உஜ்வால் தாஸ், படல்பூரில் கடைசி விவசாயி. அங்கு இருக்கும் ஒரே விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

கடந்த அக்டோபர் மாதம் அவரது வீட்டை யானைகள் சிதைத்துப் போட்டன. கடந்த பத்து வருடங்களில் யானைகளால் அவரது மண் வீடு அழிக்கப்பட்டது அது எட்டாவது முறை.

அது அறுவடை காலம். மழைக்காலம் வந்த நேரம். கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரம் மலைகள் மற்றும் காடுகளினூடாக பயணித்து படல்பூரின் கிராமத்துக்கு யானைகள் வந்து சேர்ந்தன. முதலில் அவை, மயூரக்ஷி நதியின் கிளை நதியான சித்தேஷ்வரி கரையில் சற்று நேரம் இளைப்பாறின. கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு அது. பிறகு 200 கிலோமீட்டர் தொலைவு பயணித்த களைப்பில் அவை, பயிர்கள் இருந்த நிலங்களை நோக்கி சென்றன.

"எங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் நாங்கள் தீப்பந்தங்களுடன் அவற்றை விரட்ட சென்றோம்," என்கிறார் சந்தனா மற்றும் உஜ்வால் தாஸின் இளைய மகனான பிரசன்ஜித். "பல முறை யானைகள் வந்து எங்களின் நெல் வயல்களை அழித்திருக்கின்றன. யானைகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டால் நாங்கள் எதை சாப்பிடுவது?"

நெல் போனது மட்டுமல்ல தாஸின் கவலை. உருளைக்கிழங்கு, பாகற்காய், தக்காளி, பூசணி, வாழை, பப்பாளி போன்றவையும் குடும்பத்தின் 14 பிகா (கிட்டத்தட்ட 8.6 ஏக்கர்) நிலத்தில் விளைவிக்கப்படுகிறது.

உஜ்வல் தாஸும் சராசரி விவசாயி இல்லை. அவரின் பூசணிகள், வருடந்தோறும் ஒவ்வொரு ஒன்றியத்தில் நன்றாக விவசாயம் பார்ப்பவர்களுக்கு தரப்படும் மாநில விருதான க்ரிஷக் ரத்னா விருதை பெற்று தந்தது. ராஜநகர் ஒன்றியத்துக்காக அவர் அந்த விருதை 2016 மற்றும் 2022 வருடங்களில் பெற்றார். 10000 ரொக்கமும் சான்றிதழும் பெற்றார் அவர்.

Ujjwal Das holding his Krishak Ratna Certificate. He received this award from the West Bengal government in 2016 and 2022
PHOTO • Sayan Sarkar

க்ரிஷக் ரத்னா சான்றிதழுடன் உஜ்வல் தாஸ். இந்த விருதை அவர் 2016 மற்றும் 2022 வருடங்களுக்கு மேற்கு வங்க அரசாங்கத்திடம் பெற்றார்

படல்பூரில் அவரின் வீடு மேற்கு வங்க மாவட்டத்தின் பிர்பும் மாவட்ட மேற்கு எல்லையில் அமைந்திருக்கிறது. ஜார்க்கண்டின் எல்லை ஒரு கல்லெறி தூரத்தில்தான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் யானை மந்தைகள் மலையிறங்கி இங்கு உணவு தேட வரும். முதலில் அவை, மலைகளுக்கு அருகே இருக்கும் காடுகளில் காத்திருக்கும். பிறகு மலைகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்குள் நுழையும்.

அவை அடையும் முதல் கிராமம் படல்பூர். அவை வந்து சென்றதற்கான பாதிப்பை கைவிடப்பட்ட வீடுகள், உடைந்த துளசி மாடங்கள், காலி முற்றங்கள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

12 - 13 வருடங்களுக்கு முன்பு முதன்முறையாக கிராமத்தை யானைகள் தாக்கிய போது, 337 பேர் அங்கு வசித்திருந்தார்கள் (சென்சஸ் 2011). அடுத்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்து இப்போது (2023) ஒரே ஒரு குடும்பம்தான், அவர்களின் நிலம் மற்றும் வீட்டை பற்றிக் கொண்டு இந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொடர் யானை தாக்குதல்களால் அச்சுறுத்தப்பட்டு, சுரி, ராஜ்நகர் மற்றும் ஜாய்ப்பூர் போன்ற அருகாமை டவுன்கள் மற்றும் நகரங்களுக்கு அனைவரும் இடம்பெயர்ந்து விட்டனர்.

"வாய்ப்பு இருந்தவர்கள் அனைவரும் பிற கிராமங்களுக்கு சென்று விட்டார்கள்," என்கிறார் கிராமத்தின் ஒரு முனையிலுள்ள ஒரு மாடி மண் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருக்கும் உஜ்வல் தாஸ். "பெரிய குடும்பம் எனக்கு இருக்கிறது. வேறு எங்கும் நான் செல்ல முடியாது. நாங்கள் கிளம்பினால் எதை சாப்பிடுவது?" எனக் கேட்கிறார் 57 வயது நிறைந்த அவர். அப்பகுதியில் வசித்த பலரையும் போல உஜ்வலின் குடும்பத்தினரும் பைராகி சமூகத்தை சேர்ந்தவர்கள். மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமாக பட்டியலிடப்பட்டிருக்கும் சமூகம்.

யானைகளின் பிளிறல்கள் கேட்டதும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜாய்ப்பூருக்கு கிளம்பி விடுவோம் என்கிறார் 53 வயது சந்தனா தாஸ். அதற்கு சாத்தியம் இல்லையென்றால், "நாங்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்து கொள்வோம்," என்கிறார்.

Left: Residents of Patalpur have moved to nearby towns and villages, leaving behind their homes bearing the marks of elephant attacks
PHOTO • Sayan Sarkar
Right: Chandana Das in their kitchen with her grandson
PHOTO • Sayan Sarkar

இடது: படல்பூர்வாசிகள் அருகாமை டவுன்களுக்கும் கிராமங்களுக்கும் இடம்பெயர்ந்து விட்டனர். வலது: சந்தனா தாஸ் சமையலறையில் தன் பேரனுடன்

வேறு சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். கிராமத்துக்கு செல்லும் காங்முறி - ஜாய்ப்பூர் சாலை காட்டுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. யானை தாக்குதல்கள் தொடங்கியும் அங்கேயே தங்கி இருக்கும் முடிவுக்கான அடிப்படை காரணம், நிலத்தை வாங்க எவரும் வரவில்லை என்பதுதான். "நிலத்தை விற்று விட்டு, கிளம்புவது சுலபமான விஷயமல்ல," என்கிறார் உஜ்வல்.

உஜ்வலின் மனைவி சந்தனா தாஸ் மற்றும் இரு மகன்களான சிரஞ்சித் மற்றும் பிரசஞ்சித் ஆகியோர் அக்குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் ஆவர். அவர்களின் மகளான 37 வயது பைஷாகி 10 வருடங்களுக்கு முன் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். படல்பூருக்கு 50 கிமீ தொலைவில் சைந்தியாவில் வசிக்கிறார்.

27 வயது பிரசஞ்சித் சொந்தமாக மாருதி கார் வைத்திருக்கிறார். பக்கத்து கிராமங்களுக்கு அதை வாடகைக்கு விட்டு 10000 ரூபாய் சம்பாதிப்பதாக சொல்கிறார். குடும்பத்தில் பிறரைப்போல அவரும் குடும்ப நிலத்தில் வேலை பார்த்து, மழைப் பயிர்களை விளைவிக்கிறார். சொந்த பயன்பாட்டுக்காக ஒரு பகுதியை வைத்துக் கொண்டு மிச்சத்தை ராஜ்நகரில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் சந்தையில் உஜ்வல் விற்று விடுவார். வாரத்தின் மிச்ச நாட்களில் சைக்கிளிலோ அல்லது மகன் சிரஞ்சித்தின் மோட்டார்சைக்கிளிலோ அருகாமை கிராமங்களுக்கு சென்று காய்கறி விற்பார். நெல்லையும் தங்களுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு மிச்சத்தை அவர் விற்று விடுவார்.

"யானை தாக்குதல்களையும் சகித்துக் கொண்டு பயிர்களுக்கான நான் இங்கு இருக்கிறேன்," என்கிறார் உஜ்வல் தாஸ். அவர் கிளம்ப விரும்பவில்லை.

'If the elephants eat all the crops, what are we supposed to eat?' asks Prasenjit Das. He is worried that the elephants might ruin their banana grove among other fields
PHOTO • Sayan Sarkar
'If the elephants eat all the crops, what are we supposed to eat?' asks Prasenjit Das. He is worried that the elephants might ruin their banana grove among other fields
PHOTO • Sayan Sarkar

"யானைகள் எல்லா பயிரையும் தின்றுவிட்டால் நாங்கள் எதை சாப்பிடுவது?" எனக் கேட்கிறார் பிரசஞ்சித் தாஸ். பிறவற்றுடன் சேர்த்து வாழைத்தோப்பையும் யானைகள் அழித்துவிடுமோ என அவர் அஞ்சுகிறார்

ராஜ்நகரின் உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருந்த சந்தோஷ் கர்மகர், காடுகள் சுருங்குவதால்தான் விவசாய பகுதிகளுக்குள் யானைகள் வருகின்றன என்கிறார். ஜார்க்கண்டை கடந்து அவை புருலியாவில் அடையும் டல்மா மலைத்தொடரில் முன்பு மரங்கள் அடர்ந்திருந்தன. மந்தைக்கு தேவையான உணவு இருந்தது.

"இன்று யானைகள் அழிவை சந்தித்திருக்கின்றன. உணவு தேடி அவை மலைகளை விட்டு வருகின்றன," என்கிறார் கர்மகர். வசதியான விடுதிகளை கட்டுவதற்காக காடுகள் கடுமையாக அழிக்கப்படுவதும் மனித இருப்பின் அதிகரிப்பும் யானைகளின் வசிப்பிடத்தையும் உணவையும் பாதித்திருக்கிறது.

இந்த வருடம் (2023) கிராமத்தில் எந்த யானையும் தட்டுப்படவில்லை என்கிறார் பிரசஞ்சித். ஆனாலும் கவலை தொடர்கிறது: "அவை வந்தால், வாழைத்தோப்பை அவை அழித்து விடும்." அவர்களின் வாழைத்தோப்பு 10 கதைகள் பரப்பளவு கொண்டது (0.16 ஏக்கர்).

மேற்கு வங்க காட்டிலாகாவின் இந்த அறிக்கை யின்படி "வன உயிரால் பாதிப்படைந்த கால்நடைகளுக்கும் பயிர்களுக்கும் வீடுகளுக்கும்" விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும்.  நான்கு பிகா நிலத்துக்கு மட்டும்தான் உஜ்வல் தாஸிடம் ஆவணம் இருக்கிறது. மிச்சம்  (10 பிகா) பூர்விக நிலம். ஆனால் ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அவர் நிவாரணம் பெற முடியாது. "20000 - 30000 ரூபாய் பயிர்களை யானைகள் அழித்தால், அரசாங்கம் 500 லிருந்து 5000 ரூபாய் வரைதான் கொடுக்கும்," என சுட்டிக் காட்டுகிறார்.

Ujjwal Das, 57, one of the last remaining residents of Patalpur
PHOTO • Sayan Sarkar

57 வயது உஜ்வல் தாஸ்தான் படல்புரில் வசிக்கும் கடைசி நபர்

2015 ல் ராஜ்நகரின் ஒன்றிய மேம்பாட்டுத்துறை அதிகாரியிடம் நிவாரணத்துக்கு விண்ணப்பித்து 5000 ரூபாய் கிடைக்கப் பெற்றார். மூன்று வருடங்களுக்கு பிறகு, 2018ல், உள்ளூர் அரசியல் தலைவரிடமிருந்து ரூ.500 நிவாரணமாக பெற்றார்.

உள்ளூர் காட்டிலாகா ரேஞ்சரான குத்ராதே கோடா சொல்கையில், கிராமவாசிகள் பாதுகாப்புக்கான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சொல்கிறார். "ஐராவதம் என எங்களிடம் ஒரு கார் இருக்கிறது. இந்த காரின் சைரனை ஒலிக்க விட்டு யானைகளை விரட்டுவோம். சைரன்களை கொண்டுதான் அவற்றை விரட்டுவோம். எந்தவித தீங்கும் அவற்றுக்கு ஏற்படுத்த மாட்டோம்."

காட்டிலாகா, உள்ளூர் கஜாமித்ராக்களையும் கொண்டிருக்கிறது. படல்பூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பகான்பராவை சேர்ந்த ஐந்து இளைஞர்களை காட்டிலாகா ஒப்பந்த அடிப்படையில் கஜாமித்ரா பணியில் அமர்த்தியிருக்கிறது. யானைகள் வந்தால் அவர்கள்தான் காட்டிலாகாவுக்கு தகவல் கொடுப்பார்கள்.

ஆனால் படல்பூரின் கடைசி குடும்பத்தில் வசிப்பவர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. "காட்டிலாகாவிடம் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை," என சந்தனா தாஸ் வாதிடுகிறார். கைவிடப்பட்ட வீடுகளும் காலியான முற்றங்களும் அவர்களின் கையறு நிலையை வெளிப்படுத்துகின்றன.

தமிழில்: ராஜசங்கீதன்

Sayan Sarkar

Sayan Sarkar is a freelance journalist and contributes to various magazines. He has a graduate degree in Mass Communication from Kazi Nazrul Islam University.

Other stories by Sayan Sarkar
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan