வெள்ளி போல விளைந்து நிற்கும் பருத்தி வயல் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறார் விஜய் மரோத்தார். விதர்பாவில் உள்ள அவரது பருத்திக்காடு ஒரே ஒரு கடும் மழையில் இப்படி நாசமாகிவிட்டது. “இந்தப் பயிருக்காக 1.25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். அதில் பெரும்பகுதி நஷ்டமாகிவிட்டது,” என்கிறார் அவர். இது நடந்தது 2022, செப்டம்பர் மாதம். விஜயின் முதல் போக சாகுபடி அது. தமது சிக்கல்களைப் பேசிப் பகிர்ந்துகொள்ள அவருக்கு அப்போது யாருமில்லை.

ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அவரது தந்தை கண்ஷியாம் மரோத்தர் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவரது தாய் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் காலமானார். பருவநிலைக் கோளாறுகளால் அடுத்தடுத்த சாகுபடிகளில் ஏற்பட்ட சேதம், ஏறும் கடன் சுமை ஆகியவற்றால் விதர்பாவில் உள்ள பிற விவசாயிகளைப் போலவே அவரது பெற்றோருக்கும் கடுமையான மன உளைச்சலும், மன அழுத்தமும் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவி ஏதும் கிடைக்கவும் இல்லை.

ஆனால், தனது தந்தையைப் போல விஜய் உடைந்துபோக முடியாது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தனது வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வேலையில் பரபரப்பாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் விஜய். சகதியாகிப்போன தனது நிலத்தில் தனது கால்சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு இறங்கி, ஒரு வாளியால் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டிருந்தார் அவர். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் இப்படி இடுப்பொடிய உழைத்தார். அவரது டி-சர்ட் வியர்வையில் நனைந்து கிடந்தது. “எனது நிலம் ஒரு சரிவில் இருக்கிறது. இதனால், கனமழை பெய்யும்போது நான் அதிகம் பாதிக்கப்படுகிறேன். சுற்றியிருக்கிற நிலங்களில் சேரும் தண்ணீர் என் நிலத்துக்குள் இறங்குகிறது. அதை வடிப்பது கடினமான பணி,” என்று விளக்குகிறார் அவர். இந்த அனுபவத்தில் பீதியடைந்திருக்கிறார் அவர்.

கூடுதல் மழை, நீடித்த வறட்சி, ஆலங்கட்டி மழை போன்ற கடுமையான காலநிலை நிகழ்வுகளால் வேளாண்மையில் ஏற்பட்ட பெரும் துயரங்கள் உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுத்தபோதுகூட இந்த சிக்கல்களை எதிர்கொள்ள அரசாங்கம் பெரிதாக ஏதும் செய்யவில்லை. (படிக்க: மனதை அலைகழிக்கும் விவசாய நெருக்கடி ). மன அழுத்தம், மன நலக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலச் சட்டம் 2017 -ன் படி கிடைக்கவேண்டிய அல்லது அளிக்கப்படும் சேவைகள் குறித்த எந்த தகவலும் விஜய்க்கோ, உயிரோடு இருந்தபோது இது போன்ற உளவியல் சிக்கல்களோடு போராடிக் கொண்டிருந்த அவரது தந்தை கண்ஷியாமுக்கோ கிடைக்கவில்லை. மாவட்ட மன நலத் திட்டம் 1996ன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட எந்த ஒரு முகாமோ, வேறு மக்களைத் தேடிச் சென்று செயல்படுத்தும் திட்டங்களோ அவர்களது கண்களில் பட்டதில்லை.

‘பிரேர்னா பிரகல்ப் விவசாயிகள் ஆலோசனை சுகாதார சேவைத் திட்டம்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை 2014 நவம்பரில் கொண்டு வந்தது மகாராஷ்டிர மாநில அரசு. மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் யவத்மல் வட்டத்தில் இயங்கும் ‘இந்திராபாய் சீதாராம் தேஷ்முக் பகுதேசிய சன்ஸ்தா’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்தன. அரசாங்கம் - தனியார் (சமூக நல அமைப்பு) கூட்டாக இணைந்து ஊரகப் பகுதிகளில் நிலவும் சிகிச்சைப் போதாமைகளை நிறைவு செய்யும் வகையில் இது திட்டமிடப்பட்டது. 2022ல் விஜய் தனது தந்தையை இழந்தபோது  அதிகம் பேசப்பட்ட இந்த பிரேர்னா திட்டம் பிசுபிசுத்துப்போயிருந்தது.

Vijay Marottar in his home in Akpuri. His cotton field in Vidarbha had been devastated by heavy rains in September 2022
PHOTO • Parth M.N.

ஆக்புரியில் உள்ள தமது வீட்டில் விஜய் மரோத்தர். 2022 செப்டம்பரில் பெய்த கனமழையில் இவரது பருத்திக்காடு நாசமானது

“சிக்கலை சரி செய்வதற்கான பலமுனை உத்தியை நாங்கள் அரசாங்கத்துக்கு வகுத்துக் கொடுத்தோம். துயரங்களை தாங்கி நிற்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்தியதோடு, தீவிர உளவியல் சிக்கல் உள்ளவர்களை அடையாளம் கண்டு மாவட்டக் குழுவுக்கு தகவல் அளித்துவந்த உணர்வுசார் கல்விப் பணியாளர்களுக்கு பயிற்சியும் அளித்தோம். சமூகத்தோடு தொடர்பில் இருந்துவந்த ‘ஆஷா’ பணியாளர்களையும் பயன்படுத்திக்கொண்டோம். சிகிச்சை, மருந்து, உளவியல் ஆலோசனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக எங்கள் அணுகுமுறை இருந்தது,” என்றார் அந்தப் பகுதியில் பிரபல உளவியல் மருத்துவரான பிரஷாந்த் சக்கர்வார். இந்தத் திட்டத்துக்கு பின்னால் இருந்தது இவரது யோசனையே.

2016ம் ஆண்டு யவத்மல் பகுதியில் இந்த திட்டம் நல்ல பலன்களைத் தந்தது. வேளாண் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளை ஒப்பிடுகையில் இந்தப் பகுதியில் தற்கொலை எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் குறைந்தது. 2016ம் ஆண்டு முதல் மூன்று மாத காலத்தில் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 48 என்பதையும், முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 96 ஆக இருந்தது என்பதையும் அரசுப் பதிவுகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களில் இந்த காலக்கட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்தன அல்லது அதே எண்ணிக்கையில் நிகழ்ந்தன. யவத்மலில் நல்ல பலன் தந்ததால், பிரேர்னா திட்டத்தை, வேளாண் நெருக்கடி பாதித்த வேறு 13 மாவட்டங்களில் அந்த ஆண்டே அறிமுகப்படுத்தியது மாநில அரசு.

ஆனால், திட்டமும் அதன் வெற்றியும் நீடித்து நிலைக்கவில்லை. வெகு விரைவிலேயே அது பிசுபிசுக்கத் தொடங்கியது.

“சமூக நல அமைப்புக்கு அரசு நிர்வாகம் ஆதரவாக இருந்த காரணத்தால் இந்த திட்டம் நல்லபடியாக தொடங்கியது,” என்கிறார் சக்கர்வார். “இது அரசுத் துறையும் தனியார் அமைப்பும் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சி. மாநிலம் முழுவதும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த சிறிது காலத்திலேயே நிர்வாகச் சிக்கல்கள், ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் தலை தூக்கத் தொடங்கின. கடைசியாக சமூக நல அமைப்புகள் இதில் இருந்து விலகின. இதனால் பிரேர்னா முழுவதும் அரசாங்கத் திட்டமாக ஆனது. திட்டத்தை செயல்படுத்தும் திறன் மங்கத் தொடங்கியது.”

இந்த திட்டத்தின் கீழ் மன அழுத்தத்துக்கும், பதற்றத்துக்கும் ஆளாகும் நிலையில் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் வேலையில் ‘ஆஷா’ பணியாளர்களை ஈடுபடுத்தினார்கள். அவர்களுக்கு இதற்காக கூடுதல் ஊதியமும் பலன்களும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், இந்தக் கூடுதல் பலன்களை வழங்குவதில் அரசாங்கம் தாமதம் செய்த நிலையில், ஆஷா பணியாளர்களுக்கு இந்த வேலையில் ஆர்வம் குன்றியது. “இதனால் அவர்கள் உண்மையாக கள ஆய்வு செய்யாமல் நோயாளிகள் குறித்த போலியான தகவல்களை வழங்கினர்,” என்கிறார் சக்கர்வார்.

Left: Photos of Vijay's deceased parents Ghanshyam and Kalpana. Both of whom died because of severe anxiety and stress caused by erratic weather, crop losses, and mounting debts .
PHOTO • Parth M.N.
Right: Vijay knew he could not afford to break down like his father
PHOTO • Parth M.N.

இடது: விஜயின் காலம் சென்ற பெற்றோர் கண்ஷியாம் – கல்பனா ஆகியோரின் படங்கள். தட்பவெப்பக் கோளாறுகள், பயிர் சேதம், அதிகரிக்கும் கடன் சுமை ஆகியவற்றால் ஏற்பட்ட தீவிர மனப் பதற்றத்தாலும், அழுத்தத்தாலும் அவர்கள் இறந்தனர். வலது: தமது தந்தையைப் போல தானும் மனம் உடைந்துபோக முடியாது என்பது விஜய்க்கு தெரியும்

2022ல் கண்ஷியாம் மரோத்தர் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், பிரேர்னா தோல்வியைத் தழுவும் அரசாங்கத் திட்டமாகிவிட்டிருந்தது. நிரப்பப்படாத உளவியல் வல்லுநர் பணியிடங்கள் அதிகரித்தன; உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆஷா பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருந்தது. மீண்டும் தீவிர வேளாண் சிக்கல்களை எதிர்கொண்டது யவத்மல். அந்த ஆண்டில் அங்கு 355 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

அரசாங்கம் உளவியல் சிக்கலை கையாளத் தவறியதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டன. யவத்மல், கதஞ்சி வட்டங்களில் உள்ள 64 ஊர்களில் மார்ச் 2016 முதல் ஜூன் 2019 வரையிலான காலத்தில் ‘விதர்பா உளவியல் ஆதரவு மற்றும் கவனிப்புத் திட்டம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது டாடா டிரஸ்ட். “எங்கள் திட்டத்தால் மக்கள் மத்தியில் உதவி நாடும் மனோபாவம் உண்டானது,” என்கிறார் அந்த திட்டத்துக்குத் தலைமை வகித்த பிரஃபுல் காப்சே. “நிறைய விவசாயிகள் அவர்கள் பிரச்சனைகளைக் கூற முன்வந்தார்கள். முன்பெல்லாம் அவர்கள் தங்கள் உளவியல் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள மந்திரவாதிகளைத்தான் நாடிச் செல்வார்கள்,” என்றார் அவர்.

2018 சம்பா பருவத்தில் டாடா டிரஸ்ட்டில் வேலை செய்த உளவியலாளர் ஒருவர் ஷங்கர் பாந்தங்வார் என்ற உதவி தேவைப்பட்ட விவசாயியை நாடிச் சென்றார். அந்த 64 வயது விவசாயிக்கு கதஞ்சி வட்டத்தில் உள்ள ஹாத்காவ்ன் என்ற ஊரில் மூன்று ஏக்கர் நிலம் இருந்தது. அவருக்கு மன அழுத்தம் உண்டாகி அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்பட்டது. “என்னுடைய விளை நிலத்தை ஒரு மாதத்துக்கும் மேலாக நான் பார்க்கவே இல்லை. பல நாட்களுக்கு என் குடிசையிலேயே தூங்கிக்கொண்டிருப்பேன். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் விவசாயியாகவே இருந்துவந்தேன். இது போல நீண்டகாலம் நிலத்தைப் பார்க்காமல் நான் இருந்ததே இல்லை. உங்கள் உள்ளத்தையும், உயிரையும் உருக்கி நிலத்தில் கொட்டி உழைத்த பிறகு ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா?” என்று கேட்கிறார் அவர்.

பருத்தியும், துவரையும் சாகுபடி செய்யும் ஷங்கர் தொடர்ந்து இரண்டு மூன்று போகங்களில் கடும் இழப்பை எதிர்கொண்டார். 2018ம் ஆண்டு மே மாதம் வந்தபோது அடுத்த போகத்துக்கு முதலிலிருந்து தயாரிப்புகளை மேற்கொள்வது ஆயாசமாகத் தோன்றியது. எதைச் செய்வதிலும் எந்த பொருளும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. “நான் நம்பிக்கை இழக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நான் உடைந்துபோனால், குடும்பம் உடைந்துபோகும்,” என்று கூறினார் ஷங்கர்.

Shankar Pantangwar on his farmland in Hatgaon, where he cultivates cotton and tur on his three acre. He faced severe losses for two or three consecutive seasons
PHOTO • Parth M.N.

ஹாத்காவ்ன் என்ற ஊரில் உள்ள தமது விளைநிலத்தில் அமர்ந்திருக்கும் ஷங்கர் பாந்தங்வார். இந்த மூன்று ஏக்கர் நிலத்தில் அவர் பருத்தியும், துவரையும் விளைவிக்கிறார். தொடர்ந்து இரண்டு மூன்று போகங்களாக அவருக்கு கடும் இழப்பு ஏற்பட்டது

தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக விவசாயம் செய்வது மேலும் மேலும் ஆபத்து நிறைந்த செயலாக மாறிய நிலையில், ஷங்கரின் 60 வயது மனைவி அனுஷயா தினக் கூலித் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினார். அவர்களது மூத்த மகள் ரேணுகாவுக்கு (22 வயது)  திருமணம் ஆகிவிட்டது. அவர்களது 20 வயது மகன் அறிவுத்திறன் குறைபாடு உடையவர். 2018ம் ஆண்டு சம்பாப் பருவம் நெருங்கிய நிலையில், தமது குடும்பத்துக்காக தமது மனமெனும் பேயை எதிர்கொண்டு போராட முடிவு செய்தார் ஷங்கர்.

அந்த நேரத்தில்தான் உளவியலாளர் அவரை அணுகினார். “அவர்கள் நேரில் வந்து மூன்று – நான்கு மணி நேரம் உட்கார்ந்து பேசுவார்கள்,” என்று நினைவு கூர்ந்தார் ஷங்கர். “எனக்கு இருந்த எல்லா சிக்கல்களையும் அவர்களிடம் பேசினேன். அவர்களிடம் பேசுவதன் மூலம் என் கெட்ட காலத்தில் இருந்து என்னால் விடுபட முடிந்தது.” அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியான உளவியலாளர்கள் வருகையும், அவர்களுடனான உரையாடலும் அவருக்குத் தேவையாக இருந்த ஆசுவாசத்தை வழங்கின. “என்னால் அவர்களோடு தடையில்லாமல் பேசமுடிந்தது. ஒருவரோடு மனம்விட்டுப் பேசி உணர்வுகளை வெளிப்படுத்தியது புத்துணர்ச்சி வழங்கியது. என் குடும்பத்தினர், நண்பர்களிடம் இப்படிப் பேசினால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அப்படிப் பேசி அவர்களை ஏன் தொந்தரவு செய்யவேண்டும்?” என்று கேட்டார் ஷங்கர்.

அடிக்கடி உளவியலாளர்கள் வருவதும், அவர்களோடு ஷங்கர் பேசுவதும் சில மாதங்களில் வாடிக்கையாகிப் போனது. முன்னறிவிப்போ, விளக்கமோ கொடுக்காமல் திடீரென அவர்களது வருகை நின்றுபோன போது அவர்களது வருகையை ஷங்கர் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்.  நிர்வாகக் காரணங்களால் அவர்கள் வரமுடியவில்லை என்று மட்டுமே திட்டத்தின் தலைவரான காப்சேவால் கூற முடிந்தது.

கடைசி சந்திப்பின்போது அதன் பிறகு அவர்கள் சந்திக்கவேபோவதில்லை என்று உளவியலாளர்களுக்கோ, ஷங்கருக்கோ தெரியாது. அந்த உரையாடல்களுக்காக ஷங்கர் மிகவும் ஏங்கினார். அப்போதிருந்து ஷங்கர் கடும் அழுத்தத்தில் இருந்தார். ஒரு வட்டிக்காரரிடம் இருந்து ஐந்து வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார் சங்கர். ஐந்து வட்டி என்றால் ஆண்டுக்கு 60 சதவீதம் வட்டி. அந்த நேரத்தில் யாரிடமாவது பேசவேண்டும்போல இருந்தது ஷங்கருக்கு. ஆனால், அவருக்கு இருந்த ஒரே வாய்ப்பு 104 என்ற எண்ணை டயல் செய்வதுதான். 2014ம் ஆண்டு 104 என்பது கட்டணமில்லாத மன நல உதவி எண்ணாக அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அரசாங்கம் அறிமுகம் செய்து செயல்படாமல் போன நடவடிக்கைகளின் வரிசையில் அதுவும் சேர்ந்திருந்தது.

'When we pour our heart and soul into our farm and get nothing in return, how do you not get depressed?' asks Shankar. He received help when a psychologist working with TATA trust reached out to him, but it did not last long
PHOTO • Parth M.N.

‘நமது உள்ளத்தையும் உயிரையும் உருக்கி ஊற்றி நிலத்தில் உழைத்த பிறகு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றால் எப்படி உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்?’ என்று கேட்கிறார் ஷங்கர். டாடா டிரஸ்டில் வேலை செய்யும் உளவியலாளர் அவரை அணுகியபோது அவருக்கு அது உதவியாக இருந்தது. ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை

2022 செப்டம்பர் மாதம் ‘திவ்ய மராத்தி’ என்ற வட்டாரப் பத்திரிகையை சேர்ந்த ஒருவர் மன அழுத்தம் ஏற்பட்டு, தற்கொலை எண்ணத்தில் உள்ள ஒரு விவசாயிபோல 104க்கு டயல் செய்தார். தொலைபேசியை எடுத்தவர், “தற்போது மன நல ஆலோசகர் வேறொரு நோயாளியோடு பேசிக்கொண்டிருக்கிறார்,” என்று பதில் கூறியுள்ளார். அழைத்தவரின் பெயர், மாவட்டம், வட்டம் ஆகியவற்றைக் கேட்டுக்கொண்டவர், அரைமணி நேரத்தில் மீண்டும் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். “சில நேரங்களில் தொலைபேசியில் பேசிய பிறகு அழைத்தவருக்கு மன அமைதி ஏற்படக்கூடும். ஆனால், உதவி நாடுகிறவர் கடும் மன அழுத்தத்தில் இருந்து அவருக்கு தற்கொலை எண்ணமும் இருந்தால், ஆலோசகர் அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் எண்ணை அழைக்கும்படி கூறி ஏற்கச் செய்வது மிக முக்கியம். இந்த உதவி எண்ணில் வேலை செய்யும் ஆலோசகர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகளைக் கையாளுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவேண்டும்,” என்கிறார் காப்சே.

மகாராஷ்டிரம் முழுவதிலும் இருந்து 104 உதவி எண்ணுக்கு 2015-16 காலகட்டத்தில்தான் அதிகபட்சமாக 13,437 அழைப்புகள் வந்ததாக மாநில அரசுத் தரவுகள் கூறுகின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 9,200 அழைப்புகள் வந்தன. ஆனால், கோவிட்-19 பெருந்தொற்று தாக்கி உளவியல் சிக்கல் உச்சத்தில் இருந்த 2020-21 காலக்கட்டத்தில் இந்த எண்ணுக்கு வந்த அழைப்புகள் எண்ணிக்கை திடீரென வெகுவாக குறைந்து ஆண்டுக்கு சராசரியாக 3,575 அழைப்புகளே வந்தன. இது முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 61 சதவீத வீழ்ச்சி. அடுத்த ஆண்டு இது மேலும் குறைந்து 1963 அழைப்புகள் என ஆனது. முந்தைய நான்கு ஆண்டுகளின் சராசரியோடு ஒப்பிடும்போது இது 78 சதவீத வீழ்ச்சி.

அதே நேரம், ஊரகப் பகுதிகளில் சிக்கல் எல்லாக் காலங்களையும்விட மிக அதிகமாக இருந்தது. மகாராஷ்டிரா முழுவதும் விவசாயிகள் தற்கொலையும் அதைப்போலவே அதிகமாக இருந்தது. ஜூலை 2022 – ஜனவரி 2023 காலக்கட்டத்தில் 1,023 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மகாராஷ்டிர அரசாங்கத் தரவுகள் கூறுகின்றன. ஜூலை 2022க்கு முந்தைய இரண்டாண்டு காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,660 என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஒரு மோசமான எண்ணிக்கை என்பது புரியும்.

2022 அக்டோபர் 30ம் தேதி இந்த 104 என்ற உதவி எண்ணுக்குப் பதிலாக 14416 என்ற புதிய உதவி எண்ணை அறிவித்தது ஒன்றிய அரசு. இந்தப் புதிய உதவி எண்ணின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கணிப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும். ஆனால், துயரம் அப்படியே தொடர்கிறது.

Farming is full of losses and stress, especially difficult without a mental health care network to support them. When Vijay is not studying or working, he spends his time reading, watching television, or cooking.
PHOTO • Parth M.N.
Farming is full of losses and stress, especially difficult without a mental health care network to support them. When Vijay is not studying or working, he spends his time reading, watching television, or cooking.
PHOTO • Parth M.N.

விவசாயம் முழுவதும் இழப்பையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. விவசாயிகளுக்கு உளவியல் உதவி வழங்குவதற்கான ஏற்பாடு ஏதும் இல்லாத நிலை உண்மையில் மிக கடுமையானதாக இருக்கிறது. படிக்காமலோ பணிபுரியாமலோ இருக்கும்போது, விஜய் தன் நேரத்தை வாசிப்பிலோ தொலைக்காட்சி பார்ப்பதிலோ சமையலிலோ கழிக்கிறார்

2022 செப்டம்பரில் பெய்த மிகையான மழை ஷங்கரின் அறுவடையை பாழாக்கியது. அவர் பட்ட கடனை இன்னும் அடைக்கவேண்டியுள்ளது. இப்போது அவர் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டியுள்ளது. அவர் தொழிலாளியாக வேலை செய்வதற்கு திட்டமிடுகிறார். இதன் மூலம் அவரது மனைவியின் வருவாயோடு அவரது வருவாயும் சேர்ந்தால், அடுத்த சம்பா பருவத்துக்குத் தேவையான முதலீட்டை திரட்டிவிட முடியும் என்று அவர் நம்புகிறார்.

ஆக்புரியில் விஜய், பருத்தி விவசாயத்தில் இருந்து விலகுவதற்கான திட்டத்தை ஏற்கெனவே வகுத்துவிட்டார். படிப்படியாக பருத்தி சாகுபடியைக் கைவிட்டு, சோயா மொச்சை, கொண்டைக் கடலை போன்ற சின்ன தட்பவெப்ப மாற்றங்களைத் தாங்கி நிற்கும் நெகிழ்வான பயிர் வகைகளை சாகுபடி செய்ய அவர் முடிவு செய்துள்ளார். ஒரு இரும்பு சாமான் கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டார். அதே நேரம் எம்.ஏ.வும் படிக்கிறார். வேலையும் பட்டப்படிப்பும் இல்லாவிட்டால், படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சமைப்பது என்று நேரத்தை செலவிடுவார் அவர்.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, தமது விளைநிலத்தையும், குடும்பத்தையும் தாமே நிர்வகிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கும் விஜய் தன் மனம் அலைபாய அனுமதிப்பதில்லை. ஏனெனில் அப்படி அலைபாய்ந்தால் தம்மால் எதிர்கொள்ள முடியாத சிந்தனைகளில் அது தம்மைத் தள்ளிவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.

“பணத்துக்காக மட்டும் இந்த வேலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இது மனதை ஏதோ ஒரு செயலில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு படித்து ஒரு நிலையான வேலையை வாங்க விரும்புகிறேன். அப்போதுதான் என்னால், நல்லவிதமாக விவசாயத்தை கைவிடமுடியும். என் தந்தை செய்ததை நான் செய்யமாட்டேன். கணிக்க முடியாத தட்பவெப்ப நிலையோடு என்னால் காலத்துக்கும் வாழ முடியாது,” என்கிறார் அவர்.

தாக்கூர் ஃபேமிலி ஃபவுண்டேஷன் மானியத்தின் உதவியோடு பொது சுகாதாரம், குடிமை உரிமைகள் குறித்த செய்திகளை அளிக்கிறார் பர்த் எம்.என். அவரது செய்தியின் உள்ளடக்கத்தின் மீது தாக்கூர் ஃபேமிலி ஃபவுண்டேஷன் எடிட்டோரியல் கட்டுப்பாடு கொண்டிருக்கவில்லை.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது இருக்கும் யாரையேனும் நீங்கள் அறிந்திருந்தாலோ 1800-599-0019 (24/7 இலவச சேவை) என்ற தேசிய உதவி எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களுக்கு அருகே இருக்கும் எண்ணை இவற்றிலிருந்து தொடர்பு கொள்ளவும். உளவியல் சுகாதார வல்லுனர்கள் மற்றும் சேவைகளை தொடர்பு கொள்ள SPIF-ன் உளவியல் ஆரோக்கிய விவரப்புத்தகத்துக்கு செல்லவும்.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan