மும்பைக்கு பேரணியாகச் செல்வதெனத் தீர்மானித்து நாசிக்குக்கு வந்திருந்தார், கோபிநாத் நாயக்வாடி. ”ஓராண்டு காத்திருந்தோம்; ஆனால் அரசாங்கம் எங்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்த முறை அரசாங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பின்வாங்கமாட்டோம்..” என்கிறார், மகாராஷ்டிரத்தின் அகமதுநகர் மாவட்டம், அகோலா வட்டத்தைச் சேர்ந்த இந்த 88 வயது விவசாயி.

நாயக்வாடி நான்கு ஏக்கரில் பயிர்செய்வது வழக்கம். அதில் ஒரு ஏக்கர் அவருடைய சொந்த நிலம், மீதமுள்ள பகுதி வனத்துறையினுடையது. கடந்த ஆண்டில் ஒரே ஏக்கரில் மட்டும்தான் அவர் பயிர்செய்தார். ” ஊரில் குடிக்கவே தண்ணீர் இல்லை. இதில் எங்கே விவசாயம் செய்வது?” என எதிர்க்கேள்வி போட்டார். நாசிக் மாவட்டத்தின் வில்கோலி கிராம எல்லையில் அவரைச் சந்தித்த வேளை அது.. பிப்ரவரி 21 அன்று, நாசிக்கின் மகாமார்க் பேருந்துநிலையத்திலிருந்து மூன்று மணி நேரம் நடந்து 10 கி.மீ. தொலைவு பேரணிசென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள், பிற்பகல் 2.30 மணியளவில் உணவுக்காக இடைவேளை விட்டிருந்தார்கள். அகோலா வட்டத்தைச் சேர்ந்த 250 விவசாயிகளுடன் கோபிநாத்தும் வந்திருந்தார்.

தோட்டத்தில் உள்ள குழாய்க்கிணறு வறண்ட பிறகு அரசாங்கத்தின் சார்பில் ஆறு நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது

ஆண்டுதோறும் நாயக்வாடி குடும்பத்தினர் சோயாபீன், நிலக்கடலை, பாசிப்பயறு, வெங்காயம், கம்பு ஆகியவற்றை பயிரிடுவார்கள். அவர்களின் குழாய்க்கிணறு ஓராண்டுக்கு முன்னர் வறண்டுபோய்விட்டது. இப்போது அரசாங்கத்தின் சார்பில் ஆறு நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர்த்தொட்டி மூலம் கிராமத்துக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.2018-ல் நாயக்வாடி கிராமத்து கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடனாக ரூ.27 ஆயிரம் வாங்கியிருந்தார்.” அரை ஏக்கரில் வெங்காயம் நட்டோம். தண்ணீரில்லாமல் எல்லாம் கருகிப்போய்விட்டது..” என்றார் அவர். அந்தக் கடனை அடைப்பது குறித்து அவருக்கு கவலை. நான் என்ன செய்ய எனக் கேட்கிறார், எதிர்பார்ப்போடு.

கோபிநாத் 2018-ல் நாசிக்கிலிருந்து மும்பைக்கு நீண்ட பயணம் மேற்கொண்டார். நவம்பரில் டெல்லிக்கும் விவசாயிகள் பேரணியாகப் போனார். அவருடைய இணையர் பிஜ்லாபாயால் இந்த போராட்டங்களில் பங்கேற்கமுடியவில்லை; காரணம், ஊரில் ஒரு மாட்டையும் இரண்டு ஆடுகளையும் அவர் கவனித்துக்கொள்கிறார். அவர்களுக்கு 42 வயது மகன் பாலாசாகேப், விவசாயி; மூவரும் மணமாகி குடும்பமாகிவிட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் கோபிநாத்தும் பிஜ்லாபாயும் கிராமத்தில் வாழ்வாதாரத்துக்காக பீடி சுற்றிவந்தார்கள். “ ஆயிரம் பீடிக்கு ஒப்பந்தகாரர்கள் 100 ரூபாய் தருவார்கள். அதன் மூலம் மாதத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைத்துவந்தது.” ஆனால், அகோலா வட்டத்தில் திடீரென பீடி ஆலைகள் மூடப்பட்டன. காரணம், அங்கு கிடைத்துவந்த தெம்புர்னி இலைகள் மேற்கொண்டு கிடைக்காமல்போனது.

PHOTO • Sanket Jain

மும்பைக்கு இரண்டாவது முறையாக பேரணி செல்வதற்காக நாசிக்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் கோபிநாத் நாயக்வாடியும் ஒருவர்

நாயக்வாடி இப்போதைக்கு குடும்பத்துக்குச் சொந்தமான கால்நடைகளுக்கு தீவனம் தருவதைப் பார்த்துக்கொள்கிறார்; அத்துடன் சில சமயம் தோட்ட வேலையையும் செய்கிறார். அவரின் மகன் தோட்டத்தை கவனித்துக்கொள்கிறார். சஞ்சய்காந்தி நிராதர் ஓய்வூதியத் திட்டம் மூலம் மாதத்துக்கு அவருக்கு 600 ரூபாய் கிடைக்கிறது. இந்த 600 ரூபாயை வைத்து என்ன செய்யமுடியும் எனும் அவர், இந்தத் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக அதிகப்படுத்தவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை எனக் கூறுகிறார்.

”இந்த முறை அரசாங்கம் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்; தவறினால் நாங்கள் மும்பையிலிருந்து போகமாட்டோம்; அதைவிட இங்கேயே செத்துப்போவது மேல். கிராமத்தில் விவசாயம் எங்களை சாகடித்துக்கொண்டிருக்கிறது.“

எழுதியபின்னர் நடந்தது: ஐந்து மணி நேரத்துக்கும் மேல் அரசுத் தரப்புடன் அனைத்திந்திய விவசாயி சபை நடத்திய பேச்சுவார்த்தையில்,  எழுத்துபூர்வமாக அரசு உறுதிமொழி அளித்ததையடுத்து, பிப்.21 நள்ளிரவு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அரசின் உறுதிமொழியில் கூறப்பட்டிருந்தது. திரண்டிருந்த் விவசாயிகளிடம் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன், ” ஒவ்வொரு தனி பிரச்னையையும் குறிப்பிட்ட கால அளவில் தீர்ப்போம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொடர் கண்காணிப்புக் கூட்டங்களை நடத்துவோம்.” என்று கூறினார். “விவசாயிகளும் கூலி விவசாயிகளுமாகிய நீங்கள் மும்பைக்கு நடந்து வழியெல்லாம் கஷ்டப்படக்கூடாது. இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும். இப்போது இந்த உறுதிமொழிகளை நாங்கள் நிறைவேற்றுவோம்; ஆகையால் நீங்கள் இன்னொரு பேரணி செல்லவேண்டாம்.” என்றும் அவர் அழுத்தமாகக் கேட்டுக்கொண்டார்.

தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

Other stories by R. R. Thamizhkanal