரு வாரம் தண்ணீரில் ஊறவைத்து இரண்டு நாட்கள் உலர்த்துவார். இந்த செயல்முறையில்  கயிறு தயாரிக்க இரண்டு கிலோ நார்ச்சத்து கிடைக்கும். தேவுவின் தாய் மைனாபாயும் இந்த வேலையைச் செய்வார். 10 வயதாக இருக்கும்போது தேவுவும் அம்மாவுக்கு அவ்வப்போது உதவுவார்.

1990 களின் முற்பகுதியில், போர்ஸ் மற்றும் பிற குடும்பங்கள் கத்தாழை இழைகளுக்குப் பதிலாக பருத்தி நூலைப் பயன்படுத்தத் தொடங்கின. பருத்தி நீண்ட காலம் நீடித்தது. அது தவிர, “மக்கள் காடுகளை வெட்டித் தள்ளிவிட்டனர். கத்தாழை செடியை நீண்டகாலம் ஊறவைத்தல் மற்றும் உலர்த்தும் செயல்முறையும் ஒரு காரணம். அதனால்  கத்தாழை இழைகளை விட பருத்தி நூலைப் பயன்படுத்துவது எளிது ” என்கிறார் தேவ் .

1990களின் பிற்பகுதி வரை, அவரது கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கயிறுகளைத் தயாரித்தன என்று தேவு மதிப்பிடுகிறார். இவர் பெல்காம் மாவட்டத்தில் சிக்கோடி தாலுகாவின் போரகான் கிராமத்தில் வசித்து வருகிறார். மலிவான நைலான் கயிறுகளின் வருகையுடன் வருமானம் வீழ்ச்சியடையத் தொடங்கியபோது, ​​பலர் அருகிலுள்ள கிராமங்களில் விவசாயப் பணிகளுக்குத் திரும்பினர். அல்லது அருகிலுள்ள இச்சல்கரஞ்சி மற்றும் ககல் நகரங்களில் உள்ள விசைத்தறிகள் அல்லது ஆட்டோக்களைப் பழுது பார்க்கும் பட்டறைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்றனர்.

PHOTO • Sanket Jain

போரே குடும்பத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இப்போது போராகான் கிராமத்தில் கயிறுகளை உருவாக்குகிறார்கள் - தேவ், அவரது மனைவி நந்துபாய் மற்றும் அவர்களின் மகன் அமித்

போரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இப்போது இந்தக் கிராமத்தில் கயிறுகளை உருவாக்குகிற பணியைப் போராடி  தக்க வைத்துள்ளனர். தேவ், அவரது மனைவி நந்துபாய் மற்றும் அவர்களது மூத்த மகன் அமித் ஆகியோர்தான் அந்த  மூன்றுபேர். அமித் மனைவி சவிதா தையல் வேலை செய்கிறார். அயோங்கர் மகனான 25 வயதான பாரத்,  காகல் தொழிற்பேட்டையில் ஒரு தொழிலாளியாக பணியாற்றுகிறான். இரண்டு மகள்களான மலனுக்கும் ஷலனுக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் இல்லத்தரசிகளாக உள்ளனர்.

"பல நூற்றாண்டுகளாக, எங்கள் சாதி மட்டுமே கயிறுகளை உருவாக்கிக்கொண்டிருந்தது" என்று 58 வயதான தேவ் கூறுகிறார். அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்த மாடாங் சமூகத்தைச் சேர்ந்தவர். "நான் எங்கள் முன்னோர்களின் கலை வடிவத்தை உயிருடன் வைத்திருக்கிறேன்." என்கிறார் தேவ். அவரது குடும்பத்தில் கயிறுகளை உருவாக்கும் பணியில் நான்காவது தலைமுறை அவர். அவர் 2 ஆம் வகுப்பு வரைதான் படித்தார். ஆனால், அவரது பெற்றோருக்கு அவரை மேலும் படிக்க வைக்க  முடியவில்லை.  மேலும், அவர்களின் நான்கு மாடுகளிலிருந்தும் பால் கறக்கவே தினமும் மூன்று மணி நேரம் ஆகும். அதனால் பள்ளிக்கு போவதற்கு நேரம் கிடைப்பது கடினம்.

குடும்பத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பு, இச்சல்கரஞ்சியில் 10 ஆண்டுகள் வீடுகளுக்கு வண்ணம் தீட்டுபவராக தேவு பணியாற்றினார். குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஒரு ஏக்கர் பண்ணையில் மழையைப் பொறுத்து நிலக்கடலை, சோயாபீன் மற்றும் காய்கறிகளை இடைவிடாமல் பயிரிட்டார். இதெல்லாம் ஆறு வருடங்கள் செய்து பார்த்த பிறகு, 28 வயதில் தேவ் தனது தந்தை கிருஷ்ணா போருடன் கயிறுகளை தயாரிப்பதில் சேர்ந்தார்.

போராகானில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இச்சல்கரஞ்சியில் பருத்தி நூலை மொத்த விலைக்கு தேவ் இப்போது வாங்குகிறார். ஒரு குவிண்டால் அல்லது நூறு கிலோக்களின் விலை 3,800 ரூபாய். 15 நாட்களுக்கு ஒரு முறை போரே குடும்பம் சுமார் 100 கிலோ பருத்தி நூலைப் பயன்படுத்துகிறது. சுமார் பன்னிரண்டு அடி நீளமுள்ள 150   கயிறுகளையும் உருவாக்குகிறது. அவை ஒவ்வொன்றும் 550 கிராம் எடை இருக்கும். சின்னக் கயிறுகளின் ஒரு கட்டும் தயாராகும்.

பருத்தி நூலைத் தயார் செய்வதில்  வாரத்தில் மூன்று நாட்கள் அவருக்குத்  தேவைப்படும். மற்ற நாட்களில் ஆர்.கே. நகரில் உள்ள அவரது  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு மண் சாலைக்கு அடுத்ததாக, 120 அடி ‘கயிறு-நடை’ வழியாக நூல் கற்றைகளை அவர் நீட்டுகிறார். நகர். ஒரு முனையில் ஒரு இயந்திரத்தோடு அமித் இருப்பார். அதில்  ஆறு சிறிய கொக்கிகள் உள்ளன.  அதில் நூல் கற்றைகள் கட்டப்பட்டுள்ளன. மறுமுனையில் போர் காடி எனப்படும் ஆங்கில எழுத்து Tஇன் வடிவத்தில் உள்ள ஒரு கம்பியுடன் நந்துபாய் உட்கார்ந்திருப்பார். அதிலும் நூல் கற்றைகள் இணைக்கப்பட்டுள்ளன.

இன்னொரு கம்பியைச் சுற்றியதும் ​​கொக்கிகள் சுழல்கின்றன. நூல் முறுக்கப்படுகிறது. நூல் கற்றைகளுக்கு இடையில் மரத்தால் செய்யப்பட்ட கர்லா எனும் பெயர்கொண்ட ஒரு கருவியை தேவ் வைக்கிறார். அதை நூல்கற்றையின் முழு நீளத்துக்கும் நகர்த்துகிறார். அதனால் இறுக்கமாகவும் சமமாகவும் நூல்கள் முறுக்கப்படுகின்றன. இந்த முறுக்குதல் பணிக்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகும். மூன்று பேரின் உடல் உழைப்பும் தேவைப்படும். முறுக்கல் முடிந்ததும், கயிறுகளைத்  தயாரிக்க, இழைகளை ஒன்றாக முறுக்குவதற்கு அவை தயாராக உள்ளன.

PHOTO • Sanket Jain

நாங்க கடுமையா உழைக்கிறோம் ஆனால் நிறைய சம்பாதிப்பதில்லை. மக்கள் எங்ககிட்ட இருந்து வாங்காமல் பஜாரில் உள்ள கடைகளில் வாங்குகிறார்கள். ரோட்டுல விற்கிற கயிறுகளை விட கடைகளில் நல்லா இருக்கும்னு நம்புறாங்க

கிடைக்கிற ஆர்டர்களைப் பொறுத்து சில நேரங்களில், தேவ் கயிறுகளாக முறுக்குவதற்கு முன்பாக, நூலிழைகளுக்கு வண்ணங்கள் தீட்டுவார். இந்த வண்ணங்களை வாங்குவதற்காக, மகாராஷ்டிராவின் மீராஜ் நகரத்திற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை 30 கிலோமீட்டர் தூரம் அவர் பேரூந்தில் பயணம் செய்வார். வண்ணப் பொடியின் விலை  250 கிராமுக்கு 260 ரூபாய். அதை ஐந்து லிட்டர் தண்ணீரில் சேர்த்து, அதில் உள்ள நூல் இழைகளை நனைப்பார். ஈரமான இழைகள் வெயிலில் காயுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும்.

தேவுவின் குடும்பம் விவசாயிகளுக்காக இரண்டு வகையான கயிறுகளை உருவாக்குகிறது: ஒரு காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மூன்று அடி நீள கயிறு. அதை அங்கே  கந்தா என்பார்கள். நிலத்தை உழுகிற கலப்பையுடன் கட்டப்படுகிற 12 அடி நீள கயிறு ஒன்று. அதனை கஸ்ரா என்பார்கள். சில வீடுகளில், அறுவடை செய்யப்பட்ட பயிர்களைக் கட்டுவார்கள். குழந்தைக்கான தொட்டிலை, வீட்டின் கூரையிலிருந்து கட்டுவதற்காக அதைப் பயன்படுத்துவார்கள். இந்த கயிறுகளை சண்டல்கா, கரடகா, அக்கோல், போஜ் மற்றும் கர்நாடகாவின் கலட்கா கிராமங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் குருந்த்வாட் ஆகிய இடங்களில் வாராந்திர சந்தைகளில் இந்த குடும்பத்தினர் விற்கிறார்கள். சாயம் பூசப்பட்ட கஸ்ரா கயிறுகள் ஒரு ஜோடி 100 ரூபாய்க்கும் வெள்ளை நிற கயிறுகள் ஒரு ஜோடி 80 ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றன;  சாயம் பூசப்பட்ட காந்தா கயிறுகள் ஒரு ஜோடி 50 ரூபாய்க்கும் வெள்ளை நிற கயிறுகள் ஒரு ஜோடி 30 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

"நாங்கள் இதிலிருந்து அதிகம் சம்பாதிக்கவில்லை" என்கிறார் 30 வயதான அமித். சராசரியாக, இந்தக் குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் செய்கிற எட்டு மணிநேர வேலைக்கு ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் கிடைக்கிறது. இந்தக் குடும்பத்துக்கு ஒரு மாதம் வருகிற  வருமானம் வெறும் 9,000 ரூபாய்தான். " ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில், காளைகளுக்காகவே விசேசமாக வருடாவருடம் நடத்தப்படுகிற, பெண்டூர் அல்லது போலா திருவிழாக்களின்போது வண்ணம் போடப்பட்ட கயிறுகளுக்கு நல்ல கிராக்கி இருக்கும் " என்று தேவ் கூறுகிறார். அவருக்கும் அவரது நான்கு சகோதரர்களுக்கும் சொந்தமாக  ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதிலிருந்து 10,000 ரூபாய் அவருக்கு வருடாவருடம்  குத்தகைப் பணமாக வருகிறது. அந்த நிலத்தை ஒரு குத்தகை விவசாயிக்கு அவர்கள் குத்தகைக்கு விட்டுள்ளார்கள்.

“நிறைய காளை மாடுகளை வைத்துக்கொண்டு விவசாயம் நடப்பதை எல்லாம் இனிமேல் நீங்கள் பார்க்க முடியாது" என்று தேவ் கூறுகிறார். “விவசாயத்தை இப்போ இயந்திரங்களை வைச்சுதான் செய்றாங்க. இந்த கயிறுங்கள யார் இனி வாங்குவாங்க? ” என்கிறார் 50 வயதான நந்து பாய். மகாராஷ்டிராவின் ஜெய்சிங்பூர் நகரத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் அவர்.  அவருக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. அப்போதிலிருந்து கயிறுகளைத் தயாரித்து வருகிறார்.“ பிளாஸ்டிக் கயிறுகளும் நைலான் கயிறுகளும் ரொம்ப காலம் உழைக்கும். அதனால பருத்தியில செய்ற இந்தக் கயிறுகளின் தேவை ரொம்பவும் குறைந்துவிட்டது. இன்னும் இரண்டு வருடங்கள் கூட இந்தத் தொழிலைத் தொடர எங்களால் முடியாது”

வருமானம் இல்லாத இந்த தொழிலால் வெறுப்படைந்த போன அமித் “பெரிய கடைக்காரர்கள் எங்கள் கயிறுகளை விற்று உட்கார்ந்து கொண்டே லாபம் சம்பாதிக்கிறார்கள். நாங்கள் கடினமாக உழைக்கிறோம், ஆனால் எங்களுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மக்கள் எங்களிடமிருந்து கயிறுகளை வாங்குவதில்லை. பெரிய கடைக்காரர்களிடமிருந்துதான் வாங்குகிறார்கள். “சாலையோரங்களில் விற்கப்படும் கயிறுகளை விட கடைகளில் உள்ள கயிறுகள் சிறந்தவை” என்று அவர்கள் நம்புகிறார்கள்.” என்கிறார் அவர்.

PHOTO • Sanket Jain

வீட்டின் தரையிலிருந்து வீட்டுக்கூரையில் உள்ள கொக்கியில் மாட்டி பருத்தி நூலின் இழைகளை இழுத்து தலா 1.5 முதல்  2 கிலோ எடை உள்ள நூல்கற்றைகளைத் தயாரிக்கிறார் தேவு

PHOTO • Sanket Jain

தேவு போரேவின் அப்பா காலத்தில் கயிறுகளை திரிக்க மரத்தாலான ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போது அவர்கள் 20 கிலோ எடையைவிட கூடுதலாக இருக்கும் இரும்பாலான இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்

PHOTO • Sanket Jain

நூல் இழைக் கற்றைகள் சுழலும் கொக்கிகளில் கட்டி, முறுக்கப்படுகின்றன. கயிறுகளாகத் திரிக்கப்படுவதற்கு வசதியாக இருக்கிற அளவுக்கு இவை முறுக்கப்படுகின்றன

PHOTO • Sanket Jain

தேவுவும் அவரது குடும்பத்தாரும் வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில்தான் இந்த கயிறு தயாரிக்கும் பணியைச்செய்கிறார்கள். நூல் இழைக்கற்றைகளின் ஒரு முனை இயந்திரத்திலும் இன்னொரு முனை பொற்காடி எனப்படும் ஆங்கில எழுத்து ‘T’ போன்ற ஒரு கருவியிலும் கட்டப்பட்டிருக்கும்

PHOTO • Sanket Jain

மகாராஷ்ட்ராவின் மிராஜ் நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட வண்ணப்பொடி தண்ணீரில் கலக்கப்படுகிறது. தேவுவும் அவரது மூத்த மகன் அமித்தும் நூல்கற்றைகளை இந்தச் சாயத்தில் தோய்க்கின்றனர். இந்தச் சாயத்தில் பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு அவை இரண்டு மணி நேரம் சூரிய ஒளியில் காய வைக்கப்படும்

PHOTO • Sanket Jain

நூல்கற்றைகளை முறுக்குவதும் சாயம் ஏற்றுவதும் மிகவும் சிக்கலான வேலைகள். தேவு, நந்து பாய், அமித் மூன்றுபேரும் இணைந்து செய்ய வேண்டிய வேலை அது

PHOTO • Sanket Jain

நூல்கற்றைகளை வைத்துக்கொண்டு கயிறு தயாரிக்கிற பணியில் ஒரு முனையில் அமித் ஒரு இயந்திரத்தை இயக்கிக்கொண்டும் மறு முனையில் நந்து பாயும் இருக்கிறார்கள்

PHOTO • Sanket Jain

கயிறுகளை நீட்டவும் அவற்றுக்கு வண்ணம் தீட்டவும் செய்கிற பணியைச் செய்துகொண்டிருக்கின்றனர். இந்த வேலையில் பலகட்டங்கள் உள்ளன. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய தனித்தன்மையான வேலைப்பிரிவினை இருக்கிறது

PHOTO • Sanket Jain

நூல் கற்றைகளுக்கு நடுவில் கர்லா எனும் மரத்தாலான கருவியை தேவு வைக்கிறார். அது கயிறை உறுதியாகவும் எல்லா இடத்திலும் ஒரேமாதிரியாகவும் தயாரிக்க உதவுகிறது

PHOTO • Sanket Jain

போரே குடும்பத்தினர் காலை எட்டுமணி முதல் மாலை மூன்று மணி நேரம் வரை கயிறுகள் திரிக்கின்றனர். பக்கத்து கிராமங்களில் உள்ள சந்தைகளில் அவற்றை விற்கின்றனர்

PHOTO • Sanket Jain

பல கட்ட செயல்முறைகளுக்குப் பிறகு கயிறுகள் தயாராகிவிட்டன.12 அடி நீள கயிறுகளை எடுத்துச்செல்ல வசதியாக தாவுவும் அமித்தும் மடித்து எடுக்கிறார்கள்

மேலும் பார்க்க: The great Indian vanishing rope trick

தமிழில்: த நீதிராஜன்

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan