வாக்குப்பதிவு நாளன்று, வாரணாசியில் இரு வரிசைகளை சல்மா கண்டார். ஒன்று ஆண்களுக்கு, இன்னொன்று பெண்களுக்கு. பங்காளி டோலா வாக்குப்பதிவு மையம், விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் ஒரு குறுகிய சந்திலுள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

25 வயது திருநங்கை, பெண்களுக்கான வரிசையில் நின்றார். ஆனால், “அனைவரும் வித்தியாசமாக பார்த்தனர். ஆண்கள் கண்டுகொள்ளாதது போல் நின்றனர். பெண்கள் சிரித்தபடி அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்,” என்கிறார் அவர்.

ஆனால் சல்மா பொருட்படுத்தவில்லை. “நான் கவலைப்படாமல் சென்றேன்,” என்கிறார் அவர். “வாக்குரிமை எனக்கு இருக்கிறது. நமக்கு தேவைப்படும் மாற்றத்தை கொண்டு வர அதை பயன்படுத்தினேன்.”

தேர்தல் ஆணையத் தரவுகளின்படி 48,044 “மூன்றாம் பாலின வாக்காளர்கள்” இந்தியாவில் இருக்கின்றனர். கணிசமான எண்ணிக்கையில் இருந்தாலும் வாக்காளர் அட்டை பெறுவது என்பது திருநருக்கு கஷ்டமான வேலை. வாரணாசியில் 300 திருநர் இருக்கின்றனர் என்றும் அவர்களுக்கு வாக்காளர் அட்டை பெறுவது சிரமமாக இருப்பதாகவும் பிரிஸ்மாடிக் என்கிற தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நீதி சொல்கிறார். “50 திருநருக்கு நாங்கள் வாக்காளர் அட்டைகள் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் வீட்டுக்கு சென்று உறுதிபடுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் விதி கொண்டிருக்கிறது. வீட்டுக்கு தங்களின் பாலினத்தை உறுதி செய்ய ஆட்கள் வருவதை இச்சமூகத்தை சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை,” என்கிறார் அவர்.

ஆனால் சல்மாவுக்கு பெரிய பிரச்சினை இருக்கவில்லை. “என்னுடைய அடையாளம் தெரியாதவர்களுடன் நான் வசிக்கவில்லை,” என்கிறார் அவர்.

PHOTO • Jigyasa Mishra

ஜுன் 1, 2024 அன்று வாக்களிக்க வாக்குமையத்துக்கு (இடது) சல்மா வாரணாசியில் சென்றபோது, ஆண்களுக்கும் பெண்களுக்குமென தனித்தனி வரிசைகள் இருப்பதை கண்டார். திருநங்கையும் சிறு வியாபாரியுமான சல்மா இரண்டாம் வரிசையில் இணைந்தபோது பலரும் அவரை வித்தியாசமாக பார்த்தனர். ஆனால் சல்மா உள்ளே சென்று வாக்களித்தார் (வலது). ‘நான் கவலை கொள்ளவில்லை,’ என்கிறார் அவர்

பேச்சு, நடை ஆகியவற்றுக்காக கேலி செய்யப்பட்டு 5ம் வகுப்போடு பள்ளிக்கல்வியை முடித்துக் கொண்ட, சல்மா தற்போது சகோதரருடன் வாழ்ந்து வருகிறார். பனராசி புடவைகளை விற்கும் சிறு வியாபாரம் நடத்தி மாதத்துக்கு 10,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். உள்ளூர் கடைகளிலிருந்து சல்மா புடவைகளை வாங்கி, பிற நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறார்.

கடந்த ஆறு வருடங்களாக வாரணாசியில் பாலியல் தொழிலாளராக பணிபுரிந்து வருமானம் ஈட்டுகிறார் திருநங்கையான ஷமா. “பல்லியா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என் பாலினத்தால் அங்கு நிறைய பிரச்சினை ஏற்பட்டது,” என விளக்குகிறார். “பக்கத்து வீட்டுக்காரர்கள் என் பெற்றோரை தொந்தரவு செய்தனர். என் தந்தையும் தாயும் நான் இயல்பாக இல்லாமல் இருப்பதற்காக திட்டுவார்கள். என்னை போல் பாலினமற்ற ஒருவரை பெற்றதற்காக அப்பா, அம்மாவை திட்டுவார். எனவே நான் வாரணாசிக்கு வந்து விட்டேன்.” தேர்தல் நாளன்று, அவர் வாக்கு மையத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டார். “கூட்டத்தையும் மக்களின் பார்வையையும் தவிர்க்க விரும்பினேன்,” என்கிறார் ஷமா.

திருநர் மக்களை அரசு காப்பாற்றி, பாதுகாத்து, மறுவாழ்வு கொடுக்கவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவுமென திருநர் உரிமை பாதுகாப்பு சட்டம் இருந்தபோதும், நகரம் திருநருக்கு பாதுகாப்பான இடமாக எப்போதும் இருந்ததில்லை. மாதந்தோறும் ஐந்திலிருந்து ஏழு வரை அச்சுறுத்தல் சம்பவங்கள் வருவதாக நீதி சொல்கிறார்.

பாரியிடம் பேசிய திருநங்கையர் தங்களின் பாதிப்புகளை பகிர்ந்து கொண்டனர். சல்மா கேலியை எதிர்கொண்டார். அர்ச்சனா வேலை பார்த்த பியூட்டி பார்லர் உரிமையாளரால் பாலியல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டார். வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்துக்கு அவர் சென்றபோது அதிகாரிகள் அவரை நம்பவில்லை. அவர்களின் நடத்தை அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி அளித்தது. 2024ம் ஆண்டில் IIT-BHU-வில் நடந்த கூட்டு வல்லுறவு சம்பவத்தை குறிப்பிட்டு அவர், “பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையெனில், திருநங்கைக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்கிறார்.

PHOTO • Jigyasa Mishra
PHOTO • Abhishek K. Sharma

இடது: அரசாங்க வேலைகளில் திருநருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிறார் சல்மா. வலது: கோரிக்கைகளை முன் வைத்து தேர்தலுக்கு முன் வாரணாசியில் திருநர் சமூகத்தினர் நடத்திய பேரணி. இடது பக்கம் இருக்கும் சல்மா (சல்வார் கமீஸ்)

*****

மோடி, போட்டி போட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் ராயை விட 1.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மோடி வெற்றி பெற்றார்.

”எங்களின் நகரத்துக்கு மக்களவை உறுப்பினராக மோடி வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. அவர் எங்களை பற்றி எப்போதாவது யோசித்தாரா?” எனக் கேட்கிறார் சல்மா. இப்போது அவர் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார். “இருளாக இருக்கிறது. ஆனாலும் இந்த அரசாங்கத்தை நாங்கள் கண்காணிக்கிறோம்,” என்கிறார் அவர்.

ஷமாவும் அர்ச்சனாவும் ஒப்புக் கொள்கிறார்கள். இரு திருநங்கைகளும் 2019ம் ஆண்டில் மோடிக்கு ஓட்டு போட்டவர்கள். 2024ம் ஆண்டில் தங்களின் தேர்வை மாற்றிக் கொண்டனர். இம்முறை, “நான் மாற்றத்துக்கு வாக்களித்திருக்கிறேன்,” என்கிறார் ஷமா.

25 வயது பட்டதாரியான அர்ச்சனாவுக்கு பாலியல் தொழில்தான் வாழ்வாதாரம். “மோடியின் பேச்சுகளால் நான் ஈர்க்கப்பட்டேன். ஆனால் அவர் டெலிப்ராம்ப்டர் பார்த்துதான் பேசுகிறார் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்,” என்கிறார் அவர்.

அவர்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் சட்டம் மற்றும் உரிமைகளும் வெறும் காகித அளவில் இருப்பதாகதான் அவர்கள் நினைக்கிறார்கள்.

PHOTO • Jigyasa Mishra

பாரியிடம் பேசிய சல்மா மற்றும் பிற திருநங்கைகள், அரசாங்கம் கைவிட்டுவிட்டதாகவும் எதிர்காலம் கவலையளிப்பதாகவும் கூறுகின்றனர். ‘இருளாக இருக்கிறது,’ என்கிறார் சல்மா. ‘ஆனாலும் இந்த அரசாங்கத்தை நாங்கள் கண்காணிக்கிறோம்’

“பத்து வருடங்களுக்கு முன் மிகக் குறைவாக அவர்கள் செய்தார்கள். மூன்றாம் பாலினமாக எங்களை காகித அளவில் அங்கீகரித்து அதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்றார்கள்,” என்கிறார் ஷமா, ’அரசாங்கத்தின் பிற விதிகளுடன் திருநரும் மூன்றாம் பாலினமாக கருதப்படுவர்,’ என அளிக்கப்பட்ட 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு. இந்த பிற விதிகள் என்பவை கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மற்றும் சமூக நல திட்டங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் போன்றவை ஆகும்.

2019ம் ஆண்டில் ஒன்றிய அரசு திருநர் உரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. கல்வியிலும் வேலைகளிலும் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்றது அச்சட்டம். கல்வியும் வேலைவாய்ப்பிலும் அச்சட்டம் இட ஒதுக்கீடு எதையும் வழங்கவில்லை.

”பியூன் தொடங்கி அதிகாரி வரை எல்லா வேலைகளிலும் அரசாங்கம் எங்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும்,” என்கிறார் சல்மா.

(இக்கட்டுரையில் நீதி மற்றும் சல்மா ஆகிய பெயர்களை தவிர்த்து பிற பெயர்கள் யாவும் மாற்றப்பட்டிருக்கின்றன)

தமிழில் : ராஜசங்கீதன்

Jigyasa Mishra

جِگیاسا مشرا اترپردیش کے چترکوٹ میں مقیم ایک آزاد صحافی ہیں۔ وہ بنیادی طور سے دیہی امور، فن و ثقافت پر مبنی رپورٹنگ کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jigyasa Mishra
Illustration : Jigyasa Mishra

جِگیاسا مشرا اترپردیش کے چترکوٹ میں مقیم ایک آزاد صحافی ہیں۔ وہ بنیادی طور سے دیہی امور، فن و ثقافت پر مبنی رپورٹنگ کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jigyasa Mishra
Photographs : Abhishek K. Sharma

Abhishek K. Sharma is a Varanasi-based photo and video journalist. He has worked with several national and international media outlets as a freelancer, contributing stories on social and environmental issues.

کے ذریعہ دیگر اسٹوریز Abhishek K. Sharma
Editor : Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan