"கணக்குப் பார்த்தால், நெசவாளர்களுக்குப் பஞ்சமில்லை தான். ஆனால் எனக்குப் பிறகு, அது [நடைமுறையில்] தொடர்வது கடினம்," என்று பெருமூச்சு விடுகிறார் ரூப்சந்த் தேப்நாத். தனது மூங்கில் குடிசையில் கைத்தறியில் நெசவு செய்வதிலிருந்து சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு நம்மோடு பேசுகிறார். தறியைத் தவிர, உடைந்த தளவாடங்கள், உதிரி பாகங்கள் மற்றும் மூங்கில் துண்டுகள் என குப்பை குவியல்கள் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துள்ளன. அவரைத் தவிர இன்னொரு நபருக்கு அங்கே இடம் இல்லை.

73 வயதான ரூப்சந்த், திரிபுரா மாநிலத்தின் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் உள்ள தர்மநகர் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கோபிந்தாபூரில் வசித்து வருகிறார். ஒரு குறுகிய சாலை அந்த கிராமத்திற்கு வழி கொடுக்கிறது. ஒரு காலத்தில் 200 நெசவாளர் குடும்பங்களும் 600-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் அங்கே வாழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கோபிந்தாபூர் கைத்தறி நெசவாளர் சங்கத்தின் அலுவலகம், குறுகிய பாதைகளில் உள்ள சில வீடுகளுக்கு மத்தியில் உள்ளது. செல்லரித்த அதன் சுவர்கள்,  மறக்கப்பட்ட அதன் பெருமையை நினைவூட்டுகின்றன.

"தறி இல்லாத வீடே இங்கு இல்லை," என்று நாத் சமூகத்தைச் சேர்ந்த (மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் பட்டியலிடப்பட்டுள்ளது) ரூப்சந்த் விவரிக்கிறார். காயும் வெயிலில், தன் முகத்தில் உள்ள வியர்வையைத் துடைத்துக் கொண்டு அவர் தொடர்ந்து பேசுகிறார். “சமூகம் எங்களை ஒரு காலத்தில் மதித்தது. இப்போது, யாரும் கண்டுகொள்வதில்லை. சம்பாத்தியம் இல்லாத தொழிலைச் செய்பவர்களை யார் மதிப்பார்கள், சொல்லுங்கள்?" என்று குரலில் உணர்ச்சிப்பெருக்குடன் கேட்கிறார்.

அனுபவமிக்க நெசவாளியான இவர், விரிவான மலர் வடிவங்களைக் கொண்டு, தான் கையால் நெய்த நக்ஷி புடவைகளை நினைவு கூருகிறார். ஆனால் 1980களில், “புர்பாஷா [திரிபுரா அரசாங்கத்தின் கைவினைப்பொருள் அங்காடி] தர்மநகரில் ஒரு விற்பனை நிலையத்தைத் திறந்தபோது, அவர்கள் நக்ஷி புடவை தயாரிப்பதை நிறுத்திவிட்டு சாதாரண புடவைகளைத் தயாரிக்கச் சொன்னார்கள்,” என்கிறார் ரூப்சந்த். இவை டிசைன் மற்றும் ஒட்டுமொத்த தரத்தில் குறைவாக இருந்ததால் மலிவாக இருந்தது.

இப்பகுதியில், மெதுவாக நக்ஷி புடவைகள் மறக்கப்பட்டன. அவர் மேலும் கூறுகையில், "இன்று எந்த கைவினைஞர்களும் இல்லை அல்லது தறிகளுக்கான உதிரி பாகங்களும் கிடைப்பதில்லை." கடந்த நான்கு ஆண்டுகளாக நெசவாளர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வரும் ரவீந்திர தேப்நாத்தும் அதை ஆமோதிக்கிறார். "நாங்கள் தயாரித்த துணிகளை வாங்க ஆட்கள் இல்லை". 63 வயதில், கடினமான உழைப்பைக் கோரும் நெசவுக்கு  அவரது உடல் ஒத்துழைப்பதில்லை.

PHOTO • Rajdeep Bhowmik
PHOTO • Deep Roy

இடது: ரூப்சந்த் தேப்நாத் (தறிக்கு பின்னால் நிற்பவர்), திரிபுராவின் கோபிந்தாபூர் கிராமத்தில் கடைசி கைத்தறி நெசவாளர். இவர் இப்போது கம்சாக்களை மட்டுமே நெய்கிறார். அவருடன் நிற்பவர் தற்போதைய உள்ளூர் நெசவாளர் சங்கத் தலைவர் ரவீந்திர தேப்நாத். வலது: கஞ்சி போடப்பட்ட நூல்கள் வெயிலில் உலர்த்தப்படுகின்றன. இது மிருதுவான, திடமான மற்றும் சுருக்கமில்லாத தோற்றத்தைக் கொடுப்பதை உறுதி செய்கிறது

2005ம் ஆண்டுவாக்கில், ரூப்சந்த், நக்ஷி புடவைகளை நெசவு செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு கம்சா செய்யத் துவங்கிவிட்டார். "நாங்கள் ஒருபோதும் கம்சாக்களை நெய்ததில்லை. புடவைகளை மட்டுமே நெய்தோம். ஆனால் இப்போது எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று கோபிந்தபூரில் உள்ள தறியின் கடைசி தலைமுறையைச் சார்ந்த ஒருவர் கூறுகிறார். “நேற்று வரை நான் இரண்டு கம்சாக்களை நெய்துள்ளேன். இவற்றை விற்றால் எனக்கு 200 ரூபாய் மட்டுமே கிடைக்கும்". ரூப்சந்த் மேலும் கூறுகையில், "இது எனது சம்பாத்தியம் மட்டுமல்ல. என் மனைவி நூலை முறுக்கித் தந்து எனக்கு உதவுகிறாள். எனவே இது ஒரு முழு குடும்பத்தின் சம்பாத்தியம். இந்த வருமானத்தை வைத்து எப்படி வாழ்வது?” எனக் கேட்கிறார்.

ரூப்சந்த் காலை உணவுக்குப் பிறகு, 9 மணியளவில் நெசவு செய்யத் துவங்கி, மதியம் வரை தொடர்கிறார். இடையில், குளிப்பதற்கும், மதிய உணவிற்கும் மட்டும் இடைவேளை எடுத்துக் கொள்கிறார். மூட்டு வலியின் காரணமாக, அவர் மாலையில் வேலை செய்வதில்லை. ஆனால் தான் இளமையாக இருந்தபோது, "இரவு வரை கூட வேலை செய்தேன்" என்று ரூப்சந்த் கூறுகிறார்.

தறியில், ரூப்சந்தின் பெரும்பாலான நேரம் கம்சா நெய்வதில் செலவாகிறது. மலிவு விலை மற்றும் நீண்ட காலம் உழைப்பதால், வங்காளத்தின் பல வீடுகளிலும் பரந்த பகுதிகளிலும் கம்சாக்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. "நான் நெய்யும் கம்சாக்கள் [பெரும்பாலும்] இப்படித்தான் இருக்கும்," என பளீர் சிவப்பு நிற துண்டில், வெள்ளை மற்றும் பச்சை நிற நூல்கள் தடிமனான பட்டைகளாக நெய்யப்பட்டிருப்பதை ரூப்சந்த் சுட்டிக்காட்டுகிறார். “முன்பு இந்த நூல்களுக்கும் நாங்களே சாயம் பூசினோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக, நெசவாளர் சங்கத்தில் இருந்து சாயம் பூசப்பட்ட நூல்களை வாங்குகிறோம்,” என்று அவர் எங்களிடம் கூறுகிறார், மேலும் அவர் நெய்த கம்சாவைத் தான் தானும் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்.

ஆனால் கைத்தறி தொழிலில் மாற்றம் எப்போது ஏற்பட்டது என விளக்கும் ரூப்சந்த், “விசைத்தறிகளின் அறிமுகம் மற்றும் தரம் குறைந்த நூல்கள் தான் இதற்கு முதன்மையான காரணம். எங்களைப் போன்ற நெசவாளர்கள், விசைத்தறியுடன் எப்படி போட்டியிட முடியும்?” எனக் கேட்கிறார்.

PHOTO • Rajdeep Bhowmik
PHOTO • Rajdeep Bhowmik

இடது: மூங்கிலால் செய்யப்பட்ட நூல் முறுக்கு சக்கரங்கள், ஒரே மாதிரியான தடிமன் கொண்ட சுழலும் ரீலில் நூலை முறுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறையை வழக்கமாக ரூப்சந்தின் மனைவி பசனா தேப்நாத் செய்கிறார். வலது: நெசவு செய்ய பயன்படுத்தப்படும் நூற்கண்டுகள்

PHOTO • Rajdeep Bhowmik
PHOTO • Rajdeep Bhowmik

இடது: ரூப்சந்த் தனது தந்தையிடமிருந்து இந்தக் கைவினை பயின்றுள்ளார். 1970களில் இருந்து நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தறியை, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். வலது: ரூப்சந்த், வெறும் கால்களால் தறியை இயக்கி கம்சா ஒன்றை நெய்கிறார்

விசைத்தறிகள் விலை உயர்ந்தவை. எனவே பெரும்பாலான நெசவாளர்கள் அதற்கு  மாறுவது கடினம். மேலும் கோபிந்தாபூர் போன்ற கிராமங்களில், தறிக்கான உதிரி பாகங்களை விற்கும் கடைகள் இல்லை, எனவே பழுது பார்க்கும் பணி சவாலாக உள்ளது. இது பல நெசவாளர்களுக்கு இடையூறாக இருந்தது. தற்போது இயந்திரங்களை இயக்க  முடியாத அளவுக்கு தனக்கும் வயதாகிவிட்டதாக ரூப்சந்த் கூறுகிறார்.

“நான் சமீபத்தில் 12,000 [ரூபாய்] மதிப்புள்ள [22 கிலோ] நூல் வாங்கினேன். அதன் விலை கடந்த ஆண்டு சுமார் 9000 ரூபாய் மட்டுமே; இந்த ஆரோக்கியத்துடன், அவற்றில் சுமார் 150 கம்சாக்களை உருவாக்க எனக்கு சுமார் 3 மாதங்கள் ஆகும்.… நான் அவற்றை [நெசவாளர் சங்கத்திற்கு] வெறும் 16,000 ரூபாய்க்கு தான் விற்பனை செய்ய முடியும்,” என்று ரூப்சந்த் கையறுநிலையில் கூறுகிறார்.

*****

ரூப்சந்த் 1950-ம் ஆண்டு, பங்களாதேஷின் சில்ஹெட்டில் பிறந்து, 1956-ல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர். "என் தந்தை இந்தியாவில் நெசவுத் தொழிலைத் தொடர்ந்தார். நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன்,” என்று அவர் கூறுகிறார். இளம் வயதில் ரூப்சந்த் உள்ளூர் மின்சாரத் துறையில் வேலைக்குச் சென்றுள்ளார், "வேலைப்பளு அதிகம். ஆனால் ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. அதனால் நான் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேலையை விட்டுவிட்டேன்."

பின்னர் அவர், தலைமுறை நெசவாளரான தனது தந்தையிடம் இருந்து நெசவைக்  கற்றுக்கொள்ள முடிவு செய்தார். “கைத்தறி [தொழில்] அந்த நேரத்தில் நல்ல ஊதியம் பெற்றது. 15 ரூபாய்க்கு கூட புடவை விற்றுள்ளேன். நான் இந்த வேலையைக் கைவிட்டிருந்தால், எனது மருத்துவச் செலவுகளை கையாளவும், எனது [மூன்று] சகோதரிகளை மணம் முடித்து கொடுத்திருக்கவும் முடியாது," என்று அவர் கூறுகிறார்.

PHOTO • Rajdeep Bhowmik
PHOTO • Deep Roy

இடது: ரூப்சந்த், விரிவான மலர் வடிவங்களைக் கொண்ட நக்ஷி புடவைகளை செய்வதன் மூலம், நெசவாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால், 1980களில் இருந்து, டிசைன்கள் ஏதும் இல்லாத பருத்திப் புடவைகளை நெசவு செய்யும்படி ஸ்டேட் எம்போரியம் கேட்டுக் கொண்டுள்ளது. 2005ம் ஆண்டு வாக்கில், ரூப்சந்த், முற்றிலுமாக கம்சா நெய்வதற்கு மாறினார். வலது: பசனா தேப்நாத், அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வதோடு, தனது கணவரின் வேலையிலும் உதவுகிறார்

PHOTO • Rajdeep Bhowmik
PHOTO • Rajdeep Bhowmik

இடது: கைத்தறி தொழிலில் இப்போது பல சிரமங்கள் இருந்தாலும், ரூப்சந்த் அத்தொழிலை விட்டு விலக விரும்பவில்லை. 'கைவினையை விடவும் பேராசைக்கு நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை' என்று அவர் கூறுகிறார். வலது: ரூப்சந்த், நூலை முறுக்குகிறார்

திருமணமான உடனேயே அவருக்கு நெசவு செய்ய உதவியதாக அவரது மனைவி பசனா தேப்நாத் நினைவுகூருகிறார். "அப்போது நாங்கள் நான்கு தறிகளை வைத்திருந்தோம். அவர் என் மாமனாரிடம் இருந்து கற்றுக் கொண்டிருந்தார்," என்று தனது கணவர் பக்கத்து அறையில் தறியை இயக்கும் சத்தத்தை தாண்டி கூறுகிறார்.

ரூப்சந்தை விட பாசனாவின் வேலைகள் அதிகம். அதிகாலையில் எழுந்து, வீட்டு வேலைகளைச் செய்து, மதிய உணவைத் தயாரித்து விட்டு, கணவருக்கு நூல்களை முறுக்க உதவுகிறார். மாலையில் தான் அவருக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கிறது. "நூலை முறுக்குவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார்," என்று ரூப்சந்த் பெருமையுடன் ஒப்புக்கொள்கிறார்.

ரூப்சந்துக்கும் பசனாவுக்கும் நான்கு குழந்தைகள் உள்ளனர். திருமணமான இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் (ஒருவர் மெக்கானிக் மற்றொருவர் நகைக்கடைக்காரர்) அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் வசிக்கிறார்கள். பாரம்பரியக் கலை மற்றும் கைவினைத் தொடர்புகளின் மீதான ஆர்வத்தை மக்கள் இழக்கிறார்களா என்று கேட்டால், மேஸ்ட்ரோ யோசிக்கிறார், "நான் எப்படிச் சொல்வது. என்னால் என் சொந்த பிள்ளைகளையே இதனைத் தொடர ஊக்குவிக்க முடியவில்லையே?”

*****

இந்தியா முழுவதும், 93.3 சதவீத கைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வருமானம் ரூ. 10,000, திரிபுராவில் 86.4 சதவீத கைத்தறி தொழிலாளர்களின் குடும்ப வருமானம் ரூ. 5,000 ( நான்காவது அகில இந்திய கைத்தறி கணக்கெடுப்பு , 2019-2020) ஆகும்.

"இந்தக் கலை இங்கே மெதுவாக இறந்து கொண்டிருக்கிறது," என்று ரூப்சந்தின் அண்டை வீட்டாரான அருண் பௌமிக் கூறுகிறார். "நாங்கள் அதைப் பாதுகாக்க போதுமான அளவு முயலவில்லை." அவரது கருத்துகளை கிராமத்தின் மற்றொரு மூத்தவரான நானிகோபால் பௌமிக் ஆமோதிக்கிறார். "மக்கள் குறைவாக வேலை செய்து அதிகம் சம்பாதிக்க விரும்புகிறார்கள்," என்று பெருமூச்சுடன் கூறுகிறார். “நெசவாளர்கள் [எப்போதும்] குடிசைகளிலும் மண் வீடுகளிலும் வாழ்ந்தவர்கள். இப்போது யார் அப்படி வாழ விரும்புகிறார்கள்?" என்று ரூப்சந்த் மேலும் கூறுகிறார்.

PHOTO • Deep Roy
PHOTO • Deep Roy

இடது: அவர்களின் மண் குடிசையின் முன், ரூப்சந்த் மற்றும் பசானா தேப்நாத். வலது: தகரக்கூரையுடன் மூங்கில் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ஒரு குடிசை ரூப்சந்தின் பணியிடமாக செயல்படுகிறது

வருமானப் பற்றாக்குறை, நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள், நெசவாளர்களை பாதிக்கின்றன. "நானும் என் மனைவியும் ஒவ்வொரு வருடமும் மருத்துவச் செலவுக்காக 50-60,000 ரூபாய் செலவழிக்கிறோம்," என்கிறார் ரூப்சந்த். இத்தொழிலினால், இருவரும் மூச்சுத் திணறல் மற்றும் இதய சிக்கல்களில் பாதிக்கப்படுகின்றனர்.

கைவினைப் பொருட்களைப் பாதுகாக்க அரசு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் இது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை என்று  ரூப்சந்த் மற்றும் கிராமத்தில் உள்ள மற்றவர்கள் நினைக்கிறார்கள். இதுவரை 300-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தீன் தயாள் ஹாத்கர்கா ப்ரோட்சஹான் யோஜனா [2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒன்றிய அரசின் முயற்சி] மூலம் நான் பயிற்சி அளித்துள்ளேன்,” என்கிறார் ரூப்சந்த். "ஆனால் பயிற்சியாளர்களைப் பெறுவதே கடினம்," என்று அவர் தொடர்கிறார். "மக்கள் பெரும்பாலும் உதவித்தொகை கொடுத்தால் தான் வருகிறார்கள். இந்த வழியில் திறமையான நெசவாளர்களை உருவாக்க முடியாது,” என்கிறார். "மரப் பூச்சிகளால் தாக்கப்படுதல் மற்றும் எலிகளால் நூல்களுக்கு சேதம் எனக் கவனமின்றி இருப்பதால் ஏற்படும் சேதங்கள்" ஆகியவற்றாலும் நிலைமை மோசமாக உள்ளது என்று ரூப்சந்த் மேலும் கூறுகிறார்.

கைத்தறி ஏற்றுமதி 2012 மற்றும் 2022-க்கு இடையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 3000 கோடியிலிருந்து சுமார் 1500 வரை ( கைத்தறி ஏற்றுமதி ப்ரொமோஷன் கவுன்சில் ). அமைச்சக நிதியும் குறைந்துள்ளது.

மாநிலத்தில் கைத்தறி எதிர்காலம் இருண்டிருப்பதாக ரூப்சந்த் கூறுகிறார். "இது சரிசெய்ய முடியாத நிலைக்கு சென்று விட்டதாக நான் உணர்கிறேன்." ஆனால் அவர் ஒரு கணம் நிறுத்தி, ஒரு தீர்வை முன்மொழிகிறார். "பெண்களின் அதிக ஈடுபாடு உதவியாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார், "சித்தாய் மோகன்பூரில் [மேற்கு திரிபுராவில் உள்ள வணிகக் கைத்தறி உற்பத்தித் தளம்], கிட்டத்தட்ட முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் ஒரு மிகப்பெரிய குழுவை நான் பார்த்திருக்கிறேன்." நிலைமையை சரி செய்வதற்கான மற்றொரு வழி, தற்போதுள்ள கைவினைஞர்களுக்கு நிலையான தினசரி ஊதியம், என்று அவர் கூறுகிறார்.

எப்போதாவது இத்தொழிலை விட்டு விலக நினைத்துள்ளீர்களா என்று கேட்டபோது, ரூப்சந்த் சிரித்தார். "ஒருபோதும் இல்லை," அவர் உறுதியுடன் கூறுகிறார், "நான் என் கைவினையை விடவும் பேராசைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை." தறியில் கை வைக்கும்போது கண்களில் கண்ணீர் சேர்கிறது. "அவள் என்னை விட்டுப் போகலாம். ஆனால் நான் ஒருபோதும் விட்டு விடமாட்டேன்."

இந்தக் கதை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் மானிய உதவியுடன் உருவாக்கப்பட்டது.

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Rajdeep Bhowmik

Rajdeep Bhowmik is a Ph.D student at IISER, Pune. He is a PARI-MMF fellow for 2023.

Other stories by Rajdeep Bhowmik
Deep Roy

Deep Roy is a Post Graduate Resident Doctor at VMCC and Safdarjung Hospital, New Delhi. He is a PARI-MMF fellow for 2023.

Other stories by Deep Roy
Photographs : Rajdeep Bhowmik

Rajdeep Bhowmik is a Ph.D student at IISER, Pune. He is a PARI-MMF fellow for 2023.

Other stories by Rajdeep Bhowmik
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

Other stories by Sarbajaya Bhattacharya
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam