வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் கட்டியைப் பற்றிக் கவலை கொள்கிறார் சுனிதா தேவி. அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. வயிறு உப்பசமாக இருக்கிறது. இரண்டு மாதங்கள் கழித்து வீட்டருகே இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர் சொன்ன விஷயம் அவரை அவநம்பிக்கையில் ஆழ்த்தியது: “நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்.”

எப்படி அது சாத்தியமென அவருக்குப் புரியவில்லை. கர்ப்பத்தைத் தடுக்கவென அவர் காப்பர் டி எடுத்துக் கொண்டு ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை.

2019ம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவுகூர்கையில் வெளிறி மெலிவாக இருக்கும் அவரது முகம் இன்னும் அதிகமாக வெளிருகிறது. அவரின் தலைமுடி நேர்த்தியாக இழுத்து கொண்டையாக முடியப்பட்டிருக்கிறது. அவரின் ஒடுங்கிய கண்கள் சோர்வாக இருக்கின்றன. முகத்திலேயே பிரகாசமாக இருக்கும் பகுதி நெற்றியில் அவர் வைத்திருக்கும் சிவப்புப் பொட்டுதான்.

நான்கு குழந்தைகளுக்கு தாய் 30 வயது சுனிதா (உண்மையானப் பெயரில்லை). அவருக்கு இரண்டு மகள்களும் மகன்களும் 4 வயதிலிருந்து 10 வயதுகளுக்குள் இருக்கின்றனர். 2019ம் ஆண்டின் மே மாதத்தில், அவரின் கடைசி குழந்தைக்கு இரண்டு வயதாக இருக்கும்போது மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டாமென சுனிதா முடிவெடுத்தார். அவரிருந்தப் பகுதிக்கு வந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் மூலமாக குடும்பக் கட்டுப்பாடு முறைகளை அவர் தெரிந்து கொண்டார். எல்லா முறைகளையும் ஆராய்ந்தபிறகு அவர் அந்தரா என்கிற கருத்தடை முறையை தேர்ந்தெடுத்தார். ஊசி மூலம் செலுத்திக் கொண்டால் மூன்று மாதங்களுக்கு கர்ப்பத்தை அந்தரா தடுக்குமென சொல்லப்பட்டது. “முயற்சி செய்து பார்க்கலாமென எண்ணினேன்,” என்கிறார் அவர்.

அவரது 8 X 10 அடி அறையின் தரையில் ஒரு போர்வை மீது நாங்கள் அமர்ந்திருந்தோம். மற்றப் போர்வைகள் மூலையிலிருந்த ஒரு சிலிண்டர் மீது குவித்து வைக்கப்பட்டிருந்தன. சுனிதாவின் மைத்துனர் குடும்பம் பக்கத்து அறையில் வாழ்ந்தது. இன்னொரு அறையில் இன்னொரு மைத்துனர் வசிக்கிறார்.  தென்மேற்கு தில்லி மாவட்டத்தின் நஜாஃப்கரின் மகேஷ் கார்டன் பகுதியில் அந்த வீடு இருக்கிறது.

கோபால் நகரின் ஆரம்பச் சுகாதார மையம் சுனிதாவின் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்தரா ஊசி போட அங்குதான் சுகாதார செயற்பாட்டாளருடன் அவர் சென்றார். ஆனால் மையத்திலிருந்து மருத்துவர் வேறொரு யோசனை அளித்தார். “மருத்துவர் காப்பர் டியைப் பற்றி விளக்கத் தொடங்கினார். அது பாதுகாப்பான முறை என்பதால் அதை பயன்படுத்துமாறு என்னிடம் கூறினார்,” என்கிறார் சுனிதா. “மருத்துவரிடம் நான் காப்பர் டியைப் பற்றி கேட்கவே இல்லை,” என்றும் அவர் சொல்கிறார் உறுதியான குரலில்.  “ஆனால் மருத்துவர் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ‘குழந்தைப் பெற்றுக் கொள்வதை நிறுத்த விரும்பவில்லையா?’ என என்னிடம் கேட்டார்.”

Patients waiting outside the Gopal Nagar primary health centre in Delhi, where Sunita got the copper-T inserted
PHOTO • Sanskriti Talwar

சுனிதா காப்பர் டி பொருத்திக் கொண்ட தில்லி கோபால் நகர் ஆரம்பச் சுகாதார மையத்தின் வெளியே நோயாளிகள் காத்திருக்கின்றனர்

நஜாஃப்கரில் பழங்கள் விற்கும் சுனிதாவின் கணவர் (பெயரை சுனிதா வெளியிட விரும்பவில்லை) அச்சமயத்தில் பிகாரின் தர்பங்கா மாவட்டத்திலுள்ள அவரது ஊர் கொல்ஹந்தா பதோரிக்கு சென்றிருந்தர். “மருத்துவர் தொடர்ந்து வற்புறுத்தினார். ‘உங்கள் கணவருக்கு இதில் சொல்ல என்ன இருக்கிறது? உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இதைப் பயன்படுத்தினால் ஐந்து வருடங்களுக்கு நீங்கள் கர்ப்பம் தரிக்க மாட்டீர்கள்,” என்றதாக சுனிதா நினைவுகூர்கிறார்.

எனவே அந்தரா ஊசிக்கு பதிலாக கருப்பைக்குள் பொருத்தப்படும் காப்பர் டி பொருத்தப்பட சுனிதா ஒப்புக் கொண்டார். ஊரிலிருந்து கணவர் திரும்பி வரும்வரை அவரிடம் எதுவும் சொல்லவில்லை. 10 நாட்கள் கழித்து கணவர் திரும்பினார். “அவரிடம் சொல்லாமல் நான் ரகசியமாக செய்து கொண்டேன். என் மீது கடும் கோபம் கொண்டார். சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்ற சுகாதார ஊழியரையும் அவர் திட்டினார்.”

ஆனால் காப்பர் டி பொருத்தப்பட்டப்பிறகு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. காப்பர் டிதான் காரணம் என நினைத்து 2019 ஜூலையில் அதை அகற்றவென இரண்டு முறை கோபால் நகர் சுகாதார மையத்துக்கு சென்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளே கொடுக்கப்பட்டன.

2019 நவம்பரில் மாதவிடாய் வரவில்லை. வயிற்றில் ஒரு கட்டி இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. நஜாஃப்கரின் விகாஸ் மருத்துவமனையில் கர்ப்பப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டது. கருப்பைக்குள் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை பலனளிக்கவில்லை.

காப்பர் டி பயன்படுத்தியும் கர்ப்பம் தரிப்பது அரிதான விஷயம் என்கிறார் மேற்கு தில்லியில் மகளிர்நோய் மருத்துவராக இருக்கும் டாக்டர் பூனம் சத்தா. “நூற்றில் ஒருவருக்குதான் இது போல் நேரும். தனிப்பட்டக் காரணம் என ஏதும் இல்லை. எந்தக் கருத்தடை முறையும் பலனளிக்காமல் போகும் வாய்ப்புகளும் இருக்கின்றன,” என அவர் விளக்குகிறார். பாதுகாப்பான, செயல்திறன் கொண்ட கருத்தடை முறையாக காப்பர் டி கருத்தடை முறை கருதப்பட்டாலும் அது பலனளிக்காதபோது பல விருமத்தகாத கர்ப்பங்களும் கட்டாயக் கருக்கலைப்புகளும் நேர்கின்றன.

“இதை நான் நம்பியிருந்தேன்,” என்கிறார் சுனிதா. “காப்பர் டி பொருத்தப்பட்டிருந்ததால் நான் கர்ப்பம் தரிக்க மாட்டேனென நிச்சயமாக நினைத்தேன். சுகாதார மையத்திலிருந்து மருத்துவரும் ஐந்து வருடங்களுக்கு பயன்படும் என உத்தரவாதமளித்தார். ஆனால் இது ஒரு வருடத்துக்குள்ளாகவே நேர்ந்துவிட்டது,” என்கிறார் அவர்.

The room used by Sunita and her husband in the house
PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

இடது: தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் சுனிதாவும் அவரது குடும்பமும் வசிக்கும் வீடுள்ள தெரு. வலது: சுனிதாவும் கணவரும் பயன்படுத்தும் அறை

2019-21-ம் ஆண்டுகளின் தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்புப்படி ( NFHS-5 ) இந்தியாவின் மணமான 15-49 வயதுக்குள் இருக்கும் பெண்களில் 2.1 சதவிகிதம் பேர்தான் காப்பர் டி போன்ற கருத்தடை முறையை பயன்படுத்துகின்றனர். கர்ப்பத்தைத் தடுக்க அதிகமாக பயன்படுத்தப்படும் முறை கருத்தடை அறுவை சிகிச்சை. மணமான பெண்களின் 38 சதவிகிதம் பேர் இம்முறையை பயன்படுத்துகின்றனர். கணக்கெடுப்புகளின் அறிக்கைகள் படி 2-3 குழந்தைகள் பெற்ற பிறகு கருத்தடை சாதன பயன்பாடு மணமான பெண்களிடம் அதிகரிக்கிறது. சுனிதா ஐந்தாவது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் விகாஸ் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொள்ள அவரிடம் வசதி இல்லை. அங்கு கருக்கலைப்புக்கு ரூ.30,000 ஆகும்.

சுனிதா வேலைக்கு போகவில்லை. அவரின் 34 வயது கணவர் பழங்கள் விற்று மாதந்தோறும் 10,000 ரூபாய் பணம் ஈட்டுகிறார். கணவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. அவர்களின் குடும்பத்தினரும் சேர்ந்து மூன்று படுக்கையறை கொண்ட வீட்டை பகிர்ந்து கொள்கின்றனர். சகோதரர்கள் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்க்கின்றனர். ஒவ்வொருவரும் வாடகைப் பங்காக மாதத்துக்கு 2,300 ரூபாய் கொடுத்து விடுகின்றனர்.

பச்சை மற்றும் மஞ்சள் முக்கோணங்கள் கொண்ட சிவப்பு சல்வார் கமீஸ் உடை அணிந்திருக்கும் அவர், உடைக்கு பொருந்துவது போல் வண்ணமயமான வளையல்களை மெலிந்த கைகளில் அணிந்திருக்கிறார். கொலுசு மாட்டிய அவரது கணுக்கால்களின் கீழே வெளுப்படைந்திருக்கிறது. விரதத்தில் இருக்கும் அவர் குடும்பத்துக்கு மதிய உணவு சமைத்தபடி நம்மிடம் பேசுகிறார். “மணம் முடித்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. என் முகத்தின் பொலிவு போய்விட்டது,” என்கிறார் அவர். 18 வயதில் மணமான போது அவரின் எடை 50 கிலோ. இப்போது அவர் 40 கிலோதான் இருக்கிறார். உயரம் 5 அடி 1 அங்குலம்.

சுனிதாவுக்கு ரத்தசோகை இருக்கிறது. அவர் முகம் வெளிறியிருப்பதற்கும் அவர் சோர்வாக இருப்பதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம். 15-49 வயதில் இருக்கும் பெண்களில் இக்குறைபாடு கொண்டிருக்கும் 57 சதவிகித பெண்களில் அவரும் ஒருவர். 2021 செப்டம்பரிலிருந்து ஒவ்வொரு 10 நாட்களுக்கும் நஜாஃப்கரிலுள்ள தனியார் மையத்தில் சுனிதா சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் மருந்துகளுடன் சேர்த்து 500 ரூபாய் ஆகிறது. கோவிட் அச்சம் அரசு மருத்துவமனைக்கு அவரைச் செல்ல விடவில்லை. தனியார் மையம் பிடித்திருப்பதற்குக் காரணம், வீட்டு வேலை முடித்து மாலை வேளைகளில் அவர் செல்ல முடியும். வரிசையில் காத்திருக்க வேண்டியதுமில்லை.

இன்னொரு அறையிலிருந்து வந்த குழந்தைகளின் கூச்சல் எங்கள் உரையாடலை நிறுத்தியது. “என் முழு நாளும் இப்படித்தான் போகிறது,” என்கிறார் சுனிதா குழந்தைகள் போடும் சண்டைகளை சரி செய்ய வேண்டியிருக்கும் நிலையைக் குறிப்பிட்டு. “கர்ப்பத்தை பற்றி தெரிந்ததும் மன அழுத்தம் கொண்டேன். அப்படியே விட்டுவிடும்படி என் கணவர் கூறினார். ஆனால் நான்தானே சிரமப்பட வேண்டும்? நான்தான் குழந்தையை வளர்த்து எல்லாமும் செய்ய வேண்டும்,” என்கிறார் அவர் எரிச்சலான தொனியில்.

The wooden cart that belongs to Sunita's husband, who is a fruit and vegetable seller.
PHOTO • Sanskriti Talwar
Sunita's sewing machine, which she used before for tailoring clothes to earn a little money. She now uses it only to stitch clothes for her family
PHOTO • Sanskriti Talwar

இடது: பழம் மற்றும் காய்கறி விற்கும் சுனிதா கணவரின் தள்ளுவண்டி. வலது: சிறிதள்வுக்கு வருமானம் ஈட்ட சுனிதா பயன்படுத்தும் தையல் இயந்திரம். இப்போது குடும்பத்தின் துணிகளை தைக்க மட்டும் இதை அவர் பயன்படுத்துகிறார்

கர்ப்பத்தை அறிந்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு நஜாஃப்கர் தன்சா சாலையிலுள்ள தனியார் மருத்துவ மையம் ஒன்றில் ரூ.1000 செலுத்தி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுத்தார். அங்கு அவரை அழைத்துச் சென்ற சுகாதாரச் செயற்பாட்டாளர், பிறகு அவரை ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஜஃபார்பூரில் அரசு நடத்தும் ராவ் துலா ராம் நினைவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

“ஜஃப்ஃபர்பூரில் அவர்கள் (மருத்துவர்) காப்பர் டியை அப்புறப்படுத்த முடியாது என்றார்கள். குழந்தைப் பிறக்கும்போது குழந்தையுடன் காப்பர் டியும் வந்து விடும் என்றார்கள்.” மூன்று மாதக் கரு என்பதால் கருக்கலைப்பு கடினமாக இருப்பதோடு மட்டுமின்றி சுனிதாவின் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்றார் மருத்துவர். “அவர்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை,” என்கிறார் சுனிதா.

“எனக்கு ரிஸ்க்கைப் பற்றி கவலையில்லை. இன்னொரு குழந்தை வேண்டாமென நான் தெளிவாக இருந்தேன்,” என்கிறார் அவர். அவர் தனியாக இல்லை. மணமானப் பெண்களில் 85 சதவிகிதம் பேர் இரண்டாம் (உயிருடனான) குழந்தைக்குப் பிறகு கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை என்கிறது குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு.

கருக்கலைக்க இன்னொரு பொது மருத்துவமனையை அணுகுவதென சுனிதா முடிவெடுத்தார். நஜாஃப்கரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மத்திய தில்லி மாவட்டத்தில் இருக்கும் லேடி ஹர்திங்கே மருத்துமனைக்கு சுகாதாரச் செயற்பாட்டாளர் அவரை அழைத்துச் சென்ற 2020 பிப்ரவரியில் அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இரண்டு பெண்களும் தலா ரூ.120 செலவழித்து தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தனர். மருத்துவமனையில் இருந்த மருத்துவர் கோபால் நகரின் சுகாதார மைய மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு, கருக்கலைப்பு செய்வதென முடிவெடுத்தார்.

”அவர்கள் என்ன பேசினார்கள் என எனக்குத் தெரியாது. மருத்துவர்கள்தான் பேசிக் கொண்டார்கள். பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள்,” என்கிறார் சுனிதா. முதலில் சில ரத்தப் பரிசோதனைகள் செய்து விட்டு சில மருந்துகள் கொடுத்ததாக நினைவுகூர்கிறார். “என்ன மாதிரியான மருந்து என நினைவில்லை. உள்ளே சில மருந்தைத் தடவி சுத்தப்படுத்தினார்கள். பயங்கர எரிச்சல் எடுத்தது. எனக்கு தலை கிறுகிறுக்கத் தொடங்கியது,” என்கிறார் அவர். கணவர் கூடவே வந்தபோதும் “அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை” என்கிறார் அவர்.

உடைந்த காப்பர் டியை வெளியே எடுத்து மருத்துவர் சுனிதாவிடம் காட்டினார். கலைக்கப்பட்டு கரு நான்கு மாதக் கரு என்பதை உறுதிப்படுத்தினார் சுகாதார செயற்பாட்டாளர் சோனி ஜா. மருத்துவமனைக்கு சுனிதாவுடன் சென்றிருந்தது அவர்தான். “அவரது பிரச்சினை சிக்கலைக் கொண்டிருந்ததால் சுகப்பிரசவத்தால் மட்டுமே அதை வெளியே எடுக்க வேண்டியிருந்தது,” என்கிறார் அவர்.

Sunita remained determined to get the tubal ligation done, but Covid-19 struck in March 2020.  It was a year before she could undergo the procedure – in Bihar this time
PHOTO • Priyanka Borar

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள சுனிதா உறுதியாக இருந்தார். ஆனால் 2020 மார்ச்சில் கோவிட் வந்தது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒரு வருடம் பிடித்தது

கருக்கலைப்பு பாதி போராட்டம்தான். சுனிதா கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பினார். கருக்கலைப்பு செய்த அடுத்த நாள் அதே மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் மருத்துவர்கள் அந்த நாளில் செய்யவில்லை. “அறுவை சிகிச்சைக்கான உடையெல்லாம் மாற்றி தயாராக இருந்தபோதுதான் இருமல் வந்தது,” என்கிறார் அவர். “அவர்கள் (மருத்துவர்கள்) ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.” கருக்கலைப்புக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அந்தாரா ஊசி போடப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள சுனிதா உறுதியாக இருந்தார். ஆனால் 2020 மார்ச்சில் கோவிட் வந்தது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஒரு வருடம் பிடித்தது. 2021 பிப்ரவரியில் மைத்துனரின் திருமணத்துக்காக ஹனுமன் நகரிலுள்ள கொல்ஹந்தா பதோரி கிராமத்துக்கு சுனிதாவும் அவரின் குடும்பமும் சென்றனர். அங்கிருக்கும்போது அவர் ஒரு சுகாதார ஊழியரை தொடர்பு கொண்டார். அந்த ஊழியர் அவரை தர்பங்கா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். “சுகாதார ஊழியர் இப்போதும் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார்,” என்கிறார் அவர்.

“அங்கு (தர்பங்காவில்) முழுமையாக மயக்கமடைய வைக்க மாட்டார்கள். உங்களை விழிப்பில் வைத்திருப்பார்கள். நீங்கள் கத்தினாலும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்,” என நினைவுகூர்கிறார் அவர். கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததற்கான உதவித் தொகை யாக 2,000 ரூபாய் அரசிடம் இருந்து பெற முடியும். “ஆனால் அந்தப் பணம் என் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா எனத் தெரியவில்லை. வந்ததா எனப் பார்க்கவும் யாரிடமும் சொல்லவில்லை,” என்கிறார் அவர்.

அவர் முடிக்கும்போது முகத்தில் ஒரு திருப்தி உணர்வு படர்கிறது. “ஒருவழியாக கருத்தடை செய்து கொண்டது நல்லது. நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். இல்லையெனில் அவ்வப்போது ஒரு பிரச்சினை வந்து கொண்டிருக்கும். ஒரு வருடம் ஆகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன். இன்னும் சில குழந்தைகள் பெற்றிருந்தால் என் கதை முடிந்திருக்கும்.” ஆனால் அவரிடம் கோபமும் இருக்கிறது. “இதைச் செய்ய பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் நான் ஏறி இறங்க வேண்டுமா? சொல்லுங்கள், எனக்கு சுயமரியாதை இருக்காதா?”

கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்  தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

தமிழில்: ராஜசங்கீதன்

Sanskriti Talwar

سنسکرتی تلوار، نئی دہلی میں مقیم ایک آزاد صحافی ہیں اور سال ۲۰۲۳ کی پاری ایم ایم ایف فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sanskriti Talwar
Illustration : Priyanka Borar

پرینکا بورار نئے میڈیا کی ایک آرٹسٹ ہیں جو معنی اور اظہار کی نئی شکلوں کو تلاش کرنے کے لیے تکنیک کا تجربہ کر رہی ہیں۔ وہ سیکھنے اور کھیلنے کے لیے تجربات کو ڈیزائن کرتی ہیں، باہم مربوط میڈیا کے ساتھ ہاتھ آزماتی ہیں، اور روایتی قلم اور کاغذ کے ساتھ بھی آسانی محسوس کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priyanka Borar
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan